Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நலம் வாழ | எனக்குப் பிடிச்சது
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
செம்மொழி மாநாட்டில் பேரா. ஜார்ஜ் ஹார்ட்
- மதுரபாரதி|செப்டம்பர் 2010|
Share:
"செம்மொழி மாநாட்டுக்குச் சாதாரண மக்கள் 7 லட்சம் பேர் வந்தனர். மாநாட்டை ரசித்தனர். தமது மொழியின் பாரம்பரியம் கொண்டாடப்படுவதைப் பார்த்து நிஜமாகவே மகிழ்ச்சியுற்றனர் என்பதைப் பார்த்து மனம் நெகிழாமல் இருக்க முடியாது" என்கிறார் பெர்க்கலி தமிழ்ப் பீடப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். தமிழ், வடமொழி இரண்டிலும் தேர்ச்சி பெற்ற இவர் தமிழின் செம்மொழி அந்தஸ்தை இந்திய நடுவண் அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு 2000ஆம் ஆண்டிலேயே கடிதம் எழுதியவர்.

"அங்கே ஏராளமான தமிழ் அறிஞர்கள் வந்திருந்தனர். எல்லோரிடமும் விவாதிக்க நேரம் கிடைக்கவில்லை. ஆனால் ஐராவதம் மகாதேவன், ஆஸ்கோ பர்போலா இருவருடனும் பேசிக்கொண்டிருந்தேன். இவர்கள் இருவரும் சிந்து சமவெளி வரிவடிவத்தை ஆராய்ந்து அவை திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்று நம்புகிறவர்கள். இந்தியாவுக்கு சமஸ்கிருதத்தையும், ஐரோப்பிய நாடுகளுக்குப் பல ஐரோப்பிய மொழிகளையும் கொண்டு சென்ற ஆதி இந்தோ-ஐரோப்பியர்கள் கருங்கடல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதற்குப் புதிய ஆதாரங்கள் இருப்பதாகப் பர்போலா கூறினார். சக்கரம் என்பதற்கு அவர்கள் பயன்படுத்திய சொல்லைச் சுமேரியர்கள் 6000 வருடங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டனர் என்கிறார் அவர். சிந்துவெளி நாகரீகத்தில் காணப்படாதவையான குதிரைகளையும் ரதங்களையும் ஆரியர்கள் பயன்படுத்தியிருப்பது ரிக் வேதத்திலிருந்து தெரிய வருகிறது. இதனால் அவர்களின் படை அதிக வலுவுள்ளதாக இருந்தது. சிந்துவெளி எழுத்து வடிவம் பற்றிய பர்போலா, ஐராவதம் கருத்துகள் நன்றாக உள்ளன, ஆனால் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி என்பதற்கு இன்னும் தீர்மானமான ஆதாரம் தேவை" என்கிறார் பேரா. ஹார்ட்.

குதிரைகளையும் ரதங்களையும் ஆரியர்கள் பயன்படுத்தியிருப்பது ரிக் வேதத்திலிருந்து தெரிய வருகிறது.ஆனால் சிந்துவெளி மக்கள் பேசியது திராவிட மொழி என்பதற்கு இன்னும் தீர்மானமான ஆதாரம் தேவை.
மாநாட்டின் ஏற்பாடுகள் தனது எதிர்பார்ப்பைவிடப் பிரமாதம் என்கிறார் ஹார்ட். பெயர்ப் பதிவு, புகைப்படம் அனுப்புவது என்பதில் தொடங்கி எல்லாமே கணினி வழியாகத்தான். "மூத்த தமிழறிஞர்கள் இவற்றை எப்படிச் சமாளித்தார்கள்!" என்று வியக்கிறார் ஹார்ட். பாதுகாப்புக்காக 10,000 போலீஸ்காரர்களும் பிற காவலர்களும் இருந்ததால் எல்லாமே தங்குதடையின்றி நடந்ததென்கிறார்.

இந்த மாநாட்டால் தமிழுக்கு என்ன பயன் என்பது பொதுவாக எதிர்த்தரப்பினர் வைக்கும் கேள்வி. அதற்குப் பேரா. ஹார்ட் "தமிழறிஞர்கள் மதிக்கப்படுவதில்லை என்பது தமிழில் உயர்நிலைக் கல்விக்கு எதிராக உள்ளது. சிறந்த இலக்கியங்கள் தமிழில் இருந்தும், ஹிந்தியோ சமஸ்கிருதமோ பெறும் அங்கீகாரத்தைத் தமிழ் பெறுவதில்லை. இந்த உணர்வை அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு, 'லெமூரியா' போன்ற மிகைப்படுத்தல்களால் தமிழை உயர்த்த நினைக்கின்றனர். இப்போது தமிழுக்கு உரிய செம்மொழி அந்தஸ்து கிடைத்துவிட்டதால் இப்படிப்பட்ட மிகைநவிற்சி குறையும் என்பது எனது நம்பிக்கை. தமிழ்மொழி வரலாற்றில் சமஸ்கிருதம் மற்றும் பிற மொழிகளின் பங்கு குறித்த மெய்யான கணிப்பு ஏற்பட வேண்டும். முந்தைய மாநாடுகளோடு ஒப்பிட்டால், இந்த மாநாட்டில் திறந்த, சாய்வற்ற நோக்கு காணப்பட்டது நிச்சயம்" என்கிறார் ஹார்ட்.
"நான் ஏ.கே. ராமானுஜனிடம் முதலில் தமிழ் கற்றவன். அவர் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் மேதை. ஷேக்ஸ்பியரில் கரை கண்டவர். கன்னட, ஆங்கில மொழிகளில் எழுத்தாளர், கவிஞர். மொழியியல், நாட்டுப்புறக் கலைகளின் மாணவர். மிகத் தாமதமாகத்தான் தமிழை அணுகினார். உடனேயே அவரை அதன் இலக்கிய வளம் வியக்க வைத்தது. அவரிடம் தமிழ் கற்கத் தொடங்கிய முதல் நாளே நான் தமிழ் உலகின் சிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்று என்பதை உணர்ந்து கொண்டேன்" என்று நினைவுகூரும் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், சங்க இலக்கியம் இந்திய அளவில் கூட அதற்கான முக்கிய இடத்தைப் பெறவில்லையே என்ற வருத்தம் தோன்றியதாகவும் கூறுகிறார். "இந்திய இலக்கியத்தின் மீது சங்க இலக்கியத்தின் தாக்கம் மிகப் பெரியது. பக்தி இயக்கத்தில் ஆழ்வார்கள் சங்கப் பாடல்களின் கருத்துக்களையும் நெறிகளையும் ஏற்றுக் கையாண்டார்கள். பக்தி இலக்கியம் வைணவத்தின் பரவலுக்கு வழி கோலியது. "துளசி ராமாயணம்" போன்றவை அதிலிருந்தே தோன்றின" என்று விளக்குகிறார்.

சாதாரண மக்களுக்குத் தமது மொழியை அறிய, பெருமிதப்பட வாய்ப்புத் தந்த இந்த மாநாடு நாளாவட்டத்தில் தமிழுக்கு நன்மையே செய்யும்.
இப்படிப்பட்ட ஒரு மாநாடு மிக அரிது, மீண்டும் இதேபோல் நடத்த முடியுமா என்பதே ஐயம் என்கிறார் ஹார்ட். ஆனால் தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் இலக்கியம் குறித்து ஒரு நல்ல விளைவைத் தமிழர் மனதில் அது ஏற்படுத்தியுள்ளது என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. இந்தியச் செவ்வியல் பாரம்பரியத்தை ஆராய்கிறவர்கள்-சமஸ்கிருத மாணவர்களானாலும் சரி, தமிழ் மாணவர்களானாலும் சரி-இரண்டு மொழிகளையுமே பயிலும் அளவுக்கு வரவேண்டும். ஏன், தெலுங்கு போன்ற மொழிகளையும் அறிய வேண்டும். ஒரே ஒரு மொழியை மட்டும் பயில்வதால் இந்தியப் பாரம்பரியம் புரிந்துவிடாது. ஆனால் தற்போது மொழிகளுக்கிடையேயான உறவு நடுவுநிலையிலிருந்து கவனிக்கப்படுவதில்லை. இந்த மனச்சாய்வு நீங்கவேண்டுமென்பது ஹார்ட் அவர்களின் விருப்பமாக உள்ளது.

"சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருந்த போதும் சுறுசுறுப்பாக எல்லா நிகழ்ச்சிகளிலும் கலைஞர் பங்கேற்றார்" என்று வியப்போடு சொல்கிறார் ஹார்ட். "மாநாட்டு அரசியலைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். அண்ணாதுரை, ஜெயலலிதா, கலைஞர் என்று யாருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ் மாநாடு நடந்தாலும் அதற்கு ஒரு அரசியல் பரிமாணம் உண்டு. அவ்வளவு பெரிய மாநாட்டை நடத்த ஓர் அரசு எந்திரத்தாலேயே முடியும். இந்த மாநாட்டிலும் அரசியல் அம்சம் முந்தைய மாநாடுகளின் அளவேதான், கூடவோ குறையவோ இல்லை".

"இன்னும் சொல்லப் போனால் பலதரப்பட்ட கருத்துக்களும் முன்பைவிட அதிகமாக இந்த மாநாட்டில் இடம்பெற்றன. சாதாரண மக்களுக்குத் தமது மொழியை அறிய, பெருமிதப்பட வாய்ப்புத் தந்த இந்த மாநாடு நாளாவட்டத்தில் தமிழுக்கு நன்மையே செய்யும்" என்று அழுத்தமாகக் கூறுகிறார் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட். நாமெல்லோரும் விரும்புவதும் அதுதானே!

மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline