Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | முன்னோட்டம் | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | அஞ்சலி | நூல் அறிமுகம் | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேராசிரியர் நினைவுகள்: காமம் செப்பாது...
- ஹரி கிருஷ்ணன்|மே 2010|
Share:
"சரி. அதுபோகட்டும். கவசகுண்டலங்களைக் கழற்றிக் கொடுத்த கணத்திலேயே கர்ணன் தன்னுடைய உயிரையும் சேர்த்தே கொடுத்துவிட்டான்; எப்போது தன் செவிக் குண்டலங்களைக் கொடுத்தானோ அப்போதே இறந்துவிட்டான்; ஆகையினாலே ‘சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம் தந்ததெவர் கொடைக்கை' என்று விளக்கிவிடலாம். அதுகூட ஏதோ சமாதானம், சமாளிப்பு என்ற வகையில்தான் சேருமே ஒழிய, அறிவார்த்தமான முறைப்படி அது பிழைதான். இப்ப இதைப் பாருங்க" என்றபடி எழுந்துபோய், புத்தகத்தைப் புரட்டினார். மஹாத்மா காந்தி பஞ்சகத்திலிருந்து படித்தார். "கொடியவெந் நாக பாசத்தை மாற்ற மூலிகை கொணர்ந்தான் என்கோ". இப்படி எழுதியதும் பாரதிதானே? அனுமான் சஞ்சீவி பர்வதத்தை-மூலிகையைக்-கொண்டு வந்தது எப்போது? இந்திரஜித் பிரமாஸ்திரத்தை விட்ட போதல்லவா! நாகபாசத்தை மாற்ற, கருடனே அல்லவோ நேரில் வருகிறான்? இதுக்கு என்ன சொல்றீங்க" என்று மறுபடியும் அதே மர்மப் புன்னகையோடு எங்களைப் பார்த்தார்.


ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiagarajanஎங்களில் யாரிடத்திலும் அசைவில்லை. வழக்கறிஞரும், வானவில் பண்பாட்டு மையத்தின் தலைவரும், பற்பல பாரதி பணிகளில் ஈடுபட்டு வருபருமான (பாரதிக்கு ஜதிபல்லக்கு எடுப்பது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த வழக்கத்தை ஏற்படுத்தியவர் இவர்தான்) க. ரவி மட்டும் லேசாக உணர்ச்சி வசப்பட்டார். அப்போது இருபத்தைந்து வயதைத் தாண்டாத இளைஞர் அவர். உணர்ச்சிவசப்பட்டார் என்றால், கோபப்பட்டார் என்ற பொருளில் சொல்லவில்லை. நெகிழ்ச்சியோடு சொன்னார். "That shows Bharati more human to me" என்று. "இதுவரைக்கும் பாரதியை தெய்வம் என்று போற்றிக் கொண்டிருந்தோம். இந்தத் தவறுகளாலே அவனும் ஒரு மனிதன்தான் என்பதை நாங்கள் உணர்வதனால், எங்களுடைய இதயத்துக்கு இன்னமும் நெருங்கியவனாகிறான் பாரதி" என்ற பொருளை உள்ளடக்கிய அந்த வாக்கியம் ஆசிரியரை மகிழ்ச்சியுடன் தலையசைக்க வைத்தது.

பாரதியே செய்திருந்தாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக்கொள்ள அவனுடைய தீவிர ரசிகனால் முடியவேண்டும். அதற்கான தைரியம் வேண்டும்.
"இந்தத் தெளிவைத்தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்" என்று தொடர்ந்தார். "கவிஞன் என்பவன் வெறும் செய்தியாளன் அல்லன். அவனுடைய கவிதையிலே உள்ள கருத்து வலுவானதா இல்லையா என்பதொன்றே அவனுடைய தன்மையைத் தீர்மானிக்கிறது. அடிநாதமாக ஓடும் கருத்து திரண்டும் தெளிந்தும் இருந்தால்தான் அந்தக் கவிஞனுக்குக் கவிஞன் என்ற தளமே கிட்டும். அப்படிச் சொல்லவரும் கருத்துக்கு அழகும் வலுவும் சேர்ப்பதற்காக அவன் பயன்படுத்தும் செய்திகளில்-வரலாற்று, புராணக் குறிப்புகளில்-ஏதேனும் ஓரிரண்டு இடங்களில் பிழை நேர்ந்திருக்குமானால், அந்தக் காரணம் பற்றி அவனுடைய கவிதையின் தரத்துக்கு எந்த மாறுபாடும் நேர்ந்துவிடுவதில்லை. ஆனாலும்" நிறுத்தினார். அழுத்தி உச்சரிக்கப்பட்ட ஆனாலும். "பாரதியே செய்திருந்தாலும் தவறு தவறுதான் என்று ஒப்புக்கொள்ள அவனுடைய தீவிர ரசிகனால் முடியவேண்டும். அதற்கான தைரியம் வேண்டும். இதை விட்டுவிட்டு, இதற்கெல்லாம் சமாதானம் கற்பிபக்க முனைவது என்பது பாரதியே கடைப்பிடித்த நேர்மைக்கு எதிரான போக்காகும். Bharati needs no defence. அவனைக் காப்பாற்ற நாம யாரு? அவன் நிக்கறது அவனுடைய பலத்தினால. நாம அதுக்குத் தேவையில்லை". ஒரு நிமிஷம் நிறுத்தினார்.

இன்னொரு நண்பருக்குத்தான் சற்று கோபம் வந்துவிட்டது. "என்ன சார், ஒரு கவிதையைக் கொடுத்தால், அதப் படிச்சு "நல்லாருந்தா நல்லாருக்கு, இல்லாட்டி இல்ல" இத்தோடதான ஒரு ரசிகனுடைய வேலை முடிகிறது? அவனுக்கு எதுக்கு இந்தத் தேவையில்லாத குடைச்சல்? கர்ணன் சாகும்போது செவிக் குண்டலம் தராட்டி என்ன, நாகபாசத்தை மாற்ற கருடன் வந்திருந்தா என்ன? பாரதி பேசற விஷயத்துக்கு இந்தப் பிழையெல்லாம் ஏதானும் பாதகம் ஏற்படுத்துதா? அதனால எந்த வகையிலும் அந்தக் கவிதை பாதிக்கப்படாதபோது, இங்க சொட்டை அங்க சொள்ளை என்று கணக்கு எடுப்பதெல்லாம் என்னத்துக்கு? நம்ம ஆராய்ச்சியை நிலை நாட்டிககறதுக்காகவா? நம்ம மேதைமை எவ்ளோ பெரிசு என்று விளம்பரப்படுத்திக்கறதுக்காகவா?"

சிரித்தார். "பாருங்க. பாரதி பாட்டுல பிழைன்னு சொன்னவுடனே எப்படிக் கோவம் வருது பாருங்க. அன்பரே, இதெல்லாம் எல்லா மனுஷங்களுக்கும் இயற்கையா நேரிடும் கவனப் பிறழ்வுகள்தாம். பாரதி என்ன பாரதம் படிக்கலையா இல்லாட்டி கம்பராமாயணம்தான் படிக்கலையா? பாஞ்சாலி சபதத்ததில் அடிக்கு அடி வியாசரை ஒட்டி அப்படியே ஏறத்தாழ மொழிபெயர்ப்பாகவே நடத்துகிறானே, அவனுக்கு இந்தக் கர்ணன் விஷயம் தெரியாதா? இல்ல, கம்பராமாயணக் கடல் கடைந்து திரட்டி எடுத்ததாகவே அவனுடைய கவிதைகள் முழுவதிலும் அடையாளம் வைத்துவிட்டுப் போயிருக்கிறானே, அவனுக்கு இந்த நாகபாசம்-மூலிகை விஷயம் தெரியவே தெரியாதா? அப்படியெல்லாம் இல்லை. பாரதிக்கு பாரதமும் ராமாயணமும் தெரியுமா தெரியாதா என்பதை எடைபோட இந்த இடங்கள் அளவுகோலில்லைதான். இருந்த போதிலும், செய்திருப்பது நம்ம ஆள்தான் என்றபோதிலும், தவறு தவறுதான்" என்றார் அழுத்தமாக.
நண்பரின் முகம் சிவக்கத் தொடங்கியிருந்தது. ஆசிரியர் தொடர்ந்தார். "என்னத்துக்கு இதை இவ்வளவு பர்சனலா எடுத்துக்கறீங்க? அப்புறம், அது என்ன கேட்டீங்க? "கவிதை நல்லா இருந்தா ரசி, இல்லாட்டி விட்டுட்டுப் போ. இது எதுக்கு இந்த பிச்சுப் பிச்சுப் போடுகிற ஆராய்ச்சி" அப்படித்தானே?" மீண்டும் புன்னகை. "சரி. ஒரு கவிதை நல்லா இருக்கா இல்லியான்னு எதை வைத்து சொல்வீங்க? எது அசல் எது போலின்னு எப்படி அடையாளம் காண்பீங்க? முயக்கு, ஸ்வப்னம், தாகம், என்றெல்லாம் சொல்லை அடுக்கிக்கொண்டே போவதில் ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகள் உண்டு. படிக்கும்போது "என்னவோ சொல்ல வரான் போலிருக்கு" என்ற உணர்வை ஏற்படுத்தி, ஒருமாதிரி கலந்துகட்டியான வார்த்தைக் கோவைகளால் நிறைக்கப்பட்டு, இலக்கில்லாமல், சொல்ல ஒரு விஷயமும் இல்லாம, திக்கு திசை தெரியாம சதங்கை சத்தம் மட்டும் ஒலிக்க ஒலிக்க நடைபோடும் கவிதைகள் உண்டு. பஞ்சுமிட்டாய்க் கவிதைகள்னு நான் சொல்றது வழக்கம். பார்ப்பதற்கு ரொம்ப பெரிசா, நல்லா ஒரு ஆளின் கழுத்துல இருந்து வயிறு வரைக்கும் வெட்டி எடுத்த மாதிரி பெரிசா, திகழ்ச்சியோட தென்படும். கிட்ட நெருங்கி இறுக்கிப் பிடிச்சா, கைப்பிடி அளவுகூட நிக்காது. சுருங்கிப் போகும். பஞ்சுமிட்டாயை கையால பிடிச்சுப் பாத்திருக்கீங்களோ?"

"அதாவது, கவிதை என்பது அது சொல்லவரும் செய்தியினால் மட்டுமே அளந்தறியப்படுகிறது என்பதுதான் உங்கள் தரப்பு வாதமா" நண்பர் குரலை உயர்த்தினார். கையமர்த்தினார் ஆசிரியர். "ரெண்டுமே உண்மைதான். கவிதை என்பது உணர்ச்சியால் நெசவிடப்படுவதுதான். ஆனால், if it has to pass the acid test of Time, it should have Truth as its seed. ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டானால் வாக்கினிலே ஒளியுண்டாம்' அப்படின்னுதானே பாரதியே சொல்றான்? உண்மையொளி என்றால் என்ன? உண்மை ஒளி, பொய்ஒளி என்று ஒளியில் இரண்டு வகைகள் உண்டா? இல்லையல்லவா? உள்ளத்துக்குள்ளே உண்மை என்ற ஒளி உண்டானால், உண்டானால் மட்டுமே, வாக்கினிலே ஒளி உண்டாகும் என்பதுதானே இந்த அடியின் பொருள்? இப்படி வார்த்தையை உரசியும் மோதியும் பார்த்தாலல்லவோ கவிஞனுடைய உள்ளம் புலப்படும்? உண்மையிலேயே எதையாவது சொல்ல வறானா இல்லாட்டி பாசாங்கு பண்றானா என்பதை எதை வச்சு அளவிடறது? அதற்கு அறிவின் துணையும் தேவைப்படத்தானே செய்கிறது?" நண்பர் முகத்தில் இறுக்கம் நீங்கிய பாடில்லை.

"சரி. உங்க வழிக்கே வரேன். சில கவிதைகளை உணர்ச்சியால் மட்டுமே அணுகவேண்டும். அந்த இடத்தில் அறிவுக்கு வேலை இல்லை. அங்கே போய் விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் அது ரொம்பவே விபரீதமாகப் போய்விடும். அப்படி இதுவரைக்கும் யாருமே பண்ணல; நான் மட்டும்தான் தொடங்கி வச்சிருக்கேன் அப்படின்னு நினைக்கறீங்களா? இதுக்கு முன்னாடி இப்படி ஒரு விபரீத விளையாட்டை யாருமே விளையாடினது இல்லையா? அப்படி ஒரு இடத்தைச் சொல்லட்டுமா?" நண்பர் சற்றே சுவாரசியமானார்.

சில கவிதைகளை உணர்ச்சியால் மட்டுமே அணுகவேண்டும். அங்கே போய் விஞ்ஞானத்தை வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் அது ரொம்பவே விபரீதமாகப் போய்விடும்.
"திருவிளையாடல் படத்துல தருமி இயற்றியதாகச் சொல்லி, இறையனார் செய்து அனுப்பிய பாடல் ஒன்றைச் சொல்வார்கள். நினைவிருக்கிறதா?" என்று கேட்டார் ஆசிரியர். நண்பர், "ம். குறுந்தொகைல வருகிற பாட்டு அது" என்று சொல்லிப் பாடலையும் சொன்னார்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே


"நாம என்ன பேசிட்டிருக்கோமா அதன் முக்கியமான முடிச்சுதான் பாடலின் தொடக்கம். பாரதி பாட்டு என்ற காமத்தினால் ஈர்க்கப்பட்டு நாம எப்படி நடுவுநிலைமை தவறவிடாமல், கண்டது மொழிந்தோமோ, அதைப் போலவே வண்டைப் பார்த்துச் சொல்லப்படுகிற வார்த்தை. காமம் செப்பாது கண்டது மொழிமோ. வண்டே! உனக்கு விருப்பமானதைச் சொல்லாதே; உண்மையைச் சொல்லு. இந்தப் பெண்ணின் கூந்தலைக்காட்டிலும் இனிய மணம் வீசுகின்ற பூவை நீ பார்த்திருக்கிறாயா" இதுதானே அந்தக் கேள்வி? ஆங்கிலத்தில் rhetorical question என்று சொல்வார்கள். கேள்வி கேட்கப்பட்டுள்ளது. ஆனால், விடை தேவையில்லை. அந்தக் கேள்வியிலேயே பதிலிருக்கிறது. அப்படிப்பட்ட விடைவேண்டா வினாவாகத்தானே இது தொடுக்கப்பட்டுள்ளது?" நிறுத்தினார். எனக்குத் தெரியும். இது ஒரு கொக்கி. ஏதோ ஒரு இடி வந்து இறங்கப்போகிறது என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரியும். கொக்கிக்குத் தயாரானோம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline