Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எனக்கு பிடிச்சது | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கவிதை பந்தல் | சிரிக்க, சிந்திக்க
Tamil Unicode / English Search
முன்னோடி
எம்.எல். வசந்தகுமாரி
- பா.சு. ரமணன்|மார்ச் 2010|
Share:
மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி என்னும் எம்.எல்.வசந்தகுமாரி, அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இசைக்கலைஞர் லலிதாங்கிக்கும், இசையாசான் கூத்தனுர் அய்யாசாமி அய்யருக்கும் ஜூலை 3, 1928ல் பிறந்தார். தந்தையின் பெயரையே முதல் எழுத்தாகப் போட்டு வந்த காலத்தில் அதற்கு, மாறாகத் தன் தாயின் பெயரை முதலெழுத்தாக வைத்துக் கொண்டவர் எம்.எல்.வி. தந்தை அய்யாசாமி அய்யர் மிகச் சிறந்த இசைக் கலைஞர். ஹிந்துஸ்தானி இசையில் தேர்ந்தவர். தாய் லலிதாங்கி, வீணை தனம்மாளிடம் பயின்றவர். அக்காலத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களான கோயம்புத்தூர் தாயி, ஃப்ளூட் சுப்பாராவ் ஆகியோரிடம் குருகுல வாசம் செய்தவர்.

வசந்தகுமாரியின் பெற்றோர் புரந்தரதாசர் மீது மிகுந்த பக்தி கொண்டவர்கள். அவரது 'தேவர நாமா' கிருதிகளைப் பரப்புவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். இருவருக்குமே வசந்தகுமாரி இசைத்துறைக்கு வருவதில் ஆர்வமில்லை. மகளை டாக்டராக்க விரும்பி, சென்னையின் புகழ்பெற்ற கான்வென்ட் பள்ளி ஒன்றில் சேர்த்தார்கள். வீட்டில் இசைப் பயிற்சியும் தொடர்ந்தது.

கச்சேரிகளில் தாயாருக்கு பின்பாட்டு பாடுவதும், அவருக்கு உதவியாகச் செல்வதும் வசந்தகுமாரியின் வழக்கம். ஒருமுறை லலிதாங்கி கச்சேரி செய்து கொண்டிருந்தபோது, வசந்தகுமாரி பின்பாட்டு பாடினார். அக்குரலின் இனிமையால் கவரப்பட்ட அக்காலத்து பிரபல வித்வான் ஜி.என். பாலசுப்ரமணியம், வசந்தகுமாரியை தனது சிஷ்யையாக்கிக் கொள்ள விழைந்தார். அதுகுறித்து எம்.எல்.வி.யின் பெற்றோரிடம் வலியுறுத்தினார். அவர்கள் சம்மதிக்க, அது வசந்தகுமாரியின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை ஆனது. குருவிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்தார் எம்.எல்.வி. அவரிடமிருந்து அனைத்து இசை நுணுக்கங்களையும் மிக விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார். மேலும் ஜி.என்.பி.யின் முதல் சிஷ்யை என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியாரின் பாடல் எம்.எல்.விக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது.திரைப்படத்திலிருந்து, கர்நாடக சங்கீத மேடைக்குச் சென்ற பாடல் என்ற பெருமையையும் அது பெற்றது.
1940ம் வருடத்தில் சிம்லாவில் நடந்த கச்சேரியில் தன் தாயாருடன் சேர்ந்து கச்சேரி செய்தார் எம்.எல்.வி. அடுத்து பெங்களூரில் நடந்த ஒரு கச்சேரியில் தனியாகப் பாடும் வாய்ப்புக் கிடைத்தது. தொடர்ந்து வசந்தகுமாரி பாடிய இசைத்தட்டு ஒன்றும் வெளியானது. ஸ்வாதித் திருநாளின் தோடி ராகக் கிருதியான 'ஸரஸிஜநாப சோதரி'யைத் தனது அமுதக் குரலில் கேட்பவர்கள் தம்மை மறக்கும்படிப் பாடியிருந்தார் வசந்தகுமாரி. அந்த இசைத்தட்டு வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியதுடன், அக்கால முன்னணி இசைக் கலைஞர்கள் பலரது கவனத்தையும் கவர்ந்தது. தொடர்ந்து குருநாதர் ஜி.என்.பி. மூலமும் பல கச்சேரி வாய்ப்புகள் வந்தன. எம்.எல்.வி. ஒரு தனித்த இசைக் கலைஞராக பரவலாக அறியப்பட்டார் என்றாலும் அவர் ஒரு முன்னணி இசைக்கலைஞராக அறியப்பட்டடது கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகுதான். காரணம், அக்காலத்தில் இசைத்துறையில் நிலவிய ஆணாதிக்கச் சூழலும், பெண்களில் பலர் ஆசை இருந்தும் அதிகம் இதுபோன்ற துறைகளில் ஈடுபட ஆர்வம் காட்டாதிருந்ததும்தான்.

அதேசமயம் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் திரையிசை வாய்ப்புகளும் எம்.எல்.வி.யைத் தேடி வந்தன. அவரது குரலால் கவரப்பட்ட எம்.கே. தியாகராஜ பாகவதர், தான் நடித்த 'ராஜமுக்தி' திரைப்படத்தில் பின்னணி பாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். நடிகை வி.என். ஜானகிக்குப் பின்னணி பாடியதன் மூலம் தன் திரையிசை வாழ்வைத் துவக்கினார் எம்.எல். வசந்தகுமாரி. அவருக்கு வயது அப்போது 20. தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபோதும் தேர்ந்தெடுத்த பாடல்களை மட்டுமே அவர் பாட ஒப்புக் கொண்டார். 1951ல் மணமகள் படத்தில், சி.ஆர். சுப்பராமனின் இசையில் எம்.எல்.வி. பாடிய 'சின்னஞ்சிறு கிளியே' எனும் பாரதியாரின் பாடல் அவருக்கு மிகுந்த புகழைத் தேடித் தந்தது. இன்றளவும் அவர் பாடிய அந்த வர்ண மெட்டே கர்நாடகக் கச்சேரி மேடைகளில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், திரைப்படத்திலிருந்து, கர்நாடக சங்கீத மேடைக்குச் சென்ற பாடல் என்ற பெருமையையும் பெற்றது. தொடர்ந்து எம்.எல்.வி. பாடிய 'எல்லாம் இன்பமயம்', 'கொஞ்சும் புறாவே', 'தாயே யசோதா', 'ஆடல் காணீரோ', 'ஆடாத மனமும் உண்டோ' போன்ற கர்நாடக சங்கீதத்தின் அடிப்படை ராகங்களைக் கொண்ட பாடல்கள், அவரது திறமைகளைப் பறைசாற்றியதுடன் அவருக்கு பெரும் புகழையும் பெற்றுத் தந்தன. 'ஓர் இரவு' படத்தில் அவர் பாடிய 'அய்யா சாமி...ஆவோஜி சாமி' என்ற வித்தியாசமான குறத்திப் பாடலுக்கும் நல்ல வரவேற்பிருந்தது.

பொருள் உணர்ந்து பாடல் பாடுவதில் வல்லவராக வசந்தகுமாரி விளங்கியதால் இசைமேதைகள் சி.ஆர். சுப்பராமன், ஜி. ராமநாதன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சுதர்சனம் போன்றோர் தொடர்ந்து அவருக்குப் பல வாய்ப்புகளை அளித்தனர். 'ராஜா தேசிங்கு' படத்தில் ஷண்முகப்ரியா, கேதாரகௌளை, சாமா, அடாணா, மோகனம், பிலஹரி, கானடா, காபி என்று எட்டு ராகங்களில் அமைந்த பாற்கடல் அலைமேலே என்ற தசாவதாரப் பாடல் சிறந்த வரவேற்பைப் பெற்றது. பிற்காலத்தில் பல பரதநாட்டிய மேடைகளிலும் இந்தப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. கச்சேரிகளின் இறுதியில் இப்பாடலைப் பாடுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். இன்னமும் பல நாட்டிய மேடைகளில் இந்தப் பாடல் ஒலித்து வருகிறது.
1951ல் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும், வசந்தகுமாரிக்கும் திருமணம் நடந்தது. கணவர் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.வி.யின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். திரைப்படங்களில் எம்.எல்.வி. நிறையப் பாடுவதற்கு அவர் உறுதுணையாக இருந்தார்; என்றாலும், வசந்தகுமாரிக்கு திரையிசையை விட கர்நாடக இசையிலேயே அதிக கவனம் இருந்தது. ஆண்களுக்குப் போட்டியாகப் பல மேடைகளில் கச்சேரி செய்யத் தொடங்கினார். ஜி.என்.பி.யின் சிஷ்யையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டு கச்சேரிகள் செய்தார். அழகான குரல், தெளிவான உச்சரிப்பு, பாவம், சங்கதிகள் என்று கூட்டமைந்த அவரது கச்சேரிகளைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அபாரமான கற்பனை வளம், ஒருமுறை பாடிய பாட்டை மறுமுறை பாடும்போது புதிது புதிதாகச் சங்கதிகள் சேர்த்துப் பாடுவது, தேவைப்பட்டால் மட்டுமே பிருகாக்களைப் பயன்படுத்துவது போன்ற அசாத்தியமான அவரது பல திறமைகளைக் கண்ட சக ஆண் இசைக்கலைஞர்களும் வசந்தகுமாரியை அங்கீகரிக்கத் தலைப்பட்டனர்.

இசையுலகில் அரசியாகக் கோலோச்சிய வசந்தகுமாரிக்கு, பிருகாக்களை உதிர்ப்பதை விட கேட்பவரது இதயத்தைத் தொடுவதாகச் சங்கீதம் இருக்க வேண்டும் என்பதே கொள்கையாக இருந்தது. சபைகளில் அதிகம் பாடப்படாத ராகங்களின் மீது கவனம் செலுத்தி அவற்றைப் பலரும் அறிய வைத்தார். ஆலாபனையின் போது விஸ்தாரமான கல்பனா ஸ்வரங்கள் மூலம் அந்த ராகத்தையும், அதற்கும் பிற ராகங்களுக்கும் உள்ள வேறுபாட்டையும் மிக அழகாகக் கேட்போருக்குப் புரிய வைப்பது எம்.எல்.வி.யின் பலம். தனது தாயார் செய்ததைப் போலவே 'தேவர நாமா' எனப்படும் புரந்தரதாஸரின் கிருதிகளை பிரபலமாக்குவதையும் தனது கடமையாகக் கொண்டிருந்தார். 'ராதா சமேதா கிருஷ்ணா', நாராயண தீர்த்தரின் 'கல்யாண கோபாலம்', புரந்தரதாஸரின் 'வெங்கடாசல நிலையம்' போன்ற பாடல்களை மேடைதோறும் பாடிய வசந்தகுமாரி, தமிழ் கீர்த்தனைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அவர் பாடி வெளியான திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் தமிழ்கூறும் நல்லுலகில் எல்லாம் இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காகவே வாழ்ந்து, தனது வாழ்க்கையையே முழுக்க முழுக்க இசைக்காகவே அர்ப்பணித்தவர் எம்.எல்.வி.
வசந்தகுமாரியின் சமகாலத்தவர்களாய் எம்.எஸ். சுப்புலட்சுமி, டி.கே. பட்டம்மாள் ஆகியோர் விளங்கினர். எம்.எஸ்., எம்.எல்.வி., டி.கே.பி. என்ற மூவரையும் இசையரசிகள் என்றும், சங்கீத மும்மூர்த்தினிகள் என்றும், முப்பெரும்தேவியர் என்றும் இசையுலகம் அழைத்துப் பெருமைப்படுத்தியது. ஹிந்துஸ்தானி இசைக்கலைஞர் படே குலாம் அலிகான் போன்றோர் வசந்தகுமாரியின் இசைத் திறமையைப் பாராட்டி கௌரவித்தனர். பிரபல மிருதங்க மேதை பாலக்காடு மணி அய்யர் உட்படப் பல பிரபல கலைஞர்கள் எம்.எல்விக்கு பக்கவாத்தியம் வாசித்து கௌரவித்துள்ளனர். பொதுவாக மூத்த சங்கீதக் கலைஞர்களுக்கே வழங்கப்படும் கர்நாடக சங்கீத உலகின் மிக உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' பட்டம் எம்.எல்.வி.க்கு அவரது 49வது வயதிலேயே வழங்கப்பட்டது. மைசூர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கிச் சிறப்பித்தது.

எம்.எல்.வி.யின் இசைத் திறமை பற்றி அவரது சீடர்களுள் ஒருவரும், பிரபல வயலின் கலைஞருமான A. கன்யாகுமரி, “அக்கா வசந்தகுமாரி அவர்கள், தேர்ந்த இசை ஞானம் உள்ளவர். கூரிய அறிவுத்திறனும், நினைவாற்றலும் மிக்கவர். எந்த ஒரு கச்சேரி செய்வதற்கு முன்னாலும் - அது ராகம்-தானம்-பல்லவியாக இருந்தாலும் கூட - அவர் ஒத்திகை பார்த்ததே கிடையாது. நேரடியாக மேடைக்குச் சென்று பாட ஆரம்பித்து விடுவார். தயக்கமோ, கலக்கமோ எதுவும் இருக்காது” என்கிறார் பெருமையுடன். மற்றொரு சீடரும் பிரபல பாடகியுமான சுதாரகுநாதன், “நான் 12 வருடங்கள் அவரிடம் பயின்றிருக்கிறேன். எந்தக் கச்சேரிக்கு முன்னாலும் அவர் ஒத்திகை பார்த்ததோ முன்பயிற்சி செய்ததோ கிடையாது. சமயங்களில் கச்சேரிக்காக காரில் செல்லும்போது கூட அவர் பல்லவியை உருவாக்குவதைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்கிறார் ஆச்சரியத்துடன்.

திருச்சூர் ராமச்சந்திரன், சாருமதி ராமச்சந்திரன், யோகம் சந்தானம், சுபா கணேசன், ஜெயந்தி மோகன், ஜெயந்தி சுப்ரமணியம், வனஜா நாராயணன், டி.எம். பிரபாவதி, மீனா மோகன், ரோஸ் முரளி கிருஷ்ணன், பாமா விஸ்வேஸ்வரன் எனப் பலரடங்கிய தேர்ந்த சீடர் பரம்பரையை உருவாக்கினார் வசந்தகுமாரி. பாரபட்சம் இல்லாமல் தான் அறிந்த அனைத்தையும் அவர்களது சொத்தாக்கினார். பல பக்கவாத்தியக் கலைஞர்களுக்கு வாழ்வளித்தார். மன்னார்குடி ஈஸ்வரன், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், திருவாரூர் பக்தவத்சலம், ஜி. ஹரிசங்கர் போன்ற கலைஞர்களின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் கொண்டிருந்த எம்.எல்.வி., அவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கியதுடன், அவர்களின் எதிர்காலம் குறித்தும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளையும், பல்வேறு ஒலித்தட்டுகளையும் தந்துள்ள வசந்தகுமாரி, ஜே. கிருஷ்ணமூர்த்தியால் ஆரம்பிக்கப்பட்ட ரிஷிவேல்லி பள்ளி மாணவர்களுக்கும் இசைப் பயிற்சி அளித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இசைக்காகவே வாழ்ந்து, தனது வாழ்க்கையையே இசைக்காகவே அர்ப்பணித்த இசையரசி எம்.எல். வசந்தகுமாரி, அக்டோபர் 31, 1990ஆம் ஆண்டு, தமது 63ம் வயதில் காலமானார்.

சமீபத்தில் புற்றுநோயால் காலமான நடிகை ஸ்ரீ வித்யா வசந்தகுமாரியின் மகள். அவரிடம் நேரடியாக இசை பயின்றவர். திரைப்படத்துறையில் ஈடுபட்டமையால் அவரால் ஒரு நல்ல இசைக்கலைஞராக பரிமளிக்க முடியாமல் போனது. எம்.எல்.வியின் மகன் சங்கரராமன் தாயார் நினைவாகப் பல்வேறு அறப்பணிகளைச் செய்து வருகிறார்.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline