Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2010 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
புத்தக மழை
தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி
தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது
தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க
தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley
தெரியுமா?: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்
தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்
தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள்
'நிருத்யோல்லாஸா' பரதத்தின் பாதையில் இருபது வருடப் பயணம்
- நித்யவதி சுந்தரேஷ்|ஜனவரி 2010|
Share:
Click Here Enlargeபாரதத்தின் கலாசாரக் குறியீடாகப் பரிணமித்த கலைகளில் பரதக்கலை முதன்மையானது எனலாம். தென்னாடுடைய சிவனுடன் ஒன்றாகப் போற்றப்படும் தெய்வீகத்தன்மை வாய்ந்தது. ஓவியமோ சிற்பமோ போலன்றி படைப்பாளியே அந்தப் படைப்பாகவும் ஆகும் உன்னதம் நடனத்தில் நிகழ்கிறது. பரதக்கலையின் தெய்வீக நிலை ஆடுபவர்கள் வழியாகவே நிகழ்த்தப்படுகிறது. ரசிப்பவர்களையும் அந்நிலைக்கு உயர்த்திச்செல்கிறது. சுயம் மறந்த நிலையில் மனிதம் தெய்வீகத்திற்கு அருகில் சென்றுவிடும் அபூர்வத்தைச் சாத்தியப்படுத்துகிறது.

ரிக் வேதத்தில் இருந்து பொருளும், சாம வேதத்திலிருந்து பண்ணும், யஜுர் வேதத்திலிருந்து அபிநய பாவங்களும், அதர்வ வேதத்திலிருந்து நவரசங்களும் தொகுத்து பரத முனிவரால் இவ்வுலகுக்கு அளிக்கப்பட்டது பரதக்கலை. பெரும்பாலும் தென்னிந்தியக் கோவில்களில் மட்டுமே ஆடப்பட்ட இந்நடனம், இன்று உலகம் முழுவதும் அரங்கேறுகிறது.

இந்நாட்டிய சாஸ்திரத்தை முழுமையாக உள்வாங்கி, பல வருடக் கடும்பயிற்சியில் மட்டுமே கைகூடும் பாண்டித்யம் பெற்று இக்கலையை அதன் செவ்வியல் நேர்த்தி மாறாது கற்பித்து வரும் சில சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் திருமதி. இந்துமதி கணேஷ். அமெரிக்க மண்ணில் நம்கலாசாரத் தொடர்ச்சியை நிலைநாட்டும் விதமாகக் கடந்த 20 ஆண்டுகளாகக் கலிஃபோர்னியா சான் ஃபிரான்ஸிஸ்கோ விரிகுடாப் பகுதியில் 'நிருத்யோல்லாஸா' நாட்டியப்பள்ளியை நடத்தி வருகிறார். இதுவரை 51 மாணவர்களை அரங்கேற்றம் செய்துள்ளார். ஒரு குருகுலம் போல மாணவர்களை அன்புடனும் அர்ப்பணிப்புடனும் பாவித்து, பரத நாட்டியத்தை தெய்வீகக் கலையாகக் கற்பிக்கும் இந்துமதி அவர்கள், பரதம் இறைவனைக் காண்பதற்கான வழி என்று அழுத்தமாக நம்புபவர்.

மனமும் உடலும் ஒரு சேர லயித்து நாட்டியத்தில் தன்னைச் சமர்ப்பிக்கும்போதுதான் ஒரு நல்ல நாட்டியக் கலைஞராகப் பரிமளிக்க முடியும். பல வருடப்பயிற்சிக்குப் பிறகே அடவுகளும் முகபாவங்களும் லயமும் கைகூடும்.
பத்மஸ்ரீ சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களது சிஷ்யையான இந்துமதி, தனது ஐந்து வயதில் நடனம் பயிலத் தொடங்கி 11 வயதில் அரங்கேற்றம் செய்தவர். பல மேடைகளில் ஆடியிருக்கிறார்; பல நடனங்களுக்கு நட்டுவாங்கமும் செய்திருக்கிறார். 1997-ல் California Contemporary Dancers குழுவுடன் இணைந்து பல நடன நிகழ்ச்சிகளை நடத்திய இந்துமதி, ஆசிய-பசிபிக் நிகழ்கலை விழா (Asian Pacific Performing Arts Festival) மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ பிராந்திய நடன விழா (San Francisco Ethnic Dance Festival) ஆகியவற்றில் தனி நர்த்தகியாக பரதத்தை முன்னிறுத்திப் பங்கேற்றிருக்கிறார். சமூக சேவைகளுக்கு நிதிதிரட்டும் பொறுப்புணர்வுடன் பிற நடனக்குழுக்களுடன் இணைந்தும் குழுநடனங்கள் பலவற்றை அளித்துள்ளார்: இவற்றில் In Praise of Giving, The Hero's Journey, Navagraha, Stree Mahima, Maitreem Bhajata, Divya Nama Anjali, Sringara and Abhaya Hasta ஆகிய நடன நிகழ்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. இவரது கலைப்பணியையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, 1998-ஆம் ஆண்டு இவருக்கு 'நாட்ய மயூரி', 'லலித கலாரத்னா' ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

பரதத்திற்கு முக்கிய அம்சங்களான நேர்த்தியான அரைமண்டி, தெளிவான அடவுகள் ஆகியவற்றோடு லௌஷ்டம் எனப்படும் நிமிர்ந்து நிற்கும் நிலையும் நாட்டிய அங்க சுத்தத்தின் அடிப்படைகள். "மனமும் உடலும் ஒரு சேர லயித்து நாட்டியத்தில் தன்னைச் சமர்ப்பிக்கும்போதுதான் ஒரு நல்ல நாட்டியக் கலைஞராகப் பரிமளிக்க முடியும். பல வருடப்பயிற்சிக்குப் பிறகே அடவுகளும் முகபாவங்களும் லயமும் கைகூடும். இவ்வாறு தேர்ந்த நடனத்திற்குத் தேவையான தகுதிகளைப் பெற்று தானே அனுபவித்து உள்ளுணர்ந்து ஆடும்போதே ஒரு மாணவி அரங்கேற்றத்திற்குத் தயாராகிறார்" என்கிறார் இந்துமதி.
Click Here Enlargeபரத நாட்டியத்திற்கே தன் முழு நேரத்தையும் உழைப்பையும் அளித்து வரும் இந்துமதி கணேஷின் வெற்றிக்கு ஊக்கமாகவும் 'நிருத்யோல்லாஸா'வின் வெற்றிக்கு பக்கபலமாகவும் இருந்து வருபவர் இவரது கணவர் கணேஷ். கணவரின் தாயார் திருமதி ரங்க நாயகி அம்மாள் அவர்கள், கலைமாமணி நாட்டிய ஆசார்யா என்று பெயர்பெற்ற பரதக் கலைஞர்; வாய்ப்பாட்டு, வீணை மற்றும் கதாகாலட்சேபம் செய்வதில் வல்லவர். ரங்கநாயகி அம்மாள் தமது பந்தநல்லூர் பாணியையும் இந்துமதி கணேஷ் பயின்ற வழுவூர் பாணியையும் இணைத்து நடனங்கள் அமைத்திருக்கிறார். அதைப் பின்பற்றி இந்துமதியும் தனது நாட்டிய அமைப்பில் வெவ்வேறு பாணியின் சிறப்பம்சங்களை ஒருங்கிணைப்பதில் தவறில்லை என்ற அணுகுமுறையைக் கொண்டிருக்கிறார்.

இவரது நிருத்யோல்லாஸா நடனப் பள்ளி பெரும் பாராட்டுகளை வென்ற பல குழுநடனங்களைத் தயாரித்து நிகழ்த்தியுள்ளது. Krishnanjali, Arpana-Tribute to composers, Nature's melody, the Splendor of Dance and Recollections ஆகிய நடன நிகழ்ச்சிகளை வழங்கியுள்ள இப்பள்ளியின் தயாரிப்புகளில், Glory of Rama, Bhakthi Shakthi, Dance of Shiva, Shakthi and Swapna ஆகியவை பலத்த வரவேற்பைப் பெற்றன.

நிருத்யோல்லாஸாவின் 20-ஆவது ஆண்டு விழா, ஜனவரி 30, 2010 அன்று ஓலோனி கல்லூரியில் உள்ள ஸ்மித் சென்டரில் நடைபெற இருக்கிறது. பல ஆண்டுகள் பரதப் பயிற்சி பெற்றுள்ள மாணவிகள் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவார்கள். ஒவ்வொரு மாணவியின் தனித்திறமை வெளிப்படும் வண்ணம் நிகழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரத்திலும் இருபது மணிநேரத்திற்கும் மேலாகப் பல மாதங்களாக மாணவர்கள் ஒத்திகை செய்து வருகின்றனர். தொலைதூர மாணவர்கள் சிலர் இப்பள்ளியிலேயே தங்கி இதற்காகப் பயிற்சி பெறுகின்றனர்

இருவேறு கலாசாரங்களுக்கிடையில் வளரும் அமெரிக்காவாழ் இந்திய இளையதலைமுறைக்கு, நம் பண்பாட்டுத் தொன்மையையும் செழுமையையும் ஒருசேரக் கொண்டு செல்லுவன நம் நாட்டின் செவ்வியல் கலைகள். அவ்விதத்தில் பாரதத்தின் பக்தி மற்றும் பண்பாடு விதைகளை பரதக்கலைமூலம் நம் குழந்தைகளில் விதைக்கிறார் இந்துமதி கணேஷ் அவர்கள். இவரது பணி மென்மேலும் செழித்தோங்குவதாக.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமாண்ட்
More

புத்தக மழை
தெரியுமா?: 'வாழையடி வாழை' ஓவியக் காட்சி
தெரியுமா?: கவிஞர் புவியரசுக்கு சாகித்ய அகாதமி விருது
தெரியுமா?: ஆன்லைனில் நகை வாங்க
தெரியுமா?: சிலிக்கன் வேல்லியில் The Global School of Silicon Valley
தெரியுமா?: கலிஃபோர்னியா தமிழ்க் கழகத்தின் தமிழ்க் கல்வி இணைத் திட்டம்
தெரியுமா?: சான் ஹோசேயில் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி கோவில்
தெரியுமா?: வீரத் துறவியின் வேகச் சொற்கள்
Share: 
© Copyright 2020 Tamilonline