Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2009
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
வாங்குவதைக் கல்லில் செதுக்குங்கள், கொடுப்பதை மணலில் எழுதுங்கள்
- சித்ரா வைத்தீஸ்வரன்|டிசம்பர் 2009|
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajanஅன்புள்ள சிநேகிதியே,

ஒரு விஷயம் எழுதுகிறேன். எனக்கும் என் மனைவிக்கும் ஒரு மாதமாகப் பனிப்போர். வீட்டுக்கு ஏன் வருகிறோம் என்று இருக்கிறது. பிள்ளைகள் இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். பேசுவதற்குக் கூட யாரும் இல்லை. எப்படித் தீர்வு காண்பது என்று தெரியவில்லை.

என் மனைவி வீட்டில் நல்ல வசதி படைத்தவர்கள். திருமண ஏற்பாட்டின் போது, நானும் நன்றாகப் படித்து அமெரிக்காவில் நல்ல நிலையில் இருந்தேன். எங்களைத் தவிர என் மாமா, என் சித்தி என்று எல்லோருமே கொஞ்சம் பணக்காரர்கள். சிறுவயதில் நாங்கள் சாதாரண நிலையில் ஒரு வீட்டின் போர்ஷனில் வாடகைக்கு ரொம்ப வருஷம் இருந்தோம். என் அப்பாவின் குறைந்த சம்பளத்தில் நான், என் இரண்டு தங்கைகள், அப்பா, அம்மா, பாட்டி என்று கைக்கும் வாய்க்குமாக இருந்தது நிலைமை. நான் நன்றாகப் படிப்பேன். எஞ்சினியரிங் சீட் கிடைத்தது. அப்போதெல்லாம் Capitation Fee என்றெல்லாம் எதுவும் இல்லை. வெறும் ஃபீஸ் மட்டும்தான். கூட ஹாஸ்டல் + மெஸ் செலவு. என் அப்பா தெளிவாகச் சொல்லி விட்டார். "நமக்கு வசதியில்லை. உனக்கு வரும் ஸ்காலர்ஷிப் பிறகுதான் கிடைக்கும். பேசாமல் பேங்க் கிளார்க் பரீட்சை எழுதி பாஸ் செய்துவிடு. அப்புறம் ஆபீசராகக் கூட ஆகலாம். நான் யாரையும் கடன் கேட்டு அவமானப்பட மாட்டேன். வீண் கனவுகளை வளர்த்துக் கொள்ளாதே. இன்னும் இரண்டு தங்கைகள் வேறு இருக்கிறார்கள். சீக்கிரமே அவர்களும் கல்யாணத்துக்குத் தயாராகி விடுவார்கள். நமக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று நினைத்துக் கொள்" என்றார். நான் சிறு குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழுதேன். அப்பாவுக்கும் மனது கஷ்டமாக இருந்ததால் அவர் வெளியில் கிளம்பிப் போய்விட்டார். அம்மா பாவம், என்னையே பாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். "உனக்குக் கடவுள் எப்படி விதித்திருக்கிறாரோ அப்படித்தான் நடக்கும். ஆனால் முருகன் நம்மைக் கைவிட மாட்டான் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது" என்று சொல்லி என்னைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இன்றைக்கு நான் ஒரு கௌரவமான பதவியில், அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அந்தப் பெரியம்மா அன்று எனக்குப் போட்ட பிச்சை என்றுதான் நான் நினைக்கிறேன்.
இரண்டு நாள் பைத்தியம் பிடித்தவன் போலத்தான் இருந்தேன். சரி, பேங்க் பரிட்சைக்காவது படிக்கலாம் என்று முடிவெடுத்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து போர்ஷன் அம்மாள், என் அம்மாவிடம் மிகவும் பாசமாக இருப்பார். வயதில் மூத்தவர். அவர்கள் வீட்டில் என்ன நல்ல டிபன் செய்தாலும், பிள்ளைகளுக்குக் கொடு என்று கொஞ்சம் எடுத்துக்கொண்டு வருவார். அதுபோல அன்றைக்கும் ஏதோ துணியில் மூடி எடுத்து வந்திருந்தார். அம்மா, தன் சுக துக்கங்களையெல்லாம் எப்போதும் அந்த அம்மாளிடம் கொட்டி விடுவாள். அன்றும் அப்படித்தான். அதைக் கேட்ட அந்த அம்மாவோ "இந்தா... பையன் காலேஜ் சம்பளத்தை முதல்ல கட்டு. மத்ததைப் பின்னாடி பார்த்துக்கலாம்" என்று சொல்லி எதையோ கொடுத்தார். நான் எட்டிப் பார்த்தேன் - தங்கத்தில் ஒரு பெரிய பதக்கம் - எங்கம்மா பதறிப் போய்விட்டாள். வேண்டாம் என்று மறுத்தாள். " இதோ பாரு, இது எங்க பாட்டி எனக்குச் சீதனாமாகக் கொடுத்தது. எங்க வீட்டுக்காரருக்குக் கூட இது இருக்கா, இல்லையான்னு தெரியாது. நான் எந்தக் கல்யாணத்துக்கும் இதைப் போட்டுக்கிட்டுப் போறதில்ல. வீட்டுல சும்மாதான் கிடக்குது. இதை வச்சி வாங்கி, மொதல்ல இந்தப் பிள்ளையைப் படிக்க வை. எனக்கு ஒரு பேரன் இருந்தா நான் செய்ய மாட்டேனா? எப்போ வசதி வரதோ அப்போ மீட்டுக்கொடு. என் பேத்திக்காகத்தான் பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். அது பெரிசாற காலத்துல பார்த்துக்கலாம். இந்த விஷயம் நமக்குள்ள மட்டும் இருக்கட்டும். தம்பி நல்லா படி" என்று துணிப்பையைத் திணித்துவிட்டு, கிளம்பிப் போய் விட்டார்.

இன்றைக்கும் அந்தச் சம்பவம் அப்படியே நினைவில் இருக்கிறது. "அம்மா, எனக்கு ஸ்காலர்ஷிப் பணம் வந்த உடனே அதை மீட்டுக் கொடுத்திடும்மா" என்று அம்மாவிடம் சொன்னேன். இன்றைக்கு நான் ஒரு கௌரவமான பதவியில், அமெரிக்காவில் இருக்கிறேன் என்றால் அந்தப் பெரியம்மா அன்று எனக்குப் போட்ட பிச்சை என்றுதான் நான் நினைக்கிறேன். அப்புறம் நான் நன்கு படித்து, என் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வந்தது - that is all History.

இந்தக் கதைக்கும், என்னுடைய மனைவியுடனான சண்டைக்கும் சம்பந்தம் என்னவென்றால், அவளுக்கு என்னுடைய பழைய வாழ்க்கையைப் பற்றி ஏதும் தெரியாது. என்னைத் திருமணம் செய்து கொள்ளும்போது, நாங்களும் உயர்தரத்துக்கு வந்து விட்டோம். அப்போதும் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். பெரியம்மா குடும்பத்திற்கு கிஃப்ட்ஸ் வாங்கிக் கொடுத்தபோதும் அவள் ஒன்றும் மறுப்புத் தெரிவித்ததில்லை. ஆனால் இவளுக்கு வறுமை என்றால் என்னவென்றே தெரியாது. 'செஞ்சோற்றுக் கடன்' என்பார்களே அதன் அர்த்தமும் புரியாது. இரக்க குணம் கொண்டவள்தான். ஆனால் ஓரளவுக்கு மேல் போக மாட்டாள்.

சில மாதங்களுக்கு முன்பு அந்தப் பெரியம்மாவின் மகன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான். (பெரியம்மா 2 வருடம் முன்பு தவறி விட்டார்கள்) தன் பெண்ணுக்கு ஒரு நல்ல வரன் அமைந்திருப்பதாகவும், அவர்கள் உடனே திருமணம் செய்ய எதிர்பார்க்கிறார்கள் என்றும், என்னால் ஒரு சில லட்சங்கள் அனுப்பி வைக்க முடிந்தால், பின்னால் அவனுடைய பிளாட்டை விற்கும்போது அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் எழுதியிருந்தான். எப்போது அவன் பிளாட்டை விற்று, கடனை அடைக்கப் போகிறான் என்பது பற்றித்தான் நான் கொஞ்சம் யோசித்தேன். என் மனைவியுடன் கலந்தாலோசித்தேன். ஒரு 10k டாலர் அனுப்பலாமா என்று கேட்டேன். என் மனைவி, "அவர்களிடமிருந்து பணம் திரும்பி வருவது சந்தேகம். ஆகவே ஒரு 1k மட்டும் அனுப்பி விடுங்கள். எதிர்பார்ப்பு வேண்டாம்" என்றாள். நல்ல நியாயம்தான். ஆனால் அவரோ இ-மெயிலுக்கு மேல் இ-மெயில் அனுப்பிக் கொண்டிருந்தார். என்னுடைய உதவி மிகவும் முக்கியம் என்றும், கடன் பத்திரம் கையெழுத்துப் போட்டு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார். 10 லட்சம் செலவு இருக்கிறது என்றும் திருமணத்திற்கு என்னையும், மனைவியையும் கண்டிப்பாக எதிர்பார்ப்பதாகவும் எழுதியிருந்தார். "பணம் இல்லையென்றால் ஏன் இவ்வளவு ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டும். இப்போது இவருக்குக் கொடுத்தால் மற்ற உறவுக்காரர்களும் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். வம்பே வேண்டாம். நீங்கள் வேண்டுமானால் கல்யாணத்திற்குப் போய் வாருங்கள். I am not intrested" என்று சொல்லி விட்டாள் இவள்.
மறுபடியும் ஒரு மெயில். பத்திரத்தோடு பணம் அனுப்பலாமா என்று யோசித்தேன். பிறகு, தோன்றியது. எதை நம்பி
அந்தப் பெரியம்மா, அந்தப் பதக்கத்தைக் கொடுத்து உதவி செய்தார்கள், நான் மீட்டுக் கொடுக்காவிட்டால், யாரிடம் தன்னுடைய ஏமாற்றத்தைச் சொல்லிப் புலம்பியிருக்க முடியும்? மனித நம்பிக்கை தானே காரணம். ஒரு விடுமுறைப் பயணத்துக்குச் செலவு செய்யும் பணம், ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு ஏன் உதவியாக இருக்கக் கூடாது. அந்த உணர்ச்சிகரமான மனநிலையில் 10k டாலர் உடனே அனுப்பி வைத்தேன். ஆனால் மனைவியிடம் சொல்லவில்லை. சிறிது சங்கடமாக இருந்தது. அவளுக்குத் தெரியாமல் நான் எதையும் செய்ததில்லை. நாள் ஆக ஆகச் சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும், "ஏன் உடனே சொல்லவில்லை, எப்படி என்னைக் கேட்காமல்....." என்றெல்லாம் வாதம், எதிர்வாதத்திற்கு நான் தயாராக இல்லை. நான் திருமணத்திற்குப் போகவில்லை என்று சொன்னதையும் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பிறர் நமக்கு உதவி செய்யும்போது அதைக் கல்லில் செதுக்க வேண்டும். நாம் உதவி செய்யும்போது மணலில் எழுத வேண்டும்.
போன மாதம் வந்தது வினை. யாரோ உறவினர் அந்தத் திருமணத்திற்குச் சென்று விட்டு இங்கே திரும்பிய போது, அவர்கள் ஒரு பெரிய பார்சலைக் கொடுத்து விட்டு, அது எங்களுக்கு வந்து சேர்ந்தது. அவளுக்குப் புடவை, வேஷ்டி, எங்களுக்கு பட்சணங்கள், அப்புறம் நான் செய்த உதவிக்கு ஒரு பெரிய கடிதம். அப்போதுதான் அவள் கேட்டாள், எவ்வளவு அனுப்பினீர்கள் என்று. நான் உண்மையைச் சொன்னேன். அவ்வளவுதான். அதன் பிறகு என்னிடம் அவள் பேசவில்லை. எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தேன். முடியவில்லை. எனக்கும் ஈகோ இருக்கிறது இல்லையா, ஆகவே நானும் பேசுவதில்லை. எதற்குக் கோபம் - நான் அவ்வளவு பெரிய தொகையை அனுப்பியதற்கா, இல்லை, இவளிடம் கேட்காமல் அனுப்பியதற்கா? இரண்டுமேதான் காரணமோ என்று நினைக்கிறேன். பயமாக இருக்கிறது, இப்படியே இருந்தால் அது விவாகரத்தில் கொண்டு விட்டுவிடுமோ என்று. நான் செய்தது முட்டாள்தனமா? அவள் கோபித்தது நியாயமா? எனக்கே தெரியவில்லை.

இப்படிக்கு
........

அன்புள்ள சிநேகிதரே...

மௌனம் - ஒரு மாதம் ஆகி விட்டது இல்லையா? ரொம்ப நாளைக்குத் தாங்காது கவலைப்படாதீர்கள். ஏதேனும் ஒரு சம்பவம் பேச வைத்துவிடும். விவாகரத்து வரையெல்லாம் போகாது என்பது என் கணிப்பு. டீனேஜ் குழந்தைகளிடமும் பேசி நியாயம் கேட்க முடியாது. அவர்கள் கருத்தில் சண்டை போடும் பெற்றோர்கள் 'immature'. நண்பர்களுடன் கலந்தாலோசித்தால் விதவிதமான அபிப்ராயங்கள் வரும். நீங்கள் செய்யவும் வேண்டியதில்லை. இது உங்கள் முடிவு. உங்கள் பணம். உங்கள் நியாயம். தன்னுடன் கலந்து முடிவெடுக்கவில்லை என்பதுதான் உங்கள் மனைவியின் வருத்தம், கோபம் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அனுப்பிய தொகை, நீங்களே எழுதியது போல ஒரு வார Vacation செலவு. இல்லை, நீங்களே இந்தத் திருமணத்திற்குப் போயிருந்தாலும் இந்த அளவுக்குச் செலவாகியிருக்கும். "பிறர் நமக்கு உதவி செய்யும்போது அதைக் கல்லில் செதுக்க வேண்டும். நாம் உதவி செய்யும்போது மணலில் எழுத வேண்டும்" என்று நினைப்பவள் நான். நீங்களும் அந்த வகையைச் சேர்ந்தவர் என்றே நினைக்கிறேன். மேலும், பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்று தானே முன்வந்து அந்த நகையைக் கொடுத்த அந்தத் தாயின் வயிற்றில் பிறந்த மகனும் உங்களை ஏமாற்ற மாட்டார் என்றே நினைக்கிறேன். நல்லதோ, கெட்டதோ உடனே மனைவியிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கலாம். அப்போதே "Heated Wars" வந்து பிறகு குளிரிந்து போயிருக்கும். உங்கள் மனைவிக்கும் இந்த 'cold war' மகிழ்ச்சியைத் தரவா போகிறது? ஈகோவிற்கு இவ்வளவு நாள் உணவு போட்டாகி விட்டது. போதும். Just do something. That will surprise your wife and make her happy. She is also waiting for the blink from your side. Good luck.

வாழ்த்துக்கள். மீண்டும் சந்திப்போம்

சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 
© Copyright 2020 Tamilonline