Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்றாண்டுகளுக்குப் பிறகு
- வற்றாயிருப்பு சுந்தர்|ஆகஸ்டு 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeஸ்ரீரங்கத்தின் தெருக்களில் தடுக்கி விழுந்தால் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் இளைஞராவது, யுவதியாவது அமெரிக்காவில் ('ஐட்டி-ல இருக்காங்க') இருக்க, அவர்களது பெற்றோர்கள் சகல வசதிகளுள்ள அமெரிக்கச் சிறை மாதிரியான தீப்பெட்டி அபார்ட்மெண்ட்களில் மின்சார, மின்னணு சாதனங்களுடன் வசிக்கிறார்கள். மாலையில் ராகவேந்திர மடத்திற்கோ, ரங்கநாதர் கோவிலுக்கோ போகிறார்கள். பென்ஷன் வாங்குகிறார்கள். வாரயிறுதிகளில் தொலைபேசி அழைப்புகளில் குசலம் விசாரித்துக் கொள்கிறார்கள் ("அம்மாவுக்கு கட்டாயம் ஒரு ஃபுல் ஹெல்த் செக் பண்ணிடுங்கப்பா - ஏப்ரல்ல வந்துட்டு ஒரு ஆறு மாசம் இருந்துட்டுப் போலாம். இவளுக்கும் ஆறு மாசம் ஆறது"). உத்தர வீதிகளில் இருக்கும் வங்கிகளுக்குப் போகிறார்கள்.

பவர் ஆஃப் அட்டர்னியை மஞ்சள் பையில் வைத்துக்கொண்டு கால்டாக்ஸி பிடித்து ரிஜிஸ்ட்ரார் ஆபிசுக்குப் போய் ஒரு டூ பெட் ரூம் அபார்ட்மெண்டையோ அல்லது "திருச்சி-சென்னை சாலையை ஒட்டி அமைந்த குறைந்த ஆழத்தில் நல்ல நீர் கிடைக்கும் பள்ளி, மருத்துவமனை, பூங்கா வசதிகளோடு அமையப்பெற்ற கலைஞர் அல்லது காமாட்சி நகரில் இரண்டு கிரவுண்டு நிலத்தையோ - "கிரவுண்டு மூணு லச்சம் - பத்திரத்துல நுப்பதாயிரம் போடுவோம். பாக்கி கேஷா கொடுத்திருங்க" - பதிவு செய்கிறார்கள். அதோடு கிடைக்கும் வெள்ளிக்காசு பரிசை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பி கால் நீட்டி, சுவரில் சாய்ந்து அமர்ந்து விசிறிக் கொண்டே ("மாமா கரெண்டு எப்ப வரும்?") ஜன்னல் வழியாக வெளியுலகை வெறித்துப் பார்க்கிறார்கள். மின்சாரம் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி ஓடிக்கொண்டே இருக்கிறது. சென்ற விடுமுறையில் வந்த பேரக் குழந்தைகளை நினைத்துப் பார்த்துக் கொள்கிறார்கள். இரவானதும் டார்ட்டாய்ஸ் கொளுத்தி, பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு உறங்கிப் போகிறார்கள்.
***


நம்மூரிலும் இங்குள்ளது போல நல்ல சாலைகளும் இரைச்சலற்ற மாசற்ற வாழ்வும் புன்னகை புரியும் நாகரீத்தின் உச்சியில் இருக்கும் சமூகமும் இருந்தால் எப்படியிருக்கும்?
முந்தைய பத்தாண்டுகளில் காணாத அபார மாற்றத்தை மூன்றாண்டுகள் கழித்து விடுமுறைக்குச் சென்றபோது நான் கண்டேன். ஒருபுறம் நிறையப் பணம் புழங்கி நூறு ரூபாய் நோட்டு ‘டீ செலவு'க்குப் பறக்க, இன்னொரு புறம் நாள்முழுதும் வியர்க்க வியர்க்க ரிக்ஷா ஓட்டி நாற்பது ரூபாய் மட்டும் சம்பாதிக்கும் ஏழைகள் இன்னமும் ஸ்ரீரங்கத்தின் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்டவனுக்குக் காணிக்கையும் ஆபரணங்களும் வருடாவருடம் குவிந்துகொண்டேயிருக்க, கோவில்களுக்கு முன் பூக்கட்டி விற்கும் பெண்மணிகளும், செருப்பைப் பாதுகாத்து ஒரு ரூபாய் வாங்கிக்கொள்ளும் முறுக்கு வியாபாரிகளும், வறுத்த நிலக்கடலை, பொரி விற்கும் தள்ளுவண்டி வியாபாரிகளும், பள்ளிக்குச் செல்லாமல் முருகன், அம்மன் வேடங்களில் சொம்பு வாயில் துணிகட்டி உண்டியலாக்கிப் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் குழந்தைகளும் இன்னும் இருக்கிறார்கள். இம்மாதிரி காட்சிகளும் பயணங்களும் முடிவற்றதாகத் தோன்றியது.

இவையெல்லாம் ஒரு பயணியாக ஒரு மாத காலத்தில் எனது குறும் பயணங்களை வைத்தான பார்வைப் பதிவு - பரந்து விரிந்த நிஜம் வேறு மாதிரியாக இருக்கலாம். சில மாற்றங்கள் (அல்லது இன்னும் மாறாதவைகள்) அதிர்ச்சியளித்தன. பல பிரமிப்பைத் தந்தன. எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொள்வதிலேயே நேரம் போயிற்று. மாற்றங்களை மனம் ஏற்றுக்கொள்ளப் பழகிற்று - ஆனாலும் மூன்றாண்டுகளுக்கு முன்பு "அண்ணே" என்றழைத்த பயல்களெல்லாம் இப்போது "அங்க்கிள்" என்றழைத்ததைத்தான் ஜீரணிக்கவே முடியவில்லை.

ஒருமாத விடுமுறை சரசரவென்று தீர்ந்துவிட வருவதற்கு முன்பு விடுமுறையில் இதிதெல்லாம் செய்யவேண்டும், இன்ன இடங்களுக்குப் போகவேண்டும், இன்னின்னாரைப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் பலமாகப் போட்டுவைத்திருந்த திட்டங்களில் எதுவும் உருப்படியாக நடக்காதது மாதிரி ஒரு முழுமையின்மையோடு திரும்பப் போகிறோம் என்று தோன்றியது. இன்னும் சில மாதங்கள் கழித்து நிதானமாக யோசித்துத் திட்டம் போட்டு வந்திருக்கவேண்டுமோ என்று தோன்றியது. எதையாவது முக்கியமானதை மறந்திருக்கப் போகிறோம் என்றும் தோன்றியது. சந்திக்க நினைத்த உறவினர்கள், நண்பர்கள் சிலரைச் சந்திக்க முடியாதது குறித்துக் குற்றவுணர்ச்சி தோன்றியது.
அடுத்த தடவை வர இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும் - அதுவரை வயதானவர்களுக்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றும் தோன்றியது. இன்னொரு மாதம் விடுமுறையை நீட்டித்துவிடலாமா என்று தோன்றியது. அப்புறம் வேலை இல்லாமல் போய்விடக்கூடிய சாத்தியம் இருப்பதை உணர்ந்து மனம் எச்சரிக்கை மணி அடித்தது. எந்த மாற்றமும் இல்லாதது போன்று எல்லா நாளும் ஒரே நாளாய்த் தோன்றும் டாலரைத் துரத்தும் அமெரிக்க வாழ்க்கைக்குத் திரும்பப் போவதை நினைத்து மனம் ஆயாசமடைந்தது. ஆனாலும் மழை, பனி, வெயில், காற்று என்று எல்லா சீதோஷ்ண நிலைகளையும் வருடம் முழுவதும் அனுபவிக்கக்கூடிய பாஸ்டனுக்குத் திரும்பப் போவதை நினைத்தும், எந்நேரம் பார்த்தாலும் புன்னகை புரிந்து நலம் விசாரிக்கும் பக்கத்துவீட்டு வயதான அமெரிக்க தம்பதிகளையும், சாலையில், அலுவலகத்தில் என்று எங்கும் முன்பின் தெரியாதவர்கள் கடந்து போகையில் முகமன் சொல்லிப் போகும் வாழ்க்கைக்குத் திரும்புவதை எண்ணியும் மரங்கள் நிரம்பி நிழல் சூழ்ந்து அமைதி ததும்பும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் வாழ்க்கையை நினைத்தும், "நம்மூரிலும் இங்குள்ளது போல நல்ல சாலைகளும் இரைச்சலற்ற மாசற்ற வாழ்வும் புன்னகை புரியும் நாகரீத்தின் உச்சியில் இருக்கும் சமூகமும் இருந்தால் எப்படியிருக்கும்" என்ற கையாலாகாத வெளிநாடுவாழ் இந்தியச் சுயநலச் சிந்தனைகளும் எழும்பி அதனால் மனதோரத்தில் எழுந்த மகிழ்ச்சியையும் மறுக்க முடியாது. நிற்க.

திருச்சி மற்று உபரி நகரங்களைத் தாண்டி சென்னைக்குப் பிரதான சாலையில் வாகனம் செல்ல சின்னவள் கேட்டாள், "Daddy! Are we there yet?"
அதுவரை ஷாப்பிங் செய்த பலசரக்குகள், நூறு ரூபாய் சுரிதார்கள், ஆனந்த் பிராண்டு ஜட்டி பனியன், சிறிய அகல் விளக்குகள், வடு மாங்காய் (வேண்டாம்மா, இமிக்ரேஷன்ல தூக்கிப் போட்ருவான்), அப்பளம் வடாம், 2009 பிள்ளையார் காலண்டர், பஞ்சாங்கம், பிரஷர் குக்கர், மீனு மிக்ஸி, ஊதுபத்தி, சாம்பிராணிப் பொட்டலங்கள், கொலு பொம்மைகள் என்று கதம்பமாக அடுக்கியதில் இடமில்லாமல் என்னுடைய கைப்பையில் சில புத்தகங்களை மட்டும் ஓரமாக வைத்துக்கொண்டு பெட்டிகளை வாடகை வேனில் ஏற்றிக் கட்ட, குழந்தைகள் "Hug" என்று சொல்லி தாத்தா பாட்டியைக் கட்டிப்பிடித்து விடைபெற்று டாட்டா காட்டிவிட்டு வண்டியிலேறினார்கள். பெற்றோர்களும், வீட்டிலிருந்த உறவினர்களும், நண்பர்களும் வண்டியைச் சூழ்ந்துகொண்டு கையசைத்து வழியனுப்ப, "கவனமா இருங்க, ஒடம்பப் பாத்துக்கங்க" என்ற பரஸ்பரம் சொல்லிக்கொண்டு ஜன்னல் வழியாக மனைவி, குழந்தைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு "ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க. ஊருக்குப் போனதும் தகவல் சொல்லுங்க" என்று சொல்ல, "ஊருக்குப் போனதும் போன் பண்றேம்ப்பா என்று நான் சொல்லிவிட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டேன். திடீரென்று எல்லாமே ஒரு கனவு போலத் தோன்றியது. குழந்தைகள் ஆரவாரமாக எல்லாருக்கும் டாட்டா காட்டிக்கொண்டிருக்க அரை எலுமிச்சைகளை நசுக்கிக்கொண்டு வண்டி கிளம்பியபோது முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டு கண்களில் வழியத் துவங்கிய நீரை மனைவிக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்.

திருச்சி மற்று உபரி நகரங்களைத் தாண்டி சென்னைக்குப் பிரதான சாலையில் வாகனம் செல்ல சின்னவள் கேட்டாள், "Daddy! Are we there yet?"

முற்றும்.

வற்றாயிருப்பு சுந்தர்
Share: