Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
- வற்றாயிருப்பு சுந்தர்|ஜூலை 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeசென்னை எந்த அளவுக்கு என்னை பயமுறுத்தியதோ அதே அளவு ஆச்சரியப்படுத்தவும் செய்தது. முன்பு பார்க்காத பளபள கட்டடங்கள், கத்திப்பாரா சந்திப்பில் பெரிதாக ஐந்து விரல்களை நீட்டிய மாதிரி பாலம். மாறாதது போக்குவரத்து நெரிசல், ஒலி மாசு. இடதோரத் தடத்தில் செல்லும் வாகனத்தை திடீரென்று வலதோர மூலைக்குச் செலுத்தி மற்ற எல்லோரையும் அவரவர் வாகன பிரேக்குகளில் ஏறி நி்ற்க வைப்பது. முன்னெச்சரிக்கையின்றி எந்தச் சைகையும் இல்லாது அதிரடியாக எதிர்பார்க்காத திசையில் வாகனத்தைத் திருப்புவது, நடுச்சாலையில் நிறுத்துவது, சாலையில் எத்தனை தடங்கள் இருக்கிறது என்பது முக்கியமில்லை - வண்டி போகும் இடைவெளி கிடைத்தால் நுழைந்து போய்க்கொண்டேயிருப்பது, இருக்கும் சிக்னலை வி்ட்டுவிட்டு அடுத்து என்ன சிக்னல் விழும் என்று அனுமானித்துக் கொண்டு அதற்கேற்ப வண்டியோட்டுவது என்று சென்னையின் போக்குவரத்து குணங்கள் மாறவேயில்லை. இதனாலேயே நால்வழிச் சாலைகளில் எட்டு வரிசைகளில் அல்லது வரிசைகளற்று வாகனங்கள் தேனீக்களாய் அடைந்து கிடக்கின்றன.

நிறைய விதவிதமான புதிய மாடல் வண்டிகள். இளைஞர்களும், யுவதிகளும் காற்றாய்ப் பறக்கிறார்கள். தூசு, மாசு இரண்டிலும் முகத்தைக் காக்க முகமூடிக் கொள்ளைக்காரர்கள் போன்று பெண்கள் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொள்ள, ஆண்கள் பின்னால் அமர்ந்திருக்கும் பெண்ணின் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரிய வண்டிகளை ஓட்டுகிறார்கள். எங்கும் பேரிரைச்சல், புகை. அவ்வளவு சீராகப் பிரதான சாலைகளிருந்தும் நங்கநல்லூரிலிருந்து நுங்கம்பாக்கம் செல்ல எனக்கு இரண்டரை மணி நேரம் (கால் டாக்ஸியில்) ஆயிற்று. பார்த்ததும் காதலிக்கலாம் போலத் தோன்றும் பெண்கள் நிறையவே ஷாப்பிங் மால்களில் தென்பட்டார்கள். நங்கநல்லூர் மார்க்கெட்டில் சென்னையில் ஏதோ ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வந்திருக்கும் சீனப் பெண்கள் காய்கறி வாங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

தமிழ்நாட்டில் “குழாயில் நல்ல தண்ணீர்“ என்பது “தமிழகத்தில நல்லாட்சி“ என்பது போல, வருகிற மாதிரித் தோன்றும் ஆனால் வரவே வராத சமாச்சாரமாக இருக்கிறது.
சென்னை வாசிகள் மலைப்புக்குரியவர்கள். தென்தமிழகத்தில் “உப்புத் தண்ணி” என்று நாங்கள் குறிப்பிடுவது சுவையில்லாத, லேசான கசப்புச் சுவையுடைய தண்ணீரை. சென்னையில் நிஜமான உப்புத் தண்ணிதான் எல்லா வீடுகளிலும் வருகிறது போல. அதில்தான் குளித்து துணி துவைத்து எல்லாம் செய்கிறார்கள். தண்ணீர் மேலே பட்டால் தண்ணீர் பட்ட உணர்வே இல்லை. சோப்புத் தேய்த்தால் நுரை வருவதில்லை. குளித்துவிட்டுத் துவட்டினால் பிசுபிசுக்கும் உணர்வு. இதெல்லாம் என்னைப் போன்ற கிராமத்துக்காரனால் கனவில்கூட கற்பனை செய்ய முடியாத விஷயம்! ஆனால் யாரும் இதைப்பற்றி அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை. காலையில் எழுந்து குளித்து, உடைமாற்றி, வெயிலிலும், தூசியிலும் வியர்க்க வியர்க்க அலுவலகம் போய், மாலையில் பேருந்து, ரயில் என்று கூட்டத்தில் கிழிந்த வாழையிலையாய் வீட்டுக்கு வந்து, மின்சாரமில்லாமல், கொசுக்கடியைத் தாங்கிக்கொண்டு வியர்த்து ஊற்றி, வியர்வையுடனே தூங்கியெழுகிறார்கள். தெய்வமே என்று எல்லாரையும் நிறுத்திவைத்துச் சேவிக்கலாம் போலத் தோன்றுகிறது. “காசு இருந்திச்சின்னா இதுல எதுவும் இல்லாம வாழலாம்” என்கிறார்கள் - கொடுமையான உண்மை.

பணம் இருந்தால் பன்னீரிலும் குளிக்கலாம். இல்லையா, குளிக்கச் சாக்கடையில் கூட தண்ணீர் இல்லை.
Click Here Enlarge‘மினரல் வாட்டர்' என்று வெள்ளைக் காலர் மக்கள் வாங்கிக் குடிக்க, சாமான்யர்கள் ‘தண்ணிப் பாக்கெட்டு' வாங்கிக் குடிக்கிறார்கள். இது பல வருடங்களாக நடைபெறும் சங்கதிதான் என்றாலும் இம்முறை கவனித்தது - இதற்குமுன் இம்மாதிரி வாங்கிக் குடித்திராதவர்கள்கூட காசு கொடுத்து வாங்கிக் குடிப்பதுதான். தமிழ்நாட்டில் “குழாயில் நல்ல தண்ணீர்“ என்பது “தமிழகத்தில நல்லாட்சி“ என்பது போல, வருகிற மாதிரித் தோன்றும் ஆனால் வரவே வராத சமாச்சாரமாக இருக்கிறது. அரபு நாடுகளில் சொட்டு நிலத்தடிநீர் இல்லையென்றாலும் கடல்நீரைக் குடிநீராக்கி எல்லாருக்கும் 24 மணி நேரமும் மான்ய விலையில் விநியோகிக்கிறார்கள். இதை ஏன் நம் அரசாங்கங்கள் போர்க்கால அடிப்படையில் செய்ய முன்வரவில்லை என்பது புரியாத புதிர்! முன்பாவது நிலம் வாங்கவேண்டுமென்றாலோ, வீடு வாங்கினாலோ, ஏன் வாடகைக்கு ஒரு வீட்டைப் பார்த்தால்கூட “தண்ணி கஷ்டம் இல்லல்ல?” என்று சோதித்துக்கொள்வது வழக்கம். அவர்களும் “ஒக்காந்து கையால மண்ண நோண்டினீங்கன்னா ஈரப்பதம் இருக்கும். எளநி மாதிரி தண்ணி” என்று சொல்வார்கள். நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்குக் குறைந்து போய்விட்டது. மகா மோசமான நீர் மேலாண்மை காரணமாக மழை நீரும் மற்ற நீராதாரங்களும் கரைந்து கானல் நீராகிக்கொண்டிருக்கின்றன. இந்த லட்சணத்தில் “தண்ணீரினால் வருங்காலத்தில் மக்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள்” என்று ஆரூடம் வேறு! என்னவோ இப்போது யாரும் நீருக்காக அடித்துக்கொள்ளாதமாதிரி. அவர்களுக்கெல்லாம் கண்கள் என்ன ‘பொடனியிலா' இருக்கின்றன? வறண்ட கிராமங்களில் பிஞ்சுக் குழந்தைகள் குடங்களைத் தலையிலேந்தி மைல் கணக்கில் நீருக்காக நடக்கின்றன. பொதுக் குழாய்களில் குடவரிசை நீண்டுகொண்டே போகிறது. பெண்கள் குழாயடியில் நாய்ச்சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

நிலைமை இன்னும் மோசமாகி வருங்கால சந்ததியினரை நாயைப் போல நாக்கைத் தொங்கவிட்டுக்கொண்டு தண்ணீருக்காக வீதி வீதியாக அலைய வைக்கப் போகிறோம் என்பதை நினைத்தாலே குலை நடுங்குகிறது. அது எப்படி எந்தச் சொரணையுமின்றி அரசு இயந்திரத்தால் இருக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாகவே காணப்படும் “எவன் செத்தாலென்ன!“ என்ற மனோநிலை சமூகக் கட்டமைப்பு ஆட்டம் கண்டிருப்பதைக் குறிக்கிறது. மக்களின் ஆதாரத் தேவைகளைப் பற்றித் துளியும் கவலைப்படாத அரசாங்கங்கள் நாய்க்கு பிஸ்கெட் போடுவதுபோல கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வேட்டி, சேலை, டிவி, ஜட்டி, முண்டா பனியன் என்று இலவசங்களில் கரைத்து மக்களைப் பிச்சைக்காரர்களாக்கி வைத்திருப்பது சோகம். இலவசங்களனைத்தையும் ரத்து செய்துவிட்டு போர்க்கால அடிப்படையில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மாபெரும் அளவில் செயல்படுத்தி மக்களுக்கு வழங்கினால் நிகழ் காலமும் வருங்காலமும் அவர்களை வாழ்த்தும். ஆனால் செய்ய மாட்டார்கள்! வாழ்த்து ஓட்டை வாங்கித் தருமா?

வற்றாயிருப்பு சுந்தர், பாஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline