Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | ஹரிமொழி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அனுமன் சாட்சி
- வெங்கடேஷ் .ஆர்|ஆகஸ்டு 2009|
Share:
Click Here Enlargeஆறாவது முறையோ ஏழாவது முறையோ அவள் சுற்றிக்கொண்டிருந்தாள். அளவான அடிகள். நிதானமான நடை. சின்ன குத்துவிளக்கொன்று நடப்பதுபோன்று இருந்தது. ஒவ்வொரு முறை ஆஞ்சநேயர் சன்னிதியைக் கடக்கும் போதும் தலையை லேசாக நிமிர்த்தி, எளிய சேவித்தல். மறுபடியும் சன்னிதியைச் சுற்றும்போது போதும் போதாமல் இழுத்துக்கொண்டிருந்த தாவணியை மறைக்காதுவிட்ட மற்றொரு அங்கத்தைப் போர்த்திக்கொள்ளும் அவசரம்.

இடதுபுறம் கண்ணுக்குத் தெரியாமல் மூக்குத்தி. கண்களில் இருள். மிஞ்சிப்போனால் பதினெட்டு அல்லது பத்தொன்பது வயதிருக்கலாம். பாவாடையின் கீழ்பட்டையில் நைந்துபோன அடையாளங்கள். கழுத்தில் ரப்பர் செயின்.

இது எட்டு. இப்போது அடிப் பிரதட்சணத்திற்கு மாறியிருந்தாள். வாய் என்னவோ முணுமுணுத்துக்கொண்டிருந்தது. சுலோகமாயிருக்கும். மிக இம்சையான வேண்டுதல். அடிமேல் அடி வைத்து அப்படி எனன வேண்டிக் கொண்டிருப்பாள்? ஆஞ்சநேயர் மிக இயல்பாக கைகூப்பிக் கொண்டிருந்தார். எதிரே இருந்த தெப்பக்குளம் மற்றும் வேதவல்லி சமேத பார்த்தசாரதியை ஆஞ்சநேயர் நாள் முழுக்கப் பார்த்துக்கொண்டிருந்தார்.

பெரிய வேண்டுதலாக இருக்க வேண்டும். அடிப்பிரதட்சணத்தில் இது இரண்டாவது சுற்று. அவள் தன்னை வருத்திக்கொள்வது எனக்கு இம்சையாக இருந்தது. எட்டி ஆஞ்சநேயரைப் பார்த்தேன்.

"அவள் கேட்பதைக் கொடுத்துவிடுங்களேன் சுவாமி" என்றேன்.

ஆஞ்சநேயர் நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

"எத்தனையோ பேர் என்னென்வோ கேட்கிறார்கள். இவள் கேட்பதையும் கொடுக்க வேண்டியதுதான். காலம் கனியவேண்டாமா" என்றார் ஆஞ்சநேயர். "நீ கூடத்தான் நாள் தவறாமல் வந்து உட்கார்ந்துகொண்டு சுவரைத் தேய்க்கிறாய். உடனே கொடுத்துவிட்டேனா" என்றவர் மீண்டும் புன்னகையை அடக்கிக்கொண்டார்.

அவளைப் பிடித்துப்போனது ஒருபக்கம் என்றால், ஏன் பிடித்துப்போனது என்பதை மனம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. தெரியவில்லை. ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் உண்டா என்ன?
ஆனாலும் ஆஞ்சநேயருக்கு இவ்வளவு நக்கல் கூடாது. பக்கத்தில் வேதா கண்ணை இறுக்க மூடிக்கொண்டு, தியானத்தில் இருந்தாள். எப்படியும் ஆஞ்சநேயரிடம் சண்டை போட்டாவது அருளைப் பெற்றுவிடும் குறிக்கோளில் இருப்பது தெரிந்தது.

இப்போது கலைக்கக்கூடாது. அப்புறம் வெகுண்டெழுந்துவிடுவாள். தாங்காது சாமி.

கண்கள் இப்போது அந்தப் பெண்ணைத் தேடின. சன்னிதியின் உள்ளே இருந்தாள். பரவாயில்லை முடிந்தது பிரார்த்தனை. தீர்த்தம், சடாரி ஆனவுடன், துளசியோடு இரண்டு சாமந்தி மலர்களை பட்டாச்சாரியார் கொடுத்தார். கண்ணில் ஒற்றிக்கொண்டு வெளியே வந்த அவள், அரைவட்ட வடிவில் உடல் கவிந்து சேவிக்கத் தொடங்கினாள். இரண்டு, நான்கு, ஆறு... பலமான வேண்டுகோள் போலிருக்கிறது.

பின் நான் அமர்ந்திருந்த தூணுக்கு எதிரே இருந்த தூணை ஒட்டி அவள் பாவாடை பறக்காமல் கையமர்த்தியபடி உட்கார்ந்தாள். அலங்காரமில்லாத அம்பாள் போலிருந்தாள். கண்ணுக்குக் கீழே அரைவட்டக் கவலை. சதைப்பிடிப்பற்ற தேகம். சட்டென அவள் கண் உயர்த்த, என் பார்வையைச் சந்தித்தாள். உடனே விலக்கிக்கொண்டு, வாசல்வரை ஆஞ்சநேயரைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மன்றாடியபடி போனாள்.

"என்ன ஜொள்ளா?" வேதாதான்.

"எனக்குத் தெரிஞ்சி திருவல்லிக்கேணியுடைய பெஸ்ட் பிகர் இவதான்."

"கோவில்ல பேசற பேச்சா இது. இது ஆஞ்சநேயர் கோவில்."

"ஸோ வாட். தலைவர் நம்ம பிரண்டு. கண்டுக்கமாட்டார்."

"எங்க அம்மா ஆத்து பக்கதுல வந்திருக்கா இவ. புதுக் குடித்தனம். பயங்கர சூட்டிகை."

"என்ன இப்படி விழுந்து விழுந்து வேண்டிக்கறது?"

"தெரியலையே. என்ன கஷ்டமோ?"

எழுந்து பின் வீடு வரும்வரை அவள் நினைவாகவே இருந்தது. அவளைப் பிடித்துப்போனது ஒருபக்கம் என்றால், ஏன் பிடித்துப்போனது என்பதை மனம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. தெரியவில்லை. ஒருவரைப் பிடிப்பதற்கும் பிடிக்காமல் போவதற்கும் காரணங்கள் உண்டா என்ன?

நரசிம்மருக்கு உற்வசம். திருவல்லிக்கேணியின் நான்கு மாட வீதி மற்றும் குளக்கரைத் தெருக்கள் அழகு பூணும் மகோத்ஸவம். விதவிதமாய் கோலங்கள், சிரத்தையுடன். நடக்கத் தொடங்கிய சுட்டிகள் முதல் இளமையின் தலைவாசலில் நிற்கும் குட்டிகள் வரை காலையும் மாலையும் சாலைகளில் ஆஜர்.

கோலம் போடுவதில் ஒருவிதப் போட்டியே நடைபெறும். மாக்கோலம் தான். ஆனால் என்னென்ன வகைகள்!! தெருவில் போகும் எவரும் தம் கண்களை அகற்றமுடியா அற்புதங்கள் தெருவெங்கும் சமைக்கப்படும்.

அவள் தண்ணீர் தெளிப்பதே வித்தியாசமாக இருந்தது. தண்ணீரை வீசியும் அடிக்காமல், சிக்கனம் என்ற பெயரில், மக் தண்ணீரில் திண்டாடாமல், ஒருவித லாகவத்தோடு தண்ணீரைத் தெளிப்பாள். அவள் இடப்போகும் கோலத்தின் அளவு முன்னமேயே மனத்தில் இருக்குமோ என்னவோ? தண்ணீர் அதற்குமேல் அனாவசியமாகத் தெளிக்கப்பட்டதில்லை. பின் துடைப்பத்தால், தண்ணீர் தேங்காமல் ஒதுக்கிவிட்டு, ஆச்சரியம் நிகழ்த்த ஆரம்பிப்பாள்.

ஒருநாள் புள்ளிக்கோலம். வரிசைவரிசை வரிசையாகப் புள்ளிகள் தெருவை நிறைக்க, அடுத்த சில நிமிடங்களில், ஒரு மயிலோ, கிளியோ, கோவிலோ, தேரோ புள்ளிகளின் ஊடாய் நிமிர்ந்து நிற்கும். தேர்ந்த சிற்பியைப் போல், திருத்தமான அங்கங்கள். நளினம்.

மற்றொரு நாள், கோடுகள். நீளமாயும் சதுரங்களாயும் போய்வரும் கைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. மெலிதான கரங்கள். வெளுத்துப்போன ரப்பர் வளையல்கள். அதன் ஊடாய் எழுந்து நின்றன மாயங்கள்.
பின்னர் பெருமாள் வருவார், கொட்டு, வேத கோஷங்களோடு. தெருவையே அடைத்தபடி வாகனங்கள். அதைவிட, அதன் கம்பீரம் அலாதியானது. தோள் புடைத்த தொண்டர்கள். இரண்டு குடைகள். எல்லாம் ஒருவித வேகத்தோடும், வேகம் தரும் உற்சாகத்தோடு நடைபெறும். சாதாரண நாள்களில் இந்த வாகனங்களையெல்லாம் நகர்த்தி வைக்கக்கூட திறனில்லாமல் போகலாம். உற்சவம் தரும் பலம், கூட்டு முயற்சி அனைவர் தோள்களும் திரண்டெழச் செய்வது.

பெருமாள் என்னை பக்கத்துலயே வச்சிக்கணும்னு பார்க்கறார். தினம் வந்து சேவிச்சுண்டு, திருவல்லிக்கேணியையே சுத்திசுத்தி வந்து சேவை பண்ணிண்டு இருன்னு சொல்றார். அவர் சொல்றபோது மறுத்துச் சொல்ல நான் யார்?
தினமும் இரண்டு வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, கற்பூரத்தோடு அவள்தான் பெருமாளுக்கு தட்டுக் கொடுப்பாள். அவள் அம்மாவாகப்பட்டவள் -- அப்போதுதான் அவரைப் பார்தேன் -- தட்டு கொடுக்கச் சொல்லி அவளை முன்னே அனுப்பிக் கொண்டிருந்தாள். பட்டாச்சாரியார் அவசரமாக அதை வாங்கி வழக்கம்போல் கற்பூரம் ஏற்றி, பெருமாளுக்கு ஒரு ஆரத்தி சுற்றி, ஒரு பழத்தை எடுத்து வைத்துக்கொண்டு, கொஞ்சம் துளசி, இரண்டு சாமந்தி என்று தட்டில் போட்டுக் கொடுப்பார். இதெல்லாம் நடைபெறுவது சில நொடிகளில்.

கற்பூரம் அணையாமல் வலதுகையால் அடைகாத்துக்கொண்டு, இடக்கையால் தட்டை ஏந்தியபடி, கண்களை மூடி அவள் நிற்கும் நேரம், மனம் நெகிழச் செய்வது. சில கணங்கள் மட்டுமே தொடரும் பாக்கியம் அது. தன்னை மறந்து பெருமாளின் அனுக்கிரஹம் கோரி நிற்கும் பாக்கியம். சுற்றி திரண்டிருக்கும் சப்தம், கூச்சல், அவசரம், ஒளிவெள்ளம் அனைத்தும் விலகிப்போக, உள்ளொளி காட்டும் திசையில் ஆன்மா குவியும் பொற்கணம் அது.

மீண்டும் நரசிம்மர் ஜம்மென்று எழுவார். தோள் புடைத்துக்கொள்ள, ஆவேசம் தொற்றிக்கொள்ள, பயணம் தொடரும். அவள் அப்படியே நின்றிருப்பாள். பின்னால் வரும் கோஷ்டிக்காரர்களையும் ஒருதரம் சேவித்துவிட்டு, அவர்களும் விலகினபின் வீடு நோக்கி நடப்பாள்.

கோலம் கலைந்திருக்கும் அனைத்து வீடுகளிலும். அதுவரையான சிரத்தையும், திறமைகளும் பெருமாளுக்கே சமர்ப்பணம். அவளும் அவள் அம்மாவும் வாசலிலேயே சிறிது நேரம் நின்றிருப்பார்கள். அப்புறம் மனதே இல்லாமல் உள்ளே நகர்வார்கள்.

"அவளுக்கு அப்பா கெடையாதா?" வேதாவிடம் கேட்டேன்.

"இல்ல போல இருக்கு. அந்த மாமி எங்கையோ ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. கார்த்தால பஸ்ல பார்ப்பேன்."

"எதாவது படிக்கறதா அந்த பொண்ணு?"

"பிளஸ் 2வோட நின்னுடுத்து போல இருக்கு."

"வீட்லேயா இருக்கு?"

"அப்படித்தான் நெனைக்கறேன்."

"என்னடி இந்தக் காலத்துலயும் இப்படி ஒரு ஆச்சரியம். ஒழுங்கா படிக்க வெக்கலாமே..."

வேதா உதட்டைப் பிதுக்கினாள். என்னால் பொறுக்க முடியவில்லை. போய் கேட்டுவிடத் தோன்றியது. வேதாதான் தடுத்தாள்.

"உங்க வேலைய பாருங்கோ. அவாளுக்கு என்ன கஷ்டமோ. எல்லாராலயும் படிக்க வெக்க முடியுமா என்ன."

"கேட்டுத்தான் பார்க்கறது."

"சரி, கேட்டு, படிக்க வெக்க முடியலன்னுட்டா, என்ன பண்ணுவேள். நீங்க படிக்க வெப்பேளா?"

கொஞ்சம் இடைவெளி விட்டு -- அது என் நிலையை நான் உணர்வதற்கான கால அவகாசம் -- பின் தொடர்ந்தாள், "நம்ம நெலமையே சரியில்ல. முடிஞ்சா ஏதாவது செய்யணும். முடியலன்னா, கஷ்டங்கள கிளறாமலாவது இருக்கணும். சரியா."

நான் பேச்சற்றுப் போனேன்.

அப்புறம்தான் அந்த அதிசயம் நடந்தது. நிச்சயம் அதை அதிசயம் என்ற சொல்லைத் தவிர வேறெந்தச் சொல்லாலும் நிரப்பிவிட முடியும் என்று தோன்றவில்லை. இதேபோல் ஒரு கோவிலில் பார்த்த யாரோ ஒரு மாமி தன் பிள்ளைக்கு அவளை மனைவியாக்கிக்கொண்டார். இப்படிச் சாதாரணமாகச் சொல்வது தவறு. வெகு விமரிசையான திருமணம். வேதா வந்து சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.

"ஆஞ்சநேயருக்குச் சக்தி ஜாஸ்தி தெரியுமோ?" வேதா புளகாங்கிதப்பட்டாள்.

"என்ன உனக்கே கல்யாணம் நிச்சயமானா மாதிரி ஒரே குஷியா இருக்கே."

சின்னதாய் பார்வையைச் சுழலவிட்டு, என்னை முறைத்தாள் வேதா.

மகிழ்ச்சி ஜுரம் மாதிரி தொற்றிக்கொள்வது. அப்படித்தான் நடந்தது. அவள் முகத்திலும் அது தன் கைவண்ணத்தைக் காட்டத் தொடங்கியது. சட்டென தாவணியில் இருந்த அவள் காட்டன் புடைவைகளுக்கு மாறினாள். கவரிங் நகைகளும் ரப்பர் ஐட்டங்களும் விலகிப்போக, ஒரு நாள் மெல்லிசாக இரண்டு கைகளிலும் ஒற்றை வளையல்கள் மின்னின. மூக்குத்தியும், கழுத்தும் இப்போது நிறைந்திருந்தன.

எல்லாம் பையன் வீட்டிலேயே கொடுத்ததாக வேதா சென்னாள். மாப்பிள்ளைக்கு சவுதியில் வேலை. தினாரில் சம்பளம். கல்யாணம் ஆனாவுடன் கூட்டிப் போய்விடுவான். இப்போதெல்லாம் அவள் அவ்வப்போது சிரித்துக்கொள்வது போலவும் எனக்குத் தோன்றியது. வாசலில் நிற்பது குறைய, ஒருநாள் கார்கள் சகிதம் மாப்பிள்ளையோடு வந்து இறங்கினாள்.

மாப்பிள்ளை நல்ல உயரம். மஞ்சள் தோய்த்த பத்தாறு வேட்டி. கன்னம், கண்களில் மை. மறக்காமல் அவள் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார். கன்றுக்குட்டி போல் அவளும் கூடவே ஓடினாள். பாலும் பழமும் கொடுக்க வீட்டுக்குக் கூட்டி வந்திருந்தார்கள். ஏற்கனவே அவள் தலை உயர்த்தாதவள். அன்று இன்னும் கழுத்துடனேயே தலை ஒட்டிக்கொண்டிருந்தது. தலை நிமிர்த்தின போதெல்லாம் வசீகரப் புன்னகை.

அக்கம்பக்கம் என்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். கார் மீண்டும் கிளம்பும்வரை வாசலில் நின்றவர்கள் உள்ளே திரும்பவேயில்லை. பின் ஒவ்வொருவராக அவளின் அதிர்ஷ்டத்தை மெச்சிக்கொண்டே வந்தனர். சிலர் பேச்சில் மகிழ்ச்சி, சிலதில் இளக்காரம், ஒருசிலவற்றில் பொறாமை.

இனந்தெரியாத மகிழ்ச்சி என்னுள். வீட்டில் பாயசம் செய்யச் சொன்னேன்.

"என்னத்துக்கு திடீர்னு?" என்றாள் வேதா.

"சும்மா, அவளுக்குக் கல்யாணம் ஆயிடுத்து இல்ல."

"என்ன பைத்தியமா? அவாவாளுக்கு நேரம்னு வந்தா கல்யாணம் ஆறது. இப்போ இவளுக்கு. அவ்வளவுதானே."

வேதா சிரித்தாள். எனக்கு அப்படித் தோன்றவில்லை. இனம்புரியாத பயம் விலகினாற் போலிருந்தது.

"எனக்கு அக்கா தங்கைன்னு யாரும் இல்ல. யாருக்கும் நான் கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பெல்லாம் இருந்ததில்ல..."

என்னவோ சொல்லிக் கொண்டிருந்தேன். வேதா கவனித்ததாகத் தெரியவில்லை. அப்புறம் நிறுத்திவிட்டேன்.

மறக்காமல் அன்று மாலை ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போனேன். பெருமாள் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, ரொம்ப நேரம் தூணோரம் அமர்ந்திருந்தேன். சகஸ்ரநாம பாராயணம் முடியும் மட்டும் உட்கார்ந்துவிட்டு, வீடு சேரும்போது இருட்டிவிட்டது.

வாழ்க்கை அவள் வாழ்வில் வழங்கிய வசந்தம் போல் என் வாழ்விலும் வழங்கியது. அதுவரை சும்மா இருந்த கம்ப்யூட்டர் துறை, இரண்டாயிரமாண்டு நெருங்குவதை ஒட்டி தம் ஆயுளைக் கூட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தது. ஒய்2கே தீ எங்கும். சர்வதேச அளவில் இந்திய கம்ப்யூட்டர் நிபுணர்களின் தேவை பெருக, எனக்கும் அதில் ஒண்டிக்கொள்ள இடம் கிடைத்தது.

முதலில் இங்கிருந்தே எங்கள் நிறுவனம் ப்ராஜக்ட்டுகளை முடித்துக்கொடுத்தது. பின்னர் தேவைக்கேற்ப வெளிநாடுகளுக்கும் எங்களை ஏற்றுமதி செய்தது. ஆவென வாயைப் பிளந்துகொண்டு, அமெரிக்கா போய் இறங்கினேன். சார்லி சாப்ளினின் குடியேறிகளின் கிண்டலும், விமர்சனங்களும் ஞாபகம் வந்தாலும், வாழ்க்கையின் வேகத்தில் எல்லாம் நன்மை பயப்பதே என்ற நம்பிக்கை கூடவே வந்தது.

கொஞ்ச மாதங்களில் மனைவி மக்கள் என்று வாழ்க்கை முழுவதும் புலம்பெயர்ந்தது. இந்தியா முற்றிலும் தூரதேசம் ஆனது அப்போதுதான். உறவுகளும் நண்பர்களும் மாறிப்போனார்கள். புலம்பெயர்ந்த இடத்தின் கோவிலும் கலாசாரமும் பழகிப்போனது.

ஆஞ்சநேயர் எனக்கு இதைத் தரத்தான் இத்தனை நாள் சுற்றவைத்தாரோ என்றுகூடத் தோன்றுவதுண்டு. வேதாவிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டாள்.

"வடமாலை சாத்தறேன்னு வேண்டிண்டேன். அடுத்த தரம் போகும்போச்சே, மறக்காம செய்யணும்."

"லஞ்சத்துக்கெல்லாம் மசியறவர் இல்ல ஆஞ்சநேயர்."

"எதுக்கு குதர்க்கமா பேசறீங்க. நான் வேண்டிண்டேன். அவ்வளவுதான். அதுக்குமேல அதுக்கு அர்த்தம் கற்பிக்காதீங்க."

இது ஒருவகை பயம். இருப்பதை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் பயம். இந்த உயர்வின் முனையில் வீழ்ச்சி இருக்குமோ என்ற பயம். வீழ்ச்சியை எதிர்கொள்வதில் உள்ள தயக்கம். கௌரவம், மதிப்பு போன்ற வஸ்துக்களும் கூடவே இயங்குவதாகத் தோன்றியது.

நான் பேசவில்லை.

ஆனால் எல்லாம் அப்படியே இல்லை. இன்டர்நெட் குமிழி வெடித்தபோது, இந்தியா திரும்புவது ஒன்றே உசிதமானது. இருந்ததை வந்த விலைக்குப் போட்டுவிட்டு, விலை போகாததை மூட்டை கட்டி குப்பைத் தொட்டியில் வைத்துவிட்டு, இந்தியா திரும்பினேன். சாரங்கனுக்கு ஐந்து வயது. அங்கே பிறந்த கனகவல்லிக்கு மூன்று.

திருவல்லிக்கேணி அப்படியேதான் இருந்தது. கட்டிடங்கள் பிளாட்கள் ஆனாலும், புதுப்புது ஓட்டல்கள் முளைத்தாலும், தன் எருமைச் சாண வாசம் மாறாமல்தான் இருந்தது. எதிரே கோவில். மொட்டை மாடியில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நூற்றாண்டுக் காலங்களாய் விண்ணை முட்டிக்கொண்டு நிற்கும் கோபுரம். முன்னே தேர்முட்டி. கடைகள். அவ்வப்போது போய்வரும் வாகனங்களின் பளிச் வெளிச்சம். மாலை சீக்கிரமே இருட்டிக்கொண்டிருந்தது.

வேதா வடைமாலைக்குச் சொல்லியிருந்தாள். ஆஞ்சநேயர் கோவிலுக்குள் போக, மாற்றம் தெரிவில்லை. சுவர்களில் இருந்தச் சித்திரங்கள் இன்னும் கொஞ்சம் அழிந்திருந்தன. தூண்கள் இன்னும் பல எண்ணெய்த் தலைகளைக் கண்டு மினுமினுப்புக் கூடியிருந்தன. இன்னும் ஸ்ரீராமஜெயம் எழுதிய நோட்டுக்கள் உண்டியல் பக்கத்தில் இருக்கவே செய்தன.

ஆஞ்சநேயர் அதே உற்சாகத்துடன் "ஹலோ" என்றார். "வணக்கம் சுவாமி" என்றுவிட்டு கர்ப்பகிரஹத்தினுள் வளையவரும் கரப்புகளையே பார்த்திருந்தேன். நான் பார்த்துவிட்டுப் போனவைகளின் எள்ளுப்பேரன், பேத்திகளாய் இருக்கக்கூடும் இவை. கதவில் தொங்கிய மணிகளை கனகவல்லி மிக ஆர்வமாய் ஆட்டிக்கொண்டிருந்தாள். சாரங்கன் ஓடி ஓடிப் போனான்.

அர்ச்சனை முடிந்து வடையை வேதா வாங்கிக்கொண்டிருந்தாள். சாரங்கன் வேகவேகமாக ஓடிப் போய்க்கொண்டிருந்தான். யாரோ ஒரு மாமி மேல் போய் முட்டிக்கொண்டு விழப் பார்க்க, நான் பிடிக்கப் போனேன். அந்த மாமியே அவனை பிடித்துவிட, சட்டென்று அவளைப் பார்த்தேன். அவளேதான். இன்றுவரை பெயர் தெரியாத அவள்தான் நெற்றியில் சின்னப் பொட்டுடன், காலில் மெட்டி இல்லாமல், இன்னும் இளமைக் கருக்கழியாமல், சாரங்கனைப் பிடித்திருந்தாள், சின்னப் புன்னகையுடன். அவளின் வைதவ்யம் என் முகத்தில் அறைந்தது.

நான் ஸ்தம்பித்தேன். அவசரமாய் அவள் தன் பெண்ணை கூட்டிக்கொண்டு மற்றொரு சுற்றுவர, நான் வேதாவைப் பார்த்தேன். அவளும் அவளைப் பார்த்தாள். அவள் முகத்திலும் ஆச்சரியம் கொப்பளிக்க, எனக்கு என்னவோ செய்தது. உண்மையில் நிற்க முடியவில்லை. சாரங்கனைப் பிடித்துக்கொண்டு தூணோரம் உட்கார்ந்துவிட்டேன்.

அடுத்த சுற்றை முடித்தவள், ஆஞ்சநேயரைப் பார்த்து கண்ணை மூடி நீண்ட நேரம் லயித்திருந்தாள். அந்தச் சின்னப் பெண்ணும் கண்மூடியிருந்தது. கண் திறந்தபோது, வேதாவால் கட்டுப்படுத்த முடியவில்லை.

"என்ன தெரியறதா?"

"தெரியறது மாமி, நீங்க அந்த மொனையாத்துல இருந்தீங்க இல்ல" மேலாக்கை இன்னும் இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

"இது என்ன இது?"

வேதா சட்டென உடைந்து அப்போதுதான் பார்த்தேன். அவள் அழவில்லை. மெல்ல ஓரம் ஒதுங்கினர். வேதா அந்த சின்னப் பெண்ணின் தலையை நீவினாள். அது இனம்புரியாமல் வேதாவையே பார்த்துக்கொண்டிருந்தது.

"பெருமாள் என்னை பக்கத்துலயே வச்சிக்கணும்னு பார்க்கறார். தினம் வந்து சேவிச்சுண்டு, திருவல்லிக்கேணியையே சுத்திசுத்தி வந்து சேவை பண்ணிண்டு இருன்னு சொல்றார். அவர் சொல்றபோது மறுத்துச் சொல்ல நான் யார்?"

நான் மொழியற்று தூணில் சாயந்துகொண்டேன். அவள் அந்தப் பெண்ணைப் பிடித்துக்கொண்டு வெளியே போய்க்கொண்டிருந்தாள். ஆஞ்சநேயர் எல்லாவற்றையும் சுவாரசியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஆர்.வெங்கடேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline