Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
படம்
- இரா.முருகன்|ஜூலை 2009|
Share:
Click Here Enlargeகடைத்தெரு இயங்க ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே வரதன் வந்துவிட்டார். போட்டோ ஸ்ட்டுடியோவுக்குப் போக வேண்டும். அகலமும் நீளமுமாக விரிந்த தெருவில்தான் எங்கேயோ இருக்கிறது.

தெரு முனையிலேயே இறங்கி சைக்கிளைத் தள்ளியபடி ஒவ்வொரு கடை வாசலாக நின்று நின்று வந்து கொண்டிருந்தார். உயரமான அந்த ‘இருபத்தாறு இஞ்சு' சைக்கிள் வேலைக்குச் சேர்ந்த புதிதில் வாங்கியது. வரதன் ரிடையரானாலும் சைக்கிள் என்னமோ அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அப்படியேதான் இருக்கிறது. ஒரே சங்கடம் அதன் உயரம்தான்.

ஐந்தரை அடிக்கும் குறைவான வரதன், அவ்வப்போது சைக்கிளைச் சாய்த்துக் காலை ஊன்ற அவருடைய அறுபத்தேழு வயது இடைஞ்சல் செய்ததால்தான் இப்படி இறங்கித் தள்ளிக் கொண்டு... அதுவும், ராத்தூக்கம் இல்லாத அசதி வேறு.

எல்லாம் முந்தியநாள் ராத்திரி கோதுமை உப்புமாவில் ஆரம்பமானது. ஒரு கல் உப்பு அதிகம். அன்னபூரணி அம்மாளுக்கும் வயதாகிவிட்டது. கண் பார்வையும் கைத்திட்டமும் மாறிப் போகிறது.

தாகத்துக்காக இரண்டு குவளைத் தண்ணீர் அதிகம் குடித்ததால், நடுராத்திரியில் மூத்திரம் போக எழுந்திருக்க வேண்டிய கட்டாயம். அப்புறம் ஒருமணி நேரம் போல் தூக்கம் வராமல் போனது. தூக்கம் இல்லாதபோது தாகம் எடுத்தது. தாகத்துக்காக தண்ணீர் குடிக்க, திரும்ப பாத்ரூம்.

விளக்கைப் போட்டுக் கொண்டு, இங்கிலீஷ் பத்திரிகையில் படிக்காமல் போட்ட வெள்ளிக்கிழமை இணைப்பைத் தேடும்போதுதான் போட்டோ கண்ணில் பட்டது.

அறுபது வருடம் முந்தியபடம். தாலுக்கா ஆபிஸ் உத்தியோகஸ்தர்கள் சேர்ந்து எடுத்துக் கொண்டது. எல்லோருமே மோடி மஸ்தான் வித்தை பார்ப்பவர்கள் போல கண்ணை அகல விரித்துக் கொண்டு. வரதனின் அப்பாவும் அதில் உண்டு. தலைமைக் குமாஸ்தாவுக்கு அடுத்த நிலை குமாஸ்தாவாகத் தலைப்பாகையும் நீளக்கோட்டுமாக இடது ஓர நாற்காலியில் உட்கார்ந்திருப்பார். அவர் மடியில்தான் மொட்டைத் தலையோடு ஏழு வயது வரதன்.

கிராமபோன் பெட்டியில் யாரோ வைத்த இந்துஸ்தானி பாட்டு... நெய்யில் ஊறிய ஜாங்கிரி... மருக்கொழுந்து வாசனை... சாரட் வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட குதிரைகள்.... எல்லாம் அந்த நாளிலா... இல்லை, அந்த வயதின் மொத்தமான ஞாபகங்களா!?
தரையில் உட்கார்ந்திருந்த கீழ்நிலைச் சிப்பந்திகளில் யாரோ ஒருவர் தோளில் வரதனின் கால், குச்சி போல வழிந்து படர்ந்திருக்கும். நடுவே சிவப்பழமாக நெற்றி நிறைய விபூதியும் கோட்டுக்கு வெளியே தெரியும் ருத்ராட்சமுமாக அட்டணக்கால் போட்டிருக்கும் தாசில்தாரை பயத்தோடு பார்த்தபடி உட்கார்ந்திருப்பார் அந்தச் சிப்பந்தி.

ராத்திரியில் பார்த்தபொழுது படத்தில் வரதனின் அப்பா மடி வெறுமையாக இருந்தது.

மங்கிப் போன கண் பார்வை. ராத்திரி நேரம் வேறு. தூக்கம் கலைந்த ஆயாசம். படத்தைப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம். மனமும் கண்ணும் குறக்களி காட்டாமல் விட்ட தூக்கத்தையாவது பிரயத்தனம் செய்து பிடித்திருக்கலாம்.

என்றாலும், மற்ற எல்லோரும் சரியாகத்தான் தெரிகிறார்கள். தான் மட்டும் இப்படிக் காணாமல் போனது எப்படி என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தும் விளங்கவில்லை வரதனுக்கு.

“கொஞ்சம் எழுந்திருக்கறியா!”

புரண்டு படுத்த அன்னபூரணி அம்மாளைத் தோளில் கைவித்து விடாமல் உலுக்கினார் வரதன்.

வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த அன்னபூரணி அம்மாள் நினைவெல்லாம் பாப்புவா நியூகினியாவில் இருக்கும் ஒரே மகனைப் பற்றித்தான்.

“என்னங்க... ராகவனுக்கு என்னாச்சு!”

ஏதோ முரட்டு இனத்தைச் சேர்ந்த முகம் தெரியாதவர்கள் பிள்ளையை அடிக்கிறார்கள். வீட்டுக்குள் புகுந்து மருமகளைச் சேலையைப் பிடித்து இழுக்கிறார்கள். செருப்புக் காலோடு சாமி படம் வைத்த அறைக்குள் கத்திக்கொண்டே ஓடுகிறார்கள்.

போன தடவை ராகவனும் அவன் பெண்டாட்டியும் வந்துவிட்டுப் போன மறுநாள் பகலில் ஊஞ்சலில் படுத்திருந்தபோது அன்னபூரணியம்மாள் இப்படிக் கனவு கண்டது முதல் அதே பயத்தில்தான்.

அவள் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.

“ஏய்.... அழாதே.... யாருக்கும் ஒண்ணும் இல்லை.”

வரதன் சொல்லிபடி தன் பழைய போட்டோவை நீட்டினார்.

“இதுகென்ன இப்ப!”

அசிரத்தையுடன் வாங்கிக் கொண்ட அன்னபூரணி அம்மாள் கையில், படத்தின் பின்னால் நீட்டிக் கொண்டிருந்த ஆணி பட்டிருக்க வேண்டும். தடாலென்று கீழே போட்டதில், கண்ணாடி விரிசல் கண்டது.

“கண்ணாடியை ஒடச்சுட்டியே...” வரதன் குனிந்து படத்தை எடுத்தார்.

காட்டமாக ஏதோ சொல்ல வந்த அன்னபூரணி அம்மாள் நிற்காமல் இருமினாள்.

இருமல் மருந்தையும், மாத்திரைகளையும், வென்னீரையும் எடுத்துத் தர, துடைப்பத்தால் தரையைப் பெருக்கிக் கண்ணாடிச் சில்லுகளை ஓரமாக ஒதுக்க, ஈரத்துணியால் ஒற்றி எடுக்க என்று அடுத்த அரைமணி நேரம் போனது.

இருமல் அடங்கிப் படுக்கையில் உட்கார்ந்து ஏதோ கேட்க வாயெடுப்பதற்குள் வரதன் அவள் தலையில் ஆசிர்வாதம் செய்வது போல் கையை வைத்துச் சொன்னார்.

”ஒண்ணுமில்லே... நீ தூங்கு. ஏதோ கனவு”

அப்போது ஏதோ சமாதானம் சொல்லி அன்னபூரணியம்மாளைத் திரும்பத் தூங்க வைத்தாலும், வரதனுக்கு ஏதும் சமாதானம் கிடைக்காமல், விடிந்ததும் படத்தைப் பையில் திணித்துக் கொண்டு இப்படிக் கிளம்பி விட்டார்.

‘தாசரதி போட்டோ ஸ்டூடியோ.'

ஒருவழியாகக் கண்டுபிடித்தாகி விட்டது. இரண்டு பெரிய கடைகளின் பெயர்ப் பலகைகளுக்கு நடுவே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சின்னப் பலகையில் அம்புக்குறி காட்டிய இடத்தில் உள்ளொடுங்கி இருந்தது ஸ்டூடியோ.

சைக்கிளைத் தெருவிலேயே நிறுத்தி ஜாக்கிரதையாகப் பூட்டிவிட்டு, ஸ்டூடியோ வாசலுக்கு இடதுபுறமாக வளைந்துபோன மாடிப்படிக்கட்டில் உட்கார்ந்தார் வரதன்.

சீக்கிரம் கடை திறக்க வேண்டும். தெருவில் சைக்கிளை எவ்வளவு நேரம் இப்படி நிறுத்தி வைக்கலாம் என்று தெரியவில்லை. வழியை அடைத்ததாக யாராவது சண்டைக்கு வரலாம்.

சட்டென்று ஒரு நப்பாசை. இத்தனை நேரமும் கண் ஏமாற்றி இருக்கலாம். இப்போது எல்லாமே சரியாகப் போயிருந்தது...

பையை மடியில் தங்கினாற்போல வைத்தபடி உள்ளேயிருந்து படத்தை எடுத்தார்.

இல்லை. வரதன் அதில் காணாமல்தான் போயிருந்தார்.

படச்சட்டத்திலிருந்து எடுக்க வராமல் ஓரத்தில் ஒட்டியிருந்த கண்ணாடிச் சில்லு இப்போது பிரிந்து மடியில் விழுந்தது. அதை ஜாக்கிரதையாக எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு, படத்தை விரல்களால் மெல்லத் தடவினார்.

படத்தின் பின்னணியில் தெரியும் தாலுக்கா ஆபிஸ் சுவரும், உட்கார்ந்து இருக்கும் நாற்காலிகளின் விளிம்பும், இருப்பவர்களும், நிற்பவர்களும் தரையில் சீராக விரித்த ஜமுக்காளமும் உயிர் பெற்று அவர் விரல் வழியே மெல்லப் படிந்து கொண்டிருக்க, படம் எடுக்கப்பட்ட தினத்தைப் பற்றிய குழப்பமான நினைவுகள்.

கரகரவென்று கையால் சுழற்றி கிராமபோன் பெட்டியில் யாரோ வைத்த இந்துஸ்தானி பாட்டு... நெய்யில் ஊறிய ஜாங்கிரி... மருக்கொழுந்து வாசனை... சாரட் வண்டியிலிருந்து அவிழ்த்து விடப்பட்ட குதிரைகள் காலை உதைத்துப் புழுதி கிளப்பியபடி நின்றது... தங்கப்பல் அண்ணாமலைச்சாமி மகன் பொன்னப்பாவோடு மர பெஞ்சுகளில் குதித்து விளையாடியது....

எல்லாம் அந்த நாளிலா... இல்லை, அந்த வயதின் மொத்தமான ஞாபகங்களா!?

பொன்னப்பா... சடாரென்று நினைவில் திரும்பவும் வந்து குதிக்க, பரபரப்பாக மடியில் வைத்திருந்த படத்தைத் திரும்பவும் பார்த்தார் வரதன்.

வலதுகோடியில் தந்திக் கம்பம் போல விறைப்பாக நிற்கும் தங்கப்பல் அண்ணாமலைச்சாமி காலடியில், மாதாகோயிலில் பிரார்த்தனை செய்கிறதுபோல மண்டி போட்டபடி பொன்னப்பா... இதோ...

‘நான் மட்டும் ஏன் தொலைந்து போகணும்'

வரதன் மனதில் ஒரு நிமிடம் ஏக்கம்... கவலைப்படவும், கவனிக்கவும் எத்தனையோ இருக்க, இப்படி விடிந்ததும் விடியாததுமாகப் பழைய படத்தைக் கட்டித் தூக்கிக் கொண்டு, யாரோ கதவு திறக்கக் காத்திருக்க வேண்டுமா என்று அடுத்த நிமிடம் இடிக்கிறதும் அதே மனதுதான்...

“சார். ரொம்ப நேரமாக் காத்துக்கிட்டிருக்காப்பலியா! உள்ளே வாங்க...”

வழுக்கைத் தலையோடு பூட்டைத் திறந்தவன் சந்தனம் மணக்கச் சிரித்தான்.

“சகலை வீட்டுலே மஞ்ச நீராட்டு.... சாப்பிட்டுத்தான் போகணும்னு ஒரே பிடிவாதம்... ஆடு வெட்டக் கொஞ்சம் சொணங்கிப் போச்சு...”

கூட உள்ளே நடந்தபடி அவன் சொன்ன இந்த மூன்று தகவல்களாலும் தனக்கு என்ன உபயோகம் என்று தெரியாவிட்டாலும், வரதன் லேசாகச் சிரித்து வைத்தார்.
“உக்காருங்க சார்...”

பாஸ்போர்ட் படம் எடுக்க, வீட்டு விசேஷங்களுக்குப் படம் எடுக்க என்று வரிசையாகக் கட்டண விகிதம் எழுதிய தகரப்பலகையை வெளியே தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் நிறுத்தினான் போட்டோக்காரன்.

இந்தப் பையனைப் பிடிச்சு இங்கேயும் இருக்கற மாதிரி செஞ்சுடலாம்.... கொஞ்சம் மூக்கு, கண்ணை திருத்தி எழுதிட்டா.... இவன் வயசுதானே நீங்களும்?
வரதன் உட்கார்ந்திருந்த நாற்காலியில் உள்ளொடுங்கி பிளாஸ்டிக் ஒயர் வளைந்திருந்தது, கிணற்றுக்குள்ளிலிருந்து எட்டிப்பார்ப்பது போலவும், கங்காரு மடிப்பையில் குட்டி போலவுமாக தன்னை மாறிமாறி உணர்ந்து கொண்டிருக்க, எதிரே சுவர் முழுக்கக் குழந்தைகளும், புதுமணத் தம்பதிகளும், விறைப்பாக ஒரு மிலிட்டரிக்க்காரனும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன விஷயம் சார்!”

ஊதுபத்தியைக் கொத்தாகப் பிடித்துத் தீக்குச்சி கிழித்துக் கொண்டே போட்டோக்காரன் கேட்டது ஒரு சின்ன ஏப்பத்தில் முடிந்தது. வரதன் கொஞ்சம் தாமதமாக வெட்டப்பட்ட ஆட்டை நினைத்துக் கொண்டார்.

படத்தை மேஜைமேல் மெதுவாக வைத்தார்.

“வேறே பிரிண்ட் போட நெகட்டிவ் வேணுமே...”

அவன் ஓரக்கண்ணால் படத்தைப் பார்த்துச் சொல்லியபடி மேஜை ஓரமாகத் திரும்பி நின்றான். இரண்டு கைகளையும் உயரக் கூப்பியபடி முணுமுணுப்பாக ஏதோ ஜபிக்கலானான்.

பக்கத்தில் இப்படி ஒருத்தன் பிரார்த்தனை செய்ய, தான் சவுகரியமாக நாற்காலியில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது முறையில்லை என்று தோன்ற, வரதனும் எழுந்து நின்றார்.

கண் திறந்து போட்டோக்காரன் அருள் பெற்றவன் போலச் சிரித்தான். உலகின் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்ல அவன் கும்பிட்ட கடவுள் வரம் கொடுத்திருக்க வேண்டும்.

“நெகட்டிவ் இல்லாட்டாப் பரவாயில்லை... இதையே வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்... என்ன... கொஞ்சம் செலவு கூடுதலாகும்.”

ஆகட்டுமென்று வரதன் அவசரமாகத் தலையாட்டினார். இப்போது பதமாக விஷயத்தைச் சொல்லி விடலாம்.

“புதுசா காப்பி எடுக்குறபோது... இதோ இங்கே.... ஒரு சின்னப் பையன் படம் வரணும்" வெறுமையாக இருந்த இடத்தை மெல்ல நீவிக் காட்டினார்.

போட்டோக்காரன் சட்டைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்து அணிந்து கொண்டான்.

“எதுக்காவது புரூப் காட்ட வேண்டியிருக்கா?” மோசடிக்காரனோடு பேசுகிற தோரணையில் அவன் குரல் கிசுகிசுத்தது வரதனுக்குப் பிடிக்கவில்லை.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே.... ஆண்டவன் புண்ணியத்துலே எல்லாம் நல்லபடியாகத்தான் இருக்கேன்... இது வந்து.... ரொம்ப நாள்பட்ட படம்... நேத்துக்கூட எல்லாம் சரியாகத்தான் இருந்தது.”

அவர் முழுக் கதையையும் சொல்லி நிறுத்த, போட்டோக்காரன் சுவாரசியமாகக் குண்டூசியால் பல் குத்திக் கொண்டிருந்தான்.

“முதல்லே நான் சொன்னதை விட அதிகமாவே செலவு ஆகும் சார்...”

குண்டூசியை மேஜை நடுவே வைத்தபடி அவன் வரதனைப் பார்த்தான்.

“பரவாயில்லை...”

வரதன் கையை அவசரமாக மேஜையிலிருந்து எடுத்து மடியில் வைத்துக் கொண்டார்.

“உங்க படம் வேறே ஏதாவது இருக்கா?”

வேலையிலிருந்து ரிடையரானபோது எடுத்த படம்தான் இருக்கிறது. பிள்ளை கல்யாண போட்டோ ஆல்பத்தில் நாலைந்து இடத்தில் தலைகாட்டி இருந்த நினைவு. அப்புறம்....

“சின்ன வயசுலே எடுத்த படமா இருக்கணும்.”

போட்டோக்காரன் நியாயமான நிபந்தனையை விதித்தான். அவன் கவனம் முழுக்கப் போட்டோவில் இருந்தது.

வரதன் மவுனமாக ‘கிடையாது' என்று தலையாட்டினார்.

“அப்ப ஒண்ணு செய்யலாம்...”

அவன் வரதனைக் கூர்ந்து பார்த்தான். ஏதோ புரட்டு வேலை செய்ய அவன் உத்தேசிப்பவனாகவும், தான் அவனுக்கு ஒத்தாசை செய்யும் அடியாளாகவும் இப்போது வரதனுக்குத் தோன்றியது.

படத்தில் வலது கோடியில் இருந்த பொன்னப்பாவின் தலையைக் கையால் அழுத்திக் காட்டினான்.

“இந்தப் பையனைப் பிடிச்சு இங்கேயும் இருக்கற மாதிரி செஞ்சுடலாம்.... கொஞ்சம் மூக்கு, கண்ணை திருத்தி எழுதிட்டா.... இவன் வயசுதானே நீங்களும்?”

போன சித்திரைக்கு எழுபது திகைந்த பொன்னப்ப நாடாரை இந்த மனுஷன் ‘அவன் இவன்' என்று சொன்னது வரதனுக்குக் கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. ஆனாலும் படத்தில் காலம் உறைந்து போய், பொன்னப்பா எப்பொழுதுமே பையன்தான்...

வரதனுக்கு சட்டென்று முகம் பிரகாசமானது.

“அதெல்லாம் வேணாம். நாடார் வீட்டுலேயும் இதுபோல ஒரு படம் பார்த்த ஞாபகம்.... கேட்டுப் பாக்கறேன். கிடைச்சா...”

வரதன் எழுந்து கொண்டார். படத்தைப் பையில் வைத்துத் தோளில் மாட்டிக் கொண்டார்.

“சீக்கிரம் வந்துடுங்க... சாயந்திரம் ஒரு விசேஷத்துக்குப் போக வேண்டி இருக்கு....”

அவன் நிறைய பந்து ஜனத்துக்கு நடுவே பிறந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வரதன் படி இறங்கினார்.

வெய்யில் ஏறிக் கொண்டிருந்தது.

சைக்கிளில் நாலு வீதி சுற்றி, வேலாயுதசாமி கோவில் தெருவுக்கு திரும்புவதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனது, தெருவின் அந்தக் கோடியில்தான் பொன்னப்ப நாடார் வீடு.... சதா வாசலில் ஈசிசேர் போட்டுக் கொண்டு, சுருட்டுப் பிடித்துக் கொண்டு, இருமிக் கொண்டு...

வரதன் வண்டியை நிறுத்தினார். பொன்னப்ப நாடார் வீட்டு வாசலில் பெஞ்ச் போட்டு நிறைய பேர் உட்கார்ந்திருந்தார்கள்.

“நேத்து ராத்திரி சுருட்டு வாங்கிட்டு பாக்கி சில்லறையைக் காலையில் தரதாச் சொல்லிட்டுப் போனாரு மனுஷன்.”

தெருக்கோடி கடைக்காரன் ஒரே ஒரு சுருட்டு மட்டும் பாக்கியிருந்த மரப்பெட்டியைத் தரையில் போட்டுப் புகையிலை போகத் தட்டியபடி நாடார் வீட்டைப் பார்த்துச் சொன்னான்.

வரதன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டார்.

என்னமோ தோன்ற, பையிலிருந்து படத்தை வெளியே எடுத்துப் பார்த்தார்.

முழுக்க வெறுமையாக இருந்தது அது. பழுப்பேறிய பழைய அட்டைக்கு நடுவே புகை படிந்தது போல வெளிறிய காலிச்சதுரம் மட்டும்.

ஒரு நிம்மதியோடு நாடார் வீட்டுப் பக்கம் நடந்தார் வரதன்.

இரா.முருகன்
Share: