Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் மணியம் செல்வன்
'அபிநயா நாட்டியக் குழும'த்தின் மைதிலி குமார்
- மைதிலி குமார்|ஜூன் 2009|
Share:
Click Here Enlargeபரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி ஆகிய மூன்று இந்தியச் செவ்வியல் நடனங்களைக் கற்றுத் தேர்ந்தவர். குரு இந்திரா ராஜன், டி.ஆர். தேவநாதன், கலாநிதி நாராயணன் (பரதநாட்டியம்), வேதாந்தம் ஜகன்னாத சர்மா (குச்சிபுடி), ஸ்ரீநாத் ரௌட் மற்றும் கேலுசரண் மொஹாபாத்ரா (ஒடிஸி) என்று அவற்றின் விற்பன்னர்களிடமே கற்றவர். இவற்றைத் தனது ‘அபிநயா டான்ஸ் கம்பெனி' மூலம் மட்டுமல்லாமல் ஸ்டான்ஃபோர்ட், சான் ஹோசே ஆகிய பல்கலைக் கழகங்களிலும் பயிற்றியுள்ளார். தற்போது சான்டா க்ரூஸ் பல்கலையில் கற்பிக்கிறார். பாராட்டுப் பெற்ற பல நாட்டிய நாடகப் படைப்புகளை அரங்கேற்றியவர். 1978ல் அமெரிக்காவுக்குச் செல்லுமுன்னர் அநேகமாக இவர் நடனமாடாத இந்திய நகரமே இல்லை என்று சொல்லுமளவுக்கு இளம் மைதிலி நிகழ்ச்சிகளை வழங்கியிருக்கிறார். ‘சிருங்காரமணி', ‘நாட்யத்ரய கோவிதா', ‘நிருத்ய பாரதி', ‘அபிநய கலாரத்னா', ‘விஸ்வபாரதி' என்று பல விருதுகள் தந்து அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள கலாசார அமைப்புகள் இவரைக் கௌரவித்துள்ளன. நூறாவது அரங்கேற்றம் நடத்தப் போகும் மைதிலி குமாருடன் (www.abhinaya.org) தென்றல் வாசகர்களுக்காகத் தொலைபேசி வழியே உரையாடியதிலிருந்து....

கேள்வி: உங்கள் இளமைக் கால நினைவுகள் என்னென்ன?
பதில்: எனது முதல் நடன நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. அப்போது ஒரு குச்சிபுடி ஆசிரியை மும்பைக்கு வந்தார். குச்சிபுடி எனக்குப் பிடித்துப் போனது. பின்னர் டெல்லிக்குப் போனோம். அங்கே வேறொரு குருவிடம் பயின்றேன். எனக்குப் பதின்மூன்று வயதிருக்கும் போதுதான் எனக்கு நடனத்தில் ஆர்வம் பிறந்தது. ஒரு குழுவாகப் பயிலத் தொடங்கவே, ரொம்பச் சுவாரசியமானது. நான் முதலிடத்தில் இருப்பது, மற்றவர்கள் என்னை ஒரு முன்மாதிரியாகப் பார்ப்பது எல்லாம் அதற்குச் சுவையூட்டின. டெல்லியில் இருந்த போது ஒடிஸியும் கற்றுக் கொண்டேன்.

பெற்றோருக்கு நாங்கள் ஆறு குழந்தைகள். அப்பாதான் என்னை எப்போதும் ஊக்குவிப்பார். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, என்னை அழைத்துப் போவது என்று அப்பா எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். டான்ஸ் ஆடுவதைத் தவிர எனக்கு வேறு வேலையே கிடையாது. 1970 டிசம்பரில் பள்ளிப் படிப்பை முடித்தபின் அடுத்த படிப்புக்கு ஆறு மாதம் இருந்தது. அப்போது சென்னைக்குப் போய் இந்திரா ராஜனிடம் கற்றுக் கொண்டேன். கிருஷ்ண கான சபாவில் ஒரு நடன நிகழ்ச்சியும் கொடுத்தேன்.

கே: அப்புறம்...?
ப: நான் கல்லூரிப் படிப்பை முடிக்கும் நேரம் அப்பாவுக்கு ஹைதராபாதுக்கு மாற்றலாயிற்று. ஆந்திரப் பிரதேச வேளாண் கல்லூரியில் ஊட்டத் துறையில் MSc படித்தேன். ஹைதராபாதுக்குப் போன நேரத்தில் அந்தக் கல்லூரியில் ஏதோ வேலை நிறுத்தம். அதனால் எனக்கு நிறைய நேரம் இருக்கவே அங்கே பல நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. தவிர, ஒரு குருவும் கிடைத்தார். பரதம், குச்சிபுடி, ஒடிசி என்று எல்லா நடனங்களும் ஆடினேன். மும்பை, கோல்கத்தா, சென்னை, விசாகப்பட்டினம், திருச்சி என்று பல ஊர்களுக்கும் நிகழ்ச்சிகளுக்காகச் சென்றது நினைவிருக்கிறது.

கே: அமெரிக்காவுக்கு எப்போது வந்தீர்கள்?
‘நடனம் என்பது மேடையில் ஆடுவது மட்டுமல்ல. அதில் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, பயிற்சி, உடலைப் பக்குவப்படுத்துதல், கை-கால் ஒத்திசைவு, லயம் ராகம் ஆகியவற்றைக் கற்றறிதல் எல்லாம் உண்டு. இவற்றோடு கலாசாரம், பாரம்பரியக் கதைகள் ஆகியவற்றையும் அறிந்தாக வேண்டும்'
: 1978ல் எனக்கு ரோட்டரி ஸ்காலர்ஷிப் கிடைத்தது. ஒருவருடம் அமெரிக்காவில் தங்கவும் கலாசாரத் தூதுவராக இருக்கவும் நடனமாடவும் படிக்கவும் என்று. பயணக் கட்டணம் உட்பட முழுச் செலவும் அடக்கம். குமாரின் (என் கணவர்) தந்தை அப்போது ஹைதராபாதில் இருந்தார். கலிபோர்னியாவில் போய்த் தன் மகனைப் பார்க்க முடிந்தால் நல்லது என்று கூறினார். குமாரை நான் 1978ல் சந்தித்தேன். டேவிஸில் இருக்கும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் ஊட்டத்துறையில் மாஸ்டர்ஸ் முடித்தேன். 1979ல் திருமணம் ஆனது.

கே: நடனக் கல்லூரி தொடங்கியது எப்போது?
ப: 1980ல் தனிநபர் அமைப்பாகத் தொடங்கினேன். நடனமாட வேண்டும் என்பது என் ஆசை. சான் டியேகோ, பிட்ஸ்பர்க் என்று சில இடங்களுக்குச் சென்றேன். ஆனால் அப்போதெல்லாம் குழுவோடு சென்று வரும் பயணச் செலவுகூடக் கிடைக்காது. எனவே சமாளிப்பது கடினமாக இருந்தது.

அப்போதுதான், நடனம் கற்றுக் கொடுங்கள் என்று பலர் கேட்டார்கள். தொழில்முறை நடனக் கலைஞராக இருந்த எனக்குப் பல உத்திகள், கற்பனைகள் இருந்தன. இவற்றை ஆரம்பநிலை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. எனவே நான் நடன நிகழ்ச்சிகளை வடிவமைக்கத் தொடங்கினேன். 1983ல் முதல் அரங்கேற்றம் கண்ட மாணவி காயத்ரி (ஜயராஜசிங்கம்), நூறாவது அரங்கேற்றமும் காயத்ரி (வெங்கடேசன்) தான் என்பது வியப்பாக இல்லை!

கே: ‘அபிநயா'வில் இப்போது எத்தனை மாணவர்கள் இருக்கிறார்கள்?
ப: நூறுக்கு மேலே; இப்போது பல இளம் ஆசிரியைகள் இருப்பதால் நாங்கள் ஆரம்பநிலை மாணவர்களை எடுத்துக்கொள்கிறோம். 30-40 ஆரம்பநிலைக் குழந்தைகள் பயில்கிறார்கள்.

கே: அபிநயாவில் இளங்குழந்தைகளும் சேரும் அளவுக்கு அதைக் கொண்டுவந்து விட்டீர்கள்...!
ப: அந்தக் காலத்தில் குழந்தைகள் பாட்டு, டான்ஸ் தவிர இன்னும் வேறெதாவது ஒன்றைக் கற்றுக் கொள்வார்கள். இப்போது அப்படியல்ல. என்னென்னமோ நிறையக் கற்றுக் கொள்கிறார்கள்; விளைவு, நடனத்தில் முழு கவனம் செலுத்துவதில்லை. முன்பெல்லாம் 8 மாணவர்கள் இருந்தால் 6 பேர் கவனம் செலுத்துவார்கள்; இப்போதோ 2 பேர்தான் நடனத்தில் முழு ஆர்வம் காண்பிக்கின்றனர். ‘நடனம் என்பது மேடையில் ஆடுவது மட்டுமல்ல. அதில் கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு, பயிற்சி, உடலைப் பக்குவப்படுத்துதல், கை-கால் ஒத்திசைவு, லயம் ராகம் ஆகியவற்றைக் கற்றறிதல் எல்லாம் உண்டு. இவற்றோடு கலாசாரம், பாரம்பரியக் கதைகள் ஆகியவற்றையும் அறிந்தாக வேண்டும்' என்று நான் அவர்களுக்குச் சொல்லி வருகிறேன். எவ்வளவு நல்ல கலைஞராக இருந்தாலும், நடனமாட வாய்ப்பு வேண்டுமே! அது மிகவும் குறைவு. ஒரு பாலே நடனக் குழுமம் அவர்களுக்கு வாய்ப்பளித்தால்தான் உண்டு. அதிலும் நடனம் ஆடியே வாழ்க்கைக்குத் தேவையானதைச் சம்பாதிப்பது மிகக் கடினம். நடனக் கலைஞர்களுக்கு 9 மாத ஒப்பந்தம் தரப்படும். மீதி 3 மாதம் என்ன செய்வார்கள்?

கே: ஆக, ‘அபிநயா' தொடங்கிக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது?
ப: ஆமாம். 1980ல் நடனம் கற்பிக்கத் தொடங்கினேன். லாப நோக்கற்ற அமைப்பாக 1990ல் பதியப்பட்டது. முறையான அமைப்பாக இருந்தால்தான் கலை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெற முடியும் என்று நண்பர்கள் கூறினார்கள்.

1986ல் எனது முதல் தயாரிப்பான ‘சிவா-பிரபஞ்ச நர்த்தகன்' மேடையேறியது. அதற்குப் பின் வந்த எல்லாத் தயாரிப்புகளுக்கும் நான் நிதி உதவி பெற்றேன். இரண்டு குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு புதிய படைப்புகளை உருவாக்குவது சிரமம்தான். ஆனால் கலிஃபோர்னியா கலைக் கழகம் மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்து 2000 டாலர் கொடுத்தது. அப்போது அது நல்ல தொகை. எனவே, நானும் தொடர்ந்து பல புதிய நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். இன்னும் பெரிய அளவில் நிதியைப் பெறவேண்டுமென்றால் பதிவுபெற்ற நிறுவனமாக இருப்பது அவசியம் என்ற நிலை வந்தபோது அதைச் செய்தேன்.

கே: அமெரிக்காவில் இன்றைக்குக் கணக்கில்லாத நடனப் பள்ளிகள் வந்துவிட்டன. ‘அபிநயா'வின் சிறப்பு என்று எதைச் சொல்லுவீர்கள்?
ப: எங்கள் முதல் அரங்கேற்றத்திலிருந்து, முதல் தயாரிப்பிலிருந்து ஒரு குறிப்பிட்ட தரத்தில் நடனங்களை அளித்து வருவது எங்கள் சிறப்பென்று நினைக்கிறேன். “வாவ்! நிகழ்ச்சி பிரமாதம்” என்று எல்லோரும் சொல்லும் நிலையில் வைத்திருக்கிறோம். புதுமை, கற்பனைத் திறம், நடனத்தின் தரம் இவை எங்கள் சிறப்புகள். 25 ஆண்டுகளாகச் செய்ததையே செய்யாமல், புதிது புதிதாகப் படைக்கிறோம். இதற்காகப் பல வாரங்கள் சிந்திப்பேன். பிறரிடம் ஆலோசனை கேட்பேன். ஹிந்தி, சமஸ்கிருத, தமிழ்ப் பேராசிரியர்களைப் போனில் அழைத்துப் பேசுவேன். புதிய கருத்து, புதிய களம், புதிய இசை இதற்காக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். தரம் மிக முக்கியம்.

கே: சரி, இத்தனை ஆண்டுகளில், நீங்கள் செய்தவற்றில் மிக முக்கியமான 3 விஷயங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
ப: 1993ல் டைகோ குழுவுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டோம். ஜப்பானிய - இந்திய குழுக்கள் இணைந்து செய்தபோது, சான் ஹோசே மக்கள் “இதுதான் பல்கலாசார ஒருங்கிணைப்பு” என்று கூறினார்கள். இது முதல் சாதனை.

இரண்டாவது, நாங்கள் ஒரு பாலி நாட்டு நடனக் குழுவோடு சேர்ந்து வழங்கிய ராமாயண நிகழ்ச்சி. ஐந்து முறை மட்டுமே மேடையேற்றினோம், ஐந்துமே அரங்கம் நிரம்பிய காட்சிகள்!

மூன்றாவது பெரிய விஷயம், எனது மகள்கள் ரசிகாவும் மாளவிகாவும் நடனங்களை வடிவமைத்து வழங்குவதுதான். நடன அமைப்பை ரசிகா செய்ய, மாளவிகா ஜதிகளைவழங்குகிறாள். ஒரு பாரம்பரியத்தை அடுத்த தலைமுறை முன்னெடுத்துச் செல்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரும் விஷயமாகத் தெரிகிறது.

கே: கொஞ்சம் அரங்கேற்றங்களைப் பற்றிப் பேசலாமா? நீங்கள் நடத்தப் போகும் நூறாவது அரங்கேற்றம் வரவிருக்கிறது. குருவுக்கு, சிஷ்யைக்கு அரங்கேற்றத்தின் முக்கியத்துவம் என்ன?
ப: ஆதாரப் பயிற்சியைத் தாண்டி, தான் கற்ற வித்தையில் நேர்த்தியை அடைவதற்கான ஆர்வமே சிஷ்யையை அரங்கேற வைக்கிறது. அந்த லட்சியம் வந்ததுமே அத்தோடு அதற்கான சுய-கட்டுப்பாடும் வந்துவிடும். ஆசிரியையின் விமர்சனத்தையும் சுய விமர்சனத்தையும் ஏற்று, மேலும் இசை, நடனம் இவற்றைப் பயிற்சி செய்யும் ஊக்கமும் அர்ப்பணிப்பும் வந்துவிடும். இதுதான் ஆசிரியருக்கும் சரி, சிஷ்யைக்கும் சரி, அவர்களது முயற்சியைப் பலனுள்ளதாகச் செய்வது.

கே: நூறாவது அரங்கேற்றத்தைப் பற்றி உங்கள் மனதில் ஓடும் எண்ணங்கள்...?
ப: இதுவரை அரங்கேறிய 99 பேரையும் அதற்கு அழைக்க வேண்டும் என்று ஆசை. மின்னஞ்சல் முகவரி மாற்றங்கள், நான் பிற நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பது என்று பல பிரச்னைகள். இதுவரையில் சிரமப்பட்டதில் சுமார் 40 பேர் பதில் கொடுத்திருக்கிறார்கள். அடுத்த வருடம் வரப்போகும் 30வது ஆண்டு விழாவுக்கு முன்னோடியாகவே இதை நான் பார்க்கிறேன். அதற்குள் எல்லோரையும் தொடர்பு கொண்டுவிடலாம் என்று நம்புகிறேன்.

கே: 100வது அரங்கேற்றம் என்பது பற்றித் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
ப: எதுவுமில்லை. 100 என்பது ஓர் எண், அவ்வளவுதான். அதற்காக என்னையே நான் தட்டிக் கொடுத்துக் கொள்ள மாட்டேன். அரங்கேற்றத்துக்குப் பின்னால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு முக்கியம். 100 பேரில் 30 பேர் அரங்கேற்றத்துக்குப் பின்னர் எதுவும் செய்யவில்லை. நடனமாடவில்லை, திரும்பி வரவில்லை. அதனால்தான் அது வெறும் எண்தான் என்று கூறினேன். நாட்டியம் என்பது மிகக் கடினமான கலை. அரங்கேற்றம் ஆனபின்னும் அவர்கள் நாட்டியத்தை மேலே தொடர்ந்தால், நூறு அரங்கேற்றம் நடந்ததைவிட, எனக்கு அதுதான் அதிக மகிழ்ச்சி தரும்.

கே: ஒரு பெண் நடன அரங்கேற்றம் செய்துகொள்வதற்கும், அவரது தொழில் அல்லது வாழ்க்கையில் வெற்றிக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?
ப: நிச்சயம். அரங்கேற்றத்திற்காக அவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் உழைக்க வேண்டும். இதை 80களிலிருந்தே என் மாணவிகள் கூறி வருகிறார்கள். அதிகாலையில் எழுந்திருப்பது, அதற்காகச் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருப்பது, விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வது - இவையெல்லாம் தமது பள்ளி/கல்லூரியில் வெற்றி பெறவும் தேவைப்படும் அம்சங்கள்.

கே: முப்பதாவது ஆண்டுவிழா சமயத்தில் நீங்கள் இந்த 100 மாணவர்களிடையே இதைப் பற்றிக் கருத்துக் கணிப்பு நடத்தலாம் என்று தோன்றுகிறது...
ப: முதன்முதல் அரங்கேறிய காயத்ரியிடமிருந்து எனக்கு இப்போதுதான் பதில் வந்திருக்கிறது: “கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த என் அரங்கேற்றம் என் இளமைப் பருவத்தின் அற்புதமான காலகட்டம். அதற்குப் பிறகு நான் நரம்பு-உடற்கூற்றியலில் (நியூரோபயாலஜி) PhD பெற்றாகிவிட்டது. எனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனது பணி மிக நிறைவைத் தருவதாக இருக்கிறது”. இப்படிப் பலபேர் எழுதியுள்ளனர்.

கே: சரி, உங்களது கலைப் படைப்புகளைப் பார்க்கலாம். காந்தியைப் பற்றிய உங்கள் படைப்பு தனித்துவம் மிக்கதாக இருந்தது. படைப்புகள், அவற்றின் மையக்கருத்துகள் பற்றிச் சொல்ல முடியுமா?
ப: ஒரு தயாரிப்பைப் பற்றி ஓராண்டுக்கு முன்னரே திட்டமிடத் தொடங்கிவிடுவோம். என்ன செய்யலாம் என்று எங்கள் நிர்வாகக் குழுவில் விவாதிப்போம். உதாரணமாக, காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவராக டெல்லியில் இருக்கும் டாக்டர் ஸ்ரீஹர்ஷாதான் காந்தியைப் பற்றிய எண்ணத்தை விதைத்தார். மையக்கருத்து கிடைத்ததும் அதுகுறித்த ஆராய்ச்சி தொடங்கும். படிப்பு, சிந்தனை, விவாதம், மேலும் படிப்பு. இப்படியே போகும். எனது நிதியுதவிப் பதிவர் (Grant writer) “உங்கள் தீம் சமகாலத்துக்கு எப்படிப் பொருந்திவரும்?” என்று ஒவ்வொரு முறையும் கேட்பார். அதையும் கருத்தில் கொண்டு செயல்படுவோம். உதாரணத்துக்கு, காந்தி என்றால், அவரால் உத்வேகம் பெற்ற நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங், சீஸர் சவேஸ் என்று இவர்களது கதைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமக்குச் சமகாலப் பொருத்தம் புலப்படுவதோடு, இங்கிருப்பவர்களுக்கும் புரியும்படி ஆகிவிடும்.
Click Here Enlargeகே: உங்கள் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பற்றிச் சொல்லுங்கள்...?
ப: எந்தவொரு லாபநோக்கற்ற நிறுவனமானாலும் ஒரு நிர்வாகக் குழு - குறைந்தது மூவர் கொண்டது - வேண்டும். எங்கள் நிர்வாகக் குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடுகிறது. நடனப் பள்ளிக்கு ஒன்று, ஆசிரியர்களுக்கு ஒன்று, லாபநோக்கற்ற நிகழ்ச்சிகளை நடத்த ஒன்று என்று வெவ்வேறு இருக்கலாம். என் அமைப்பில் எல்லாம் ஒன்றுதான். கட்டணம், நன்கொடை, அரங்கேற்றப் பணம் என்று எல்லா வரவும் லாபநோக்கற்ற நிறுவனத்துக்கே போகிறது. நான் சம்பளம் மட்டுமே பெறுகிறேன். ஒருவேளை பள்ளியைப் பிரித்து வைத்திருந்தால் அதன் நிகர வரவை நான் எடுத்துக் கொண்டிருக்கலாம். அப்படி நான் செய்யவில்லை.

பெரும்பாலான லாபநோக்கற்ற அமைப்புகளில் நிறுவனர்/கலைஇயக்குனர் ஒரு பணியாளராக இருப்பார். நானும் ஒரு பணியாள்தான். ஆனால் வருமானத்தைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. சமுதாயத்துக்கு என்ன திருப்பித் தருகிறோம் என்பது - நிகழ்ச்சிகள் - அதுதான் முக்கியம்.

கே: அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இந்தக் கலையை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
ப: பாங்க்ரா, பாலிவுட் நடனம் ஆகியவற்றின் பிராபல்யம் பாரம்பரிய நடனத்தைச் சற்றே பாதிக்கின்றன. ஆனால் ஒவ்வொரு மாதமும் விரிகுடாப் பகுதியில் 2-3 அரங்கேற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்தாலும் செவ்வியல் கலைகள்தாம் அவற்றின் அஸ்திவாரம் என்பதைப் புரிந்து கொள்வார்கள் என்றுதான் நான் நம்புகிறேன். தாம் இவற்றை ஆடினாலும், தமது குழந்தைகள் என்று வரும்போது அவர்கள் செவ்வியல் நடனம் கற்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். ஆறு வயதுக் குழந்தைகளை பாலிவுட் நடனம் கற்க அனுப்புகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது.

எங்களது நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியரல்லாதார். ஆனால், அவர்களுக்கு இந்தியக் கலாசாரத்தில் ஈடுபாடு இருப்பதாலேயே வருகிறார்கள். மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக நாம் கலையை நீர்த்துப் போகச் செய்ய முடியாது. அதை நான் செய்ய விரும்ப மாட்டேன்.
குழந்தை நடனம் கற்றுக்கொண்டு, அதையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெற்றோருக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: சமூக/பள்ளி/கல்லூரியின் நிர்பந்தத்தால் பலவற்றைச் செய்ய விரும்புகிற பெற்றோர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லாரும் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. ஏதாவது சிலவற்றை மட்டுமே நன்றாகச் செய்ய முடியும் - அது என்ன என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஐந்தாறு பயிற்சிகளில் சேர்ந்தாலும் இரண்டு மூன்றை மட்டுமே முக்கியமானவையாகக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அதற்கு அதிக நேரம் செலவழிக்கவும் அடுத்தடுத்த மேற்படிகளுக்கு நகரவும் முடியும். நீங்கள் ஆசிரியருடன் பேசி, உங்கள் குழந்தை எதில் அதிகத் திறன் காட்டுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். திறமையை அடுத்து ஈடுபாடு வருகிறது.

கே: நடனக் கலையில் மிகுந்த நேரத்தைச் செலவிட்டிருக்கிறீர்கள். இந்த சமுதாயம் அதற்கு என்ன செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள்?
ப: அதிக அளவில் உள்ளூர்க் கலைஞர்களைச் சமுதாயம் ஆதரிக்க வேண்டும். இந்தியாவிலிருந்து கலைஞர்கள் வந்தால் அதற்கு நிறையக் கூட்டம் வருகிறது. அதுவும் வேண்டியதுதான். ஆனால் இங்கிருக்கும் கலைஞர்களுக்கு முக்கியத்துவமும் வாய்ப்பும் தரவேண்டும். வெறும் மேடை தருவதை நான் கூறவில்லை. எப்படி உள்ளூர்க் கலைஞர்கள் புதிய படைப்புகளை உருவாக்குகிறார்கள் என்பதை அறிய வேண்டும். அதற்கு ரசிகர்கள் அதிகரிக்கும்போது கலைஞர்கள் தம்மை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வார்கள்.

கே: ஊடகங்கள் எப்படி இருக்கின்றன?
ப: இங்குள்ள பிரதான மீடியாவுக்கு இந்திய சமூகத்தில் இவ்வளவு கலாசார நிகழ்ச்சிகள் நடப்பதே தெரிவதில்லை. தமது பிரதான கலைகள் மீதே அவை கவனம் செலுத்துகின்றன. அதை உடைப்பது கடினம். எங்களது நிகழ்ச்சிகளுக்கு வருகிறவர்களில் 10 சதவீதம் பேர் இந்தியரல்லாதார். ஆனால், அவர்களுக்கு இந்தியக் கலாசாரத்தில் ஈடுபாடு இருப்பதாலேயே வருகிறார்கள். மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்பதற்காக நாம் கலையை நீர்த்துப் போகச் செய்ய முடியாது. அதை நான் செய்ய விரும்ப மாட்டேன்.

கே: தாய், மகள், மாமியார், மனைவி, நடனமணி, கலை இயக்குனர் - இத்தனை பொறுப்புகளையும் எப்படி சமாளிக்கிறீர்கள்?
ப: கடைசிப் பொறுப்பில் நான் எதுவும் செய்வதில்லை (சிரிக்கிறார்). என் தந்தையார் இன்னமும் கார் ஓட்டிச் செல்கிறார். அம்மாவும் தன் காரியங்களைத் தானே செய்து கொள்கிறார். எனக்கு அவர்கள் வெகுவாக உதவியிருக்கிறார்கள். என் கணவர் குமாரும்தான். மற்ற பிரபல கலைஞர்களைப் போல நான் அதிகம் பயணிப்பதில்லை. பல ஊர்களுக்குப் போனால்தான் பிரபலமாக முடியும். இதுவே எனக்குப் போதுமானது.

கே: இப்போது உங்கள் குழந்தைகள் வளர்ந்துவிட்ட நிலையில் நீங்கள் அதிகப் பயணம் மேற்கொள்வது சாத்தியம் என்பது உங்களுக்குத் தோன்றவில்லையா?
ப: நான் ஒரு நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன், “மாளவிகா கல்லூரிக்குப் போனதும் நான் உலகப் பயணம் மேற்கொள்வேன் என்று நினைத்தேன். ஆனால் என்னால் முடியாது என்று தோன்றுகிறது. இனிமேல் என்னால் அவ்வளவு நடனப் பயிற்சி செய்ய முடியாது” என்று. வடகரோலினாவிலிருந்து ஒருவர் என்னை நடனமாட அழைத்தார். முடியாது என்று கூறிவிட்டேன். பத்து வருடங்களுக்கு முன்னால் என்றால் நான் போயிருப்பேன். அப்போது யாரும் அழைக்கவில்லை (சிரிக்கிறார்). உலகப் பிரபலமடையும் ஆசை எனக்கில்லை.

கே: நீங்கள் ஆசிரியப் பணியும் செய்கிறீர்கள், இல்லையா?
ப: ஆமாம், நான் சான்டக்ரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் கற்பிக்கிறேன். இது ஆறாவது வருடம். இது எனக்குப் பிடித்திருக்கிறது. வாரத்தில் 2 நாட்கள். அதனால் இன்னொரு பயனும் உண்டு. புதியவர்கள் பலருக்கு இந்திய நடனத்தை அறிமுகம் செய்ய முடிகிறது. இல்லாவிட்டால் அவர்கள் அதை பாலிவுட் நடனம் என்று நினைத்துக் கொண்டுவிடுகிறார்கள். நான் பாலிவுட் அல்லாத இந்திய நடனத்தின் நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்பிக்க முடிகிறது.

கே: இவ்வளவுக்கும் நடுவே உங்கள் படைப்புத் திறனை எப்படித் தக்கவைத்துக் கொள்கிறீர்கள்?
ப: அதற்கான உந்துதல் நிகழ்ச்சிகளிலிருந்து கிடைக்கிறது. ஜூன் 28ம் தேதி நிதி திரட்டுவதற்காக ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. நான் ரசிகாவை ஆடச் சொன்னேன். அவர்களோ என்னையும் ஆடச் சொல்கிறார்கள். இப்போது நான் புதிதாக எதாவது நிகழ்ச்சி தயார் செய்தாக வேண்டும்.

கே: உங்கள் மகள்கள் இருவரும் நல்ல நடனமணிகள். அவர்களிடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
ப: நன்றாகச் செய்து வருகிறார்கள். ஆனால், அவர்கள் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. 100வது அரங்கேற்றத்துக்கு மாளவிகா நட்டுவாங்கம் செய்கிறாள். என்னால் தொடர்ந்து கீழே உட்கார முடியாதென்பதால் அவள் மூன்று உருப்படிகளுக்குச் செய்யப் போகிறாள். அவளுக்கு நல்ல நினைவாற்றல், அதனால் மிக நன்றாகச் செய்கிறாள். இந்தப் பகுதியில் இருக்கும்வரை அவர்களை நான் ஊக்குவிக்க வேண்டும். அவர்களே சுதந்திரமாகச் செயல்படவும் வேண்டும்.

கே: இங்குள்ள தமிழ்ச் சமுதாயத்துக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: கலைகளைக் கற்பதற்குக் குறுக்கு வழி கிடையாது. எதைச் செய்தாலும் நேர்மையாக உழைக்க வேண்டும் என்பதையே.

தனது தாயாரின் உடல்நிலை அவ்வப்போது அவருக்குக் கவலை தந்தபோதும், அடுத்தடுத்து வரவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் கவனம் செலுத்த வேண்டியிருந்தபோதும், மிகப் பொறுமையோடும் ஆர்வத்துடனும் தென்றலுடன் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட மைதிலி குமார் அவர்களை வாழ்த்தி, நன்றி கூறி விடைபெற்றோம்.

***
உள்ளூர்க் கலைஞர்களை ஆதரியுங்கள்

வாருங்கள், பாருங்கள், உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள், மற்றவர்களிடமும் கூறுங்கள். விளம்பரம் கிடைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. ஒரு கச்சேரியைப் பற்றி நீங்கள் பத்துப் பேரிடம் பேசுங்கள். இல்லாவிட்டால் வெளியே தெரியாமலே இவர்களது கலை நசித்துவிடும். மற்றொரு விஷயம், ஆண்களுக்குப் புரிய வைப்பது. அவர்கள் நடனம் ஏதோ பெண்கள் சமாச்சாரம் என்று நினைத்துவிடுகிறார்கள். தாய்மார்கள் அழைத்து வருவதால்தான் பல குழந்தைகள் நடனம் கற்கிறார்கள். தந்தைமார் அவ்வளவு செய்வதில்லை. அதிலும் கல்யாணமானதும் நடனத்தை விட்டுவிடுகிறார்கள்; காரணம், கணவனுக்கு இந்திய கலாசாரம், செவ்வியல் கலைகள் பற்றிய ஞானம் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் கால்பந்து, கூடைப்பந்து இன்ன பிற மேற்கத்திய விஷயங்கள்தாம். அவர்கள் தமது மனைவி, மக்கள் இந்தியப் பாரம்பரியக் கலைகளைக் கற்பதை ஊக்குவிப்பதில்லை.

மைதிலி குமார்
மேலும் படங்களுக்கு
More

ஓவியர் மணியம் செல்வன்
Share: 
© Copyright 2020 Tamilonline