Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஒரு பிரசவ டைரி
- ரம்யா நாகேஸ்வரன்|ஏப்ரல் 2009||(2 Comments)
Share:
Click Here Enlargeகுளிர்... குளிர்... இந்த ஒரு செய்தி மட்டும் மூளைக்குச் சென்றது. இலவச இணைப்பாய் இருட்டு. மாலை மணி ஆறு தான் என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்பமாட்டார்கள். நட்டநடு ராத்திரி போன்ற அடர் இருள். ஐந்து வருட ஸ்விஸ் வாழ்க்கையில் பழகியதுதான். மாற்றம் சீதோஷண நிலையில் இல்லை. என் உடம்பில்தான். இந்த முறை குளிரும், இருட்டும் சற்று மிகையாகத் தெரிந்தது. நான் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகு கருவுற்றிருக்கிறேன் என்பதோ, தற்பொழுது அதிகமாகச் சோர்வுற்றிருக்கிறேன் என்பதோ ஸ்விஸ் குளிருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை. லேசாக மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. கைப்பையில் இருந்த குடையைப் பிரித்தேன். சே! வழக்கம் போல் கையுறைகளை மறந்துவிட்டேன். இன்னும் இரண்டே நிமிடத்தில் குடையை பிடித்திருக்கும் விரல்கள் தந்தியடிக்கத் தொடங்கிவிடும். எப்பவும் போல் குளிர் கோட்டின் பைகளின் உள்ளே கைகளை மறைத்துக் கொண்டு சென்றுவிடலாம் என்று நினைத்தேன். மழை வந்து படுத்திவிட்டது. தினம் காலையில் இந்த குளிருக்கு உடை உடுத்துவதே ஒரு சடங்கு. முதலில் அலுவலக உடுப்பு. பிறகு கால்களில் நீள சாக்ஸ், குளிர் பூட்ஸ், காதை மறைக்க மப்ளர், கையுறைகள், நீண்ட குளிர் கோட். ஏதாவது ஒன்றிரண்டை மறந்து விடுவேன் அல்லது வேண்டுமென்றே அணியமாட்டேன். கணவர் நிதானமாக எல்லாவற்றையும் அணிந்து கொள்வார். ”அவ்வளவா குளிர் இருக்காது. எதுக்கு இவ்வளவு முன் ஜாக்கிரதை?” என்று கேலி செய்வேன். ”இதுக்குப் பேர்தான் விஷ்ஃபுல் திங்கிங். நீதான் கடைசியில் கஷ்டப்படப் போறே” என்பார். எப்பவும் அவர் சொன்னது போல் தான் நடக்கும். இருந்தாலும் ஏதாவது ஒரு பொருளை 'மறப்பதை' நான் நிறுத்தவில்லை.

அலுவலகத்திலிருந்து ட்ரெயின் பிடித்து வீட்டுக்குச் செல்ல வேண்டும். ட்ரெயின் ஸ்டேஷனிலிருந்து வீட்டிற்குச் செல்ல ஐந்து நிமிடம் நடக்க வேண்டும். நாங்கள் இருந்த ரோட் ஒரு டெட் எண்ட் என்பதால் நடமாட்டமே இருக்காது. மழையினால் சாலையில் மேல் மெல்லிய ஐஸ் படிந்திருந்தது. வழுக்கி விழாமல் கவனமாக நடந்து சென்றேன். அதிர்ஷ்டம் இருந்து, நாளைக் காலை சூரிய பகவான் லேசாக வெளியே வந்தால் சிறிது உருகும். இல்லையேல் காலையிலும் இதே நிலைதான்.

சூரிக் நகரில் வருடத்திற்கு எட்டு மாதங்கள் மழை அல்லது குளிர்தான். ஒரு மூன்று, நான்கு மாதங்கள் தான் வெயிலடிக்கும். ஒரு மாதமாவது இந்தக் குளிரிலிருந்து தப்பிக்க நானும் என் கணவரும் கவனமாக வருட ஆரம்பத்திலிருந்தே திட்டமிடுவோம். முதலில் இந்த வருடம் இருவருக்கும் அலுவலகத்தில் எவ்வளவு விடுமுறை நாட்கள் இருக்கின்றன என்று பார்ப்போம். இருவருக்குமே பன்னாட்டு வங்கிகளில் வேலை. அதுவும் என்னுடன் வேலை செய்பவர்களில் பெரும்பாலோர் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஆண்டிறுதி விடுமுறைக்கு அனைவரும் தங்கள் நாடுகளுக்குச் செல்ல விரும்புவார்கள். அதனால், சில மாதங்கள் முன்னதாகவே அவர்களுடன் கலந்து பேசி யார் எப்பொழுது செல்கிறார்கள் என்று பார்த்து நாம் அதற்கேற்றபடி விடுமுறையில் செல்ல வேண்டும். எல்லோரும் ஒரே சமயத்தில் செல்வதை எங்களுடைய அமெரிக்க பாஸ் விரும்பமாட்டார். நாங்கள் இருவரும் ஜூன் மாதமே எங்கள் இஷ்ட தேதிகளை முடிவு செய்து, அலுவலகத்தில் கலந்து பேசி, ஜூலைக்குள் டிக்கெட் புக் செய்துவிடுவோம். அதைச் செய்து விட்டால் பாதி தூரம் இந்தியா சென்றது போல் ஒரு திருப்தி. அப்பொழுதிலிருந்தே எந்த நண்பரிடம் பேசினாலும், "டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா போறோம்." என்று சொல்ல ஆரம்பித்து விடுவோம், ஏதோ அடுத்த வாரமே செல்வது போல! அவர்களும், "அப்படியா! எந்த ஏர்லைன்ஸ்? நாங்களும் புக் பண்ண வேண்டியதுதான். இந்த வீக்-எண்ட் பண்ணிடுவோம்," என்பார்கள்.

குளிர்காலம் வந்து விட்டால் யாரும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொள்ளாமல் விரைந்து வீட்டைச் சென்று அடைவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தங்கள் உடம்பை ஒடுக்கிக் கொண்டு, குளிர் கோட்டிற்குள் ஒளிந்துக் கொண்டு, உருவமும், உணர்வுகளும் முற்றிலும் தலைகீழாக மாறிவிடும்
இப்படி கவனமாகத் திட்டமிட்ட விடுமுறை முடிந்து இந்தியாவிலிருந்து சூரிக் திரும்பும் பொழுது எனக்கு மிகுந்த மனச்சோர்வு ஏற்படும். ஊரில் வீட்டார், நண்பர்களுடன் அரட்டை, அம்மாவின் பில்டர் காபி, சரவணபவனில் தோசை, பாண்டி பஜார் ஷாப்பிங், சீசன் கச்சேரிகள் என்று நேரம் போவதே தெரியாது. வீட்டிற்கு வந்தால் ஜெட்லாக் புண்ணியத்தில் தூக்கம் வராது. வந்த சில நாட்கள் முகத்தில் அறைவது போல் தெரிவது இங்குள்ள குளிர் மற்றும் நிசப்தம். 'எல்லோரும் உயிருடன்தான் இருக்கிறார்களா?' என்று ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளச் சிறிது நேரம் ஜன்னலருகே நிற்பேன். குளிர்காலம் முடியாததால் நடமாட்டம் கம்மியாகத்தான் இருக்கும். கண்ணில் தென்படும் ஓரிருவரும் தலையைக் குனிந்து கொண்டு, நீளமான குளிர் கோட்டிற்குள் கைகளை மறைத்துக் கொண்டு, வேகமாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள். அல்லது விர்..விர் ரென்று கார்கள் தலைதெறிக்கச் சென்று கொண்டிருக்கும்.

இந்நாட்டு மக்களின் மனநிலைக்கும் சீதோஷ்ணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. சூரியன் வந்து விட்டால் போதும்! அனைவரையும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எதிரே வருபவர்களைப் பார்த்துப் புன்னகைப்பார்கள். குழந்தைகளைக் கவனிப்பார்கள். ட்ராம் நிறுத்தங்களில் சிறிது பேசக்கூடச் செய்வார்கள். மணிக்கணக்கில் நதிக்கரையில் அமர்ந்திருப்பார்கள். கும்பல் கும்பலாக சைக்கிளில் நீண்ட தூரம் செல்வார்கள் அல்லது கால்களில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு வேகமாக ஓடிக் கொண்டிருப்பார்கள். இரவு ஒன்பது மணிவரை வெளிச்சம் இருக்கும். ராத்திரி பன்னிரண்டு மணிவரை ரோட்டில் எதாவது நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். இதுவே குளிர்காலம் வந்து விட்டால் நேர் எதிர். யாரும் ஒருத்தரோடு ஒருத்தர் பேசிக் கொள்ளாமல் விரைந்து வீட்டைச் சென்று அடைவதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தங்கள் உடம்பை ஒடுக்கிக் கொண்டு, குளிர் கோட்டிற்குள் ஒளிந்துக் கொண்டு, உருவமும், உணர்வுகளும் முற்றிலும் தலைகீழாக மாறிவிடும்.

நாங்கள் இப்பொழுது தான் எங்கள் வருடாந்திர விடுமுறையை முடித்துக் கொண்டு இந்தியாவிலிருந்து திரும்பினோம். வந்த சில நாட்களிலேயே ஆறு வார கர்ப்பம் உறுதியானது. எல்லா விடுமுறையும் எடுத்துக் கொண்டு விட்டதால் அலுவலகத்துக்குக் கண்டிப்பாகச் செல்ல வேண்டும். கூட வேலை செய்யும் ஸ்பானியப் பெண்மணி விடுமுறையில் அரியானாவுக்குச் சென்றிருக்கிறாள். நான் இந்தியாவில் இருந்த பொழுது என் அத்தியாவசிய வேலைகளையும் சேர்த்துச் செய்தவள். இப்பொழுது என் முறை.

மசக்கை என்பதைச் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஓரிரு முறை லேசாக வாந்தி எடுத்துவிட்டு, வெட்கத்துடன் புளியைத் தின்றுவிட்டு ஓய்வெடுக்கும் ஹீரோயினைத்தான் எனக்குத் தெரியும். என் அதிர்ஷ்டம் எனக்கு ஒவ்வொரு மாலையும் தலைசுற்றலும், வாந்தியும் தவறாமல் வந்து மிகுந்த தொல்லை கொடுத்தது. சமயலைறைக்குள் நுழையவே முடியவில்லை. ஏதோ ஒரு வாசம் வயிற்றைப் பிரட்டியது. ஊரிலிருந்த வந்துமே கணவர் லண்டனுக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை.

தெருவில் நுழைந்தவுடன் வீடு தெரிந்தது. இருட்டாக இருந்தது. வழக்கம் போல் வீட்டின் சொந்தக்காரரும் ஊரில் இல்லை போலிருக்கிறது. நாங்கள் இருந்தது ஒரு தனி வீடு. வீட்டின் சொந்தக்காரர் கீழே இருந்தார். நாங்கள் மாடியில் இருந்தோம். அவர் விவாகரத்தானவர். அவரின் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவ்வபொழுது வருவான். அவன் நன்றாகவே ஆங்கிலம் பேசுவான். ஆனால், அவரோ ஸ்விஸ்-ஜெர்மன் மட்டும்தான் பேசுவார். உற்சாகமான மனிதர். அவர் மொழியை எங்களால் சரளமாகப் பேச முடியாவிட்டாலும் எங்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டுத்தான் நகர்வார். ஆனால், பாதி நாட்கள் வீட்டிலேயே இருக்க மாட்டார்.

இப்படியே வீட்டைக் கடந்து நடந்து சென்று கொண்டே இருந்தால், அதோ தெரியும் அந்தத் திருப்பத்தில் கலகலப்பான டி.நகர் வந்தால் எப்படி இருக்கும்? அடிக்கடி வரும் அபத்தமான கற்பனை.

வீட்டிற்குள் நுழைந்து வேகமாக விளக்குகளுக்கும், அறை ஹீட்டர்களுக்கும் உயிரூட்டினேன். இன்னும் அரைமணி நேரத்தில் வீடு சூடாகும். போன் அடித்தது. கணவர்தான். தினம் காலையில் ஒருமுறை அலுவலகத்துக்கு பத்திரமாக வந்து சேர்ந்தேனா என்று ஒரு போன். பிறகு மாலையில் வீடு வந்து சேர்ந்தேனா என்று மற்றொரு போன். இன்னும் நான்கு நாட்களில் வந்து விடுவதாகச் சொன்னார்.

நிசப்தத்தைப் போக்க டி.வியை உயிர்ப்பித்தேன். கணவர் ஊரில் இல்லாத நாட்களில் அது ஒன்றுதான் எனக்குத் துணை. பெரியதாக நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள் என்று எதுவும் இல்லை. வீட்டில் யாரும் இல்லாத குறையை ஓரளவு போக்குவதற்கு மட்டுமே டி.வி. பயன்பட்டது. ஸ்விஸ் மக்கள் ஜெர்மன், ப்ரெஞ்ச் மற்றும் இத்தாலிய மொழிகள் மூன்றுமே பேசுவதால் எல்லா மொழிகளிலும் சானல்கள் உண்டு. வழக்கமாக மாலை எழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை நிகழ்ச்சிகளை ஓட விட்டுக் கொண்டிருப் பேன். CNNனின் அமெரிக்க அக்கா, டாயிச்ச வெல்லேயின் ஜெர்மனிய அத்தை அல்லது ராய் ஒன்னின் இத்தாலிய சித்தப்பா வென்று அனைத்துச் சானலின் படைப்பாளிகளுக்கும் நானே பெயர் வைத்துள்ளேன். இவர்களில் யாராவது ஒருவர் என் வரவேற்பறையில் உரையாற்ற வரும் உறவினர். தனிமையினால் எனக்கு லேசாகப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்று கூட யோசித்துச் சிரித்துக் கொள்வேன்.

ஒரு கப் பாலைச் சுடப் பண்ணிக் கொண்டு டி.வி. முன் அமர்ந்தேன். இதுவும் ஒரு மணி நேரம்கூட வயிற்றில் தங்காது. மத்தியான வேளைகளில் தான் சிறிது சாப்பிட முடிந்தது. ஆனால் வீட்டிலிருந்து எதாவது செய்து கொண்டு செல்ல பாதி நாள் நேரம் இருப்பதில்லை. எழுந்திருக்கும் போதே மிகவும் சோர்வாக வேறு இருந்ததால் சமையல் செய்யவே முடியவில்லை. அம்மாவின் ஞாபகம் திரும்பத் திரும்ப வந்தது. அம்மாவின் கையால் சூடாகச் சமைத்து எடுத்துக் கொண்டு போனால் எப்படி இருக்கும்? அலுவலகத்தின் அருகே நல்ல வெஜிடேரியன் உணவு என்பது குதிரைக் கொம்பு. அதற்கு ட்ராமில் ஏறி எட்டு ஸ்டாப் தாண்டி இருக்கும் இந்தியக் கடைகள் உள்ள ஏரியாவிற்கு செல்ல வேண்டும். அதற்கெல்லாம் நேரம் ஏது? குளிரில் செல்ல வேண்டும் என்று நினைத்தாலே வெளியே தலைகாட்ட மனசு வராது. அதனால், அலுவலக காண்டீனில் கிடைக்கும் சூப்பும், சாலடுமே பாதி நாட்கள் பகல் உணவு. அங்கு வேலை செய்த ஒரு ஜெர்மன் பாட்டி என் நிலை தெரிந்து சில நாட்கள் எனக்கு பிர்கர் ம்யூசிலி என்ற உணவைச் செய்து தருவாள். ஓட்ஸ் மற்றும் சீரியலில் பல விதமான பழங்களைப் போட்டு அதில் தயிரைக் கலந்து செய்வார்கள். சத்தானது ஆனால் சுவை பெரியதாக கிடையாது. சில்லென்று வேறு இருக்கும். மிளகு, ஜீரா ரசம் அல்லது அம்மாவின் உருளைக் கிழங்கு காரக்கறி என்பதெல்லாம் கற்பனையில் மட்டுமே கிடைக்கக்கூடிய எட்டாக் கனிகளாகி விட்டிருந்தன.
எனக்கு அதிர்ஷ்டமா இல்லையா என்று முடிவு செய்ய இவர்களிடம் என்ன எதிர்காலத்தை காட்டும் கருவியா இருக்கிறது? வாழ்ந்து பார்த்த பிறகுதானே முடிவு செய்ய முடியும்!
‘இதெல்லாம் தெரிந்து தானே வெளி நாட்டுக்கு வந்தாய்?' என்று கேட்டது உள்மனம். பெரியதாக யோசித்தோ, திட்டமிட்டோ ஒன்றும் வரவில்லை. மூன்று பெண்கள் இருந்த வீடு. எல்லோரையும் நல்லபடியாகத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அம்மாவின் தினப்படிக் கவலை. அவளுடன் ஐந்து நிமிடம் யார் பேசினாலும், ஆறாவது நிமிடம், "நம்ம வசந்தாக்கு நல்ல வரன் இருக்கா?" என்று ஆரம்பித்துவிடுவாள். முதலில் வசந்தாவிற்கு மும்பை வரன் அமைந்தது. கூட்டுக் குடும்பம். மாமியார் நல்ல திறமைசாலி. மாமனார் தன் வேலை உண்டு தான் உண்டு என்று இருப்பவர். ஒரு தனியார் நிறுவனத்தில் அத்திம்பேருக்கு வேலை. பெரியதாகப் பிரச்சனைகள் எதுவுமில்லாத சராசரி வாழ்க்கை. இரண்டாவது அக்கா விஜயா. அவளுக்கு துபாய் மாப்பிள்ளை. அங்கே அவளும் டீச்சராகப் பணியாற்றுகிறாள். மூன்றாவதாக நான், வனிதா. எனக்கு நல்ல இடம் தானாக வந்தது. என்னுடன் சென்னையில் வேலை பார்த்த ஒரு தோழியின் உறவினர் என் கணவர். என்னை அவளுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவரின் குடும்பத்தாரிடம் தீவிரமாக என்னைப் பற்றிச் சொல்லி, திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டாள். என் கணவரின் தந்தை கானடாவில் ஒரு எண்ணெய் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். அந்த காலத்து ஐ.ஐ.டி. மாமியார் வீட்டிலிருந்தபடியே ஸாப்ட்வேர் துறையில் கன்ஸல்டண்டாக இருந்தார். இவர் ஒரே மகன். பல நாடுகளில் வளர்ந்திருந்தாலும் இந்தியாவை மிகவும் விரும்புகிறவர். திருமணச்செலவைப் பற்றி கவலைப்படாமல் மிகவும் ஆடம்பரமாக அவர்களே திருமணத்தை நடத்தினார்கள். பிறகு அவரின் அப்பா, அம்மா கானடா சென்றுவிட்டனர். நாங்கள் சூரிக்கில் தனிக் குடித்தனம் தொடங்கினோம். வருடத்தில் இரண்டு வாரங்கள்தான் எங்களுடன் இருக்க மாமியார், மாமனாருக்கு நேரம் இருந்தது. நாங்கள் கானடா சென்றாலும் இரண்டு வாரங்கள்தான் இருப்போம். கணவருக்கு இந்தியா செல்வதில்தான் அதிக விருப்பம். அங்கே அவரின் உறவினர்கள் நிறையப் பேர் இருந்தார்கள். கும்பகோணம் அருகில் அவர் மாமா வீட்டினரும், பாட்டியும் இருந்தார்கள்.

எல்லோரும் திருமணத்தின் பொழுது வனிதாவுக்கு தான் நல்ல அதிர்ஷ்டம் என்றார்கள் 'அப்படித்தான் போலிருக்கு' என்று மட்டும் நினைத்துக் கொண்டேன். அவர்களின் அபிப்ராயத்தை ஒப்புக் கொள்வதற்கோ அல்லது மறுத்துப் பேசுவதற்கோ அதுவரை ஏற்பட்டிருந்த என் அனுபவம் போதுமானதாகயில்லை. எனக்கு அதிர்ஷ்டமா இல்லையா என்று முடிவு செய்ய இவர்களிடம் என்ன எதிர்காலத்தை காட்டும் கருவியா இருக்கிறது? வாழ்ந்து பார்த்த பிறகுதானே முடிவு செய்ய முடியும்!

யார் எனக்கு அதிர்ஷ்டம் என்று திட்டவட்டமாக நம்பினார்களோ இல்லையோ நிச்சயமாக வசந்தா அக்கா அதைத் தீவிரமாக நம்பினாள். விஜயாவிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளை வந்ததே அவளுக்குச் சிறிது வருத்தம். ஆனால், விஜயாவின் புகுந்த வீட்டினர் சற்று வசதி குறைந்தவர்கள். அத்திம்பேர் சம்பாதித்துத் தன் தம்பியை படிக்க வைத்துக் கொண்டு, குடும்பம் நடக்கப் பணமும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். விஜயாவும் கண்டிப்பாக வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை. அதனால், தன் ஏமாற்றத்தை வசந்தா அவ்வளவு தூரம் காண்பிக்கவில்லை. எனக்கு வரன் வந்த பொழுது ஒரு பக்கம் உண்மையிலேயே சந்தோஷப்பட்டாலும் இன்னொரு பக்கம் தன் அப்பா அம்மா தனக்கு அவ்வளவு அக்கறையுடன் வரன் தேடவில்லை என்ற அவளின் நெடுநாள் ஆதங்கத்தை நூறாவது முறையாகச் சொன்னாள். அம்மாவும் நூறாவது முறையாக, “உனக்கு என்னடி குறைச்சல்? மாப்பிள்ளை தங்கமானவர். அதுக்கும் மேலே ப்ராப்தம்னு எது இருக்கோ அதுதாண்டி வசந்தா நடக்கும்,” என்று சமாதானமாக சொன்னாள்.

பால் வயிற்றைக் குமட்ட ஆரம்பித்தது. மீண்டும் வாந்தி எடுத்து விட்டுச் சோர்வாக சோபாவில் சாய்ந்தேன். 'ஒரு வென்னீர் கொடுக்கக் கூட நமக்கு ஆளில்லையே,' என்ற சுயபச்சாதாபம் மேலிட லேசாகக் கண்ணில் நீர் கசிந்தது. டி.வி.யில் இத்தாலிய சித்தி, சித்தப்பா எதற்கோ பெரியதாகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அடுத்த நாள் அலுவலகத்தில் அரியானா வந்து விட்டாள். சற்று வேலைச் சுமை குறைந்தது. அரியானா புகைபிடிக்கும் பழக்கம் உடையவள். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை புகை பிடிப்பதற்கு என்று ஒதுக்கி இருந்த அறைக்குள் சென்று பிடித்து விட்டு வருவாள். இத்தனை நாட்கள் தெரியாத சிகரெட்டு நாத்தம் மசக்கையினால் பூதாகாரமாகத் தெரிந்தது. குமட்டலுடன் இப்பொழுது தலைவலியும் சேர்ந்து கொண்டது. ‘எப்படா சனி, ஞாயிறு விடுமுறை வரும்' என்று மனம் ஏங்கியது.

ஒருவழியாகச் சனிக்கிழமை வந்தது. கணவரும் இன்றிரவு வந்து விடுவார். சென்னையில் என் அத்தை பேத்தியின் திருமணம். அதற்காக எல்லோரும் வந்திருப்பார்கள். நாங்கள் எப்பொழுதும் மார்கழி மாதம் இந்தியா செல்வதால் திருமணங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பே வரவில்லை. சில வாரங்கள் முன்பே திரும்ப வேண்டி இருந்ததால், இதோ இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் இழந்து விட்டேன். கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டுத் தான் எத்தனை வருடங்கள் ஆகிவிட்டன?

அம்மாவிடம் பேசலாம் என்று போன் செய்தேன். மசக்கை பற்றி, என் உடம்பு பற்றி எல்லாம் விசாரித்து விட்டு, “வசந்தா வந்திருக்கா கல்யாணத்துக்கு. இந்தா, பேசு,” என்றாள். ”ஆங்... வனிதா கங்கிராட்ஸ். அம்மா சொன்னா போன்ல. உனக்கு என்னடிம்மா? ஸ்விஸ் சீசும், சாக்கலேட்டும் சாப்பிட்டு அமுல் பேபி மாதிரி குழந்தையப் பெத்துப்பே. நீ இருக்கிறது சொர்க்க பூமின்னா. எங்களை மாதிரியா தூசியிலேயும், கும்பல்லேயும் அல்லாடிண்டு...” என்று ஏதேதோ பேசிக் கொண்டே போனாள்.

நான் பெரிதாகச் சிரித்ததைக் கேட்டு ‘வனிதா இப்படி வாய்விட்டுச் சிரிக்கிற மாதிரி நாம ஒண்ணும் சொல்லலையே' என்று புரியாமல் நிச்சயம் விழித்திருப்பாள் வசந்தா!

ரம்யா நாகேஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline