Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
நேர்காணல்
சூசி நாக்பால்
ஸ்தபதி என்பவன் ஒரு விஞ்ஞானி: பத்மபூஷண் வை. கணபதி ஸ்தபதி
- அரவிந்த் சுவாமிநாதன்|மார்ச் 2009|
Share:
Click Here Enlargeசென்னையில் வள்ளுவர் கோட்டம், கன்யாகுமரியில் 133 அடி உயர வள்ளுவர் சிலை, டெல்லியில் மலைமந்திர் சுவாமிநாத சுவாமி கோவில், ஹவாயில் உள்ள இறைவன் கோவில் - இவற்றில் எதைப் பார்த்திருந்தாலும் நீங்கள் கணபதி ஸ்தபதி அவர்களின் பிரம்மாண்டக் கலைத் திறனைப் பார்த்திருக்கிறீர்கள். தவிர, லண்டன், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, ஃபிஜி, ஸ்ரீலங்கா என்று எங்கெல்லாம் உலகில் இந்துக்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ஸ்தபதியார், அவர்களுக்குக் கோவில்களை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அமெரிக்காவில் வாஷிங்டனில் சிவ-விஷ்ணு, ஐயப்பன், வெங்கடேஸ்வரா ஆலயங்கள், இல்லினாய்ஸ் ஸ்ரீ ராமர் கோவில், சிகாகோ கணேச சிவ துர்கை ஆலயம் என்று இவர் நிர்மாணித்த கோவில்களின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். 82 வயது ஆன போதிலும் இன்னும் படைப்பும் ஆய்வும் தொய்வில்லாமல் செய்துவருகிறார்.

மகரிஷி மகேஷ் யோகியின் மஹரிஷி வேதப் பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. 'Building Architecture of Sthapatya Veda', 'Quintessence Of Sthapatya Veda', 'Who Created God' போன்ற 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். சில்ப குரு, துளசி சம்மான், கலைமாமணி, சில்ப கலாநிதி, தென்னக மயன், வாஸ்து வியாசன், பத்மபூஷண் உட்பட பல்வேறு விருதுகள் பெற்ற இவரைத் தென்றலுக்காக நேர்காணல் செய்தபோது...

கே: நீங்கள் பெரிய சில்பகலைப் பாரம்பரியத்தில் வந்தவர். அந்தப் பாரம்பரியம் குறித்து விளக்க முடியுமா?

ப: உலகத்தின் முதல் விஞ்ஞானி மயன். ஓவியம், சிற்பம், கட்டிடம் குறித்து ஐந்திரம் என்ற நூலை எழுதியவன். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே தோன்றிய அந்த மூத்த குடிமகனின் மரபில் வந்தவன் நான். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த தலைமைச் சிற்பி குஞ்சரமல்லன் ராஜராஜப் பெருந்தச்சனின் பரம்பரையில் தோன்றியவர்கள் நாங்கள். பரம்பரை பரம்பரையாக இச் சிற்பத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். பெரிய மருது-சின்ன மருது காலத்தில் காளையார் கோயில் ராஜகோபுரத்தை நிர்மாணித்தது எங்கள் முன்னோர்கள்தாம். என் தந்தை வைத்தியநாதன் ஸ்தபதி. அவர் மிகப் பெரிய சாஸ்திர விற்பன்னர். பல ஆலய நிர்மாணப் பணிகளை மேற் கொண்டவர். காஞ்சிப் பெரியவர், ரமண மகரிஷி ஆகியோரின் அன்பைப் பெற்றவர். காஞ்சி மடத்தில் பூஜா மண்டபத்தைக் கட்டியதும் ரமண மகரிஷியின் தாயார் சமாதி ஆலயமான 'மாத்ரு பூதேஸ்வரர் சன்னதி'யைக் கட்டியதும் என் தந்தைதான். 1927ம் வருடம் அவர் பிள்ளையார்பட்டி ஆலயத்தின் ராஜகோபுரத் திருப்பணியை மேற்கொண்டபோது நான் பிறந்தேன்.

கற்பக விநாயகரின் நினைவாக எனக்கு கணபதி என்று பெயரிட்டனர். என் தந்தை ஆலய நிர்மாணப் பணிகளுக்காக ஊர் ஊராகச் செல்ல வேண்டியிருந்ததால் நான் உறவினர் வீட்டில் வளர்ந்தேன். இண்டர்மீடியட் முடித்தேன். கிண்டி என்ஜினியரிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனாலும் குடும்பச் சூழ்நிலையால் அதில் சேர முடியாமல் போய் விட்டது. பின்னர் பகவான் ரமண மகரிஷிகளின் அறிவுரைப்படி காரைக்குடி அழகப்பா கல்லூரியில் கணித வகுப்பில் சேர்ந்தேன். கணிதத்துடன் சம்ஸ்கிருதமும் பயின்றேன். தந்தை சகல சாஸ்திரமும் பயின்றவர். பல மொழிகள் தெரிந்தவர். அவரிடமிருந்து என் இளவயதிலேயே சிற்ப சாஸ்திர நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். அதுவே எனது வாழ்க்கைக்கு அடிப்படையாய் அமைந்தது.

கே: மயன் என்பவர் யார்?

ப: மயன் முதலாம் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர். 'மரக்கலச் செந்நூல்', 'அணுவியல்', வானசாஸ்திரம் பற்றிய 'சூரிய சித்தாந்தம்', 'பிரணவவேதம்', 'ஐந்திரம்' போன்ற பல நூல்களை இயற்றியவர். பெரும் விஞ்ஞானி. தற்போது தட்சிணாமூர்த்தி என்றும், தென்னவன், ஆலமர் செல்வன் என்றும் அழைக்கப்படும் அவர், பண்டைய நாளில் மயன் எனப்பட்டார். அவனே அறிவின் முதல்வன். எங்கள் முன்னவன். பிராகிருத மொழியைச் செம்மைப்படுத்தித் தமிழாக்கித் தந்தவன். சிலப்பதிகாரத்தில் கூட அவனைப் பற்றிய குறிப்பு உள்ளது.

”நுண்வினைக் கம்மியர் காணா மரபின;
துயர்நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு
மயன் விதித்துக் கொடுத்த மரபின”

- என்று அது குறிப்பிடுகிறது.

மயன் இன மக்கள் இன்று உலகின் பல இடங்களில் வசித்து வருகிறார்கள். குமரிக் கண்டம் கடல்கோளினால் அழிந்து விட்டாலும், ஆஸ்திரேலியாவில், ஹவாயில் இன்னும் பல நாடுகளில் அந்த இனத்து மக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுடைய கலாசாரத்திற்கும் நம்முடைய கலாசாரத்திற்கும் தொடர்பு உள்ளது. அந்த நாட்டு இலக்கியங்களுக்கும் நமது தொன்மையான இலக்கியங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. நான் நியூ மெக்சிகோவுக்குப் போய் மயன் கலாசாரம் (Mayan culture) குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறேன். அங்கு பலகோடி மயன் இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்கே சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்குச் சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான்.
கே: 'ஐந்திரம்' என்பது பற்றி விளக்க முடியுமா?

ப: சப்த வேதம், காந்த வேதம், நாட்டிய வேதம், ஸ்தாபத்ய வேதம், பிரணவ வேதம் என்று ஐந்து வேதங்களாக, ஐந்தமிழ்களாக நமது கலைமரபு இருக்கிறது. இயல், இசை, நடம், சிற்பம், கட்டிடம் ஆகிய ஐந்து கலைகளுக்கு இலக்கணம் கூறும் நூல் தான் ஐந்திரம். தொல்காப்பியத்திற்குப் பாயிரம் வழங்கிய பெரும்பாரனார் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். காலத்தால் தொல்காப்பியத்திற்கு முந்தியது. மயனால் உருவாக்கப்பட்டது. அந்நூலைத் தேடி ஆய்ந்து நான் பதிப்பித்தேன். அதில் உள்ள விஞ்ஞான சூத்திரங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கி நூலாக வெளியிட்டிருக்கிறேன். சிற்ப சாஸ்திரத்திற்கு அடிப்படை நூல் அது. ஐந்திரம் பற்றி நன்கு அறிந்தவர் வடலூர் இராமலிங்க அடிகளார். அவர் தனது அருட்பாவில் 'ஐந்திரம் அண்ணுற அமைத்த அருட்பெருஞ் ஜோதி' என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழ் மட்டுமல்ல; சமஸ்கிருதமும் மயன் உருவாக்கித் தந்தது தான். தமிழர்களின் தொன்மையான மொழிகளுள் சமஸ்கிருதமும் ஒன்று.

கே: சமஸ்கிருதம் தமிழனின் மொழி என்று எப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?

ப: ஆம், அதுதான் உண்மை. சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்கே சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்குச் சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன்தான். இதை நான் சும்மா சொல்லவில்லை. அதுபற்றி பல்வேறு ஆய்வுகளைச் செய்த பின்புதான் சொல்கிறேன். பிரா கிருதம் என்றால் முன் செய்யப்பட்டது என்று பொருள். அது ஐம்பது அட்சரங்களை உடையது. தமிழுக்கும் அக்காலத்தில் ஐம்பது அட்சரங்கள் இருந்தன. அவற்றை சீர்செய்து முப்பது அட்சரங்களாக்கியவன் மயன். இதுபற்றிய உண்மை தெரியாமல் மக்கள் பிளவுபட்டுக் கிடக்கிறார்கள். பிரிவினை பேசிக் கொண்டிருக்கின்றார்கள். மயன்தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான். நமக்குச் சொந்தமான சமஸ்கிருத மொழியை நம்முடையது என்று சொல்லக்கூட இங்கு யாருக்கும் தைரியமில்லை. இரண்டுமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் தாம்.

'ஆதி தமிழ்' என்று பார்த்தால் சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கும். இதற்கு ஐந்திரம் நூலைப் படித்தால் தெளிவான விளக்கம் கிடைக்கும். பேரறிஞர் வ.சுப. மாணிக்கம் இதுபற்றி ஆய்வு செய்து 'செந்தமிழ்ச் செல்வி' என்னும் இதழில் எழுதியிருக்கிறார். நானும் 'சங்க காலத் தமிழர் வேதம்' என்ற நூலை எழுதியிருக்கிறேன். அதை எனது மயன் ஆலயத் திறப்பு விழாவின் போது வெளியிட இருக்கிறேன். அதுபோல வட இந்தியா என்று சொல்லப்படுவது உண்மையில் வட இந்தியா அல்ல. தென்பகுதியாக இருந்த குமரிக் கண்டத்தின் கடல் கோளுக்கு முன்னால் தற்போதைய நமது தமிழகம்தான் வட இந்தியாவாக இருந்தது. நான் சொல்வதை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் உண்மை விளங்கும்.
Click Here Enlargeகே: நீங்கள் 27 ஆண்டுகள் சிற்பக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி இருக்கிறீர்கள் அல்லவா?

ப: நான் பழனியில் தலைமை ஸ்தபதியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னர் மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக் கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்தேன்.

கே: இன்று வாஸ்து என்ற பெயரில் கட்டிடங்களை இடிப்பதும், மாற்றியமைப்பதும் நடந்து வருகிறது. உங்கள் கருத்து என்ன?

ப: நல்ல கேள்வி. வஸ்து என்பதுதான் வாஸ்து ஆகிறது. 'வஸ்து' என்றால் 'பொருள்', 'உள்ளது' என்று பொருள். வஸ்து என்பது மூலம்; வாஸ்து என்பது கோலம். வஸ்து எப்போதும் இருக்கக் கூடியது. நிலையாக வசித்திருப்பது. As a Living Organisim. Eternal Being அது. அதுதான் பரம்பொருள். 'வஸ்து பிரம்மம்' என்றே அதற்குப் பெயர். Existence E=MC2 என்று ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறான். energy transferred to matter என்பது அவன் கூறியிருக்கும் விதி. கண்ணால் பார்க்கக் கூடியது matter. காண முடியாதது energy. எங்கும் பரவியிருக்கும் எனர்ஜியை நான்கு சுவர்கள் எழுப்பி, வாசல் வைத்து அதற்குள் அடைக்கிறோம். அதை, அதற்கென உள்ள சரியான முறையில் செய்ய வேண்டும். இந்த வாஸ்து உலகமெங்கும் பரவியிருக்கிறது. வாஸ்துவைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், கட்டிடங்களை இடிப்பதெல்லாம் தவறானது.

கே: சிற்பங்கள் செய்வதற்கான கல்லை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்?

ப: எல்லாக் கற்களும் சிற்ப வேலைக்குப் பயன்படாது. அதற்கான கற்களைத் தட்டினால் ஒலி வரும். அப்படி வந்தால்தான் அது ஜீவனுள்ள கல். அவற்றைக் கொண்டு மட்டுமே சிற்பங்கள் செய்ய இயலும். தமிழ்நாட்டில் இதுபோன்ற கற்கள் நிறைய உள்ளன. கற்களிலும் ஆண் கல், பெண் கல், அலிக் கல் எல்லாம் உண்டு. கற்களுக்கு ஜீவன் உண்டு. அது வளர்கிறது என்பதும் உண்மை. எல்லாம் அணுக்களின் கூட்டமைப்பு தானே! சிறுசிறு துகள்களே கற்களாகின்றன. அவையே பாறைகளாகின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் விண்ணே மண்ணாகிறது. அதைப் பற்றிக் கூறுவது தான் விண் ஞானம் எனப்படும் விஞ்ஞானம்.

சொல்லப்போனால் ஸ்தபதி என்பவன் வெறுமனே கல்லை உடைக்கும் சிற்பி அல்ல. அவன் ஒரு விஞ்ஞானி. ஸ்தாபனத்திற்கு உரியவன் ஸ்தபதி. அதாவது தமிழில் சொல்லப்படும் 'பெருந்தச்சன்' என்பதே அது. அதற்கான வேதத்துக்கு 'ஸ்தாபத்ய வேதம்' என்று பெயர். தனது ஆன்ம சக்தி மூலம் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை, ஒளி வடிவாக இருக்கும் இறைவனை, தனது அகக்கண்ணில் கண்டு, அதனைச் சிற்பமாக வெளிப்படுத்துபவன் சிற்பி. அந்தப் படைப்பில் சிற்பியே சிற்பமாகிறான்; கவிஞனே கவிதையாகிறான். அவனுடைய ஆன்மா அப்படைப்பில் பிரதிபலிக்கிறது. இதுதான் உண்மை. இதை விடுத்து கல்லைக் கண்டால் கடவுளைக் காணோம்; கடவுளைக் கண்டால் கல்லைக் காணோம் என்றெல்லாம் நம்பிக்கையில்லாமல் தமாஷ் செய்து கொண்டிருக் கிறார்கள். கடவுள் இல்லை என்று சொல்வது பெருந்தவறு. ஆராய்ச்சி செய்யாமல் அவ்வாறு கூறலாமா?

தனது ஆன்ம சக்தி மூலம் கண்ணுக்குப் புலப்படாத கடவுளை, ஒளி வடிவாக இருக்கும் இறைவனை, தனது அகக்கண்ணில் கண்டு, அதனைச் சிற்பமாக வெளிப்படுத்துபவன் சிற்பி. அந்தப் படைப்பில் சிற்பியே சிற்பமாகிறான்; கவிஞனே கவிதையாகிறான். அவனுடைய ஆன்மா அப்படைப்பில் பிரதிபலிக்கிறது.
கே: கடவுளைக் குறித்த உங்கள் கருத்து என்ன?

ப: கடவுள் என்றாலும், பிரம்மம் என்றாலும், பரம்பொருள் என்றாலும், பெரும்பொருள் என்றாலும் ஒரே பொருள்தான். மேலானது, தனித்திருப்பது, தானாகவே இயங்குவது என்பதுதான் அதன் பொருள். கடவுள் எதையும் படைப்பதில்லை. தன்னைத் தானே அவர் பலவிதங்களில் உருமாற்றிக் கொள்கிறார். God does not create anything in this world. He manifests Himself in various forms. இந்த உலகத்தைப் படைத்தவனும் அவன்தான். இந்த உலகத்தில் பல பொருள்களாகப் பல ரூபங்களில் இருப்பவனும் அவன்தான். ஆலயத் தத்துவமும் இதுதான்.

GOD என்று சொல்கிறோமே அதன் etymology என்ன? G stands for Genereative principle. O stands for Operative principle. D stands for Destructive principle. அதாவது ஆக்கல், காத்தல், அழித்தல் என்கிறோமே தமிழில், அதுதான் கடவுளின் தத்துவம். சம்ஸ்கிருதத்தில் இதை ஸ்ருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்று சொல்வார்கள். இதுபோல தமிழுக்கும் etymology உண்டு. அமிழ்ந்து, இமிழ்ந்து, உமிழ்ந்து, தமிழ்ந்து தமிழ் ஆயிற்று. தமிழ்ந்து என்றால் வடிவம் பெற்றது, உருவாயிற்று என்பது பொருள். பிரம்மம் என்றாலும் தமிழ் என்றாலும் ஒரே பொருள் தான். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது பிரம்மத்தையே குறிக்கும். கடவுளுக்கு உருவமில்லை என்று சொல்ல முடியாது. தமிழுக்கு உருவமில்லை என்று சொல்ல முடியுமா, அது போலத்தான் கடவுளும். கடவுளே தமிழாக இருக்கிறார். அந்தக் கடவுளைப் பற்றி அறிய வேண்டுமென்றால் நிஷ்காம்யமாக அதாவது விருப்பு, வெறுப்பற்ற சூழலில் ஆராய்ந்தால் தான் உண்மை தெரியவரும். வெறுமனே கடவுள் இல்லை என்று கூறிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

கே: ஆலயத்தின் அமைப்பு ஆழ்ந்த பொருள் கொண்டது அல்லவா?

ப: ஆலயத்திற்கு வெளியே பிரமாண்டமாகத் தெரிவது ராஜ கோபுரம். கருவறையின் மேலே உள்ளதைப் பலரும் கோபுரம் என்று சொல்வர் அது உண்மையில் விமானம் ஆகும். விமானம் என்பதற்கு விசேஷமான பொருளைக் கொண்டு கட்டப்பட்டது என்பது பொருள். ஆகாய விமானம் மனிதர்களின் உடலைச் சுமந்து செல்வது. இக்கருவறை விமானம் மனிதர்களின் ஆன்மாவை மேல் நிலைக்கு உயர்த்தக் கூடியது. உள்ளிருக்கும் அறை கர்ப்பக் கிரகம். இதை மூலஸ்தானம் என்றும் சொல்வார்கள். மூலமாகிய பொருள் இருக்குமிடம் என்பது இதன் பொருள். அதனைச் சுற்றி இருக்கும் பகுதிக்கு கோஷ்டம் அல்லது கோட்டம். பல்வேறு ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரத்தின் படியே அவை அமைக்கப்பட வேண்டும். உதாரணமாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை எடுத்துக் கொள்ளலாம். அது கட்டப்படும் போது சிற்பி குஞ்சரமல்லனிடம் இந்த விமானம் கீழே சாய்ந்து விடுமா என்று அச்சத்துடன் கேட்டானாம் ராஜராஜன். விமானம் மட்டுமல்ல; அதன் நிழல்கூடக் கீழே விழாது என்று பதில் கூறினானாம் சிற்பி. காரணம் அதன் வடிவமைப்பு. அதன் கோபுரம் பிரமிட் வடிவை ஒத்தது. அதை 'மேரு' என்று சொல்வார்கள். அக்கோயில் 'தக்ஷிணமேரு' அடிப்படையில் கட்டப்பட்டது.

கே: உங்களது ஆராய்ச்சிகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?

ப: எனது வாழ்க்கையே அதற்குத்தான் செலவிட்டுள்ளேன். நான் உண்மையைத் தேடிப் போவதால் இந்த 82 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். நம் கலை மரபுகள் அனைத்தும் தாளக் கணக்கை அடிப்படையாகக் கொண்டவையாகும். கணக்கின் அடிப்படையில் தான் இந்தப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான கருவி 'தாளம்' தான். சிற்பமும் கட்டிடடமும் பஞ்ச பூதங்களை, ஒலியை, ஒளியை, காலத்தை அடிப்படையாகக் கொண்டவை. அதாவது இடம் காலக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் பிரபஞ்சம் அணுக்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. சரி, அது எந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் அதுதான் Cube. முச்சதுரம் என்று தமிழில் அதற்குப் பெயர். அதைப் பற்றி 'சதுரவியல்' கூறுகிறது. அணுக்கள் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, பின் வட்டப்பாதையில் செல்கின்றன. இதற்கு spin theory என்று பெயர்.

இந்த உலகில் அனைத்தும் அழிந்து போனாலும் எஞ்சியிருப்பது வெறுவெளி. வெறுவெளியில் ஆற்றல் நிரம்பியிருக்கிறது. அதாவது absolute energy. இதைத்தான் நாம் சுவாசிக்கிறோம். காற்றை அல்ல. பிரம்மத்திலிருந்து வாயு உண்டானது. வாயுவிலிருந்து மற்ற பஞ்ச பூதங்கள் தோன்றின. பின்னர் உயிரினங்கள். இதைப்பற்றி எல்லாம் சித்தர்கள் இலக்கியத்தில் கூறியிருக்கிறார்கள். 'ஆதியில் ஐந்துமாகி, அநாதியில் நான்குமாகி, ஜோதியில் மூன்றுமாகி, அறுபத்துள் இரண்டுமாகி, மீதியில் ஒன்றாகி' என்று இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே வேதங்களிலும் இருக்கிறது. உள்ளம் என்பது தான் space. உள்ளமே மூலமாகி, உணர்வுறும் கோளமாகி, உள்ளமே ஊக்கமாகி, உள்ளமே உணர்வுமாகி, உள்ளமே வழியும் காட்டி என்றெல்லாம் நம் பழைய பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. Siddha literature is vedic literature. இது போன்ற சித்தர் பாடல்களையெல்லாம் மக்கள் படிக்க வேண்டும். ஆனால் இன்று எதை எதையோ பொழுதுபோக்கிற்காகக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் தொன்மையானது, நமது கலாசாரத்தைக் குறிப்பது. ஆனால் யாருக்கும் அக்கறையில்லை.

அதுபோல இராமாயணம் வட இந்தியாவில் நடந்தது என்று கூறப்படுவதும் தவறு. அது தமிழ் நிலப்பரப்பில் நிகழ்ந்த ஒன்று தான். வரலாற்றை எடுத்துக் கொண்டால் கூட கி.மு., கி.பி. என்று இயேசுவுக்குப் பின்னால் வருடங்களைக் கணக்கிடுவது நமக்குச் சரிப்பட்டு வராது. நமது வரலாற்றைக் குமரிக்கண்டத்தை மையமாக வைத்து அதன் அழிவை முன்னிட்டுப் பிரளயத்திற்கு முன் (பி.மு.), பிரளயத்திற்குப் பின் (பி.பி.) என்றுதான் பார்க்க வேண்டும். அப்போது தான் தமிழர்களின் - தமிழின் வரலாறு உண்மையில் சரியாக எழுதப்பட்டதாக இருக்கும். குமரிக்கண்டம் குறித்து அலெக்சாந்தர் புல்ரொட்டோ ஆய்வு செய்து ஒரு அரிய நூலை எழுதியிருக்கிறார். அது போன்று திருமந்திரமணி புரிசைக் கிழாரும் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஒரு நல்ல நூலை எழுதியிருக்கிறார். இவற்றில் எல்லாம் பல அரிய உண்மைகள் இருக்கின்றன.

கே: நீங்கள் எழுதிய நூல்கள் பற்றிச் சொல்லுங்கள்.

சிற்பக் கலை நுணுக்கம், கடவுள் தத்துவம், வாஸ்து விஞ்ஞானம் ஆகியவற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதியிருக்கிறேன். கடவுள் எங்கே, எப்படி, எந்த வடிவில் இருக்கிறார், எங்ஙனம் வெளிப்படுகிறார், கோவில் வழிபாட்டில் இருப்பது சாட்சாத்கரமான உருவம்தானா, மூல வடிவம் யாது, இறுதி வடிவம் என்ன - என்பது பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்து நூல்களாக்கியிருக்கிறேன். ஆங்கிலத்தில் மிக விளக்கமாக எழுதியிருக்கிறேன். 'கணபதி ஸ்தபதி' என்றால் அமெரிக்கர்கள் பலருக்கும் தெரியும். காரணம் இதுபோன்ற நூல்கள் தான். இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். பல வெளிநாட்டு மாணவர்கள், அறிஞர்கள் பாராட்டியிருக்கிறார்கள். என்னைத் தேடி வந்து பார்க்கிறார்கள். ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள். தற்போது 'பிரம்ம சூத்ர வாஸ்து மகா பாஷ்யம்' என்ற நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கடவுள் ஒளி வடிவாக விளங்குபவன். இதை ரமணர், வள்ளலார், ரெட்டியப்பட்டி சுவாமிகள் உட்பட பலப்பல மகான்கள் சொல்லியிருக்கிறார்கள். நான் ஆராய்ந்து பார்த்த வரையில் கடவுள் ஜோதி வடிவாகவே இருக்கிறான். இரத்தினகிரி சுவாமிகளும் அதை ஒப்புக்கொண்டார். இது போன்ற அனுபவங்களை முன்வைத்து 'கடவுளைப் படைத்தவன் யார்' என்ற நூலை எழுதியிருக்கிறேன். என்னுடைய அனுபவங்களும், சாஸ்திரங்களும் ஒத்துப் போவதை என்னால் காண முடிகிறது. நம்முடைய சாஸ்திரங்கள் சாதாரண விஷயங்கள் அல்ல. அவை எல்லாமே வேதங்கள்தாம்.

கே: பல பிரபல மனிதர்களுடன் பழகி இருக்கிறீர்கள் அல்லவா?

ஆம். காஞ்சிப் பெரியவர், பகவான் ரமணர், இரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், ஹவாய் சிவாய சுப்ரமணிய சுவாமிகள் உட்படப பல ஆன்மீகப் பெரியவர்களிடம் பழகி இருக்கிறேன். எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா, இந்திராகாந்தி, ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம், ஆர்.எம்.வீரப்பன் போன்ற அரசியல் துறையினரிடமும் எனக்கு நல்ல நட்பு இருந்தது. முத்தையா செட்டியார், டி.வி.எஸ்.வேணு சீனிவாசன் போன்ற பல தொழிலதிபர்களிடமும் பழகியிருக்கிறேன்.

கே: காஞ்சிப் பெரியவருடன் நெருங்கிப் பழகிய அனுபவங்களைச் சொல்ல முடியுமா?

ப: பல ஆண்டுகளுக்கு முன்னரே வேத, ஆகம, வாஸ்து, வித்வ சதஸ்ஸை அவர் காஞ்சிபுரத்தில் நடத்தியிருக்கிறார். நான் சிற்பக் கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது அதில் கலந்து கொண்டிருக்கிறேன். அவர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விளக்கமான பதில் சொன்னதால் என்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கிட்டத்தட்ட 20 ஆண்டுக்கும் மேல் அவருடன் தொடர்பு இருந்தது. காஞ்சிப் பெரியவர் வெறும் சன்யாசி மட்டுமல்ல. அவர் திரிகால ஞானி. பல்வேறு சாஸ்திரங்கள் தெரிந்தவர். மிகப் பெரிய ஆத்ம ஞானி. அவர் ஒரு மகா வித்வான். ஆர்க்கியாலஜிஸ்ட். அவரைப் போன்றவர்களின் அருளாசி கிடைத்தது எனது பாக்யம்தான். சுவாமிகளின் அருளாசியோடு அமைக்கப்பட்டது புதுதில்லியில் உள்ள சுவாமிநாத சுவாமி ஆலயம். (பார்க்க: பெட்டிச் செய்தி)

கே: நீங்கள் தலைவராக இருக்கும் வாஸ்துவேத ஆய்வு நிறுவனம் மற்றும் கல்லூரி செய்யும் பணிகள் என்ன?

ப: நான் ஓய்வு பெற்ற பிறகு இக்கலை பற்றிய ஆய்வைத் தொடர வேண்டும் என்பதற்காக வாஸ்து வேதிக் டிரஸ்ட் என்ற அமைப்பை நிறுவினேன். அதன்மூலம் ஆய்வுப் பணி, சிற்பங்கள், ஆலயங்கள் நிர்மாணிக்கும் பணி ஆகியவற்றைச் செய்து வருகிறேன். மகாபலிபுரத்தில் எங்களது சிற்பக் கூடம் இயங்கி வருகிறது. சுமார் 25 மாணவர்கள் அதில் பயின்று வருகின்றனர். எங்களது International Institute of Mayonic Science Technolgy என்ற அமைப்பு மயன் கலாசாரத்தை பற்றிய ஆய்வைச் செய்து வருகிறது. வெளிநாட்டிலும் அதற்குக் கிளைகள் உள்ளன. American Institiute of Mayonic Science and Technology மெக்சிகோவில் இருக்கிறது. European Institiute of Mayonic Science and Technology டென்மார்க்கில் இருந்து செயல்படுகிறது. Global Institute of Science and Technology Bhramma Rishi Mayan என்பது ரஷ்யாவில் இருந்து செயல்படுகிறது. வருடம் ஒருமுறை அல்லது இருமுறை வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வந்து தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். சிற்ப நுணுக்கங்களைக் கற்றுச் செல்கின்றனர்.

கே: தற்போது என்ன ஆலயப் பணிகள் செய்து வருகிறீர்கள்?

ப: மயனை இந்த உலகுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுக்கு மகாபலிபுரத்தில், ஐந்துகோடி ரூபாய் செலவில் ஒரு கோயிலை எழுப்பிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அந்தப் பணி பூர்த்தியாகி விடும். ஆலயத்திறப்பு விழாவை அப்துல்கலாம் அவர்கள் செய்ய இருக்கிறார். டாக்டர் கலைஞரும் வருவார். நான் கலைஞரால் உயர்ந்தவன். அவர்கள் முன்னிலையில் 'சங்க காலத் தமிழர் வேதம்' என்ற பண்டைய வரலாற்றைக் கூறும் ஆய்வு நூலை வெளியிட இருக்கிறேன். அந்த நூல் வெளியானால் பல உண்மைகள் வெளி வரும். தமிழ்-சமஸ்கிருதம் என்ற வேறுபாடுகள், பிரிவினைகள் நீங்கும்.

இந்த ஆண்டு இந்திய அரசின் பத்ம பூஷண் விருது பெற்றமைக்கு நமது வாழ்த்துகளைக் கூறி கணபதி ஸ்தபதியாரிடமிருந்து விடைபெற்றோம்.

தொடர்புக்கு:www.vastuved.com
மின்னஞ்சல்: vastuved@gmail.com

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

***

"அமோகமாக இருப்பாய்" என்று ஆசிர்வதித்தார் காஞ்சி மகாபெரியவர்

சிறு வயதில் காஞ்சிப் பெரியவரை நான் சந்தித்தது மறக்க முடியாத அனுபவம்.

1957ல் எனது தந்தையார் சிற்பக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வந்தார். அப்போது திடீரென்று வாத நோய் அவருக்கு ஏற்பட்டது. இதை நான் எனது வளர்ப்புத் தந்தை கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களிடம் கூறியபோது அவர் காஞ்சி மகா பெரியவரைப் போய்ப் பார்க்கச் சொன்னார். அப்போது சுவாமிகள் இளையாற்றங்குடியில் தங்கியிருந்தார். அது ஒரு குக்கிராமம். நான் போகும்போதே மணி இரவு ஒன்பதாகி இருந்தது. சுவாமிகள் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று, மேனேஜர் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக என்னை அழைத்து வரச் சொன்னார்கள். சுவாமிகளைச் சுற்றி நிறைய பக்தர்கள் கூட்டம் இருந்தது. அனைவரையும் விலக்கி என்னை அழைத்தார்கள். சுவாமிகளிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, என் தந்தையின் நிலையைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு குணமாகுமா, ஆகாதா, பலப்பல கோயில்களைக் கட்டிய இவருக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது என்றெல்லாம் சுவாமிகளிடம் கேட்டேன்.

சுவாமிகளோ அதற்கு பதில் ஏதும் கூறாமல், என்னைப் பற்றி, என் கல்வி பற்றி, நான் பார்க்கும் வேலை பற்றியே விசாரித்துக் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. தந்தையைப் பற்றி இவர் எதுவுமே கூறவில்லையே அவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ, உயிர் பிழைக்க மாட்டாரோ என்றெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் சுவாமிகளோ திடீரென்று 'வா என்னுடன்' என்று கூறி விட்டு நடக்கத் தொடங்கினார்.

வெகு தூரம் நடந்து மூத்த சுவாமிகளின் அதிஷ்டானம் அருகே சென்றவர், 'இங்கேயே இரு' என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். நான் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்தேன். மணி 12ஐக் கடந்து விட்டது. கூட்டம் கலைந்து சென்று விட்டது. நான் மட்டும் தனியே, வெளியில் காத்துக் கொண்டிருந்தேன். வெகு நேரம் சென்றிருக்கும், 'எங்கே அந்தப் பையன்?' என்று கேட்டுக் கொண்டே அதிஷ்டானத்தில் இருந்து வெளியில் வந்தார் சுவாமிகள். 'இங்கே இருக்கிறேன் சுவாமி' என்றேன் நான். சுவாமிகள் உள்ளே செல்லும் போது பாரம்பரிய தண்டத்தோடு மட்டுமே சென்றார். வரும்போது அவர் கையில் இரண்டு தேங்காய் மூடிகள் இருந்தன. வியப்புடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிரகாரத்தின் ஒரு மூலையில் நின்று, தண்டத்தைப் பிடித்துக் கொண்ட சுவாமிகள், என் தந்தையின் நிலையைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

நான் சொல்லச் சொல்லக் கேட்டுக் கொண்டவர், 'உன் அப்பாவுக்கு வந்திருப்பது பிராரப்த கர்மாவால். நீ மிகவும் அமோகமாக இருப்பாய்' என்று சொல்லி ஆசிர்வதித்தார். இரு தேங்காய் மூடிகளையும் என்னிடம் கொடுத்து, 'இந்த வழியாகப் போ. போகும் போது ஆஃபிஸில் போய் மேனேஜரைப் பார்த்து விட்டுப் போ' என்றார்.

அதுவோ பயங்கரமான இருள் பிரதேசம். சுவாமிகள் சொன்ன வழியில் எப்படிச் செல்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்த போது, ஒரு சிறுவன், சுமார் எட்டு வயதிருக்கும். குடுமி வைத்துக் கொண்டு முன்னால் வந்தான். முகத்தில் தெய்வீகக் களை. 'ஸ்தபதி, இந்த வழியாக என் பின்னாலேயே வாருங்கள்!' என்று சொல்லி நடக்கத் தொடங்கினான். எனக்கு மிகவும் ஆச்சரியம். யார் இவன், எங்கிருந்து வந்தான் என்று. ஏதாவது பேய், பிசாசாக இருக்குமோ என்று சற்று பயமாகக் கூட இருந்தது. மயானக் கரை வேறு அருகில் இருந்தது. ஆனாலும் அவன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினேன். அவன் உருவத்தைப் பார்க்கும்போது கோபுலு வரைந்த ஆதி சங்கரர் ஓவியம் நினைவுக்கு வந்தது. அந்த உருவமே நேரில் வந்திருப்பது போலத் தோன்றியது. சில நிமிடங்களில் மேனேஜர் இருப்பிடத்தை அடைந்ததும், அவரிடம் அந்தச் சிறுவன் ஏதோ கூறிவிட்டு இருட்டில் சென்று மறைந்து விட்டான்.

பின்னர் மேனேஜர் என்னிடம் ஒரு ரசீதில் கையொப்பமிட்டு ஐம்பது ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படிச் சொன்னார். நான் மறுத்தேன். 'இது சுவாமிகளின் உத்தரவு. அவசியம் வாங்கிக் கொள்ள வேண்டும்' என்றார். நானும் மறுக்க மனமின்றி அதை வாங்கிக் கொண்டேன். அதன்பின் என்னை உள்ளே சென்று உணவருந்திவிட்டுச் செல்லுமாறு கூறினார். அப்போதோ நேரம் இரவு 1 மணிக்கு மேல் இருக்கும். நானும் நல்ல பசியில் இருந்தேன். உள்ளே சென்றால் சாதம், சாம்பார், ரசம் என எல்லாம் சுடச்சுட இருந்தது. சாப்பிட்டுவிட்டு, அகால வேளை என்பதால் அங்கேயே இரவு தங்கி விட்டுப் புறப்பட்டேன்.

பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் சுவாமிகளிடம் இதைத் தெரிவித்த போது, 'எங்களுக்கெல்லாம் கிடைக்காத பாக்கியம் உனக்குக் கிடைத்திருக்கிறது. நாங்கள் எல்லாம் சங்கரரைப் பற்றிப் படித்துத் தான் இருக்கிறோம். ஆனால் உனக்கு அவரைப் பார்க்கும் பாக்யமே கிடைத்திருக்கிறது' என்று கூறி சிலாகித்தார். 'காமகோடி' என்ற இதழில் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். இது என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

- கணபதி ஸ்தபதி
மேலும் படங்களுக்கு
More

சூசி நாக்பால்
Share: 
© Copyright 2020 Tamilonline