Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
தன்வசம் மீள்வோம்
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2009||(2 Comments)
Share:
சென்ற இதழ்வரையில் நாம், காட்சி அமைப்பு, கம்பன் வால்மீகியிலிருந்து வேறுபட்டுச் சித்திரித்திருக்கும் பாங்கு, ஒவ்வொரு பாத்திரத்தின் வாயிலாகவும் ராமன் மேற்கொண்ட வனவாசம் ‘தாயுடைய பணியால்' என்று சொல்ல வைத்திருக்கும் தன்மை என்று ஒவ்வொன்றாக எடுத்துத் தீர அலசிப் பார்த்தோம். ‘ஏன்றனன் எந்தை இவ்வரங்கள்; ஏவினாள் ஈன்றவள். யானது சென்னி ஏந்தினேன்' என்று ராமன் வசிஷ்டரிடத்தில் மறுமொழியாகச் சொல்லும் கட்டத்திலிருந்து தொடங்கி, இறுதிப்பகுதி வரையிலும், ‘இது தாயின் கட்டளையால் மேற்கொள்ளப்பட்ட பணி' என்பது பற்பல பாத்திரங்களின் வாயிலாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தோம். தான் கானகத்துக்கு வரநேர்ந்தது எப்படி என்று தன்வரலாறு சொல்ல நேரும் கட்டங்களில் எல்லாம்--அனுமனிடத்தில் சொல்லப்படும் அறிமுக உரையை ஒத்த எல்லா இடங்களிலும்--ராமன் சார்பில் லக்ஷ்மணனே பேசுகிறான்; அப்போதெல்லாம் ‘தாயுடைய பணியைத் தலைமேற்கொண்டு தன்னுடைய அண்ணன் கானகம் புகுந்திருப்பதாகத்' தெரிவிக்கிறான். ராமன் தன்னுடைய வாய்மொழியாகவே ‘இது தாயின் பணி' என்று வசிஷ்டரிடத்தில் சொல்வதைப் பார்த்தோம். அந்த இடத்திலாவது, ‘என் தந்தை வரம் கொடுத்தான். அதன் அடிப்படையில் என்னைத் தாய் ஏவினாள்' என்று பேசக் கேட்டோம்.

நாங்கள் இந்த பூமியை ஆண்டவனும் ஏகசக்ராதிபதியுமான தசரதனுடைய மக்கள். எங்களுடைய தாயின் ஆணையின்பேரில் வனம் புகுந்தோம். காட்டுக்கு வந்த இடத்தில் முனிவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, அரக்கர் குலத்தை வேரறக் களைவதையே எம்முடைய கடமையாகக் கொண்டிருக்கிறோம்
பின்னால், சூர்ப்பணகை சீதையைத் தூக்கிச் செல்ல முயன்ற சமயத்தில் லக்ஷ்மணன் அவள் மூக்கையும் முலைமுகத்தையும் அரிந்ததன் பின்னர், ராமனிடத்தில் சூர்ப்பணகை வந்து முறையிட்டு, தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் வலியுறுத்தும்போது, ‘இது முறையன்று. முறையற்ற காரியத்தைச் செய்யுமாறு என்னை வலியுறுத்தாதே' என்று பேசும் சமயத்தில் ராமன் சூர்ப்பணகையினிடத்திலே பின்வருமாறு சொல்கிறான்:

தரையளித்த தனிநேமித் தயரதன்தன் புதல்வரியாம். தாய்சொல் தாங்கி
விரையளித்த கான்புகுந்தேம். வேதியரும் மாதவரும் வேண்ட நீண்டு
கரைளித்தற் கரியபடைக் கடலரக்கர் குலந்தொலைத்துக் கண்டாய் பண்டை
வரையளித்த குலமாட நகர்புகுவேம் இவைதெரிய மனக்கொள் என்றான்.

'பெண்ணே! நாங்கள் இந்த பூமியை ஆண்டவனும் ஏகசக்ராதிபதியுமான தசரதனுடைய மக்கள். எங்களுடைய தாயின் ஆணையின்பேரில் வனம் புகுந்தோம். காட்டுக்கு வந்த இடத்தில் முனிவர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, அரக்கர் குலத்தை வேரறக் களைவதையே எம்முடைய கடமையாகக் கொண்டிருக்கிறோம். (இதில், அரக்கர் குலத்தைச் சேர்ந்த நீ என்னைத் திருமணம்வேறு செய்துகொள்ள வேண்டுகிறாய்! நானோ அரக்கர் குலத்தை வேரறக் களையும் விரதம் பூண்டிருக்கிறேன்!) இதைச் செய்த பிறகல்லவா நாங்கள் அயோத்தி நகரத்துக்குள் பிரவேசிக்கவே போகிறோம்!

இந்த இடத்தை கவனியுங்கள். 'நாங்கள் தசரதனுடைய மக்கள். எங்களுடைய தாய் சொன்ன சொல்லைத் தலைமேல் தாங்கி கானகத்தில் குடிபுகுந்திருக்கிறோம்‘. தசரதனுடைய வரத்தைப் பற்றிய பேச்சே இல்லாமல், ‘தாய் உரையால் வனம் புக்கோம்' என்றே ராமன் தன்வாக்காகவே சொல்லும் இரண்டாம் இடம் இது. கம்பராமாயணம் நெடுகிலும் மாத்ருவாக்ய பரிபாலனமே மிகமிகப் பெரிதும் பேசப்படுகிறது என்பதை முன்னரும் பார்த்தோம்.

இப்படி, இவ்வளவு காரண காரியங்களோடு கம்பனுடைய பார்வையை அலசிப் பார்த்த பிறகு ‘கைகேயி தனக்கு உத்திரவிட்ட சமயத்தில் ‘இது தசரதனுடைய பணியல்ல' என்று ராமன் உணர்ந்திருக்க முடியும் என்பதை நாம் அறுதியிட முடிகிறது. இவ்வளவு தெளிவாக வசிஷ்டரிடத்திலும் சூர்ப்பணகையிடத்திலும் சொல்லும் ராமனுக்கு, கைகேயியுடன் பேசிக்கொண்டிருக்கும் தருணத்திலா அந்த உண்மை தெரிந்திருக்காமல் போயிருக்கப் போகிறது! அந்தக் காட்சியை மீண்டும் ஒருமுறை மனக்கண்ணில் வருவித்துப் பார்ப்போம். தசரதன் மயங்கிக் கிடக்கிறான். ராமனை கைகேயி வருவித்து, ‘இது மன்னவன் பணி' என்று சொல்கிறாள்.
மன்னவன் பணியன்று ஆகின், நும் பணி மறுப்பனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ?
என்இனி உறுதி அப்பால்? இப்பணி தலைமேற் கொண்டேன்;
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.

என்ற ராமனுடைய மறுமொழியை ‘இது மன்னவனுடைய பணியாக இல்லாவிட்டால்தான் என்ன? என்னுடைய தாயாகிய நீவிர் சொல்வதை நான் மறுப்பேனோ? இந்த ராஜ்ஜியத்தை நான் பெற்றால் என்ன, பரதன் பெற்றால் என்ன, இரண்டும் ஒன்றே அல்லவோ? அவன் பெறுவதை நான் பெறுவதாகக் கருதமாட்டேனோ நான்' என்ற வெளிப்படையான பொருள் உள்ளதாகவும், ‘அம்மா, எனக்குத் தெரியும், என் தந்தை தசரதர் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லக்கூடியவர் அல்லர். ஆகவே இது உங்களுடைய பணி. இருந்தாலும் எனக்கு மறுப்பு என்று எதுவும் இல்லை. ஆனாலும், அம்மா, ஒன்று தெரிந்துகொள்ளுங்கள். என் தம்பி பரதன் இப்படிக் கிடைக்கும் அரசாட்சியை விரும்புபவன் அல்லன். என் பின் அவன் பெறப்போகும் செல்வம் எது என்றால், இதோ இப்போது நான் பெறுகின்ற செல்வமான மரவுரியும் சடாமுடியும்தான்' என்ற உட்கிடக்கை பொதிந்த விளைபொருளையும் உள்ளடக்கியதாகவும் கொள்ள இயலும். அவ்வாறு கொள்வது பொருந்தும் என்ற முடிவுக்கு வருகிறோம்.

அம்மா, எனக்குத் தெரியும், என் தந்தை தசரதர் இப்படி ஒரு வார்த்தையைச் சொல்லக்கூடியவர் அல்லர். ஆகவே இது உங்களுடைய பணி. இருந்தாலும் எனக்கு மறுப்பு என்று எதுவும் இல்லை.
காட்சியே இதைச் சொல்கிறது. ராமன் உள்ளே வருகிறான். நேற்று இரவு வரையில் தன்னை அரசேற்கும்படி வலியுறுத்திய தந்தை, அதற்குரிய விரதங்களை மேற்கொள்ளச் சொல்லி இரவில் விடைகொடுத்து அனுப்பியிருந்த தந்தை, மயங்கிக் கிடக்கிறார். அவருக்கு பதிலாக, அவன் சார்பில் தாய் பேசுகிறாள்; ‘காட்டுக்குப் போகுமாறு அரசர் சொன்னார்' என்று சொல்கிறாள் என்றால், அதன் பின்புலத்தில் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதைக்கூட உணரமுடியாதவனா என்ன ராமன்! இந்த மயக்கம் எதனால் என்ற ஐயம் ராமனுக்கு ஏற்படவே இல்லை. ஆகவேதான் வால்மீகியில் கைகேயியினிடத்தில் கேட்டதைப் போன்ற கேள்விகள் எதையும் ராமன் கேட்கவில்லை. அவ்வளவு ஏன்? ‘அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லையா' என்ற ஒரு வார்த்தையைக் கூட கைகேயியினிடத்திலோ, மற்ற எவரிடத்திலுமோ பேசவில்லை. தசரதன் தெளிவுபெறும் வரையில் காத்திருந்து, அதன் பிறகு அவனிடத்தில் (வான்மீகத்தில் வருவதைப்போல்) விடைபெற்றுச் செல்வது என்றால், தந்தையைச் சங்கடத்துக்கு உள்ளாக்க நேரிடும், எத்தனையோ தேவையற்ற வாதப் பிரதிவாதங்களை எதிர்கொள்ள வேண்டிவரும், தந்தையைச் சமாதானம் செய்து, அவருடைய சம்மதத்தைப் பெற்றுப் பிறகு காடேகுவது என்பது சிரமமான காரியம் என்பதை ராமன் (கைகேயி தனக்குக் கட்டளையிட்ட அந்தக் கணத்திலேயே) புரிந்துகொண்டுவிட்ட காரணத்தால்தான் தசரதனுடைய மயக்கத்தைப் பற்றிய கேள்வி எதையும் எழுப்பாமல், அவனுடைய மயக்கம் தெளிவதற்கு முன்னதாகவே, அவனிடம் விடை பெறாமலேயே காட்டுக்குப் போய்விட்டதாகக் கம்பன் சித்திரித்திருப்பதைக் காண்கிறோம். ஆக, நாம் எடுத்துக்கொண்ட பாடலில் விழைபொருள் என்றொன்றும், விளைபொருள் என்றொன்றும் அமைந்தே இருக்கின்றன என்பது ஐயத்துக்கிடமில்லாமல் நிறுவப்படுகிறது.

அப்படியானால், 'மன்னவன் பணியன்றாகில்' என்று எழுதிக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில், அந்த வினாடியில் கம்பனுடைய மனத்தில் இவை அத்தனையும் கட்டமைக்கப்பட்டிருந்தனவா, வால்மீகியின் பாதையிலிருந்து நாம் இன்னின்ன விதங்களில் விலகப் போகிறோம் என்பதையெல்லாம் முன்கூட்டித் தீர்மானித்த பிறகே கம்பன் தன்னுடைய காவியத்தை இயற்ற அமர்ந்ததாகவே கொண்டாலும், இப்படி இரண்டு பொருள் தொனிக்குமாறு கவிஞன் எண்ணித்தான் பாடினானா அல்லது எண்ணாமலேயே இவ்வாறு வந்து விழுந்ததா! யாரறிவார்! யாரால்தான் சொல்ல முடியும்! கவிதானுபவத்தில்--படிப்பவனுடைய கவிதானுபவம் வேறு, படைப்பவனுடைய கவிதானுபவம் வேறு--நிகழும் மாயங்களை யாரே அறுதியிட்டுச் சொல்ல வல்லார்!

'சூழ்ந்த பரவசமாய்' என்ற தலைப்போடு தொடங்கி, பதினோரு தவணைகளில் கவிதை இயற்றப்படும் அற்புத கணங்களில் கவிஞனுடைய உள்ளத்துக்குள் நிகழும் மாயங்களில் ஒரு சிலவற்றைக் கண்டோம். சொல்வதற்கு இன்னும் ஏராளமாக இருக்கின்றன என்ற போதிலும், பதினோரு மாதங்கள் நீண்ட இந்தப் பொழிவை இந்த அளவில் நிறைவு செய்கிறேன். பத்திரிகைகளில் தொடர்கதைகள் உண்டு. தொடர் கட்டுரைகள் மிக அரியவை. அப்படி ஒரு தொடரை--கவிஞனுடைய உள்ளத்தில் நிகழும் ஆனந்தக் கனவுகளின் ஒரு சிறிய பகுதியை மட்டும்--எடுத்து வைக்க இடமளித்த தென்றல் இதழுக்கும் ஆதரவளிக்கும் வாசகர்களுக்கும் நன்றி. சூழ்ந்த பரவசம் முடிகிறது. தன்வசம் மீள்வோம். வேறொரு தலைப்போடு மீண்டும் சந்திப்போம்.

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline