Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிரிக்க, சிந்திக்க
மூன்றாண்டுகளுக்குப் பிறகு...
- வற்றாயிருப்பு சுந்தர்|அக்டோபர் 2008||(2 Comments)
Share:
Click Here Enlargeதொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இப்படி வெளியே இருந்ததில்லை. இந்த விடுமுறையில் இந்தியா சென்றபோது கிடைத்த அனுபவங்கள் மிகவும் வித்தியாசமானவை. நான்கு வாரங்களில் என்னென்னவோ செய்யவேண்டும் என்று வழக்கம்போல அட்டகாசமாகத் திட்டம் போட்டுக்கொண்டு சென்று, வழக்கம் போலவே எதையும் செய்யவில்லை. நாமொன்று நினைக்க நம்மாட்கள் வேறொன்று நினைக்கிறார்கள்!

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தின் உள்வளாகத்தைப் புதுப்பித்து இழைத்திருக்கிறார்கள். அட்டகாசம். நான் சென்ற விமானம் அதிகாலை மூன்றரை மணிக்கு வந்திறங்க, அந்நேரத்தில் வேறு விமானங்கள் எதுவும் வரவில்லை என்பதால் குடியுரிமைச் சோதனைகளை முடித்து பெட்டிகள் வரும் Baggage Claims பகுதிக்கு 10 நிமிடங்களில் வந்து விட்டேன். அமெரிக்காவின் பல நகரங்களிலிருந்து லண்டன் வரும் விமானங்களில் சென்னைப் பயணிகளைப் பிரித்து ஒரு விமானத்தில் போட்டு அனுப்புவதால் பெட்டிகள் எல்லாம் சீட்டுக் குலுக்கலைப் போலப் பிரிந்து பிரிந்து, என் முதல் பெட்டி உடனேயும், இரண்டாம் பெட்டி ஒரு மணிநேரம் கழித்தும் வந்தது. மற்ற மாநிலங்களில் - குறிப்பாக மும்பை - உள்ள நிலையங்களைப் போலல்லாது, சென்னை விமான நிலையம் எப்போதுமே இனிதான அனுபவத்தைத்தான் தந்திருக்கிறது. இம்முறையும் சுங்கச் சோதனை இனிதாகவே முடிய - அந்த அதிகாரியிடம் விசாரித்தபோது, முனையத்தைப் புதுப்பித்து இரண்டு வருடங்களாகிவிட்டன என்றார். நன்றாகவே பராமரிக்கிறார்கள்.

நிலையத்திலிருந்து வெளியேறி வந்தால் கையில் பஸ் டிக்கெட்டுகளைப் போல டாலர்களையும் ரூபாய்களையும் வைத்துக் கொண்டு 'FC, FC, FC மாத்தணுமா சார்' என்ற விசாரிப்புகளையும் ஆட்டோ டாக்ஸி அழைப்புகளையும் தாண்டி - நண்பர்கள் கால் டாக்ஸியில் வந்து காத்திருந்தார்கள் - வண்டியிலேறி பிரதான சாலையை அடைய ஏதோ பாலம் அரைகுறையாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்க, அப்பகுதி முழுவதுமே மூத்திர நாற்றமடித்தது! ஒருவழியாக அதை விட்டு விலகி உள்ளகரத்தில் இருக்கும் நண்பனின் வீட்டுக்குச் சென்று ஒரு காபியைக் குடித்துவிட்டு, குளித்துவிட்டுத் திருச்சி கிளம்பினேன். எட்டரைக்குத் தாம்பரத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸில் முன்பதிவு செய்த பெட்டியில் ஏறினால் வெள்ளையுஞ் சொள்ளையுமாக ஒரு கோஷ்டியே அங்கு எனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்திருந்தது. 'இதுல ஒக்காருங்க' என்று நல்ல தமிழில் காலியாக இருந்த மிடில் பெர்த்தைக் காட்டியவர் மார்வாரி. பெட்டிகளை வைக்க இடமில்லாமல் அதில் ஏற்றி வைத்துவிட்டு வழியில் நின்று கொண்டேன். வாடி வாசலைப் பிரித்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அட்டைப் படத்திலிருந்து முதற் பக்கத்திற்குச் செல்லவே அரைமணி நேரமாகிவிட்டது. அற்புதமான படம், அதையும் எழுதிய செல்லப்பாவே எடுத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. பத்து நொடிக்கு ஒருவராக வந்து போய்க்கொண்டேயிருந்தார்கள். விழுப்புரத்தில் சிலர் இறங்கிக்கொள்ள ஜன்னலோர இருக்கையில் சிறிது நேரம் அமர முடிந்தது. மிகவும் அயர்வாக இருந்தது. வெளியே காட்சிகளை வெற்றுச் சிந்தனையுடன் கவனித்துக்கொண்டே இருந்தேன். நிறைய வயல்களில் வெள்ளைக் கற்கள் 60 x 40 அளவுகளில். அதன் பிறகு ஒரு வழியாக விவசாயத்திலிருக்கும் நிலங்களில் பசுமையைக் காணச் சற்று ஆறுதலாக இருந்தது. என்னுடன் பயணித்த ஆறு பேரும் கைப் பேசியில் ஓயாது திருச்சிவரை பேசிக் கொண்டேயிருந்தார்கள். இந்த கைப்பேசி புரட்சியைப் பற்றி பிற்பாடு.

நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தான் புரியவில்லை.
ஸ்ரீரங்கத்தில் இறங்கி வீடு வந்து சேர்ந்ததும் குழந்தைகள் - ஒரு மாதம் முன்னதாகவே சென்றிருந்தார்கள் - ஓடிவந்து கட்டிக் கொண்டார்கள். லேசாக இளைத்து, களைத்திருந்தார்கள். ஆனால் தாத்தா, பாட்டி, மாமா, அத்தை என்று நிறைய உறவினர்கள் மத்தியில் உற்சாகமாக, சந்தோஷமாக, சுதந்திரமாக ஓடி ஆடினார்கள்.

அலறிக்கொண்டிருந்த தொலைக்காட்சியின் ஒலியளவைக் குறைத்தேன்.

தொலைக்காட்சியின் தொகுப்பாளப் பெருமக்களைப் பற்றிச் சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. சிற்றலை வானொலிகள் ஒரு பக்கம், தொலைக்காட்சிச் சானல்கள் மறுபக்கம் என்று 24 மணி நேரமும் ஆங்கிலம் 4 தேக்கரண்டி, தமிழ் ஒரு சிட்டிகை என்ற விகிதத்தில் கலந்து தடித்த நாக்குடன் ஒரு கூட்டமே தமிழைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது. கலைஞர், அலைஞர் என்று எல்லாத் தொலைக்காட்சிகளிலும் இடையறாத தமிழ்க் கொலை. விதிவிலக்காக மக்கள் தொலைக்காட்சியில் வேட்டி, சட்டை போட்டுக்கொண்டு அறிவிப்பாளர், அடித்தட்டுவர்க்க மக்கள் வசிக்கும் பகுதியில் யார் ஒரு நிமிடத்தில் அதிக எண்ணிக்கையில் வறட்டி தட்டுகிறார் என்று பெண்மணிகளுக்கிடையில் நடத்திய போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. வறட்டி தட்டுவதற்காகச் சாணியைக் கையிலள்ளும் காட்சியைப் பார்த்த மாத்திரத்தில் என் இரண்டு குட்டீஸும் ஒரே நேரத்தில் 'யக்' என அலற, தொலைக்காட்சியை அணைத்துவிட்டு அடுத்த அரைமணி நேரத்திற்குச் சாணி கரைத்து நீர் தெளிப்பதற்கான காரணங்களை விளக்கி வறட்டியின் பெருமைகளையும் சொல்ல, சின்னவள் 'Can we buy it in Wal-Mart?' எனக் கேட்டாள். கவலையாக இருந்தது.

சன் மியூசிக் என்று துவங்கி ஒரு இருபது முப்பது இசைச் சானல்கள். பெரிய நிறுவனங்கள் நடத்தும் தொலைக்காட்சிகளைத் தவிர விண் டிவி, மண் டிவி, மலைக்கோட்டை டிவி என்ற வகையில் வட்டாரச் சானல்கள் தமிழகத்தில் மட்டும் ஒரு ஆயிரம் இருக்கும் என்று நினைக்கிறேன். நிறைய இளைஞர்களும், இளைஞிகளும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தான் புரியவில்லை. அது தமிழ் போலவும் இல்லை, ஆங்கிலம் போலவும் இல்லை. கடும் காய்ச்சலில் ஈனஸ்வரத்தில் உளறுவது எப்படிப் புரியாதோ அப்படித்தான் அவர்கள் பேசுவதும்.

இது தவிர SMS Mafia என்று வேரூன்றிப் பரவியிருக்கும் இன்னொரு கலாசாரம். எல்லா இசைச் சேனல்களிலும் திரைக்குக் கீழே இரண்டு அங்குலத்திற்கு ஓயாது குறுஞ்செய்திகள். புனைபெயர் பூனைப் பெயர் என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் நிசப் பெயர்களிலேயே இளைஞர்களும், யுவதிகளும் நாள் பூரா சாட்டுகிறார்கள். அவர்கள் கொடுத்த எண்ணுக்கு ஏர்டெல் கைப்பேசியிலிருந்து ஒரு சோதனைச் செய்தி அனுப்ப, ஐந்தாவது வினாடியில் திரையில் அது வந்தது ஆச்சரியமாக இருந்தது. சன் மியூசிக்கில் 'Hi da..'. உதயாவில் 'Kano..' ஜெமினியில் 'Hi ra..' சூர்யாவில் 'ஞிங்களைப் பிரேமிக்கு' என்று மொழி காலாசார வித்தியாசமில்லாமல் வயதுக்கு வந்தவர்கள், வராதவர்கள் என்று எல்லாரும் SMS-ல் மூழ்கியிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பெண், கூடப் படித்த பெண், பிரயாணத்தில் சந்தித்த பெண் என்று எல்லாருக்கும் பெயரைக் குறிப்பிட்டுக் காதலைத் தெரிவிக்க, அவர்கள் 'யா யா' என்று சளைக்காமல் பதில்செய்தி அனுப்புகிறார்கள். Love Meter என்று ஒன்று - ஆண் பெண் பெயரை வைத்து அவர்களது ஜோடிப் பொருத்த சதவீதத்தை 'இணை பிரியாது இருப்பார்கள்' என்பது போன்ற கிளி ஜோசியக் கருத்துகளுடன் - ஒரு சானலில் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதுதவிர தொலைபேசி அழைப்புகள். இவற்றையும் மிஞ்சி? இன்னும் கடிதம் அனுப்பிப் பாடல் கேட்கும் ஆசாமிகள் கூட இருக்கிறார்கள். இணையக் குழுக்களை விஞ்சியிருக்கிறது தொலைக்காட்சி மூலமாக உரையாடும் குழுக்கள்.
ஆபாசப் பாடல்கள், SMS உரையாடல்கள், காதல் என்ற பெயரில் இச்சைப் பரிமாற்றங்கள் என்று இசைச் சானல்களில் இளையவர்கள் இருக்க, 40+ வயது மாமா மாமிகள் மெகாசீரியல் என்ற பயங்கர போதை வஸ்துவுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். 25க்கும் 35க்கும் இடைப்பட்டவர்களுக்கு என்று பெரிதாக எதுவும் நிகழ்ச்சிகள் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் வட இந்திய, மேற்கத்திய சானல்களில் வரும் பிறன்மனை நோக்குவதை இயல்பாக, யதார்த்தமாகக் காட்டும் நிகழ்ச்சிகளில் இரவு 10 மணிக்கு மேல் மூழ்கியிருக்கிறார்களோ என்னவோ?

'இளைய பாரதத்தினாய் வா வா வா' என்று பாடியவர் நல்லவேளை இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் வெறுப்புடன் 'இளைய பாரதத்தி நாய் போ போ போ' என்று திட்டியிருப்பார்
காதலை எப்படித் தெரிவிப்பீர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு இளைஞன் சாஷ்டாங்கமாக ஒரு பெண்ணின் காலில் விழுந்தான். அதைப்பார்த்து ஆஹாகாரம் செய்தார்கள் பார்வையாளர்கள். எனக்கு நிஜமாகவே புல்லரித்தது. அவ்விளைஞனைப் பெற்றவர்கள் அநேகமாகக் குஷ்புவுக்குக் கோவில் கட்டிய திருப்பணிக் குழு உறுப்பினர்களாக இருந்திருப்பார்கள். 'இளைய பாரதத்தினாய் வா வா வா' என்று பாடியவர் நல்லவேளை இன்று உயிரோடு இல்லை. இருந்திருந்தால் வெறுப்புடன் 'இளைய பாரதத்தி நாய் போ போ போ' என்று திட்டியிருப்பார். இல்லாவிட்டால் இந்தக் கண்றாவிகளையெல்லாம் பார்த்துத் தற்கொலை செய்துகொண்டிருப்பார்.

மொத்தத்தில் களேபரம்.

இளைஞர்கள் ஒரு நாட்டிற்கு, சமுதாயத்திற்கு மிகப்பெரிய பலம். இந்தியா போன்ற தேசத்தின் அபரிமிதமான இளைய சமுதாயத்தின் மனிதவளமும் சக்தியும் இப்படி உப்புப் பெறாத வெட்டிச் செயல்களில் எவ்வளவு அநியாயமாக வீணாகிக்கொண்டு இருக்கிறது என்று வேதனையாக இருந்தது. 84-இல் சொற்பப் பதக்கங்களுடனிருந்த சீனா இன்று உலகிலேயே அதிக தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறது. இந்தியா? இம்மாதிரி தொலைக்காட்சிகள் இளைய சமுதாயத்தினைக் குறிவைத்து அவர்களது சக்தி முழுவதையும் அணு அணுவாக அனுதினமும் உறிஞ்சிக்கொண்டிருக்கையில், பதக்கம் என்பது வெறும் கனவாகவே இன்னும் பல தலைமுறைகளுக்கு இருக்கும். சுதந்திரம் என்ற மாலையைக் கையிலெடுத்துக் கொண்டிருக்கும் குரங்கின் நிலையாக இருக்கிறது இன்றைய தலைமுறை. ஆக்கபூர்வமான வழிகளில் நேரத்தைச் செலவழிக்காமல் இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டைவிட்டு மூழ்கியிருக்கிறார்களே என்று கவலையாக இருந்தது.

இன்னும் வரும்...

வற்றாயிருப்பு சுந்தர்
Share: 
© Copyright 2020 Tamilonline