Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சாதனையாளர்
நிஷா பவர்ஸ்
புவியியல் தேனீ அக்ஷய் ராஜகோபால்
- காந்தி சுந்தர்|ஜூலை 2008|
Share:
Click Here Enlarge'நேஷனல் ஜியக்ராபிக்' நடத்தும் புவியியல் தேனீ (Geography Bee) போட்டியில் இந்த ஆண்டும் முதலிடத்தைப் பெற்றிருக்கும் அக்ஷய் ராஜகோபால் ஆறாம் வகுப்பு மாணவர். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர். வயது பதினொன்றுதான். நெப்ராஸ்கா மாநில கவர்னர் மே 27ஆம் தேதியை 'அக்ஷய் ராஜகோபால் தினம்' என்று அறிவித்திருக்கிறார். அதுதான் அக்ஷய் போட்டியில் வெற்றி பெற்ற தினம்.

அமெரிக்கப் பள்ளிகளில் படிக்கும் ஐந்து மில்லியன் மாணவர்களும் தொடக்க நிலைக்குத் தகுதி பெற்றவர்கள்தாம். இறுதிச் சுற்றுக்கு வந்தவர்கள் பத்துப்பேர்கள் மட்டுமே. இந்த எமகாதகர்களைத் தோற்கடித்துத்தான் அக்ஷய் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். பரிசு எவ்வளவு தெரியுமா? 25,000 டாலருக்கான கல்லூரி உபகாரச் சம்பளமும் 'நேஷனல் ஜியாக்ராபி' சங்கத்தில் நிரந்தர உறுப்பினராகச் சேர்க்கையும்.

இன்னொரு மகிழ்ச்சி என்ன தெரியுமா? இறுதிக் கட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட பத்து பேரில் மூன்று குழந்தைகள் இந்திய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்!

லின்கன் நெப்ராஸ்காவிலுள்ள லக்ஸ் மிடில் ஸ்கூலில் படிக்கிறார் அக்ஷய் . அவருடனும் அவரது பெற்றோர்களான தந்தை திரு. விஜயராகவன் ராஜகோபால் மற்றும் தாயார் திருமதி சுசித்ரா ராஜகோபாலுடனும் உரையாடினோம்.

நெப்ராஸ்கா மாநில கவர்னர் மே 27ஆம் தேதியை 'அக்ஷய் ராஜகோபால் தினம்' என்று அறிவித்திருக்கிறார். அதுதான் அக்ஷய் போட்டியில் வெற்றி பெற்ற தினம்.
அக்ஷய் ஐந்து வயதாக இருந்தபோது அவரது தந்தை அவருக்கு ஒரு அட்லஸ் பரிசளித்தார். அப்பொழுது தொடங்கியதுதான் பூகோளத்தில் அக்ஷய்க்கு ஈடுபாடு. இன்று விருட்சம் போல் பரவியுள்ளதாம். 'அப்போது நான் மலேசியாவில் ஒரு பிரிட்டிஷ் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு போட்ட அஸ்திவாரமும் என் வெற்றிக்கு ஒரு காரணம்' என்கிறார் அக்ஷய்.

2008 ஜனவரி தொடக்கத்தில், பள்ளியளவில் முதல் போட்டி. இதில் வெற்றி பெற்றார் அக்ஷய். அடுத்த நாளே முதல் நூறு போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் அடுத்த கட்டத் தேர்வில் போட்டியிட்டிருக்கிறார். இந்த கட்டத்தின் முடிவுகள் மார்ச் மாதத்தில்தான் அறிவிக்கப்படும். அக்ஷய்யின் பெற்றோர் அவரிடம் 'மார்ச் மாதம் வரை காத்திருக்க வேண்டாம். நீ அதிலும் வெற்றி பெற்று விட்டாய் என்று நினைத்துக் கொள். அந்த நினைவில் மேலே தயாரிப்புகளைச் செய்' என்று கூறி ஊக்குவித்தனராம்.

புவியியல் தேனீ போட்டிக்கு அக்ஷய்யைப் பயில்வித்த விதம் வெகு சுவாரஸ்யம். ஒவ்வொரு நாட்டைப் பற்றியும் DVD பார்த்து அதைப் பற்றிய தகவல்களை மனதில் பதித்தனர். Grollier's Lands & People என்ற புத்தகத்தை பலமுறை படிக்க வைத்தனர். இதர நாடுகளைப் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒலிநாடாவைக் கேட்கவும் செய்திருக்கின்றனர். பத்து புத்தகங்கள் வாங்கிக் கொடுத்ததோடு பலமணி நேரம் நூலகத்தில் செலவழித்து அங்கிருந்த புத்தகங்கள் மற்றும் ஒலிநாடா/DVDக்களை இரவல் எடுத்துப் பிள்ளையைப் பயில்வித்துள்ளனர்.
Click Here Enlargeஅக்ஷய்யின் தந்தை ராஜகோபால் சிரித்துக் கொண்டே 'நூலகத்தில் செலவழித்த நாட்களின் எண்ணிக்கையை விட அங்கு போய் வரச் செலவழித்த கேலன்களின் எண்ணிக்கை அதிகம்' என்கிறார்.

அக்ஷய்யின் பெற்றோர் கூறியது போலவே மாநில அளவில் முதல் நூறு மாணவர்களின் பட்டியலில் அக்ஷய்யின் பெயர் இருந்தது. அடுத்து அரை இறுதிச் சுற்று. இதில் மாநில அளவில் சிறந்த பத்து மாணவர்கள் தேர்வானார்கள். இதில் அக்ஷய் முதல் இடம் பெற்றார். நேஷனல் ஜியாக்ரபியின் செலவில் வாஷிங்டன் டி.சி. சென்றார். அங்கு பதினொரு மாணவர்கள் கொண்ட ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அதிலிருந்து தான் பத்து மாணவர்கள் இறுதிச் சுற்றை எட்டினர். தம்மிடம் கேட்கப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்து முதலிடம் பெற்றார் அக்ஷய்.

'குழந்தைக்குத் தன் செயல்களை ஒழுங்கு படுத்தத் தெரியாது. நாம்தான் வழிப்படுத்த வேண்டும்' என்கிறார் தாயார் சுசித்ரா. சரியாகத்தான் வழிப்படுதியிருக்கிறார் என்பதில் சந்தேகம் இல்லை.

ஒவ்வொரு நாளும் இரண்டிலிருந்து மூன்று மணிநேரம் இப்போட்டிக்கெனச் செலவிட்டிருக்கிறார் அக்ஷய். விடுமுறை நாட்களில் எட்டு மணிநேரம் ஒதுக்கியிருக்கிறார். இப்படி ஐந்து மாதங்கள் உழைத்த பலன் அவருக்கு முதலிடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த ஐந்து மாதங்களும் வீட்டில்தான். சுசித்ராவும் வெளியில் சென்று பொழுதுபோக்குவது, விமரிசையாகச் சமையல் செய்வது ஆகியவற்றைக் குறைத்துக் கொண்டு அக்ஷய் மீது கவனம் செலுத்தியுள்ளார்.

அக்ஷய்க்குத் தமிழ் புரியும். ஸ்பானிஷ் மொழி எழுத, படிக்க, பேச தெரியும். ஹிந்திப் படங்கள், குறிப்பாக ஷாருக்கான் படங்களை விரும்பிப் பார்ப்பார். கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர். பள்ளி இசைக்குழுவில் கிளாரினெட் வாசிக்கிறார். வானிலைத் துறை, புவியியல் வரைபடம், GLS போன்ற ஏதேனும் துறையில் மேலே படிக்க விரும்புகிறார். தன் பள்ளி ஆசிரியை திருமதி ரிங்கன்பர்க் தன்னை மிகவும் ஊக்குவித்ததாகப் பெருமையுடன் கூறுகிறார். தாஜ்மஹாலைப் பார்க்க விரும்புகிறார். 2009ஆம் ஆண்டு சர்வதேச அளவில் நடக்கவுள்ள இதே போட்டிக்கு இப்போதிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்.

வெற்றிபெற வாழ்த்துக்கள்.

காந்தி சுந்தர்
More

நிஷா பவர்ஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline