Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
மாலன்
- மதுசூதனன் தெ.|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeநவீன தமிழ் இலக்கியம் பன்முகப்பாடு கொண்டது. இன்றுவரை பல்வேறு தளங்களில் இருந்து வளம் சேர்த்து வருபவர்கள் அதிகம் பேர் உள்ளார்கள். இவர்கள் யாவரையும் நாம் ஒரே நேர் கோட்டில் ஒற்றைப் பரிமாணமாக நோக்க முடியாது. இதைவிட இவர்களது இலக்கியம் பற்றிய அறிதல் முறையும் படைப்பாக்க உந்துதலும் கதை சொல்லும் முறையும் மொழியாடலும் ஒரே தன்மை கொண்டவை அல்ல. இந்தப் புரிதல் நவீன தமிழ் இலக்கியத்தின் ஊற்றுக்களையும் ஓட்டங்களையும் கணிப்பதற்கான அடிப்படைக் கருத்தியல் ஆகும். எமக்குப் பிடித்தது பிடிக்காதது என்று அகச்சார்பான நோக்கு முறை இலக்கியம் சார்ந்த அறிதல் முறைக்கு முரணானது. ஆகவே விரிந்த பார்வை எமக்கு வேண்டும். அப்பொழுதுதான் பல்வேறு புதிய களங்கள், கதையாடல்கள் பற்றிய கவனயீர்ப்பு பொருத்தமாக இணையும்.

இந்தப் பின்புலத்தில் 1970களுக்குப் பின்னர் தமிழ் இலக்கியச் சூழலில் அறிமுகமான மாலன் எனும் படைப்பாளியைப் புரிந்து கொள்ளலாம். இவர் வெகுசன மட்டத்தில் தீவிர ஊடகவியலாளராகவே அறிமுகமாகியுள்ளார். இருப்பினும் இலக்கியம் சார்ந்த உரையாடல்களும் இலக்கியமாக்கலும் இவரது ஆளுமையின் கூறுகளாக வெளிப்பட்டுள்ளன. சிறுகதை இலக்கியப் பரப்பில் மாலன் நிதானமாக இயங்கியுள்ளார். இவரது 'மாலன் சிறுகதைகள்' என்னும் தொகுப்பு இவர் பற்றிய மறுமதிப்பீட்டுக்கான தடயங்களை முன் வைத்துள்ளது. குறிப்பாக நெருக்கடி நிலைக்குப் பின்னர் உருவான தலைமுறை எழுத்தாளர்களுள் மாலனும் ஒருவர். இதனால் அத்தலைமுறை எழுத்தாளர்களின் எதிர்காலக் கனவுகள், சிந்தனையோட்டங்கள், உறவுகளின் வலிகள், சமூக மாற்றங்கள், மனித மதிப்பீடுகளின் சரிவுகள், ஒருவித கோபம், இயலாமை, நம்பிக்கை போன்ற சேர்மானங்களின் கூட்டுக்கலவையாகப் படைப்பாக்க முறைமை வெளிப்பட்டுள்ளது.

மாலனின் படைப்புலகம் சுட்டும் தருணங்கள் ஏராளம் ஆனால் இவை வாசக மனநிலையில் அந்தக் கணநேர கொண்டாட்டத் தருணங்களாகவே அடங்கிவிடுகின்றன..
'நான் சிறுகதைகளுக்கும் என்னுடைய பாணி என்று எதனையும் நிச்சயித்துக் கொள்ளவதில்லை. நான் எடுத்துக்கொள்கிற பிரச்சினையின் முகமே என்கதையின் உத்தியைத் தீர்மானிக்கிறது. நான் தீர்மானமாக சிறுகதைகளைப் பற்றிய சட்டங்கள் வகுத்துக் கொள்வதில்லை என்பதே இதன் அர்த்தம். ஏற்கெனவே நிச்சயக்கப்பட்டிருக்கிற இலக்கணங்களோடு ஒன்றிப் போவதும் முரண்படுவதும் என் பொறுப்பில் அல்ல. இவை குறித்து நான் எந்த சர்ச்சைக்கும் உடன்படுவதில்லை ஏனெனில் என் கதைகளில் என் Sweat and toil இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் மிகுதியும் ஒரு தனிமனிதன். நான் தனிமனித வெளிப்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருக்கிறேன். கலை என்பது படைப்பாக்க வெளிப்பாடே. எனவே இருக்கிற இலக்கணங்கள் அல்லது Pattern-கள் சிதைக்கப்பட வேண்டும். அல்லது காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கு அக்கறையில்லை. எனக்கு தியரிகளைக் காட்டிலும் நிதர்சனம் மேம்பட்ட விஷயம்.

'நான் கலைஞன் என்ற உறவில் அநேகமாய் எல்லா மீடியாக்களுடனும் சம்பந்தம் கொண்டிருக்கிறேன் எல்லா மீடியாக்களுக்கும் மட்டுப்பாடுகள் உண்டு. இந்த பிரக்ஞையோடு என் வெளிப்பாட்டிற்கு ஏற்ப அந்த மீடியாக்களைக் கையாளுகிறேன். என்னுடைய டாகுமென்டரியிலும் பத்திரிகையிலும் எந்த ஒரு ஓவியத்திலும் வானொலி உரையிலும் என்னை நீங்கள் கண்டு கொள்ள இயலும். என்னளவில் இது போன்றே என் சிறுகதையும் அமைகிறது.'

இவ்வாறு தன்னைப் பற்றித் தானே பதிவு செய்துள்ளார். இதன்மூலம் மாலனின் இயங்குதளம், கலை, இலக்கியம் பற்றிய கருத்துநிலை யாது என்பது தெளிவாகிறது. அத்துடன் ஊடகம் பற்றிய நிலைப்பாடும் தெளிவாகிறது.
இவரது சிறுகதைகளில் வெளிப்படும் பாணி இதுதான் என்று நிச்சயப்படுத்த முடியாது. ஆனால் கதைசொல்வதில் மனித உணர்வுகளை வெளிப்படுத்துவதில், மனித உறவுகளைக் காட்டுவதில் சிக்கலற்ற நேரடித் தன்மை இழையோடுகிறது. குறிப்பாக வாசக மனநிலையில் உடன்பாடான வினைப்பாடு தான் வெளிப்படுகிறது. வாழ்க்கையின்மீது கொண்ட காதல் வாசக மனப்பதிவில் நேர்நிலையான துலங்களை படிமலர்ச்சியாக அடையாளம் காட்டுகிறது. படைப்பாளியாக இயங்கும் உந்துதல் தான் இத்தகைய சாத்தியப்பாடுகள் நோக்கி வாசகரை இழுக்க முடியும். மாலனின் படைப்புலகம் சுட்டும் தருணங்கள் ஏராளம் ஆனால் இவை வாசக மனநிலையில் அந்தக் கணநேர கொண்டாட்டத் தருணங்களாகவே அடங்கிவிடுகின்றன. தொடர்ந்து வாசகருடன் உறவாடும், உரையாடும் தருணங்களுக்கான வெளி மட்டுப்பாடுகள் கொண்டதாகவே உள்ளன. இந்த விபத்து மாலனுக்கு மட்டுமல்ல பல எழுத்தாளர்களுக்கும் நேர்ந்துள்ளது.

ஆரம்பத்தில் மாலனின் படைப்புலகம் காட்டும் வாழ்க்கைக் கோலங்கள், மனித உயிர்ப்புத் தளங்கள் இவரது பின்வந்த கதைகளில் மேற்கிளம்பாமல் தட்டையாகப் பயணிக்கும் ஒருவித சோர்வு நடை உள்ளது. மொழிசார் இலக்கியத்தின் இயக்கு தன்மை பன்முகக் கூறுகளால் கணிக்க முடியாத வறட்சி மெதுவாகக் காவு கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து வருவதையும் காணலாம். எவ்வாறாயினும் மாலன் என்னும் படைப்பாளியின் சுயத்துவம் குறிந்த சுயவிசாரணை அவர் காலத்து சக படைப்பாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அப்பொழுது மாலனின் தனித்தன்மை வித்தியாசங்கள் மேலும் மேலும் ஆழமாகப்புலப்படும். இது தேர்ந்த எந்தவொரு படைப்பாளிக்கும் சாத்தியமாகும்.

'என்னுடைய பாஷையில் லா.ச.ரா.வும் ஜானகிராமனும் ஜெயகாந்தனும் கூட சாயல் காட்டுவதாய் எனக்குச் சொல்லப்பட்டதுண்டு. நான் என்னையும் என்னுடைய மொழியையும் முன்னோர்களிடமிருந்தே பெற்றிருக்கையில் இது இயல்பே ஆனது அல்லவா?' என மாலன் கேட்கும் குரலில் மாலன் வெளிப்படுத்தும் சிந்தனையின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள முற்படலாம். புதுமைப்பித்தன், ஜெயகாந்தன்... எனத் துல்லியமாக அடையாளம் காட்டும் ஆளுமைகள் நிலைக்குத்தாக மேற்கிளம்பி கிடைக்குத்தாக வளம் சேர்த்துள்ளார்கள். இந்த இடைவெளிக்குள்தான் இன்னும் பலர் பயணம் செய்கிறார்கள்; இதற்கு மாலனும் விதிவிலக்கல்ல. ஆனால் எல்லோரும் புதுமைப்பித்தனாகவே ஜெயகாந்தனாகவோ ஆக முடியாது. ஆனால் அவர்கள் சென்ற பாதையில் நாம் ஓடிப் பார்க்க முடியும் அப்பொழுது சிலர் தமக்கான நகர்வை அடையாளம் காண்பர். இத்தகு மனநிலை வாசகர்களுக்கு உறுதியாக வேண்டும்.

தெ.மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline