Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம்
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2006|
Share:
Click Here Enlargeபாகம் 6

முன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்து கிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப்படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் விளையாட்டு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்துள்ளார். நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகை சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர்ந்து கொண்டால்தான் முடியும் என்று கூறினர். அதற்குத் தேவையான மெய் நிகர் உடுப்பில் இருந்த முப்பரிமாணப் பார்வை, ஸ்டீரியோ ஒலி, வாசனை, ஹேப்டிக்ஸ் (haptics) எனும் தொடு உணர்ச்சி சாதனங்களைப் பற்றி விவரித்து விட்டு அதை விட முன்னேறிய நினைவுகளை உணர்வது மட்டுமல்லாமல் தூண்டக் கூடிய சாதனத்தைப் பற்றி விளக்கினர். பிறகு அவர்கள் மெய்நிகர் மாயத்தால் பாரீஸில் இருக்கும் லூவ் ம்யூஸியத்தை அடைந்தனர். அங்கு...

மெய் நிகர் மாயத்தால் லூவ் ம்யூஸியத்துக்கும் முன்னால் நிறுத்தப் பட்ட கிரண் அங்கிருந்தக் கண்ணாடி பிரமிட்டைப் பார்த்து, "ஆஹா, டா வின்சி கோட் புத்தகத்தில் கூறிய படியே இருக்கிறதே!" என்று வியந்து விட்டு, மேலும் உண்டான உற்சாகத்தால், பரபரப்புடன் ரிச்சர்டை துரிதப் படுத்தினான்.

"ஹே, ரிச்சர்ட், இது நல்லாத்தான் இருக்கு, ஆனா, எதோ ஸ்பெஷல் ட்ரீட் இருக்குன்னு சொன்னீங்களே, அதைக் காட்டுங்க!"

ஷாலினி அவனை அடக்கினாள். "டேய்! ஏண்டா இப்படி பறக்கறே?! எப்பப் பாத்தாலும் காலில வெந்நீரைக் கொட்டிக்கிட்டு ஓடினா மாதிரின்னுவா அம்மா, அந்த மாதிரி இருக்கு. கொஞ்சம் இந்த லூவ் ம்யூஸியத்தோட கட்டிடக் கலையை நிதானமா பாத்து ரசிக்கவிடேன்! என்ன அழகாக் கட்டியிருக் காங்க பாரு. அதோட உள்ளே போனா இன்னும் என்னென்ன மாதிரி கலைப் பொருட்கள், ஓவியங்கள் இருக்கும் தெரியுமா? அங்கயும் இந்த மாதிரி பட படத்தேன்னா ரசிக்கவே முடியாம போயிடும்!"

கிரணோ இன்னும் அதிகமாகக் குதித்தான்! "உனக்கு வேணா இதெல்லாம் நிதானமாப் பாக்கணும் போலிருக்கலாம். அப்புறம் நிறைய ரீவைண்ட் பண்ணிப் பண்ணி எவ்வளவு வேணும்னாலும் பாத்துக்கோ! இப்ப எனக்கு அந்த விசேஷ ட்ரீட் என்னன்னு உடனேத் தெரிஞ்சாகணும்! என்ன ரிச்சர்ட்?! சும்மா அவுத்து விடுங்க உடனே! கமான், க்விக்!"
ரிச்சர்ட் பலமாக சிரித்து விட்டு "சரி, கிரண், இனிமேயும் தாமதப் படுத்தினா எரிமலை மாதிரி வெடிச்சு எங்க எல்லாரையும் எரிச்சுடுவயோன்னு பயமா இருக்கு. இதோ பார்!" என்று சொல்லி எதையோ அழுத்தி னார். அனைவரும் ஒரு நொடிக் கணக்கில் ம்யூஸியத்தின் ஓர் உள்ளறையில் இருந்தனர். ஷாலினி திடீரென "ஓவ்!" என்று ஆச்சர்யப் பெருமூச்சு விடவும், எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த கிரண், "என்ன, என்ன பார்க்கறே ஷால் எனக்கு வெறும் கம்பிக் கதவுதான் தெரியுது!" என்று கத்தினான்!
ரிச்சர்ட், "ஓ! கிரண், நீ உன் தனிப் பட்ட கோணக் குமிழை எப்படியோத் திருப்பிட்டி ருக்கே, இப்ப பார்!" என்று அதைத் திருப்பவும், கிரணைச் சுற்றி அந்த அறை விர்ரென வேகமாக சுற்றியது. அதோடு கிரணுக்கும் கிர்ரென தலை சுற்றவும் கொஞ்சம் கண்ணை மூடிக் கொண்டு சமாளித்த கிரண், இறுதியாக கண்ணைத் திறந்துப் பார்த்ததும் அவன் முன் தோன்றிய காட்சி அவன் உள்ளத்தில், திகைப்பும் வியப்பும் போட்டி போட்டுக் கொண்டு ஆக்கிரமித்தன!

தங்கள் முன் தத்ரூபமாகத் தோன்றிய லியனார்டோ டாவின்சியின் மோனா லிஸா ஓவியத்தைப் பார்த்து, கிரண், ஷாலினி, சூர்யா மூவரும் களிப்படைந்தனர். ஷாலினிதான் முதலில், "ஓவியம் இருக்கற அறைக்குள்ளயே, அதோட பக்கத்துல இருக்கறா மாதிரியே இருக்கே, இந்தப் படம் நிஜமான ஓவியத்தைப் படம் பிடிச்சு நகல் எடுத்த பிம்பமா, இல்லைன்னா கம்ப்யூட்டர்ல செயற்கையா உற்பத்திப் பண்ணியிருக்கீங்களா?" என்று கேட்டாள்.

நாகுதான் முந்திக் கொண்டு அபரிமிதமாகப் பொங்கிய பெருமையுடன் பதிலளித்தார். "ஆங்! என்ன அப்படிக் கேட்டுட்டே ஷாலினி?! நாங்க விசேஷ அனுமதி வாங்கிக் கிட்டு, ம்யூஸியம் மூடியிருக்கற சமயத்துல ஒவிய ஃபோட்டோ தொழில்முறை நிபுணர் களை வச்சு, மென்மையான ஒளி போடற கருவிகளோட, மில்லியன் டாலர் கணக்குல விலையாகற காமிராக்களை உபயோகப் படுத்தி, பலக் கோணங்களில பல தூர அளவிலிருந்து எடுத்திருக்கோமாக்கும்!"

ஷாலினி ஆர்வத்துடன், "பலக் கோணங்கள், பல தூரங்களா, அது என்ன?" என்று கேட்கவும், ரிச்சர்ட் புன்னகையுடன், "சொல்ல வேண்டியதில்லை, பாருங்க" என்று தன் கோண, தூரக் குமிழைத் திருப்பவும், மோனா லிஸா ஒவியத்தை அவர்கள் பலக் கோணங்களிருந்துப் பார்க்க முடிந்தது, மிக அருகில் சென்று பார்ப்பது போலும் இருந்தது!
ரிச்சர்ட் விளக்கினார். "எங்க மெய் நிகர் தொழில் நுட்பத்தால இந்த மாதிரி எந்த இடத்தையும் பொருட்களையும் இந்த மாதிரி பார்க்கலாம். இப்ப பார்க்கற ஓவியம் லியனார்டோ வோட ஒவியக் கலைத் திறமையை நல்லா எடுத்துக் காட்டுது. பாருங்க மிக மிக அருகில் போய்ப் பார்க்கற வரைக்கும், ஓவியத் தூரிகைக் குறிகளேத் தெரியாம இருக்கறா மாதிரி மிக வழ வழப்பா வரைஞ்சிருக்கார். அந்த மாதிரி வேற யாராலும் செய்ய முடிஞ்சதில்லை!"

ஷாலினியும் அதைக் கூர்ந்து கவனித்து ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். அதற்குள், ரிச்சர்ட் எதோ பரிசை ரஜினி ஸ்டைலில் எடுத்துக் கொடுப்பது போல் ஒரு சைகை செய்து, "கிரண் இதோ பார் உன்னுடைய எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் போனஸ்!" என்று கூறி இன்னொரு க்ளிக் செய்யவும் மோனாலிஸா படக்கென மறைந்து இன்னொரு ஓவியம் தோன்றியது!

அதைக் கண்டக் கிரண், "ஆஹா! பிரமாதம்!" எனக் கூவினான்! டாவின்சி கோட் புத்தகத்தைப் பலப் பல முறைப் படித்து அலசி ஆராய்ந்திருந்த கிரண், அதன் முக்கிய மத்திய சான்றாக விவரிக்கப் பட்டிருந்த லியனார்டோ டாவின்சியின் "கடைசி விருந்து" (The Last Supper) ஓவியம் தன் முன் தத்ரூபமாக, பெரியதாக அருகில் உள்ளது போல் தோன்றவும், பர பரப்பின் உச்சிக்கே போய் விட்டான்!

கிரண் ஓவியத்தைப் பல கோணங்களி லிருந்து கூர்ந்துப் பார்த்து விட்டு உற்சாகத் தோடு எக்களித்தான். "ஆஹா டேன் ப்ரௌன் விவரிச்சா மாதிரியே இருக்கே. இதோ பாருங்க, ஜீஸஸ் பக்கத்துல இருக்கறது நிச்சயமா ஒரு பொண்ணுதான். அது மேரி மேக்டலீனாத்தான் இருக்கணும். சின்ன நகல்களில் எல்லாம் சரியாத் தெரியலை. இப்ப மெய்நிகர் மாயத்தில பக்கத்திலேந்து நேராப் பாக்கறா மாதிரி இருந்தா இன்னும் நல்லாத் தெரியுது. அந்தப் புத்தகத்துல இருக்கறதெல்லாம் உண்மையாத்தான் இருக்கணும் போலிருக்கு!"

சூர்யா அவனை அமைதிப் படுத்தினார். "கிரண், அப்படித் தாவிடாதே! ஓவியத்தைப் பத்தி உனக்கு என்ன வேணா கருத்து இருக்கலாம். ஆனா அது கதைப் புத்தகம்ங் கறதை மறந்துடாதே! அதுல சில குறுகிய உண்மைகளை மையமா வச்சு பெரிய கதையாத் திரிச்சிருக்கார், ஒரேயடியா எல்லாமே நிஜம்னு நம்பிட்டா அதோ கதிதான்!' என்று போதித்தார்.

கிரண் ஒன்றும் கண்டு கொள்ளாமல் அந்தக் "கடைசி விருந்து" ஓவியத்திலேயே மூழ்கி விட்டிருந்தான்!

ஆனால் திடீரென "ஹே! என்ன ஆச்சு?!" என்று கத்தினான்! ஏனெனில், ஓவியம் படக்கென்று இடது வலதாக மாறி விட்டிருந்தது! சில நொடிகளில் இன்னும் திகைக்க வைக்கும் படி, அது தன் சட்டத்திலிருந்து குதித்து தானே கிரண் அருகிலும் வந்து முன்னும் பின்னும் ஆடியது! அது போதாதென்று திடீரென ஓவியத்தி லிருந்த பன்னிரெண்டு சீடர்களில் ஒருவரின் முகம் மெல்ல மெல்ல மாறி கிரணின் முகமாகத் தோற்றமளித்தது!
கிரண் வாயைப் பிளந்த படி எதோ சொல்ல முயன்று சொல்ல முடியாமல் தவித்தான்!
ரிச்சர்ட் பலமாக சிரித்து விட்டு, "என்ன கிரண்? இது எப்படி இருக்கு?! நீ லியனார்டோ ஓவியத்துலயே மூழ்கிட்டதுனால, உன்னையே அதுல போட்டுட்டோ ம்!" என்று கூறி விட்டு ஓவியத்தை மீண்டும் பழைய படி மாற்றினார். பிறகு எதையோ தட்டினதும் அவர்கள் இருந்த அறையே மொத்தமாக மாறி விட்டது! முதலில் லூவ் ம்யூஸியத்தின் உள்ளறையாகவேத் தோற்றமளித்த சுற்றுப் புறம், திடீரென ஒரு நந்தவனமாகத் தோற்றமளித்தது. அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த ஓவியங்கள் மட்டும் மாறாமல், அந்த நந்தவனத்தில் ஆங்காங்கு வைக்கப் பட்டது போல் இருந்தன!

ஷாலினி உற்சாகத்தோடு கூவினாள். "ஆஹா, இது ரொம்ப நல்லா இருக்கே. ரிச்சர்ட், உங்க மெய்நிகர் தொழில் நுட்பம் நிஜமாவே பிரமாதமானதுதான்!"

அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் லூவ், ஓவியங்கள், நந்தவனம் எல்லாமே மறைந்து விட்டன. அவர்கள் அனைவரும் ஒரு கூட்ட அறைக்குள்ளிருந்த ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்து கொண்டிருந்த தோற்றம் ஏற்பட்டது!

கிரண் ஏமாற்றத்தோடு, "ஹே! நான் இன்னும் லூவ் பாக்கணும்! திரும்ப போடுங்க அதை!" என்று கத்தினான்!
ஆனால் சூர்யாவோ, "இல்லை கிரண், ரிச்சர்ட் இப்பப் போட்டிருக்கறது சரிதான். நாம இன்னும் ஒரு விஷயத்தை அனுபவிக்க வேண்டியிருக்கு" என்றார். நாகு, "இன்னும் ஒண்ணா?! இன்னும் எவ்வளவோ இருக்கே?" என்றதும் சூர்யா தலையாட்டி மறுத்தார்.

"இல்லை நாகு, நான் சொல்றது நாம நிறைய விவாதிச்ச எண்ணத் தூண்டலைப் பத்தி. இந்த மாதிரி பல இடங்களுக்குப் போகறது, பாக்கறதை மாத்தறது, கண்ணாடி வழியா கை போறதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. பிரமாதம்! ஆனா நீங்க சொன்னதுலயே மிகவும் வியக்கவும் சிந்திக்கவும் தக்கது எண்ணங்களை உணர்வதும், அதை விட முக்கியமா, எண்ணங்களைத் தூண்டறது தான்! அது எப்படி இருக்குன்னு பாக்கணும்." என்றார்.
ரிச்சர்ட் ஆமோதித்தார். "சூர்யா சொல்றது சரிதான். இது வரைக்கும் நாம அதைப் பத்திப் பாக்கலை. ஆனா இதை எல்லாருக்கும் ஒரே சமயத்துலக் காட்டறது கஷ்டம். ஒருத்தர் அதை அனுபவிச்சா மத்தவங்க அவங்க என்ன பாக்கறாங்க, அது எப்படி மாறுதுன்னு பாக்கலாம்" என்றார்.

கிரண், "ஊ! ஊ! ஊ! பிக் மீ, பிக் மீ! நான் செய்யறேன் நீங்க பாருங்க" என்று கத்தவும், ரிச்சர்ட் பலமாக நகைத்தார். "கிரண், நீ தான் பள்ளி மாணவன் மாதிரி முதல்ல குதிப்பேன்னு எனக்குத் தெரியும். உனக்கு விண்வெளியில பயணம் செய்யப் பிடிக்குமா?" என்று வினாவினார்.

கிரண் இன்னும் பர பரப்புடன் குதித்தான்! "என்ன?! விண்வெளிப் பயணம் பிடிக்கு மாவா! ஆர் யூ கிட்டிங் மீ?! நான் சின்னப் பையனா இருக்கறப்பலேந்து அஸ்ட்ரோ நாட்டா கற்பனை பண்ணிக்கிட்டு மனசுக் குள்ள எவ்வளவு தடவை ராக்கெட்ல பறந்திருக்கேன் தெரியுமா?! பீம் மீ அப் ஸ்காட்டீ" என்று பட படவெனப் பொரிந்துத் தள்ளினான்!
ஷாலினியும் முறுவலுடன், "ஆமாம், ஒரு தடவை, ராக்கெட்டுன்னு துணி உலர்த்தற ட்ரையர் இயந்திரத்துக்குள்ள புகுந்து உக்காந்துக்கிட்டு வெளியில வர முடியாம மாட்டிண்டுட்டான். பெரிசா பேன்னு அழுது ஒரே அமர்க்களமாப் போச்சு! வெளியில இழுக்கறத்துக்குள்ள படாத பாடு படுத்திட் டான்!" என்றாள்.

கிரண் சிரித்தான். "ஆமாம், அது ஒரு கனாக் காலந்தான்! ஷால் இரு இரு, அதைப் போட்டு உடைச்சிட்டே இல்லே?! நீ அடிச்ச கூத்தெல்லாம் பத்தி அவுத்து உடறேன்!" என்று கருவினான். அனைவரும் பலமாகக் கல கல வென சிரித்தனர்.
ரிச்சர்ட் தொடர்ந்தார். "அது கேட்க ரொம்ப நல்லாத்தான் இருக்கும்! ஆனா இப்ப வா, விண்வெளிக்கு அனுப்பறேன்." என்று கம்ப்யூட்டரில் சில நொடிகள் தட்டினார். கிரண் ஒரு விண்வெளிக் கலத்தில் அமர்ந்திருப்பது போல் உணர்ந்தான். மற்ற அனைவருக்கும் வேறு திரையில் கிரணின் கண்களுக்கு என்னத் தெரிகிறதோ அதேக் காட்சி தெரிந்தது.
ரிச்சர்ட் முதலில் கிரணை ஒரு நல்ல மெத்தென்ற சாயும் இருக்கையில் அமரச் செய்தார். அதன் பின் பக்கத்தைச் கொஞ்சம் சாய்த்து, கிரணைக் கால்களை நீட்டிக் கொண்டு ரிலாக்ஸ் செய்து கொள்ளச் சொன்னார்.

சூர்யா, "இது வரை இந்த மாதிரி எங்களை யெல்லாம் சாய்ந்து உட்காரச் சொல்லலியே? இப்ப கிரணை மட்டும் ஏன் இந்த மாதிரி உட்கார வைக்கிறீங்க?" என்று கேட்டார்.
ரிச்சர்ட் விளக்கினார். "இது வரைக்கும் உடல் உணர்வுகள் எப்படி மெய்நிகராப் பாக்கலாம்னுதான் காட்டினேன். இப்பதான் மன நினைவுகளை எப்படி எங்கத் தொழில் நுட்பத்தால உணர முடியுது, இன்னும் தூண்டவும் முடியுதுன்னு காட்டப் போறேன். அதையும் இப்படி சாயமக் கூடக் காட்டலாம். ஆனா, இப்படிக் காட்டினா, அதை மட்டும் நல்லாத் தனியா எடுத்துக் காட்ட முடியும். அதுக்காகத்தான்!"

நாகுவும் புகுந்து, "எங்க நிறுவனத்துக்கு முதலீடு வாங்கறத்துக்காக எங்க தொழில் நுட்பத்தின் சிறப்பான தனிப்பட்ட ரகசியம் (unique secret sauce), என்னன்னு முதலீட்டார் களுக்கு டெமோ காட்டிக் காட்டி, ரிச்சர்ட் இதுல பெரிய மன்னனாயிட்டார்! அதான் அதை மட்டும் எடுத்துக் காட்டறதுக்காக இப்படி ஒரு ஸெட்டப்!" என்றார்!
ரிச்சர்டும் முறுவலுடன், "ஆமாம் நாகு, நீங்க என்னையும் கெடுத்து மார்க்கெட்டிங் ஆளா ஆக்கிட்டீங்க!" என்று கூறிவிட்டுத் தொடர்ந் தார். "சரி, கிரண், நீ ராக்கெட்ல எங்க போகணும்?"

கிரண், "முதல்ல விண்வெளியில போய், பூமி எப்படி இருக்குன்னு பாக்கணும். ஸ்பேஸ் ஸ்டேஷன்ல சுத்திப் பாக்கணும். அப்புறம், விண்வெளியில போய் நடக்கணும். அதுக்கப்புறம் சந்திரனுக்குப் போய் நடக்கணும். அப்புறம்..." என்று அடுக்கிக் கொண்டே போகவும், ரிச்சர்ட் பலமாக சிரித்து விட்டுத் தடுத்தார்.

"ஹே! ஹே, ஹே! கிரண், கொஞ்சம் நிறுத்து. அத்தனையும் செய்ய முடியாது! அதுல ஒண்ணு ரெண்டுதான் செய்யலாம். ஓகே, தயாரா?"

கிரண், "அஃப் கோர்ஸ்! எப்பவோ தயார்! நீங்க நடத்துங்க!" என்று வலது கைக் கட்டை விரலை மட்டும் உயர்த்திக் காட்டித் துரிதப் படுத்தத் தூண்டினான்.

ரிச்சர்ட், "நான் இப்ப ஆரம்பிச்சதும் கிரணுக்கு முழு உடல் அனுபவம் இருக்கும். ஆனா நாம திரையில மட்டுந்தான் பாக்கப் போறோம். அது கூட அவன் பார்க்கறா மாதிரி முழுக் கண் பார்வை இருக்காது. அவன் நேராப் பாக்கறதை மட்டும் திரையில பார்ப்போம். அதை கூட 3D-யில பார்க்க ணும்னா இந்த ஸ்பெஷல் கண்ணாடிகளைப் போட்டுக்கணும்" என்று 3D திரைப்படங்களை டிஸ்னி லேண்டில் பார்க்கப் போட்டுக் கொள்ளும் ப்ளாஸ்டிக் கண்ணாடிகளைக் கொடுத்தார்.

சூர்யா, "ஏன் இதை முன்னாடி நாம் பயன் படுத்தின கண்ணுக்குள்ளயே ஒளி பாய்ச்சற கண்ணாடியால பாக்க முடியாதா? அப்ப கிரண் எது பாக்கறானோ அதையெல்லாம் பாக்க முடியும் இல்லையா?!" என்றார்.

ரிச்சர்ட் சிலாகித்தார். "எக்ஸலன்ட் பாயின்ட் சூர்யா. நிச்சயமா அப்படிப் பார்த்தா இன்னும் நல்லாத்தான் இருக்கும், முழுக்கவும் தெரியும். ஆனா, அதைப் போட்டுக் கிட்டா, உங்கத் தனி உலகுக்குப் போயிடுவீங்க. மத்தவங் களைப் பார்க்க முடியாது. இப்ப நாம கிரண் அனுபவிக்கச்சே என்ன நடக்குதுன்னு பார்க்கணும் இல்லையா? மேலும், அது மத்த எல்லா உணர்வுகளோடயும் சேர்ந்து அனுபவிக்க ஏற்படுத்தியது. பார்வையை மட்டும் செலுத்தறத்துக்கு அது அவ்வளவு அவசியமில்லை. இப்ப எல்லாரும் பாருங்க." என்று கம்ப்யூட்டரில் எதையோ தட்டி விட்டார்.

கிரண் அமர்ந்திருந்த கற்பனை ராக்கெட் விண்வெளித் தளத்திலிருந்து பலத்த அதிர்வுடன் கிளம்புவது போல் திரையிலிருந்த விண்வெளிக் கலத்தின் உட்புறத்தில் இருந்த மீட்டர்கள் நிறைந்த பிம்பம் அதிர்ந்தது. புவியீர்ப்புச் சக்தியை (gravitational force) விட பல மடங்கு அதிக பலத்துடன் ராக்கெட் பாயும் உணர்ச்சி ஏற்பட்டதால், கிரண் தன் இருக்கையில் அழுத்தப் பட்டது போல் ஆழ்ந்து கொண்டான்.

ரிச்சர்ட் விவரித்தார். "இப்பப் பாருங்க. அவன் உணர்வுகளுக்கேத்தா மாதிரி வேகம் மாறும்". அவர் கூறியது போல் கிரண் அழுத்தம் மிகவும் அதிகமாகிவிட்டது போல் உணர்ந்ததும் அதிர்வு குறைந்தது.

அவன் கொஞ்சம் அதிகமாக ரிலாக்ஸ் ஆனதும் மீண்டும் அதிகரித்தது! ரிச்சர்ட் விளக்கினார். "பாருங்க, கிரணின் அழுத்த உணர்வுக்கேத்தா மாதிரி கம்ப்யூட்டர் வேகத்தை அதிகமாகவோ குறைவோ செஞ்சு அட்ஜஸ்ட் பண்ணுது!"

சில நொடிகளுக்குள் அந்த அதிர்வு அடங்கி விண்வெளி வீரர்கள் பார்க்கும் தோற்றத்தில் பூமியின் அழகான முப்பரிமாண பிம்பம் தெரிந்தது. மிகப் பெரிய நீல பந்தின் மேல் வெள்ளைக் கோடுகள் அடித்தது போன்ற பூமிப் பந்தைப் பார்த்து யாவரும் மகிழ்ந்தனர். இன்னும் சில நொடிகளுக்குப் பிறகு ஸ்பேஸ் ஷட்டில், பன்னாட்டு விண்வெளி நிலையத் தோடு (International Space Station) இணைவது போல் தோன்றியது.

இருக்கையில் அமர்ந்திருந்த கிரண் நடப்பது போல் கால்களை அசைத்தான். அவன் விண்வெளி நிலையத்துக்குள் நுழைந்ததும், அதன் உட்புறம் திரையின் மேல் விரிந்தது.
ஷாலினி உற்சாகத்தோடு, "பிரமாதம்! மீதியெல்லாம் கம்ப்யூட்டர் ஸிமுலேஷன், தெரிஞ்சுது. ஆனா இது நிஜம் போலிருக்கே?! எப்படி அங்கே போய் படம் எடுத்தீங்க?!" என்று கூவினாள்.

நாகு சிரிப்புடன் விளக்கினார். "ரொம்ப ஆச்சர்யப் பட்டுடாதே ஷாலினி. இது இங்க தரையில நாஸாவின் நிலையத்துல வச்சிருக்கற மாடலுக்குள்ள எடுத்ததுதான்!"
ஷாலின் இன்னும் அடங்காத வியப்புடன், "அப்படியே நிஜம் மாதிரி இருக்கே?!" என்றாள்.
ரிச்சர்ட், "நிஜந்தான். அதே அளவுக்கு அதே மாதிரி கட்டியிருக்கற மாடலை வச்சு எடுத்ததுதான்.

வித்தியாசம் இதெல்லாம் ப்ளாஸ்டிக், அப்புறம் விண்வெளியில மிதக்காம தரையில உட்காந்துகிட்டு இருந்தது அவ்வளவுதான்!" என்று கூறிவிட்டுத் தொடர்ந்தார். "இப்ப உணர்வுகளைக் தூண்டலாம், பாருங்க. கிரண் இருக்கற இடத்துலயே கனமில்லாதபடி (weightlessness) உணர்வான்."

ரிச்சர்ட் மீண்டும் கம்ப்யூட்டர் கீ போர்டில் சில முறை தட்டினார். திரையில், ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்த கிரண் மிதப்பது போல் தெரிந்தது. இருக்கையில் சாய்ந்திருந்த கிரணும். கைகளையும், கால்களையும் தூக்கி திரையில் தெரிவது போலவே மிக மெள்ள நகர்த்தினான். ரிச்சர்ட் அவனுக்குக் கவனம் கலைத்து விடாத படி சூர்யா, ஷாலினியிடம் நெருங்கி மிக மெல்லிய குரலில் வர்ணனை அளித்தார்.

"எடை இல்லாத உணர்வைத் தூண்டறது னால கிரணுடைய மூளை அவனுடைய உடல் மிதக்கறா மாதிரி உணர்ந்து கைகளையும் கால்களையும் அதுக்கேத்தா மாதிரி நகத்துது..."
கிரணின் அசைவுகளினாலும், ரிச்சர்டின் விளக்கத்தினாலும் வியப்பின் உச்சிக்கே சென்று விட்டாள் ஷாலினி!

"ஒ மை காட்! நான் இது வரைக்கும் இந்த மாதிரி பார்த்ததே இல்லை. இது பிரமாதம்னு சொன்னாலே ரொம்ப கம்மியா தோணுது. இதை சொல்ல எனக்கு வார்த்தைகளே தோணலை!" என்றாள்.

ரிச்சர்ட் பெருமையுடன் ஆனால் பணிவுடன் மௌனமாக தலையசைத்து அவள் பாராட்டை ஏற்றுக் கொண்டார்.

நாகு பெருமிதத்துடன், "பார்த்தீங்களா, இதுதான் எங்க மெய் நிகர்த் தொழில் நுட்பச் சாதனையின் சிகரம்! நல்லாப் பாருங்க. நீங்க ரெண்டு பேரும் அனுபவிக்கணுமா?! அதோ இன்னும் சில இருக்கை இருக்கு, வாங்க கிரணோட சேர்ந்துக்கலாம்!"

அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் ஒரு பயங்கர விபரீதம் நடந்து விட்டது. அதைக் கண்ட ஷாலினிக்கு இதயமே அடைத்து விடும் போன்ற அதிர்ச்சி உண்டாகி அவளும் மயங்கி விழுந்து விட்டாள். அந்த இரு அபாயங்களும் எதற்கும் கலங்காத சூர்யாவின் உள்ளத்தையும் கதிகலங்க அடித்து விட்டன.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline