Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நிதி அறிவோம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | இலக்கியம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம்
- கதிரவன் எழில்மன்னன்|அக்டோபர் 2006|
Share:
Click Here Enlargeமுன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்துள்ளார். நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகை சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர்ந்து கொண்டால்தான் முடியும் என்று கூறினர். அதற்குத் தேவையான மெய்நிகர் உடுப்பில் இருந்த முப்பரிமாண பார்வை, ஸ்டீரியோ ஒலி, வாசனை, ஹேப்டிக்ஸ் (haptics) எனும் தொடு உணர்ச்சி சாதனங்களைப் பற்றி விவரித்து விட்டு அதை விட முன்னேறிய நினைவுகளை உணர்வது மட்டு மல்லாமல் தூண்டக் கூடிய சாதனத்தைப் பற்றி விளக்கினர். பிறகு அவர்கள் மெய்நிகர் மாயத்தால் பாரீஸில் இருக்கும் லூவ் மியூஸியத்திற்குள் போய் லியனார்டோ டாவின்சியின் மோனா லிஸா மற்றும் கடைசி விருந்து ஒவியங் களைப் பார்த்து ரசித்தனர். பிறகு, உணர்வுத் தூண்டல் அனுபவத்தைக் காட்ட ரிச்சர்ட் கிரணுக்குக் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பது போல் காட்டி, எடையின்மை (weightlessness) உணர்த் தூண்டி வியப்பளித்தார். ஆனால் அடுத்து நடந்ததோ ஒரு விபரீதம்...

தூகலமாக விண்வெளிக் கலத்தில் மிதப்பது போல் உணர்வுடன் களித்துக் கொண்டிருந்த கிரண் திடீரென ஓவென அலறி, தலைக்குள் உண்டான தீவிர வலி தாளாமல் தன் தலையைப் பிடித்துக் கொண்டு, இப்புறமும் அப்புறமும் பலமாக ஆடிக் கொண்டுத் துடிக்கலானான். கிரணுக்கு மிதக்கும் உணர்வு தூண்டப் பட்டதைக் கண்டு உற்சாகப் பரபரப்பின் எல்லையை அடைந்து விட்ட ஷாலினி, அதன் பின் கணப்பொழுதில் கிரணுக்கு நடந்து விட்ட பயங்கர அசம்பாவிதத்தால் தாள முடியாமல் குலை நடுங்கிப் போனாள். என்னதான் விளையாட்டாக கிரணுடன் செல்லச் சண்டைகள் பல போட்டுக் கொண்டாலும், தன் தம்பி மேல் வைத்திருந்த அமோக அன்பினால், அவனுக்கு ஏற்பட்ட அபாயம் அவளை அளவில்லா அதிர்ச்சிக் குள்ளாக்கியதால் இருந்த இடத்திலேயே படாலென மயங்கி விழுந்து விட்டாள்.

ஒரு புறம், கிரண் அலறிக் கொண்டு உருண்டு துடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அந்தக் காட்சி அளித்த அதிர்ச்சியால் ஷாலினி சுருண்டு விழுந்து கிடக்க, இரு புறமும் இடி வாங்கிய மத்தளமாய் சூர்யாவின் மனம் தவிக்க வேண்டியதாயிற்று. இருவருள் எவரை முதலில் கவனிப்பது என்று இருதலைக் கொள்ளி எறும்பு போல் துடித்தார்.

திடீரென நிகழ்ந்து விட்ட இந்த சம்பவங்களால் சில நொடிகள் சிலை போல் நின்று விட்ட ரிச்சர்ட் உலுக்கி விட்டுக் கொண்டு கிரணுக்கு உண்டான உடனடி ஆபத்தைச் சமாளிக்க ஓடினார். அவர் கிரணைக் கவனித்துக் கொள்வார் என்ற ஆறுதலுடன் சூர்யா ஷாலினி அருகில் சென்று அவளைக் கவனிக்க ஆயத்தமானார். நாகுவோ, இரட்டை அதிர்ச்சியால் நகர முடியாமல் தவித்து விட்டு, பிறகு சுதாரித்துக் கொண்டு இரு இடங்களுக்கும் மாறி மாறி ஓடிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

ரிச்சர்ட் முதற் காரியமாக, கிரணின் தலை மேல் பொருத்தப் பட்டிருந்த மெய்நிகர் சாதனத்தின் பிணைப்புக்களைத் தளர்த்தி அதை பிடுங்கி எடுத்தெறிந்தார். அது விலக்கப் பட்டவுடனேயே கிரணின் துடிப்பு நின்று அவன் மூச்சு சாதாரணமாக ஆரம்பித்தது. ஆனாலும் கண் விழிக்காமல், தலையில் இன்னும் சிறிது வலி இருப்பதாக தலையைப் பிடித்தக் கையை விடாமல் உணர்த்தினான். ரிச்சர்ட் அவன் கை மேலேயே தன் கைகளை வைத்து மென்மையாக அழுத்தி, மெள்ள சிறு வட்டங்களாக நகர்த்தி மஸாஜ் செய்தார்.
அதனால் தலை வலி சீக்கிரமாகக் குறைந்து விட்டதால், கிரண் கண் விழித்துக் கொண்டு எழுந்து அமர முயன்றான்.
Click Here Enlargeஅது பெரிய தவறாகிவிட்டது. தலை மீண்டும் கிர்ரென்று சுற்றி சுரீலென ஒரு கண வலி தோன்றி மறையவே மீண்டும் தொப்பென்று இருக்கையில் விழுந்து கண்ணை மூடிக் கொண்டான். ரிச்சர்ட் அவனுக்கு எச்சரிக்கை விடுத்தார். "அவ்வளவு சீக்கிரம் அவசரமா எழுந்துக்காதே கிரண். கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டு அப்படியே நிதானமா மூச்சு விட்டுக்கிட்டிரு. ஒரு சில நிமிஷத்துலயே சரியாப் போயிடும். நான் சொல்ற வரைக்கும் இப்படியே இரு, அப்புறம் நிதானமா எழுந்துக்க உதவறேன்..." என்றார்.

ரிச்சர்ட் கிரணுக்கு சிசுரூஷை செய்து கொண்டிருக்கையில், சூர்யா ஷாலினி பக்கத்தில் சென்று அமர்ந்து அவள் தலையைத் தன் மடிமேல் மெல்ல எடுத்து வைத்துக் கொண்டு கையிலிருந்த குடிநீர் கோப்பையிலிருந்து சிறிது நீரை எடுத்து அவள் முகத்தின் மேல் தெளித்து அவள் கண்களை மென்மையாக வருடி, விழிக்கச் செய்தார்.

கண் விழித்தவுடனேயே தான் மயங்கி விழுந்ததின் மூல காரணம் மனத்தை வந்துத் தாக்கவே, ஷாலினி பதற்றத்துடன் எழுந்து கிரண் படுத்திருந்த இருக்கைப் பக்கம் நோக்கினாள். அவன் துடித்துக் கொண்டில் லாதது ஓரளவு ஆதரவளித்தாலும், அவன் அசைவில்லாமல் படுத்திருந்தது உடனே ஒரு பெரும் மனக்கலவரத்தையும் ஏற்படுத்தி விட்டது. திடீர் மூச்சுத் திணறலுடன், பேச முடியாமல், சூர்யாவின் முகத்தை ஆதரவைத் தேடும் ஒரு வினாப் பார்வையுடன் பார்த்தாள். சூர்யா பேசாமல், அவளுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் அமைதியான முறுவலுடன் மெள்ளத் தலையாட்டி, அவள் கையை அழுத்திக் கொடுத்தார். அந்த ஸ்பரிசமே ஷாலினியின் அச்சத்தை அகற்றி நம்பிக்கையளித்தது.

ஷாலினியின் கவலையை உணர்ந்து கொண்ட ரிச்சர்டும் நிலைமையை விளக்கினார். "கவலை வேண்டாம் ஷாலினி. கிரணுக்கு இப்போ ஒரு ஆபத்துமில்லை. சும்மா சில நிமிஷம் ஓய்வா இருக்க வச்சிருக்கேன் அவ்வளவுதான்." என்றார்.

கிரணும் கண்ணை விழித்து, வலக்கைக் கட்டை விரலை உயர்த்திக் காட்டி, தன் பங்குக்கு ஷாலினிக்கு ஆதரவளித்தான். "ஐ ஆம் ஒகே ஷால்! ரிச்சர்ட் தான் என்னை வலுக்கட்டாயமாப் படுக்க வச்சிட்டார். இல்லைன்னா இவ்வளவு நேரத்துக்கு உனக்கு நான் உதவி பண்ணிக்கிட்டிருப்பேன்! சே, சே, எனக்கு சின்னதாத் தலை வலிச்சதுக்குப் போய் இப்படி மயங்கி விழுந்து எங்களை யெல்லாம் பயமுறுத்திட்டயே" என்று கேலியாகத் தன் ஆபத்தை உதாசீனமாகத் தள்ளி அவள் கவலையை நீக்கினான்.

ஷாலினி வெட்கத்துடன் முறுவலித்தாள். "நான் ஒண்ணும் பயமுறுத்தலை. நீதான் அங்கயும் இங்கயும் உருண்டுத் துடிச்சு என்னை ஒரேயடியா பயமுறுத்திட்டே. இப்பப் பழைய கிரணாத்தான் இருக்கேங்கறதுதான் எனக்கு நிம்மதி!" என்றாள்.

கிரணும், ஷாலினியும் ஆபத்திலிருந்து மீண்டு விட்டார்கள் என உணர்ந்தவுடனேயே சூர்யாவின் எண்ணம் வேறு புறம் திரும்பியது. சற்றே யோசனையில் ஆழ்ந்து விட்டு தன் எண்ணத்தை வெளிப்படுத்தினார். "ரிச்சர்ட், இந்த மாதிரி ஏற்கனவே பல முறை நடந்திருக்கு போலிருக்கே?!"

நாகுதான் பதிலளித்தார். "எங்க தொழில் நுட்பத்துல பிரச்சனையிருக்குன்னுதான் உன்னை வரவழச்சேன். ஆனா இந்த மாதிரிதான் ஏற்கனவே நடந்திருக்குன்னு எப்படி சொல்றே?!"
ரிச்சர்டும் ஆச்சர்யத்துடன் வினாவினார். "உண்மைதான் சூர்யா. இந்த மாதிரிதான் பலமுறை நடந்திருக்கு. இது முதல் முறையில்லைன்னு எப்படி உங்களுக்குத் தெரிஞ்சுது?"
சூர்யா விளக்கினார். "முதல் முறையா இருந்தா உங்க போக்கே வேற விதமா இருந்திருக்கும். முதல் படியா, கிரணை இந்த டெமோவுக்கு உட்கார வைக்கும்போதே நீங்க தயங்கினதை நான் கவனிச்சேன். ஆனாலும் உங்களைத் திடப் படுத்திக்கிட்டு நடக்கறது நடக்கட்டும்னுதான் செஞ்சமாதிரி தோணிச்சு. அது மட்டுமில்லை. கிரண் தலை வலியால துடிச்சவுடனே, நீங்க கொஞ்சம் கூட திடுக்கிட்டு அதிர்ச்சியடையலை. ரொம்பவே எதிர்பார்த்த ஒரு சம்பவம் நடந்தா மாதிரி மிக அமைதியா ஆனா துரிதமா செயல்பட்டு கிரணுக்கு சிசுரூஷை செஞ்சீங்க. சாதனத்தை விலக்கினதும் அவனுக்கு ஒரு ஆபத்து மில்லைன்னும் தெரிஞ்சே ஒரு கலவரமு மில்லாம செயல்பட்டீங்க. முதல் முறையா இருந்தா அந்த மாதிரி நிச்சயத்தோட நிம்மதியா இருந்திருக்க மாட்டீங்க."

ரிச்சர்ட் தலையாட்டி ஆமோதித்தார். "உங்க யூகம் ரொம்ப சரிதான் சூர்யா. நல்லாக் கணிச்சிட்டீங்க. எங்க உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பம் ஆரம்பத்துல சரியாத்தான் இருந்தது. ஆனா சமீப காலத்துல இந்த மாதிரி பல முறை நடந்திருக்கு. தொழில் நுட்பத்துல ஒரு மாறுதலும் இல்லை. இந்த மாதிரி திடீர்னு ஏன் நடக்கணும்னு புரியலை..."
நாகுவும் சேர்ந்து கொண்டார். "சூர்யா, அதுனால தான் நான் உன்னை வரவழைச்சேன்.
எல்லா சோதனைகளிலயும் நல்லாவே போய்க்கிட்டிருந்த தொழில் நுட்பம், திடீர்னு ஏன் இந்த மாதிரி கெட்டுப் போகணும்? நாங்க எப்படி எப்படியோ, எந்தெந்த நிபுணர் களையோ வச்சு அலசி ஆராய்ஞ்சாச்சு. ஏன் இப்படின்னு விளங்கவே இல்லை. இது சரி செய்யலைன்னா எங்க கதி அதோ கதிதான்." சில நொடிகள் மூச்சு வாங்கிய அவர் குரல் தழுதழுக்கத் தொடர்ந்தார். "ப்ளீஸ், சூர்யா! தயவு செஞ்சு எப்படியாவது இதைக் கண்டு பிடிச்சிடு. உனக்கு நான் வாழ் நாள் முழுக்கக் கடமைப் பட்டிருப்பேன்." என்று கூறி சூர்யாவின் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார்.

சூர்யா தன் கையை மெல்ல விடுவித்துக் கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார். "கவலைப்படாதே நாகு. என்னால ஆன வரை முயற்சிக்கறேன். கண்டு பிடிச்சிடலாம். முதல்ல எப்போ இந்த மாதிரி நடக்க ஆரம்பிச்சு துன்னு கொஞ்சம் சொல்லு." என்றார்.
நாகு விவரித்தார். "நாங்க இந்த ஆராய்ச்சியை ஆரம்பிக்கும் போது உணர்வுத் தூண்டலைப் பத்தி யோசிக்கக் கூட இல்லை. சொல்லப் போனா, நினைவுகளை உணர்ந்து அதன் படி மெய்நிகர்த் தோற்றத்தை மாத்தற மாதிரி எண்ணம் கூட எங்களுக்கு ஆரம்பத்துல இல்லை. இந்தத் தொழில் நுட்பத்தை எங்கக் குழுவில யாரும் நினைச்சுக் கூட பார்க்கலை. அதை எங்களுக்கு அறிமுகம் பண்ணதே செங் ஷாவ் என்கிற ஒரு சைனீஸ் விஞ்ஞானிதான். நாங்க எங்கத் திட்டத்தை பல ஆராய்ச்சியாளர்கள் கிட்ட கலந்துரை யாடி விமர்சிக்க வச்சு அதுல கிடைக்கற யோசனைகளைக் கருவா வச்சு முன்னேற்று கிறோம். அந்த மாதிரி ஒரு விமர்சனத்தின் போது செங் தன்னுடைய கூரிய குவிய (sharp focus) ரேடியோ ஆன்டென்னாத் தொழில் நுட்பத்தைப் பத்தி சொல்லி, அதை எங்க மெய்நிகர் சாதனத்தோட இணைச்சா நினைவுகளை உணர முடியலாம்னு சொன்னார். அப்புறம் என்னாச்சுன்னு மேல சொல்லுங்க ரிச்சர்ட்."

அவர்கள் பேச்சைக் கவனிக்காமல் மெய்நிகர் தலைச் சாதனத்தையும் கம்ப்யூட் டரிலும் எதையோ குடாய்ந்து கொண்டிருந்த ரிச்சர்ட் திடுக்கிட்டு, "என்ன, என்ன சொல்லணும்?" என்றார்.

நாகு பலமாக சிரித்து விட்டு தொடர்ந்தார். "சே, இந்த ரிச்சர்ட் எப்பவும் இப்படித்தான். ரொம்ப முக்கியமான உரையாடல் போது கவனம் வேற எங்கயாவது போயிடும். இப்படி எதையாவது குடாய்ஞ்சுக் கிட்டு கோட்டை விட்டுட வேண்டியது! அப்புறம் அனா, ஆவன்னால இருந்து திருப்பி சொல்லணும்! ரிச்சர்ட், உணர்வுத் தூண்டல் நம்ம தொழில் நுட்பத்துல எப்படி சேர்ந்தது, எப்படி கெட்டுப் போக ஆரம்பிச்சதுன்னு சூர்யாவுக்கு சொல்லிக்கிட்டிருக்கேன். செங் பத்தி சொல்லிட்டேன். அவர் குடுத்த யோசனையை பயன் படுத்தி நினைவு உணர்ச்சியை நம்ம தொழில்நுட்பத்துல சேர்த்ததும் என்ன நடந்ததுன்னு மேல சொல்லுங்க. அந்த விஷயம் என்னை விட உங்களுக்குத்தான் நல்லாத் தெரியும்..."
ரிச்சர்டும் முறுவலுடன் விளக்கினார். "ஓ! ஸாரி, கிரணுக்கு என்ன ஆச்சுன்னு கம்ப்யூட்டர்ல எதாவது டேட்டா பதிவாயிருக் கான்னு சோதிச்சுக்கிட்டிருந்தேன். அதான் கவனிக்கலை. சரி, மேல சொல்றேன். நாங்க முதல்ல நினைவு உணர்ச்சியை சேர்த்த வுடனே ரொம்ப நல்லாத்தான் இருந்தது. எங்க மெய்நிகர் தொழில்நுட்பந்தான் உலகத்துலயே பிரமாதமானதுன்னு எல்லா ஆராய்ச்சியாளர் களும் சொன்னாங்க. ஒரு விபத்தும் நடக்கலை. அப்புறம் மோட்யஷேவ்ங்கற ஒரு ரஷ்ய ஆராய்ச்சியாளருக்குக் காட்டினோம். அவர்தான், ஏன் நினைவுகளை உணர்வ தோட நிறுத்திட்டீங்க. அதைத் தூண்டலா மேன்னு தன் ந்யூரான் தூண்டல் ஆராய்ச்சியை பத்தி எங்களுக்கு விவரமா சொல்லி அதை எப்படிப் பயன் படுத்தலாம்னு சொன்னார். எங்களோட கான்ட்ராக்ட் எடுத்துக்கிட்டு ரெண்டு வருஷமா கடும் பாடு பட்டு அதைப் பயனுக்கும் கொண்டு வந்துட்டார். முதல்ல அதுவும் ரொம்ப நல்லாத்தான் போய்க்கிட்டிருந்தது. ஆனா..."
நாகு இடை மறித்துத் தொடர்ந்தார். "ஆனா, மோட்யஷேவ் திடீர்னு தன் குடும்ப விஷயமா ரஷ்யாவுக்குத் திரும்ப வேண்டியதாப் போச்சு. அங்க திடீர்னு அவர் மாரடைப்பாலக் காலமாகிட்டதாகவும் செய்தி கிடைச்சது. மோட்யஷேவுடைய ஆராய்ச்சிக் குழுவை ரிச்சர்டே தலைமையேற்று நடத்த ஆரம்பிச்சார். அதுக்கப்புறமும் நல்லாவேப் முன்னேறிக்கிட்டிருந்தது. மோட்யஷேவ் செஞ்சதை விட, உணர்வுத் தூண்டல் சரியா, அதை விட கூர்மையா இருக்கும் படியா வந்தது. இதை இன்னும் பல முதலீட்டாருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் காட்டி, அதுக் கடுத்த படிக்கு எடுத்துக்கிட்டு போகலாம்னு ஆவலா தீவிர முயற்சி ஆரம்பிச்சோம். அதுக்குத்தான் ரிச்சர்டும், மோட்யஷேவுடைய குழுவோட சேருந்து அவருடைய மொத்த ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் அலசி ஆராய்ஞ்சிக் கிட்டிருக்கார். ஆனா, சில வாரங்களாத்தான் இந்தத் தகராறு திடீர்னு ஆரம்பிச்சிருக்கு. எந்த கோணத்துல எல்லா சாதனங்களையும் வழிமுறைகளையும் சோதிச்சுப் பாத்துட்டோ ம். ஒண்ணும் மாறியில்லை, ஆனாலும் அப்பப்ப இந்த மாதிரி ஆயிடுது. அதுவும், ரொம்ப முக்கியமான தருணங்களிலதான் இந்த மாதிரி கை விட்டுடுது..."

சூர்யாவின் முகத்தில் பளிச்சென ஒரு ஒளி ஒரு கணம் தோன்றி மறைந்தது. அதைக் கவனித்து விட்ட கிரண், பிறகு அவரை அதைப் பற்றிக் கேட்க வேண்டும் என மனத்துக்குள் குறித்து வைத்துக் கொண்டான்.

சூர்யா வினாவினார். "இந்தப் பிரச்சனை ஆரம்பிச்ச பிறகு, சமீப காலமா இந்தத் தகராறு இல்லாம எந்த முக்கிய டெமோவாவது நடந்திருக்கா?"

நாகு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசித்தார். "ஹ்ம்ம்ம்ம்... ரொம்ப நல்ல கேள்வி. எனக்குத் தெரிஞ்சு நடந்த தில்லைன்னுதான் நினைக்கிறேன். ரிச்சர்ட் உங்களுக்கு அந்த மாதிரி நல்லா நடந்து முடிஞ்ச டெமோ எதாவது ஞாபகம் வருதா?"

ரிச்சர்டும் சில நொடிகள் யோசித்து விட்டு, "எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நானும் நீங்களும் நடத்தின வெளியார் டெமோ எல்லாத்துலயும் இந்த மாதிரி எதாவது ஆயிருக்கு. உள் சோதனையில பிரச்சனை ஆகியும் இருக்கு, ஆகாமலும் இருந்திருக்கு. தகராறு இல்லாம வெளியார் டெமோ நடந்ததான்னு என் குழுவைக் கேட்டுப் பாக்கறேன். அது முக்கியமான விஷயமா சூர்யா? ஏன் கேட்கறீங்க?"

சூர்யா ஒன்றும் விளக்காமல் தலையசைத் தார். "இப்ப அவசரமில்லை. விசாரிச்சு நிதானமா அப்புறம் சொல்லுங்க, பரவா யில்லை." என்றார்.

நாகு குறுக்கிட்டு, "வெயிட், வெயிட்! கொஞ்சம் இருங்க! போன மாசம் ஒரு சின்ன டெமோ நான் ஒரு வாடிக்கையாளருக்குக் காட்டச்சே இந்தத் தகராறு நடக்கலைன்னு நினைக்கிறேன்." என்றார்.

ரிச்சர்ட் குழப்பத்துடன், "போன மாசமா, அந்த மாதிரி எனக்குக் கவனமில்லையே..." என்று இழுத்தார்.

நாகு விளக்கினார். "அதை முக்கியமான டெமோன்னு சொல்ல முடியாது ரிச்சர்ட்... சும்மா ஒரு வாடிக்கையாளரை நம்ம லேபையெல்லாம் சுத்திக் காட்டச்சே உங்க உணர்வுக் குழு லீடர் ஜேம்ஸ் இங்க எதையோ சோதிச்சுக்கிட்டிருந்தார். எதோ அடக்க முடியாத ஆர்வத்துல எங்க பிரமாதமான தொழில் நுட்பம் இதுன்னு உணர்வுத் தூண்டலைப் பத்திப் போட்டு உடைச்சிட்டேன். அவர் உடனே பாத்தா கணும்னு சொன்னார். சரியா இன்னும் வேலை செய்யலைன்னும் சொன்னேன். ஆனாலும் அவர் அது தகராறு பண்ணாலும் பாத்தே தீரணும்னு ஒத்தைக் காலில நின்னு அடம் பிடிச்சதால, ரொம்ப நல்ல வாடிக்கையாளராச்சேன்னு வேண்டா வெறுப்பா பயத்தோட, மேலுக்குக் காட்டுங் கன்னு ஜேம்ஸுக்கு சொன்னேன். அவர் இன்னொரு குழு உறுப்பினரை இங்க உக்கார வச்சு இதே ஸ்பேஸ் ஸ்டேஷன் டெமோ ஒரு சில நொடிகள் மட்டுமே காட்டினார். இப்ப கிரண் செஞ்ச அளவுக்கு இல்லை. அதுவும் தகராறு இல்லாம முடிஞ்சுது. வாடிக்கையாளருக்கும் கன குஷி! அப்பாடான்னு நிம்மதியா பெருமூச்சு விட்டேன்..."

ரிச்சர்ட் சிரித்தார். "சரிதான், நல்ல கதை. இதை நீங்க சொல்லவேயில்லயே?! ஸோ... ஒரு வேளை அடுத்த முக்கிய டெமோவுக்கு சரியா செய்யற தந்திரம் என்னன்னா ஜேம்ஸை சில நொடிகள் மட்டும் காட்ட விட்டுப் பாத்துடலாம்!" என்றார்.

சூர்யா எதோ கவனத்தில் ஆழ்ந்து விட்டிருந்தார். மீண்டும் அவர் கண்களில் பளிச்சென்று எதையோ யூகித்துவிட்ட படி ஒரு ஒளி தோன்றி முறைந்தது. கிரண், ஷாலினி இருவருமே அதைக் கவனித்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து தலை யாட்டிக் கொண்டனர். மற்ற இருவரும் இந்தக் குறுநாடகத்தைக் கவனிக்கவே இல்லை!

சில நொடிகள் நிலவிய மௌனத்தைச் சூர்யாவே கலைத்தார். "சரி, சரி, இப்ப மேல ஆக வேண்டியதைக் கவனிக்கலாம். நான் கடைசியா சரியா டெமோ காண்பிச்ச அந்த ஜேம்ஸ்ங் கறவரை விசாரிக்கணும். வரச் சொல்லுங்க."

ரிச்சர்ட் அருகில் இருந்த தொலைபேசியில் ஜேம்ஸை அழைத்து விட்டு, "வந்துக் கிட்டிருக்கார். அவர்கிட்ட என்ன விவரம் கிடைக்கும்னு நினைக்கறீங்க சூர்யா?"
சூர்யா தலையசைத்தார். "குறிப்பா ஒண்ணுமில்லை. ஆனா சில வாரங்களா தவறிக்கிட்டே வர டெமோ ஒரே ஒரு முறை சரியாப் நடந்ததுன்னு நாகு இப்பதானே சொன்னார். அது உங்களுக்குக் கூட தெரியாத விஷயம் இல்லையா? அதுனால, நாம எல்லாம் அதைப் பத்தி விவரமா ஜேம்ஸ்கிட்டேந்து நேர்ப்படியாக் கேட்டுக் கிட்டா எதாவது தடயம் கிடைக்குமான்னு பாக்கறேன் அவ்வளவுதான்."

ரிச்சர்ட் தலையாட்டி ஆமோதித்தார். "நல்ல யோசனைதான். எனக்குத் தோணாமப் போச்சுப் பாருங்க." என்று அங்கலாய்த்து விட்டு, அறைக்குள் புதிதாக நுழைந்த நபரைப் பார்த்து உற்சாகமாகக் கூவினார். "ஓ! இதோ ஜேம்ஸ் கூட வந்துட்டாரே! பேசலாம். வாங்க ஜேம்ஸ்! நீங்கதான் இப்ப எங்க ஹீரோ! ஒரு வேளை இந்தத் தொழில்நுட்பத்தை அபாயத்திலிருந்து மீட்கக் கூடியவரும் நீங்களாகவே இருக்கலாம்!" என்றார்.

ஜேம்ஸ் ஒன்றும் புரியாமல் விழித்தார். நாகு சிரித்து விட்டு, "என்ன ஜேம்ஸ் ஒண்ணும் தலைகால் விளங்கலையா? கவலைப் படாதீங்க, புரியும் படியா சொல்றோம். இந்த உணர்வுத் தூண்டல் தொழில்நுட்பத்தைக் கடைசியா வெற்றிகரமா டெமோ குடுத்தது நீங்கதான். அதைத்தான் ரிச்சர்ட் குறிப் பிடறார். அதுல ஏற்பட்டிருக்கற பிரச்சனை யைப் பத்தி விசாரிச்சு தீர்த்து வைக்கத்தான் என் நண்பர் சூர்யா அவரோட உதவியாளர்களான
ஷாலினி, கிரண் ரெண்டு பேரோடயும் வந்திருக்கார். அவர் ஒரு தொழில்நுட்பத் துப்பறிவாளர். அவங்க கேட்கறத்துக்கெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச அளவுக்கு எல்லாத் தையும் விவரமா பதில் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்." என்றார்.

ஜேம்ஸின் முகத்தில் அவர் உள்ளத்தில் தோன்றிய அவநம்பிக்கை பிரதிபலித்தது. எவ்வளவோ பெரிய விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி நிபுணர்களும் கண்டுபிடித்து தீர்க்க முடியாத பிரச்சனையை இவர்கள் எப்படித் தீர்த்துவிடப் போகிறார்கள் என்றுதான் எண்ணிக் கொண்டார்.

ஆனால் சூர்யா அடுத்து வீசிய வேட்டு அவர் எண்ணத்தை அவசரமாக மாற்றிக் கொள்ள வைத்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline