Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
FETNA அமைப்பாளர்கள் பேசுகின்றனர்
நல்லதும் பொல்லாததும்
- மதுரபாரதி|ஜூன் 2006|
Share:
Click Here Enlarge'மற்றவர்கள் உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வாறு நீ மற்றவர்களை நடத்து' என்று விவிலியம் (மத்தேயு 7:12) சொல்கிறது. ஆனால் கிட்டத்தட்ட அதேபோலத் திருவள்ளுவர் வணிகர்களுக்குச் சொன்னார் என்பது ஆச்சரியமான விஷயம்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்
(12:10)
[மற்றவர் பொருளையும் தம்பொருளேபோல் நினைத்து வாணிகம் செய்ய வேண்டும்.]

மற்றவர் பொருளைத் தன் பொருள் போல் நினைத்துக் கொள்பவர்கள் பலர் இருக்கிறார்கள் -- 'உன் பணம் என் பணம், என் பணம் என் பணம்' என்றாற் போல. வள்ளுவர் சொன்னது அப்படி அல்ல. முற்காலத்தில் பண்டமாற்று முறை (barter system) இருந்தது. 'அடுத்தவனிடமிருந்து நூறு ரூபாய்ப் பொருளை வாங்கிக்கொண்டு நீ எண்பது ரூபாய்ப் பொருளைக் கொடுக்காதே' என்று சொல்ல வருகிறார் வள்ளுவர்.

வாணிகம் என்பது மிகப் பழமையான சொல். வாணிஜ்யம் என்று அது வட மொழியில் புழங்குகிறது. அதிலிருந்து வந்த சொல் பனியா என்பது, வணிகன் என்று பொருள்படும். குஜராத்தி பனியாக்கள் பொதுவாகவே குறளுக்கு நேர்மாறாய்ச் செய்பவர்கள். அவர்களிடம் பணம் போனால் திரும்பி வராது என்பார்கள். கருமித்தனமும் மிகப் பிரபலம்.

திலீப் குமார் (பார்க்க: 'எழுத்தாளர்' பகுதி) குஜராத்தி. பனியாவா என்று தெரிய வில்லை. கல்வி அதிகம் இல்லாதவர். தமிழைக் கற்று அதை அடக்கமான நகைச்சுவையோடு கையாளும் வித்தகர். இந்த இதழில் வெளியாகியுள்ள 'கடிதம்' அதற்குச் சான்று.

சிண்டிகேட் வங்கியில் அந்நியச் செலாவணி மேலாளராக நான் பணிபுரிந்த காலத்தில் திலீப் குமாரைச் சந்திக்க நேர்ந்தது. எழுத்தாளராக அல்ல, ஏற்றுமதியாளராக. மற்ற புத்தகக் கடைகளில் கிடைக்காத அரிய நூல்களை இவரிடம் வாங்கலாம். இவருக்கென்றே பல வாடிக்கை யாளர்கள் இருந்தனர். இவருடைய விலைப் பட்டியலைப் பார்க்க எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும்.

சாதாரணமாக ஏற்றுமதியாளர்கள் வெளி நாட்டு இந்தியர்களுக்குப் பணம் மரத்தில் காய்க்கிறதாகத்தான் நினைப்பார்கள். (குடும்பத்தினரும் அப்படி நினைப்பதாகப் பலர் என்னிடம் சொன்னதுண்டு.) எனவே பத்து ரூபாய்ப் பொருளை மிகச் சாதாரணமாகப் பத்து டாலர் விலை போட்டு அனுப்புவார்கள்.

திலீப் குமார் அப்படியல்ல. சரியாக வெளிநாணயத்துக்கு மாற்றி, அதன்பேரில் நியாயமான லாபம் வைத்துத்தான் அனுப்புவார். அவர் குஜராத்தி என்பதை நம்புவதே எனக்குச் சிரமமாய் இருக்கும். கொஞ்சம் அதிக விலை போடலாமே என்று குயுக்தி சொல்லிக் கொடுத்தால் "அதெல்லாம் தப்புங்க. ஒரு நியாயம் வேணாம்?" என்பார். பேச்சில் கொஞ்சம் கோயம்புத்தூர் வாசம் இருக்கும்.

அடர்ந்த முடி, நீண்ட நாசி, தெளிவான கண்கள், மென்மையான குரல். எழுத்தில் தெரியும் நக்கல் பேச்சில் கிடையாது. 'பிறவும் தமபோல் செயின்' என்பதை வணிகர் திலீப் குமாரைப் பார்த்துப் புரிந்துகொண்டேன்.

கலிபோர்னியா தமிழ் அகடமியின் ஆண்டுவிழா ஜாம்ஜாம் என்று நடந்த அறிக்கை இந்த இதழில் வெளியாகி உள்ளது. அதன் தலைவர் செல்வி அவர்கள் மாணவர்கள்மேல் கொண்ட அக்கறையை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது உண்டு. கலி·போர்னி யாவில் மட்டுமல்ல, சிங்கம்புணரியிலும். (எல்லா நீரும் வந்து சேரும் இடம் என்பதால் கடலுக்கு 'புணரி' என்று பெயர். முந்நீர் என்றும் சொல்வார்கள்.)

ஆமாம், சிங்கம்புணரி அவரது சொந்த ஊர். அங்கே அவர்கள் குடும்பத்தினர் ஓர் உயர்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் அந்தப் பள்ளியின் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு மேலே என்ன செய்யலாம் என்று அறிவுரை வழங்க இரண்டு நாள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் எனது பங்கும் இருந்தது. தன் பள்ளி மாணாக்கர்கள் மட்டுமே என்று நினைக் காமல் அந்தப் பகுதியில் இருந்த மற்றப் பள்ளிகளுக்கும் சொல்லியனுப்பி வரவழைத் திருந்தார். மிகச் சிறப்பான ஏற்பாடுகள், நல்ல பங்கேற்பு, அன்பான கவனிப்பு.

செல்வி ராஜமாணிக்கத்துக்குக் கலி·போர்னியா தமிழ் அகடமி சிங்கம்புணரிச் சேவையின் தொடர்ச்சியே. அவர் அதையும் கருத்தாகச் செய்யாவிட்டால்தான் வியப்பு.

நான் சிறுவயதாக இருக்கும்போது சிவன் கோவில்களில் தீபாராதனைக்கு முன் நிச்சயம் ஓதுவாமூர்த்தி தேவாரம் பாடுவார். ரொம்ப மனதை ஈர்க்கும். தமிழா, பண்ணா, பக்தியா என்று பிரித்து இனம்காண முடியாது. அவர்களே 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி'த்தான் பாடுவார்கள். கற்பூரம் காட்டும்போது மனம் தேவாரப் போதையிலேயே இருக்கும். தஞ்சைப் பெரிய கோவில் கல்வெட்டுகளில் பார்த்தால் மன்னன் தேவாரம் ஓதுதலுக்குத் தனி மானியம் அளித்து எழுதிவைத்திருப்பான். ஆனால் இப்போது ஓதுவாமூர்த்திகளை எங்கும் காணவே முடிவதில்லை.
Click Here Enlargeநான் அண்மையில் வாங்கிய புத்தகம் 'தேவாரத் திருப்பதிகங்கள்'. கங்கை புத்தக நிலையத்துக்காகப் பேரா. அ.ச. ஞான சம்பந்தன் பதிப்பாசிரியராக இருந்து செய்தது. நேர்த்தியான பதிப்பு. அழகான கட்டுமானம். சிறப்பான முன்னுரை. அதில் பேராசிரியர் சொல்கிறார், "மாபெரும் புரட்சிகளைச் செய்த திருஞானசம்பந்தரிடம் கூட அக்காலச் சைவப் பெருமக்கள் எத்தகைய புதுமையையும் காணவில்லை. திருநீலகண்ட யாழ்ப்பாணரை, பிள்ளையார் (சம்பந்தர்) உடன்வைத்துக் கொண்டதிலும் இந்தச் சைவப் பெருமக்கள் எந்தப் புதுமையையும் காணவில்லை. 1940களில் பகுத்தறிவு இயக்கம் வலுப்பட ஆரம்பித்த பொழுது அவர்களது வினாக்களுக்கு விடையிறுக்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. நாயன்மார்களுடைய வரலாறுகளும் அவர்கள் பாடிய பாடல்களும் ஆராய்ச்சிக்கோ வினாவிற்கோ அப்பாற்பட்டவை என இப்பெருமக்கள் கருதிவந்தனர்; கூறி வந்தனர். இதன் பயனாக 1940களில் மிகப் பெரும்பான்மையான சைவ இளைஞர்கள் கூடப் பெரியபுராணம், தேவாரம் என்பவற்றில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் இருந்தனர். அம்மட்டோடு இல்லாமல் பகுத்தறிவு வாதிகளின் தாக்கத்தால் மேலும் குழம்பினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்விளைஞர்கள் தேவார, திருவாசகங்களைக் கற்காமல் இருந்ததில் வியப்பு இல்லை; இவற்றைக் கற்பது தவறு என்று கூறிய பகுத்தறிவு வாதிகளில் ஒருவர்கூட, தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், கம்ப ராமாயணம் ஆகிவற்றில் ஒரு பாடலைக் கூடப் படிக்கவில்லை; படிக்காமலேயே இதனைப் படிப்பது தவறு என்று ஒருவர் கூறினார். படிக்காமலேயே அந்த இளைஞர் களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்."

'நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்ற வீரம் கொண்டவர் அ.ச.ஞா. எல்லோருக்கும் பிடிக்க வேண்டும், கைதட்டல் வாங்கவேண்டும் என்பதற்காக 'politically correct' விஷயங்களையே பேசவும் எழுதவும் செய்கிறவரல்லர்.

இந்த நூலுக்குப் பதிப்பாசிரியராக ஞானசம்பந்தன் அவர்கள் பணியேற்ற போதே அவர் கண்பார்வையை இழந்து விட்டார். நமக்கு கண்ணிழந்தபின் காவியம் எழுதிய மில்டனைத் தெரியும், காது கேட்காமல் இசைவடித்த பீதோவனைத் தெரியும். நம் நாட்டு அறிஞர்களை அறியமாட்டோம். பிறரை வாசிக்கச் சொல்லியே திருத்தியமைத்தார் என்று நூலைப் பார்த்து உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அத்தனை செம்மையான பதிப்பு.

தாம் பேசுவதைப் பற்றி அறியாமலேதான் எல்லா நாத்திகர்களும் பேசுகிறார்கள் என்று இன்றைக்கு நான் சொல்லமாட்டேன். கால்நூற்றாண்டுக் காலத்துக்கு முன்னரே கலி·போர்னியாவில் தமிழ்ச் சங்கத்தை அமைத்தவர்களில் ஒருவர் தமிழன். பழுத்த நாத்திகர். தவறாமல் நான் நடத்திய 'கம்பனைக் காண்போம்' வகுப்புகளுக்கு வருவார். சிரத்தையோடு குறிப்புகள் எடுத்துக் கொள்வார். கேள்வி கேட்பார். அதில் அறியும் ஆர்வம் இருக்குமே தவிர மற்றவரை மடக்கிப் பணியவைக்கும் சூழ்ச்சி இருக்காது. மென்மையாகப் பேசுவார். 'ஏதாவது நூல் எழுதப் போகிறீர்களா?' என்று கேட்டார். நானும் ஜம்பமாக 'ஆமாம்' என்று சொன்னேனே தவிர 'நான் எழுதும் நூலை யார் பதிப்பார்கள்?' என்று பதில் கேள்வி கேட்கவில்லை. அதையும் பதிக்க ஆள்கிடைத்தது வேறு விஷயம்.

நமது நம்பிக்கைகள் நமக்கு முக்கியம். மற்றவருக்கு மாறுபட்ட நம்பிக்கையைக் கொள்வதற்கு இருக்கும் உரிமையை மதிப்பது அதைவிட முக்கியம். "எல்லா வற்றிற்கும் இரண்டு பக்கங்கள் உண்டு; ஒன்று என் பக்கம்; இன்னொன்று தவறான பக்கம்" என்று சொல்வாரும் உளர். அதனாலென்ன, மனிதர்கள் எப்போதுமே சுவையானவர்கள்தாம்.

மதுரபாரதி
More

அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை
FETNA அமைப்பாளர்கள் பேசுகின்றனர்
Share: 
© Copyright 2020 Tamilonline