Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
இந்தியாவில் ''பொடா'' அமெரிக்காவில் ''பேட்ரியட்''
- மணி மு.மணிவண்ணன்|ஜூலை 2003|
Share:
சென்ற ஆண்டு ஜூலை நான்காம் நாள், தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டிலிருந்து இந்தியா திரும்பிய திரு. வை. கோபால்சாமி அவர்கள் இந்தியாவின் தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் (POTA) படி கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகப்போகிறது. தீவிரவாதத் தடுப்பு என்ற பெயரில் பேச்சு, சிந்தனைச் சுதந்திரங்களையும், அரசியல் உரிமைகளையும் மக்களிடமிருந்து மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்தும் பறித்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோலாட்சியில் இருந்த அடக்குமுறைச் சட்டங்களுக்கு இணையான இந்தச் சட்டம், விடுதலைப் போராட்ட வீரர்கள் தியாகத்தால் வென்ற உரிமைகளை இந்தத் தலைமுறையிடமிருந்து பறித்துக் கொண்டுவிட்டது. தீவிரவாதம், நக்சலைட், சந்தனக் கடத்தல் கொள்ளைக்கூட்டம் என்ற பூச்சாண்டிகளைக் காட்டிக் கொடுங்கோலாட்சிக்குத் தலைவணங்காத இளைஞர்களைச் சுட்டுக் கொல்வது அரசுகளுக்கு விளையாட்டாகி வருகிறது. ''சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும் சிறிய கதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!'' என்று பாரதிதாசன் 'புட்சிக்கவி'யில் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் பொடா சட்டத்தை அடக்குமுறைச் சாதனமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அமெரிக்காவில் பேட்ரியட் சட்டம் அதே வேலையைச் செய்கிறது. மனித உரிமைகளைப் பற்றி மற்றவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்த அமெரிக்கா, மற்ற நாடுகளைப் போலவே அடக்குமுறைச் சட்டங்களையும் அவிழ்த்து விட்டிருக்கிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற முகமூடியுடன் தற்போதைக்குக் குடிபுகுந்தவர்களை (immigrants) மட்டும் இம்மென்றால் வனவாசம், ஏன் என்றால் சிறைவாசம் என்று சிறையில் அடைத்திருக்கிறது. இவர்களுக்கு அடிப்படை உ¡மைகள் ஏதும் இல்லை. இவர்களை வெறும் சந்தேகத்தின் பேரில் மட்டும் ஆண்டுக் கணக்கில் சிறையில் அடைக்கலாம். சில ''சந்தேகத்துக்கு உரிய நாடுகளில்'' இருந்து வந்தவர்களைக் கட்டாயப் பதிவு செய்ய வற்புறுதூதுவது மட்டுமல்லாமல், அற்பமான காரணங்களுக்காக அவர்களில் சிலரைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்கக் குடிமக்களும் இந்த அடக்குமுறைக்கு முற்றிலும் விலக்கல்ல. ஓரெகன் மாநிலத்தில் ஹில்பஸ்பரோ நகர இண்டெல் பொறியாளர் மைக் ஹவாஷ் அமெரிக்கக் குடிமகன் தான். அரபு அமெரிக்க மரபைச் சார்ந்த இவரைப் பேட்ரியட் சட்டத்தின் கீழ் ஏன் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்பதை அரசு சொல்ல மறுக்கிறது.

பேட்ரியட் சட்டத்தின் கீழ் அமெரிக்கக் குடிமக்களை வேவு பார்க்க அரசுக்கு இருக்கும் அதிகாரம் போதாது. மேலும் கூட்ட வேண்டும் என்று புஷ் அரசு அமெரிக்கக் காங்கிரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. ஜார்ஜ் ஆர்வெல்லின் ''1984'' இவர்களுக்கு முன்மாதிரி. பின் லாடன், சத்தாம் உசைன், வட கொரியா, ஈரான், சிரியா என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே அமெரிக்காவின் அடிப்படைச் சுதந்திரங்களைப் பறிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் நாடெங்கும் இந்த அடக்குமுறைச் சட்டத்துக்கு எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. அண்மையில் பாலோ ஆல்டோ நகர நூலகங்களும், காவல்துறைத் தலைவரும், நகர மன்றமும் சான்·பிரான்சிஸ்கோ, மரின் மாவட்டங்களைப் போல் பேட்ரியட் சட்டத்தை எதிர்த்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேபோல் இந்தியாவிலும் மனித உரிமை இயக்கங்கள் பொடா சட்டத்தை எதிர்த்துப் போராடி வருகின்றன. ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர் முன் எலியாக முயலாகப் பதுங்கி வாழாமல் உரிமைக் குரல் கொடுக்கும் இவர்கள் முயற்சியால் மானுடம் வெல்லட்டும்.

*****


இந்தியாவின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைச் சென்னை எட்டியிருக்கிறது! இந்தியாவின் மோசமான நகரம் என்ற விருதும் தமிழ்நாட்டுக்குத்தான். வேலூர் மாநகருக்குத் தான் இந்தக் கெட்ட பெயர். சி.எம்.சி. மருத்துவமனையும், வெங்கடேஸ்வரா உயர்நிலைப் பற்றியும், ஊரீஸ் கல்லூரியும், அந்த அதி அற்புதமான வேலூரி கத்திரிக்காயும் கூட வேலூரைக் காப்பாற்ற முடியவில்லை. ஹ¥ம்! இந்தியாவின் மட்டமான வேலூருக்குத் துணையாக இருப்பவை திருச்சியும், மதுரையும். ஆனால், கல்விக்குச் சிறந்த நகர் என்ற முதலிடம் கோவை மாநகருக்கு. ஏஏஏனுங்(க), மஆஆஆரியா தைக்கும் நல்ல இடமுங்(க).

*****
ஹாரி பார்ட்டர் வரிசையில் ஐந்தாவது புத்தகத்தை அமெரிக்கப் புத்தகக் கடைக்காரர்கள் கெட்டி மேளத்துடன் வரவேற்கிறார்கள். குழந்தைகளுக்கென்றே எழுதப்பட்ட இந்த நூலின் பதிப்பாளர்கள் எட்டரை மில்லியன் பிரதிகளும் விற்றுவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள். சென்ற ஆண்டு அமெரிக்கப் புத்தகங்கள் விற்பனை இருபத்து ஏழு பில்லியன் டாலர்கள். கடந்த பத்தாண்டுகளில் விற்பனை பத்து பில்லியன் டாலர்கள் கூடியுள்ளது. ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியைப் புத்தகங்கள் விற்பனையிலிருந்து ஒரளவுக்கு மதிப்பிட முடியும். தமிழில் ஒரு பதிப்புக்கு வெறும் 1200 பிரதிகள் தாம் அச்சடிக்கிறார்கள். பாதிக்கு மேல் யாரையாவது பிடித்து அரசு நூலகங்களுக்கு விற்று விடுவார்கள். ஆசிரியர் தம் நண்பர், உற்றார், உறவினருக்கெல்லாம் கொடுக்கச் சில நூறு பிரதிகளை எடுத்துக் கொள்வார். நூல்கள் விற்றுப் போக ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாமாம்.

*****


தமிழில் எழுதிப் பிழைக்க வேண்டுமென்றால் அரசியல் அல்லது திரைப்படப் புகழ் இருக்க வேண்டும். அதிபர் அப்துல் கலாம், கலைஞர் கருணாநிதி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் எழுதிய நூல்கள் வெகுவிரைவில் விற்றுப் போய்விடுவதால், ஓராண்டிலேயே பல பதிப்புகள் வெளியிட வேண்டியிருக்கிறதாம். அண்மைக்காலத்தில் புத்தகக் கண்காட்சிகளிலும் கூட்டம் கூடியிருப்பதாகத் தெரிகிறது. தன்மேம்பாட்டு மொழிபெயர்ப்பு நூல்களும், இணையம், கணினி தொடர்பான தமிழ் நூல்களும் நல்ல விற்பனையாகின்றன என்கிறார் கண்ணதாசன் பதிப்பகத்தின் காந்தி கண்ணதாசன். அதிபல் அப்துல் கலாமின் ஆங்கில நூலைத் தமிழில் ''அக்கினிச் சிறகுகள்'' என்ற பெயரில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்ட வேண்டும். 21 மறுமதிப்புகளுக்குப் பின்னும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறதாம் இந்த நூல். இவை எல்லாவற்றையும் விட நம்பிக்கை தரும் செய்தி - கம்பராமாயணம் வர்த்தமானன் பதிப்பு முழுவதும் விற்று விட்டதாம். ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் இருக்க வேண்டிய, தலைசிறந்த உலக இலக்கியங்கள் வரிசையில் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் சொல்லும் கம்பராமாயணத்தைத் தமிழர்கள் மீண்டும் கண்டுபிடித்திருக்கிறார்களோ!

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline