Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சிறுகதை
குளிர்காலம்
காபூலிவாலா
- |ஆகஸ்டு 2004|
Share:
ஐம்பத்தெட்டாம் தெருவில் இறங்கினோம். அந்தப் பன்மாடிக் கட்டிடத்தின் வெது வெதுப்பிலிருந்து வெளியே இறங்கினதும் சில்லென்ற காற்று தாக்கியது. சரசரவென்று சிறுமழை வேறு. எப்போதுமே இந்த ஒருவழித் தெருவில் வாகனப்போக்கு அதிகம். போதாக்குறைக்கு எதிரேயிருக்கும் பழைய குஸ்தி சண்டை அரங்கைப் புதுப்பிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. தெருவில் ஒரு பாதியே தோண்டப்பட்டிருந்தது. தெருக்கோடியிலிருந்த கொலம்பஸ் சர்க்கிள் சுரங்க ரயில் நிலையத்தின் நுழைவாயில் கூட அடைக்கப்பட்டு வேறு பக்கமாகத் திருப்பிவிடப்பட்டிருந்தது.

கார்களும், பஸ்சுகளும், பெரிய பெரிய ட்ரக்குகளும் வேகமாகப் போய்க் கொண்டிருந்தன. போக்குவரத்தைச் சீர் செய்யும் விளக்கின் சிவப்புக்காக மட்ம் நின்று, நகர்ந்து, ஊர்ந்து, விரைந்தன. இரவு ஒன்பது மணிக்கு மேலாகி விட்டது. இப்போது டாக்சி கிடைக்குமா என்று கவலையாக இருந்தது. கிடைத்தாலும், வாய்க்கு வந்தபடி கூலி கேட்பானோ என்னவோ! சாதாரணமாகவே இங்கிருந்து ·பளஷிங்கிற்கு 22 அல்லது 23 டாலர்கள் ஆகும். இது அதிகம் தான். அதுவும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் சாமான்யச் சுற்றுலாப் பயணிக்கு இது மிகவும் அதிகம்.

என் மனைவிக்கும் கால்களில் வாதநோய். நடப்பது சிரமம். சுரங்க ரயிலில் போனால் இரண்டு இடங்களில் வண்டி மாற வேண்டும். நிலையத்துக்குள்ளேயே பிளாட்·பாரம் மாற நிறையப் படிகள் ஏறி இறங்கி வெகுதூரம் நடக்க வேண்டும். இன்னும் பனிமழை பெய்ய ஆரம்பித்திருக்கா விட்டாலும் கனத்த குளிராயிருந்தது. என் மனைவி கால்களில் கனமான பாத அணிகள், கம்பிள் காலுறைகள் எல்லாம் அணிந்திருந்தாலும், புடவையின் கீழிருந்து உள்ளே சில்லென்ற காற்று தாக்குவதாக புலம்பிக் கொண்டிருந்தாள். அதைப் பார்க்கையில் 25 டாலர்கள் பெரிதாகத் தெரியவில்லை.

போதாக்குறைக்கு எங்கள் கையில் ஒரு பெட்டி மனத்தில் பாரம்.

நானும் என் மனைவியும், மகளும் வீதியோரத்தில் கவலையுடனும், பொறுமையுடனும் டாக்சிக்காகக் கையை நீட்டி நின்றோம். சில காலி டாக்சிகள் கூட நிற்காமல் போயின. எங்கள் கவலை அதிகரித்தது. பொறுமை குறைய ஆரம்பித்தது.

அப்போது ஒரு டாக்சி எங்களருகே வந்து வேகம் குறைந்து தயங்கியது. அதன் ஓட்டுநர் உள்ளிருந்து எங்களைப் பார்த்து "சற்று முன்னால் வாருங்கள். அங்கே நிறுத்துகிறேன். இங்கே பார்க்கிங் இல்லை! " என்று கத்தினார். அவர் பேசியது ஹிந்தியில் என்பது எனக்கு உறைக்கவே சில விநாடிகள் ஆயின.

நாங்கள் அவசரமாக நடைபாதையில் சில அடிகள் முன்னோக்கி நடந்தோம். அவர் சொன்னது போலவே வேறு வண்டிகளுக்க இடையே நுழைந்து, மெதுவாக, பாதையின் வலது ஓரத்தில் டாக்சியை நிறுத்தினார். எங்கள் கையில் பெட்டியைப் பார்த்த, டிக்கியைத் திறக்கும் பொத்தானை அழுத்திவிட்டு, "பெட்டியை டிக்கியில் வைத்துவிட்டுச் சீக்கிரம் ஏறுங்கள். போக்குவரத்து தடைப்படுகிறது" என்றார். இதையும் ஹிந்தியில் தான் சொன்னார்.

பெட்டியை டிக்கியில் வைத்து மூடிவிட்டு நாங்கள் விரைவாக வண்டிக்குள் ஏறி அமர்ந்தோம். மழையிலிருந்தும், குளிரிலிருந்தும் பாதுகாப்பான வெதுவெதுப்பை உடனே உணர்ந்தோம். "எங்களுகூகு ·பளஷிங் போக வேண்டும்" என்றேன். அவர் மீட்டரை இயக்கிவிட்டு வண்டியை நகர்த்தியவாறே, "·பளஷிங்கில் எங்கே?" என்றார். நான், "இந்து டெம்பிள் அருகே போகவேண்டும். உங்களுக்கு அந்த இடம் தெரியுமா?" என்று கேட்டே. அவர், "தெரியாது ஐயா. ஆனால் நீங்கள் முகவரி சொன்னால் கொண்டு போய் விட்டுவிடுகிறேன்" என்றார்.

"கிஸ்ஸேனா பொலிவார்ட் வழியாகப் போய் ஹாலி அவென்யூவில் இடது பக்கம் திரும்ப வேண்டும். அதன் பிறகு நான் வழி காட்டுகிறேன்" என்று சொன்னேன்.

நான் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர் ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார். நான் ஆர்வத்துடன் அவரிடம் "நீங்கள் இந்தியரா?" என்று கேட்டேன். அவர் "இல்லை. நான் பாகிஸ்தானி!" என்றார்.

சட்டென்று ஒரு மெளனம் நிலவியது. பீதி கலந்த சங்கடமான அமைதி. இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட செப்டம்பர் 11-ஆம் தேதிக்குப் பின்னர் இரண்டு மாதங்கள் தான் ஆகியிருந்தன. எல்லா இடங்களிலும் சந்தேகமான விசாரிப்புகள். அவரும் எங்களைப் பார்த்து பயப்படுவாரோ என நினைத்துக் கொண்டேன்.

அவர் சகஜமாக "நீங்கள் இந்தியர்கள் அல்லவா?" இந்தியாவில் எங்கிருந்து வருகிறீர்கள். ஹைதராபாதா?" என்றார்.

நான் மெல்லிய குரலில் "இங்லலை. பெங்களூர்" என்றேன்.

அவர் "ஓ பெங்களூரா? மிகவும் அழகான நகரமென்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்றார்.

எனக்கு மேற்கொண்டு எதுவும் பேசத் தயக்கமாக இருந்தது. ஆனாலும், அவரது சகஜநிலை கண்டும், அமைதி பயத்தைக் கொடுத்தாலும் மெதுவாய்ப் பேச்சுக் கொடுத்தேன்.

எவ்வளவு காலமாக அவர் அமெரிக்காவில் இருக்கிறாரென்று விசாரித்தேன். 1969ம் ஆண்டில் வந்தாராம். அங்கே சந்தோஷமாக இருக்கிறாரா என்று கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, "சந்தோஷம் என்பது என்ன? பணம்தான் மகிழ்ச்சி என்றால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய தேசத்தில் இருந்திருந்தால் நான் இத்தனை சம்பாதித்திருக்க முடியாது" என்றார்.

அவர் மேலும் சொன்னார்: "நான் இங்கே சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் தான் என் மனைவி என்னை மதிக்கத் தொடங்கினாள். அவளும் இங்கே என்னுடன் சில வருடங்கள் இருந்தாள். எங்கள் மகள் வயதுக்கு வந்ததும், உண்மையான முஸ்லீம்களுக்கு இந்த ஊர் உகந்ததல்லவென்று மகளையும் என் மூத்த மகனையும் அழைத்துக் கொண்டு திரும்பிப் போய்விட்டாள். நான் தவறாமல் டாலர் அனுப்புகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறைய டாலர்களுடனும், தங்கத்துடனும் நானும் போயிருந்தேன். என்னுடைய தம்பிக்கு வீடு கட்டிக் கொடுத்தேன். என் உறவினர்களுக்கெல்லாம் ஏதேதோ பரிசுகள் கொண்டு போய்க் கொடுத்தேன். இதனால் எங்கள் உறவினர்களின் பார்வையில் என் மனைவி பெரிய கெளரவமான மனுஷியாகிவிட்டாள். இது அவளுக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுத்துவிட்டது. நிறைய நிலபுலன்குளம் வாங்கிப் போட்டேன். என் மூத்த மகன் நிலங்களையும்,. என் மனைவி, மகளையும் கவனித்துக் கொள்கிறான். இளைய மகன் இங்கே என்னுடன் இருக்கிறான். படி என்று சொன்னேன். ஆனால் கேட்காமல் அவனும் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறான்.

என் மனைவி அவளுடைய சரளமான ஹிந்தியில் பேசத் தொடங்கினாள். முதலில் இருந்த தயக்கம் போய்விட்டிருந்தது. "சகோதரரே! நீங்கள் ரொம்ப நல்லவரென்று தெரிகிறது. உங்களுக்கு மிகவும் பெரிய மனது. அதனால் தான் தம்பிக்கும் சொந்தக்காரர்களுக்கும் இப்படி எல்லா உதவிகளும் செய்கிறீர்கள். உங்கள் மனைவி இப்போது சந்தோஷமாக இருப்பது இயற்கையே" என்றாள்.

அவர் முகம் பூரிக்க, "ஆமாம் சகோதரி. இல்லாவிட்டால் சம்பாதித்து என்ன பிரயோஜனம்..... அல்லாவின் கருணையால் எனக்குப் பணம் கிடைக்கிறது. அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதே முறை என்று எனக்குப் படுகிறது!"

நாங்கள் அப்போது தான் ஓர் எதிர்பாராத அதிர்ச்சியின் தாக்குதலுக்கு ஆட்பட்டிருந்ததனால் என் மனைவியால் கட்டுப்படுத்த முடியாமல் வார்த்தைகள் கொட்ட ஆரம்பித்தன.

"உங்களுக்குத் தெரியுமா சகோதரரே? எவ்வளவோ பணமும் சொத்தும் தன்னிடம் இருந்தும் கூட, நம்மை வெளியில் விரட்டுகிற சகோதரர்களும், சகோதரிகளும் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல. அந்தச் சொத்தும் பணமும் கூட நம்முடைய தந்தையிடமிருந்தே அவர்கள் பறித்து கொண்டவையாக இருக்கும்" என்றாள்.

அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. ஆனாலும் உண்மையான அனுதாபம் கலந்த பரிவுடன் அவர் தேறுதலாகச் சொன்னார்: "என்ன செய்வது சகோதரி! சில சகோதர சகோதரிகள் அப்படியும் இருக்கிறார்கள். ஆனால் அல்லா எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களே ஒருநாள் உணர்வார்கள்" என்றார்.

என் மனைவியால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தொண்டையடைக்க வாய் பேசாதிருந்தாள்.

சில விநாடிகளுக்குப் பிறகு அவர் இதுதான் உங்களது முதல் அமெரிக்க விஜயமா என்று கேட்டார். "இல்லை.. இது இரண்டாவது முறை. ஆனால் எங்கள் மகளுக்கு இதுதான் முதன்முறை" என்றேன்.

"எல்லாம் சுற்றிப் பார்த்தீர்களா? எங்கெல்லாம் போயிருந்தீர்கள்?" என்று கேட்டார்.

என் மனைவி வெகுண்டாற்போல் சொன்னாள். "எங்கே சுற்றிப் பார்ப்பது? எங்களால் அதெல்லாம் முடியாது. அதற்கெல்லாம் எங்களிடம் பணமில்லை. இம்முறை முக்கியமாக எங்கள் பெண்ணுக்கு ஒரு வேலை தேடவேண்டுமென்று வந்திருக்கிறோம். அவள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங்கில் எம்டெக் படித்திருக்கிறாள். இங்கேயிருக்கும் என் அக்கா உதவி செய்வாள் என்று நம்பினோம். ஆனால் அவளோ எங்களை வீட்டில் வைத்துக் கொண்டு சாப்பாடு போடக்கூடத் தயாரில்லை. அவள் இருப்பது எங்கள் தந்தையாரின் வீட்டில். வயதான அவரை மிரட்டி அங்கேயே இருந்துகொண்டு எங்களை அவரிடம் நெருங்கவே விடமாட்டேன் என்கிறாள். எங்கள் தந்தையாரின் பணம், சொத்து எல்லாவற்றையும் அவளே பறித்துக் கொண்டிருக்கிறாள்.

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ஏன் அவள் இதையெல்லாம் ஒரு டாக்சியோட்டியிடம் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு பாகிஸ்தானியிடம்.

என் மனைவியைத் தேற்றும் ஆறுதல் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாற்போல் சில விநாடிகள் சும்மாயிருந்துவிட்டு அவர் சொன்னார்: "வருத்தப்படாதீர்கள் சகோதரி! அல்லா மிகவும் கருணையானவர். அவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். யாரையும் கைவிட்டுவிட மாட்டார். அதுவும் உங்களைப் போல் நல்லவர்களை அவர் கைவிடவே மாட்டார்!".

அதன் பின்னர் அவர் நாங்கள் அங்கு வந்து எத்தனை நாட்கள் ஆயின... எங்கே இருக்கிறோம்... யார் எங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள் என்றெல்லாம் வினவினார். நான் ஒருவிதமான எச்சரிக்கையுணர்வுடன் என் மனைவியிடம் தமிழில் முணுமுணுத்தேன். "எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல வேண்டியதில்லை... அவன் எப்படிப்பட்டவனோ என்னவோ!"

என்னுடைய மனைவியும் எச்சரிக்கையுடன் "எங்களுக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் எவ்வளவு நாட்கள் அவர்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருக்க முடியும்?" என்றாள்.

அவர் சொன்னார்: "உங்களுக்கு உதவி தேவைப்படும்போது மற்றவர்களிடமிருந்து உதவி பெறுவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் உங்களால் முடியும் போது மற்றவர்களுக்கு உதவ மறுக்கக்கூடாது".

சிறு இடைவெளிக்குப் பின்னர் அவர் பேச்சைத் தொடர்ந்தார். "நான் முதன் முதலில் இங்கே வந்தபோது எத்தனை கஷ்டப்பட வேண்டியிருந்தது தெரியுமா? எனக்குப் படிப்பு இல்லை. ஆங்கிலம் பேசக்கூடத் தெரிந்திருக்கவில்லை. அப்படியானால் இங்கே எப்படி, எதற்காக வந்தேன் என நீங்கள் கேட்கலாம். என் நாட்டுப் பொருளாதார நிலைமை மகா மோசமாகிக் கொண்டிருந்தது. முக்கியமாக கிழக்குப் பாகிஸ்தான் எங்களைவிட்டுப் பிரிந்து பங்களாதோஷ் ஆன பிற்பாடு நிலைமை இன்னும் மோசமானது. என் குடும்ப நிலைமை பரிதாபகரமாயிற்று. என் மனைவி மகா கோபக்காரியாகிக் கொண்டீ வந்தாள். வீட்டிற்குச் சாப்பாட்டுக்கு எதுவும் கொண்டு வராத புருஷனை எந்த மனைவிதான் எத்தனைநாள் சகித்துக் கொண்டிருப்பாள். சிறுசிறு குழந்தைகள் வேறு. அப்போது சிலர் எனக்கு வேலை கொடுப்பதாகச் சொன்னார்கள். தேசத்திற்காகத் தியாகம் செய்கிற வேலை என்றார்கள். துப்பாக்கிப் பயிற்சியெல்லாம் கொடுப்பார்களாம். பிறகு இந்தியாவில் பஞ்சாபிலோ, காஷ்மீரிலோ கொண்டு தள்ளிவிடுவார்களாம். நிறையப் பணம் தருவோம். குடும்பத்திற்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்து தருவோம் என்றார்கள். என் மனைவி மிகவும் ஆர்வமாக இருந்தாள். என்னை சம்மதிக்க வைக்க எவ்வளவோ முயற்சி செய்தாள். எனக்குத்தான் என்னவோ அதில் விருப்பமில்லை. அப்போது தான் விடுமுறைக்காக அமெரிக்காவிலிருந்து ஊருக்கு வந்திருந்த ஒரு பழைய நண்பனைச் சந்திக்க நேர்ந்தது. எனக்கு அமெரிக்கா போகவும், அங்கே வேலை தேடித்தரவும் உதவுவதாக அவன் சொன்னான்".

அவர் பெருமூச்சுடன் தொடர்ந்தார். ''அப்படியே நடந்தது. அவன் உதவியுடன் இங்கே வந்தேன். ஆனால் இங்கே வந்தபின் விஷயங்கள் அத்தனை சுலபமாக இல்லை. என்னை அழைத்து வந்த நண்பனையும் ஒருநாள் திடீரென்று காணவில்லை. நான் செய்யாத சிறுசிறு வேலைகள் இல்லை. சில சமயம் வெறுக்கத்தக்கதாகவும், சில சமயம் அருவருப்பானதாகவும் வேலைகள். ஆனால் எனக்கு எப்போதும் அல்லாவின் கருணையில் நம்பிக்கையிருந்தது. சீக்கிரமே அதிருஷ்டவசமாக ஒரு மசூதி இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தேன். பெரும்பாலான இரவுகளில் அங்குதான் என் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன்!''.

நாங்கள் மெளனமாக அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். என் மனைவி மட்டும் அவ்வப்போது அவர் பேச உற்சாகமூட்டும் வகையில் 'உம்' கொட்டிக் கொண்டிருந்தாள்.

நாங்கள் பாலத்தைத் தாண்டிக் கொண்டிருந்தோம். மன்ஹாட்டன் பின்னுக்குப் போய்க் கொண்டிருந்தது. எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் கோபுரம் விளக்குகளுடன் எங்களுக்குப் பின்னால் தெரிந்தது. கம்பீரமான ஐ.நா. சபைக் கட்டிடமும், இரவின் பின்னணியில் உயர்ந்து நின்றது. இல்லாமல் போய்விட்ட உலகவர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களை நினைத்துக் கொண்டேன். சட்டென்று என் முதுகுத்தண்டில் ஒரு சிலிர்ப்பு. நாங்கள் ஒரு பாகிஸ்தானியுடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

அவர் நல்ல உயரமானவராகவும், கட்டுமஸ்தான தேகவாகு கொண்டவராகவும் இருந்தார். வயது ஐம்பதுக்கு மேலிருக்கும். நல்ல ஆரோக்கியமானவராகவும், சுறுசுறுப்பானவராகவும் காணப்பட்டார். தோற்றத்திற்கு ஒவ்வாத மிகவும் மிருதுவான இனிமையான குரல்.

நான் முன்னிருக்கையில் அவருக்கு அருகேயும், என் மனைவியும் மகளும் பின்னிருக்கையிலும் அமர்ந்திருந்தோம். நான் பக்கவாட்டில் அவளுடை முகத் தோற்றத்தைக் கவனிக்க முயற்சித்தேன். இப்படி பல நாட்களாக எங்களைத் தெரிந்தவர் போலப் பேசிக் கொண்டு வரும் அவருடைய உண்மை முகமாற்றங்களை ஆராய முற்பட்டேன்.

அவர் சொன்னார்: சகோதரி, சகோதரரே! சரியான தருணத்தில் அல்லா நண்பர்களை அனுப்புகிறார். உறவினர்களை விட நெருங்கியவர்கள் அவர்கள். சொந்தச் சகோதர சகோதரிகளுக்கும் மேலான நண்பர்கள்!

அவர் சொல்லி முடிவதற்குள் என் மனைவி துள்ளி ஆமாதித்தாள். அவளுடைய சகோதரி எங்களை அவளுடைய தந்தையை நெருங்கவிடப் போவதில்லை என்கிற அதிர்ச்சியான உண்மையின் தாக்குதல் எங்களுள் இன்னும் பச்சை ரணமாகக் கசிந்து கொண்டிருந்தது.

பாதுகாப்பிழந்த பீதியிலும், அதிர்ச்சியிலும், எப்படி அமெரிக்காவில் தங்கி எங்கள் மகளுக்கு வேலை தேடப்போகிறோம் என்கிற கவலையிலும் நாங்கள் உழன்று கொண்டிருந்தோம்.

என் மனைவி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ''நீங்கள் சொல்வது ரொம்பச் சரி சகோதரரே! நாங்கள் இங்கே இருக்கும்வரை இருக்க இடமும் உணவும் என் தந்தை வீட்டில் கிட்டும், இங்கே இருந்து எங்கள் பெண்ணுக்கு வேலை தேடலாம் என்று நினைத்துக் கொண்டு வந்தோம். ஆனால் என் சகோதரி எங்கள் தலை மேல் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாள். இப்போது எங்கள் நிலைமையை பாருங்கள்! என்ன செய்யப் போகிறோமா! எங்கே இருக்கப் போகிறோம்! எப்படி நாட்களைக் கழிப்போம்? எங்களிடம் வேண்டிய பணமும் இல்லை!'' அவளுடைய குரல் தழுதழுத்தது.

யாரோ முன்பின் தெரியாதவன் முன்னிலையில் இவள் இப்படிக் கட்டுப்பாட்டை இழக்கிறாளே என்று எனக்கு சங்கடமாக இருந்தது. எங்களுடைய நிர்கதியையும் பலவீனத்தையும் ஏன் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும்? அதுவும் ஒரு பாகிஸ்தானியிடம்! அவளை சமாதனப்படுத்த முயன்றேன். இதுவரை எதுவும் பேசாமல் வந்த என் மகளும் இப்போது அவளை அடக்க முற்பட்டாள்.
அவர் ஆதரவாகச் சொன்னார்: ''தயவு செய்து நம்பிக்கை இழந்து கவலைப்படாதீர்கள் சகோதரி! உங்களுக்கு தெரியுமோ? இந்த நாட்டில் எப்போதும் உங்களுக்கு உங்கள் நாட்டவரிடமிருந்து உதவி கிட்டும். உங்கள் நாட்டிலேயே இருக்கும் போது ஒருவேளை அவர்கள் உங்கள் உதவிக்கு வராமலிருக்கலாம். ஆனால் இங்கே வந்தபின் ஒரு தோழமையுணர்வு வந்துவிடுகிறது. உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உங்களுக்கு உதவ வருவார்கள். உங்கள் ஊரிலிருந்து வந்தவர்கள், உங்கள் மொழியைப் பேசுபவர்கள் இவர்களெல்லோரும் உங்களுக்கு உதவ ஓடி வருவார்கள் இந்த அன்னிய நாட்டில்!''

சிறிது நிதானித்துவிட்டு அவர் மேலும் தொடர்ந்தார்: ''உங்கள் சமூகத்தினர் எங்கே கூடுகிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். அது ஏதாவது தொழுகை ஸ்தலமாகவோ, கலையரங்கமாகவோ அல்லது கருணைமிக்க வசதியான ஒருவரின் வீடாகக்கூட இருக்கலாம். அதோடு உங்கள் சமூகத்தினர் வெளியிடும் பத்திரிகைகள், செய்தித்தாள்கள் இருக்கின்றனவா, அவை எங்கு கிடைக்குமென்று கண்டுபிடியுங்கள். சாதாரணமாக அவை உங்கள் தொழுகை ஸ்தலங்களில் இலவசமாக வழங்கப்படும். அவற்றில் வாடகைக்கு இருப்பிடங்கள், பகிர்ந்து கொள்ளும் இருப்பிடங்கள், வேலைகள் என எல்லா அவசியமான செய்திகளும் கிடைக்கும். உங்கள் கோவிலுக்குப் போங்கள். உங்கள் மனிதர்களிடம் பேசுங்கள்.. நிச்சயம் உதவி கிட்டும்!''

''உங்கள் சமூகத்தினர், உங்கள் ஊர்க்காரர்கள், உங்கள் மொழிபேசுபவர்கள் ஆகியோர்களின் சங்கங்களோ, கூட்டுறவு அமைப்புகளோ இருக்கும். அவர்களை அணுகுங்கள். இலவச உணவுகூடக் கிடைக்கலாம். போகவர பஸ், ரயில் இவற்றுக்கு மட்டும் கொஞ்சம் பணம் இருந்துவிட்டால் மூன்று மாதங்கள் இங்கே இருப்பது கஷ்டமேயில்லை. ஆனால் ஊரைச் சுற்றிப் பார்ப்பதிலும், கேளிக்கைகளிலும் நாட்டம் இருக்கக்கூடாது''.

என் மனைவி சற்று ஆசுவாசமுற்றாள். அவருக்கு மனமார நன்றி கூறினாள்.

''உங்கள் வார்த்தைகள் மிகவும் ஆதரவாகவும், நம்பிக்கையூட்டுவனவாகவும் உள்ளன. நாங்கள் கிட்டத்தட்ட நம்பிக்கையிழந்து, எங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போக ஏற்பாடுகள் செய்வது பற்றி யோசித்துக் கொண்டிருந்தோம்'' என்றேன் நான்.

அவர் சொன்னார்: ''நம்பிக்கையிழக்கத் தேவையில்லை. அல்லா இருக்கிறார். நீங்கள் நல்லவர்கள். உங்கள் மகள் நன்கு படித்தவள். நான் சொல்கிறேன். அவளுக்கு நல்ல வாழ்வு கிடைத்து இங்கே சந்தோஷமாக வாழ்வாள்!''

நாங்கள் கிஸ்ஸோனா பொலிவார்டை அடைந்து விட்டோம். ஹாலி அவென்யூ அங்கிருந்து ஸ்மார்ட் தெருவிற்கு வழிகாட்ட நான் உஷாரானேன்.

ஸ்மார்ட் தெருவில் நுழைந்து எங்கள் நண்பரின் வீட்டெதிரே நிறுத்தச் சொன்னேன். மீட்டர் 22 டாலர் 80 சென்ட் ஆகியிருந்தது. டாக்சியை விட்டு இறங்கினோம். பெட்டியை எடுத்துக் கொண்டோம். பணம் கொடுப்பதற்காக என் பணமடிப்பைத் திறந்தோன். டாலரை எடுத்துக் கொடுப்பதற்குள் அவர் கைகளைக் கூப்பியவாறே, ''பரவாயில்லை சகோதரரே. அல்லாவின் விருப்பமிருந்தால் நாம் மீண்டும் சந்திருப்போம்'' என்று கூறிவிட்டுத் தம் இருக்கையிலமர்ந்து வண்டியைக் கிளப்பனார்.

கட்டாயமாக வாடகைப் பணத்தை அவர் வாங்கிக் கொள்ள வேண்டுமென நான் வற்புறுத்தினேன். அது அவருடைய நியாயமான உழைப்பின் கூலி; தினசரி பிழைப்பிற்கான சம்பாத்தியம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்.

அவர் பணதை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டு, ''நாம் இப்போது சந்திக்க வேண்டுமென்பது அல்லாவின் விருப்பம். அவரே நம்மை மீண்டும் சந்திக்க வைப்பார். அப்போது உங்கள் மகளுக்கு வேலை கிடைத்திருக்கும். நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பீர்கள்!'' என்றார்.

அப்போது அவருடைய பெயரைக் கேட்கத் தோன்றியது. கேட்டேன். ''குலாம் மொஹம்மது ஹ¤சேன்!'' என்று கூறி அவருடைய தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.

''நமஸ்தே சகோதரி! நமஸ்தே சகோதரரே! நமஸ்தே மகளே!'' என்று கூறி விடைபெற்றுக் கொண்டு, வண்டியைக் கிளப்பி மெதுவாக நகர்த்தினார்.

என் மனைவி பேச்சிழந்து நின்றாள்.

கார் தெரு திருப்பத்தில் மறையும்வரை பார்த்திருந்துவிட்டு நண்பரின் வீட்டுப் படியேறினோம். அழைப்பு மணியை ஒலித்தேன்.

கதவைத் திறந்த நண்பர், ''என்ன டாக்ஸிக்காரன் ஏதாவது தகராறு செய்தானா?'' என்றார்.

நான் ''இல்லையில்லை! இந்தக் காரோட்டியைக் கண்டு எனக்கு காபூலிவாலா நினைவுக்கு வந்தது! என்றேன்.

*****


ம. இராஜாராம் எழுதிய 'புதுவெய்யில்' 1996ம் ஆண்டில் கல்கி வெள்ளிவிழாச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. பின்னர் கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், தாமரை, கணையாழி, தீபம் முதலான பத்திரிகைகளில் பல கதைகள் பிரசுரமாயின.

சா. கந்தசாமி, நா. கிருஷ்ணமூர்த்தி, 'க்ரியா' ராமகிருஷ்ணன் இவர்களுடன் சேர்ந்து இவர் இயக்கிய 'இலக்கியச் சங்கம்' சென்னையில் அறுபதுகளில் முக்கியமான இலக்கிய விமர்சன அமைப்பாக இருந்தது. பிற்பாடு 'கசடதபற' பத்திரிகைக்கு அடிப்படையாகவும் இருந்தது. இலக்கியச் சங்க வெளியீடான 'கோணல்கள்' என்ற தொகுப்பில் இவரது கதைகள் இடம் பெற்றன.

வாசகர் வட்ட வெளியீடான 'அறுசுவை'யில் ஒரு குறுநாவல் இடம் பெற்றது. பின்னர் சுஜாதாவும் ம. இராஜாராமும் இணைந்து எழுதிய 'காசாவில் ஓர் உலகம்' வாசகர் வெளியீடாக வந்தது. இவர் மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்த சிறுகதைத் தொகுப்பை 'நேஷனல் புக் டிரஸ்ட்' வெளியிட்டது. இவரது சிறுகதைகள் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்காவில் சுற்றுலா மேற்கொண்டிருக்கிறார். "இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்திருந்த போது தென்றல் இதழ் ஒன்று கண்டு அதன் கட்டமைப்பில் கவரப்பட்டேன். இந்த முறையும் ஒன்றிரண்டு இதழ்களைப் பார்த்தேன்" என்கிறார் ம. இராஜாராம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் எழுதிய இந்தக் கதையைத் தென்றலில் சிறப்புச் சிறுகதையாக வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ம. இராஜாராம்
More

குளிர்காலம்
Share: 
© Copyright 2020 Tamilonline