Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதிரா? புரியுமா? | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
"தமிழ் செம்மொழியானால்....." - சி.சே. சுப்பராமன்
"சென்னை இசைப்பிரியர்களின் சொர்க்கம்" - டாக்டர் எம். நர்மதா
- கேடிஸ்ரீ, மதுரபாரதி|ஆகஸ்டு 2004|
Share:
Click Here Enlargeபாடுபவர்கள் என்னதான் இனிமையாக, அற்புதமாகப் பாடினாலும் அவர்கள் குரல் இனிமையை மெருகூட்டுவது பக்கவாத்தியக் கருவிகள் தான். கடம், வயின், மிருதங்கம் போன்றவை குரலிசைக்கு அழகு சேர்க்கின்றன.

கடத்திற்கு விநாயராம், மிருதங்கத்திற்கு உமையாள்புரம் சிவராமன், வயலினுக்கு என்றவுடன் டாக்டர் பத்மஸ்ரீ எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் என்று யாரிடம் கேட்டாலும் சட்டென்று சொல்லி விடுவார்கள்.

வயலின் மேதை எம்.எஸ். கோபாலகிருஷ்ணனின் மகள் டாக்டர் நர்மதா தந்தை வழியில் 'புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்பதற்கேற்ப வயலின் வாசிப்பிலும், அதுபற்றிய ஆராய்ச்சிகளிலும் சிறந்து விளங்குகிறார். அவரது ஆய்வுக்காக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். உலகநாடுகள் பலவற்றுக்குச் சென்று இசையைப் பரப்பி வருகிறார். தொடர்ந்து 8 முறை சிறந்த வயலின் கலைஞருக்கான விருதை வழங்கிச் சென்னை மியூசிக் அகாடெமி இவரைக் கெளரவப்படுத்தியுள்ளது.

தென்றல் இதழுக்காக டாக்டர் எம். நர்மதாவை சந்தித்து உரையாடிய போது.....

இசைப் பராம்பரியம்

என் குருவைப்பற்றிச் சொல்வதற்கு முன் என் குடும்பச் சூழல் பற்றிச் சொல்லி விடுகிறேன். வயலின் மேதை பத்மஸ்ரீ எம்.எஸ். கோபாலகிருஷ்ணனின் மகள் நான். அம்மா பெயர் மீனாட்சி அவருக்கும் இசையில் அதிக ஈடுபாடு உண்டு. சிறந்த பாடகி திண்டுக்கல் எஸ்.பி. நடராஜனின் சிஷ்யை. ஒன்பது வயதிலேயே அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர். ராதா கிருஷ்ணன் அவர்களிடம் தங்கப்பதக்கம் வாங்கியப் பெருமை அம்மாவிற்கு உண்டு. எனக்கு ஒரு சகோதரர் மற்றும் ஒரு சகோதரி. என் தாத்தா பரூர் எ சுந்தரம் ஐயர் தான் முதன்முதலாக என் ஐந்தாவது வயதில் வயலின் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார். அவர்தான் என் முதல் குரு. பிறகு என் அப்பா கர்நாடக சங்கீதம் மற்றும் இந்துஸ்தானி சங்கீதம் கற்றுக் கொடுத்தார்.

என் பெற்றோர்கள் தான் எனக்குத் தூண்களாக இருந்து வழிநடத்தியவர்கள். தொடர்ந்து 25 வருடங்களாக வயலின் வாசித்து வருகிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்கள் தான் காரணம்.

முதல் இசை நிகழ்ச்சி

என்னுடைய 13-வது வயதில் சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணகான சபாவில் முதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பாவுடன் சேர்ந்து வாசித்தேன். பின் மோகன ராகத்தைத் தனியாகவும் வாசித்தேன். அதற்குப் பிறகு பல மேடைகளில் வாசித்திருக்கிறேன். அன்று நான் கொஞ்சம் பதட்டத்துடன் தான் வாசித்தேன். அதுதான் என் முதல் நிகழ்ச்சி.

தந்தையின் புகழ் பாரமா, பலமா?

அப்பாவுடன் நான் வாசித்ததால் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது உண்மை. ஆனால் அப்பாவுடன் நான் வாசிக்கும் போது என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அது என்னை கொஞ்சம் பயப்பட வைக்கும். நான் வயலின் வாசிக்கும் போது அப்பாவின் ஓசை வருகிறது என்று இப்போது நிறைய பேர் சொல்கிறார்கள். ஆனால் ஆரம்பக் காலத்தில் என் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லோருமே சில குறைகளைச் சொல்வார்கள்.

அப்பாவிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். அப்பாவின் முகபாவம் எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்திருக்கிறது.

பக்கம் வாசித்தது

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி, டி. பிருந்தா என்று பல மேதைகளுடன் வாசித்ததுண்டு. சில இளம் கலைஞர்களுக்கும் நான் வயலின் வாசித்திருக்கிறேன். நிறையத் தனிக்கச்சேரிகளும் செய்துள்ளேன். செய்து கொண்டு இருக்கிறேன்.

அப்பாவுடன் நீங்கள் செய்த கச்சேரிகள்...

ஆம்ஸ்டர்டாமில் 1987ல் இந்தியப் பண்பாட்டுக்கழகத்தின் சார்பாக நடந்த நிகழ்ச்சியில், 1989ல் சிங்கப்பூரில் ஹாங்காங் ஞானஅஞ்சலி குழுவினரின் நிகழ்ச்சியில், 1990 வாக்கில் மதுரை மணி ஐயர் பவுண்டேஷன் சார்பில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் என்று அப்பாவுடன் சென்று பல கச்சேரிகளில் வாசித்திருக்கிறேன். அதே போல் 1996ல் லண்டனில் பாரதிய வித்யா பவன் நடத்திய நிகழ்ச்சியில் வாசித்தேன்.

தனிக் கச்சேரிகளுக்காகவும் அமெரிக்கா, ஹாலந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் எல்லாம் சென்றிருக்கிறேன்.

சமீபத்தில் இசைவிழாவில் தவிலுடனான உங்கள் சிறப்பு நிகழ்ச்சி பற்றி...

2003 டிசம்பர் 25ம் தேதி சென்னை தியாகப்பிரம்ம சபாவில் என்னுடைய வயலின் தனிக் கச்சேரியில் தவிலுடன் வாசித்தேன். நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பிய ரசிகர்கள். நிகழ்ச்சியை ஆரவாரித்துக் கைதட்டி ரசித்தார்கள். அந்த வெற்றி எனக்கு மிகவும் சந்தோஷமான ஒன்று. அதைத் தொடர்ந்து இதே மாதிரி நிகழ்ச்சிகள் நிறையச் செய்து வருகிறேன்.

உங்கள் இசை ஆராய்ச்சியைப் பற்றி...

கடவுள் அருளால் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய விஷயம். தில்லிப் பல்கலைக்கழகத்தில் 'இந்திய இசையின் சஞ்சாரம்' என்ற ஆராய்ச்சிக் கட்டுரைக்கு நான் வாங்கிய டாக்டர் பட்டம் தான். இந்துஸ்தானிக்கும், கர்நாடக இசைக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்ந்து எழுதியுள்ளேன். எனக்கு டாக்டர் பட்டம் பெற உதவியவர்களுள் முக்கியமானவர்கள் கே.ஜி. கிண்டே, முனைவர் தேபு சவுத்ரி, அஸ்தாத் அலிகான், டாக்டர் சுமதி முக்தார்த் போன்றவர்கள். அவர்களை நான் நன்றியுடன் இங்கு நினைவு கூர்கிறேன்.

அவர்கள் எனக்கு சித்தூரில் சொல்லிக் கொடுப்பார்கள். நான் அதை வயலினில் வாசிப்பேன். இந்தப் பயிற்சி தான் பின்னால் எனக்கு இந்துஸ்தானி இசையைக் கற்க அதிகம் உதவியது. அதுமட்டுமல்ல. தில்லி, பம்பாய், கல்கத்தா போன்ற நகரங்களில் என்னால் இந்துஸ்தானியில் வாசிக்க முடிந்தது.

உங்கள் ஆராய்ச்சி எதைப் பற்றியது? கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள்.

அது இசையின் சொற்கட்டு (phraseology) பற்றியது. அதாவது ராகப்பிரஸ்தாராங்கள், மூர்ச்சனைகள் போன்றவைகளைப் பற்றியது. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் இந்திராகாந்தி என்று சொன்னவுடன் எப்படி நமக்கு அவருடைய முகம் மனதில் வருகிறதோ அதுபோல் அந்தந்த ராகத்தோடு அந்த ராகத்தின் ஆதாரத்தை அடையாளம் காண்பிப்பது என் ஆராய்ச்சியின் நோக்கம்.

ராகத்தை வெளிப்படுத்துவதற்கு சுவரங்கள் தேவைப்படுகின்றன. அந்த சுவரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், ராகத்தின் சுவர வரிசையை ஒரு பாடிய உடனேயே நமக்கு ராகத்தின் பெயர், அதன் பாவம் ஆகியவை தெரிய வேண்டும். இந்தச் சொற்கட்டு இந்துஸ்தானியில் எப்படி இருக்கிறது என்பதும் சொல்லப்படுகிறது. எல்லாம் இசைதான். ஆனால், இசையை நாம் ஏன் கிராமியப் பாடல், டப்பாங்குத்து, கானாப் பாட்டு என்று பிரித்து வைத்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.

அதுமாதிரி ராகங்கள் பாடுவதை நாம் கேட்டு ரசிக்கிறோம். ஆனால் அந்த ராகத்திற்கு அடிப்படைத் தேவை என்ன? மருத்துவர் முதலில் மருந்தை எழுதுகிறார் (prescription), பின்னர் எந்த மருந்தை எப்போது சாப்பிடுவது என்று (description) சொல்வார். அதேபோலத் தான் ராகத்தை துவக்கத்தில்¡ எப்படிச் சொற்கட்டு நிர்ணயிக்கிறது என்பதும் பிறகு எப்படி மேலே கொண்டுசெல்வது என்பதையும் அடையாளம் காண்பதுதான் என்னுடைய ஆராய்ச்சியின் நோக்கம்.

அழுத்தமும், தொனியும் வெளிப்படும் போது பாவங்கள் தாமே உண்டாகின்றன. பாவம் நிர்ணயமாகும்போது ஒரு பாணி உருவாகிறது. எப்படி நாம் சிவாஜி பாணி, ரஜினி பாணி என்று சொல்கிறோமோ அதுபோல் தொனி மற்றும் உச்சரிப்பில் எப்படி விதவிதமான பாணிகள் உருவாகின்றன என்பதுதான் என்னுடைய ஆராய்ச்சி.

நீங்கள் எழுதிய புத்தகத்தைப் பற்றி...

இதுவரை வந்த இந்திய இசை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் இந்துஸ்தானியைப் பற்றியதாகவோ அல்லது கர்நாடக சங்கீதம் பற்றியோ தான் வெளிவந்திருக்கிறது. ஆனால் இரண்டு இசைக்கும் உரிய முக்கியத்துவத்தை கொடுத்து, தென்னிந்தியாவிலிருந்து வந்த இசை ஆய்வுப் புத்தகம் இதுதான். 'Indian music' என்ற இப்புத்தகத்தில் இரண்டு இசைகளின் நிலைகளையும், பாணிகளையும் ஒரே இணைகோட்டில் சொல்லியிருக்கிறேன்.

தில்லியில் பதிக்கப்பட்ட இப்புத்தகம் மொத்தம் 600 பக்கங்களைக் கொண்டது. இதில் 50 ராகங்களின் (25 கர்நாடக சங்கீதம், 25 இந்துஸ்தானி சங்கீத ராகங்கள்) சுரவரிசைகள் கொடுத்து, அதற்கான ஆங்கிலக் குறியீடுகளையும் (notations) கொடுத்து, பின்னர் எனது விளக்கத்தை எழுதியுள்ளேன்.

நான் இதற்காக நிறையக் களப்பணி செய்துள்ளேன். குரு, சிஷ்ய பரம்பரை காலத்தில் இசை எப்படி இருந்தது என்று தெரிந்துக் கொண்டேன். என்னுடைய இந்த ஆராய்ச்சி பற்றிய விவரங்களை http://www.drmarmadha.com என்கிற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

திரைப்படத்துறையில் நுழையும் எண்ணம் உண்டா?

உண்டு. அது என் முக்கியமான எதிர்காலச் சிந்தனை என்றே சொல்வேன். ஏனென்றால், இன்று வெள்ளித்திரையின் பலம் அளவிட முடியாதது. அது மனித மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படத்தில் பாட்டு வெற்றி பெறுவதற்குக் காரணம் திரையில் வரும் காட்சிகள்தான். ஆனால் படத்தின் வெற்றி எது என்றால் பாட்டுதான்.

சினிமாவில் அதையும் ஜனரஞ்சகமாக கொடுக்கிறார்கள். சினிமாவில் கர்நாடக சங்கீதத்துடன் இயைந்த மெல்லிசையைப் பாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தால், என்னைப் போன்ற இசைக்காக வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களுக்கு ஓர் கலங்கரை விளக்காக அமையும். கர்நாடக சங்கீதத்திற்கும் நிறையச் செய்ய முடியும்.

நீங்கள் வாங்கிய விருதுகள் பற்றி சொல்லுங்கள்.

சென்னை மியூசிக் அகாடமி 1991 முதல் 19998 வரை தொடர்ந்து எட்டு முறை எனக்குச் சிறந்த வயலின் கலைஞர் என்கிற விருதை அளித்து கெளரவித்தது. சிறந்த செயல்விளக்கம் (lecture demonstration) விருதை எனக்கு 2000ம் ஆண்டில் வழங்கியது.

அதுபோல் 'நாடகக் கனல்' விருது பத்தமடை கிருஷ்ணன் அவர்கள் வழங்கினார்கள். தமிழக அரசின் கலைமாமணி விருது 2000ம் ஆண்டிலும், மகாராஜபுரம் சந்தானம் விருது 2001ம் ஆண்டிலும் கிடைத்தன. சென்ற ஆண்டு ஸ்ரீ தியாகப்ரம்ம கானசபா 'வாணிகலா சுதாகரா' என்ற பட்டத்தை அளித்தது. அரிமா சங்கம் 'சென்னைப் பெண் சாதனையாளர் விருது' அளித்தது.
வயலின் வாசிப்பவர்களுக்கான யோகப் பயிற்சிகள் பற்றி நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். எத்தகைய பயிற்சிகள் அவை?

நான் நிறைய யோகா செய்கிறேன். வயலினுக்குக் கழுத்து, கண், கை என்று ஒவ்வொரு விதத்திலும் நான் பயிற்சி செய்கிறேன். நம் இயல்பு நிலை அல்லாத எதுவுமே நமக்கு உடற்பயிற்சியின் தேவையை ஏற்படுத்துகிறது. நமது ரிஷிகள் யோகப் பயிற்சிகளை அதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதிகச் சுதந்திரம், அதிகச் செயல்திறன் இவற்றை யோகம் தரும். வயலின் வாசிப்புக்கு இத்தகைய பயிற்சிகள் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கின்றன என்பதைக் குறித்து ஆய்வு செய்து வருகிறேன்.

டிசம்பர் இசைவிழாவை பற்றி உங்கள் கருத்து என்ன?

டிசம்பர் பருவத்தில் நடக்கும் கச்சேரி சங்கீதக்காரர்களுக்கு முதுகெலும்பு போன்றது. உலகெங்கிலும் உள்ள இசைப் பிரியர்கள் வந்து கேட்கிறார்கள். நிறைய சபாக்களில் கச்சேரிகள் இருப்பதால் யாராலும் எந்தக் கச்சேரியையும் ஒழுங்காகக் கேட்க முடியவில்லை என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி இத்தகைய இசை நிகழ்ச்சிகள் மிகவும் தேவை. சென்னை நகரம் இசைப்பிரியர்களுக்கு சொர்க்கம்.

நீங்கள் நிறைய வயலின் மற்றும் இசை பற்றிய செயல்விளக்கக் கூட்டங்கள் நடத்துகிறீர்கள். அவற்றைப் பற்றி...

அவற்றில் எல்லாம் இந்திய இசை மற்றும் வயலின் பற்றிய விளக்கங்கள் சொல்லியிருக்கிறேன். நிறையக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 'The Richness of Indian Music', 'The power of violin in carnatic music' என்ற தலைப்புகளில் பல விளக்கவுரைக் கூட்டங்கள் நடத்தியிருக்கிறேன்.

கர்நாடக சங்கீதத்திற்குப் பிற துறைகளைச் சார்ந்தவர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கிறதா?

வணிக நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பு கண்டிப்பாக கர்நாடக சங்கீத முன்னேற்றத்திக்குத் தேவை என்பது என்னுடைய கருத்து. அது நம் தென்னிந்தியாவில் கொஞ்சம் கம்மிதான். இவர்கள் ஒத்துழைப்பு இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

பிரபல தொழிலதிபர் பி. ஓபல்ரெட்டி என் புத்தகத்தை ஸ்பான்சர் செய்தார். பா.ஜ.க. அகில இந்திய தலைவர் வெங்கைய்யா நாயுடு அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். ஓபல் ரெட்டி நிறைய ஸ்பான்சர் செய்கிறார். அந்தக் காலத்தில் புலவர்களுக்கும், சங்கீதக்காரர்களுக்கும் ராஜாக்கள் நிறையப் பொன்னும், பொருளும் கொடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்கள். ஆனால் இன்று அந்த மாதிரி கிடையாது. நிறையப்பேர் இசையை முழுநேரத் தொழிலாக எடுத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். நல்ல பொருளாதாரப் பின்னணி இருந்தால் அவர்களால் முன்னேற முடியும். நிறைய நிறுவனங்கள் நம் கர்நாடக இசைக்கு ஆதரவு தருவதற்கு முன் வரவேண்டும்.

பத்திரிகைகளில் வரும் விமர்சனங்களை நீங்கள் எந்தவிதத்தில் எடுத்துக் கொள்கிறீர்கள்?

விமரிசகர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். நம்மைப் பற்றிய நல்ல விமர்சனங்கள் வந்தால் அதை ஏற்றுக் கொள்வது போல் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்திரிகைகள், விமர்சகர்கள் போன்றோர்களி ஒத்துழைப்பு இசைக் கலைஞர்களின் முன்னேற்றத்திற்கு அவசியம்.

அவற்றை எல்லாம் தாண்டி நம் குருவின் அறிவுரைகளையும் கேட்க வேண்டும்.

உங்கள் குழந்தைகள் பற்றி...

எனக்கு ஒரே பெண். வயது 13. ஜெயலட்சுமி நன்றாகப் பாடுவாள். எம்.எஸ்.வி. சுரேஷ் என் சகோதரர். அவரும் வயலின் வாசிப்பார். என் தாத்தா எங்கள் குடும்பத்தில் எல்லோரையும் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்றுதான். - நம் குடும்பத்தில் யாரும் வயலின் வாசிக்கத் தெரியாமல் இருக்கக்கூடாது என்று சொல்வார்.

உங்கள் எதிர்காலத் திட்டங்கள்....

நிறைய ஏழைக் குழந்தைகளுக்கு வயலின் கற்றுக் கொடுக்க வேண்டும். சினிமாவில் பாடி நம் கர்நாடக சங்கீதத்தை மேலும் பரப்ப வேண்டும். இவைகள் தான் என் எதிர்காலத் திட்டம். இமயமலைக்குச் செல்வது போல் கரடுமுரடானது இசைப் பயணம். இதற்குக் கடவுள் அனுக்கிரகமும், குரு கடாட்சமும், பலரின் ஒத்துழைப்பும் தேவை. அப்போது தான் நாம் வானத்தை தொடமுடியும்.

முக்யிமான ஒன்று என்னவென்றால், ரசிகர்களையும் வளர்க்க வேண்டும். அவர்களுக்கு இசை இரசிப்புக்கான பயிற்சிகள் அளிக்க வேண்டும். அதுபோல் நான் நிறைய இசைப்பயிற்சி பற்றிய வகுப்புகளை இந்தியாவிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் நடத்த ஆசைப்படுகிறேன்.

அப்பா, அம்மா இருவரும் உங்கள் வயலின் வாசிப்பைப் பற்றி விமர்சனங்கள் செய்வதுண்டா?

நிறையச் செய்வார்கள். அப்பாவை விட அம்மா தான் அதிகம் என் வாசிப்பை விமர்சனம் செய்வார். எந்த குறை இருந்தாலும் சட்டென்று கூறுவார். அவர்களின் விமர்சனங்கள் தாம் எனக்கு மேலும் மெருகேற்ற உதவுகிறது.

*****


இந்தியாவுக்கு வயலின் வந்த கதை

திருவனந்தபுரம் மகாராஜா சுவாதித்திருநாள் அவர்களின் அரசவை இசைக்கலைஞர் வடிவேலுவிற்குப் பாரிஸ் பாதிரியார் ஒருவர் பயின் இசைக்கருவியைப் பரிசாக அளித்தார் என்றும், அந்தப் பாதிரியாரே வடிவேலுவிற்கு அதை வாசிக்கவும் கற்றுக் கொடுத்தார் என்றும், முன்னோர்கள் கூறுகின்றனர். இதைப் பிற்காலத்தில் பாலுஸ்வாமி தீட்சிதர் என்பவர் சென்னையில் தீட்சிதர் குடும்ப நிகழ்ச்சிகளில் வாசித்தாகவும் கூறுவர்.

சந்திப்பு:கேடிஸ்ரீ
தொகுப்பு:மதுரபாரதி
More

"தமிழ் செம்மொழியானால்....." - சி.சே. சுப்பராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline