Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
நிதி அறிவோம்
கரடி துரத்திய காளை
- மதுரபாரதி|ஜூலை 2006|
Share:
Click Here Enlarge"சுமோ வீரர்களைத் தவிர மற்ற எல்லோரும் எடையைக் குறைக்கத்தான் பார்க்கிறார்கள்" என்றார் ஜெயசிங். அவர் வாராந்திர எடைக்குறைப்புச் சந்திப்பைச் சற்றே லகுவான உரையாடலோடு தொடங்கினார்.

"நான் ஒரு ஐடியா சொல்றேன்: பங்குச் சந்தையில பணத்தை விட்டால் போச்சுன்னா, உடம்பு தானா இளைச்சுப் போயிடும்" என்றாள் வினோதினி.

அந்தக் குழுவுக்குச் சற்றும் பொருந்தாத, மெலிந்த தோற்றம் கொண்ட அறுபது வயது மூதாட்டி திருமதி ராவ், "சரியாச் சொல்லணும்னா, பங்குச் சந்தையில பணம் போட மூணு வழி இருக்கு. ஒண்ணு, அடிப்படை ஆய்வு (Fundamental Analysis), ரெண்டு, தொழில்நுணுக்க ஆய்வு (Technical Analysis). மூணாவது யுக்தி என்னன்னா, ஒரு குறிப்பிட்ட தொழில்துறையைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சுகிட்டு, இல்லேன்னா ஒரு குறிப்பிட்ட கம்பெனியைப் பத்தி முழுக்கத் தெரிஞ்சுகிட்டு, செய்யறது" என்றார்.

"தப்பா நெனச்சுக்காதீங்க அம்மா!" யாரோ குரல் கொடுத்தார்கள், "இது எப்படி இருக்குன்னா, 'சரியான உணவைச் சாப்பிடு, உடற்பயிற்சி செய்' அப்படீன்ன மாதிரி. சொல்றது சுலபம், செய்யறது கஷ்டம்."

"நான் சொல்றதைக் கேளுங்க" விளக்கத் தொடங்கினார் திருமதி ராவ், "அடிப்படை ஆய்வுதான் நல்ல முறைன்னு சொல்றாங்க. பரஸ்பர நிதிகள் (Mutual Funds) அந்த வழியைப் பயன்படுத்தறாங்க. ஒரு குழுமத் தோட புள்ளிவிவரங்களை நுணுகிப் பார்க்கணும், அப்பதான் அதன் உண்மையான மதிப்பு தெரியும்.

"ஒரு அடிப்படை முதலீட்டாளர் மைக்ரோசா·ப்ட்ல (MSFT) பணத்தைப் போடுவார், ஆப்பிள் (AAPL) அடுத்த பட்சம்தான். ஏன்னா மைக்ரோசா·ப்டோட P/E விகிதம் குறைச்சல். போன அஞ்சு வருஷத்தில பங்குவிலை ரொம்ப ஏறா விட்டாலும், வரும் காலத்தில் மைக்ரோசா·ப்ட் அதிக வருமானம் தரும்னு எதிர்பார்ப்பார்."

வினோதினி குறுக்கிட்டாள், "எடை குறையறதுக்கு ஒருத்தருக்கு எவ்வளவு பொறுமை வேணுமோ, அதே அளவு பொறுமை பங்கு வாங்கறது விக்கறதுலயும் வேணும்னு சொல்லுங்க."

"ஆமாம்" என்றார் திருமதி ராவ். ஓர் அடிப்படை முதலீட்டாளர் DELL-ஐ 35 டாலர் விலையில் வாங்கமாட்டார். அது 20 டாலர் ஆயிடுச்சுன்னா, அதன் P/E விகிதம் 12 ஆகும். அப்போ வாங்கிப் போட்டுட்டு காத்திருப்பார். டெல் முதலீடு நல்ல வாய்ப்புங்கறது சந்தைக்குப் புரியணுமே. சில மாசமோ, ஏன் வருஷமோ கூடக் காத்திருக்க வேண்டி வரலாம். ஆனால் அந்தப் பொறுமைதான் அடிப்படை முதலீட்டாளரை எந்தமாதிரிச் சந்தை நிலைமையிலும் வெற்றிபெற வைக்கிறது.

"இன்னொரு சரியான உதாரணம் கார்மின். கார்ல பொருத்தற GPS கருவிகளின் தயாரிப்பாளர். ஒரு வருஷத்துக்கு முன்னால அந்தக் கம்பெனி அடிப்படையில ரொம்ப வலுவா இருந்தது. ஓர் அடிப்படை முதலீட்டாளர் அப்போ அந்தப் பங்கை 40 டாலர்ல வாங்கிப் போட்டிருப்பார். இன்றைக்கு விலை சுமார் 94 டாலர். ஒரே வருஷத்துல நூறு சதவீத வளர்ச்சி.

"உறுதியான நிதிநிலைமை இருக்கற குழுமத்தின் பங்குகளை ஓர் அடிப்படை முதலீட்டாளர் வாங்குவார். அவர் வாங்கும் போது குழுமத்தின் மதிப்பைவிடப் பங்கின் விலை குறைவாக இருக்கும். சில வருஷங்கள் ஆனபின் பங்குச் சந்தை இந்தப் பங்கின் விலையை ஏறவிடும். நம்ம அடிப்படை முதலீட்டாளர் அப்போ அதைக் கொண்டாடுவார்"

"உடல்திண்மைக் குறியீட்டைப் (Body Mass Index) பத்தி நாம பேசப் போறோம்னு நெனச்சேன், பங்குச் சந்தைக் குறியீட்டைப் பாத்துப் போய்ட்டோம் போல இருக்குதே" என்றார் ஜெயசிங்.

எல்லோரும் சிரித்தார்கள்.

ஆனால் திருமதி ராவ் தொடர்ந்தார். "ஒரு தொழில்நுணுக்க முதலீட்டாளருக்கு இப்படிக் காத்துக்கிடப்பதில் நம்பிக்கை கிடையாது. 'விலை குறைச்சலாய் வாங்கு, கூடினதும் விற்றுவிடு' என்பதில் அவருக்கு நம்பிக்கை கிடையாது. 'விலை அதிகம் இருந்தாலும் வாங்கு. இன்னும் அதிகமானதும் விற்றுவிடு' என்பது அவரது கொள்கை. ஏறிக்கொண்டே இருக்கும் பங்கின் விலை இன்னும் ஏறும் என்பது அவரது நம்பிக்கை. "பங்கை ரொம்ப நாள் கையில வச்சிருக்க மாட்டார். எப்போ அது லாபக் குறியீட்டை எட்டிவிடுகிறதோ அல்லது அவர் எதிர்பார்த்த அளவு ஏறவில்லையோ, அப்போ அவர் விற்றுவிடுவார்.

"மூணாவது முறை இருக்கே, அதை அதிகம் விவாதிப்பதில்லை. ஆனால் அது ரொம்ப சக்திவாய்ந்த முறை. அதுதான் ஒரு தொழில்துறையைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, அந்தப் பங்குகளைப் பின்தொடருதல். உதாரணமா, எடை குறையணும்னா எந்த பானத்தை நீ முதலில் தவிர்ப்பாய்?"

"கோக்" என்று எல்லோரும் ஏககாலத்தில் கத்தினார்கள்.

"சரி," புன்னகைத்தார் திருமதி ராவ். "2001ல பங்குச் சந்தை சரிந்தபோது, தொழில்நுட்பப் பங்குகளை மட்டுமல்ல, குளிர்பானப் பங்கு களையும் தவிர்த்தார்கள். நுகர்வோர் இயற்கையான பானங்களையே விரும்பினார்கள்.

"இதைக் கூர்ந்து கவனிக்கும் ஒருவர் ஹான்சன் நேச்சுரல் (HANS) பங்குகளை வாங்கியிருப்பார். 2001-ல் 10,000 டாலர் முதலீடு இன்றைக்கு ஒரு மில்லியனுக்கு மேல ஆகியிருக்கும். அது ஐந்து வருஷத்தில் 11,000 சதவீத லாபம்! விவரம் தெரிஞ்ச முதலீட்டாளருக்கு ஹான்சனைப்பற்றிய வர்த்தகப் புள்ளிவிவரத்தைச் சேகரிப்பது கஷ்டமல்ல.

"உங்களுக்குச் சரியான முதலீட்டை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்" என்று முடித்தார் திருமதி. ராவ்.

"பங்குச் சந்தைக்கும் எடை குறைப்பதற்கும் என்ன வித்தியாசம்னா, பங்குச் சந்தையில இழப்பது ரொம்ப சீக்கிரம் நடக்கும்..." என்றாள் வினோதினி சற்றே அலுப்பாக.

"உண்மைதான்" என்று கூறிய திருமதி ராவ் தொடர்ந்தார், "பங்குச் சந்தையின் முதல் சட்டம் என்ன தெரியுமா? 'அதிக லாபம் பெற வேண்டுமென்றால், நஷ்டங்கள் குறைய வேண்டும்' என்பதே. நீ 45 டாலரில் டெல்லை வாங்கிவிட்டு, அது ஏறணும்னு காத்திருந்தால், தப்பு உன்னுடையதே தவிரச் சந்தையுடையது அல்ல.

"ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், 'என்னால் இவ்வளவு சதவீதம் நஷ்டம்தான் தாங்கமுடியும்' என்பதை நீ முதலிலேயே தீர்மானித்துவிட வேண்டும். சிலருக்கு அது 7 சதவீதம், சிலருக்கு 10 சதவீதம். டெல்லில் 10 சதவீத நஷ்டத்திற்குள் வைக்கமுடிந்தால் நல்லதாக இருந்திருக்கும்; இன்றைக்கு அதன் விலை 25 டாலர் ஆகிவிட்டதே. புத்திசாலி முதலீட்டாளர் அதை 41 டாலரில் விற்றுவிட்டு 25 டாலரில் திரும்ப வாங்கியிருக்க முடியும். ஒரு வருஷத்தில் அது 50 டாலர் ஆகிவிட்டால், இப்போதைய 10 சதவீதத்துக்கு பதில் அவருக்கு 100 சதவீதமே கிடைத்திருக்கும்."
"எப்படியோ, என்னால் கொழுப்பு நிறைந்த உணவைக் குறைக்க முடியவில்லை. நஷ்டத்தையாவது குறைக்கலாம்" என்றார் ஜெயசிங்.

"ரெண்டையுமே குறைத்துத்தான் ஆகணும்" என்றார் திருமதி ராவ். "சரி இப்ப ரெண்டாவது விதியைச் சொல்றேன். 'ஒரு பங்கை வாங்கினால், அதன் துறையை நிதி நிறுவனங்களுக்குப் பிடித்திருக்க வேண்டும்.' ·பெடெக்ஸ் (FDX) ஒரு நல்ல கம்பெனி. பொருள்களை மட்டுமல்ல, நல்ல வருடாந்திர முடிவுகளையும் அது தவறாமல் கொடுக்கிறது. ஆனால் முதலீட்டாளர் சமுதாயத்துக்குப் போக்குவரத்துத் துறைமேல் பிரியமில்லை என்றால், அதன் பங்குவிலை ஓரளவுக்குத் தான் ஏறும்."

"மிஸஸ் ராவ், கார்போஹைட்ரேட் இல்லாத உணவு, கார்போஹைட்ரேட் மிகுந்த உணவு, கொழுப்பு மிகுந்த உணவு--இப்படி எடைக்குறைப்பிலயும் ஒருங்கிணைந்த கொள்கைன்னு எதுவும் கிடையாது. முதலீட்டுக்கு ஏதாவது இருக்கா?" என்றாள் வினோதினி.

திருமதி ராவ் சிரித்தார். "இரைப்பையை பைபாஸ் பண்ண முடியாதம்மா. சரி, மூணாவது விதியைச் சொல்றேன். 'அது ஏறுமுகச் சந்தையா (Bull Market), இறங்குமுகச் சந்தையா (Bear Market) என்று பார்.' தொடர்ந்து ஒரு சில நாட்களாவது அதே மாதிரி இருக்கிறதான்னு பார்ப்பது ஒரு வழி. ஏறுமுகச் சந்தையில் எல்லா முக்கியக் குறியீடுகளும், சந்தையில் பட்டியலிட்ட நிதிகளும் மேலே ஏறுவதுடன், அதிக அளவிலும் கைமாறும். கரடிச் சந்தையிலோ இவையெல்லாம் இறங்கும் ஆனால் வாங்கிவிற்ற எண்ணிக்கை அதிகமாக இருக்கும். செய்தி ஊடகங்களோ பங்குச் சந்தைப் பண்டிதர்களோ சந்தையின் போக்கைச் சொல்லமுடியாது, ஆனால் விலை நிலவரமும், எண்ணிக்கையும் உண்மையைச் சொல்லிவிடும்.

"எதிரிடையான சின்ன செய்தி வந்தாலும் கீழ்முகச் சந்தையைச் சாய்த்துவிடும்; மேல்முகச் சந்தையிலோ எந்த நல்ல செய்தியும் ஒரு தூக்கு தூக்கிவிடும்.

"கரடிச் சந்தை இருக்கும் போது பேசாமல் பணத்தை வங்கியில் போட்டுவிட்டுத் தூங்குவது நல்லது. சந்தை விழித்து எழும்போது நாமும் விழித்துக்கொண்டு பணத்தைப் போட்டால், பணம் பெருகும்."

எல்லோரும் கேட்கத் துடித்துக் கொண்டிருந்த கேள்வியை ஜெயசிங் கேட்டேவிட்டார், "மிஸஸ் ராவ், உங்களுக்கு ஏன் எடைக்குறைப்பு வகுப்பு?"

"ஆ, அதுவா? ஒரு காலத்துப் பூசணிக்காய் புடலங்காயானது எப்படின்னு உங்களுக்குச் சொல்லறதுக்காகத்தான்: தினமும் காளைமாடு மாதிரி ஓடணும், அதுவும் ஒரு கரடி துரத்தினாப் போல" என்றார்.

ஆங்கிலத்தில்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline