Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | சமயம் | தகவல்.காம் | குறுக்கெழுத்துப்புதிர் | முன்னோடி | சிறுகதை
பொது | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | கதிரவனை கேளுங்கள் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | வாசகர் கடிதம் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
போகிற போக்கில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கீதாபென்னெட்
- மணி மு.மணிவண்ணன்|டிசம்பர் 2001|
Share:
Click Here Enlargeஎன் கதைகள் உணர்வுகளைப் பற்றியன....

மணி மு. மணிவண்ணன், அருணா கிருஷ்ணன்
தொகுப்பு: மதுரபாரதி

கதாசிரியர், வீணை இசைக் கலைஞர் எனப் பரவலாக எல்லோராலும் நன்கறியப்பட்டவர் கீதா பென்னட். 'தென்றல்' பத்திரிகையில் இவர் எழுதி வரும் கட்டுரைத் தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதை அனைவரும் அறிவர். நெடுநாள்களாக அமெரிக்காவில் வசித்து வரும் இவர் தமிழகம் மற்றும் அமெரிக்கா இடையி லான கலாச்சார, பண்பாட்டுச் சிக்கல்களைத் தம்முடைய எழுத்துக்களில் பதிவு செய்து வருகிறார். கீதா பென்னட்டின் எழுத்து மற்றும் அவரது எழுத்துலக அனுபவங்கள் பற்றி 'தென்றல்' வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

நீங்கள் எழுத ஆரம்பித்த பின்னணி பற்றிக் கூறுங்களேன்?

நான் என் கணவர் ·பிராங்க் பென்னட்டுடன் ஒரு முறை இந்தியாவுக்கு வந்திருந்த போதுதான் எழுதத் தொடங்கினேன். அவர் தன் பெயரைப் போலவே ரொம்ப '·ப்ராங்க்'. பிடிக்கவில்லை என்றால் உடனே பட்டென்று பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவார். உடனே மறந்தும் விடுவார். நான் அப்படியில்லை. மனதுக்குள்ளேயே சேர்த்து வைத்துக் கொண்டிருப்பேன். இந்த வித்தியாசத்தை வைத்து 'இது பொறாமையா' என்று ஒரு கதை எழுதினேன். அது மங்கை பத்திரிகையில் வெளி வந்தது.

உங்களின் தனித்துவமான எழுத்தை நீங்கள் எப்படி கைவரப் பெற்றீர்கள்?

அதற்கு நான் எழுத்தாளர் சுஜாதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். மாம்பலம், மயிலாப்பூர் என்று எத்தனையோ பேர் கதை எழுதுகிறார்கள். நீங்கள் வாழும் நாட்டு மனிதர்களின் கதைகளை எழுதுங்கள் என்று அவர் சொன்னது உந்துதலாக அமைந்தது. அந்த உந்துதலில் 'வெள்ளை நிறத்தொரு பூனைக்குட்டி' என்ற கதை யொன்றை எழுதினேன்.

டெக்சாஸ் பள்ளியிலே படிக்கிற இந்தியக் குழந்தையைப் பற்றியது அது. பழுப்பு நிறத் தோல் உடைய அந்தச் சிறுவன் வெள்ளை நிறக்குழந்தைகளிடையே படும் அவதியைப் பேசும் அந்தக் கதையை ஒரு பிரபல தமிழ்ப் பத்திரிக்கை பிரசுரிக்க மறுத்துவிட்டது.

அது அமெரிக்காவை விமர்சிக்கிறதாம்! இப்பொழுதுகூட 'மத்தளம்' என்றொரு கதை அனுப்பியிருக்கிறேன். அந்தக் கதை நம் தலைமுறையைப் பற்றியது. நம் தாய் தந்தையர் இங்கே வந்து இருக்க மாட்டேன் என்கிறார்கள். நமது குழந்தைகளோ இந்தியாவில் போய் வாழ்வது சாத்தியமே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை இந்தியாவுக்குப் போகும் போதும் எப்போது இங்கே திரும்பி வரப் போகிறாய் என்று நிச்சயம் பெற்றோர்கள் கேட்பார்கள். இரண்டு தலைமுறைகளுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிற தலைமுறை நாம். அதைத்தான் 'மத்தளம்' என்கிற கதையில் சொல்லியிருக்கிறேன்.

இன்னொரு வகையில் பார்த்தால், இந்த நாட்டின் தாக்கத்தினால் 'சுதந்திர சிந்தனை' வேண்டுமென்று ஒரு பக்கம் குழந்தைகளிடம் எதிர்பார்ப்போம். மறுபக்கம் நம்ம கலாச் சாரத்தை அவங்க பின்பற்ற வேண்டும் என்று சொல்லுவோம். இது மாதிரியான கலாச்சார மற்றும் தலைமுறை இடைவெளிச் சிக்கல்களை என்னுடைய கதைகளில் பதிவு செய்கிறேன்.

உங்களுடைய 'வித்தியாசங்கள்' கதையில் ஒரு மகன் மருத்துவச் செலவுகள் அதிகமாகும் என்று அஞ்சி தன்னுடைய தந்தையை இந்திய முதியோர் இல்லமொன்றில் விட்டு விடுவது போல் எழுதியிருக்கிறீர்களே! அதைப் பற்றி...?

நமக்கு தாய்தந்தையர் மேலே மிகுந்த பாசம் இருக்கிறது. அவர்களைக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் இந்த நாட்டில் மருத்துவச் செலவு மிக மிக அதிகம். வெகுநாள் முயற்சிக்குப்பின் வசதிகளை அடைகிறோம். ஆனாலும் ஒரு நாளைக்குப் பத்தாயிரம் டாலர் செலவழிக்கும் நிலை வந்தால் அதைத் தாங்குகிற வலிமை நமக்கு இல்லை. அடுத்த தலைமுறையையும் பராமரித்தாக வேண்டுமே!

இது ஒரு இக்கட்டான நிலை தானே?

இக்கட்டுதான். ஆனாலும் எப்படி நமது பெற்றோர் தன் குழந்தைகளுக்காக எல்லாத் தியாகமும் செய்து உயர்த்தினார்களோ அதையேதான் நாமும் இப்போது நமது குழந்தைகளுக்காகச் செய்கிறோம்.

பெரும்பாலும் உங்களுடைய கதைகளில் அமெரிக்கத் தமிழர் களைச் சித்தரிக்கும்போது அவர்கள் 'தான்', 'தனக்கு' என்ற குறுகிய வட்டத்துக்குள் இருந்து செயல்படுவதைப் போல் அமைத்திருக்கிறீர்கள். அவர்க ளோடு ஒப்பிடும்போது இந்தியத் தமிழர்கள் பெருந்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர்களாக உங்கள் கதைகளில் தெரிகிறார்களே! அது சரியா?

(சிரிக்கிறார்) எனக்கு ஒரு பாரபட்சம் உண்டுதான். அதிலும் நமக்கு முந்தைய தலைமுறையினர் மேல் எனக்கு ரொம்ப அபிமானமும் மரியாதையும் உண்டு. நாம் கொஞ்சம் சுயநலமிகளாகத்தான் இருக்கி றோம், இல்லையா?

நான் பார்த்ததை எழுதுகிறேன். முன்கூட்டியே தீர்மானித்துக் கொண்டு இவர்களெல்லாம் சுயநலக்காரர்கள் என்று சொல்லவில்லை. நீங்கள் சொன்னபிறகுதான் என் கதையில் அமெரிக்கத் தமிழர்கள் இப்படிச் சித்தரிக்கப் படுகிறார்கள் என்பதைக் கவனிக்கிறேன். எனக்கே வியப்பாக இருக்கிறது.

உதாரணமாக 'பாகப் பிரிவினை" என்ற பழைய படத்தில் எம். ஆர். ராதா 'சிங்கப்பூரா'னாக வந்து, ஒரு சதி செய்கிற, பொடி வைத்துப் பேசுகிற ஆசாமியாக இருக்கிறாரோ, அதுபோல உங்கள் கதையில் அமெரிக்கத் தமிழனை யும் அதுபோலத்தானே சித்திரிக் கிறீர்கள்?

அப்படியெல்லாம் நான் திட்டமிட்டு வில்ல னாகச் சித்தரிக்கவில்லை. என் கதைகள் பொதுவாக மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிப்பன, பாத்திரங்களைப் பற்றியல்ல. அமரர் சாவியும் சொல்லுவார் "கீதா, உங்கள் கதைகளில் நிகழ்ச்சிகளைவிட உணர்ச்சிகள் நிறைய இருக்கின்றன" என்று.

நீங்கள் நல்ல இலட்சிய வாதியான அமெரிக்கத் தமிழர் பாத்திரங் களையும் படைத் திருக்கிறீர்கள். 'இது மனித காதலாம்' என்ற ஒரு கதையில் டாக்டரும் அவர் மனைவியும் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லையென்று பொதுத் தொண்டில் இறங்குகிறார்கள். அவர்கள் மிகவும் அன்பு மிகுந்தவர் களாகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் மிக அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். அதில் யாழினி என்ற அழகான தமிழ்ப் பெயரை ஒரு பாத்திரத்துக்குக் கொடுத்திருந் தீர்கள். சரிதானே?

என்னைவிட என் கதையை நீங்கள் மிக நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். ஒரு இலங்கைத் தமிழரின் பெயர் அது. எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. நான் என் கதையில் அப்பெயரை உபயோகித்துக் கொண்டேன்.

உங்களுடைய 'ஊனம்' என்ற கதையில் ஊனமுள்ள மகன் பிறந்ததும் அப்பாவும் பாட்டியும் குழந்தையைக் கொன்று விடலாம் என்று சொல்கிறார்கள். அம்மா அதற்கு ஒப்புக்கொள்ளாமல், குழந்தை யோடு ஓடிவிடுகிறாள். யாருடைய ஆதரவும் இல்லாமல் அவள் வளர்த்துவருகிறாள். அவள் செய்யும் அவ்வளவு சேவையையும் அவன் மிகத் துச்சமாக அவன் கருதுகி றான். அவனுக்கு 18 வயதாகிறது. அப் போது அமெரிக்கத் தமிழ்ப் பெண்ணொ ருத்தியைச் சந்திக்கிறான். தனக்குப் பிறக்கப்போகும் குழந்தை ஊனமுற்றதாக இருக்கப்போகிறது என்று அறிந்ததும் கருவைக் கலைத்துவிட்டதாக அவள் சொன்னதும், தன் தாய் தனக்காக எவ்வளவு பாடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரியவருகிறது. இந்தக் கதையைப் பற்றி...?

ஆமாம். ஊனமுற்றவர்களுக்கு எல்லா வசதி களும் இருந்தும், அப்படி ஒரு குழந்தை தனக்கு வேண்டுமா என்று யோசித்துவிட்டு அவள் கருக்கலைப்பு செய்திருக்கிறாள். ஆனாலும் அந்தக்கதை தாய்க்கும் மகனுக்கும் இடை யேயான உறவைச் சித்தரிப்பது.

அதே மாதிரி உங்களுடைய 'இன்னொரு காதல் கதை' என்ற சிறுகதையில்...?

அமெரிக்காவிலே வளர்ந்த தமிழ்ப்பெண், தமிழ்நாட்டுக்குப் போயிருக்கிறாள். சகோத ரர்கள் இருவரில் தம்பி அவளைக் காதலிக் கிறான். அவளும் அவனைத்தான் விரும்புகிறாள். ஆனாலும் கதை வேறு மாதிரிப் போய்விடுகிறது.

அதில்லை. நீங்கள் அந்தப் பெண்ணைப்பற்றி அங்காங்கே சொல்லிக் கொண்டே போவீர்கள். அவள் ஆடையணிகிற முறை, உதட்டில் தொங்கும் சிகரெட் என்று இப்படி. ஒரு தமிழ்நாட்டு ஆணுக்கு இவை யெல்லாம் மிகச் சங்கடமளிக்கிற விஷயங்கள். இப்படிப்பட்ட ஒருத்தியை மணந்து கொள்கிறேன் என்று பெற் றோரிடம் சொல்வது மிகவும் கடினம். ஆனாலும், விட்டில் பூச்சி விளக்கில் விழுவதுபோல, இவை அவனைக் கவர் கின்றன. காதல் வேகத்தில் விரும்பத் தக்கவையாய் இருக்கின்ற இதே விஷயங் கள் கல்யாணத்துக்குப் பின் வெறுக்கத் தக்கவையாய் ஆகிவிடுகின்றனவே. அது பற்றி?

நீங்கள் சொல்வது சரி. கல்யாணத்துக்குப் பின் என்ன ஆகிறது என்பதையே ஒரு நாவலாக எழுதலாம் என்று யோசித்து வருகிறேன்.

உங்கள் கதைகளைப் படிக்கும் போது இது ஒரு பெண்ணால் எழுதப்பட்டது என்பதைச் சொல்ல முடியும். உணர்ச்சிகள் மட்டும் அல்ல, பல சின்னச் சின்ன கூர்மையான கவனித்தல், அவர்கள் என்ன அணிந்திருந்தார்கள், எங்கு இருந்தார்கள் என்பவையெல்லாம் உங்கள் எழுத்தில் காண முடிகிறது. ஓர் ஆண் பொதுவாக இதையெல்லாம் கவனிப் பதில்லை. எழுதுவதுமில்லைதானே?

உண்மைதான். பலபேர் என்னிடம் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். என்னுடைய பெரும் பாலான கதைகள் ஒரு ஆண் பாத்திரம் சொல்லுவதாக அமைந்திருக்கும். "உங்களால் எப்படி ஆண்கள் தங்களுக்கு மத்தியிலே பேசிக்கொள்ளுவதையெல்லாம் எழுத முடிகிறது?" என்று வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு.

நீங்கள் உங்களை ஒரு ஆணின் இடத்தில் இருத்திக் கொண்டு எழுதுவதால் இது முடிகிறதா?

அதுவும் தான். தவிர நம்மைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து கவனித்து மனதில் ஓரிடத்தில் அதைச் சேமித்து வைத்துக் கொள்வதாலும் சாத்தியமாகிறது. 'செவ்வாயும் வெள்ளியும்' என்று ஒரு கதை. அதில் வரும் மனைவி தன்னை நெடுநேரம் அலங்கரித்துக் கொள்வாள். கணவனோ எதையுமே கவனிக்க மாட்டான். "என்னுடைய எல்லா ஆடைகளையும் என் நண்பர்கள் பார்த்துவிட்டனர். புதிதாக எதுவும் இல்லை, என்ன செய்வது" என்று கேட்பாள். அதற்கு அவன் "நண்பர்களை மாற்றிவிடு" என்று சொல்வான். (சிரிப்பு) இருவரும் புறப்படுவார்கள். அவன் போகிற இடத்துக்கு வழி எங்கே என்பதைத் தெரிந்து கொள்ளாமலே புறப்பட்டு விடுவான். அவள் சொல்லியும் கேட்கமாட்டான். வேறு யாரிடமும் வழியும் கேட்கமாட்டான். கடைசியில் மிகத் தாமதமாகப் போய்ச் சேருவார்கள்.

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் என்று யாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

கல்கியின் எழுத்துக்கள் எனக்கு ரெம்பப் பிடிக்கும். அவருடைய பொன்னியின் செல்வனை எத்தனை தடவை படித்திருப்பேன் என்றுகூட கணக்கிட முடியாது. அதைவிட எனக்கு 'சிவகாமியின் சபதம்' மிகவும் பிடித்தது. குறிப்பாக சிவகாமியின் பாத்திரப் படைப்பு. ஒரு ஆண் எழுத்தாளரால் அவளுடைய உணர்வு களை அவ்வளவு துல்லியமாக எப்படிப் படம் பிடிக்க முடிந்தது என்பதில் எனக்கு ஒரு வியப்பு உண்டு.
உங்களது கதைக்கான கதை மாந்தர்களை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

வெவ்வேறு இடங்களில் சந்திக்கும் போது கவனிப்பதுதான்.

இசைக் கலைஞர், எழுத்தாளர் எனப் பல்துறைகளிலும் இயங்கி வரும் நீங்கள், உங்களுடைய தனித்தன்மையையும் காப்பாற்றிக் கொண்டு அதேசமயம் நிறையவும் எப்படி உங்களால் எழுத முடிகிறது?

நான் செய்யும் எல்லாவற்றையும் மிக நேசித்துச் செய்கிறேன். இசை என் தந்தையின் வழி எனக்கு வந்தது. நான் systems analyst ஆக இருந்த காலத்தில் மதிய உணவு இடைவேளை அரை மணி நேரம். ஓடிப்போய் புல்வெளியில் உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். ஒரு வாரத்தில் இரண்டு மூன்று கதைகள் அனுப்பிவிடுவேன். அப்போதெல்லாம் தொடர்ந்து கதைகள் பத்திரிக்கைகளில் வந்துகொண்டே இருக்கும்

எழுத்துத் துறையில் உங்கள் முன்னோடியென்று யாரையாவது சொல்ல முடியுமா?

குறிப்பிட்டு யாரையும் சொல்வதற்கில்லை.

உங்களது எழுத்துப் பாணி பற்றி..?

சங்கீதமானாலும் சரி, கதையானாலும் சரி எளிமையாக இருக்கவேண்டும் என்று அப்பா சொல்லுவார். அதுதான் மக்களைச் சென்ற டையும். படிப்பவர்களுக்குப் புரியவே கூடாது அல்லது அவர்கள் முட்டாள்கள் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் உள்ளனர். அதை நான் ஒப்புவதில்லை. எளிமையாக எழுதுவது கடினம். படிப்பவனுக்கு அது தெரியாது.

உலக இலக்கியங்களின் அறிமுகம் பற்றி...?

மாப்பசான், ஓ ஹென்றி போன்ற பலரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன்.

தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பற்றி...?

அவற்றை படிப்பதுண்டு. ஆனாலும், தாங்கள்தான் அறிவுஜீவிகள் என்று அவை செய்கிற பாசாங்கை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

அம்பை, ராஜம் கிருஷ்ணன் போன்ற பெண் எழுத்தாளர்களைப்பற்றி...?

இருவரையும் படித்திருக்கிறேன். ராஜம் கிருஷ்ணன் வியக்கத் தக்கவர். ஆண்களைக் கோபப் படுத்துவதுதான் பெண்ணியம் என்பதுபோல் சிலசமயம் அம்பை எழுதுகிறார். என் கருத்து அதுவல்ல.

ஆரம்பக் காலத்தில் உங்களது கதைகளை வெளியிட்ட பத்திரி கைகள், உங்களை ஊக்குவித் தவர்கள் யார் யார்?

முக்கியமாக சாவி அவர்களைச் சொல்லலாம். அடுத்து மணியம் அவர்களும் 'இதயம் பேசுகிறது' இதழில் என் கதைகளை நிறையப் பதிப்பித்தார். இப்போது விகடன், குமுதம், மங்கையர் மலர் ஆகிய மூன்றிலுமே அதிகம் எழுதுகிறேன்.

உங்களுக்கு இலக்கியச் சிந்தனை விருது எந்தக் கதைக்காகக் கிடைத்தது?

'வேலைக்குப் போகும் ஒரு மகள்' என்கிற கதைக்குக் கிடைத்தது.

ஒரு அமெரிக்கரைத் திருமணம் செய்துகொண்டு, அமெரிக்கா வுக்கே வந்துவிட்ட பிறகும் கூட எப்படி நீங்கள் இன்னும் தமிழிலே எழுதுவதையும், வீணை வாசிப்பதையும் நிறுத்தாமல் செய்கிறீர்கள்?

என் கணவர்தான் காரணம். எனக்கு எதெல்லாம் முக்கியமோ அதையெல்லாம் செய்வதற்கு நூறு சதவீதத்துக்கும் மேல் சுதந்திரம் உண்டு. Fusion music முதலியவை செய்வதற்காக இதர கலைஞர்களுடன் உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறேன். அதற்கு அவர் முழு மனதோடு உடன்பட்டிருக்கிறார். அந்தப் புரிதல்தான் மிக முக்கியம் என்று நினைக் கிறேன்.

அவருக்குத் தமிழ் தெரியாது. என் கதையை அவருக்குப் படித்து காண்பிக்க முடிவ தில்லையே என்ற வருத்தம் எனக்கு உண்டு. சில சமயங்களில் அவரே 'என்ன எழுதி யிருக்கிறாய், எனக்குச் சொல்' என்பார். நான் ஆங்கிலத்தில் சொல்வேன். அபூர்வமாக, ஒரு கதையை எப்படி முடிப்பது என்று குழப்பமாக இருக்கும்போது, கதை என்று சொல்லாமல் அவரிடம் விவாதிப்பேன். அவர் சொல்லும் கருத்து நன்றாக இருக்கும். பின்னால் அது கதையாக வந்திருக்கிறது என்று சொல்வேன். 'உன்னிடம் பேசும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும்' என்று கேலி செய்வார்.

மணி மு. மணிவண்ணன், அருணா கிருஷ்ணன்
தொகுப்பு: மதுரபாரதி
Share: 
© Copyright 2020 Tamilonline