Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கு. கல்யாணசுந்தரம் - நா.கண்ணன் உரையாடல்
உன்னிகிருஷ்ணன்
- அலர்மேல் ரிஷி|ஆகஸ்டு 2002|
Share:
Click Here Enlargeபெயரைச் சொன்னால் தெரிந்து கொள்ளும் அளவிற்கு ஓர் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ள இசைக்கலைஞர் கலைமாமணி உன்னிகிருஷ்ணன் அவர்கள் 'தென்றல்' வாசகர்களுக்கு அளித்த பேட்டி:

அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமே இல்லாதவர் நீங்கள். இனிமையான உங்களுடைய இசையை ரசித்துப் பாராட்டும் அன்பர்களின் சார்பில், தென்றல் மாத இதழுக்காக உங்களைப் பேட்டிக் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.

உங்களுடைய குடும்பம் இசையுலகத் தொடர்பு உடையதா?

எங்கள் குடும்பத்தில் இசைமேதைகள் என்று யாரும் இல்லை என்றாலும் என்னுடைய தந்தைவழிக் கொள்ளுப்பாட்டனார் இசையார்வம் மிக்கவர். இப்பொழுதுள்ள 'மியூசிக் அகாடமி' கட்டிடம் கட்டப்படுமுன், எங்களுடைய 'கேசரி குடீரம்' (இராயப்பேட்டையில் உள்ளது) என்ற இல்லத்தை ஒட்டியிருந்த இடத்தை (Annexe) அவர் மியூசிக் அகாடமியின் இசை பயிற்சிகள் நடத்துவதற்கு உதவியிருக்கிறார். பெரிய பெரிய வித்வான்கள் கச்சேரிகள் அங்கு நடந்திருக்கின்றன. மியூசிக் அகாடமி நிர்வாக அலுவலகமும் அங்குதான் அமைந்திருந்தது.

என்னுடைய தாயார் இசைப்பயிற்சி பெற்றவர். பக்திப்பாடல்கள் பாடுவார். சிறு வயதில் பாலக்காட்டிலும் பிறகு சென்னையிலும் ஹரிகதை நிகழ்த்தியிருக்கிறார். என் தந்தைக்கும் இசையில் ரசனை உண்டு. என் தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரி கோமாட்டி ஜானகி என்பவர் இராணிமேரிக் கல்லூரியில் இசைப்பேராசிரியராகப் பணியாற் றியவர்.

நீங்கள் பள்ளிப்படிப்பு, கல்லூரி படிப்பு இவற்றோடு விளையாட்டிலும் சிறந்து விளங்கியவர். கிரிக் கெட்டில் சிறந்த பேட்ஸ்மென், விக்கட்கீப்பருங்கூட. இவைகளோடு நிற்காமல் இசையில் பயிற்சி பெற உங்களுக்கு நேரங்கிடைத்ததெப்படி?

இன்றைக்கு பள்ளி மாணவர்களுக் இருக்கும் கெடுபிடி, கடின உழைப்பு இருபது ஆண்டுகளுக்குமுன் கிடையாது. இன்றைக்குக் கல்வி நிலையங்களும் பெற்றோர்களும் பிள்ளைகளை அதிகமாகவே பிழிந்தெடுக்கிறார்கள். நான் படித்த காலத்தில் இதுபோன்ற pressure இல்லை. சொல்லப்போனால் நான் நன்றாகக் கிரிக்கெட் விளையாடுகிறேன் என்பதற்காகவே விவேகானந்தா கல்லூலியில் பி.காம் வகுப்பில் இடம் கிடைத்தது. கல்லூரிக்குழுவில் விளையாடினேன்.

இசைப் பயிற்சி பற்றி....

பதினோரு வயதில் V.L. சேஷாத்திரி அவர்களிடம் பயில ஆரம்பித்தேன். அவர் மிகவும் நல்லவர். கண்டிப்பெல்லாம் கிடையாது. மென்மை யானவர். என்னுடைய போக்குப்படி கற்றுக் கொடுப்பார் . நான் அப்போதெல்லாம் வீட்டில் கர்நாடக இசை பயின்றாலும், திரைப்படப் பாடல்களைக் கேட்டு அவற்றைக் கற்றுக்கொண்டு பாடுவேன். ஆரம்பத்தில் ஆசான் மெமோரியல் பள்ளியிலும் பின்னர் சாந்தோம் உயர்நிலைப் பள்ளியிலும் பல கலைநிகழ்ச்சிகளில் பாட்டுப் போட்டிகளில் மெல்லிசையில் பரிசுகள் வென்றிருக் கிறேன். சாந்தோம் பள்ளியில் வயலின் குமரேஷ் என் வகுப்புத் தோழன். நாங்கள் இருவரும் நிறைய போட்டிகளில் கலந்து கொள்வோம். கல்லூரியிலும் பல கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுகளைக் குவித்திருக்கிறேன்.

இதனால் படிப்பு பாதிக்கப்படவில்லையா?

தேர்வு நேரத்தில் விளையாட்டு, பாட்டு எல்லாவற்றையும் நிறுத்தி வைப்பேன்.

விளையாடுவதை எதிர்த்தோ, இசைப்பயிற்சியில் தீவிரம் காடடவேண்டுமென்றோ உங்கள் வீட்டில் குரல் எழுந்ததுண்டா?

இல்லை. என் தந்தை ஒரு கிரிக்கெட் பிரியர். நான் ஐந்து வயது சிறுவனாக உள்ள போதே கிரிக்கெட் அசோசியேஷனின் ஆயுள் அங்கத்தினந் ஆக்கினார். நான் விளையாடுவதை ஊக்குவிப்பவர். தாய் என் இசைப் பயிற்சியைப் பாராட்டுவார். ஆனால் கெடுபிடி காட்டமாட்டார். இசையை விளையாட்டாகத்தான் பயின்றேன். கல்லூரி வாழ்க்கை முடிந்த பின்னர்தான் முழுமூச்சாய் அக்கறையோடு இசையைக் கற்றுக் கொண்டேன்.

எந்த இசைக்கலைஞராவது உங்களைக் கவர்ந்து அதன் தாக்கம் உங்களுக்கு இசையின் ஆழத்தை, அழகை உணர வைத்ததா?

பொதுவாக எல்லா இசைக்கலைஞர்களும் என்னைக் கவர்ந்தவர்கள்தாம். ஒவ்வொரு காரணத்திற்காக ஒவ்வொருவரைப் பிடிக்கும். இருப்பினும் கலைமாமணி ஜேசுதாஸ் அவர்களின் இசையில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. மகாராஜபுரம் சந்தானம் அவ்ரகள் இசையிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.

கல்லூரிநாட்களுக்குப் பின் தொடர்ந்த இசைப்பயிற்சி பற்ற....

பேராசிரியர் இராமநாதனிடம் நான்கு ஆண்டுகள் கற்றுக் கொண்டேன். நினைத்தபொழுது போவேன். பாடங்கேட்பேன். வருவேன். கண்டிப்பான பயிற்சி என்று எதுவும் கிடையாது. அவர் உடல்நலம் குன்றியபோது என்னைத் திருமதி சாவித்திரி சத்தியமூர்த்தியிடம் ஒப்படைத்து இசைத்துறையில் முன்னேறச் செய்தார். முறையான, கடுமையான பயிற்சி என்னுடைய 21 வயதில் தொடங்கியது. இன்றைக்கும் என் பயிற்சிக்கு திருமதி சாவித்திரி சத்தியமூர்த்தியிடம்தான் சென்றுக் கொண்டிருக் கிறேன். மேடைக்கச்சேரி அமைய வேண்டிய நெறிமுறைகளையெல்லாம் அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். கற்றுக்கொடுத்ததைப் பாடம் பண்ணிக் கொண்டு வரவேண்டுமென்பதில் மிகவும் கண்டிப் பானவர் அவர். பின்னர் சமீபத்தில் காலமான கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி அவர்களிடமும் கற்றுக் கொண்டேன். இசையுலகில் எந்தக் கீர்த்தனையைக் கேட்டாலும் கற்றுத் தரக்கூடிய ஆற்றல் அவரிடம் உண்டு.

வெவ்வேறு ஆசிரியர்களை அணுகிக் கற்கும்போது அதில் சிரமம் ஏதும் இருப்பதில்லையா? ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உடையவர்களாக இருக்கலாம். நடனப்பயிற்சியில் தனிப்பாணி கொண்டிருப்பார்கள். ஒன்றையொன்ற ஒத்துப்போகாது. இசையில் அதுபோல்?

அங்குதான் ஒரு கலைஞருக்கு தனித்துவம் வருகிறது. அடித்தளம் நல்ல ஆழமாக அமைந்து விட்டால் எல்லோருடைய இசைப்புலமையையும் கிரகித்துக் கொள்ளுவது எளிதாகிவிடும். அவற்றிலிருந்து தனக்கென ஒரு தனிப்பாணி அமையும். இல்லையென்றால் ஒருவருடைய இசையை மட்டுமே பிரதிபலிக்கும் நிலை ஏற்படும். அது imitation போலாகிவிடும்.

21வது வயதில் முறையான பயிற்சி யை ஆரம்பித்த நீங்கள் 28வது வயதிலே கர்நாடக இசைக்காக கலைமாமணி பட்டத்தையும், திரை இசைக்கு தேசிய விருதே வாங்கி விட்டீர்களே!! 'பவித்ரா' என்ற திரைப்படத்தில் உயிரும் நீயே பாடியதற்காகவும், 'காதலன்' படத்தில் பாடிய 'என்னவளே' என்ற பாடலுக்காகவும் 1994-95க்கான சிறந்த திரைப்படப் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறீர்கள். அதுவும் திரைப்படத்தில் நீங்கள் பாடிய முதல் பாடலுக்கே அதுவும் தமிழ்ப் பாடலுக்கே விருது கிடைத்துவிட்டது. தேசிய விருதை முதல் பாடலுக்கே பெற்ற முதல் இளம் கலைஞர் என்பது வியப்புக்குரிய செய்தி. இதில் மற்றொரு சிறப்பு நீங்கள் பிரியாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுத் திருமணம் செய்து கொண்டதும் இதே 1994ஆம் ஆண்டு. மன¨வி காலெடுத்து வைத்தநேரம் தேசிய விருது உங்களைத் தேடி வந்தது என்று உங்கள் மனைவிக்குப் பெருமை சேர்க்கலாமா?

நிச்சயமாக. நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம். பிரியா எனக்கு நிறையவே அதிர்ஷ்டம் கொண்டு வந்திருக்கிறாள்.

உங்களுக்குக் கிடைத்துள்ள மற்ற விருதுகள்?

பாரத் கலாச்சார் வழங்கியுள்ள 'யுவகலா பாரதி'. புதுதில்லியில் ஷண்முகானந்தா ·பைன் ஆர்ட்ஸ் வழங்கிய ''நாதபிரம்மம்'' சென்னையில் கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கிய 'இசைபேரொளி'. தமிழக அரசு 1994ம் ஆண்டில் கர்நாடக இசைக்காக அளித்த 'கலைமாமணி'.

உங்கள் முதல் கச்சேரி? அதைத் தொடர்ந்து மற்ற கச்சேரிகள் பற்றி...

பாலக்காட்டில் என்னுடைய பதினான்கு வயதில் ஒரு கோயிலில் நான் பாடினேன். சென்னையில் M.O. பார்த்தசாரதி அவர்கள் (கிரிக்கெட் வீரர்) நடத்தி வந்த 'தாஸாஞ்சலி' என்ற அமைப்பில் மைலாப்பூர் சாஸ்திரி ஹாலில் என்னுடைய முதல் கச்சேரி நடைபெற்றது. அதன்பின் சபாக்களில் கச்சேரி என்ற வரிசையில் என் முதல் கச்சேரி நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியில் நடந்தது. அதன்பிறகு மியூசிக் அகாடமி, நாரத கானசபா என்று பல சபாக்களிலும் நடைபெற்று வருகின்றன.

உங்கள் இசை வாழ்க்கையில் ஏதாவ தொரு குறிப்பிட்ட காரணம் பற்றி பசுமமையான நினைவில் நிற்கும் நிகழ்ச்சி...

'பாரத ரத்னா' டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின் காசெட் வெளியீட்டு விழா 1990ல் மியூசிக் அகாடமியில் நடந்தது. இறைவணக்கம் பாடவேண்டிய பாடகர் வராமல் போகவே , கடைசி நிமிஷத்தில் எனக்குக் கிடைத்த அழைப்பை ஏற்று நான் இறைவணக்கப் பாடல் பாடினேன். இது மேடைக்கச்சேரி இல்லையென்றாலும், முன் அறிவிப்பு ஏதுமில்லாமல், நான் மேடையில் பாடிய 'நாசிகாபூஷணி' ராகப் பாடலைக் கேட்ட திருமதி. எம்.எஸ். அவர்கள் என்னை அழைத்துப் பாராட்டி ''நீ மிகப் பிரபலமாக வருவாய்'' என்று வாழ்த்தி ஆசிர்வதித்ததை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பெருமையாக இருக்கும்.

அதே போல் காஞ்சிப் பெரியவரிடம் ஆசி பெறச் சென்றபோது அவர், தொடர்ந்து மூன்று நாட்களாக மூடிய அறைக்குள் இருப்பதாகவும் யாருக்கும் தரிசனம் தரவில்லை என்றும் அறிந்தோம். காமாட்சி அம்மனைக் குறித்து நான் ஒரு பாடலை மனமுருகிப் பாடினேன். பாடலை முடிப்பதற்குள்ளாகவே வெளியே வந்து தரிசனம் தந்தார் காஞ்சிப் பரமாச்சாரியார். இந்த நிகழ்ச்சியை நினைவுக்குக் கொண்டு வரும் போதெல்லாம் உடல் புல்லரிக்கும்.

கர்நாடக இசையிலிருந்து திரையி சைக்கு வருவோம். கர்நாடக இசை உலகில் ஒரு அந்தஸ்த்தை எட்டிப் பிடித்து விட்ட நீங்கள் திரையுலகில் பாடுவது குறித்து...

நான் தேடிப்போய் வாய்ப்பைப் பெறவில்லை என்பது ஒருபுறம். திரையிசைப் பாடல்களின் நெளிவு சுளிவுகளைச் சின்ன வயதிலிருந்தே அறிந்தவன். காதால் கேட்டுக் கேட்டுக் கற்றுக்கொண்டு பாடி, போட்டிகளிலும் அதற்காகப் பரிசுகள் வாங்கியி ருக்கிறேன். இசை அமைப்பாளர்கள் முன்னரே தயராக இசை அமைத்து வைத்திருப்பதைக் கேட்டு உடனே பாடிவிடுவேன். அதில் கஷ்டம் எதுவுமில்லை. அதற்கு அதிக உழைப்போ நேரமோ தேவையில்லை. ஒலிப்பதிவு முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் பாட்டே மறந்துவிடும். கர்நாடக இசை அப்படியில்லை. கடினமான உழைப்பு, அதிக நேரம் பயிற்சி இரண்டும் தேவை. அதனால் கர்நாடக இசைக்குத்தான் நான் அதிக நேரத்தை ஒதுக்கி, கடினமாக உழைக்கிறேன். காலையில் திரைப்பட ஒலிப்பதிவு, மாலையில் மேடைக்கச்சேரி என்றாலும் எனக்கு அதில் பாதிப்பில்லை.

அண்மையில் செய்தித்தாள் ஒன்றில் ஒரு கட்டுரைப் படித்தேன். கலைஞர் கள் பிரபலமாக வேண்டுமென்றால் தொலைக்காட்சி மெகா சீ¢ரியலில் தலைப்புப் பாடல் (title song) பாடி அறிமுக மாகிவிட்டவர்கள் மேடைக் கச்சேரிகளில் பிரபலமாகலாம் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த அளவிற்கு தொலைக்காட்சியின் மெல்லிசை வாய்ப்புத்தான் மேடைக் கச்சேரிக்கு அறிமுகப்படுத்தும் என்பது சரியா?

இது வேதனைக்குரியதுதான். நான் திரைப் படத்திலும் தொலைக்காட்சியிலும் வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பே கர்நாடக இசையுலகில் என்னை நிலைநிறுத்திக்கொண்டு விட்டேன் என்பதால் இந்தக் கருத்து என்னைப் பாதிக்காது. இருப்பினும் இன்றைக்கு மக்களுடைய ரசனையும் திரைப்படத் திற்குத்தான். கர்நாடக இசை என்றால் ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் அதற்கு அதிகமான நேரம் செலவிட வேண்டும். கடினமான பயிற்சி, உழைப்பு தேவை. அந்த அளவிற்கு ஆழமான அறிவும் ரசனையும் வேண்டும். தொலைக்காட்சியில் பார்த்தாலும் கர்நாடக சங்கீத நிகழ்ச்சிகள் குறைவு. காரணம் விளம்பரதாரரையும் வருமானத்தையும் கணக்கில் கொண்டுதான் நிகழ்ச்சிகள் அமைகின்றன. பெரும்பாலான சானல்கள் திரைப்படங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கின்றனர். மேடைக்கச்சேரி நடைபெறும் அரங்கிலும் கூட்டம் குறைவு. இலவச நிகழ்ச்சி என்றால் அதுவும் முன்னணிக் கலைஞர் என்றால் மட்டுமே அரங்கு நிறைகிறது.

இன்றைய இளைய சமுதாயத் தினரும் அதிக உழைபில்லாமல் மிகக்குறைந்த கால அளவில் மிக விரைவாகப் பிரபலமாகிவிட வேண்டுமென்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்களே

முன்னால் சொன்னதுபோல் வாய்ப்புக்கள் நிறைய கிடைக்கும் தொலைக்காட்சிகள், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் திரைப்படங்கள் இவை தாம் மக்கள் மனநிலைக்குக் காரணம்.
விமர்சனம் என்று எடுத்துக் கொண் டால் கலைஞர்கள் எதிர்காலத்தை அமைப்பதற்கு அளவுகோலாக விமர்ச னங்கள் அமைகின்றன. இதன் நேர்மை பற்றி...

விமர்சனம் கண்டிப்பாகத் தேவை. அப்போதுதான் கச்சேரிகளில் செய்த தவறு என்ன என்பது புரியும். பின்னால் திருத்திக் கொள்ளவும் முடியும். பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்ளவேண்டும். ஆனால் சில விமர்சகர்கள் பிரபலமான கலைஞர்களைப் பற்றிக் குறை கூறி விமர்சனம் செய்து தங்களுக்கு ஆதாயம் தேடிக் கொள்வதன் மூலம் தங்களை உயர்த்திக் கொள்கிறார்கள். இவர்கள் கருத்துக்கள் கலைஞர்களுடைய எதிர்காலத்தைப் பாதிக்கவும் செயயும். வெளிப்படுத்தும் விமர்சனத்தில் நாகரிகம் வேண்டும். எதிர்மறையாக இல்லாமல் உடன்பாட்டுடன் ஏற்றுக்கொள்ளத் தக்க பண்பாடும் பெருந்தன்மையும் அதில் இருக்க வேண்டும்.

விமர்சகர் மனநிலை பற்றியும் மனோதர்மம் பற்றியும் கூறினீர்கள். பாடகர்கள் கச்சேரி தினத்தன்ற பாடவிருக்கும் கீர்த்தனைகளையும் அவற்றின் ராகங்களையும் பக்க வாத்தியக் காரர்களுக்கு முன்பே அறிவித்தல் நல்லது அல்லவா? அப்படியில்லாமல் கடைசி நிமிஷம் வரை மூச்சுவிடாமல் கச்சேரியில் அவர்கள் வாசிப்பில் தடுமாறுவது கண்டு மகிழ்வது நியாயமா?

பக்க வாத்தியம் என்பதே கச்சேரியின் ஒரு ஒட்டுமொத்த குழு முயற்சி (Team effort). முதலில் சொல்லிவிடுவதுதான் ஆரோக்யமான சூழலாக அமையும். பாடகர் தன் திறமையையும் வயலின் மிருதங்கம் வாசிப்பவர் அதற்கு ஈடாகத் தங்கள் திறமைகளையும் காட்டி வாசிக்கும் போதுதான் நிகழ்ச்சி சிறப்பாக அமைய முடியும். அவர்கள் திணறுவதால் பாடகருக்குப் பெருமை வராது. நிகழ்ச்சி சோபிக்காது. ஆனால் இன்றைக்கும் அப்படிச் சிலர் இருக்கிறார்கள்.

முன்னணி பாடகர்கள் வேண்டுமானால் தங்களோடு இணைந்து வாசித்துப் பழகிய பக்கவாத்தியக் காரர்களை ஏற்பாடு செய்து கொள்ள அனுமதிக் கப்படுகிறார்கள். மற்ற கலைஞர்களுக்கு அவர் களோடு வாசிப்பவரின் பக்கபலம் அதிகம் தேவை. அதனால் பாட்டு, ராகம், தாளம் இவை முன்னரே தெரிவித்திருக்க வேண்டும்.

உங்கள் பக்க வாத்தியக் கலைஞர் களை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள். கடம், கஞ்சிரா, மோர்சிங் போன்றவற்றைத் தேர்ந் தெடுப்பதும் உங்கள் விருப்பமா?

ஆம். நிகழ்ச்சியின் தரம், இடம், கூட்டம் இவற்றைப் பொறுத்தது.

வெளிநாடுகளிலும் நிறைய கச்சேரி களை நிகழ்த்தியிருக்கிறீர்கள். உள்ளூர் கச்சேரிகளுக்கும் வெளி நாடுகள் நிகழ்ச்சிகளுக்கும் இடை யே குறிப்பிடும்படியான வேற்றுமை அல்லது உங்கள் கருத்து...

தாளம், ஸ்வரவிஸ்தாரம், இவற்றில் வெளிநாட்டு ரசிகர்கள் அதிக உற்சாகம் காட்டுகிறார்கள். பக்கவாத்தியத்தின் தனி ஆவர்த்தனமும் அவர்களை உற்சாகப்படுத்துகின்றது.

இன்றைய தலைமுறையினர் ஒரு வருடைய பிரபல்யதை அவர் வெளியிடும் ஒலி நாடாக்காளின் எண்ணிக்கையைப் பொறுத்து மதிப்பிடு கின்றனர். தங்களுடைய வெளியீட்டு எண்ணிக்கை?

ஐம்பதுக்கும் மேல்.

பாடியுள்ள திரைப்படப் பாடல்கள், மொழிகள்...

தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பாடி யிருக்கிறேன். ஹிந்தியிலும் பாடியிருக்கிறேன். 600 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன்.

வேற்று மொழிப்பாடல்களைப் பாடும் போது அதன் பொருளைத் தெரிந்து கொண்டு பாடுகிறீர்களா? உச்சரிப் புக்கு என்ன செய்கிறீர்கள்?

நிச்சயமாக பொருளைக் கேட்டுத் தெரிந்து கொண்டுதான் பாடுவேன். பாடலாசிரியரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாடுவேன். உச்சரிப்பைத் திருத்துவதற்கு அவர் உதவுவார்.

ஒலிப்பதிவின் போது அல்லது கச்சேரியின் போது மைக், அல்லது மியூசிக் ஸிஸ்டம் இவற்றால் பிரச் சனை ஏற்பட்டால் நிதானம் இழப்பீர்களா?

நான் அதிகமாகக் குரலை உயர்த்த மாட்டேன். கோபம் எதுவும் என் நிதானத்தை இழக்க வைக்காது. பெரும்பாலும் அதற்கு வாய்ப்பிருக்காது. என்னுடைய மைக், மியூசிக் ஸிஸ்டம்தான் எடுத்துச் செல்வேன். கோளாறு ஏற்பட்டால் என்னுடைய கருவிகள் தான் காரணம் என்பதால் யார் மீதும் கோபம் வராது.

உங்களுக்கு பட்டப்படிப்பு சட்டவியல் முதுகலைப்படிப்பு என்றிருப்பதால் இசைத்துறைக்கு நான் வந்திரா விட்டால் என்று என்றைக்காவது ஒரு நாள் நினைத்துப் பார்த்ததுண்டா? இப்படி வந்திருக்கலாம்; அப்படி வந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றியதுண்டா?

நான் படிப்பை முடித்தபின் நான்காண்டுகள் பாரி அண்டு கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். என் திருமணத்தின் போது நான் வேலையில் இருந்தேன். இசைக்கச்சேரிகளும் செய்து கொண்டிருந்தேன். சரியான நேரத்தில் டக்கென்று முடிவெடுத்து வேலையை விட்டுவிட்டு இசைத் துறையை முழுநேர வாழ்க்கையாக்கிக் கொண்டேன்.

உங்கள் வளர்ச்சிக்கு உங்கள் பெற்றோர் ஆதரவு முழுமையாக இருந்தது. உங்கள் திருமணத்திற்குப் பிறகு உங்கள் மனைவி ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கிறதா? அவர்களுக்குக் கலை ஆர்வம் உண்டா?

உண்டு. என் மனைவி பரதநாட்டியத்திலும் மோகினியாட்டத்திலும் தேர்ச்சி பெற்றவர். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நாட்டிய நிகழ்ச் சிகளில் பங்கேற்றிருக்கிறார், பரிசுகளும் பட்டங்களும் பெற்றிருக்கிறாள். அவருடைய குடும்பத்திலும் இசையார்வம் உண்டு. அவர் தகப்பனார் கர்நாடக இசையில் நாட்டமுள்ளவர். ரசிப்பவர்.

உங்கள் மகனுக்கு?

நல்ல இசைஞானம் இருப்பது தெரிகிறது. அவனாகவே பயிற்சி இல்லாமலேயே கீபோர்டு வாசிக்கிறான். இசை நுணுக்கம் உள்ளத்தில் இருந்தால்தான் அது சாத்தியமாகும். ஆனால் நாங்கள் அவனுக்கு எந்தப் பயிற்சியும் பெற வேண்டும் என்று வற்புறுத்தவேயில்லை. அவனாக மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கிறான்.

எதிர்காலத்தில் நான் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எதே னும் எண்ணம் உங்கள் உள்ளத்தில் இதுவரை உருவாகியிருக்கிறதா?

அப்படியெதுவுமில்லை. இசைத்துறையில் நுழைந்ததே தாமதமாகத்தான். இன்னும் முயன்று கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. நிறைய பாடவேண்டும். நிறைய நாட்கள் நிறைவாக பாடவேண்டும் என்பதுதான் தற்போதைய எண்ணம்.

நன்றி உன்னிகிருஷ்ணன் அவர்களே! தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

நன்றி, தென்றல் வாசகர்களுக்கு என் வாழ்த்துக்கள்

நிகழ்த்தியவர்/தொகுப்பு: டாக்டர். அலர்மேல்ரிஷி
More

கு. கல்யாணசுந்தரம் - நா.கண்ணன் உரையாடல்
Share: 




© Copyright 2020 Tamilonline