Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
காமராஜர் (1903-1975)
- மதுசூதனன் தெ.|ஆகஸ்டு 2002|
Share:
Click Here Enlargeஇருபதாம் நூற்றாண்டின் தமிழக அரசியலிலும் இந்திய அரசியலிலும் ஏற்பட்ட சமூக மாற்றங்களில் அரசியல் விழிப்புணர்வில் காங்கிரஸ் கட்சிக்கு ஓர் முக்கியமான இடமுண்டு. இந்தியா, பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மேற்கொண்ட சுதந்திரப் போராட்டம் இந்திய மனப்பான்மையை இந்திய தேசியவாதத்தை, இந்திய தேசப்பற்றை, இந்திய நாட்டு விடுதலையை மொழி, இனம், ஜாதி, மதம் எனக் கடந்து மக்களை ஓரணியில் ஒருங்கிணைக்கும் வேகம் முனைப்புற்று வளர்ச்சியடைந்தது.

இந்த வேகமாற்றம் நாட்டின் விடுதலைக்கு அயராது உழைக்கும் தேசபக்தர்களை நாடுபூராவும் திரட்டியது. காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகள் சிதறிக்கிடந்த மக்கள் திரள்களை ஒருங்கிணைக்கத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் அரசியலுடன் முரண்பட்ட அரசியல் நடைமுறைகள் கொண்ட பல்வேறு வேறுபட்ட அரசியல் கட்சிகளும் அக்காலத்தில் இயங்கின.

காங்கிரஸ் கட்சியின் அரசியல் அலையுடன் பல்வேறு தேசபக்தர்கள் தொண்டர்கள் அரசியல் பணியாற்ற தம்மை முழுமையாக அர்ப்பணிக்கத் தொடங்கினர். இவ்வாறு செயல்பட்ட செயல்வீரராகவே காமராஜர் வெளிப்பட்டார். தமிழகம், இந்திய அரசியலின் திசைப்போக்கை தீர்மானிக்கும் - வழிநடத்தும் தலைவராக அரசியல் ராஜதந்திரியாகவே வெளிப் பட்டார். சுதந்திரத்துக்கு பின்னரான இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தின் தக்கவைப்புக்கு உரிய தலைமைப் பண்பை வழங்கும் ஆளுமையாக காமராஜர் இருந்தார்.

1903ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் நாள் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்கிற கிராமத்தில் எளிமையான நாடார் குடும்பத்தில் காமராஜர் பிறந்தார். இவர் பிறந்த குலம் தீண்டப்படாத மக்களுக்கு சற்று உயர்வானதாகக் கருதப்பட்ட தாழ்ந்த குலமாகவே அப்போது இருந்தது. அவர் பிறந்த சாதிக்கு நாடார்கள் என்றுகூட பெயர் இல்லை. நாடார்கள் சாணான் என்று அழைக்கப்பட்டார்கள்.

அக்காலத்தில் நடைமுறையில் இருந்த சமூகப்பழக்கவக்கப்படி உயர்ஜாதி ஆதிக்கசாதி இந்துக்கள் வழிபடும் ஆலயங்களில் நுழைவதற்கு சாணார்களுக்கு உரிமை இருக்கவில்லை. காமராஜர் பிறந்த மாவட்டத்தில் இந்நிலை காணப்பட்டது. கமுதி என்றொரு ஊரில் உள்ள கோயில் ஒன்றில் சாணார்கள் நுழைந்து வழிபட முயன்ற போது அவர்கள் ஆதிக்க சாதியினரால் தடுக்கப்பட்டார்கள். அவமானப்படுத்தப்பட்டார்கள்.

இந்த விஷயத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள். மதுரை நீதிமன்றம் அவர்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த மக்கள் அத் தீர்ப்பால் சோர்ந்து போய்விடவில்லை. வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றார்கள். அங்கும் அவர்களுக்கு பாதகமான தீர்ப்பே கிடைத்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காமராஜர் பிறந்த குலத்தின் சமூகப் பின்னணி என்ன என்பதைத் தெளிவுப்படுத்தப் போதுமானதாகும். காமராஜர் பிறந்த சூழ்நிலை எந்தவிதத்திலும் அவருக்குச் சாதகமானதாகவோ அவரை வாழ்க்கையில் உயர்த்தக்கூடியதாகவோ அமைந்திருக்கவில்லை.

காமராஜர் பிறந்த விருதுப்பட்டி, பதினாயிரம் மக்கள் கொண்ட ஒரு சிற்றூர். பின்னர் அது பேரூராக வளர்ந்த போது விருதுநகர் என்கிற சிறப்புப் பெயரைப் பெற்றது. விருதுப்பட்டியில் வசித்த மக்களில் நாடார்களே பெரும்பான்மையினராக இருந்தனர்.

காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் விருதுப்பட்டியில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். தாயார் சிவகாமி அம்மாள். காமராஜர் ஆறு வயதாக இருக்கும் போதே தந்தையார் காலமானார். தாயார் பெரும் கஷ்டப்பட்டு காமராஜரை ஆளாக்கினார். இவருக்கு நாகம்மா என்ற தங்கை யுண்டு. தாய், பாட்டி, இருவருடைய அரவணைப் பிலும், மாமன் கருப்பையா நாடார் கண்காணிப்பிலும் வளரத் தொடங்கினார் காமராஜர்.

காமராஜர் ஆறாம் வகுப்புவரைதான் கல்வி பயின்றார். படிப்பில் அவ்வளவு ஆர்வம் காட்ட வில்லை. ஊர் சுற்றுவதிலேயே அதிக ஆர்வம் கொண்டிருந்தார். அனுபவப் பாடம் நிறையவே கற்று வந்தார். தனது பதினாறாவது வயதில் சுதந்திரக் கனல் தெரிக்கும் வாலிபனாக நாட்டுவிடுதலைக்காக எதையாவது செய்யவேண்டுமென்ற உந்துதலால் எழுச்சி பெறத் தொடங்கினார். பத்திரிகைகள் படித்து நாட்டு நடப்புகளை அறிந்து அலசி வந்தார். நண்பர்களோடு நாட்டில் நிலவி இருக்கும் பிரச்சனைகளை விரிவாகவே விவாதித்து வந்தார்.

காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகள் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் அங்கு சென்று அவற்றைக் கேட்டு வந்தார். டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க, ஜார்ஜ் ஜோசப் ஆகியோரின் சொற்பொழிவுகளால் காமராஜர் மிகவும் கவரப்பட்டார். அரசியல் நாட்டம் கொண்டவராக மாறினார். காந்தி இவருக்கு லட்சிய புருஷரானார்.

காந்தியின் தலைமைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். காந்திய சிந்தனையின் வழிகாட்டல்படி தனது இறுதிமூச்சுவரை பயணம் செய்தார்.

காங்கிரஸ் பணியே அவரது வாழ்க்கையாயிற்று. இந்த வாழ்க்கை காமராஜர் என்ற அரசியல் தலைவர் உருவாவதற்கு தக்க சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்தது. அரசியலிலிருந்து காமராஜரை திசை திருப்ப அவரது குடும்பம் எவ்வளவோ முயற்சி செய்தும்கூட அது பலனளிக்கவில்லை.

குடும்பம் மிகவும் வறுமைப்பட்ட நிலையில்தான் இருந்தது. காமராஜர் அரசியல் போதனையால் மிகுந்த உற்சாகம் பெற்று வளர்ந்தார். ஆனால் அவரது குடும்பம் காமராஜர் நிலை குறித்து கவலைப்பட்டது. அவருக்கு திருமணம் செய்து வைத்தால் அரசியல் ஈடுபாட்டை காமராஜர் குறைத்துக் கொள்வார் என எதிர்பார்த்தனர். திருமண முயற்சி மேற்கொண்டனர். ஆனால் காமராஜர் பிடிவாதமாகவே திருமணம் செய்ய மறுத்துவிட்டார். நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் வரையில் தன்னுடைய திருமணப் பேச்சுக்கு இடமில்லையென உறுதியாக கூறிவிட்டார். கடைசிவரை அவர் திருமணம் ஆகாமலேயே வாழ்ந்து சாதனைகள் நிகழ்த்திச் சென்றுவிட்டார்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்தார். காங்கிரஸ் உறுப்பினரான காம ராஜர் இந்த இயக்கத்தில் தீவிரமாக ழுழுமூச்சுடன் ஈடுபட்டார். கதர்ப்பிரச்சாரத்திலும் மதுவிலக்குப் பிரச்சாரத்திலும் தீவிரமான பங்கு கொண்டு விருதுநகரை சுற்றியிருந்த பட்டிதொட்டியெங்கும் சென்று காந்தியின் கொள்கைகளைப் பரப்பினார்.

குறுகிய காலத்திலேயே இளைஞரான காமராஜர் விருதுநகர் வட்டாரத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டிய அரசியல் சக்தியாக உருவானார். இக்கால கட்டத்தில் உருவான போராட்டங்கள் யாவற்றிலும் காமராஜர் கலந்து கொண்டு முக்கிய சக்தியாக மாறினார்.

சத்தியமூர்த்தி தலைமையில் காமராஜர் மேற் கொண்ட அரசியல் பணி தமிழக அரசியலில் மாபெரும் திருப்பத்தை உருவாக்கியது. சத்திய மூர்த்தியின் பேச்சுவன்மையும் காமராஜரின் செயல் திறனும் இணைந்து தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவாகியது. இது அக்காலத்தில் ராஜாஜியின் தலைமைக்கு சாவலாகவும் அமைந்தது. 1931ம் ஆண்டிலிருந்து காமராஜரின் அரசியல் பரிணாமம் துல்லியமாக வெளிப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் காமராஜர் கேந்திர மனிதரானார்.

அரசியல் சதுரங்கத்தில் அவரைக் காயாக நகர்த்திய தலைவர்களின் மத்தியில் ராஜதந்திரமாகப் பழகி அவரே ஒரு தலைவராகிக் காய் நகர்த்தும் நிலைக்கு உயர்ந்தார். ராஜாஜிக்கும் சத்தியமூர்த்திக்கும் இடையிலான மோதல் காங்கிரஸ் கட்சிக்கு இன்றுவரை இருக்கும் கோஷ்டிப் பூசல்களில் குழுவாதப் போக்கின் வெளிப்பாடுதான்.

1936இல் காரைக்குடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தேர்தல் நடைபெற்று, சத்தியமூர்த்தி தலைவரானதும் காமராஜரை செயலாளராக்கினார். செயலாளர் பதவியை காமராஜர் முதன்முதலாகப் பெற்றார். 1936ல் நேரு தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்தபோது காமராஜரும் அவருடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1937ல் சென்னை மாநில சட்டமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்றது. முதன்முதலாக அந்தத் தேர்தலில் காமராஜர் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். போட்டியின்றி காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சத்தியமூர்த்தி தலைமையில் மாநில சட்டமன்றம் அமைய வேண்டுமென காமராஜர் விரும்பியிருந்தார்.

சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் இடையிலான மோதல், உரசல் வெளிப்படையாக அரங்கேறியது. கடைசியில் ராஜாஜியை சட்டமன்றத்துக்கு கொண்டு வரவும், அவரேயே தலைமை அமைச்சராக்கவும் மேற்கொண்ட முயற்சிகள் காமராஜருக்கு கவலை யளித்தது.

அமைச்சரவையில் சத்தியமூர்த்திக்கு இடம் கொடுப்பதாக ராஜாஜி உறுதிமொழி கொடுத் திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை ராஜாஜி நிறைவேற்றவில்லை. மேல்சபைக்கு சத்திய மூர்த்திக்கு பதிலாக டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் இடம் பெற்றார். இது போன்ற சம்பவங்கள் காமராஜருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது. ராஜாஜியை புரிந்து கொள்வதற்கு உரிய வாய்ப்புகளாகவும் இவை அமைந்திருந்தன.

ராஜாஜி சத்தியமூர்த்தி இடையிலான மோதல் பின்னர் ராஜாஜி காமராஜர் என்னும் நிலை வரை தொடர அரசியல் காய்நகர்த்தல்கள் நீட்சி பெற்றிருந்தது.

1940ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக காமராஜர் வெற்றி பெற்றார். காமராஜரின் கீழ் சத்தியமூர்த்தி செயலாளராக இருந்து பணிபுரிய முன்வந்தார். ராஜாஜிக்கு எதிராக கொடிபிடித்த காமராஜர் 1971 தேர்தல் வரை அந்தக் கொடியை இறக்கவில்லை.

1940இல் ஏற்பட்ட வெற்றி அவருடைய வாழ்கையிலும் தமிழக அரசியல் போக்கிலும் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காமராஜர் என்ற தலைவர் தவிர்க்கமுடியாத சக்தியாக உருவாவதற்கு சாதகமான நிலைமைகளை உருவாக்கிக் கொடுத் தது. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்படக் கூடிய சக்தியாக காமராஜர் மாறிவிட்டார். அவரது செயற்பாடுகள் திட்டமிடல்கள் காங்கிரஸ் கட்சியின் நிலைபேறாக்கத்துக்கு தூண்டுதலாக இருந்தது. மக்கள் செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தொண்டராக, தலைவராக வலம் வந்தார் காமராஜர்.

காமராஜர் நான்கு ஆண்டுகள் சிறைச்சாலையில் இருந்தார். இக்காலத்தில் நிறைய நூல்களை பயின்றார். அனுபவ அறிவும் புத்தக அறிவும் அவரு டைய பார்வையை விரிவுபடுத்தி இருந்தன. அவர் தங்கியிருந்த சிறையில் தேசிய பெருந்தலைவர் களுள் சிலரும் வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்க ளோடு காமராஜருக்கு ஏற்பட்ட பழக்கம் மிகச் சிறந்த அரசியல் பண்பாளராக அவரை உருவாக்கியது.

காமராஜர் சிறையில் இருந்த போது தமிழக அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. காமராஜருக்கு எதிர்முகாம் போட்டு அரசியல் நடத்திக் கொண்டிருந்த ராஜாஜி, காமராஜரும் மற்ற தலைவர்களும் சிறையில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டும் பணியில் ஈடுபட்டார்.

1943ல் காமராஜரின் அரசியல் வழிகாட்டியான சத்தியமூர்த்தி திடீர்மறைவும் ராஜாஜிக்கு சாதகமாக அமைந்திருந்தது. ஆனால் ஆகஸ்டு போராட்டத்தை எதிர்த்து காங்கிரசிலிருந்து ராஜாஜி விலகி இருந்த காரணத்தால் மக்களின் செல்வாக்கை அவர் இழந்திருந்தார். அவர் நடத்திய பாகிஸ்தான் ஆதரவுப் பிரச்சாராமும் ஆகஸ்டு புரட்சி எதிர்ப்புப் பிரச்சாரமும் காங்கிரஸ் தொண்டர்களிடையே பெருமளவில் மனக்கசப்பை ஏற்படுத்தியிருந்தது.

1944ல் இருந்தே ஆகஸ்டு கைதிகள் ஒவ்வொரு வராக விடுதலை செய்யப்பட்டு வந்தார்கள். 1945ல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். ராஜாஜி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் காமராஜரை அவரைத் தங்கள் தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தார்கள். ஆனால் அப்போதைய நிலைமையை பரிசீலித்து ஓர் முடிவுக்கு வர அவருக்க அவகாசம் தேவைப்பட்டது. அக்காலத்தில் ராஜாஜியின் எதிர்ப்பு அலை தமிழகத்தில் வேகமாக வீசிக் கொண்டிருப் பதை அடையாளம் கண்டிருந்தார்.

தமிழகத்தில் ராஜாஜி தனக்குச் செல்வாக்கு இல்லாமல் போனாலும் மேல்மட்டத் தலைவர்கள் துணையுடன் தமிழக அரசியலில் ஆதிக்கம்செலுத்தத் தொடங்கினார். ராஜாஜியின் கொல்லைப்புற நுழைவு முயற்சியை ஜனநாயக விரோதச் செயல் எனக் காமராஜர் கருதினார். தன்னோடு சமாதானமாகக் பேசிக்கொண்டே அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவுடன் தமிழ்நாடு காங்கிரஸில் நுழைவதற்கு ராஜாஜி மேற்கொண்ட முயற்சி காமராஜரின் தலைமையை பகிரங்கமாக அவமானப் படுத்தியது.

ராஜாஜி - காமராஜ் இடையேயான முரண்பாடுகள் நன்கு வெளியில் வெளிப்பட்டது. பத்திரிகைகளிலும் இது வெளிப்பட்டது. மக்கள் செல்வாக்கு காமராஜருக்கு மட்டும்தான் இருந்தது. ராஜாஜிக்கு மேல்மட்ட தலைவர்களின் ஆதரவு மட்டுமே இருந்தது.

1945ல் திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. மாநாட்டின் முடிவில் ''ராஜாஜி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை'' என்று நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக காங்கிரஸ் தலைமை ராஜாஜியை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொண்டது. இந்த திருப்பரங்குன்றம் மாநாடு காமராஜர் அரசியல் வாழ்க்கையில் திருப்பம் ஏற்படுத்தியது.

1952ல் ராஜாஜி முதல்வராக பொறுப்பேற்றார். 1940 முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக தொடர்ந்து 12 ஆண்டுகள் பதவி வகித்த காமராஜர் அப்பொறுப்பிலிருந்து விலகினார். இரண்டு பொறுப்புகளையும் ராஜாஜியே வகிப்பது நல்லது என்று காமராஜர் விரும்பினார்.

ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்புப் புயலை கிளப்பியது. இத்திட்டத்தை காமராஜர் ஆதரிக்க வில்லை. அதனை கைவிடக்கேட்டுக் கொண்டார். ஆனால் ராஜாஜி அத் திட்டத்தை கைவிடத் தயாராக இல்லை. கட்சிக்குள் எதிர்ப்பு பலமாக வீசியது.

1953 அக்டோபரில் ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிந்தது. தமிழ்நாடு (மலபாரை உள்ளடக்கி இருந் தாலும்) தமிழ் பேசும் மாநிலமாகவே இருந்தது. தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களிடையே ராஜாஜி செல்வாக்கு இழந்துவிட்டார் என்பது நிச்சய மாயிற்று. இனி பதவியில் நீடிப்பது சாத்தியமில்லை எனக் கண்ட ராஜாஜி பதவி விலக முடிவு செய்தார்.

ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜரே முதலமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டு மெனப் பலரும் விரும்பினார்கள். அப்போது தமிழகத் தில் ராஜாஜியின் கல்வித் திட்டம் உருவாக்கியிருந்த கொந்தளிப்பைச் சமாளித்து நிர்வாகத்தை நடத்திச் செல்லக் கூடிய தகுதி காமராஜர் ஒருவருக்குத்தான் உண்டு என சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கருதினார்கள்.
ஆனால் ராஜாஜி காமராஜரை விரும்பவில்லை. இதனால் போட்டி ஏற்பட்டது. ராஜாஜி தனது அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தையே காமராஜருக்கு எதிராகப் போட்டியிடச் செய்தார். சுப்பிரமணியத்தின் பெயரை பக்தவச்சலம் முன்மொழிந்தார். காமராஜருக்கு ஆதரவாக 93 வாக்குகளும் சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக 41 வாக்குகளும் கிடைத்தன. காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சர் ஆனார்.

1954 ஏப்ரல் 13ம் தேதி காமராஜர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 1945 முதல் 1954 வரை ராஜாஜியின் வீழ்ச்சியையும் காமராஜரின் எழுச்சியையும் தமிழக அரசியல் கண்டது. காமராஜர் முதலமைச்சரானது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத புதிய அரசியல் பண்பாடு உதயமானதின்அடையாளமாகவும் பலர் சுட்டிக்காட்டினர். படித்தவர்களும், வசதிபடைத்தவர் களும்தான் ஆட்சி அதிகாரத்துக்குவர முடியும் என்ற நிலைமையை காமராஜர் வருகை மாற்றியமைத்தது.

ராஜாஜி அமைச்சரவையை அப்படியே மாற்றாமல் வைத்துக் கொண்டார். நிர்வாகத்தின் தொடர்நிலை மாறாமல் இருப்பதற்கும் தன்மீது எதிரிகளின் விரோதத்தைக் குறைப்பதற்கும் நிர்வாகம் மாறாமல் இருப்பது அவசியம் என்பதை புரிந்து கொண்டு செயற்பட்டார். தனக்கு எதிராக இயங்கிய பக்தவத் சலம் சி. சுப்பிரமணியம் ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெறுவதை காமராஜர் விரும்பினார். அவர்களது திறமையில் நம்பிக்கை வைத்து செயற்பட்டார். எவரிடத்தும் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

காமராஜருக்கு ஆங்கில அறிவு இல்லையே, அவரால் எப்படி நிர்வாகத்தை வெற்றிகரமாக நடத்தி செல்லமுடியும் எனக் கேட்டவர்கள் உண்டு. ஆனால் காமராஜர் ஒன்பது ஆண்டுகள் தமிழக முதலமைச் சராகத் தொடர்ந்து ஆட்சி செய்துவிட்டு தமது பதவியை தாமே முன் வந்து துறந்தார். அரசியலில் உயர்ந்து உயர்ந்து, செல்லும் போதும் காமராஜர் மக்களில் ஒருவராகவே வாழ்ந்தார். பதவிகள் வந்த போதும் மக்களிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டு தந்தக் கோபுரத் தனிமையில் அவர் வாழ்ந்ததில்லை.

''நான் படிக்காதவன் என்று சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். உண்மைதான். எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் போய் நான் படித்தது கிடையாது. ஆனால் எனக்கு பூகோளம் தெரியும். தமிழ்நாட்டிலுள்ள எல்லாப் பகுதிகளையும் நான் நன்றாகவே அறிவேன். என்னென்ன ஆறுகள் எங்கெங்கு ஓடுகின்றன என்று எனக்குத் தெரியும். ஏரிகள், குளங்கள் எங்கு இருக்கின்றன என்று நான் அறிவேன். எந்த ஊரில் ஜனங்கள் என்ன தொழில் செய்து பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவைகள் எல்லாம் பூகோளம் இல்லையா? குறுக்கு நெடுக்குக் கோடுகளும், வளைந்து செல்லும்கோடுகளும் கொண்ட புத்தகம் மட்டும்தான் பூகோளமா?'' என்று ஒருமுறை காமராஜர் குறிப்பிட்டார்.

இந்தக்கூற்றில் காமராஜருக்கு இருக்கும் தகுதி என்னவென்பது தெட்டத் தெளிவாகிறது. அவர் ஆட்சிக் காலப்பகுதியில் அவரது செயற்திட்டங்கள் சாதனைகள் அவர் மக்கள்பால் கொண்ட ஈடுபாட்டை நன்கு படம்பிடித்துக் காட்டும்.

காமராஜர் மற்ற அரசியல்வாதிகளைப் போல் வளவளவென்று பேசுவது கிடையாது. நீண்ட வாக்கியங்களாகவும் பேசுவது இல்லை. அடிக்கல் நாட்டு விழாவாக இருந்தாலும் சரி, தொழிற்சாலை திறப்பு விழாவாக இருந்தாலும் சரி, நீண்ட சொற்பொழிவுகள் ஆற்றி அவர் நேரத்தை வீணாக்குவதில்லை. தேவையான அளவுக்கு பேசி வேலைகள் துரிதமாக நடக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி விட்டுச் சென்றுவிடுவார்.

வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை கிடைத் துள்ள ஜனநாயகத்தில் மக்களுக்கு முறையாக கல்வியறிவு இல்லாமல் போய்விடுமானால் அந்த ஜனநாயகம் வெற்றி பெறுவது கடினம் என்பது காமராஜரின் கருத்து. நாட்டின் பல்துறை முன்னேற்றமும் கல்வியின் அடிப்படையில்தான் அமைய வேண்டும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். இதற்காக கல்வியில் ஓர் புரட்சியே ஏற்பட திட்டமிட்டு செயற்பட்டார்.

ஆறு வயதிலிருந்து பதினோரு வயது வரையில் உள்ள சிறுவயதினர் யாவரும் கல்வி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தினார். பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கி கல்வியை இலவசமாக்கி அனைவரும் கல்வி பெற வசதி ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும் அனைவருக்கும் மதிய உணவளித்து ஏழை எளிய சிறுவர்கள் கல்விக்கூடப் பக்கம் ஒதுங்க வாய்ப்பு எற்படுத்திக் கொடுத்தார். 'கல்விக்கண் தந்த காமராஜர்' என்ற புகழாரத்தையும் அவர் பெற்றார்.

கல்விப் புரட்சியுடன் மட்டும் நிற்காமல் தமிழகத்திலுள்ள எல்லாக் கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைக்கவும் ஏற்பாடு செய்தார். இருண்ட கிராமங்களில் ஒளி கிடைக்க வேண்டும் என்பது மட்டும் அதன் நோக்கமல்ல. மாறாக கிராமப்புறப் பொருளாதாரம் உறுதியான அடிப்படையில் அமைந்தால்தான் பொதுப் பொருளாதார நிலை சீர்படும் என்று கணக்கிட்டார். இதற்காகவே எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் திட்டத்துக்கு தனியான முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டார். மின்சார வசதி கிடைத்ததால் ஏறத்தாழ 5 லட்சம் பம்புகள் கிராமங்களில் செயல்பட்டு நீர்ப்பாசன வசதியைப் பெருக்கின. இதனால் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணக்கூடிய மாநிலமாக மாற்றினார்.

இதுபோல் தொழில் வளர்ச்சியிலும் அதிக அக்கறை செலுத்தினார். காமராஜரின் ஆட்சியின் தொழில்வளர்ச்சி கொள்கை இருபயன் கொண்ட தாக இருந்தது. முதலாவதாக, சில தொழில்களை அரசாங்கம் தானே மேற்கொண்டு நடத்துவது, தொழில் வளருவதற்கான தொழில் பண்ணைகள் தொழில் பேட்டைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவது. இரண்டாவது, தனியார்த் துறைத் தொழில்கள் வளர அரசாங்கம் ஊக்கமும் உதவியும் அளித்தது.

தொழில் வளர்ச்சியினால் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் பெருகின. தொழில்வளர்ச்சி அடைவதற்கான சாதகமான சூழல் உருவாவதற்கு காமராஜர்ஆட்சி அடித்தளங்களை அமைத்தது.

1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதலமைச் சராக இருந்து காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழகம் புதியதொரு பாதையில் பயணிப்பதற்கான சில அடிப்படைகளை வழங்கி இருக்கிறது என்பது மட்டும் உண்மை.

மூத்த தலைவர்களெல்லாம் பதவி துறந்து கட்சிப்பணிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று காமராஜரால் கொண்டுவரப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் பதவியில் இருந்து விலகினார். இக்காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த சரிவு ஏற்பட்டிருந்த காலமும்கூட.

காங்கிரஸின் செல்வாக்கை மக்களிடையே மீண்டும் கொண்டு செல்ல கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்ட 'காமராஜர் திட்டம்' உதவிடும் என நேரு உள்ளிட்ட தலைவர்களும் நம்பினார்கள். இதுவரை தமிழக அரசியலை வழிநடத்திய காமராஜர் இந்திய தேசிய அரசியலில் பிரவேசிப்பது தவிர்க்க முடியாதது எனும் நிலையை நேரு உள்ளிட்ட தலைவர்கள் உருவாக்கி னார்கள்.

அகில இந்தியக் காங்கிரஸ் தலைவராக காமராஜர் 1964ல் தேர்ந்தெடுக்கப்படடார். தமிழக அளவில் மட்டும் காமராஜரின் சீரிய சிந்தனையும் செயற்பாடும் சுருங்கி இருந்த நிலை மாறி, அனைத்திந்திய அளவிலான காங்கிரஸ் செயற்பாட்டின் தீர்க்கமான பாத்திரம் ஆற்றும் தலைவராக மாறினார்.

நேருவின் இறப்புக்கு பின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு காமராஜருக்கே இருந்தது. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பிரதமராக் கினார். அப்போது காமராஜரின் மதிநுட்பத்தை எல்லோரும் பாராட்டினர். உலக நாடுகளின் கவனமும் காமராஜர் பக்கம் திசை திரும்பியது.

இதுபோல் சாஸ்திரியின் இறப்புக்கு பின்னர் அடுத்தவர் யார் என்ற வினாவுக்குரிய பதிலை காமராஜரிடமே அனைவரும் எதிர்பார்த்தனர். இந்திரா காந்தியை பிரதமராக்கி நெருக்கடி நிலைகள் உருவாகாது சுமுகமாக தீர்வு கண்டார்.

இந்தியாவின் இரண்டு பிரதமர்கள் தேர்வில் உருவாக்கத்தில் காமராஜர் பெரும் பங்கு வகித்துள்ளார் என்பது வரலாறு. அதுபோல் லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி இருவரது செற்பாடுகளால் மனம் வெம்பியிருந்தார் என்பதும் உண்மை. இந்திரா காந்தியுடன் நேரடியாகவே முரண்பட்டு கட்சி பிளவுபட வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது.

தமிழக இந்திய அரசியல் வரலாற்றில் காமராஜரின் உருவாக்கமும் பின்னிப் பிணைந்துள்ளது. சுதந்திரத் துக்கு பின்னரான காலத்தில் இருந்து தேசிய அரசியல் உருவாக்கப் பின்புலம் காமராஜர் எனும் ஆளுமை யுடனும் தொடர்புபட்டதாகவே உள்ளதென்பதை வரலாறு நிரூபிக்கிறது.

எளிமையும், தெளிவான சிந்தனையும், கொள்கை சார்ந்த நோக்கமும் அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பால் அனைவரையும் மதிக்கும் பார்வையும் காமராஜருக்கேயுரிய தனித்தன்மைகள். இதனால் தான் பெரியாரும், அண்ணாவும் அவரை நேசிக்க முடிந்தது. அவராலும் அவர்களை நேசிக்க முடிந்தது. இத்தகைய அரசியல் பண்பாடு அருகிவிட்ட காலத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வறுமைப்பட்ட சாதாரண குடும்பத்தில் பிறந்து பெரும் படித்த மேதாவிகள்கூட செய்ய முடியாத சாதனைகளை நிகழ்த்தி வாழ்ந்தவர் காமராஜர். அவர் 1975 அக்டோபர் 2ம் தேதி காலமானார். ஆனால் இந்திய வரலாற்றில் ஒரு சகாப்தமாகவே மாறிவிட்டார்.

தெ.மதுசூதனன்
Share: 




© Copyright 2020 Tamilonline