Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
நேனோடெக் நாடகம் (பாகம் - 4)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2004|
Share:
பால் ஜென்னிங்ஸின் ஆராய்ச்சி அறைக்குள் நுழைந்ததும் ஒரு சிறு அறை இருந்தது. அதில் பல விண்வெளி வீரர்கள் போன்ற ஆடைகள் ஸீல் செய்யப் பட்ட ப்ளாஸ்டிக் உறைகளுக்குள் தொங்கிக் கொண்டிருந்தன. அதில் வாயை மூடுமாறு ஒரு ·பில்டர் மூடியும் இருந்தது. பால், பீட்டர், ஷாலினி மூவரும் ஒன்னொன்றை எடுத்து அணிந்துக் கொண்டனர். பீட்டர், மற்ற இருவரையும் அணிந்து கொள்ளுமாறு கூறினார். சூர்யா தன் பழங்கால சிப் உற்பத்தித் துறையின் உதாரணத்தால் அது என்ன என்று புரிந்து கொண்டுவிட்டார்.

கிரண் புரியாமல் விழித்தான். "இது என்ன? நாம ஸ்பேஸ் ஸ்டேஷனுக்காப் போறோம்? நான் வரலேப்பா. அதுவும் சைனால ஸார்ஸ் வந்தப்ப எல்லாரும் மூஞ்சில மூடியைப் போட்டுக்கிட்டுத் திரிஞ்சா மாதிரி வேற" என்றான்.

ஷாலினி சிரித்தாள். "இல்லை கிரண். இந்த லேப்ல செய்யற வேலைகள் புழுதி, கிருமிகள் இதெல்லாம் இல்லாம செய்யணும். அதுனால அறையை ரொம்ப சுத்தமா வச்சிருக்கணும். க்ளீன் ரூம்னு சொல்லு வாங்க. அதுனால, வெளியிலிருந்து வரவங்க பாதிச்சுடாம இருக்க இந்த ஆடையைப் போட்டுக்கணும். அந்த வாய், மூக்கு ·பில்டரையும் போட்டுக்கணும்" என்றாள்.

கிரண் "கூல்! நான் போட்டுக் கிட்டப்புறம் என்னை ·போட்டோ எடுத்து, கொஞ்ச நேரத்துக்காவது படு சுத்தமா இருந்தேன்னு அம்மாகிட்ட காட்டிடலாம்! இல்லன்னா நம்பவே மாட்டா" என்றான். ஷாலினி புன்னகையுடன் ஒரு உடையை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

ஆராய்ச்சி அறையைப் பார்த்து கிரண் பிரமித்தே போனான். அவன் பள்ளியில் பார்த்ததை விட, கல்லூரியின் ஆராய்ச்சி அறை பெரியது என்று எண்ணியிருந்தான். இப்போது பார்த்தது, கல்லூரியின் லேப் ஒரு சிறு பொந்து என்று எண்ணுமாறு பிரும்மாண்டமாகவும், பல்வேறு நூதனக் கருவிகள் கொண்டதாகவும் இருந்தது.

ஆராய்ச்சிக் கூடத்தின் தரை பளபள வென்று கண்ணாடி போல் இருந்தது. கருவிகளும் இப்போதுதான் நிர்மாணிக்கப் பட்டவை போலப் புதிதாக ஒரு மாசும் இல்லாமல் இருந்தன. கிரண் "வாவ்!" என்று வாயைப் பிளந்தான். பால் பெருமையுடன் சிலிர்த்துக் கொண்டார்.

"ஆமாம், கிரண் இது நேனோ தொழில் நுட்பத் துறையிலேயே ஒரு தலை சிறந்த லேப். ஆனால், நான் இதைக் கட்ட முடிந்ததற்கு பீட்டருக்குத் தான் நன்றி சொல்லணும். அவர்தான் முதல் மூலதனம் போட்டு, மேலும் VC மூலதனமும் கொண்டு வந்தார்."

பீட்டர் பெருமிதமாகத் தலை குனிந்து மெளனமாகப் பாராட்டை ஏற்றுக் கொண்டார். சூர்யா குறுக்கிட்டார். "VC மூலதனமா? பீட்டர் மட்டுந்தான் பணம் போட்டதாகத் தானே சொன்னீங்க?" என்றார்.

பீட்டர் அட்டகாசமாகச் சிரித்தார். "சூர்யா, நான் முதல்ல மூலதனம் போட்டு ஆரம்பிக்க உதவியது உண்மைதான். ஆனா என்னால போட முடியக்கூடிய பணம் கடைவாய்க்குக் கூடத் தேறாது. இந்த மாதிரி அளவில லேப் கட்டி இந்த மாதிரி மிகப் புதிதான, பெரும்பெரும் கருவிகள் வாங்கறதுக்கு பலப்பல மில்லியன்கள் தேவைப்படுது. அதுனால என்ன? பரவாயில்லை. ஆரம்ப நிலை நிறுவனம்னாலே OPM-தானே?" என்றார்.

கிரண் "அது என்ன OPM?" என்றான்.

பீட்டர் சிரித்தார். "Other People's Money! மத்தவங்க பணத்துல நிறுவனத்தை வளர்க்கணும். அதுதான் சாமர்த்தியம்" என்றார்.

கிரண் சிலாகித்தான். "OPM, ஆஹா நல்லாத்தான் இருக்கு! போதை தர ஓப்பியம் மாதிரி. ஐ லைக் இட்!"

சூர்யா ஏதோ எண்ணத்துடன் மெளன மாகத் தலையாட்டினார்.

கிரண் பரபரப்புடன் "ஆனா இந்தச் சின்ன நிறுவனத்துக்கு எதுக்கு இவ்வளவு கருவிகள். ஏன் அவ்வளவு பெரிசா, விலை அதிகமா வேணும்?" என்றான்.

பீட்டர் விவரித்தார். " இது ஒரு சின்ன எலக்ட்ரான் மைக்ராஸ்கோப். என்ன, அதுவே பல மில்லியன் டாலர். அங்க பாருங்க, அந்த ந்யூக்ளியர் மேக்னடிக் ரெஸொனன்ஸ் கருவி. அதோ இருக்கே, மேக்னடோ பார்டிகிள் ஜெனரேட்டர், காந்தத் துகள்களை உற்பத்தி செய்ய. அதுமட்டுமில்லாம இங்க பயன் படுத்தற சின்னச்சின்ன கருவிகள் கூட மிகமிக ஹை-ப்ரிஸஷன். மிகச் சிறியதான நேனோமீட்டர் அளவில வேலை செய்யறதால எல்லாமே மிகமிக ஹை-டெக் கருவிகள்தான் தேவையா இருக்கு. அதுனால பணமும் ரொம்ப அதிகமா செலவாயிருக்கு."

கிரண் "நேனோ தேவை புரியுது, ஆனா ஏன் இத்தனை மாதிரி கருவிகள்னு புரியலை..." என்றான்.

ஷாலினி விளக்கினாள். "கிரண், இங்கே நாங்க செய்யறது மூணு துறைகளோட சங்கமம். நேனோடெக், உயிரியல் ரசாயனம் (bio-chemistry), மற்றும் மருத்துவம்".

கிரண் குறுக்கிட்டு, "கங்கா, யமுனா, சரஸ்வதி? ஆனா மூணும் இன்னும் இருக்கு" என்றான்.

பால், பீட்டர் இருவர் முகத்திலும் தோன்றிய குழப்பத்தைப் பார்த்து ஷாலினி முறுவலித்தாள். "கிரண் இந்திய கலாச்சாரத்திலிருந்து அள்ளி விடறான். அது மூணும் ஒரு இடத்துல கூடற நதிகள். சரஸ்வதி பழங்காலத்து வேதங்களில குறிப்பிடப்பட்ட நதி, இப்ப இல்லை. அதைத்தான் சொல்றான்" என்று விளக்கினாள்.

பால் சிரித்தார். "வெரி குட் கிரண். ஒரு வேளை நேனோடெக் இன்னும் ரொம்ப வெளிவராததால நவீன சரஸ்வதி நதின்னு சொல்லிக்கலாமோ என்னவோ" என்றார். தன் கண்டு பிடிப்புக்கள் குலைந்து போனதால் தன் நிறுவனமும் சரஸ்வதி நதியைப் போல் மறைந்து விடுமோ என்ற பயமும் சோகமும் அவர் குரலில் இழையோடின.

அதைக் கண்டுகொண்ட ஷாலினி, "கவலைப் படாதீங்க பால். உங்க முயற்சி அப்படி மறையாது. சூர்யா இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வச்சதும் பாருங்க, பரந்து பெருகும் அமேஸான் நதி போல் வளரும்" என்று ஆறுதல் கூறினாள்.

பாலின் கண்ணில் நீர் தளும்பவே ஆரம்பித்து விட்டது. தழுதழுத்த குரலுடன் "தேங்க்ஸ் ஷாலினி. ஐ ஹோப் ஸோ" என்றார்.

சூர்யா அதற்குள் ஆராய்ச்சிக் கூடத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு வந்திருந்தார். "நான் கம்ப்யூட்டர் துறையில வேலை செய்யறச்சே பார்த்த கருவிகள் மாதிரி சிலது இருக்கு. சிலது மருத்துவத் துறையில பார்த்திருக்கேன். சிலது பார்க்காத மாதிரி இருக்கு. இந்தக் கருவிகளை வச்சு நீங்க எப்படி நேனோடெக்ல மருத்துவத்துக்குப் பொருட்கள் தயார் செய்யறீங்கன்னு விளக்கினீங்கன்னா துப்புக் கண்டு பிடிக்க உதவியா இருக்கும்."

பால் விளக்க ஆரம்பித்தார். "எங்க கண்டு பிடிப்பு மிகச் சிறிய காந்தத் துகள்கள் (magnetic particles) செஞ்சு அது மேல மருந்துகளைத் தடவி உடம்புக்குள்ள அனுப்பறது. அவை சரியான இடத்துக்குப் போய் தேவையான செல்களுக்கு மட்டும் மருந்து செலுத்தும். இந்த காந்தத் துகள்கள், மேலும் உடம்பிலிருந்து விஷ மாலிக்யூல்களைச் சேர்த்து வெளிநீக்கும்; அது மட்டுமில்லாம குறிப்பிட்ட செல்களை மட்டும் சாகடிச்சு நேனோ அளவில ஸர்ஜரி செய்யறது எல்லாம் செய்யும்."

கிரண் இடையில் குதித்து, "ஹையா! அது உடம்புக்குள்ள நிறைய குட்டிக் குட்டி காம்பஸ்கள் போலிருக்கு! அப்ப அது போட்டுக் கிட்டவங்க வடக்குப் பக்கமே பார்த்து போய்க்கிட்டிருப்பாங்களா! வேற பக்கமே திரும்ப முடியாது?" என்று கேலியாக வினாவினான். ஷாலினி முகத்தைச் சுளித்து பழித்தாள். "Very Funny, Not! பால் நீங்க மேல சொல்லுங்க."

பால் தொடர்ந்தார். "இந்த காந்தத் துகள்கள் பத்து நேனோ மீட்டர் அளவுல இருந்தாகணும். எதோ குறைச்சலானா ஒன்பது, அதிகமாப் போனா பதினோரு நேனோ மீட்டர் அளவுக்குப் போகலாம் அவ்வளவுதான். அதை விடச் சின்னதாப் போச்சுன்னா இரத்தத்துல மிதந்து உடம்புக்குள்ள சுத்தி வரச்சே சிறுநீரகத்துல பிடிபட்டு வெளியேறிடும்..."

கிரண் ஒரு சுண்டு விரலை மட்டும் நிமிர்த்திக் காட்டி ஈ என்று இளித்தான். ஷாலினி பட்டென்று தட்டி கீழே தள்ளினாள்.

பால் புன்னகையுடன் மேலும் கூறலானார். "பெரிசாப் போச்சுன்னா..."

இரண்டு விரல்களை எடுத்துக் காட்டப் போன கிரண் ஷாலினியின் முறைப்பைக் கண்டு கையைப் பின் மறைத்துக் கொண்டான்.

அதைக் கவனித்துவிட்ட பால் சிரித்துக் கொண்டு தலையாட்டினார். "அப்படி இல்லை! ரொம்பப் பெரிசாயிடுச்சுன்னா உடம்பின் டிஷ்யூவுக்குள்ள போய் செல்களுக்கு மருந்து புகட்ட முடியாது அவ்வளவுதான். சாதாரண மருந்துகள் சின்னதாவோ, பெரிசாவோ ஆயிடறதால இந்த மாதிரி வேலை செய்ய முடியறதில்லை. சரியான அளவில இருக்கற காந்தத் துகள் மேல மருந்து பூசிட்டா அது பாதிக்கப் பட்ட செல்கள் இருக்கற டிஷ்யூவுக்குள்ள அது உடம்புல எங்க இருந்தாலும், இரத்தம் போகற இடமா இருந்துட்டா போதும், புகுந்து வேலையைச் செஞ்சிடும். அது கான்ஸர் செல்லோ, இல்ல வேற மாதிரி பாதிக்கப் பட்டிருக்கோ எதுவா இருந்தாலும் நிவாரணம் தர முடியும். விஷ மாலிக்யூல்களை வசீகரிச்சுப் பிடிச்சுக் கிட்டு வந்து உடம்பிலிருந்து விஷத்தை எடுத்துடவும் முடியும். அந்த மாதிரி செய்ய உடம்புக்குள்ள இரத்தத்தோட ஒரு சில மணி நேரம் இந்தத் துகள்கள் சுத்திக் கிட்டே இருக்கணும்" என்றார்.

சூர்யா மிகவும் யோசனையில் இருந்தார். சில நொடிகளுக்குப் பிறகு தலையாட்டிக் கொண்டு, "ஓ ஐ ஸீ! அப்புறம் இரத்தம் வெளிக்கருவி வழியா செலுத்தப்பட்டு மீண்டும் உடலுக்குள்ள அனுப்பப்படும். அப்ப அந்த வெளியிலிருக்கற கருவியோட மின்காந்தத்துல அந்தக் காந்தத் துகள்கள் சிக்கிக்கிட்டு வெளியே வந்துடும். அப்படித்தானே?" என்றார்.

பீட்டர் பலமாகக் கை தட்டி சிலாகித்தார். "ரைட் யூ ஆர், சூர்யா! அப்படியேதான். எங்க துறை பத்தி எதுவும் தெரியாமாலேயே சரியாக் கண்டு பிடிச்சிட்டீங்களே, பிரமாதம்!"
ஷாலினி தன் சூர்யாவுக்குக் கிடைத்த பாராட்டு தனக்கேக் கிடைத்ததுபோல் பெருமையால் மனம் குளிர்ந்தாள். அவள் பெருமிதம் தளும்பி விம்முவதைக் கண்டுகொண்ட கிரண் பெருமூச்சுடன் தலையசைத்துக் கொண்டான். சூர்யா கவனித்தாரோ இல்லையோ. ஆனால் வழக்கம்போல் வெளிப்படையாகக் கண்டு கொள்ளவேயில்லை.

சூர்யா மீண்டும் சில நொடிகள் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு, "சரி காந்தத் துகள்களை வச்சு மருந்தை செல்களுக்கு அனுப்பறீங்க, அந்த முறையிலேயே வேண்டாத செல்களையும் சாகடிக்க முடியுதுங்கற வரைக்கும் புரியுது. அதை இரத்தம் சுத்தி வரதுமூலம் பல இடங்களுக்கும் அனுப்பி உடம்புல டயாலிஸிஸ் மாதிரியான கருவி மூலம் காந்த சக்தியைப் பயன்படுத்தி வெளியில எடுத்துடறீங்கன்னும் புரிஞ்சுடுச்சு..." என்று சொல்லி விட்டு ஒரு நொடி தயங்கினார்.

பால், பீட்டர், ஷாலினி மூவரும் தலையாட்டி ஆமோதித்தனர். பீட்டர், "ஆமாம், ரொம்ப சரியா சுருக்கிச் சொல்லிட்டீங்க. எங்க லேப் ஆராய்ச்சி பேப்பர்களில கூட அப்ஸ்ட்ரேக்டா போட்டுக்கலாம் போலிருக்கு. பால், நோட் பண்ணிக்குங்க" என்று புன்னகையுடன் விளையாட்டாகக் கூறி விட்டு, "சரி, அதுனால என்ன? மேல எதோ கேக்க வறீங்க போலிருக்கு..." என்றார்.

சூர்யா, "ஆமாம். ஒரு விஷயம் மட்டும் புரியலை. அது மருத்துவ பயோடெக்ல மிக மிக ஆழமாப் போகற விஷயம் நீங்க ஏன் சொல்லலைன்னு எனக்குத் தெரியுது. அதுனாலதான் தயங்கறேன். ஆனா அது ஏன் இப்ப உங்க கண்டு பிடிப்பு சரியா வேலை செய்யலைங்கறத்துக்கு ரொம்ப முக்கியமா இருக்கலாம்னு தோணுது. அதுனால தெரிஞ்சுக்கறது நல்லது..." என்று தயக்கத்துடன் மீண்டும் நிறுத்தினார்.

பால் பாய்ந்தார். "சூர்யா, என்ன இது? அப்படி முக்கியமானதா இருக்கலாம்னா, இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு சதவீத வாய்ப்பு அதிகரிக்கும்னாலும் நான் நாள்பூரா ஆனாலும் பரவாயில்லை, முயற்சி எடுத்து உங்களுக்கு விளக்கத் தயார். சிக்கலான விஷயங்களையும் பளிச்னு உடனே புரிஞ்சுக்கற கூர்மையான திறமை உங்களுக்கு இருக்குன்னு ஏற்கனவே நிரூபிச்சிட்டீங்களே. எவ்வளவு எங்க தொழில்நுட்ப ஆழம் இருந்தாலும் பரவாயில்லை, கேளுங்க" என்றார்.

கிரணும், "ஆமாம் பாஸ், எடுத்து உடுங்க. என்ன பிசாத்து ஆழம்னு பாத்துடலாம்" என்றான்.

சூர்யாவும், தயக்கத்தை தள்ளிவிட்டு, "உங்க வழிமுறை எந்த செல்கள் மட்டு பாதிக்கப் பட்டு மருந்து தேவைப் படறா மாதிரி, அல்லது அழிக்கப் பட வேண்டி இருக்குன்னு எப்படி அந்தக் காந்தத் துகள்களுக்குத் தெரியும்? தப்பான செல்களைக் குறி வைக்கறதை எப்படித் தவிர்க்கறீங்க? எதாவது கருவியின் கோளாறால அந்தக் குறி தவறுவதுனால உங்க வழிமுறை சரியாகாமப் போயிருக்கலாமோ? அதுதான் என் சந்தேகம்."

பால், பீட்டர், ஷாலினி மூவருமே அதிசயத்தோடு கை தட்டி ஆரவாரித்தனர். பால் மூவரின் மனத்திலோடிய எண்ணங் களுக்கு வார்த்தை உருவம் அளித்தார். "ஆஹா! சபாஷ்! பிரமாதம் சூர்யா, பிரமாதம்! நாங்க சொன்னதுல மறந்து விட்டுட்ட ரொம்ப முக்கியமான விஷயத்தைப் பிடிச்சிட்டீங்க. உங்க கேள்வி மிகவும் சரியானது. நல்ல விளைவுகள் மாறி கெட்டுப்போக ஆரம்பிச்சதும் நாங்களும் இந்த விஷயத்தைப் பத்தியும் ரொம்ப சந்தேகப் பட்டோம். ஆனா காரணம் அது இல்லைன்னு நான் நினைக்கறேன். நான் அது எப்படின்னு சொல்றேன், அப்புறம் நீங்க எல்லா விஷயத்தையும் ஆராய்ஞ்சப் புறம் அலசி ஒரு முடிவுக்கு வரலாம்."

சூர்யா ஆழ்ந்த யோசனையுடன் "உம்" என்று கூறித் தலையாட்டி மேலே தொடருமாறு சைகை செய்தார்.

பால் தொடர்ந்தார். "மூணு விதமா செய்யறோம். காந்தத் துகள் மேல மருந்து தடவறோம்னு சொன்னோம் இல்லையா? முதலாவது காந்தக் கவர்ச்சி: எக்ஸ்-ரே, NMR மூலமா எந்த டிஷ்யூ பகுதி பாதிக்கப் பட்டிருக்குன்னு கண்டுபிடிச்சு அந்தப் பகுதில மிகக் கூர்மையான காந்தமுனை கொண்ட ஊசிகளைச் சொருகி மருந்து பூசிய துகள்களைக் கவர்ந்து அங்க வர வழைக்கறோம். இரண்டாவது செல் இணைப்பு. அதாவது எந்த பாதிக்கப் பட்ட செல்லுக்கு மட்டும் சரியா ஒட்டிக் கொள்ளணுமோ அதுக்கு சரியான அணுக்களும் மாலிக்யூல்களும் மருந்துடன் கலந்து தடவப்பட்டிருக்கு. மத்த பாதிக்கப் படாத செல்கள் மேல ஒட்டிக்காது, செல்லும் மருந்தை உறிஞ்சிக்காது. அதுனால பாதிக்கப்பட்ட செல்கள் மட்டுமே சரிப்படுத்தப்படும், அல்லது கொல்லப்படும் - எப்படி வேணுமோ அப்படி. மூணாவது செல் விஷயம் மாதிரியே, ஆனா கிருமி மற்றும் விஷப் பொருட்களின் மாலிக்யூலர் அமைப்புக்கு சரியா ஒட்டிக்கறா மாதிரி பூசி அதெல்லாத்தையும் இரத்தம் போகற இடத்துல எல்லாம் போய் கவர்ந்துகிட்டு வந்து நீக்கிடறது."

பால் தந்த அந்த நீள விளக்கம் சூர்யாவுக்குத் திருப்தி அளித்தது. ஆனால் இன்னும் ஒரு யோசனை அவரை உறுத்தியது. "ரொம்ப தேங்க்ஸ், பால். இப்ப எனக்கு ரொம்ப நல்லாப் புரிஞ்சிடுச்சு. இன்னும் ஒரு சந்தேகம். இப்ப கிருமிகள் உடம்புக்குள்ள போகறச்சே உடலோட நோய்த்தடுப்புச் சக்தி (இம்யூன் ஸிஸ்டம்) எதிர் வேலை செஞ்சு தாக்கி அழிக்குது இல்லயா? அதுனாலதானே மத்தவங்க உடல் பாகங்களைப் பொருத்தினா இம்யூன் ஸிஸ்டத்தை அடக்கறத்துக்கும் மருந்து குடுக்கறாங்க. இந்த மாதிரி காந்தத் துகள்களை பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் மாதிரின்னு எடுத்துக்கிட்டு இம்யூன் ஸிஸ்டம் எதிர் பொருட்களை (anti-bodies) உற்பத்தி செய்து தாக்காதா? அந்த விதத்துல எதாவது கோளாறு ஆகியிருக்கலாமோ?" என்று வினாவினார்.

சூர்யாவின் அறிவுக் கூர்மையை நன்கு உணர்ந்திருந்த கிரணுக்கும் ஷாலினிக்கும் அவர் கூறியது வியப்பளிக்கவேயில்லை - எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். ஆனால் பால், பீட்டர் இருவருடைய வியப்போ உச்ச நிலையை எட்டி விட்டது. அவர்களுடைய முகத்தில் தோன்றி மறைந்த பல்வேறு விசித்திரமான முக பாவனைகள் கிரணுக்கு சிரிப்பையே வரவழைத்து விட்டன. "என்ன அப்படிப் பாக்கறீங்க? சூர்யா எமப்புடி புடிச்சிட்டாரேன்னா? இது ஒண்ணுமே இல்லை. இந்தப் புடி போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமான்னு அதிரடி குடுக்கப் போறார் பாருங்க" என்றான். ஷாலினியும் பெருமையுடன் தன் வசீகரமான புன்னகையை மலர விட்டாள்.

பால் இன்னும் வியப்பால் வாயடைத்து வார்த்தை வராமல் நின்று கொண்டிருந்தார். பீட்டர்தான் முதலில் தலையை பலமாக உதறி வியப்பிலிருந்து தன்னை மீட்டு சுதாரித்துக் கொண்டு பேசினார். "Wow! சூர்யா இதை என்னால நம்பவே முடியலை. இந்தத் துறையில ஊறிப் போன எங்களுக்கே உடனே இது தோணலை. பல விஷயங்களை ஆராய்ஞ்ச பிறகுதான் 'எதிர்ப்புச் சக்தி' விஷயத்தை நாங்க உணர்ந்துக்கிட்டு அதுக்கு வேண்டிய பதிலைக் கண்டு பிடிச்சோம். நீங்க என்னடான்னா பத்து நிமிஷத்துக்குள்ள அதுக்குத் தாவிட்டீங்க. யூ ஆர் ரியலி க்ரேட்!" என்றார்.

சூர்யா தோளைக் குலுக்கி அவருடைய பாராட்டை புறக்கணித்தார். "பிகினர்ஸ் லக்! ஒரு குருட்டு அதிர்ஷ்டம் அவ்வளவுதான். அதைப் பெரிசு படுத்தாதீங்க. இம்யூன் ஸிஸ்டத்தை எப்படி சமாளிக்கறீங்க, கொஞ்சம் விளக்குங்க" என்றார்.

அதற்குள் சுதாரித்துக் கொண்டு விட்ட பால் வியப்புடன் இன்னும் தலையசைத்துக் கொண்டே விளக்க ஆரம்பித்தார். ஆனால் அவரால், முதலில் சூர்யாவின் மேல் அவருக்கு ஏற்பட்ட பிரமிப்பை வெளிப்படுத்தாமல் இருக்க இயலவில்லை. "அவ்வளவு சாதாரணமா தள்ளிடாதீங்க சூர்யா. நான் விஞ்ஞானியா வேலை செஞ்ச இவ்வளவு வருஷத்துல தொழில் நுட்பத்துக்கு புதிதான ஒருத்தர் இந்த மாதிரி மிக அடிப்படையான விஷயங்களை இவ்வளவு சீக்கிரமா கிரகிச்சுக்கிட்டு ஆழமான, கூர்மையான கேள்விகளைக் கேட்டதே இல்லை. நீங்க எங்க பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிச்சுடுவீங்கங்கற நம்பிக்கை இப்ப எனக்குப் பரிபூரணமா வந்திடுச்சு. ரொம்ப நிம்மதியும் ஏற்பட்டிருக்கு. அதுக்கு முதலில் ரொம்ப நன்றி."

உணர்ச்சி பூர்வமாக வார்த்தைகளை அருவியாக அள்ளிக் கொட்டிவிட்ட பால் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தொடர்ந்தார். "நீங்க எழுப்பின கேள்வி மிகவும் முக்கியமானது. அதுக்குத் தீர்வு காணறத்துக்காக நாங்க ரொம்ப நாள் ஆராய்ச்சி செஞ்சோம். பலனும் கிடைச்சது. நாங்க பல்வேறு விதமான காந்தத் துகள்களை வச்சு முயற்சி செஞ்சு, மனித உடலின் பயாலஜிக்கு ஒத்துப் போகறா மாதிரியான ஒரு உலோக, மற்றும் ரசாயன அணுக்களின் கலப்பில கடைசியில கண்டு பிடிச்சிருக்கோம். இந்தத் துகளை பெரும்பாலோரின் இம்யூன் ஸிஸ்டம் தாக்கறதில்லை. அப்படித் தாக்கறவங்களு சரிப்படற மாதிரி வேற கலப்பு இருக்கான்னும் மேல் ஆராய்ச்சி நடந்துக் கிட்டிருக்கு." என்றார்.

சூர்யா விடாமல், "சரி, ஆனா காந்த சக்திக்கு உலோகம் வேணும், புரியுது. அதோட எதுக்கு ரசாயனப் பொருள்?" என்று வினாவினார்.

பால் மீண்டும் வியப்போடு தலையை உலுக்கிக் கொண்டார். "இன்க்ரெடிபிள், சூர்யா! உங்கத் திறமைக்கு எல்லையே இல்லைன்னு நினைக்கிறேன். நீங்க இன்னொரு முக்கியமான விஷயத்தைப் புடிச்சிட்டீங்க. ரசாயனப் பொருள் கொஞ்ச நாளானா இரத்துல கரைஞ்சு வெளியேறிடும். அப்ப இந்தத் துகள்கள் பத்து நேனோமீட்டரை விட சின்னதாகி, சிறுநீரகத்துல சேகரிக்கப் பட்டு வெளியேற்றப்படும். அது எதுக்குன்னா, இரத்துத்திலிருந்து எல்லாத் துகள்களும் காந்தசக்தில பிடிபடாவிட்டாலும் கொஞ்ச நாளுக்குள் எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமா கட்டாயமா எடுத்துடறத்துக்கான யுக்தி. இது பீட்டர் குடுத்த ஐடியாவை வச்சு நான் செஞ்சதுதான். பேடன்ட்டுக்கு மனுப் போட்டிருக்கோம்" என்றார்.

பீட்டரும் பெருமையுடன் சிலிர்த்துக் கொண்டு புன்னகையுடன் பாராட்டை ஏற்றுக் கொண்டார்.

சூர்யா கண்ணை மூடிக் கொண்டு சில நொடிகள் தியானித்து விட்டு, "சரி. நான் இப்ப லேப்ல இருக்கற எல்லாத்தையும் விவரமா கவனிக்கணும். அதுல என்ன தெரியுதுன்னு பார்க்கலாம்." என்றார்.

பரிசோதனை அறையில் சூர்யா கண்டு பிடித்த துப்புக்கள், அந்த நேனோடெக் விஞ்ஞானிகளுக்கு பலத்த அதிர்ச்சியையே அளித்து விட்டன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 


© Copyright 2020 Tamilonline