Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா?
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
நேனோடெத் நாடகம் (பாகம் - 5)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2004|
Share:
சூர்யா ஆராய்ச்சி அறையை ஒரு முறை சுற்றி வந்தார். பல விதமான கருவிகளையும் அருகில் சென்று அவற்றின் டயல்களையும், ஸ்விட்சுகளையும் அருகில் குனிந்து பார்த்தார். இரண்டு நிமிடங்களுக்குள் தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பி விட்டார்.

பால் ஆவலுடன் "அதுக்குள்ள எதாவது கண்டு பிடிச்சிட்டீங்களா சூர்யா?" என்று மிக ஆவலுடன் வினவினார். சூர்யா இல்லையென்று தலையாட்டியதும் அவர் முகம் ஏமாற்றத்தால் சுருங்கி விட்டது.

ஆனால் சூர்யா முறுவலுடன் "எனக்கு இந்த விஷயத்தைப் பற்றி இன்னும் தெரிய வேண்டியது நிறைய இருக்குன்னு மட்டும் கண்டு பிடிச்சேன் அவ்வளவுதான்" என்றார்.

பாலுக்கும் சிரிப்பு வந்து விட்டது. "உண்மைதான். என் எதிர்பார்ப்பு தவறானது. இன்னும் என்ன தெரியணும் கேளுங்க சொல்றேன்" என்றார்.

சூர்யா "போக போகத்தான் இன்னும் என்னென்ன எல்லாம் தெரியணும்னே புரியும். ஆனா இப்ப முதலில முக்கியமா தெரிய வேண்டியது உங்க வழிமுறையைப் பற்றி. நீங்க உங்க பொருட்களை எப்படித் தயாரிச்சீங்க, எப்படி அது சரியா வேலை செய்யுதுன்னு கண்டு பிடிச்சீங்க, அப்புறம் அது எப்படி கெட்டுப் போக ஆரம்பிச்சது, அதெல்லாம் சொல்லுங்க" என்றார்.

அந்தக் கசப்பான விஷயத்தை விளக்க வேண்டியதால் பாலின் முகபாவம் விளக் கெண்ணெய் குடித்தது போல் மாறியது.

அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்து கொண்ட ஷாலினி இடை மறித்து, கருவிகளைச் சுட்டிக் காட்டி, சுருக்கமாகப் பதிலளித்தாள். "இந்தக் கருவியில முதலில காந்தத் துகள்கள் செய்யப்படுது. அப்புறம், சரியான அளவில இருக்கற துகள்கள் மட்டும் வெளியெடுக்கப் படறா மாதிரியான ஃபில்டர்கள் வழியா அனுப்பி, இந்தக் குழாய் வழியா அந்த இடத்துல சேகரிக்கப்படுது..."

கிரண் இடையில் குதித்து, "ஹும், ஃபில்டர் பார்க்க ரொம்ப நல்லாத்தான் இருக்கு! என் எஸ்ப்ரெஸ்ஸோ மெஷினுக் குச் சரியான சைஸ்ல காஃபித் தூள் ஃபில்டர் பண்ணிக்கலாமா?" என்றான்.

ஷாலினி அவனை "ஷூ!" என்று செல்லமாகத் தட்டி அடக்கிவிட்டுத் தொடர்ந்தாள். "அப்புறம், அதோ அந்த இஞ்செக்ஷன் கோட்டிங் சேம்பர்ல அந்தத் துகள்கள் மேல, தேவையான மருந்து ஸொல்யூஷன் பீய்ச்சித் தடவப்படுது. அப்புறம் அங்க இருக்கற கண்ணாடிக் கூண்டுல உலர்த்தப்பட்டுப் பவுடர் மாதிரி படியுது. அதை இந்த மாதிரிக் குப்பிகளில் நிரப்பி, சோதனைக்குத் தயாரா வைக்கறோம்" என்று ஒரு மருந்துக் குப்பியை எடுத்துக் காட்டினாள்.

சூர்யா மிகுந்த யோசனையுடன் "அந்த வழி முறையில ஒவ்வொரு படியும் செய்யும் போதும் மிகமிகச் சரியான மாதிரி செய்யணும் இல்லையா? அதுக்கான கன்ட்ரோல்கள் எங்கே இருக்கு?" என்று கேட்டார்.

பீட்டர் பதிலளித்தார். "ஒவ்வொரு கருவிக்கும் அது மேலயே கன்ட்ரோல் பேனல் இருக்கு. அதுல ஸ்விட்சுகள், டயல்கள், கேஜ்கள் எல்லாம் இருக்கு. அது தவிர அதோ பாருங்க" என்று காட்டினார். அவர் காட்டிய இடத்தில் ஒரு பெரிய பலகை மேல் வண்ணவண்ணமாகப் பல மின்விளக்குகள் மின்னி மறைந்து கொண்டிருந்தன.

கிரண் "ஹை, கொலுவுக்கு அம்மா போடற டெகொரேஷன் மாதிரி இருக்கு!" என்றான்.

ஷாலினி மீண்டும் அவனைப் பட்டென்று தட்டினாள். கிரண், "அவுச்!" என்று தடவி விட்டுக் கொண்டு நகர்ந்தான்.

பீட்டர் தொடர்ந்தார். "அதுலதான் எல்லாக் கருவிகளும் தேவையானபடி வேலை செய்யுதான்னு பலப்பல விஷயங்களைச் சேர்த்துக் காட்டிக் கிட்டிருக்கு. அதுல எதாவது எச்சரிக்கை காட்டி அதுனால கருவிகளை சரி செய்ய வேண்டியது எப்பவாவது ஒரு முறைதான். ரொம்ப அபூர்வம்" என்றார்.

சூர்யா மிக்க யோசனையுடன் தலையாட்டிக் கொண்டு, "சரி, அந்தத் துகள்களை எப்படிச் சோதிச்சு தேவையான விளைவு கிடைச்சுதுன்னு தீர்மானிச்சீங்க?" என்றார்.

ஷாலினி கேள்விக் குறியுடன் பால் பதில் கூறப் போகிறாரா என நோக்கினாள். அவர் மனக் கசப்பிலிருந்து இன்னும் மீளாததால், மெளனமாக அவளையே மேல் தொடருமாறு சைகை செய்தார்.

ஷாலினியும் தன் மருத்துவத் துறையைப் பற்றிப் பேச அரிய வாய்ப்புக் கிடைத்ததால் வெகு உற்சாகத்துடன் தொடர்ந்தாள். "பாதிக்கப்பட்ட செல்கள் மேல மட்டும் இந்தத் துகள்கள் வேலை செய்யுதான்னு சோதிக்கறோம். அங்க பாருங்க அந்தக் குளிர் பதனப்படுத்தப்பட்ட காபினெட்ல பலப்பல ஸ்லைடுகளில டிஷ்யூ ஸாம்பிள்கள் இருக்கு. அதுல வேறவேற விதமான நோய்கள் பாதிக்கப்பட்ட செல் கொண்ட டிஷ்யூக்கள் ஒட்டப்பட்டிருக்கு. வாங்க, காட்டறேன்."

ஷாலினி ஆர்வத்துடன் விரைந்தாள். மற்ற நால்வரும் தொடர்ந்தனர். ஷாலினி ஒரு ஸ்லைடை எடுத்து ஒரு மிகச் சக்தி வாய்ந்த எலக்ட்ரான் மைக்ராஸ்கோப்பின் கீழ் வைத்தாள். கிரண் அவசரமாக மைக்ராஸ் கோப் வழியாகப் பார்க்கப் போனான். ஷாலினி சிரித்து விட்டு, "அதுல உனக்கு ஒண்ணும் தெரியாது. அந்த லென்ஸ் ஸ்லைடைச் சரியா பார்த்து நிறுத்த மட்டுந்தான். செல்களைப் பார்க்க வேண்டியது இதோ இந்தத் திரையில!" என்று ஒரு மானிட்டர் திரையைக் காட்டினாள்.

அதில் பளிச்சென்று டிஷ்யூவின் செல்கள் தனித் தனியாகத் தெரிந்தன. ஷாலினி ஒரு காலேஜ் லெக்சரர் போல் கையில் ஒரு குச்சியை எடுத்துக் கொண்டு சில செல்களைச் சுட்டிக் காட்டி "என்ன, வித்தியாசம் தெரியுதா?" என வினவினாள்.

சூர்யா சந்தேகத்துடன் "எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கா மாதிரி இருக்கு. ஆனா... ஆ தெரியுது! இந்தச் சில செல்கள் கொஞ்சம் சின்னதாவும் கொஞ்ச வேற கலராவும் இருக்கு. அதுதான் பாதிக்கப்பட்ட செல்களா?" என்றார்.

பால் மனக் கசப்பிலிருந்து மீண்டு, உற்சாகத்துடன் கை தட்டினார். "சபாஷ்! அட்டகாசம் சூர்யா. நீங்க மருத்துவராக் கூட ஆயிடலாம் போயிருக்கு. வாட்ச் அவுட் ஷாலினி! உனக்குப் போட்டி!" என்று இடைமறித்துக் கூறிவிட்டு தொடர்ந்தார். "ஆமாம், அவைதான் பாதிக்கப்பட்ட செல்கள். அதுமேல அதுக்குத் தேவையான மருந்து பூசப்பட்ட துகள்களை அனுப்பினா என்ன ஆகுதுன்னு பாருங்க" என்றார்.

ஷாலினி ஒரு குப்பியை எடுத்து அதிலிருந்த திரவத்தை ஒரு பிப்பெட்டால் எடுத்து ஸ்லைட் மேல் வழிய விட்டாள். மைக்ராஸ்கோப்பின் திரையில் துகள்கள் ஓடின. பாதிக்கப் பட்ட செல்கள் மேல் மட்டும் ஒட்டிக் கொண்டன.

கிரண் ஆவலுடன் "அப்புறம், இப்ப என்ன ஆகும்?" என்று வினவினான்.
ஷாலினி கலகலவென சிரித்தாள். "நிறைய நேரத்துக்கு ஒண்ணும் ஆகாது! இது என்ன சினிமாவா என்ன. மேஜிக் மாதிரி ஹீரோ வந்தவுடனே வில்லனை அடிச்சு கதாநாயகி யைக் காப்பாத்தறதுக்கு? அந்த மருந்து வேலை செய்ய நேரம் எடுக்கும்ப்பா. பொறுமை வேணும்!" என்றாள்.

வீடியோ கேம் ஆடி ஆடி இன்ஸ்டன்ட் விளைவுகளுக்குப் பழகிப் போன கிரண் ஏமாற்றத்துடன் "அய்யே, அவ்வளவுதானா" என்ற தோரணையுடன் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு நகர்ந்தான்.

ஆனால் சூர்யாவோ நேர் எதிராக வெகு ஆர்வத்துடன் திரையில் தோன்றிய படத்தையும், மைக்ராஸ்கோப்பின் பல ஸ்விட்ச் டயல் கன்ட்ரோல்களையும் தீவிரமாக ஆராய்ந்தார். பிறகு எதையோ உணர்ந்து விட்டதுபோல கண்ணை மூடித் தலையாட்டிக் கொண்டார்.

மற்றவர்கள் வெகு ஆவலுடன் அவர் என்ன கூறப் போகிறார் என எதிர் பார்த்தாலும் ஒன்றும் அதைப் பற்றிக் கூறாமல், தன் விசாரணையைத் தொடர்ந்தார். "சரி, மருந்து சரியாக ஒட்டிக்கிதுன்னு பார்த்தோம். அப்ப என்ன தவறாகிக் கிட்டிருக்கு?" என்று வினவினார்.

பால் மீண்டும் மனக் கசப்பில் ஆழ்ந்து விடவே, ஷாலினியே தன் மருத்துவத் துறை ரீதியாக விளக்கினாள். "முதலில சோதனை செய்யறப்போ படிப்படியான இந்த ஆராய்ச்சி வழிமுறையில ஒவ்வொரு நிலையும் சரியா வந்தது. அதுனாலதான் நாங்க எல்லாம் ரொம்பவே சந்தோஷப் பட்டோம். ஆனா..."

பீட்டர் இடை மறித்தார். "ஆனா சில நாட்களுக்கப்புறம் வேற வேற விதத்துல கெட்டுப்போக ஆரம்பிச்சது."

சூர்யா "எப்படிக் கெட்டுப் போச்சுன்னு குறிப்பா சொல்லுங்க" என்று கேட்டுக் கொண்டார்.

தன் மனக் கசப்பை விழுங்கிக் கொண்டு, தோல்வியைத் தாங்கி உண்மையைத் தேடும் விஞ்ஞான உணர்வை மீண்டும் எழுப்பிக் கொண்ட பால் விளக்கத் துவங்கினார். "இதுதான் தவறாப் போச்சுன்னு ஒண்ணு மட்டும் சொல்றத்துக்கில்லை சூர்யா. ரொம்ப நுணுக்கமா பலவேறு விதமா தவறாப் போக ஆரம்பிச்சது. இந்த வழிமுறையில பல படிகள் இருக்குன்னு சொன்னோம் இல்லையா? இது வெற்றின்னு கருதப் பட்டு, FDA -வால அங்கீகரிக்கப் படணும்னா ஒவ்வொரு படியுமே ஒரு ப்ளஸ் மைனஸ் ரேஞ்சுக்குள்ள மீண்டும் மீண்டும் செய்ய முடியணும். tolerance-ன்னு சொல்வாங்க இல்லையா அந்த ரேஞ்சுக்குள்ள வரணும்."

பீட்டர் மீண்டும் இடையில் குதித்து "அது மட்டுமில்லை. இந்த வழிமுறை ஒரு அளவுக்கு மேல விலை அதிகரிச்சுட்டாப் பயன்படாது. விலையைக் கட்டுப்படுத்தி வைக்கறத்துக்கும், மீண்டும் மீண்டும் ஒரே விளைவைக் கொடுக்கற repeatability ரொம்ப முக்கியம்" என்றார்.

பால் தலையாட்டி ஆமோதித்து விட்டு, "ஆமாம். எங்க துறையில 95% சரியா வந்துட்டா போதாது. 99%-க்கு மேல சரி வரணும். மீதி 1 சதவீதத்துக்கும் எதுனால் சரி வரலைன்னு அத்துப்படியா தெரிஞ்சா கணும். இல்லன்னா அங்கீகாரமும் கிடைக்காது, பிற்காலத்துல நஷ்ட ஈடு கேட்டுப் பொதுமக்கள் கேஸ் போடக்கூடிய அபாயமும் ரொம்ப அதிகம். மேலும் பீட்டர் சொன்னா மாதிரி விலையும் வானுயரத்துக்குப் போயிடும்" என்றார்.

சூர்யா, "எனக்கும் சிப் துறையில விலை சம்பந்தமான ப்ராஸஸ் ரிபீடபிலிட்டி பத்தித் தெரியும். மேல சொல்லுங்க" என்றார்.

பால் தொடர்ந்தார். "முதல்ல அந்த ரெண்டு விதமான எதிர்பார்ப்புக்களுக்கும் சரியாத்தான் வந்தது. ஆனா அப்புறம் திடீர்னு வேறவேறப் படிகள் வேறவேற தடவை நுணுக்கமா கெட்டுப் போக ஆரம்பிச்சது. ஒருமுறை காந்தத் துகள் களோட ஸைஸ் ரொம்ப சின்னதா அல்லது ரொம்பப் பெரிசாக் கலந்துடும். அது ஃபில்டர் அட்ஜஸ்ட்மென்ட் சரியில்லைன்னு காட்டும். ஆனா பாத்தா அது சரியாவே இருக்கும். இன்னொரு முறை மருந்து போசறப்போ சரியான டெம்பரேச்சர்ல இல்லாமயோ இல்லன்னா ரொம்பத் தண்ணியாப் போயோ, சரியாப் பூசாது. இன்னொரு முறை இன்னும் அபாயகரமா, மருந்து சரியில்லாம பாதிக்கப்படாத செல்களுக்கும் ஒட்டிக்கும்--அதுதான் மிகமிக ஆபத்தானது. மத்ததாவது பரவாயில்லை" என்றார்.

சூர்யா ஆழ்ந்த சிந்தனையுடன் "இந்த வழிமுறையில தேவையான அளவுக்கு ரிபீடபிலிட்டி கிடைக்காததுனால உங்க நிறுவனத்துக்கு என்ன விளைவு?" என வினவினார்.

பீட்டர் ஆக்ரோஷத்துடன் இடைமறித்தார். "எல்லாமே போச்சு! அந்த வெற்றியின் அடிப்படையிலதான் நாங்க அடுத்த நிலை மூலதனம் கேட்கறதா இருந்தோம். இந்த வழிமுறை மொத்தமா, பலமுறை மீண்டும் மீண்டும் வெற்றியாக்க முடியும்னு காட்டினாத்தான் இன்னும் பணம் வரும். இல்லன்னா அம்போதான்! நிறுவனத்தை அஞ்சு பைசாவுக்கு யாருக்காவது விற்க வேண்டியதுதான்."

சூர்யாவின் முகத்தில் ஒரு விபரீத ஒளி மிளிர்ந்து உடனே மறைந்தது. "அப்படியா? அப்ப நீங்க போட்ட முதலீடெல்லாமும் போயிடும் இல்லையா?"

கிரண் சூர்யாவின் முகபாவனையைக் கவனித்து விட்டான். சூர்யாவுக்கு ஏதோ யூகம் உதித்து விட்டது என்று அவனுக்குப் புரிந்தது. அதைப் பற்றி அவரிடம் அப்போதே கேட்டு விட வேண்டும் என்று உள்ளுக்குள் துடித்தாலும் அவன் அந்த அளவுக்கு முட்டாளல்ல. தனியாகப் பிறகு கேட்பதற்காக அந்தத் தருணத்தில் பேசப்பட்ட விஷயங்களைத் தன் PDA-வில் குறித்துக் கொண்டான்.

பீட்டர் கையை வீசி உதறித் தள்ளினார். "என் பணம் என்ன பிசாத்து. ரொம்பக் கொஞ்சம். ஆனா அதுக்கு மேல பலப்பல மில்லியன் போட்ட மத்தவங்க பணம் எல்லாம் போயிடும்."
சூர்யா தலையாட்டிக் கொண்டு "அப்புறம்..?" என்றார்.

பீட்டர் இன்னும் ஆவேசத்துடன் தொடர்ந்தார். "அப்புறம் என்ன அப்புறம்? அவங்க திரும்பக் கொஞ்சப் பணத்தைப் போட்டு, சரி செஞ்சு அமோகமாப் பணம் பண்ணிடுவாங்க. நீங்க சீக்கிரம் இந்தப் பிரச்சனைக்குக் காரணத்தைக் கண்டு பிடிச்சு அதை நாங்க நிவர்த்திக்கலைன்னா எங்க கதி..." அவர் முகம் அவரது கவலையைக் கூறாமலேயே விவரித்தது.

பாலும் கெஞ்சினார். "ஆமாம், சூர்யா. எப்படியாவது இந்தத் திடீர்த் தடங்கல் எப்படி முளைச்சிருக்குன்னு நீங்க கண்டு பிடிச்சே ஆகணும்..." என்று கூறியவர், திடீர் ஆவேசத்தோடு "இது தானா ஆனதில்லை. அப்படி யாரு செஞ்சுட்டாங்கன்னு பிடிச்சுக் கொடுத்துட்டீங்கன்னா, என் கனவைக் குலைக்கப் பாத்த அந்தக் கயவனைக் கண்ட துண்டமாகப் பிச்சி எடுத்துடறேன்" என்று சபதமிட்டார்.

பால் திடீரென எடுத்த பாஞ்சாலி அவதாரம் ஷாலினிக்கு மிகவும் வியப்பையும் கவலையையும் ஏற்படுத்தியது. புத்த பகவான் போல் சாந்தமாகவே இருக்கும் பால் இப்படி அசுரத் தனமாகப் பேசியது, அவர் வாழ்க்கையிலேயே அவர் கண்ட இந்த முதல் தோல்வி அவரை எந்த அளவுக்கு அடிமனம் வரை புண்படுத்தியிருந்தது என்று அவளுக்குக் காட்டியது. ஷாலினி பால் அருகில் சென்று அவர் கையைப் பிடித்து மென்மையாக அழுத்தி, சாந்தப் படுத்தி னாள். பாலும், பெருமூச்சுடன் தன் கண்ணாடியை எடுத்து நீர்துளித்த கண்களைத் துடைத்துக் கொண்டு நெற்றியையும் நீவி விட்டுக் கொண்டு தணிந்தார்.

சூர்யா இருவரையும் ஆசுவாசப் படுத்தினார். "பால், பீட்டர் உங்க ரெண்டு பேர் உணர்ச்சியும் கொந்தளிக்கறது எனக்கு நல்லாவே புரியுது. தன் சொந்தக் குழந்தைக்கு யாராவது ஆபத்து விளை வித்தால் அதன் பெற்றோர்களுக்கு எப்படி இருக்கும்னு எனக்கும் தெரியுது."

சூர்யாவின் குரல் தழுதழுத்தது. அவர் தன் வாழ்க்கையின் கடந்த கால சோகத்துக்குள் ஒரு கணம் ஆழ்ந்து விட்டார். அதை உடனே உணர்ந்த ஷாலினி ஓடிப்போய் அவருக்குச் சாந்தி அளிக்கத் துடித்தாலும், அதற்கான சூழ்நிலை அதுவல்ல என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து தன்னை அடக்கிக் கொண்டாள்.

சூர்யாவும் உடனேயே சுதாரித்துக் கொண்டு "நான் என்னால ஆன அத்தனையும் செஞ்சு யாரால இல்லன்னா எதுனால உங்க வழிமுறைக்கு பாதிப்பு ஆச்சுன்னு கண்டு பிடிக்கறேன்" என்று உறுதியளித்து விட்டு, தன் குறுந்தாடியை வழக்கம் போல் நீவி விட்டுக் கொண்டு மீண்டும் ஆராய்ச்சி அறையில் இருந்த கருவிகளை அணுகிக் கூர்ந்து பார்க்கலானார்.

சில நிமிடங்கள் கூடக் கடந்திருக்கவில்லை. ஒரு கருவியின் அருகில் நின்று கொண் டிருந்த சூர்யா மற்றவர்களை அருகே வருமாறு சைகை செய்தார். நால்வரும் ஆவலுடன் விரைந்தனர். சூர்யா ஒரு டயல் மீட்டரைக் காட்டினார். அதில் ஒன்றி லிருந்து இருபது வரை எண்கள் இருந்தன. அதன் முள் நட்ட நடுவில் 10-ஐக் காட்டிக் கொண்டிருந்தது.

சூர்யா வினாவினார். "இந்த டயல்தான் காந்தத் துகள்கள் எவ்வளவு பெரிசா இருக்கணும்னு கன்ட்ரோல் செய்யுதா?"

அவர் எதையோ கண்டு பிடித்து விட்டார் என்ற ஆர்வத்துடன் வந்திருந்த பால் தன் ஆழ்ந்த ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு "ஆமாம், ஏன்?" என்றார்.

சூர்யா "இது 10-க்கு பதிலா 9-ல அல்லது 11-ல இருந்தா என்ன ஆகும்?" என்று கேட்டார்.

பீட்டர் விளக்கினார். "அது எந்த எண்ணில இருக்கோ அதுக்கு இந்தப் பக்கம் அந்தப் பக்கம் ஒரு நேனோ மீட்டருக்குள்ள துகள்களின் அளவு இருக்கறா மாதிரி உற்பத்தி ஆகும். அது 10-ல இல்லன்னா எங்களுக்குத் தேவையான, சரியான அளவில இருக்கற துகள்கள் ரொம்பக் குறைச்சலாயிடும். அப்ப இந்த வழிமுறையின் செலவு ரொம்ப அதிகமாகி, துகள்களின் விலை ரொம்ப அதிகரிச்சுடும். அதிகமா விற்க முடியாது. அது ரொம்ப மோசம். அது 10-ல் தான் இருந்தாகணும். இந்த வழிமுறை அந்த டாலரன்சுக்கு ரொம்ப ஸென்ஸிடிவ்" என்றார்.

சூர்யா மேலும் கீழும் தன் தலையை மெல்ல ஆட்டி ஆமோதித்தார். "ஊம்... நானும் அப்படித்தான் நெனச்சேன். நான் வேலை செஞ்ச 'சிப்' துறையிலயும் டி·ப்யூஷன் சேம்பர்ல இப்படிப் பட்ட ஸென்ஸிடிவ் கன்ட்ரோல்கள் இருந்தன. ஆனா அதெல்லாம் ரொம்ப டைட்டா மிக சுலபமா மாற முடியாதபடி ஒரே அளவுல நிலையா இருக்கும். இதென்னமோ அப்படியில்லை போலிருக்கே?!" என்றார்.

பாலின் முகத்தில் கவலை ஏறியது. "இல்லையே, எங்க வழிமுறைக்கும் அப்படித்தான் ஒரே நிலையில மாறாம நிக்கணுமே. இல்லைனா பிரச்சனைதானே? நீங்க ஏன் இது அப்படி இல்லையோன்னு யோசிக்கறீங்க?"

சூர்யா விவரித்தார். "எனக்கு என்னவோ இந்த கன்ட்ரோலில எதோ பழுது இருக்குன்னு படுது. இது தானாவே துகளின் நடு அளவை அப்பப்ப மாத்திடுதுன்னு தோணுது."

பீட்டர், "சே, சே. இதெல்லாம் மிகவும் உசத்தியான கருவிகள். அப்படியெல்லாம் பழுதாகாது. உங்க சிப் துறையில வேணா அப்படி இருக்கலாம். தெரியாம பேசாதீங்க" என்றார்.

பதிலுக்கு சூர்யா ஒரு வெடிகுண்டைத் தூக்கிப் போட்டார். "சரி அப்படியே இருக்கலாம். ஆனா இப்ப பாருங்க" என்று சொல்லி விட்டு ஒரு காலைத் தூக்கி, சாதாரண நடையை விட சற்றே பலமாக தரையில் உதைத்தார். அந்தக் கருவியின் முள் 10-லிருந்து 9-க்கும் 11-க்கும் இடயில் ஆடிவிட்டு நின்றது! உடனேயே சூர்யா இருந்த இடத்திலேயே மேலாக சற்று எகிறி குதித்தார். முள் 8-க்கும் 12-க்கும் இடையில் ஆடிவிட்டுச் சில நொடிகளுக்குப் பிறகு 10-ல் மீண்டும் வந்து நின்றது. சூர்யா "துகள்கள் உற்பத்தி செய்யறப்போ இப்படி ஆச்சுன்னா என்ன ஆகும்? இதை யாராவது சோதிச்சீங்களா?" என்று கேட்டார்.

பாலின் முகம் வெளுத்தது. பீட்டரின் முகம் கருத்தது. சில வினாடிகள் ஆராய்ச்சி அறையில் மயான மெளனம் நிலவியது. பால்தான் முதலில் தட்டுத் தடுமாறி பேசினார். "இது... எப்படி... நாங்க சோதிச்சோமே? சரியா 10-ல தானே இருந்தது. இப்பக் கூடப் பாத்தோமே?"

பீட்டர், "சூர்யா, யூ ஆர் ப்ரில்லியன்ட்! இல்லை பால். வழிமுறை கெட்டுப் போக ஆரம்பிச்சதும், இது சரியா இருக்கான்னு செக் பண்ணினது உண்மைதான். ஆனா, நாம இது 10-ல இருக்கான்னு சோதிச் சோமே ஒழிய இது 10-லேயே நிலைச்சு இருக்கான்னு வைப்ரேஷன் டெஸ்ட் பண்ணவே இல்லையே? கோளாறுகளுக்கு இது ஒரு பெரிய காரணமா இருக்கலாம். இதுக்கு யார் காரணம்னு கண்டு பிடிச்சு கழுத்தைப் புடிச்சு, இல்லை கழுத்தை நெறிச்சு வெளியில தள்ளணும்" என்று கொதித்தார்.

பால் தடுமாறினார். "என்னால நம்பவே முடியலை. இது எவ்வளவு பேஸிக் - அடிப் படையான விஷயம். இது தப்பாயிருக்கும்னு கனவுல கூட நினைக்கலை. யாரு செஞ்சிருப்பாங்க?"

பீட்டர் கையை சொடுக்கினார். "பால்! எனக்கு ஒரு யோசனை. வழிமுறையில இந்தப் படிக்கு பொறுப்பானவர் அந்தப் புது ஆராய்ச்சி மேனேஜர் ஜேம்ஸ். அவரைப் பார்த்தப்பவே நான் கொஞ்சம் சந்தேகப் பட்டேன். என்னடா, கொஞ்சம் ஒரு மாதிரி நடந்துக்கறாரேன்னு. ஆனா ஒரு ஆதாரமுமில்லாம உங்கக் கிட்ட சொல்றதுல பயனில்லைன்னு விட்டுட்டேன். ஒரு முறை நான் இந்தப் பக்கம் திடீர்னு வந்தப்பக் கூட வேற யாருமில்லாத சமயத்தில ஜேம்ஸ் இந்தக் கருவியைக் குடாய்ஞ்சுக் கிட்டிருந் தார். நான் என்னன்னு கேட்டப்ப ஒரு திருட்டு முழி முழிச்சுட்டு எதோ ட்யூன் பண்றேன்னு சப்பைக் கட்டுக் கட்டினார். ஒருவேளை அவரே செஞ்சிருக்கலாமோ?"

பால் மறுத்தார். "சே, சே! பீட்டர், நோ. ஜேம்ஸ் செஞ்சிருக்க மாட்டார். அவர் தங்கமானவர். அவரை எனக்கு நல்லாத் தெரியும். தன் உசிரை விட்டு வேலை செஞ்சுக் கிட்டிருக்கார். அவர் நிஜமாவே வழிமுறையின் பல படிகளை தானாவே ஆராய்ஞ்சு ட்யூன் பண்ணி மேம்படுத்தியிருக்கார்" என்றார்.

பீட்டர் நம்பிக்கையில்லாமல் தலை யாட்டினார். "பால், உங்களுக்கு வெளுத்த தெல்லாம் பாலுன்னு நம்பற தூய மனசு. நான் பிஸினஸ்ல நல்லா அடி பட்டுப் பட்டு வாழ்க்கையின் கொடிய நிஜத்துவத்தை உணர்ந்தவன். எதுக்கும் அப்புறம் ஜேம்ஸைப் பத்தி இன்னும் குடாய்ஞ்சு பாருங்க. இப்ப இதைச் சரி செஞ்சுட்டு எல்லாம் ஒழுங்கா வருதான்னு பார்க் கலாம்" என்றார்.

பால் சூர்யாவை மிகவும் நன்றியுடன் பார்த்தார். "ரொம்ப தேங்க்ஸ் சூர்யா. இப்படி ஒரு நிமிஷத்துல ஒரு பெரிய விஷயத்தைக் கண்டு பிடிச்சிட்டீங்க. நாங்க இதை சரி செஞ்சுட்டுத் திரும்பக் கூப்பிடறோம்" என்றார்.

ஆனால் சூர்யாவோ ஒரு ஆழ்ந்த தியானத்திலிருந்தார். ஷாலினியும் கிரணும் குழம்பினர். சூர்யா திருப்தி அடைய வில்லை, எதோ இன்னும் சரியில்லை என்று உணர்ந்தனர்.

திடீரென தியானத்திலிருந்து விழித்துக் கொண்ட சூர்யா இன்னொரு அணு குண்டை எடுத்து வீசினார். அனைவரும் அதன் விளைவால் அதிர்ந்தே போயினர்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline