Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | அஞ்சலி | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar
Tamil Unicode / English Search
முன்னோடி
தபிதா பாபு
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2023|
Share:
தமிழில் தோன்றிய முதல் பெண்கள் இதழ் அமிர்தவசனி. தனது 20ம் வயதில் அதன் ஆசிரியராகப் பணியாற்றியவர் தபிதா பாபு. தமிழின் முதல் பெண் இதழாசிரியராகக் கருதப்படும் இவர், செப்டம்பர் 8, 1845ல், சென்னையில் பிறந்தார். பிறந்ததுமே தாயை இழந்தார். தந்தை ஹோசியா பீட்டர், வேப்பேரி புனித பால் பள்ளியில் ஆசிரியர். தபிதா பாபுவின் தாத்தா, சிந்தியா பீட்டர் கல்நாயகம் சென்னையின் சிறந்த பாரம்பரிய மருத்துவர்களில் ஒருவராகவும், சுவிசேஷகராகவும் இருந்தார். புனித பால் பள்ளியில் கல்வி பயின்றார் தபிதா. அவர் உயர்கல்வி கற்றதும் லண்டன் மிஷன் போர்டிங் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கக் குடும்பத்தார் விரும்பினர். ஆனால், தபிதா அதனை ஏற்கவில்லை. அதனால், சென்னை ராயபுரத்தில் அமெரிக்க மிஷனரியாக இருந்த ஐ.என். ஹர்ட்டிடம் மேற்கல்வி பயில அனுப்பப்பட்டார் தபிதா.

ராயபுரத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் ஹவுஸில் தபிதாவின் இளமைப்பருவம் கழிந்தது. ஹர்ட் மூலமும் அவரது மகன் மூலமும் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றி வந்த தமிழ்ப் பண்டிதர் ஒருவர் மூலம் தமிழை முறையாக எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டார். தெலுங்கு மொழியையும் கற்றுக்கொண்டார். ஹர்ட், பிராட்வேயில் உள்ள அமெரிக்கன் மிஷன் பிரஸ்ஸில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். அடிக்கடி தபிதாவை அங்கு அழைத்துச் சென்றார். அதன் மூலம் அச்சகப் பணிகளைக் கற்றுத் தேர்ந்தார் தபிதா.

நாளடைவில் ஹர்ட், அமெரிக்கா திரும்பிச் சென்றார். தபிதா, இலவச சர்ச் மிஷன் போர்டிங் பள்ளியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். மிஷனின் பெண்கள் பள்ளிகளின் பொறுப்பாளராக இருந்த ரெவரெண்ட் ஆர்.எம். பாபுவுடன் அவருக்குத் திருமணமானது. பாபு ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர், குழந்தைகளும் இருந்தன. அக்குழந்தைகளைத் தனது குழந்தைகளாகவே எண்ணி வளர்த்தார் தபிதா. தங்களுக்குப் பிறந்த பெண் குழந்தை மீதும் அதே கவனத்தைச் செலுத்தினார். திருமணத்திற்குப் பின் முழுக்க முழுக்க சர்ச் மிஷன் பள்ளிகளின் வளர்ச்சிக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

கணவர் பாபு, 'சத்திய தீபம்', 'The Lamp of Truth' போன்ற இதழ்களின் ஆசிரியராக இருந்தார். ஏற்கனவே அச்சகப் பணிகளில் நல்ல அனுபவம் பெற்றிருந்த தபிதா, அந்த இதழ்களின் வெளியீட்டிற்கு உதவினார். அச்சகத்தை நிர்வகித்தார். பெண்கள் வீட்டிலிருந்தே கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்திலும், அவர்கள் அறிவை வளர்க்கும் ஆர்வத்திலும் 1865ல் 'அமிர்தவசனி' இதழைத் தொடங்கினார். தமிழில் பெண்களுக்கு என வெளிவந்த முதல் பெண்கள் இதழ் அமிர்தவசனிதான். பெண்களுக்காகப் பெண்களாலேயே எழுதப்பட்டு இவ்விதழ் வெளிவந்தது. இதழின் நோக்கமாக, "அமிர்தவசனி என்னும் பெயருடைய சிறுபத்திரிகையொன்றைப் பிரதி மாதம் இரண்டாவது சனிவாரந்தோறும் நாங்கள் பிரசுரஞ்செய்ய உத்தேசித்திருக்கின்றோம். இச்சென்னையம்பதியிலுள்ள பற்பல பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களும், தற்காலத்தில் கல்வி கற்பவர்களாகிய எம்போலிய ஹிந்து ஸ்திரீகளுக்கு நல்லறிவு, நல்லொழுக்கங்களை விருத்தி செய்விப்பதே இப்பத்திரிகையின் கருத்தாம். சமயதருமம், ஆசாரதருமம், இலக்கிய இலக்கணங்கள், ககோள பூகோளங்கள், கணிதம், ஜெந்து சுபாவம், பாக சாஸ்திரம், பலவகைப்பட்ட தையல்கள், விடுகதைகள், விநோத கதைகள், பழமொழிகள் முதலிய பல பிரயோஜனமான விஷயங்களை எங்களாலியன்ற வரையில் இப்பத்திரிகையின் கண்ணே இயற்றுவிக்க முயலுவோம். எங்கள் அபிப்ராயங்களை விளக்கத்தக்க சில உசிதமான சித்திரப் படங்களையும் இதிற் காணலாம்" என்று தத்துவ போதினி இதழில் வெளியான விளம்பரக் குறிப்பு மூலம் அறிய முடிகிறது.



இவ்விதழ் கிறிஸ்தவ சமயம் சார்ந்த இதழாக இருந்தாலும் இந்துக்களின் வாழ்வியல் மற்றும் கொள்கைகள், வாழ்க்கை முறை சார்ந்த பல்வேறு செய்திகளை வெளியிட்டது. பெண் கல்வி, சுகாதாரம், பதிவிரதா தருமம் பற்றிய கட்டுரைகள் வெளியாகின. அமிர்தவசனி இதழ், பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தது. இந்து மதம் சார்ந்த பெண்களின் கல்விக்கு, அக்காலத்தில் இருந்த தடைகளை தனது இதழ்மூலம் அகற்ற முயற்சித்தார் தபிதா பாபு. பெண்கள் மேற்கல்வி பயிலவும், அரசாங்கத்தால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகளுக்கு தங்கள் பெண் குழந்தைகளை அனுப்பவும் இந்துப் பெற்றோர்கள் விருப்பமில்லாமல் இருந்தனர். பால்யத் திருமணம் செய்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டனர். அதனை 'அமிர்தவசனி' இதழில் கண்டித்து எழுதினார் தபிதா பாபு. பெண்கள் கல்விக் கூடத்திற்கு வந்து கல்வி பயில்வதற்குப் பதிலாக தானே நேரடியாகப் பெண் குழந்தைகளின் வீட்டிற்குச் சென்று கல்வி போதித்தார். அதற்கென ஒரு குழு அமைத்துச் செயல்பட்டார். ஆறு பள்ளிகள் தபிதா பாபுவின் மேற்பார்வையில் இயங்கின.

'ஜெனானா கற்பித்தல்' என்ற கல்வி பயிற்றுவிக்கும் முறையை அறிமுகப்படுத்தினார். அதனைப் பரவலாக்கி, பெண்கள் கல்வி பயில்வதில் இருந்த தடைகளை நீக்க முயற்சித்தார். சென்னையில் ஜெனானா நிறுவனத்தை முதன்முதலில் ஏற்படுத்தியவர் தபிதா பாபுதான். பெண்கள் பயிலும் பள்ளிகளில் பெண் ஆசிரியர்களையே நியமித்தார். அதற்காகப் பெண்களுக்கு ஆசிரியர் பயிற்சி அளிக்க, 'மெட்ராஸ் கிறிஸ்தவ பெண் பயிற்சி பள்ளி'யை 1871ல் தொடங்கினார். அதன்மூலம் பயிற்சி பெற்றவர்களை, பல்வேறு மிஷன்களின் ஜெனானா ஏஜென்சிகளுக்கு கல்வி போதிப்பதற்காக அனுப்பினார். தனக்குப் பிறந்த ஒரே மகளை 1874ல், இழந்தாலும் சமூக, மதப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்த சோகத்திலிருந்து மீண்டார்

தபிதா பாபு ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதிலும் அவர்களின் கல்வி, சமூக மேம்பாட்டிலும் அக்கறை கொண்டு செயல்பட்டார். 'சண்டே ஸ்கூல்' மூலம் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு கல்வி, நல்லொழுக்கம் ஆகியவற்றைப் போதித்தார். குழந்தைகளுக்கு இயேசுவைப் பற்றி, அவரது வாழ்க்கையை, போதனைகளை அறிமுகம் செய்தார்.

கணவர் பாபு, தென்னிந்தியாவின் முதல் இந்தியக் கிறிஸ்தவ இதழான 'தி ஈஸ்டர்ன் ஸ்டார்' (The Eastern Star) இதழின் நிர்வாக உரிமையாளர் ஆனார். அதன் வளர்ச்சியிலும் தன்னை இணைத்துக் கொண்டார் தபிதா. இவ்விதழ் அவர்களுக்குச் சொந்தமான 'சத்திய தீபம்' அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. எஸ்பிளனேட் தமிழ் தேவாலயத்தின் போதகராக இருந்த கணவர் பாபுவின் பணிகளுக்கு உதவினார்.

வாழ்வின் இறுதி வரை பெண்களின் உயர்வுக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும், கிறிஸ்தவ மத வளர்ச்சிக்காகவும் உழைத்த தபிதா பாபு, 1890 பிப்ரவரி 6ஆம் நாளன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் ரெவரெண்ட் ஜி.எம். ரே மற்றும் டாக்டர் வில்லியம் மில்லர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தகவல் உதவி: 'Sketches of Indian Christians', S. Satthianadhan, The Christian Literature Society of India (1896)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline