Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
பி.வி. நரசிம்ம சுவாமி (பகுதி - 3)
- பா.சு. ரமணன்|செப்டம்பர் 2023|
Share:
சென்ற வழியெல்லாம் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார் நரசிம்ம சுவாமி. வடநாட்டின் குளிர் தாங்காமல் அவதிப்பட்டார். சாலை ஓரங்களிலும், பாலத்தின் அடியிலும் படுத்துறங்கினார். யாரேனும் உணவளித்தால் மட்டுமே உண்பார். மூன்று நாள்வரை கூட பட்டினி கிடந்திருக்கிறார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார். வழியில் பல சாதுக்களின் சமாதிகளை, தர்காக்களை தரிசித்தார். பல சாதுக்களை தரிசனம் செய்தார்.

மெஹர் பாபா
1933-ல் அஹமத் நகரில் கட்டே கான் என்ற ஊரை அடைந்தார் நரசிம்ம சுவாமி. அங்கு சத்குரு நாராயண மகாராஜ் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் இளவயதிலேயே அனுபூதி பெற்றவர். அவரை தரிசித்து அவரிடம் தனக்குக் குருவின் அருள் கிடைக்க வழிகாட்டுமாறு வேண்டினார். அவரும் ஆசிர்வதித்தார். அருகில் உள்ள நகர் ஒன்றில் மெஹர் பாபா என்ற புகழ்பெற்ற மஹான் தங்கி இருப்பதை அறிந்தார் நரசிம்ம சுவாமி. அவரை தரிசிக்கச் சென்றார். அவர் அங்கு சென்ற பொழுது மெஹர் பாபா மௌன விரதத்தில் இருந்தார். அவரிடம் தனக்கு ஆத்ம ஞானம் கிடைக்க வழி காட்டுமாறு வேண்டினார் நரசிம்ம சுவாமி. அதைக் கேட்ட மெஹர் பாபா, பலகையில் பின்வருமாறு எழுதிக் காட்டினார், "நான் உனது குரு அல்ல. உனக்காக உன் குரு வட நாட்டில் காத்துக் கொண்டு உள்ளார். நீ அங்கு செல்." சில வாரங்கள் மெஹர் பாபா ஆசிரமத்தில் தங்கிய நரசிம்ம சுவாமி, சகோரி என்ற பகுதியில் வாழ்ந்த உபாசினி மகராஜ் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டார். அவரைக் காணப் புறப்பட்டுச் சென்றார்.

உபாசினி மகராஜ்
சகோரி கிராமத்தின் சுடுகாட்டை ஒட்டி இருந்தது உபாசினி மகராஜின் ஆச்ரமம். அங்கு அவரைத் தரிசனம் செய்தார் நரசிம்ம சுவாமி. உபாசினி மகராஜ் ஷீரடி சாயி பாபாவின் அருளால் ஆத்மஞானம் பெற்றவர். அவர், நரசிம்ம சுவாமியைக் கண்டதும் மகிழ்வுடன், "அப்பா வந்தாயா? உனக்காகத்தான் இத்தனை நாளும் காத்துக் கொண்டிருந்தேன்" என்றார்.

அதைக் கேட்ட நரசிம்ம சுவாமி ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தார். பின் உபாசினி மகராஜின் வேண்டுகோளை அங்கு சில ஆண்டுகள் தங்கி ஆன்மீக சாதனைகள் செய்தார். உபாசினி பாபாவின் அறிவுரையின்படி தான் உதறிய வழக்குரைஞர் தொழிலை மீண்டும் அங்கு தொடங்கினார். உபாசினி மகராஜ்மீது அவரது பக்தர்கள் சிலரால் பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளை எதிர்த்துக் கடுமையாக வாதாடி உபாசினி மகராஜுக்கு விடுதலை பெற்றுத் தந்தார். அங்கிருந்தபோது நாக்பூரில் இருந்த தாஜுத்தின் என்ற மஹானின் சமாதி, ஆஜ்மீர் குவாஜா மொய்னுத்தீன் தர்கா, புஷ்கரத்தில் இருந்த பிரம்மா ஆலயம் போன்ற இடங்களுக்குச் சென்று வழிபட்டார். உபாசினி மகராஜின் வாழ்க்கைக் குறிப்புகளைச் சேகரித்தார். உபாசினி மகராஜின் சீடர்களான ஸ்ரீ காகடே, ஸ்ரீ சிட்னிஸ் ஆகியோரின் உதவியுடன் ‘சகோரி முனிவர்’ என்ற தலைப்பில் அதனை நூலாக வெளியிட்டார். அதில் ஷீரடி சாயி பாபா குறித்த செய்திகள் சிலவற்றையும் எழுதியிருந்தார். பகவான் ரமணரைப் பற்றி நரசிம்ம சுவாமி எழுதிய நூல், எப்படி பலரைப் பகவான் ரமணரது அடியவர்களாக்கியதோ அதுபோல் ‘சகோரி முனிவர்’ நூல், பலரை உபாசினி பாபாவின் சீடர்களாக்கியது.



மீண்டும் குருவைத் தேடி...
தனது ஆசிரமத்திலேயே தங்கியிருக்குமாறு நரசிம்ம சுவாமியை உபாசனி மகராஜ் கேட்டுக் கொண்டார். ஆனால், நரசிம்ம சுவாமி ஏற்கவில்லை. அந்த ஆச்ரமத்திலிருந்து வெளியேறி தனது தேடலைத் தொடர்ந்தார்.

ஆனால், நாளடைவில் அவரது மனம் சலிப்புற்றது. இத்தனை ஆண்டுகளாகத் தேடியும் குருநாதரின் அருள் தனக்குக் கிடைக்கவில்லையே என்று எண்ணி மனம் வருந்தினார். சொந்த ஊருக்குச் சென்று அமைதியாகக் காலம் கழிக்கும் எண்ணமும் தோன்றியது. ரயிலடி நோக்கி அவர் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரு சாது வந்தார். அவர், நரசிம்ம சுவாமியிடம், "சாது மகாராஜ், நீங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு நரசிம்ம சுவாமி, "இத்தனை நாளாக நான் மன அமைதி தேடி ஆன்மீகப் பயணம் செய்து வந்தேன். இனி சொந்த ஊருக்குப் போய் நிம்மதியாக வாழலாம் என்று தோன்றுகிறது" என்றார்.

உடன் அந்தச் சாது, "சரி. வந்ததுதான் வந்தீர்கள். பக்கத்தில் உள்ள ஷீரடிக்கு சென்று சாயி பாபாவை தரிசனம் செய்து விட்டுப் போங்கள்" என்றார். நரசிம்ம சுவாமி சற்று யோசித்தார். உடன் அந்தச் சாது, "யோசிக்க வேண்டியதில்லை. எப்போதும் அருள் வீசிக்கொண்டு இருக்கும் சாயி நாதரின் சமாதிக்கு ஒருமுறையாவது நீங்கள் சென்றுவிட்டுப் பின் ஊர் திரும்புவதே நல்லது என்று எனக்குத் தோன்றுகின்றது" என்றார். பின் அவ்விடம் விட்டு அகன்றார்.

ஷீரடி யாத்திரை
தனது பாதையை மாற்றி அவ்வூரிலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் இருந்த ஷீரடி நோக்கித் தனது பயணப்பட்டார். அது 1936ஆம் ஆண்டு. ஆவணி மாதத்துத் திருவோண நன்னாள். அந்தப் புனித நாளில் ஷீரடியை நோக்கிய அவரது பயணம் தொடர்ந்தது. அதுவரையிலான தனது வாழ்க்கை, தனது ஏக்கங்கள், குருவுக்கானதேடல் ஆகியவற்றைச் சிந்தித்தபடி அவர் நடந்து கொண்டிருந்தார்.



கண்டார் குருவை...
ஷீரடித் தலத்தை அவர் அடைந்தபோது மணி பதினொன்று. அங்கிருந்தவர்களிடம் விசாரித்து நேராக ஷீரடி பாபா சமாதி ஆலயம் இருக்குமிடம் அறிந்து மிகுந்த ஆவலுடன் அங்கே சென்றார்.

பாபாவின் சமாதி ஆலயம் அன்று மிகவும் அமைதியாக இருந்தது. அப்துல்லா பாபா தனது மயிற்பீலியால், பாபாவின் சமாதியை வருடி ஆராதனை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்று நின்றார் நரசிம்ம சுவாமி. சற்றே கண்களை மூடினார். மெல்ல ஓர் அமைதி தன்னில் வியாபிப்பதை உணர்ந்தார். அதுவரையிலான தனது தேடல், நோக்கம், பிறப்பின் அர்த்தம் எல்லாம் அங்கே முடிவுற்றதாக உணர்ந்தார். உள்ளம் பொங்கியது. உடல் நடுங்கியது. இன்னதென்று புரியாத பரவசநிலை ஏற்பட்டது. திடீரெனத் தனக்குள் ஒரு மிகப்பெரிய ஆற்றல் அலை இறங்குவதை உணர்ந்தார். உடல் சிலிர்த்தது. தன்னை அறியாமல் கண்ணீர் பெருகியது. கைகூப்பி நின்றார்.

கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளாகக் குருவைத் தேடிக் கொண்டிருந்த நரசிம்ம சுவாமி, இறுதியில் அந்த இலக்கை அடைந்து விட்டார். ஷீரடி பாபா அவரை ஆட்கொண்டார். தனது சீடரைத் தானே வரவழைத்து அருள் ஒளியை அவருக்கு ஞானப் பரிசாகத் தந்தார். சாயி நாதரைத் தனது கடவுளாக, குருவாக, தனக்கு எல்லாமுமாக உயிர்ப்புடன் அங்கே கண்டார் நரசிம்ம சுவாமி.

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline