Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறப்புப் பார்வை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | சிறுகதை | வாசகர்கடிதம் | ஹரிமொழி
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
கருமலை களவாணிகள் (அத்தியாயம் - 12)
- |டிசம்பர் 2022|
Share:
மிக வயதான ஒருவர் அந்த இரவு நேரத்தில் வந்து கதவைத் தட்டியது கீதாவுக்கு வியப்பாக இருந்தது.

"ஆமாம், இது அருண் வீடுதான். நீங்க?"

வந்திருந்தவர் சுற்றுமுற்றும் பார்த்தார். அவர் கையில் ஒரு தோல்பை இருந்தது. அது பார்க்கக் கொஞ்சம் கனமாகவே இருந்தது.

"நான் ஒரு நிமிஷம் உள்ளே வரலாமா?" வந்திருந்தவர் ஒரு படபடப்புடன் பேசினார்.

"நிச்சயமா. உள்ளே வாங்க."

கீதா, பெரியவரை உள்ளே வரவேற்றார். எங்கிருந்து என்ன சத்தம், எப்படிக் கேட்டதோ தெரியவில்லை, அருண் தன் அறையிலிருந்து படிகளில் தடதடவென்று இறங்கி வந்தான். ஏதோ எதிர்பார்ப்புடன் அங்கிருந்த பெரியவரைப் பார்த்தான்.

"You must be Arun, I guess?" என்றார் பெரியவர். "நான் யாருன்னு தெரியறது இப்ப முக்கியம் இல்லை. நான் எதுக்கு இங்க இந்த அர்த்த ராத்திரில வந்திருக்கேன்னு உங்களுக்கு இப்ப தெரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்."

"ஹலோ சார்," அருண் தயக்கத்தோடு கைகுலுக்கக் கையை நீட்டினான். "உங்ககிட்ட இருந்து ஒரு கடிதம் வரும்னு நாங்க எதிர்பார்த்தோம். அப்படித்தான் எங்களுக்கு குறிப்பு வந்தது."

கீதாவும் சேர்ந்துகொண்டார். "நீங்க யாருன்னு எங்களுக்கு விவரம் ஏதும் தெரியாததாலே உங்க வீட்டுக்கு எங்களால வரமுடியலே. சிரமத்துக்கு மன்னிக்கணும்."

அந்தப் பெரியவர் பேச ஆரம்பித்தார்.

"நான் கடிதத்துல குறிப்புகள் அனுப்பலாம்னுதான் இருந்தேன். ஆனா, என்னுடைய நெருங்கிய நண்பர் தபால் நிலையத்துல வேலை பார்க்கிறவர் ஒருத்தரு உங்க வீட்டுத் தபால்பெட்டியை யாரோ கவனிச்சுட்டு இருக்காங்க அப்படின்னு எச்சரிக்கை கொடுத்தாரு. அவர் கொடுத்த எச்சரிக்கையின்படி பார்த்தா, யாரோ உங்க வீட்டுக்கு வர தபால்களைத் திருடத் திட்டம் போட்ட மாதிரி இருந்தது. நானும் எனக்குக் கிடைச்ச தகவல் உண்மைதானான்னு பார்க்க இரண்டு மூன்று பொய்க் கடிதங்கள் எழுதி அனுப்பினேன். என் தபால் நிலைய நண்பர் சொன்னது உண்மையென்றால், உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் கிடைத்திருக்காது. என்னிடம் இருக்கும் ஆதாரங்களை உங்களுக்கு கிடைக்க விடாமல் யார் தடுக்க நினைத்தார்களோ அவர்களைத் திசை திருப்பி விட்டுட்டேன்."

அந்தப் பெரியவருக்கு விடாமல் பேசியதில் மூச்சு வாங்கியது. அருண் உள்ளே ஓடிப்போய் அவருக்கு ஒரு கோப்பையில் தண்ணீர் கொண்டுவந்தான்.

"சாரி, நான் ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டேன். இதான் எல்லா விதமான ஆதாரங்களும். நான் எழுதிய ரிப்போர்ட்ஸ் எதுவும் வெளியே தெரியாம இருக்க ஒரு நாசகாரக் கும்பலே வேலை பண்ணிக்கிட்டு இருக்கு. இந்த அறிக்கையின்படி அவங்க காரீய விஷ (Lead poisoning) ஆய்வு என்கிற பெயரிலே பெட்ரோலியம் எண்ணெய் தோண்டிப் பார்க்க இருக்காங்க. இதனால கோடிக்கணக்கான வருமானம் கிடைக்கும். ஆனா, நம்ம ஊரு சுற்றுச்சூழல் தான் பாழாயிடும். எல்லாத்தையும் விலாவாரியா நான் இந்த அறிக்கையில எழுதியிருக்கிகேன். பத்திரம். Best of luck. நான் கொஞ்ச நாளைக்கு என் பசங்களோட வீட்டுல போய் இருக்கப்போறேன். நான் இங்க வந்தது, பேசினது, இந்தக் கோப்புகள் கொடுத்தது எதுவுமே யாருக்கும் தெரிய வேண்டாம். இது என் வேண்டுகோள். எப்படியாவது இந்த மோசடி வேலை நடக்காம பண்ணணும். இது நம்ம ஊரோட எதிர்காலம் குறித்த பிரச்சனை."

அருணைச் செல்லமாக முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு வந்தவர் கிளம்பினார். சில நொடிகளில் அவரது வண்டி வீட்டு வாசலில் இருந்து கிளம்பிப் போகும் சத்தம் கேட்டது.

அருணுக்கு ஒருபுறம் உற்சாகம். மறுபுறம் பயம். ராத்திரி நேரத்தில் கையில் இருக்கும் ஆதாரங்களை என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்தான். அவன் காலைவரை காத்திருக்க விரும்பவில்லை. குண்டர்கள் தன் வீட்டுக்கு இரவில் வந்து சாட்சியங்களை அழித்துவிட்டால் என்ன செய்வது? கீதாவும் அந்த ஆதாரங்களை எப்படி உபயோகப் படுத்தலாம் என்று யோசித்தார். அந்த அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்தார். அவர் பாதித் தூக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ நிகழ்ச்சி இன்னும் ஓலிபரப்பாகிக் கொண்டிருந்தது.

"நேயர்களே! இன்றைய நிகழ்ச்சியில், நாம் செய்கிற சின்னச் சின்ன செயல்கள்கூட சுற்றுச்சூழலை எப்படி பாதிக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டோம். இன்றைய நிகழ்ச்சி முடிய இன்னும் அரை மணியே இருக்கிறது. அதற்கு முன் ஒரு சின்ன விளம்பர இடைவெளி."

விளம்பரங்கள் வர ஆரம்பித்தன. அருணுக்குத் திடீரென்று ஒரு யோசனை வந்தது.

"அம்மா இது live program தானே?"

"ஆமாம் கண்ணா. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை ராத்திரியும் இந்த நிகழ்ச்சி வரும். கொஞ்ச நாளா நான் இந்த நிகழ்ச்சியைக் கேட்கவே முடியலை. இதுவொரு நல்ல பயனுள்ள நிகழ்ச்சி."

அருண் அம்மாவின் நோட்புக் கணினியை எடுத்து அந்த நிகழ்ச்சியைப் பற்றி கூகுள் செய்தான். அதில் நேரடித் தொலைபேசி எண் கிடைத்தது.

"அம்மா, எனக்கு ஒரு ஐடியா தோணுது. நான் எழுதி வச்சதை விடவேண்டியதுதான்.”

அருண் அம்மாவின் செல்ஃபோனை எடுத்து நிகழ்ச்சியின் நேரடி எண்ணைச் சுழற்றினான். இன்னும் விளம்பரம்தான் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. இன்னொரு அறைக்குச் சென்று சில நிமிடங்கள் பேசினான். மகிழ்ச்சியோடு அம்மாவை நோக்கி வந்தான்.

"அம்மா, வாங்க. இப்பவே வானொலி நிலையத்துக்குப் போகலாம். பத்து நிமிஷத்துல நாமே அதில் பேசப்போறோம்!”

இருவரும் வானொலி நிலையம் சென்றடைந்தனர். அங்கே வாயில் காவலர் இவர்களது வருகையை எதிர்பார்த்து நின்றிருந்தார். உடனே மடமடவென்று அவர்களை நிகழ்ச்சி நடக்கும் அறைக்கு அழைத்துப் போனார்.

நிகழ்ச்சியை வழங்கியவர் அருணையும் கீதாவையும் உள்ளே வருமாறு சைகை காட்டினார். கீதா, அருணை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தார். கண்ணாடி வழியே அருண் உள்ளே மைக் அருகில் அமர்வதைப் பார்த்தார்.

அங்கு இருந்த செக்யூரிடி இன்னும் இரண்டு மூன்று ஆட்களைக் காவலுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சி தொடர்ந்தது. "நேயர்களே! என்னுடன் இப்பொழுது ஓர் இளைஞர் இருக்கிறார். இவர் இந்தச் சிறு வயதிலேயே நம்ம ஊரோட சுற்றுச்சூழல் சுகாதாரம் குறித்து ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட்டு இருக்காரு."

"உன் பெயர் என்னப்பா?"

"அருண். அருண் மேகநாத். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன்."

"எப்படி இந்தச் சின்ன வயசில சூழல் குறித்து இவ்வளவு ஈடுபாடு வந்தது?"

"எங்க அம்மா நிறைய இதைப்பத்திச் சொல்லிக் கொடுத்திருக்காங்க."

"ஆமாம், இப்ப எதைப்பத்திப் பேச இங்க வந்திருக்கீங்க?"

அருண் பதில் அளித்தான். "நம்ம ஊருல கருமலை அடிவாரத்துல நடக்கிற ஆய்வு பத்திதான்."

"அந்தக் காரீய விஷமாதல் குறித்த ஆய்வா?"

"ஆமாம், அது ஒரு பெரிய மோசடி."

"மோசடியா? அப்படிச் சொல்ல என்ன ஆதாரம் இருக்கு தம்பி?"

"அங்கே பெரிசா பெட்ரோலியம் எண்ணெய் ஆய்வு நடக்கப் போகுது. வெளியே தெரிஞ்சா நம்ம போராட்டம் செய்வோமோன்னு, அதை கமுக்கமா மறைக்கப் பார்க்கறாங்க."

"அதிர்ச்சியான செய்தியா இருக்கே தம்பி! இதல்லாம் உண்மையா? ஆதாரம் இருக்கா?"

"இருக்கே. இதோ. நம்ம ஊராட்சி ஊழியர் ஒருத்தர் எழுதின ஒரிஜினல் அறிக்கை." அருண் தான் கொண்டு வந்திருந்த ஆதாரங்களைக் காண்பித்தான்.

அவர் சிறிது நேரம் படித்தார். வானொலியில் ஒரே நிசப்தம்.

"அடேயப்பா... இப்படி ஒரு மோசடியை நான் கேள்விப்படவே இல்லையே!" அவர் வியந்தார். அப்பொழுது பணியாளர் ஒருவர் மெதுவாக உள்ளே வந்து ஒரு சிட்டியை அவரிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.

"நேயர்களே! நமது நிலைய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியை இன்னும் ஒருமணி நேரம் நீட்டிக்க அனுமதித்துள்ளார்கள். தம்பி அருணுக்கு ஏதும் ஆட்சேபணை இல்லை என்றால் நாங்கள் இப்பொழுது நேயர்களின் கேள்விகளுக்கு விடைதரத் தயார்."

ஒருமணி நேரம் ஓடிப்போனது தெரியவே இல்லை. அருண் குதூகலத்தோடு நேயர்களின் கேள்விகளுக்கு விடை அளித்தான்.

மறுநாள் செய்தித்தாள்களில் அந்த அறிக்கை அப்படியே வெளியாகி இருந்தது.

(நிறைவுற்றது)
ராஜேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline