Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கு. ராஜவேலு
- அரவிந்த்|அக்டோபர் 2022|
Share:
எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கிய உலகின் பல களங்களில் திறம்பட இயங்கியவர் கு. ராஜவேலு. ஜனவரி 29, 1920ல் சேலம் மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கன்பட்டியில், குருசாமி-குழந்தையம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். ஈரோடு இந்து மகாஜன உயர்நிலைப் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். சேலம் லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிக் முடித்தார். சிறு வயது முதலே பல நூல்களை வாசித்து நூல் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

அது சுதந்திரப் போராட்டம் சுடர் விட்டுக் கொண்டிருந்த காலம். இளைஞர்கள் பலர் சுதந்திர வேட்கையால் தங்கள் கல்வியை, பணிகளைத் துறந்து போராட்டங்களில் ஈடுபட்டனர். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்றுவந்த ராஜவேலுவையும் சுதந்திரப் போராட்டம் ஈர்த்தது. படிப்பைப் புறக்கணித்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1940-ல் தனிநபர் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். தொடர்ந்து 1942-ல், காந்தி அறிவித்த 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் கலந்துகொண்டார். கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு ஆண்டு கடுங்காவல் தண்டனை கிடைத்தது. சிறையில் கிடைத்த நேரத்தை வாசிப்பில் செலவிட்டார். சிறை நூலகம் இவருக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. சிலப்பதிகாரம் இவரை மிகவும் கவர்ந்தது.

சிறையிலிருந்து விடுதலை ஆனதும் மேலே பயிலச் சென்னைக்குச் சென்றார். பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம் பெற்றார். டாக்டர் மு.வ. இவருக்கு ஆசிரியராக இருந்து வழி நடத்தினார். படிப்பை முடித்ததும் கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பேராசிரியர் பணி கிடைத்தது. தொடர்ந்து சென்னை கலைக்கல்லூரியில் பேராசிரியராகப் பணி வாய்ப்பு வந்தது. ஓய்வுநேரத்தில் சிறுசிறு கதைகளை எழுதினார். கலைமகளுக்கு, 'காதல் தூங்குகிறது' என்ற நாவலை எழுதி அனுப்ப, அது பிரசுரமானதுடன், ஆயிரம் ரூபாய் பரிசும் கிடைத்தது. அது முதல் தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.பரமேஸ்வரி என்பவருடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு திருமாவளவன், பாரிவளவன் என இரண்டு ஆண்மகவுகளும், குழந்தை கஸ்தூரி, குழந்தை இந்திரா, குழந்தை வளர்மதி என மூன்று பெண் மகவுகளும் பிறந்தனர். பாரத விடுதலைக்குப் பின் அமைந்த காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழக அரசின் செய்தித்துறையில் சில காலம் பணியாற்றினார் ராஜவேலு. பின் மொழிபெயர்ப்புத் துறையில் இயக்குநராகப் பொறுப்பு வகித்தார். ஓய்வுபெற்ற பிறகும் இரண்டு ஆண்டுகள் தமிழக அரசின் தமிழ்ப் பண்பாட்டு இயக்ககத்தில் இயக்குநராகப் பணியாற்றினார். முன்னாள் தமிழக முதல்வர் காமராஜருக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். காந்தி, நேரு, நேதாஜி, ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோரைச் சந்தித்து உரையாடியுள்ளார். கு. ராஜவேலுவை திருமணம் செல்வகேசவராய முதலியார், டாக்டர் மு.வ. ஆகியோரின் வரிசையில் இடம்பெறத் தக்கவராக பெ.சு. மணி. மதிப்பிடுகிறார்.

கு. ராஜவேலுவின் படைப்புகள்
மகிழம்பூ
கொடை வளம்
சத்தியச் சுடர்கள்
வைகறை வான மீன்கள்
வள்ளல் பாரி
அழகு ஆடுகிறது
தங்கச்சுரங்கம்
காதல் தூங்குகிறது
அருமருந்து
தேயாத பிறைநிலா
அடிவானம்
வானவீதி
வான்குயில்
சித்திரச்சிலம்பு
வள்ளல் பாரி
காந்த முள்
புறநானூற்றுப் புதிய தளிர்கள்
ஆகஸ்ட் 1942
இடிந்த கோபுரம் மற்றும் பல.


தனக்கென ஒரு தனிப் பாணியில் எழுதி வந்தார் ராஜவேலு. தெ.பொ.மீ., டாக்டர் மு. வ. இருவரது அன்பையும் நட்பையும் ஒருங்கே பெற்றவர். இவரது எழுத்தை டாக்டர் மு.வ., "என்னைவிடத் தெளிவான தமிழ் எழுதும் வன்மை உடையவர் இவர். இவருடையது கவிதை நடை" என்று பாராட்டியுள்ளார். கதை, கவிதை, நாவல் என படைப்புலகின் பல களங்களிலும் இயங்கினார் ராஜவேலு. பல நூல்களை எழுதினார். அவற்றில் சில கல்லூரிகளில் பாடமாக இருந்தன. அவற்றில் 'அழகு ஆடுகிறது' என்ற நூல் குறிப்பிடத்தகுந்த ஒன்று. சென்னை பல்கலைக்கழகத்தில், பாரதியின் குயில் பாட்டை ஆராய்ந்து ராஜவேலு ஆற்றிய சொற்பொழிவின் நூலாக்கம்தான் 'வான்குயில்' என்ற நூல். இவர் எழுதிய 'சித்திரச் சிலம்பு' தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு பெற்றது. நூலின் முன்னுரையில் ராஜவேலு, "அக்காலத்தில், அரசியல் கைதிகள் சிறையில் படிப்பதற்காக இலக்கிய நூல்களை எடுத்துச் செல்லலாம். அரசியல் நூல்களை அனுமதிக்க மாட்டார்கள். இவ்விதிகளுக்கிணங்க, நான் சிறையில் படிப்பதற்காக எடுத்துச் சென்ற நூல்களுள் ஒன்று 'சிலப்பதிகாரம்'. சிறையில் இருந்தபோது எனக்கு வயிற்றுவலி ஏற்படும்போதெல்லாம் இந்தச் 'சிலப்பதிகாரம்' நூல், குறிப்பாக, அதில் இடம்பெற்றுள்ள 'கானல் வரி' எனக்கு அருமருந்தாக உதவியது. சிலப்பதிகாரத்தைப் பன்முறை படித்து இன்புறும் வாய்ப்பையும் எனக்குச் சிறைவாசம் அளித்தது. அவ்வாறு படித்ததன் விளைவே இச்சித்திரச் சிலம்பு" என்று குறிப்பிட்டுள்ளார்.கு. ராஜவேலு, சாகித்ய அகாதமி நிறுவனத்திற்காக நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகளைத் தொகுத்திருக்கிறார். 'புறநானூற்றுப் புதிய தளிர்கள்' என்னும் இவரது நூல், புறநானூற்றுப் பாடல்களை ஆராய்கிறது. 'வைகறை வான் மீன்கள்' நூல் தேச பக்தர்களின் மிக விரிவான வரலாற்று ஆவணமாகும். மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். தாராசங்கர் பந்தோபாத்யாவின் நாவல்களைத் தமிழில் தந்திருக்கிறார். சிவாஜி நடித்த ராஜபக்தி போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். 2020ல், இவரது நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு இவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்புச் செய்தது.

சென்னை, அசோகநகரில் வசித்து வந்த கு.ராஜவேலு செப்டம்பர் 9, 2021ல், தனது 101ம் வயதில் காலமானார்.
அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline