Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது
Tamil Unicode / English Search
முன்னோடி
'நாவலிஸ்ட்' பண்டிதை விசாலாக்ஷி அம்மாள்
- பா.சு. ரமணன்|ஜூலை 2022|
Share:
"ஸ்ரீமதி பண்டிதை விசாலாக்ஷியம்மாள் அவர்களைத் தமிழ்நாட்டில் அறியாதார் இரார். தமிழ்ப் பெண்மணிகளுள் முதல் பத்திராசிரியராயும், நூலாசிரியராயும் வெளிப்போந்தவர் அவர்தான். அவரது நூல்கள் யாவும் பெண்மணிகளுக்குக் கண்மணி போன்று இலங்குவனவாகும். பதி பக்தியையும், ஈசுவர பக்தியையும் போதிப்பதில் அம்மையார்க்கு அபாரமான நிபுணத்வம் இருந்து வந்தது. அவரது நூல்களெல்லாம் உத்கிருஷ்டம் பொருந்தியவைகள். அவரது தமிழ் பாஷா நயம் வேறு எவரானும் ஸ்வீகரிக்க முடியாத விதமாகப் பரிமளித்துக் கொண்டிருந்தது. அவர் 1902-ம் வருஷ முதல் 'லோகோபகாரி' பத்திரிகையின் உதவி ஆசிரியராயும், பின் பத்திராசிரியராயும் விளங்கி விசேஷித்த பிரக்யாதியை யடைந்திருந்தார். 'லோகோபகாரி'ப் பத்திரிகையை விற்றுவிட்ட பிறகு 'ஹிதகாரிணி' என்ற உயரிய மாத ஸஞ்சிகையைப் பல வருஷங்கள் வரை பிரசுரித்து வந்தார். பத்திரிகா முகமாய்ப் பிரதி பத்திரிகைகள் தோறும் சொரிந்து வந்த வேதாந்த மாரியின் அற்புதமும் அதன் அருமை பெருமைகளும் அதை வாசித்து வந்தோர்தான் அறியவல்லார்," இப்படி மதிப்பிடுகிறார் பழம்பெரும் பத்திரிகையாளரான எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு.

தமிழ்நாட்டின் முதல் பெண் எழுத்தாளராகவும், பெண் பத்திரிகையாசிரியர் ஆகவும் போற்றப்பட்ட விசாலாக்ஷி அம்மாள், 1884ல், வெங்கட்ராம ஐயர்-சுப்புலட்சுமி அம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை இசைக்கலைஞர். புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட சமஸ்தானங்களில் வித்வான். தந்தைவழி மகளுக்கு இசை ஆர்வம் வந்தது. கூடவே ஓவியம் போன்ற கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். தந்தையே இவருக்கு ஆசிரியராக இருந்து தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் அனைத்தையும் கற்பித்தார். அக்காலத்தில் பால்ய விவாகம் இயல்பு என்பதால் சிறுமியாக இருந்தபோதே இவருக்குத் திருமணம் நிகழ்ந்தது. ஆனால், 14 வயதிலேயே கணவனை இழந்தார். அக்கால வழக்கப்படி அந்த வயதிலேயே விதவைக் கோலம் பூண்டார்.

தந்தைக்கு மைசூரில் பணி வாய்ப்பு வந்தது. மகளையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை முடித்தார் விசாலாக்ஷி. கிடைத்த ஓய்வு நேரத்தை வாசிப்பதில் செலவிட்டார். எழுத்தார்வம் சுடர்விட்டது. மைசூர் ஸ்டாண்டார்ட் இதழில் பல கட்டுரைகளை எழுதினார். இவரது பன்மொழிப் புலமையையும் மேதைமையும் பாராட்டி சிருங்கேரி சங்கராச்சார்ய மடம் 'பண்டித ரத்னா' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. அது முதல் 'பண்டிதை விசாலாக்ஷி அம்மாள்' என்று இவர் அழைக்கப்பட்டார். வி. நடராஜ ஐயர் 1895ல் தொடங்கி ஆசிரியராக இருந்து நடத்திய 'லோகோபகாரி' இதழில், 1902ல் துணை ஆசிரியராகச் சேர்ந்தார். தமிழ் இதழுலகில் முதன்முதலில் ஒரு தமிழ்ப் பெண், பத்திரிகைப் பணியில் சேர்ந்து பணியாற்றினார் என்றால் அது விசாலாக்ஷி அம்மாள்தான். மாத இதழாக வந்து கொண்டிருந்த 'லோகோபகாரி' அதன்பின் வார இதழ் ஆனது. இதழின் விற்பனை அதிகரித்தது.

நாவல் எழுதும் ஆர்வம் உந்தவே விசாலாக்ஷி அம்மாள், 'லலிதாங்கி' என்ற நாவலை எழுதினார். அவர் நாவல் உலகிற்கு அறிமுகம் இல்லாதவர் என்பதால் வி. நடராஜ ஐயரின் பெயரிலேயே அந்த நாவல் வெளியானது. தொடர்ந்து வெளியான 'ஜலஜாக்ஷி'யும் ஐயரின் பெயரில்தான் வெளியானது. நாவல்களுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவே, நடராஜ ஐயர் உண்மையை உரைத்து, அந்த இரு நாவல்களையும் எழுதியது விசாலாக்ஷி அம்மாள்தான் என்று இவரை அடையாளப்படுத்தினார். இது பற்றி எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு, "பண்டிதை விசாலாக்ஷியம்மாள் எழுதிய லலிதாங்கி, ஜலஜாக்ஷி என்ற இரு நாவல்களையும் நடராஜ ஐயர் தாமே இயற்றியது போன்றும் வெளியிட்டார். அந்தக் காலத்தில் நாவல்கள் விசேஷமாக இல்லை. அத்துடன் ஐயரவர்கள் இயற்றிய நூல் என்றால் அதற்குப் பிரத்தியேகமான ஒரு சிலாக்கியம் ஏற்பட்டிருந்தது. எனவே மேற்சொன்ன இரு நாவல்களையும் தமிழ் நாட்டினர் மிக்க அபிமானத்தோடும் பெற்றுப் பரவசமடைந்தனர். அதற்கு முன்பு அவ்வாறான தமிழ் நடையில் வேறு எந்தப் புஸ்தகமும் அவ்வளவு ஸ்வாரஸ்யமாய் எழுதப்படவில்லை. அவ்விரு புஸ்தகங்களாலும் நடராஜ ஐயரின் பெயர் ஒங்கிற்று, இவ்வளவு பிரக்யாதி அப்புஸ்தகங்களுக்கு ஏற்பட்ட பின்னர் 'ஜோதிஷ்மதி' என்ற நாவலில், அப்புஸ்தகங்களை இயற்றியவர் பண்டிதை விசாலாக்ஷியம்மாள் என்று வெளியாகவே, 'ஒரு பெண்ணா எழுதிற்று' என்று எல்லோரும் பிரமித்துப் போயினர். அது முதற்கொண்டு தான் விசாலாக்ஷியம்மாளின் வித்வத்வம் தமிழுலகமெங்கும் பரவிற்று. அம்மாளால் லோகோபகாரிக்கு முன்னிலும் அதிகமான பெருமையும் கீர்த்தியும் உண்டாயிற்று. இருவரும் இரண்டு ரத்னங்களாகப் பிரகாசித்தனர். 1906-ம் வருஷத்தில் 'லோகோபகாரி' பத்திரிகையின் பாத்தியதையைப் பண்டிதை விசாலாக்ஷியம்மாளுக்கு உரிமையாக்கினர்" என்று குறிப்பிடுகிறார்.

அதுமுதல் தொடர்ந்து பல நாவல்களை எழுதினார் விசாலாக்ஷி அம்மாள். அதனால் 'நாவல் ராணி' என்று போற்றப்பட்டார். தன்னைத் 'தமிழ் நாவலிஸ்ட்' என்றே இவர் அழைத்துக் கொண்டார். நாளடைவில் லோகோபகாரியில் இருந்து விலகி, 'ஹிதகாரிணி' என்ற பெண்களுக்கான இதழை நிறுவி அதன் ஆசிரியரானார். அதில் சிறப்பான பல கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதினார். கூடவே 'ஞானசந்திரிகா' என்ற இதழையும் தொடங்கி நடத்தினார்.

விசாலாக்ஷி அம்மாளின் மொழிநடை சம்ஸ்கிருதம் கலந்த பழங்காலப் பண்டித நடையைக் கொண்டது. பின்வருவது விசாலாக்ஷி அம்மாள் எழுதிய 'வநஸூதா' என்னும் நாவலின் சிறு பகுதி. இது அவரது அக்கால மொழிநடைக்கு ஒரு சான்று. (வநஸூதா, நாவல், 1909, கார்டியன் பிரஸ்): "பூமியில் விதைகளைப்போட்டு கிருஷிசெய்தால் பயிர், பலன்கள் கிடைக்கின்றன. பூஸாரத்தின் குணப்படி விவித வியவஸாயங்களைச் செய்யலாம். நெல், விளையும் நிலம் வேறு; அவரை, துவரை, மொச்சை, கம்பு, கேழ்வரகு, கோதுமை முதலிய தான்யங்கள் பயிராகும் பூமி ஒருவிதமாயிருக்கும். தான்யங்கள் விளையும் நிலத்தில் பல விருக்ஷங்கள் பயிராகா. மலைப்பிரதேசங்களில் காபி, கிச்சிலி, உருளை முகலிய பலன்கள் விளைகின்றன. நீலகிரி மலையில் காபித்தோட்டங்களதிகமுண்டு. காபிச் செடிகளின் கோமலமான வளர்ச்சி மனதுக்கு ஹர்ஷத்தைத் தரும். காலை, மாலைகளில் புஷ்பத்தின் வாஸனை இன்பத்தை விளைக்கும். இக்காலத்தார் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் காபியருந்துவார்கள். சிலர் எந்நேரமும் காபிக்குளத்தில் முழுகிக் கிடப்பார்கள். இதற்குமுன் இந்தியாவில் காபிக்கொட்டையை ஜனங்கள் விசேஷமாய் உபயோகிக்கவில்லை. சில வருஷங்களாய் ஒருவரையொருவர் பார்த்து பிரதிஷ்டைக்காக காபியருந்த வாரம்பித்தனர்."



எஸ்.எஸ். வாஸனின் ஆனந்த விகடன் முதல் இதழில் (ஆனந்த விகடன், 1.2.1926 இதழ்) விசாலாக்ஷி அம்மாள், 'ஸ்திரீ வித்யாப்யாஸம்' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி பின்வருவது. "ஸ்திரீ வித்யாப்யாஸம் நமது நாட்டுக்குப் புதிதல்ல. நமது மகரிஷிகளின் தர்ம பத்தினிகளும் அவர்களின் புத்திரிகளும் சதுர் சாஸ்திர பண்டிதைகளாயிருந்து, அநேக வித்வான்களோடு வாதமாடி, ஜெயம் பெற்றிருக்கிறார்கள். லெளகீக வித்தை, பரமார்த்திக வித்தை ஆகியவைகளில் தேர்ந்த நாரீமணிகள் அனேகரிருந்திருக்கின்றனர். தர்ம சாஸ்திரம், ஸங்கீதம், ஸாகித்யம், தர்க்கம், வியாகரணம், ஜோதிஷம், மீமாம்ஸம் முதலியவைகளில் தேர்ந்து அநேக ராஜஸ்திரீகளுக்கு போதகிகளாயிருந்தார்கள். வேதங்களில் அங்கனைகள் கூறியுள்ள அனேகருக்குள், வேதாந்தத்திலும் மேதாவிகளாயிருந்தனர். எந்த விதத்தில் யோசித்தாலும், இந்திய தேசத்தில் ஸ்திரீகளே தர்மத்தைப் பரிபாலித்து வருகிறார்கள். அவர்களே தெய்வ பக்தியுள்ளவர்கள். ஸத்ய தர்மோத்தாரங்களைச் செய்வதில் மானினிகளே முன் வருபவர்கள். உத்தமிகளான ஸாத்வீமணிகளின் நன்மையைக் கோரி சிரேஷ்டமான கல்வியைப் புகட்டி, ஸம்ஸார தர்மத்தை எடுத்தோதி, தேச ஹிதோத்தாரிணிகளாய்ச் செய்ய ஒவ்வொருவரும் ஸங்கல்பித்துக் கொள்வார்களாக"

மலைமகள், பாலம்மாள், வை.மு. கோதைநாயகி எனப் பலருக்கும் முன்னோடி எழுத்தாளர் பண்டிதை விசாலாக்ஷி அம்மாள்தான். இவரது நாவல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அக்காலத்து இதழ்கள் பலவற்றில் இவரது நாவல் குறித்த விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. இன்றைக்குப் பிரபல எழுத்தாளர்கள் எழுதினாலும் நாவல்களில் 1000 பிரதிகள் விற்பதே அதிசயமான ஒன்றாக இருக்கும் நிலையில், அன்றைக்கு ஆயிரம் பிரதிகள், இரண்டாயிரம் பிரதிகள் என்று இவரது நாவல்கள் அச்சிடப்பட்டு உடனடியாக அவை விற்பனையும் ஆகியிருக்கின்றன. பலமுறை மறுபதிப்பும் கண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டிலும் இவ்வாறு பல நாவல்களை எழுதிக் குவித்திருக்கிறார் விசாலாக்ஷி அம்மாள். இவர் படைத்திருக்கும் நாவல்களின் பட்டியல் வியப்பை அளிப்பவை. ஞானரஞ்சனி, சுஜாதா, வநஸூதா, விராஜினி, ஆரியகுமாரி, லலிதாங்கி, தேவிசந்திரபிரபா, ஜலஜாக்ஷி, நிர்மலா, ஜோதிஷ்மதி, ஆனந்த மஹிளா, ஹேமாம்பரி, சரஸ்வதி, ஜெயத்சேனா, மஹிஸுதா, ஸ்ரீமதி ஸரஸா, ஸ்ரீகரீ, ஜ்வலிதாங்கி, நிரஞ்சனா, மஹேசஹேமா, கௌரி, ராஜசேகரி, கல்பவல்லரி, கவிகுஞ்சரி, லாவண்யரேகா, இந்திராநீலா, ரஸிகவசனி எனப் பட்டியல் நீள்கிறது. 'பத்துருஹரி' என்பது இவர் எழுதிய நாடகம். பெண் விடுதலை, சமத்துவம், உயர்வில் ஈடுபாடுடையவர். பெண் கல்வியைத் தொடர்ந்து வலியுறுத்தியவர். அக்கருத்துக்களைத் தனது பல புதினங்களில் வெளிப்படுத்தியுள்ளார். லோகோபகாரி கட்டுரைகளிலும் எழுதியுள்ளார். லோகோபகாரி இதழில் வெளியான அவரது சில குறிப்புகள் தொகுக்கப்பட்டு 'நீதிமொழிகள்' என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.

1902ல் எழுதத் தொடங்கி, நாவல் உலகிலும், பத்திரிகை உலகிலும் முடிசூடா ராணியாகத் திகழ்ந்த விசாலாக்ஷி அம்மாள், உடல்நலக் குறைவால், 1926ல், 42ம் வயதில் காலமானார். அவரது மறைவைக் கண்டு மிகவும் மனம் வருந்தி, அவரது எழுத்துத் திறமையைப் போற்றி திரு எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு தனது 'அமிர்தகுணபோதினி' இதழில் எழுதியது: "அவரை (விசாலாக்ஷி அம்மாள்) ஒரு ஞானாசிரியை என்றும் சொல்லலாம். இளமை முதல் ஞானபக்தி வைராக்கியங்களில் சிறந்து நின்றார். அதி பால்யத்தில் பர்த்தாவை இழந்து தமது வாணாள் முற்றிலும் தபஸ்வினி போன்றும் காலங்கழித்தார். ஸங்கீதத்தில் அவருக்கிருந்த ஞானம் அபாரமானது. அதை நேரிற் பார்த்தவர்கள்தான் சொல்ல வேண்டும். கன்னடம், தமிழ், ஆங்கிலம், ஸமஸ்கிருதம் இந்நான்கு பாஷைகளிலும் நன்கு தேர்ந்தவர். இவரால் எழுதப்பட்ட நாவல்கள் ஒரு முப்பதுபோல் இருக்கலாம். தர்க்கத்தில் மிகவும் வல்லவர். இத்தகைய பிரபாவங்கள் கொண்ட இந்த மாது சிரோமணியார் தமது 42-வது பிராயத்தில் சென்ற அக்டோபர் மாதம் 25-ம் தேதியன்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள தமது 'லலிதா விலாஸ' மாளிகையில் காலஞ் சென்று விட்டாரென்று அறிய மிகவும் துக்கிக்கின்றோம். 'விசாலாக்ஷி' எனும் ஞானாசிரியை அஸ்தமனமானதால் அவரால் அறிவுச்சுடர் கொளுத்தப்பட்ட நாம் இப்போது இருளில் அகப்பட்டு விழிக்கின்றோம், நம்முடைய வியஸனத்தைப் பரிகரிப்போர் யார்? பகவானே! உம்முடைய யோசனையும் காரியமும் அற்ப மனிதர்களாகிய எங்களால் அறிய முடியுமோ? மிகச்சொற்ப வயதில் அதி சீக்கிரத்தில் ஜீவன் பிரிந்தது பரம துக்கத்துக்கிடம். பத்திரிகை உலகத்துக்கும், முக்கியமாய் ஸ்திரீ ஸமூகத்திற்கும் அவரது அந்தியம் அளப்பரிய பெரும் நஷ்டமாகும். ஞான கலா விலாஸினியான இவ்வம்மையின் எதிர்பாராத வியோகத்தை நினைக்குந்தோறும் எம்முடைய மனம் துக்கத்தால் மூடப்படுகிறது. ஆகவே, இச்சமயம் எதுவும் எழுதத் தோன்றவில்லை. அவரது குடும்பத்தாருக்கு நமது அநுதாபம்."

எழுத்தாளர், இதழாளர், தமிழ் நாவலிஸ்ட் பண்டிதை விசாலாக்ஷி அம்மாள் பெண் எழுத்தின் முதன்மையான முன்னோடி.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline