Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி | பொது | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஈசான்ய ஞானதேசிகர்
- பா.சு. ரமணன்|ஜூன் 2022|
Share:
தோற்றம்
பிறப்பு, இறப்புச் சுழலிலிருந்து விடுபட்டு மெய்ப்பொருளைத் தேடி அடைய வேண்டும் என்ற எண்ணம் மானுடர் எல்லோருக்கும் தோன்றுவதில்லை. 'நான்', 'எனது' என்ற குறுகிய எண்ணங்களாலும், தேவையற்ற ஆசைகளாலும், உணர்ச்சிக் குழப்பங்களாலும் மனிதன் எப்பொழுதும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறான். இந்த மாயையைக் களைந்து, அந்த மாய உணர்வினைக் கடந்து, முழுமையான சத்தியத்தைத் தேடுவதும் அதனை உணர்ந்து அதன்படி வாழ்வதும் அவ்வளவு எளிதல்ல. "அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்ற மாணிக்கவாசகரின் வாக்கிற்கேற்ப அந்த இறைவன் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அப்படிப்பட்ட பரிபூரண உண்மையை, அந்த இறைவனின் துணையோடும் ஆசியோடும் தேடி உணர்ந்த ஒரு மெய்ஞ்ஞானி ஈசான்ய ஞானதேசிகர். இறைவனே அவரது தவத்திற்குக் காவலாக புலி ரூபத்தில் வந்து அவரது தவத்திற்கு இடையூறு ஏற்படாமல் காத்தான் என்பதும் அவரது வாழ்க்கை வரலாற்றிலிருந்து தெரியவருகிறது, இவர், 1750ம் ஆண்டின் பிற்பகுதியில் பாலாற்றங்கரையை ஒட்டியுள்ள ராயவேளூர் என்ற ஊரில் தோன்றினார். இயற்பெயர் கந்தப்பன்.

ஆன்மிக ஆர்வமும் தேடலும்
சிறு பருவம் முதலே இவர் மிகுந்த ஆன்மிக ஆர்வம் உடையவராக இருந்தார். சகல சாஸ்திரங்களையும், புராண, இதிகாச, இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்த இவர், பருவ வயதை அடைந்ததும் திருமணம் செய்து கொள்ளாது, பெற்றோரின் உத்தரவு பெற்றுத் துறவறம் பூண்டார். பல தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டார். பல சாதுக்களின் மடங்களுக்கும், ஜீவ சமாதிகளுக்கும் சென்று தரிசனம் செய்தார். பின்னர் தனக்கான குருவைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டார்.

குருவே சரணம்
ஒரு சமயம் அவர் சிதம்பரம் திருத்தலம் சென்றார். ஆடலரசனைத் தரிசித்தார். அங்கு சில நாட்கள் தங்கினார். அங்கே 'மௌனகுரு தேசிகர்' என்ற தவயோகி பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். சிறந்த தவயோகியான அவர், யாரிடமும் பேசாமல் எப்பொழுதும் பரமானந்த நிஷ்டையிலேயே இருப்பவர். அதனால் 'மௌனயோகி' என்று அழைக்கப்பட்டார். அவரைத் தரிசித்த உடனேயே கந்தப்பருக்கு 'இவர்தான் என் குரு' என்று மனதில் முடிவு செய்தார். அங்கேயே தங்கி அவருக்குப் பணிவிடை செய்து வரலானார். பசிக்கும்பொழுது அருகில் உள்ள வீடுகளுக்குச் செல்வார். உணவை யாசிப்பார். சிறிதளவே உண்பார். பின் திரும்பி வந்து குருவின் அருகிலேயே அமர்ந்திருப்பார்.

இப்படியே நாட்கள் கடந்தன. ஆனால், மௌனகுருவோ வாய் திறக்கவில்லை. கந்தப்பருக்குத் தீட்சை அளிக்கவும் இல்லை. சமாதி நிலையிலேயே ஆழ்ந்திருந்தார். கந்தப்பர் மிகப் பொறுமையாகக் காத்திருந்தார். குருநாதரின் மனம் எப்போது இரங்கும், எப்போது சமாதியிலிருந்து மீண்டு வருவார், தன்னோடு பேசுவார் என்று காத்துக் கொண்டிருந்தார். அதற்கான நேரம் வந்தது.உபதேசம்
ஒருநாள்... இடி, மின்னலோடு கடுமழை பெய்தது. புயலும் வீசியது. அப்போது திடீரென வைராக்கிய ஞானம் பெற்ற கந்தப்பர், தனது ஆடைகளைக் களைந்து, கோவணத்தை மட்டுமே ஆடையாக அணிந்து, குருவின் காலடிகளில் வீழ்ந்து வணங்கினார். மழையோ விடாமல் பெய்து கொண்டிருந்தது. அந்தக் கடுமழையில் எவ்வித உடல் உணர்வுமின்றி குருவின்முன் கை கூப்பியவாறே நின்று கொண்டிருந்தார் கந்தப்பர். சிறிது நேரத்திற்குப் பின் கண்விழித்துப் பார்த்தார் மௌனயோகி, கந்தப்பரின் ஞான வைராக்கிய நிலையையும், சந்யாச நோக்கத்தையும் அறிந்து கொண்டார். இவர் ஞானதீட்சைக்கு ஏற்றவர், சீடருக்கான தகுதி உடையவர் என்பதை உணர்ந்து கொண்டார். தான் அணிந்திருந்த இடை ஆடையினையை கந்தப்பருக்குப் போர்த்தி, அவரைச் சீடராக ஏற்றுக்கொண்டார். ஞான உபதேசம் செய்து அருளினார். அதுமுதல் கந்தப்பர், கந்தப்ப தேசிகர் ஆனார்.

குருவின் பாதங்களில் பணிந்த கந்தப்ப தேசிகர், குருவுடனேயே பல ஆண்டுகாலம் தங்கியிருந்தார். வேத, வேதாந்த உண்மைகள், பிரம்ம தத்துவம், உலக வாழ்க்கை ரகசியம் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். பல்வேறு சித்துக்களும் கைவரப் பெற்ற அவர், சிறந்த அனுபூதிச் செல்வரானார். தனது குருவின் ஜீவ சமாதிக்குப் பின் மீண்டும் தனது தீர்த்த யாத்திரையைத் தொடங்கினார்.

திருத்தல யாத்திரை
"ஜனனாத் கமலாலயே" என்று சிறப்பிக்கப்படும் முக்திதரும் தலங்களில், பிறக்க முக்தியைத் தரும் தலமான திருவாரூருக்குச் சென்றார். அங்கே சிறந்த தவயோகியும், சித்த புருஷர்களில் ஒருவரும், இறைவனின் காட்சியையும், அம்பிகையின் அருளையும் நேரே பெற்றவருமான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். பின் நாகைப்பட்டினம் அருகே உள்ள சிக்கல் என்ற ஊரை அடைந்து அங்கு உறையும் சிங்கார வேலனைத் தரிசனம் செய்தார். அங்கே எப்பொழுதும் பிரம்ம நிஷ்டையிலேயே இருப்பவரான 'உகண்டலிங்க ஞானதேசிகர்' என்னும் மகா குருவின் ஆசியைப் பெற்றார். தொடர்ந்து திருவண்ணாமலைக்கு அருகே உள்ள, வேட்டவலம் என்ற ஊரை அடைந்தார். அங்கு சில காலம் தவம் செய்தார். அங்கு பொதுமக்களால் இவரது தவத்திற்கு இடையூறு ஏற்பட்டதால், தனித்திருந்து தவம் செய்ய விரும்பி, திருவண்ணாமலை தலத்தை வந்தடைந்தார்.

ஈசான்ய ஞானதேசிகர்
அண்ணாமலை தலத்தின் ஈசான்யப் பகுதியில் ஓர் வில்வ மரத்தடியை, தான் தவம் செய்வதற்காகத்த் தேர்ந்தெடுத்தார் கந்தப்ப தேசிகர். அருகேயே ஈசான்யக் குளமும் இருந்தது. அங்கேயே அமர்ந்து தவத்தைத் தொடர்ந்தார். தன்னை மறந்து வெகுநேரம் சமாதியில் இருப்பார். எப்பொழுதாவதுதான் கண் விழிப்பார். கண் விழிக்கும்போது அன்பர்கள் வலியுறுத்தினால் சிறிதளவு உண்பார். பின் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுவார். நாளடைவில் கந்தப்பரது பெருமை நகரெங்கும் பரவியது. பக்தர்கள் பலரும் அவரை நாடி வந்தனர். அவர் ஈசான்யப் பகுதியில் அமர்ந்து தவம் மேற்கொண்டதால் அன்பர்கள் அவரை 'ஈசான்ய ஞானதேசிகர்' என்று அழைக்க ஆரம்பித்தனர்.

புலிச்சாமி
இவ்வாறு தேசிகர் கடும் தியானம் மேற்கொண்டு வந்த காலத்தில் விஷமிகளாலும், அருமை தெரியாத சில மனிதர்களாலும் அடிக்கடி தொந்தரவு ஏற்பட்டு வந்தது. தியானம் தடைப்பட்டது. தன் அடியவனுக்குத் தொந்தரவு என்றால் ஆண்டவன் பொறுப்பாரா? இறைவனான ஸ்ரீ அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனும் ஆண் புலியும், பெண் புலியுமான தோற்றத்தில் வந்து காவல் காத்தனர். புலியின் நடமாட்டத்தையும், அதன் உறுமல் ஒலியையும் கேட்ட விஷமிகள் ஸ்ரீ தேசிகரின் அருகே வர பயந்து அஞ்சி ஓடினர். நல்ல எண்ணம் கொண்ட பக்தர்கள் வந்தால் அப்புலிகள் தாமாகவே அவ்விடம் விட்டு நீங்கிவிடும். சில சமயம் ஸ்ரீ தேசிகரும் அப்புலிகளை அன்புடன் தடவிக் கொடுத்து, அவ்விடத்திலிருந்து போகச் சொல்வார். இதனால் தேசிகரின் பெருமை பல இடங்களிலும் பரவியது. அவரும் தனது தவ ஆற்றலால் தம்மை நாடி வந்தவர்களது நோய் நொடியை நீக்கினார். வல்வினைகளைப் போக்கினார். பலருக்கு ஞானகுருவாக இருந்து அவர்தம் ஆன்மவளர்ச்சிக்கு உதவினார்.ஈசான்ய மடம்
ஸ்ரீ தேசிகர்மீது அன்புபூண்ட அன்பர்கள் அருகில் உள்ள தோட்டப் பகுதியில் அவர் தனித்திருந்து தவம் செய்வதற்காகச் சிறிய குடில் ஒன்றை அமைத்துக் கொடுத்தனர். நாளடைவில் ஞானதேசிகர் அங்கேயே தங்கித் தனது தவத்தைத் தொடர்ந்தார். அது அண்ணாமலையின் வடகிழக்குப் பகுதியில் இருந்ததாலும், அது ஈசான்ய திசையைக் குறிக்கும் இடமாக இருந்ததாலும், அப்பகுதி நாளடைவில் 'ஈசான்ய மடம்' என்று அழைக்கப்படலாயிற்று.

ஐடன் துரை
அக்கால கட்டத்தில் திருவண்ணாமலையில் ஐடன் என்பவர் மாவட்ட கலெக்டராகப் பணியாற்றினார். ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தரிசிக்கச் சென்றார். தேசிகரைக் கண்டதுமே அவரது தோற்றத்தால் ஈர்க்கப்பட்டார். அவரையே தனது குருவாக ஏற்றுச் சரணடைந்தார். நாளடைவில் வெகு நாட்களாக ஐடனுக்கு நீங்காமல் இருந்து வந்த, தீராத நோய் நீங்கியது. இதனால் மிகவும் மனமகிழ்ந்த ஐடன், தனது நிலங்களையும், பெரும் சொத்துக்களையும் குருநாதருக்குத் தானமாக அளிக்க முன்வந்தார். ஆனால், ஈசான்ய ஞானதேசிகர் ஏற்க மறுத்தார். தான் ஒரு சந்யாசி, தனக்கு எந்தச் சொத்தும் தேவை இல்லை என்றும், வேண்டுமானால் பெரிய குடும்பியும், சம்சாரியுமான அருணாசலேஸ்வரருக்கு அச்சொத்துக்களைத் தந்துவிடலாம் என்றும் சொன்னார். குருவின் வாக்கைச் சிரமேற்று, அண்ணாமலையார் ஆலயத் திருப்பணிகளைச் செய்த ஐடன், அருணாசலரின் திருத்தேர் உற்சவத்தையும் தாமே முன்னின்று நடத்தினார். வருடம் தவறாமல் அண்ணாமலையாரின் தீபத் திருவிழாவில் கலந்துகொள்ளும் வழக்கத்தையும் மேற்கொண்டிருந்தார்.

குரு செய்த அற்புதம்
ஒருநாள்.. அண்ணாமலையார் தீபத்தைக் காணக் குதிரையில் வந்து கொண்டிருந்தார் ஐடன். திடீரெனப் பெய்த மழையால், வழியில் இருந்த ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் அண்ணாமலைக்குச் செல்லவேண்டும். ஆனால் ஐடனால் ஆற்றைக் கடக்க இயலவில்லை. சற்று யோசித்த ஐடன், "சத்குரு நாதா, என் ஞானகுருவே நீயே உற்ற துணை!" என்று கூறிக்கொண்டே குதிரையுடன் ஆற்றில் இறங்கிவிட்டார். அவருடன் வந்தவர்களோ பயந்துபோய்ப் பின்வாங்கினர்.

அதே சமயம், அண்ணாமலையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த ஈசான்ய ஞானதேசிகர் திடுக்கிட்டு தியானம் கலைந்து, தனது கையைச் சிறிது தென்புறமாகத் தாழ்த்திப் பின் உயர்த்தினார். அது கண்ட பக்தர்களில் சிலர் ஆச்சரியத்துடன் அவரிடம் காரணத்தைக் கேட்டனர். ஸ்ரீ தேசிகரோ அதற்கு, "நம் அடியவர் ஆற்றில் விழுந்தால் நாமேதான் காப்பாற்ற வேண்டுமாம்!" என்று கூறிவிட்டு நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார்.

சில மணி நேரம் சென்றது. ஆற்றில் இறங்கிய குதிரையும், ஐடன் துரையும் எந்த சேதமும் இல்லாமல் கரையேறினர். ஐடன் துரை, குருநாதரைத் தரிசித்து, அவர்தம் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். நடந்த சம்பவத்தைக் கேள்வியுற்ற பக்தர்கள், ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகரின் அளப்பரிய ஆற்றலையும், ஐடனின் குரு பக்தியையும் கண்டு வியந்தனர்.உபதேச நூல்கள்
ஸ்ரீ ஈசான்ய ஞானதேசிகர், தம்மை நாடி வந்தவர்களில் தகுதியுடைவர்களுக்குத் தீட்சை அளித்துச் சீடராக ஏற்றுக் கொண்டார். "ஒவ்வொருவரும் தம்மைத் தாமே உணர்ந்து முக்தி நெறியை அடைய வேண்டும்" என்பதே அவர் வலியுறுத்திய முக்கிய உபதேசம். தனது சீடர்கள் ஞான மார்க்கத்தை அடைவதற்காகப் பல் வேறு நூல்களையும் இயற்றி அருளினார். அவற்றுள் முக்கியமானது 'ஞானக் கட்டளை'. மேலும் 'அண்ணாமலையார் தோத்திரப் பாமாலை', 'அண்ணாமலையார் வெண்பா', 'அண்ணாமலையார் அந்தாதி', 'அண்ணாமலையார் துதி', 'அண்ணாமலை கண்ணி' முதலான நூல்களையும் இயற்றியிருக்கிறார்.

மகாசமாதி
இவ்வாறு பல ஆண்டுகாலம் ஞான வாழ்க்கை வாழ்ந்த இம்மகான், 1829ம் ஆண்டு, மார்கழி மாதம் 26ம் நாள் மகாசமாதி அடைந்தார். அவரது உடல், அவர் எப்போதும் தவம் செய்துவந்த வில்வமரத்தின் அடியிலேயே சமாதி செய்விக்கப் பெற்றது.

ஈசான்ய ஞானதேசிகரின் சமாதி ஆலயம், திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் இறுதியில், ஈசான்ய லிங்கத்திற்கு எதிரில், ஸ்ரீ அம்மணி அம்மாள் சமாதி ஆலயத்தை அடுத்துள்ள ஈசான்ய குளக்கரையில் அமைந்துள்ளது. அளவற்ற ஆன்மிக அதிர்வலைகள் உடைய இவ்வாலயம், ஆன்ம அமைதியைத் தரக்கூடியது. பல மகான்களின் ஜீவ சமாதிகளையும், அருளையும் தன்னகத்தே கொண்டது. திருவண்ணாமலை செல்பவர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய இடம் இது.
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline