Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
Tamil Unicode / English Search
சமயம்
நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|மே 2022|
Share:
தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது.

தலப்பெருமை
இறைவன் நாமம் மதுவனேஸ்வரர். கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் மதுவனேஸ்வரி. தல விருட்சம் வில்வம், கோங்கு, வேங்கை. தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், சூலதீர்த்தம். ஊரின் புராணப்பெயர் மதுவனம், திருநன்னிலத்துப் பெருங்கோயில். சுந்தரர் இத்தல இறைவன் குறித்துப் பாடியுள்ளார். தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது 71வது. கோச்செங்கண்ணன் என்ற சோழமன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று.

கோயில் அமைப்பு
270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது. இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், பிருஹத்ராஜன் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். கோபுரம் 30 அடி உயரம், இரண்டு நிலை, 5 கலசங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் சிவன் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் வீற்றிருக்கின்றனர். கோயிலின் உள்ளே சிறிய மலையின் மீதுள்ள பிரகாரத்தில் நர்த்தன கணபதி, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்கை ஆகிய மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மலையின் கீழ் உள்ள பிரகாரத்தில் சித்தி விநாயகர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அகஸ்தீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர், சனீஸ்வரர், பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் ஆகியவற்றிற்குத் தனி சன்னிதிகள் உள்ளன.



தெற்கில் எமனும், மேற்கில் வருணனும், கிழக்கில் இந்திரனும், வடக்கில் குபேரனும் லிங்கம் அமைத்துப் பூசித்துள்ளனர். இங்குள்ள தீர்த்தத்தில் மாசி மாதம் நீராடி இறைவனை வழிபடுவோர் சகல நன்மைகளையும் பெறுவர் என்றும், ஏகாதசி மற்றும் பிரதோஷ காலத்தில் வழிபாடு செய்பவர்கள் மோட்சம் அடைவர்
.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாகத் தோன்றியவர். சூரியனின் அருகில் பைரவர் இருப்பதும், அனைத்து நவக்கிரகங்களும் சூரியனைப் பார்த்திருப்பதும், சூரியனும் குருவும் நேருக்கு நேர் பார்த்திருப்பதும், சனி பகவான் தனிச் சன்னிதியில் இருப்பதும் இத்தலத்தின் சிறப்பம்சங்கள்.

முன்னொரு காலத்தில் தேவர் சபையில் ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளால் மகாமேருவின் ஆயிரம் சிகரங்களையும் மறைத்துக் கொண்டான். வாயுபகவானால் மகாமேருவை அசைக்க முடியவில்லை. இதனால் உலகம் அதிர்ந்தது.

உலகம் அழிந்துவிடும் என அஞ்சிய தேவர்கள் ஆதிசேஷனிடம் வேண்டிக்கொள்ள, மகாமேருவின் ஒரே ஒரு சிகரத்தை மட்டும் அவன் விட்டுக் கொடுத்தான். வாயுபகவான் அந்த சிகரத்தைப் பெயர்த்து தெற்கில் உள்ள கடலில் போட எடுத்துச் செல்லும்போது அந்தச் சிகரத்தின் சிறிய துளி இந்தத் தலத்தில் விழுந்ததாகத் தலபுராணம் கூறுகிறது. சமவெளியாக இருந்த இப்பகுதியில், சிகரத்தின் துளி விழுந்த பகுதி சிறிய மலையாக மாறி அதன்மீது கோயில் கட்டப்பட்டதாம்.



கிருதயுகத்தில் பிருஹத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் தேஜோ லிங்கமாகக் காட்சி தந்தார். துவாபர யுகத்தில் விருத்திராசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அவனது கொடுமைக்குப் பயந்த தேவர்கள் சிவனிடம் தஞ்சம் புகுந்தனர். அசுரர்களை ஏமாற்ற இத்தல இறைவன் தேவர்களை தேனீக்களாக மாற்றிவிட்டார். அத்துடன் இங்குள்ள கர்ப்பகிரகத்தில் தேனீக்களைக் கூடுகட்டி வசிக்கச்செய்து லிங்க வழிபாடு செய்யும்படிக் கூறினார். தேவர்கள் தேனீ வடிவம் கொண்டு வழிபட்டதால் இறைவன் ‘மதுவனேஸ்வரர்’ என்றும் அம்பாள் ‘மதுவன நாயகி’ என்றும் அழைக்கப்பட்டனர். இத்தலத்திற்கும் ‘மதுவனம்’ என்ற பெயர் வந்தது. இறைவனின் கர்ப்பக்கிரகத்திலும், கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ள மறைவிடங்களிலும் யாருக்கும் தீங்கு செய்யாமல் இன்றைக்கும் தேனீக்கள் வசிக்கின்றன.

கார்த்திகை, வைகாசி விசாகம், திருவாதிரை நாட்களில் சுவாமி புறப்பாடு நடக்கும். ஆடி மாத சுவாதியில் சுந்தரருக்குக் குருபூஜை. பிரதோஷம், மாத சிவராத்திரி யாவும் கொண்டாடப்படுகிறது. இறைவனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக் கடனைச் செலுத்துகின்றனர். ஆலயம், காலை 7.00 மணி முதல் 12.00 மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும் பலி
பண்ணியன் மென்மொழியாரிடங் கொண்டுழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையாலடி போற்றிசைப்ப
நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோவில் நயந்தவனே.

- சுந்தரர் தேவாரம்
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline