Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பொது | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | ஹரிமொழி
Tamil Unicode / English Search
சிறுகதை
வெட்டென மற!
- வித்யா அருண்|மே 2022|
Share:
யிஷுன் எம்.ஆர்.டி. நிலைய நடைமேடையில் நின்றுகொண்டிருந்தேன். காலை நேர அவசரத்தில், எதிர்மேடையில் இருக்கும் ரயில், யிஷுனோடு திரும்பினால், உட்கார இடம் கிடைக்குமே என்று என்னைப்போலவே பலரும், பறவைப்பூங்காவில் இருக்கும் ஃபிளமிங்கோக்களைப் போல கால்மாற்றி நின்று கொண்டிருந்தனர்.

"நீங்க பிரியாதானே?" குரல் வந்த திசையில் பரிச்சயமான முகம். புத்திக்கும் நாக்குக்கும் பல்லாயிரம் மைல் தூரம் இருப்பதைப் போலப் பெயரை மண்டைக்குள்ளிருந்து, நாக்குக்குத் தரவிறக்கம் செய்ய மறுத்தது.

"ஆமா!" என்றவாறே முறுவலித்தேன். நல்ல உயரத்தில், ஒருபக்க மூக்குத்தியும் அலுவலக உடைகளுமாகப் பரிச்சயமான முகம்.

"என்னை தெரியலியா?" கல்லூரியில உங்களுக்கு அடுத்த வருஷம் படிச்சேன். நான் ஷைலஜா".

பலமணி நேரம் மின்சாரம் இல்லாமல் இருக்கும் வீட்டில், சட்டெனச் சுற்றும் மின்விசிறி போல, கணநேரத்தில் தென்றலாய்ப் பல நினைவுகள்.

"ஹே... எப்படி இருக்கே? எவ்ளோ வருஷமா இங்க இருக்கே?" ஒருமைக்குத் தாவியது என் வாய்மொழி.

"ஆறு வருஷம் ஆகுது இங்க வந்து... ரெண்டு பசங்க. மூத்தவன் இந்த வருஷம் பிரைமரி 2. சின்னவனுக்கு ஒன்றரை வயசு . இப்போதான் குழந்தைகள் பராமரிப்பு மையத்துல சேத்துருக்கேன். நீங்க?"

"எனக்கு ஒரே ஒரு வாலு.. அஞ்சு வயசாகுது. கே 1. பேரு வினோத்" பிஷான் வரை ஒரே திசையில் பயணித்த இருபது நிமிடங்களில் கல்லூரிக்காலம் முதல் நேற்றுவரை எல்லாம் பகிர்ந்துகொண்டோம்.

என்னைவிட வேறான வாழ்க்கைமுறை.

கைகொடுக்கும் கணவர். காய்கறிகள் வாங்குவதிலிருந்து, குழந்தைகளைக் கிளப்புவது வரை. இருவருக்குமே வீட்டுப்பணிப்பெண் அமர்த்துவதில் உடன்பாடு இல்லையாம். எட்டு மணிக்கு அலுவலகம் போய், ஐந்து மணிக்கு வெளியேறுகிறார்களாம்.

அடுத்து வந்த நீண்ட வார விடுமுறையில் ஒருவர் மற்றவர் வீடுகளுக்குப் போய் வந்தோம். ஷைலுவின் வீட்டில் முகப்பறையில் அவள் மகன் வாங்கிய பரிசுகள் முன் நின்றன. சிங்கையில் பிள்ளைகள் பொதுவாக உறவுக்கு ஏங்கும் வகையினர். குழந்தைகள் ஒன்றாக ஒட்டிக்கொண்டார்கள். அவர்கள் இரண்டாவது முறை எங்கள் வீட்டுக்குவந்து விடை பெறும்போது என் மகன் வினோதுக்குத் தொண்டைக்குழி அடைத்து, கண்ணீர் பெருகியது.

என் கணவர், நான், ஷைலஜாவின் கணவர் ரவி எல்லாரும் ஒரே துறையில் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை பார்க்கிறோம். ரவி மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.என் கணவர் கணேஷ் முதுகலை பட்டப் படிப்பிற்காக சிங்கை வந்தவர். இருவருக்கும் எண்ணங்களில் ஒரே அலைவரிசை இருந்ததால், நாங்கள் சந்திப்பதும் அடிக்கடி நடந்தது.

என் கணவர் கணேஷ் துவாஸில் உள்ள ஒரு தொழிற்சாலையை வழிநடத்தும் பெரிய பதவியில் இருக்கிறார். எனக்கு புவனவிஸ்தாவில் வேறொரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வேலை.

நான் வேலை செய்யும் நிறுவனம் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகத்தில்தான் நான் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். என் வேலைத்திறத்தால், வேகமாகப் பதவி உயர்வுகளும் கிடைத்தவண்ணம் இருந்தன. திருமணத்தின் பொருட்டு நான் சிங்கைக்கு இடம் பெயர்ந்த போதுகூட என் ராஜினாமா முடிவை மாற்றி ஆறு மாதம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய எனக்கு வழி செய்துகொடுத்தார்கள். சில மாதங்களில் எனக்கு நிரந்தரக் குடியிருப்பாளருக்கான அட்டையும், அதே நிறுவனத்தின் சிங்கைக் கிளையில் என் திறமைக்கேற்ற வேலையும் அமைந்துவிட்டன.

இன்றைய நிலையில் நான் தெற்காசியப் பகுதிகளுக்கான மேலாளர் பதவியில் இருக்கிறேன். இன்னும் கூடுதல் பொறுப்புகள் பெற்று, துணை இயக்குனர், அதன் பிறகு இயக்குனர், மூத்த இயக்குனர் ஆகவேண்டும் என்பது என் லட்சியம்.

கிளைவிட்டுக் கிளை தாவ வேண்டிய அவசியம் இல்லாமல், பத்து ஆண்டுகளாக இங்கேயே வேரூன்றி வளர்ந்து வருகிறேன். பெரும்பாலும் என் வேலையிடத்தில் இருப்பவர்கள் எல்லாருமே நல்ல புத்திக்கூர்மை கொண்டவர்கள்; தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்காகப் போட்டி போட்டுக்கொண்டு வேலை செய்யும் இயல்பைக் கொண்டவர்கள்.

இப்போது இருக்கும் சூழலில், சில நாட்கள் என் மகன் உறங்கியபிறகு, இரவில் மின்னஞ்சலுக்காகவோ, இணையவழிக் கூட்டத்திற்காகவோ, கணினியைப் பயன்படுத்தவேண்டி இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில், வேலை வாழ்க்கை சமநிலை என்று யோசிக்காமல், வேலையோடு வாழ்க்கையையும் சேர்த்தே யோசிப்பதுதான் புத்திசாலித்தனமான நிலைப்பாடு. அப்படித்தான் நான் இருக்கிறேன்.

எங்கள் வீட்டில் பணிப்பெண் என்பவர் எங்களின் நிகழ்கால வாழ்க்கைத் தேவை. சைவ சாப்பாட்டுக் குடும்பம் என்பதால், சமையல் செய்து பிள்ளைக்கும் வைத்துவிட்டுக் கிளம்புவேன். ஷைலு வீட்டில் வார இறுதிகளைத் தவிர மற்ற நாட்கள், இரவு உணவு மட்டும்தான் வீட்டில். பிள்ளைகள் இருவரும் பள்ளியிலோ, பராமரிப்பு நிலையத்திலோ சாப்பிட்டுக் கொள்கிறார்கள்.

ஒருமுறை சந்தித்தபோது, "ஷைலு இப்போதான் வேலை இடம் மாறினா. ஒரு வாரம் ஜப்பான் போயிட்டு வந்தா" என்றார் ரவி.

"வாழ்த்துக்கள் ஷைலு. ஒரு ஆறு மாசம் முன்னாடிதானே வேற வேலைல சேர்ந்தே?" என்றேன் என் திகைப்பை அடக்கமுடியாமல்.

"வேலை பிடிக்கல... அதான் தேடிக்கிட்டே இருந்தேன். கிடைச்சதும் மாறிட்டேன்."

கணவனும் மனைவியும் ஈராண்டுக்கு ஒரு முறையோ, அல்லது அதற்குள்ளாகவோ, வேலை மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஷைலு வேலை மாறியபின் ஆறு மாதங்கள் வரை காத்திருந்து, பின்னர் வேறு வேலைக்குத் தாவுகிறார் ரவி.

"யோசிச்சுப் பாத்தீங்கன்னா... வேற வேற நிறுவனத்துல வேற வேற விஷயங்களைக் கத்துக்கலாம். லிங்க்ட் இன் போன்ற இணைய தளங்களில் வேலையில அமர்த்துற முகவர்கள், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை வேற வேலைல இருக்கறவங்களை, தேடிவந்து புது வாய்ப்புகளைச் சொல்றாங்க. அப்துல் கலாம் ஐயா சொல்லுவாராம், "பணியை நேசிங்க.பணியிடத்தை நேசிக்க வேணாம்னு". அவங்களுக்கு வேணாம்னா பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் மனுஷங்களைத் தூக்கிப்போட்டுப் போய்கிட்டே இருப்பாங்க" என்று தன்பக்க நியாயத்தை விளக்கினார் ரவி. ஷைலுவும் ரவியும் வீட்டிற்கு ஒருபோதும் மடிக்கணினியை எடுத்து வருவதில்லை.

தென்கிழக்கு ஆசிய சந்தைகளில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களைச் சரியாகத் திட்டமிடுதல்தான் என் வேலை. விநியோகச் சங்கிலி என்று சொல்லப்படும் என் துறையில் மூலப்பொருட்களை வாங்குவதில் தொடங்கி, அவற்றைக் கொண்டு சந்தைக்கான பொருட்களைத் தயார் செய்வது, அவற்றை கப்பல், விமானம் என்று ஒரு தேசத்திலிருந்து உலகின் மற்ற மூலைக்குக் கொண்டுசெல்வது எனப் பல வேலைகளும் இந்தத் திட்டமிடுதலில் அடங்கும்.

என்னுடைய குழுவில் எனக்குக் கீழே ஏழு பேர் வேலை செய்கிறார்கள். இந்த வேலையில் சவால்கள் அதிகம் என்றாலும் என் திறனுக்கேற்ற வேலை. அதை ரசித்துச் செய்வதால் வாரங்கள் வேகமாகச் செல்கின்றன. பிள்ளைக்காக ஆறு மணியோடு வீட்டுக்கு வந்து அவன் தேவைகளைக் கவனித்துக்கொண்டு, பிறகு கொஞ்சம் வேலை என்று நீள்கின்றன என் பணிநாட்கள்.

வேறொரு நீண்ட வார விடுமுறையில் நாங்களும் ஷைலு-ரவி குடும்பத்தாரும் ஆற்று சஃபாரிக்கு போனோம்.

குழந்தைகள் முதலைச் சிலையின் முதுகில் அமர்ந்தபடி புகைப்படத்திற்காகப் புன்னகைத்தார்கள். எல்லா ஆற்றுப் பகுதிகளையும் பார்த்துக்கொண்டே கொண்டுவந்த உணவுகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்தபடி பேசிக்கொண்டிருந்தோம். பேச்சின் ஊடே என்னவர், "பாவம் பிரியா.. வீட்டுக்கு வந்தும் சிலநாள் ஒரு சில மணிநேரம் வேலை பாக்கவேண்டியதா இருக்கு" என்றார்.

"பாருங்க, முடியலைன்னா வெளிய தேட ஆரம்பிங்க" என்றார் ரவி.

"இந்த நிறுவனத்தைப் பிடிக்க எனக்கு நிறையக் காரணம் இருக்குங்க. பாப்போம்" என்றபடியே என்னவரிடம் வேறு ஏதாவது பேச கண்ணில் சாடைக்காட்டினேன்.

ஒரு வெள்ளிக்கிழமை மாலையில், அலுவகத்தில் வேலைநாள் சுமுகமாக இல்லை. நினைத்த வேகத்தில் வேலையும் முடியவில்லை. அலுவலகம் விட்டு வந்தாலும் அசதியாக இருந்தது.

கோப்பையில் தேநீரை ஊற்றியபடியே, "ஏங்க! வேலைக்கேத்த அங்கீகாரமும் இருக்குனுதான் நானும் நேரம் காலம்னு பார்க்காம வேலை செய்யறேன். சில நேரத்துல ரவி சொல்ற மாதிரி நாமளும் மாறிக்கிட்டே இருக்கறதுதான் சரியோன்னு ஒரு கேள்வி வந்துகிட்டே இருக்குங்க" என்றேன்.

"பிரியா வீணா ஏன் உன்ன நீயே குழப்பிக்கறே? அவங்க சொல்றது எவ்ளோ உண்மைன்னு நமக்குத் தெரியாது. அடிக்கடி வேலை மாறுறது ஒண்ணும் நல்லதில்லை. நம்மால முடிஞ்சவரைக்கும் நேர்மையா, நம்ம வேலையைத் திருத்தமா செய்யறதுதான் நம்ம தனித்துவமான அடையாளம். நல்ல உழைப்புக்குத் தகுந்த பலன் இல்லாம போகவே போகாது." என் தோளைத் தட்டி, உற்சாகப்படுத்தினார் கணேஷ்,

அடுத்து வந்த வாரத்தில் புது மேலாளர் ஹரிஷ் கோந்தலேகர் வந்தார்; மராட்டியர். நிறைய ஆண்டுகள் ஐரோப்பாவில் வேலை செய்துவிட்டு சிங்கைக்கு மாற்றலாகி வந்திருக்கிறார். இறங்குமுகமாக இருக்கும் தெற்காசிய வர்த்தகத்தைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு அவர் வகிக்கும் பெரும்பதவிக்கு கூடுதல் பொறுப்பாக அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அவர் வந்த நேரம் எங்கள் சம்பள உயர்வுக்கான பரிசீலனைகள் முடிந்து முடிவுகள் தெரியும் நேரம்.

"பிரியா! உங்களைப்பத்தி எல்லாரும் உயர்வா சொல்றாங்க. விற்பனைப் பிரிவோட தலைவர், எல்லா தகவல்களையும் நீங்க விரல்நுனியில வெச்சுருக்கீங்கன்னு சொன்னார். நல்லா செய்யுங்க.. உங்களுக்கான இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு கிட்டத்தட்ட பதினோரு சதவீதம். இதுதான் என் குழுவிலேயே ஆக அதிகமான உயர்வு" என்றார்.

மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டேன். என் வேலையிடம் எப்போதும் நன்றாக உழைப்பவர்களை அங்கீகரிக்கும் இடம். முன்னிலும் அதிக உற்சாகத்துடன் செயல்பட்டேன்.

புதிதாக வந்திருக்கும் ஹரிஷிடம் அதிகம் பரிச்சயம் இல்லை என்பதால், என்னைப்பற்றி மேலும் அறிமுகப்படுத்திக்கொள்ள ஒரு நாள் மதியஉணவு இடைவெளியில் சந்தித்தேன்.

அரேபியட்டா பாஸ்தா, கோக்கோ கோலா என்று உட்கார்ந்திருந்தோம். நான் படித்த கல்லூரி, குடும்பம் என்று என்னைப்பற்றிப் பகிர்ந்தேன். தன்னைப்பற்றி அவரும் சொல்லிக்கொண்டே வந்தார். பல ஆண்டுகளாக வெளிநாடுகளில்தான் இருக்கிறார். வயதான பெற்றோர் மட்டும் பூனாவில் வாழ்கிறார்களாம்.

பேச்சின் நடுவில் "உங்கள் பிரிவைப் பத்தி எனக்கு ஒரு கவலையும் இல்ல. என் காதுக்கு எந்த ஒரு பிரச்னையும் வரதுக்குள்ள நீங்களே முடிச்சுடறீங்க வெரி குட் பிரியா!" என்றார். உண்மைதான். என் திறமையை நிரூபிக்க ஒரு அளவுகோல் முடிந்தவரை சவால்களை நானே தீர்த்துக்கொள்வதுதான். தலைமைத்துவம் என்பது அதுதானே!

"ஹரிஷ், என் லட்சியம் எனக்கு நம்ம நிறுவனத்துல இயக்குநராகணும்னு"

"ஏன் முடியாது? பெண்களை அதிகம் தலைமைத்துவம் மிக்க பதவிகளில் கொண்டுவர விரும்பறவன் நான். இன்னும் சொல்லப் போனா, ஏன் என் பதவியே அடுத்து உங்களுக்குக் கிடைக்க வழி இருக்கு. திறமையா வேலை செய்யுங்க!"

கண்ணில் தெரிந்த கண்ணியமும் நம்பிக்கையும் எனக்குச் சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருக்கிறேன் என்பதைச் சொல்லாமல் சொல்லின. அடுத்து வந்த மாதங்களில் என் வேலைப்பளு ஏறுமுகமாகவும், எங்கள் கிழக்காசிய வர்த்தகம் எதிர்பார்த்த அளவு ஏறுமுகமாக இல்லாமலும் இருந்தது..

சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவில் இருப்பவர்களுக்கு எந்த நிறுவனமாக இருந்தாலும் வேலை நிச்சயமில்லை. ஒரு சிலரை வேலையைவிட்டு அனுப்பினார்கள். அதிக வரும்படியும், அதே நேரம் வேலை நிரந்தரமின்மையும் அவர்கள் அறிந்த ஒன்றுதான். திட்டமிடுதலில் மேலாளராக இருக்கும் என் வேலை அப்படியல்ல.

ஹரிஷ் எப்போதாவதுதான் நாங்கள் அமர்ந்திருக்கும் பகுதிக்கு வருவார். அவருக்குக் கீழே வேலை செய்பவர்கள் இருபத்தைந்து பேர். இதுவரை ஓரிரு முறைக்கு மேல் எங்களோடு மதிய உணவுக்குக்கூட ஹரிஷ் வந்ததில்லை. என் வேலை பாணியும் அவர் அதிகம் எங்களைத் தேடி வராதபடி இருக்கிறது.

சமீபத்திய கிசுகிசு! ஹரிஷ் மறுபடியும் பதவி உயர்வில் ஐரோப்பாவிற்குச் செல்கிறாராம்.

"பிரியா, ஒரு முக்கியமான விஷயம் பேசணும். டொரோண்டோ அறைக்கு வாங்க" என்று சொல்லிவிட்டு, வேகமாக நடந்தார் ஹரிஷ்.

"அவருக்குப் பதவி உயர்வு என்பது உண்மையானால், எனக்கு அவருடைய பதவி என்று சொல்லப்போகிறாரா?" இது எத்தனை பெரிய வாய்ப்பு!

உலகின் மற்ற நாடுகளுக்கு அவ்வப்போது போய்வர வேண்டும். இன்னும் பெரிய குழு, கணேஷ் கேட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார்? சிறப்பாகச் செய்தால், அதற்கும் அடுத்த பதவி சுவிற்சர்லாந்து நாட்டில், எங்கள் தலைமை அலுவலகத்தில்கூடக் கிடைக்கும்.

கணினியின் திரையைப் பூட்டிவிட்டு நடந்தேன்.

"உட்காருங்க" என்றார். முகத்தில் வழக்கமான புன்னகையும், கண்ணில் தெரியும் திடமும் இல்லை.

என்னவென்று சொல்ல முடியாத உடல்மொழி.

"முதல்ல நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்காதீங்க. உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்."

"எதுக்கு?" என்றேன்.

வெள்ளை வெளேரென நீண்ட பெரிய உரையை நீட்டினார்.

"அன்புள்ள பிரியாவிற்கு …" என்று ஆரம்பித்து,

"இப்போதுள்ள வர்த்தக சூழலில், உங்களின் வேலையைச் சிங்கப்பூரில் வைத்திருக்க வேண்டியது அவசியமில்லை என்று எண்ணி, மலேசியாவில் இருப்பவரின் வேலையோடு இணைத்துவிட்டோம்.

நாளைமுதல் நீங்கள் பணிக்கு வரவேண்டாம். உங்களுக்கான மூன்று மாத ஊதியம், எங்கள் நிறுவனத்தினரால், நஷ்ட ஈடாகத் தரப்படுகிறது" என்று கடிதம் விரிந்தது.

அதன் நீட்சியாக நான் எனக்கு ஏற்படும் சூழலைப்பற்றி யாரிடமும் அலுவலகத்தில் பேசக்கூடாது; அந்த பெருநிறுவனத்தின் பெயரைக் களங்கம் ஏற்பதும் வகையில் இணையப் பக்கங்களில் எழுதக்கூடாது என்று பலவற்றை எனக்குக் கட்டளையாகச் சொல்லியிருந்தார்கள்.

"உங்கமேல ஒரு தவறும் இல்லை. போன காலாண்டு நாங்க எதிர்பார்த்ததைவிட ரொம்ப மோசம். வர்த்தகத்துல இருக்கற பிரச்னைகள்ல நாங்க இந்த மாதிரியான கடின முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறது."

ஹரிஷ் என் கண்களில் சட்டெனத் திரண்டு வந்த கண்ணீர் என் கன்னந்தொடும் முன்னர் பேசினார். பக்கத்தில் இருந்த ஒரு பாட்டில் தண்ணீரை எனக்கு நீட்டினார்.

"எனக்கு கீழ வேலை செய்யுற ஏழு பேர்?" என்றேன்.

"மேலாளர் பதவியைத்தான் மலேசியாவோடு சேர்க்கிறோம். உங்க குழுவுல இருக்கறவங்க யாருக்கும் எந்த பாதிப்பும் இல்ல. இந்த நேரத்திலும் உங்கள் குழுவைப்பற்றி அக்கறையாக இருக்கீங்க. உங்களை மாதிரி ஒருத்தரை இந்த நிறுவனம் இழக்கிறதுதான் கொடுமை" என்றவரை வெறுப்பாகப் பார்த்தேன்.

"எனக்கும் குடும்பம் இருக்கு. முன்னாடியே நீங்க சொல்லிருந்தா நான் வேற வேலையாவது தேடி இருப்பேன் இல்ல?"

"எப்படிச் சொல்ல முடியும்? ஒரு நிறுவனத்தோட ரகசியத்தைக் காப்பாத்தறதும் உயர்பதவியில் இருக்கறவங்களோட கடமைதானே. என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க வேலையைத் தக்கவைக்க நான் முயற்சி செய்துகிட்டுத்தான் இருந்தேன்."

நம்பத்தான் முடியவில்லை. நான் அதிக உழைப்பையும், அதிக நேரத்தையும் முதலீடு செய்த வேலையிடம். என்னை வேண்டாம் என்று ஒரே நாளில் முடிவெடுக்கிறார்கள்.

எத்தனை இரவுகளைக் குழந்தையை மடியில் கிடத்திக்கொண்டே அவனுக்குக் கதை சொல்ல வேண்டிய நேரத்தைவிட்டு, வேலை பார்த்துக்கொண்டிருந்திருப்பேன்?

வேலை எனக்கும் கணேஷுக்குமான நேரத்தைக்கூட அவ்வப்போது சாப்பிட்டிருக்கிறது. நான் என் நிறுவனத்தை என் வாழ்க்கையோடு இணைத்துக்கொண்டேன். ஆனால் என் நிறுவனத்திற்கு நான் எப்போது வேண்டுமானாலும் கழட்டி விடமுடிந்த ஒரு சாதனமாக, அஃறிணைப் பொருளாகத் தெரிந்திருக்கிறேன். எப்படி இவர்களுக்கு இது சாத்தியம் ஆகிறது? நியாயம் என்ற ஒன்றே இல்லையா? நான் என்ன தவறு செய்தேன்?

என் வேலை என் நிறுவனத்திற்கு அதிகப் பண நெருக்கடி கொடுக்கிறது என்பதை நம்ப முடியவில்லை. எத்தனை மில்லியன் டாலரில் புழங்கும் பெருநிறுவனம் இது?.

ஹரிஷ் என்னைத் தாயமாக வைத்துக்கொண்டு, தனக்கான காய்களைச் சாமர்த்தியமாக நகர்த்திருக்கிறார்,

"இன்னிக்கு மாலையோட உங்க மடிக்கணியைக்கொடுத்திடுங்க. நீங்க உங்க குழுவுல எதுவும் சொல்ல வேண்டாம். நான் அவங்ககிட்ட நீங்க அவசர விடுமுறைல இருக்கீங்கன்னு சொல்றேன். மெதுவா அவங்களோடையும் இந்த முடிவைப் பகிர்ந்துக்கறேன் .அடுத்த வேலை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். எவ்ளோ திறமைசாலி நீங்க?"

ஹரிஷ் பேசப்பேச பற்றிக்கொண்டு வந்தது. அவர் எடுத்த இந்த முடிவினால் நான் மனஅழுத்தத்திற்கு ஆளாகாமலிருக்க ஒரு ஆலோசனை மையத்தின் அட்டையையும் இலவச இணைப்பாக நீட்டிய அந்த நொடி, ரவி சொன்னது நினைவுக்கு வந்தது.
வித்யா அருண்,
சிங்கப்பூர்
Share: 




© Copyright 2020 Tamilonline