Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர்கடிதம் | முன்னோடி | ஹரிமொழி | கவிதைபந்தல் | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ம. சிங்காரவேலு செட்டியார்
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2021|
Share:
பகுதி-1

"சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய்புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்..."


மேற்கண்டவாறு விதந்தோதுகிறார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். சிங்காரவேலரின் மறைவைக் கேள்வியுற்ற அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி, "நண்பர்களில் ஒருவரும், சுதந்திரப் பித்தர்களில் ஒருவரும், யோக்கியர்களில் ஒருவரும் மறைந்துவிட்டார்" என்று சொல்லி மனம் வருந்தினார். அரசியலில் சிங்காரவேலருக்கு மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருந்த ராஜாஜியே விதந்தோதுமளவிற்குச் சிறப்புப் பொருந்தியவராகத் திகழ்ந்தவர் சிங்காரவேலர்.

பிறப்பு
இப்படிப் பல்வேறு இயக்கத்தவர்களாலும் போற்றப்பட்ட சிங்காரவேலுச் செட்டியார் பிப்ரவரி 18, 1860ல், சென்னை மயிலாப்பூரில், வெங்கடாசலம் செட்டியார் - வள்ளியம்மை இணையருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். பெற்றோர் இருவரும் சைவசமயப் பற்றுள்ளவர்கள். முருகபக்தி கொண்டவர்கள். அதனால் தம் மகனுக்குச் சிங்காரவேலர் என்று பெயர் சூட்டினர். வணிகர் குடும்பம். திருமயிலை, திருப்போரூர், திருவண்ணாமலை, திருத்தணி எனப் பல ஊர்களில் இவர் குடும்பத்துக்குச் சொந்தமான அன்ன சத்திரங்கள் இருந்தன. வசதியான குடும்பச் சூழலிலேயே சிங்காரவேலர் வளர்ந்தார். ஆரம்பக்கல்வியைத் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்த இவர், சென்னை இந்து உயர்நிலைப் பள்ளியில் மேலே பயின்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் FA தேர்ந்தார். மேற்கல்வி பயிலும் என்ற ஆர்வத்தில் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்று வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் குடும்ப வணிகத்தில் ஈடுபட்டார். 1889ல் அங்கம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இது குடும்ப எதிர்ப்பை மீறி நிகழ்ந்த காதல் மற்றும் கலப்புத் திருமணம். மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றிருந்த அங்கம்மாள், கணவரின் மனமறிந்து நடக்கும் இனிய இல்லத்தரசியாக விளங்கினார்.



மகாபோதி சங்கம்
சைவம் சார்ந்த குடும்பம் என்றாலும் பௌத்தத்தின் மீது ஏற்பட்ட அளவற்ற ஈர்ப்புக் காரணமாக, 'மகாபோதி சங்கம்' எனும் பெயரில் ஓர் சங்கம் அமைத்து பௌத்தத்தின் பெருமைகளைப் பற்றி உரையாற்றி வந்தார் சிங்காரவேலர். இக்கூட்டத்தில் அயோத்திதாச பண்டிதர், பேராசிரியர் லட்சுமி நரசு நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் தீவிர சைவப் பற்றாளரான திரு.வி.க.வும் கலந்துகொண்டிருக்கிறார். முதன்முறை இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற திரு.வி.க., "கோமளீசுவரன்பேட்டை புதுப்பேட்டையிலே ஒரு பௌத்த சங்கம் கூடிற்று. அதிலே இலட்சுமிநரசு நாயுடு, சிங்காரவேல் செட்டியார் முதலியோர் பேசுகின்றனர் என்று கேள்வியுற்றேன். யான் கூட்டத்துடன் (கலகம் செய்ய) அங்குச் சென்றேன். அங்குக் குழுமியிருந்த சிலர் என்னை உறுத்து உறுத்து நோக்கினர். எனக்கு அச்சம் உண்டாயிற்று. யான் பேசாமல் அமர்ந்தேன். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடுபட்டது. கலகம் செய்யப் போந்த யான் டார்வின் வகுப்பு மாணாக்கன் ஆனேன். செட்டியார் ஆசிரியரானார். டார்வினின் கொள்கை எனது பின்னைய சமய ஆராய்ச்சிக்குப் பெருந்துணையாயிற்று" என்று குறிப்பிட்டுள்ளார். (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (தொகுதி 2) இதிலிருந்து சிங்காரவேலரின் மேதைமையை, நாவன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

நாத்திகக் கொள்கையாளராக இருந்தாலும் சுவாமி விவேகானந்தர் மீதும் அவரது கொள்கைகள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார் சிங்காரவேலர். ராமகிருஷ்ண இயக்கத்தவர்களுடனும் சிறந்த நட்புக் கொண்டிருந்தார். இவர் இல்லத்தில் நிகழ்ந்த புத்தர் நினைவு விழாவை சுவாமி ராமகிருஷ்ணானந்தர் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார் என்பதிலிருந்து சிங்காரவேலருக்கிருந்த மதிப்பை உணர்ந்து கொள்ளலாம்.

சித்தாந்த அறிமுகம்
தொழில் நிமித்தம் பல்வேறு மாநிலங்களுக்குப் பயணப்பட்ட சிங்காரவேலர், வெளிநாடுகளுக்கும் செல்லவேண்டி இருந்தது. 1900ல் பர்மா சென்று வந்தார். அங்கு கிடைத்த அனுபவங்கள் இவரது சிந்தனையை விசாலமாக்கின. குறிப்பாக லண்டனில் சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். அங்கு நடந்த உலக புத்தமத மாநாட்டில் கலந்து கொண்டார். லண்டன் வாழ்க்கை இவரது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையானது. மார்க்ஸ்-எங்கெல்ஸின் சிந்தனைகளும், தொழிற்சங்கச் செயல்பாடுகளும், அறிவியல்-தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் புதுப்புதுப் பயன்பாடுகளும் இவருக்கு நேரடியாக அறிமுகமாயின. பொதுவுடைமைச் சித்தாந்தத்தின் மீது ஆர்வம் திரும்ப அது வழி வகுத்தது. அவர் 'சிந்தனைச் சிற்பி' ஆகப் பரிணமிக்க லண்டன் வாழ்க்கை ஒரு முக்கியக் காரணமானது.

வழக்குரைஞர் ஆனார்
சென்னை திரும்பியபின் மேலும் கற்கும் ஆர்வத்தால் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றார். பின் வழக்குரைஞராகப் பதிவு செய்துகொண்டு தனது பணிகளைத் தொடங்கினார். தனது வாதத்திறமையால் பல வழக்குகளில் வெற்றிபெற்றார். பேராசைக்காரர்கள், பிறரை ஏமாற்ற நினைக்கும் வஞ்சக எண்ணம் கொண்டோரின் வழக்குகள், குற்றவாளிகள் சார்பாக வாதிடுவதில்லை என்பதைக் கொள்கையாக வைத்திருந்தார். அக்காலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான சாமராவ், துரைசாமி ஐயர் போன்றோர் இவரது மேதைமையைப் பாராட்டினர். எண்-22, தெற்குக் கடற்கரைச் சாலையில் இருந்த சிங்காரவேலரின் இல்லம் எப்போதும் அறிஞர்களாலும், சாதாரண மக்களாலும் சூழப்பட்டிருந்தது. பெரும்பாலான வழக்குகளை வழக்கின் இரு தரப்பினரையும் வரவழைத்து நேருக்கு நேராகப் பேசி அங்கேயே முடித்து வைத்துவிடுவார். தனக்கு ஏற்படும் பொருள் இழப்பைப்பற்றி அவர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அதனால் பொதுமக்களிடையே நாளுக்கு நாள் இவருக்கு நற்பெயர் வளர்ந்தது.



தன்னால் இயன்ற நன்மைகளை மக்களுக்குச் செய்யவேண்டும் என்ற நோக்கில் உழைத்தார் சிங்காரவேலர். வறியவர்களுக்குப் பெரும் உதவிகள் செய்தார். ஏழைகளின் பசிப்பிணி தீர்த்தல், மருத்துவ உதவி வழங்குதல் போன்றவற்றில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார். நாள் முழுவதும் கடினமாக உழைத்தும் பலனில்லாமல் தொழிலாளர்கள் வறுமையில் வாடுவதைக் கண்டு மனம் வருந்தினார். அவர்கள் முன்னேற்றத்திற்காகப் பல சான்றோர்களைத் தொடர்ந்து சந்த்தித்து நற்பணிகளை முன்னெடுத்தார்.

பாரதியாருக்குப் பொதுவுடைமை சித்தாந்தத்தின் மீது ஆர்வம் வரக் காரணமானவர் சிங்காரவேலர். பாரதியின் சிறந்த குடும்ப நண்பராகவும் விளங்கினார். நீலகண்ட பிரம்மச்சாரிக்கும் நண்பர். அவருக்கு நிதி உதவி ஆதரித்தார். சிங்காரவேலரின் இல்லத்தில்தான் நீலகண்ட பிரம்மச்சாரி சில காலம் தங்கியிருந்தார். ஆர்.எஸ். சுப்புலட்சுமி அம்மாள் பிற்காலத்தில் பெண்களுக்கான பள்ளிகள் அமைக்க இடம் கொடுத்ததும் சிங்காரவேலர்தான். திருவல்லிக்கேணியில் மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்தில் சிங்காரவேலர் வசித்தார். அந்த வளாகத்தில்தான் பிற்காலத்தில் வெலிங்டன் சீமாட்டி பள்ளி மற்றும் பயிற்சி நிறுவனம் அமைந்தது.

காங்கிரஸில் இணைந்தார்
சென்னை மகாஜன சபையில் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க சிங்காரவேலருக்கு அரசியலிலும் ஆர்வம் மிகுந்திருந்தது.

காங்கிரஸ் இயக்கம் அவரை வெகுவாக ஈர்த்தது. வ.உ. சிதம்பரம் பிள்ளை, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், மகாகவி பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி போன்றவர்களுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். 1917ல் அன்னிபெசன்டைச் சந்தித்து காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். 1918ல் ரௌலட் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தினர் அதனைத் தீவிரமாக எதிர்த்துப் போராடினர். சென்னையில் நடந்த போராட்டங்களில் முன்னிலை வகித்தார் சிங்காரவேலர். 1918ல் திரு.வி.க. உள்ளிட்டோரால் சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம் தோற்றுவிக்கப்படச் சிங்காரவேலர் முக்கியக் காரணமாக அமைந்தார் காங்கிரஸ் இயக்கம், தொழிற்சங்க இயக்கம், பிற்காலத்தில் தோன்றிய சுயமரியாதை இயக்கம் என மூன்றிலுமே முக்கியப் பங்கு வகித்த சிறப்புக்குரியவர் சிங்காரவேலர்.

போராட்டங்கள்
நாட்டின் விடுதலை பொருளாதார விடுதலையாகவும் சமுதாய சமத்துவமாகவும் விளங்கத் துணை புரியவேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. சுயராஜ்யம் என்பது தொழிலாளர்களுக்கும், உழைக்கும் வர்க்கத்தினருக்கும் உண்மையான விடுதலையைத் தருவதாக இருக்க வேண்டும் என்பதே சிங்காரவேலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தேசியம், சமதர்மம், பொதுவுடைமை இவற்றை முக்கியக் கொள்கைகளாகக் கொண்டு உழைத்தார். ஆங்கிலம், ஹிந்தி, ஜெர்மன், ஃப்ரெஞ்ச், உருது, ரஷ்ய மொழிகளை நன்கு அறிந்திருந்தார். பேச்சாற்றலும் சிறந்த எழுத்தாற்றலும் மிக்க அவர் தனது கருத்துக்களையும் சிந்தனைகளையும் 'ஹிந்து', 'நியூ இந்தியா' போன்ற இதழ்களில் எழுதிவந்தார். தமிழ் இதழ்கள் சிலவற்றிலும் கட்டுரைகள் எழுதினார். 1919ல் நிகழ்ந்த 'ஜாலியன் வாலாபாக் படுகொலை' சிங்காரவேலரை வெகுவாகப் பாதித்தது. அதனைக் கண்டித்து சென்னையில் கடையடைப்புப் போராட்டம் நடத்தினார். அதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு எழுச்சி உரையாற்றினார். மக்களிடையே தேசிய விழிப்புணர்வைத் தூண்டினார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்ற நிலையைச் சமாளிக்கும் விதமாக இங்கிலாந்தின் வேல்ஸ் இளவரசர் இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக சிங்காரவேலர் சென்னையில் பெரிய போராட்டம் ஒன்றை முன்னின்று நடத்தினார். இப்போராட்டம் ஆங்கிலேய அரசை அச்சுறுத்தியது. ஜாலியன் வாலாபாக் படுகொலையால் மனம் வருந்திய காந்தி, பிரிட்டிஷ் அரசிற்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். காந்தி சொன்னதை ஏற்று, உயர்வருவாய் வந்து கொண்டிருந்த வழக்குரைஞர் தொழிலைத் துறந்தார் சிங்காரவேலர். பொது இடத்தில் தனது வழக்குரைஞர் ஆடையை எரித்தவர், "இனி ஒருக்காலும் வழக்குரைஞர் தொழிலை மேற்கொள்ள மாட்டேன். ஏழைத் தொழிலாளர்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பாடுபடுவேன்" என்று அறிவித்தார்.



தனது சிந்தனைகள் குறித்து காந்திக்கு, 'Open letter to Mahathma Gandhi' என்ற தலைப்பில் ஹிந்துவில் ஒரு கட்டுரை எழுதினார். அது அக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திற்று. அக்கடிதத்தில், "முதலாளித்துவத் தன்னாதிக்கத்தை எதிர்த்துப் போராடாமல் அரசியல் தனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட முடியாது. அரசியலில் விடுதலைக்கு இன்றியமையாத தொழில்துறையில் சுதந்திரம் ஆகியவற்றைப் பொருத்தவரை நம் சுயராஜ்ய அரசியல், விட்டுக்கொடுத்தலை எவ்வுருவத்திலும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆகையால் நமக்கு வரவிருக்கும் சுயராஜ்யத்தில் நிலமும் இன்றியமையாத தொழிற்சாலைகளும் நாட்டின் நன்மைக்காகப் பொதுமையாக்கப் படுமென்றும், நாம் பயிரிடாத எந்தத் துக்காணி நிலத்தையும், நாம் வேலை செய்யாத எத்தொழிற்சாலையையும், நாம் வசிக்காத எந்த வீட்டையும் நம்மில் ஒருவரும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் எளிய மொழியில் எவ்வகை ஐயத்துக்கிடமின்றி அறிவிக்க வேண்டுமெனத் தங்கள்முன் தாழ்ந்து பணிந்து வேண்டுகிறேன்" என்று சிங்காரவேலர் குறிப்பிட்டிருந்தார்.

இக்காலகட்டத்தில் மாபெரும் அதிர்ச்சியான சம்பவம் அவரது வாழ்வில் நிகழ்ந்தது. 1920ம் ஆண்டில் அவரது காதல்மனைவி அங்கம்மாள் காலமானார். அது சிங்காரவேலரை வெகுவாகப் பாதித்தது. மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டு அரசியல், சமூகப் பணிகளில் தனது கவனத்தைச் செலுத்தினார். குறிப்பாக, தொழிலாளர்கள் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் உழைத்தார். ஒடுக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வில் உயரவேண்டும் என்பதற்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பல போராட்டங்களில் ஈடுபட்டார். தென்னிந்திய ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம், சென்னை மண்ணெண்ணெய்த் தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம் போன்றவற்றில் இவர் தொடர்பு கொண்டிருந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் அவர்களது அடக்குமுறைக்கு எதிராக நடந்த மிக முக்கியமான தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அவற்றுள் குறிப்பிடத்தகுந்ததாக பி அண்ட் சி மில்லின் போராட்டம் அமைந்தது.

(தொடரும்)
பா.சு.ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline