Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | முன்னோடி | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சமயம்
நின்ற நாராயணப் பெருமாள் திருக்கோவில், திருத்தங்கல்
- சீதா துரைராஜ்|ஆகஸ்டு 2021|
Share:
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் என்ற ஊரில் நின்ற நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

தலப்பெருமை
இத்தலம் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இருவரும் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள, 96வது வைஷ்ணவ திவ்ய தேசமாகும். மூலவர் நின்ற நாராயணப் பெருமாள். வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்றும் அழைக்கப்படுகிறார். தாயார் திருநாமம் கமல மகாலட்சுமி. அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என நான்கு பெயர்களில் இங்குள்ளார். தீர்த்தம் பாஸ்கர தீர்த்தம். நதி அர்ஜுன நதி. கோயில் குடைவரைக் கோவிலாகும். 1300 ஆண்டுகள் பழமையானது. வைகானஸ முறைப்படி கோவிலில் பூஜைகள் நடைபெறுகின்றன. பெருமாளின் மூலஸ்தானத்தில் நான்கு தாயார்கள் உள்ளனர் அன்னநாயகி (ஸ்ரீதேவி) அமிர்தநாயகி (பூமாதேவி), அனந்தநாயகி, அமிர்தவல்லி என நால்வர் இங்கு தாயாராக எழுந்தருளியுள்ளனர்.

நாராயணன் திருப்பாற்கடலில் சயனித்திருந்தபோது, அருகிலிருந்த ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி ஆகிய மூன்று தேவிகள் இடையே தம்முள் யார் உயர்ந்தவர் என்ற சர்ச்சை ஏற்பட்டதாம். அப்போது ஸ்ரீதேவியின் தோழிகள், மற்றவர்களைக் காட்டிலும் ஸ்ரீதேவி உயர்ந்தவள்; இவள் மகாலட்சுமி. அதிர்ஷ்ட தேவதை. தேவர்களின் தலைவன் இந்திரன் இவரால்தான் பலம் பெறுகிறான். வேதங்கள், திருமகள் என்று இவளைப் போற்றுகின்றன. பெருமாள் இவளைத் தனது வலமார்பில் தாங்குகிறார். இவளை முன்வைத்தே பெருமாளுக்கு ஸ்ரீனிவாசன், ஸ்ரீபதி, ஸ்ரீநிகேதன் எனப் பெயர்கள் வந்தன என்றனர். பூமாதேவியின் தோழியர், இந்த உலகின் ஆதாரமாக விளங்குபவள் பூமிதேவிதான். இவள் மிகவும் சாந்த குணம் உடையவள். பொறுமை மிக்கவள். இவளைக் காக்கவே பெருமாள் வராஹ அவதாரம் எடுத்தார் என்றனர். நீளாதேவியின் தோழிகளோ, நீளா தேவி தண்ணீரின் தேவதை. தண்ணீரை 'நாரம்' என்பார்கள். அதனால்தான், அப்படிப்பட்ட நீரில் வசிப்பதால்தான், பெருமாளுக்கு 'நாராயணன்' என்ற சிறப்புப்பெயர் ஏற்பட்டது. உலகில் யாவரும் உச்சரிக்கும் நாமம் 'நாராயண நாமம்.' தண்ணீரைப் பாலாக்கி அதில் ஆதிசேஷனை மிதக்கவிட்டுத் தாங்குபவள் எங்கள் நீளாதேவி. எனவே இவளே உயர்ந்தவள் என்று கூறினார். இவ்வாறு விவாதம் வளர்ந்து கொண்டே போயிற்று.தானே உயர்ந்தவள் என்று நிரூபிக்க ஸ்ரீதேவி வைகுண்டத்தை விட்டுப் புறப்பட்டு, 'தங்கால மலை' என்னும் திருத்தங்கலுக்கு வந்து, செங்கமல நாச்சியார் என்ற பெயர் பூண்டு கடுந்தவம் புரிந்தாள். இதைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், அவருக்குக் காட்சி கொடுத்து அவளே மூவரில் சிறந்தவள் என்று ஏற்றுக்கொண்டார். திருமகள் வந்து தங்கியதால் இத்தலம் திருத்தங்கல் என்று அழைக்கப்பட்டது. பகவான் கிருஷ்ணருடைய பேரன் அநிருத்தனுக்குத் திருமணம் நடந்தது இத்தலத்தில்தான். கோயில் தங்கால் மலைமீது அமைந்துள்ளது. ஆலயத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவர் நின்ற நாராயணப்பெருமாள் மேல்நிலையில் காட்சி தருகிறார். இவரது மேனி சுதையால் ஆனது. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனிச்சன்னதியில் காட்சி அளிக்கிறார்.

சுபேதம் என்ற தீவிலிருந்த ஆலமரத்திற்கும் ஆதிசேஷனுக்கும் தங்கள் இடையே யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. தீர்வு வேண்டி இருவரும் பிரம்மனிடம் சென்றனர். பிரம்மா, "ஆதிசேஷனே சிறந்தவர்; அவர்மீதுதான் பெருமாள் பள்ளி கொண்டுள்ளார்; உலகம் அழியும்போது மட்டுமே கிருஷ்ணர் ஆலிலை மீது பள்ளி கொள்கிறார்" என்று கூறினார். இதனால் வருத்தமடைந்த ஆலமரம், தனது சிறப்பை உணர்த்தப் பெருமாளை நோக்கித் தவமிருந்தது. அதைக் கண்டு மகிழ்ந்த பெருமாள், "உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். ஆலமரம் அதற்கு "நான் உதிர்க்கும் இலைமீது தாங்கள் பள்ளிகொண்டு அருளவேண்டும்" எனக் கேட்க, பெருமாள், திருமகள் தவம் செய்யும் திருத்தங்கலில் நீ மலை வடிவில் சென்று அமர்வாயாக. நான் அவளைத் திருமணம் செய்ய வரும் காலத்தில், உன்மீது நின்று கொண்டும் பள்ளி கொண்டும் அருள்பாலிப்பேன்" என்று கூறினார் அவ்வாறே மலை வடிவில் இங்கு நின்ற ஆலமரம், 'தங்கும் ஆல மலை' என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் தங்காலமலை என மருவியது.சூரியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டபோது, சூரியன் பெருமாளை வேண்ட, அவர் திருத்தங்கல் தீர்த்தத்தில் நீராடினால் தோஷங்கள் நீங்கும் என்றார். அதன்படிச் சூரியனும் வழிபாடு. செய்து தனது பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிக் கொண்ட தலம் இது. கருடாழ்வார் இங்கு நான்கு திருக்கரங்களுடன் உள்ளார். முன்னிரு கரங்கள் வணங்கிய நிலையிலும் பின் கரங்களில் அமிர்த கலசம், வாசுகி, நாகத்துடனும் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தனக்கு எதிரியான வாசுகியை நண்பனாக ஏற்றுத் தன் கையில் கருடன் ஏந்தி இருப்பது இத்தலத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். இத்தலத்தில் மட்டும்தான் இவ்வாறு மாறுபட்ட கோலத்தில் கருடன் காட்சி தருகிறார். எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால் அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள். எதிரியையும் நண்பராக்கும் தலம் இது என்றால் மிகையில்லை.

கோவில் திருவிழாக்களில் வசந்தோற்சவம், பிள்ளை லோகாச்சாரியார், கூரத்தாழ்வார் திருவிழா யாவும் 10 நாட்கள் நடைபெறுகின்றன. வைகாசி வசந்த உற்சவம் தேர்த் திருவிழா, ஸ்ரீஜெயந்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்றவை சிறப்பாகக் கொண்டாப்படுகின்றன. சித்ரா பௌர்ணமியன்று, பெருமாள், அர்ஜுன நதியில் நீராடி, குதிரை வாகனத்தில் திருத்தங்கலைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் வீதியுலா வருகிறார். ஆலயம் காலை 7.00 மணிமுதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணிமுதல் இரவு 8.30 வரையும் திறந்திருக்கும்.

பேரானை குறுங்குடிஎம் பெருமானை திருத்தண்கால்
ஊரானை கரம்பனூர் உத்தமனை முத்து இலங்கு
கார் ஆர் திண்கடல் ஏழும் மலை ஏழ் இவ்வுலகு ஏழ் உண்டு
ஆராது என்று இருந்தானைக் கண்டது தென் அரங்கத்தே.

(திருமங்கை ஆழ்வார்)
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline