Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | அன்புள்ள சிநேகிதியே
Tamil Unicode / English Search
சமயம்
திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஜூலை 2021|
Share:
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருவடிசூலம் என்னும் தலத்தில் அமைந்துள்ளது ஞானபுரீஸ்வரர் ஆலயம். திருப்போரூரிலிருந்து 19 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 9 கி.மீ. தூரத்திலும் இந்தத் தலம் உள்ளது.

தலப்பெருமை
இவ்வாலயம் ஆயிரம் வருடத்திற்கு மேல் பழமையானது. இன்னொரு பெயர் திருஇடைச்சுரம். மூலவர் திருநாமம் ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர். உற்சவர் பெயர் சந்திரசேகரர். அம்பாள் பெயர் இமயமடக்கொடி, கோவர்த்தனாம்பிகை. தீர்த்தம், மதுர தீர்த்தம். சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 27வது. சிவன் மரகத மேனியுடன் சுயம்பு மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். தேன் அபிஷேகம் செய்யும்பொழுது மரகதலிங்கம் ஜொலிப்பதைக் காணலாம்.

நெடுங்காலத்துக்கு முன்னால் வில்வ மரமாக இருந்த இந்த இடத்தில் வாழ்ந்து வந்த பசு ஒன்று பால் தரவில்லை. இடையன் சந்தேகப்பட்டு அந்தப் பசுவைக் கண்காணித்த போது அது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதைக் கண்டான். இந்த விஷயத்தை அவன் பிறரிடம் தெரிவித்தான். அவர்கள் புதரை விலக்கிப் பார்த்தபோது சிவன், சுயம்பு மரகத லிங்கமாக இருந்ததைக் கண்டனர். அங்கே கோயில் எழுந்தது. அம்பிகையே பசு உருவில் ஞானப்பாலைச் சிவனுக்கு அபிஷேகம் செய்ததால் சிவனுக்கு 'ஞானபுரீஸ்வரர்' என்றும் அம்பிகைக்கு 'கோவர்த்தனாம்பிகை' என்றும் பெயர் வந்தது. இங்கு பிரார்த்தனை செய்தால் கல்வி, ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை. இங்கு சிவனை, கௌதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வழிபட்டுள்ளனர்.இத்தலத்தில் அம்பாள் தனது இடது காலைச் சற்று முன்னே வைத்து, வலது காலைப் பின்னே வைத்து நடந்து வரத் தயாராகும் நிலையில் காட்சி தருகிறாள். சிவன், இடையன் வடிவில் திருஞான சம்பந்தரின் களைப்பைப் போக்கக் கிளம்பியபோது அம்பாளும் உடன் கிளம்பினாள். சிவன், அம்பாளை உடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் காரணம் கேட்க, “திருஞானசம்பந்தர் நீ கொடுத்த ஞானப்பாலைக் குடித்தவன். தாயைத் தெரியாதவன் இந்த உலகில் இருக்க முடியாது. நீ வந்தால் திருஞானசம்பந்தன் நம்மை அடையாளம் தெரிந்து கொள்வான்” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார். இதனால் தான் அம்பாள் தனது காலை முன்வைத்த கோலத்தில் காட்சி அளிக்கிறாள். காலில் குறைபாடு உள்ளவர்கள் அம்மனைப் பிரார்த்தித்தால் மன அமைதி உண்டாகும் என்பது ஐதீகம்.

சிவபெருமான் மரகத லிங்கமாகக் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பிரதான வாயில் தெற்கே உள்ளது. தீபாராதனையின்போது மரகத லிங்கத்தில் ஜோதிரூபம் தெரிகிறது. அதைத் தரிசித்தால் தீய குணங்கள் மறைந்து வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. இங்கு தட்சிணாமூர்த்தி சன்னதியில் அவரது காலுக்குக் கீழே இருக்கும் முயலகன், இடப்புறம் திரும்பிப் படுத்த கோலத்தில் இருப்பது சிறப்பு.

திருஞானசம்பந்தர், சிவத்தல யாத்திரையின்போது இவ்வழியாக நீண்ட தூரம் நடந்ததால் அவரைப் பசி வாட்டியது உச்சி வெயிலும் கூடியது. அச்சமயம் கையில் தடியுடன் கோவணம் கட்டிய மாட்டு இடையன் ஒருவன் வந்தான். கையிலிருந்த தயிர்க் கலயத்தை சம்பந்தரின் பசியறிந்து அவருக்குக் கொடுத்தான். பருகிக் களைப்பு நீங்கிய சம்பந்தரிடம், 'நீங்கள் யார்?' என இடையன் கேட்க, அவர் தனது சிவத்தல யாத்திரையைப் பற்றிக் கூறினார். இதே வனத்தில் சிவன் இருப்பதாகக் கூறிய இடையன், அங்கு வந்து சிவனைப் பாடித் தரிசிக்கும்படி சம்பந்தரிடம் சொன்னான்.இடையனின் இணையற்ற அழகு கண்டு சம்பந்தருக்குச் சந்தேகம் வந்தாலும் அவனைப் பின்தொடர்ந்தார். வழியில் குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு மறைந்தான். சம்பந்தர், சிவனே இடையன் வடிவில் வந்து காட்சி தந்து அருள் புரிந்ததை உணர்ந்தார். இடையனாக வந்து இடையிலே விட்டுவிட்டுச் சென்றதால் 'இடைச்சுரநாதர்' என்று வணங்கிப் பதிகம் பாடினார்.

சித்ரா பௌர்ணமி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம், ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. பிரகாரத்தில் வில்வமரம் சிவனாகவும், வேப்பமரம் பார்வதி ஆகவும், ஆலமரம் விநாயகர் ஆகவும் இருந்து மூவரும் மரத்தடியில் இணைந்துள்ளனர். இங்கு பிரார்த்தித்தால் பிரிந்த குடும்பங்கள் சேர்ந்து ஒற்றுமை கைகூடும் எனக் கூறப்படுகிறது.

ஆலயம் காலை 7.00 மணிமுதல் 11.00 மணிவரையும், மாலை 4.30 முதல் 6.30 வரையும் திறந்திருக்கும்.
சீதா துரைராஜ்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline