Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
சார்பட்டா
அதுதானே சரி…
- ஜே. ரகுநாதன்|ஏப்ரல் 2021|
Share:
நான், வசுந்தராவெல்லாம் ராணி மெய்யம்மை ஸ்கூலில் படித்த காலத்தில் பள்ளிகள் எல்லாம் இன்றுபோல இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த அரைச் சுவருடன் கூடிய வகுப்பறைகள், எழுபதுகளில் கவர்ன்மென்ட் ஸ்கூலில் SSLC வகுப்புகள் எப்படி இருக்கும் என்பதை நான் ஒரு கோடி காட்டிவிடுகிறேன்.

எங்களுடையது கோ எஜுகேஷன். ஆங்கில மீடியத்தில் நாங்கள் மொத்தம் முப்பது பேர், அதிலும் பெண்கள் பன்னிரண்டு பேர் மட்டுமே. காந்தி நகரில் மூலையில் இரண்டு அழுக்குக் குட்டைகளின் மத்தியில் கூரை வேய்ந்த அரைச்சுவர் கட்டிடங்களைக் கொண்ட பள்ளிக்கூடம். பத்தாவதில்தான் டேபிள் சேர், அதற்கு முன்பெல்லாம் குமாஸ்தா பெஞ்சுதான். கிட்டத்தட்ட எல்லா ஆசிரியர்களுமே தமிழில்தான் பாடம் எடுப்பார்கள். ஹெட்மாஸ்டர் எஸ்விடி சார் எப்பவாவது கிளாஸ் எடுத்தால் தப்பும் தவறுமாக ஆங்கிலத்தில் பேசிக் கொல்லுவார்!

கொஞ்சம் மலரோற்பவம் டீச்சர் பற்றியும் சொல்லிடலாம். பத்தாம் கிளாசுக்கு பூகோளம் எடுக்கும் மலரோற்பவம் தான் எங்களுக்கு ஹிஸ்டரி எடுத்தார். அந்த கிளாசில் ஒரு முறை ஆசியாக் கண்டம் பற்றிப் பாடம் எடுக்கும்போது இண்டியன் ஓஷனை இண்டியன் ஓகன் என்று படித்து வரலாறு படைத்தவர் இந்த மலரோற்பவம் டீச்சர். அதற்குப் பிறகு சிக்கலான இந்த மலரோற்பவம் என்ற பெயர் வழக்கொழிந்து இண்டியன் ஓகன் என்றே குறிப்பிடப்பட்டவர்.

மலரோற்பவம் டீச்சர் நல்ல கறுப்பாக ஆனால் களையான முகத்துடன் இருப்பார்.. தலைமுடியை அப்படியே வகிடில்லாமல் தூக்கி வாரினதில் பொட்டில்லா நெற்றி இன்னும் அகலமாகத் தெரியும். குட்டிக்யூரா பவுடர் போட்டுக்கொண்டு வாசனையுடன் வருவார்.

"டேய்! அது எங்க CLRI கிளப்புல கேரம் போர்டுக்குப் போடற பவுடர்!"

ஹரி அடித்துச் சொல்வான். டீச்சர் உள்ளே வந்தவுடன் பதினைந்து நிமிடம் பாடத்தை அப்படியே படித்துக் காண்பித்துவிட்டு ஒப்பேற்றி, பசங்களை பேசித் திளைக்க அனுமதித்து விடுவார். அவர்கள் பாட்டுக்கு திரும்பி ரெண்டாவது வரிசை பசங்களுடன் சுமதி என் சுந்தரியில் சிவாஜி நடிப்பு, நாகேஷ் காமெடி, குமாரி சச்சு…. சரி விவரமெல்லாம் வேண்டாம்.... என்று பேசுகையில், மலரோற்பவம் தன் ஹாண்ட்பேகிலிருந்து குப்பையாக காகிதங்கள், பில் ரசீது என்று கதம்பமாகக் கொட்டி, வீட்டுச் செலவுக்கணக்கை எழுத ஆரம்பித்துவிடுவார். எதிர்ப்பக்கமும் பெண்டுகள் நகை, துணிமணி, பி செக்‌ஷனில் கொஞ்சம் அழகாக இருக்கும் ஹேமா பற்றியும் வம்பு என்று பேசுங்கள். சில சமயம் மலரோற்பவம் டீச்சரைச் சுற்றிக்கொண்டு ரகசியக்குரலில் பேச்சு நடக்கும்.

"அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரண்டா" என்பது - வசுந்தரா இப்போதுகூட என்னிடம் நலம் விசாரிக்கும் - எதற்கோ ஈயம் என்ற செல்லப்பெயர் கொண்ட ராமனாதனின் ஒரு வரி முடிபு.

மாதாந்திர டெஸ்ட், கால் வருடம், அரை வருடம் என்று எப்போது டெஸ்ட் வைத்தாலும் வசுந்தராதான் முதல் ரேங்க். மேற்படி டீச்சர்கள் அது ஒரு இயல்பான சம்பவம்போல அதிகம் சிலாகிப்பதைக்கூட விட்டுவிட்டார்கள். வசுந்தராவின் பேப்பரைத் திருத்தும்போது அறியாமலேயே பாவ்லோ நாய்போல முதல் மார்க் போட்டுவிடுவார்கள். வசுந்தராவோடு முட்டி மோதிப் போட்டி போடுவது சுந்தர்தான். இருவருக்கும் இடையில் அதிகம் போனால் ஏழெட்டு மார்க்குதான் வித்தியாசம் இருக்கும். ஆனாலும் ஆறாவதிலிருந்து ஒருதரம் கூட சுந்தரால் வசுந்தராவை விட அதிக மார்க் எடுக்க முடியவில்லை. எப்பவாவது சுந்தர் சில சப்ஜெக்டுகளில் அதிக மார்க் எடுத்திருந்தால் கூட, மற்ற சப்ஜெக்டுகளில் வசுந்தரா அதிகம் எடுத்து மொத்தத்தில் முதல் இடம் பெற்றுவிடுவாள்.

காலாண்டுப்பரிட்சை என்று நினைக்கிறேன்.

சுந்தர் கிட்டி முட்டி வசுந்தராவின் டோட்டலை நெருங்கிவிட்டாலும் கடைசியில் வசுந்தரா இரண்டு மார்க் அதிகம் எடுத்து முதல் ரேங்க் வாங்கினாள். ரிப்போர்ட் கார்ட் கொடுக்கும்போது மலரோற்பவம் டீச்சர் கூட "சாரி சுந்தர்! வசு ரெண்டு மார்க் அதிகம் வாங்கி ஃபர்ஸ்ட் ரேங்க்! அடுத்த தரம் நீ இன்னும் மெனக்கெடணும்" என்று வெறுப்பேற்றினாள்.

"பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்! வசுந்தராவோட ஹிஸ்டரி பேப்பரை நீங்க வாங்கிப் பாருங்க! மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கான காரணங்கள்னு கேட்டிருந்த கேள்விக்கு எல்லோரும் உங்க புஸ்தகத்துல இருக்கற ஆறு மட்டும் எழுதியிருந்தீங்க. ஆனா வசு தமிழ் மீடியம் புஸ்தகத்துலேர்ந்து எடுத்து எட்டு காரணம் எழுதியிருக்கா! இந்த மாதிரி மத்தவங்களைவிட வித்தியாசமா பெட்டரா எழுதினாத்தான் பப்ளிக் எக்ஸாம்ல நீங்க நல்ல மார்க் வாங்க முடியும்!"

மலரோற்பவம் டீச்சர் போனவுடனேயே போட்டி போட்டு ரம்யா வசுவின் பேப்பரை வாங்கிப் பார்த்தாள். படித்துக்கொண்டே வந்த ரம்யாவின் கண்கள் சாசர் போல விரிந்தன. வசுந்தராவை நெருங்கி கண்ணசைத்து தனியே கூப்பிட்டாள்.

"யேய் வசு! இங்க பாரு! உன்னோட ஹிஸ்டரி பேப்பர்ல டோட்டலிங் தப்பு இருக்கு!"

"என்னப்பா? எங்க?"

ரம்யா கண்பித்தபோது வசுந்தரா கவனித்தாள். மூன்று மூன்று-மார்க் கேள்விக்கு மார்க் போடும்போது ஏதோ கவனத்தில் டீச்சர் நாலு மூன்றுகளைக் கூட்டிப் போட்டதில் மூன்று மார்க் அதிகம்!

"வசு! கண்டுக்காத! கமுக்கமா இருந்துடு!"

"ச்சீ தப்புடி!"

"மூணு மார்க் கொறஞ்சா சுந்தர் ஃபர்ஸ்ட் ரேங்க் ஆய்டும்! தேவையா உனக்கு?"

"அதனாலென்ன! பொய் சொல்லி ரேங்க் வாங்கறதுல என்னடி இருக்கு!"

பேப்பரைக் கையில் எடுத்துக்கொண்டு வசுந்தரா விடுவிடுவென ஸ்டாஃப் ரூமுக்குப்போனாள். மலரோற்பவம் அங்கு இருந்த சுசித்ரா, மீனாட்சி டீச்சர்களோடு சாப்பித் தயாரான சமயம்.

"என்னமா வசு!"

"டீச்சர்! டோட்டலிங் தப்பாயிருக்கு என் பேப்பர்ல?"

"என்ன ஆச்சு, குறைச்சுப் போட்டுட்டேனா? எப்படி இருந்தாலும் நீதானே ஃபர்ஸ்ட் ராங்க்?"

"இல்லை நீங்க அதிகம் போட்டிருக்கீங்க!"

சுசித்ரா மீனாட்சி டீச்சர்கள்கூடத் திகைத்து திரும்பிப் பார்த்தார்கள். செக் பண்ணின மலரோற்பவம் டீச்சர் தலை ஆட்டி ஆமோதித்தார்.

"வசு! உனக்கு மூணு மார்க் குறைஞ்சா நீ செகண்ட் ராங்க் போய்டுவ? சுந்தர் ஃபர்ஸ்ட் வந்துடுவான்!"

"தெரியும் டீச்சர்!"

"உன் பல வருஷ ரெகார்ட் பிரேக் ஆய்டும் வசு?"

"அதுதானே சரி டீச்சர்!"

மலரோற்பவம் டீச்சர் குட்டிக்கூரா பவுடர் வாசனையுடன், சாப்பிட்டுக் கொண்டிருந்த ரசம்சாத வாசனையுடன் வசுந்தராவைக்கட்டி அணைத்துக்கொண்டார்.

"அதுதானே சரி! என்னமா சொல்லுது பாரு இந்தக்குட்டி!"

அங்கே இருந்த மற்ற டீச்சர்களூம் கை தட்டிச்சொன்னார்கள் "அதுதானே சரி!"

★★★★★


வசுந்தரா ஆஃபீஸிலிருந்து வந்த கையோடு சாப்பிட உட்கார்ந்தாள். டைனிங் டேபிள் மேல் தட்டை வைத்த தன்யா ஆச்சரியப் பார்வை பார்த்தாள்.

"என்ன மேம் சாப்! குளிப்பீங்களே தினமும்?"

"இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கு தன்யா! ஆஃபீஸ்ல ரொம்பக் கடுமையான வேல! ஆமா என்ன பண்ணியிருக்கீங்க?"

"சப்பாத்தி, தால், லோகி சப்ஜி!"

"அய்யோ! இன்னிக்கும் லோகியா? என்ன தன்யா?"

"முந்தா நாள் வாங்கினதுல அரை கிலோ பாக்கி இருக்கு மேம்சாப்! வேஸ்ட் பண்ணலாமா?"

"சரி சரி! நாளைக்காவது ஆலு சப்ஜி பண்ணுங்க!"

"நாளைக்கு சுக்ரவார் தான்! ஆலு ரவி வார்க்குதான்! நீங்க போட்ட ஆர்டர்தான் மேம் சாப்!"

"வசு! நீ தோத்துப்போய்ட்டேடி!" உரக்க சொல்லிக்கொண்டே வசு சாப்பிட்டாள்.

"தன்யா! கிளம்பலியா? டைம் எட்டரையாச்சே?"

"சம்வித் வரேன்னு சொன்னான்! அவனோட சைக்கிள்ளயே போய்டுவேன்!"

"ஆமா சம்வித் இப்ப என்ன பண்றான்?"

"ஃபோர்ட் ஏரியாவுல ஒரு கம்பெனியில அக்கவுண்ட் வேலை செய்யறான் மேம் சாப்! ஏதோ காஸ்ட் பரிட்சை எழுதியிருக்கான். பாஸ் பண்ணினா பெரிய வேல கிடைகும்னான்! மேம் சாப் ஏதானும் ஹெல்ப் பண்ண முடிஞ்சா…."

"பேசிப் பாக்கறேன் தன்யா!"

"சம்வித்! நமஸ்தே கரோ! மேம் சாப்!"

"ஹலோ சம்வித்! உட்காரு!"

"நஹி மேம்சாப்! உங்க முன்ன உட்காரக்கூடாது!"

"தன்யா! ஆப் சுப் கரோ! சம்வித், பைட்டோ."

"ஹான் ஜி மேம் சாப்!"

"என்ன எக்ஸாம் எழுதியிருக்கே? அம்மா சொன்னாங்களே?"

"காஸ்ட் அக்கவுண்டிங் ஃபைனல்!"

"வாவ்! எப்ப ரிசல்ட்?"
"அடுத்த வாரம் மேம்!"

"பாஸ் பண்ணிடுவியா?"

"நல்லா எழுதியிருக்கேன் மேம்!"

"குட்! பாஸ் பண்ணினவுடனே என்னை வந்து பாரு!"

அடுத்த வாரம் தன்யா காலை வந்தபோதே மோதிச்சூர் லட்டுவுடன் வந்தாள்.

"மேம்ஜி! சம்வித் பாஸ் பண்ணிட்டான்! இந்தாங்க மீட்டா!"

"ஓ வெரி குட் தன்யா! அவனோட பயோடேட்டாவ எனக்குக் கொண்டுவந்து கொடு!"

இரண்டாம் நாள் அழகாக டைப் செய்யப்பட்ட சம்வித்தின் பயோடேட்டாவை தன்யா கொண்டுவந்து கொடுத்தாள்.

★★★★★


"மன்ஸுக்! கமர்ஷியல் டிட்டர்ஜெண்ட்ல ஏதோ வேகன்ஸி போட்டிருந்ததே?"

"ஓ அதுவா? தீப் சேத்தி நாலு பேரை ஷார்ட்லிஸ்ட் பண்ணிட்டானே!"

"இப்ப என்கிட்ட ஒரு எக்ஸலெண்ட் பயோடேட்டா இருக்கு! வெரி டிஸர்விங் பர்ஸன்! பார்க்கச் சொல்றீங்களா?"

"வசுந்தரா! போன வாரம்தான் இன்டர்வியூ பண்ணி நாலு பேர ஷார்ட்லிஸ்ட் பண்ணினாங்க! இப்ப இன்னொண்ணா?"

"மன்ஸுக் ப்ளீஸ்! தீப் கிட்ட கேளுங்க! நல்ல கேண்டிடேட்! அஃப் கோர்ஸ்! இன்டர்வியூ பண்ணி திறமை இருந்தா செலக்ட் பண்ணினாப் போறும்! என்னோட ரெகமண்டேஷன் இன்டர்வியூவுக்குக் கூப்பிட மட்டும்தான்!"

"ஐ வில் ட்ரை வசுந்தரா! பட் ஐ கான்ட் பிராமிஸ்!"

அடுத்த நாளே மன்ஸுக் ஃபோன் பண்ணிவிட்டார்.

"சாரி வசுந்தரா! தீப் கத்தறான்! நோ சான்ஸ்!"

"மன்ஸுக்! நான் தீப் கிட்ட பேசிப்பார்க்கட்டுமா?"

"ப்ளீஸ்! ட்ரை யுவர் லக்!"

"ஹலோ தீப்! வசுந்தரா ஹியர்!"

"கேண்டிடேட் பத்தின்னா பேசாத! வேற ஏதாவது சப்ஜெக்ட்னா ஓகே!"

"ப்ளீஸ் தீப்! நல்ல கேண்டிடேட்! பிரில்லியன்ட் ஃபெல்லோ! காஸ்ட்டிங் ஃபைனல் ஒரே அட்டெம்ப்ட்டுல பாஸ் பண்ணியிருக்கான்! அண்ட் எ புவர் ஃபெல்லோ!"

"வசுந்தரா! கேண்டிடேட் செலக்‌ஷன் எவ்வளவு க்ரூயல் வேலை தெரியுமா? ஒரு வாரம் எனக்கு வேலை கெட்டுப்போச்சு! ராஜஸ்தான்ல கூல் சோப் ரெண்டு வாரமா அடி வாங்கிண்டு இருக்கு. டெல்லி பிராஞ்ச் அத்துல் கெட்ட வார்த்தையில திட்டறான்! சாரி வசுந்தரா! நெக்ஸ்ட் டைம்! நாட் நௌ!"

"தீப்! நா இவ்வளவு சொல்றேனே! யு வில் மிஸ் எ ரேர் டாலண்ட் ஃபார் யூ அண்ட் டி! உங்காளுங்கள விட்டு ப்ரெலிம் பண்ணச் சொல்லுங்க. தேறினா நீங்க ஒன் ஹவர் ஸ்பெண்ட் பண்ணுங்க போறும்! ப்ளீஸ்!"

"நீ இவ்வளவு சொல்றதால ட்ரை பண்றேன்! கேண்டிடேட் மட்டும் சொத்தையா இருந்தான்னா ஜாக்கிரதை! ஐ வில் கிக் யூ!"

"ட்ரஸ்ட் மீ தீப்! தாங்க் யூ! யு ஆர் ய ஸ்வீட் கய்!"

வசுந்தரா மன்ஸுக்கிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். மூன்றாம் நாள் மன்ஸுக் ஃபோன் பண்ணினார்.

"வசுந்தரா! தீப் ஈஸ் இஜாகுலே….சாரி சாரி! உன்னோட கேண்டிடேட் பத்தி தீப் ஈஸ் கோயிங் டு டவுன்! உங்காளு அவன அப்படி இம்ப்ரெஸ் பண்ணிட்டானாம். எங்கிட்ட சொல்லி உடனே அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் அனுப்பச் சொல்லிட்டான்! பதினெட்டு மாசம் மானேஜ்மென்ட் டிரெய்னீ, கன்ஃபர்மேஷன்! கிரேடு த்ரீ!"

"ஓ தேங்க் யூ மன்ஸுக்!"

வசுந்தராவுக்கு உண்மையிலேயே சந்தோஷம். தன்யாவுக்கும் அந்தப் பையனுக்கும் பெரிய முன்னேற்றம். அந்தக் குடும்பம் சுலபமாக மேலே வந்துவிடும்! வசுந்தரா நிறைவாக உணர்ந்தாள். அப்பாவுக்கு ஃபோன் பண்ணிச் சொன்னாள்.

"பண்ணும்மா! நெறைய பேருக்கு உதவி பண்ணு! படிப்புக்கும் வேலைக்கும் உதவி பண்றதைப் போல புண்ணியம் வேற இல்லை!"

அடுத்த வாரம் வசுந்தரா டெல்லி போக வேண்டியிருந்தது. பர்வானூவில் ஸ்டாக்கிஸ்ட் மூன்று செக்குகளை பவுன்ஸ் பண்ணிவிட்டான். கோர்ட்டில் கேஸ் போட, சிக்கலான தாடி வைத்த ஏதோ ஒரு சர்தார்ஜி கோர்ட் கிளார்க் சம்மனில் கமர்ஷியல் மானேஜர் நேரில் வரவேண்டும் என்று போட்டுவிட்டார். அந்த அக்கப்போரை முடித்து வேறொரு ஸ்டாக்கிஸ்டை நியமித்துவிட்டு வேலையில் சுணக்கம் காட்டின சேல்ஸ் சூபர்வைஸரைக் காய்ச்சிவிட்டு, ஒருநாள் டெல்லி மயூர் விஹார் கோடவுனுக்கு சர்ப்ரைஸ் விஸிட் செய்து ஸ்டாக் செக் பண்ணி விட்டு ஆயாசத்துடன் நான்காம் நாள் இரவு ஏர்போர்ட்டுக்கு வந்தால், ப்ளேன் இரண்டு மணி நேரம் லேட்.. ஒரு வழியாக இரவு பன்னிரெண்டரைக்கு இறங்கி வீட்டில் போய்ப் படுக்கையில் விழுந்தாள்.

காலை ஏட்டு மணிக்கு வசுந்தரா கண் விழித்தபோது தன்யா வந்து வேலையை முடித்துவிட்டுப் போய்விட்டிருக்க, பிரேக்ஃபாஸ்ட் டைனிங் டேபிள்மேல் இருந்தது.

ஒன்பதரைக்கு யூ அண்ட் டி பவனில் நுழைந்து ரூமுக்குப் போனால் வெண்மூக்குக் கழுகாய் மன்ஸுக்கானி உட்கார்ந்திருந்தார்.

"தீப் சேத்தி உன்னை ஆள்விட்டு அடிக்க காத்திருக்கிறான்! ஊரை விட்டு ஓடிப்போய்விடு!"

"என்ன ஆச்சு?"

"உங்காள், அதான் சம்வித், நம்ம ஆஃபரை ரிஜக்ட் செய்து விட்டான்!"

"வாட்? மன்ஸுக்! என்ன சொல்கிறீர்கள்?"

"உங்க கம்பெனி வேலை வேண்டாம்னுட்டான்! கதம்! கலாஸ்!"

வசுந்தராவுக்கு அதிர்ச்சி. யூ அண்ட் டியின் வேலையை வேண்டாம் என்பதா? அதுவும் தான் ரெகமண்ட் செய்திருப்பது சம்வித்துக்கு தெரியுமே? இருந்தும் கூட ரிஜக்ட் செய்திருப்பது..?

பாத்திரம் அறியாமல் பிச்சையிட்டுவிட்டதாய் வசுந்தரா உணர்ந்தாள்.

"மன்ஸுக்! லெட் மி டாக் டு சம்வித்! அப்புறம் நானே தீப் சேத்தியுடன் பேசுகிறேன்!"

"தீப் சேத்தி ஸ்மித் அண்ட் வெஸ்ஸன் பாயிண்ட் 28 துப்பாக்கிக்கு ஆர்டர் பண்ணியிருப்பான் இந்நேரம்! ஜாக்கிரதை வசுந்தரா!"

வசுந்தராவுக்கு படபடப்பாய் வந்தது. பைக்குள்ளிலிருந்து அந்த சம்வித் தந்துவிட்டுப் போன ஸ்டாக் ப்ரோக்கிங் கம்பெனிக்கு ஃபோன் செய்தாள்.

"சம்வித்துடன் பேச வேண்டும்!"

எங்கோ எதிரொலி போல "சம்வித்! ஆப் கா ஃபோன்! குச் லேடி ஹை!"

"ஹலோ!"

"சம்வித்! வசுந்தரா ஹியர்! உன் நினைவில் இன்னும் இருக்கிறேனா?"

"மேம்! ஹலோ! யெஸ்?"

"இன்னிக்கு ஒரு மணிக்கு என்னை ஆஃபீசில் வந்து பார்!"

"மேம்! எனக்கு..!"

"ஒரு மணி! ஷார்ப்!" ஃபோனை வைத்துவிட்டாள்.

பன்னிரெண்டு ஐம்பத்து ஐந்துக்கே வந்துவிட்டான்.வசுந்தரா சுத்தமான ஆங்கிலத்துக்குத் தாவினாள்.

"சம்வித்! ஆஃபர் கிடைத்ததா?"

"எஸ் மேம்! ஆனா…..?"

"ஒப்புக்கொண்டு விட்டாயா?"

"இல்லை மேம்! அதுபற்றித்தான் உங்களிடம்….?"

வசுந்தரா வெடித்தாள். "வாட் தி ஹெக் யூ திங்க்! உனக்காக எத்தனை மெனக்கெட்டு சிபாரிசு பண்ணி… மை காட்! ஒய் சம்வித்! ஒய்?"

"என்னால் விளக்க முடியும் மேம்!"

"போதாது! மேக் மி அண்டர்ஸ்டாண்ட்! அண்ட் யூ பெட்டர் கன்வின்ஸ் மீ!"

"யூ அண்ட் டி இன்டர்வியூ போன திங்கள் அன்று. அதற்கு முன் வெள்ளிக்கிழமை காத்ரேஜில் இண்டர்வ்யூ போயிருந்தேன். திங்கள் இன்டர்வியூவுக்குப்பிறகு எனக்கு யூ அண்ட் டியிலிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. செவ்வாய் அன்று காத்ரேஜில் ஆஃபர் கொடுத்தார்கள். இரண்டு நாளுக்குள் பதில் சொல்லக்கெடு. வெள்ளிக்கிழமை காலைவரை இங்கிருந்து செய்தி இல்லை. எனவே காத்ரேஜின் ஆஃபரை ஒப்புக்கொண்டு விட்டேன். ஆனால் அன்று மதியம் யூ அண்ட் டியின் ஆஃபர் வந்தது!"

"நினைத்தேன்! காட்ரேஜில் சம்பளம் அதிகமாக கொடுத்திருப்பார்களே?"

வசுந்தரா நக்கலாகக் கேட்டதை சம்வித் கவனிக்கவில்லை.

"முதலில் காத்ரேஜ் வேலையை ஒப்புக்கொண்டுவிட்டதால் யூ அண்ட் டியின் ஆஃபரை ஒப்புக்கொள்ள முடியாமைக்கு வருத்தம் தெரிவித்துச் செய்தி அனுப்பினேன் மேம்!"

"இன்னும் நான் கேட்டதற்கு பதில் சொல்லவில்லையே?"

"என்ன கேட்டீர்கள் மேம்?"

காத்ரேஜில் கொடுக்கப்பட்ட சம்பளம் யூ அண்ட் டியை விட அதிகமோ?"

"இல்லை மேம்! குறைவுதான்! இருவது பர்சண்ட் கம்மி!"

"பிறகு ஏன்?"

"யேஹ் தோ சஹி ஹை நா மேம்? முதலில் ஒப்புக்கொண்ட பிறகு பணத்திற்காக வார்த்தை மீறுவது தவறில்லையா?"

யேஹ் தோ சஹி ஹை நா, மேம்!

வசுந்தராவுக்குப் பொறி தட்டியது. மலைத்துப்போய் உட்கார்ந்துவிட்டாள்.

அதுதானே சரி, டீச்சர்!

மலரோற்பவம் டீச்சரும் குட்டிக்யூரா பவுடர் மற்றும் ரசம்சாத மணமும் சென்ஸரி ந்யூரான்களில் மீண்டும் படருவதை உணர்ந்த வசுந்தரா ஃபோனை எடுத்து தீப் சேத்தியுடன் பேசத் தயாரானாள்.

குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஜாட் வகுப்பினனான தீப் சேத்திக்கு குட்டிக்யூரா பவுடர் மற்றும் ரசம் சாத மணம் புரியுமா?

புரியும். புரியவேண்டும். புரிய வைக்க வேண்டும்.

ஜெ. ரகுநாதன்,
சென்னை
More

சார்பட்டா
Share: 




© Copyright 2020 Tamilonline