Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
அனுராதா கிருஷ்ணமூர்த்தி
- அரவிந்த் சுவாமிநாதன்|மார்ச் 2021|
Share:
கர்நாடக இசைக் கலைஞர், நாடக, திரைப்பட நடிகை, இசை ஆசிரியை எனப் பன்முகங்கள் கொண்டவர் அனுராதா கிருஷ்ணமூர்த்தி. பிரபல கர்நாடக சங்கீத வித்வான், சங்கீத கலாநிதி, கே.வி. நாராயணசாமியின் மகள். அமெரிக்கா, கனடா, பிரேசில், லண்டன், எடின்பர்க், ஸ்காட்லாந்து, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா என உலக நாடுகள் பலவற்றிற்கும் சென்று இசை பரப்பியவர். 'இசையரசி', 'சங்கீத ஆச்சார்ய பூஷண்' எனப் பட்டங்களைப் பெற்றவர். நடிப்பிற்கும் பல விருதுகள் பெற்றிருக்கிறார். சென்னை வானொலியின் 'ஏ' கிரேடு இசைக்கலைஞர். இசையைத் தவமாய் நேசிக்கும் அவரோடு சற்றே பேசலாம் வாருங்கள், கேட்போம்.

★★★★★


கே: உங்கள் இசைப் பயணத்தின் தொடக்கம் எங்கே?
ப: நான் இரண்டரை வயதிலேயே பாட ஆரம்பித்துவிட்டேன் என்று வீட்டில் சொல்வார்கள். அப்பா பிரபல வித்வான் கே.வி.நாராயணசாமி. அம்மா பத்மா நாராயாணசாமியும் இசைக்கலைஞரே. வீட்டில் எப்போதும் சங்கீதம் ஒலிக்கும். எனக்கு சங்கீதத்தில் ஒரு கடமை இருக்கிறது என்பதால்தான் எனக்கு சங்கீதம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏனென்றால் என்னுடைய சகோதரிகள் யாரும் பாட வரவில்லை. இது ஒரு பொறுப்பு. அப்பா வழியில் பார்த்தால் தியாகராஜ சுவாமிகளின் சீடர் பரம்பரையில் நான் ஏழாவது தலைமுறை. தியாகராஜ சுவாமிகளுக்கு மானம்புச்சாவடி வெங்கடசுப்பையர் என்ற பிரதான சீடர் இருந்தார். அவரது சீடர்களில் ஒருவர் பட்டணம் சுப்பிரமணிய ஐயர்.

பெற்றோருடன் அனுராதா



மகா வைத்யநாதய்யர், பட்டணம் சுப்ரமணிய ஐயர், சரப சாஸ்திரிகள் இவர்களெல்லாம் தியாகராஜ சுவாமிகளின் சீடர் பரம்பரையில் மிக முக்கியமானவர்கள். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் சீடர் ராமநாதபுரம் ஸ்ரீநிவாச ஐயங்கார் என்னும் 'பூச்சி' ஐயங்கார். அவருடைய சீடர் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். அரியக்குடியின் சீடர் என் அப்பா கே.வி. நாராயணசாமி. அவரது சிஷ்யை நான். ஏழாவது தலைமுறை.

மற்றபடி நான் இரண்டரையிலேயே பாட ஆரம்பித்துவிட்டாலும், அதை ஆஹா, ஓஹோ என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால், என் அம்மா, "என்னிக்கு நீயாக வந்து என்னிடம் உட்காருகிறாயோ அன்றைக்குத்தான் நான் உனக்குச் சொல்லிக் கொடுப்பேன்" என்றாள். காரணம், நான் சிறு வயதில் ரொம்பக் குறும்பு. அப்பா செல்லம். அம்மாவுக்கும் செல்லம் என்றாலும் அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்.

நான் அப்போது ரொம்பத் துறுதுறுப்பு. மரத்தில் ஏறுவேன்; மாடியில் ஏறுவேன். ஓரிடத்தில் இருக்க மாட்டேன். ஆனால், காது மட்டும் சங்கீதத்தில்தான் இருக்கும். அப்பா, அவர் சீடர்கள், அம்மா என்று யாராவது பாடிக்கொண்டே இருப்பார்கள். 11 வயதில்தான் நான் அம்மாவிடம் சங்கீதம் கற்றுக்கொள்ளப் போய் உட்கார்ந்தேன். அப்போதும் கூட சரளி, ஜண்டையில் ஆரம்பிக்கவில்லை. நேரடியாகப் பாட்டுதான். புதுசா ஒரு கீர்த்தனை, கமலாம்பாள் நவாவரணம், நிரவல் பண்றது, ஏதாவது ஒரு ராகம், ராகம்-தானம்-பல்லவி என்று இப்படித்தான் சங்கீதம் ஆரம்பித்தது. நான் பி.ஏ. மியூசிக் படிக்கும் போதுதான் சரளி, ஜண்டை எல்லாம் படிக்க வேண்டி வந்தது.



கே: ஓ.. உங்களது குருகுல வாசம் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.
ப: ரொம்ப ஸ்ட்ரிக்டான குருகுல வாசம். எவ்வளவு ஸ்ட்ரிக்ட் என்றால், தொண்டை கட்டிக் கொண்டிருக்கிறது, பாடுவது கஷ்டம் என்றால், எந்த ஸ்ருதியில் பாட முடிகிறதோ அந்த ஸ்ருதி வைத்துச் சொல்லித் தருவார்கள். காய்ச்சல் வந்தால்கூடச் சாதகம் செய்திருக்கிறேன். ஆச்சரியம் என்னவென்றால் சாதகம் செய்து முடித்தவுடன் வேர்க்கும், ஜுரம் சரியாகி விடும். இதை நான் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன். வயிற்று வலி வந்தால் மட்டும்தான் சாதகம் கிடையாது. காரணம், இசை நாபியிலிருந்து எழவேண்டும் என்பதால்.

பள்ளி நாட்களில் காலையில் ஒன்றரை மணி நேரம், மாலையில் நான்கு மணி நேரம் சாதகம் செய்வோம். விடுமுறை நாட்களில் விடியற்காலை ஒன்றரை மணி நேரம், பகலில் ஒரு மணி நேரம், மாலையில் நான்கரை மணி நேரம் சாதகம். இப்படிச் செய்துதான் சங்கீதம் பழகினேன். அதனால் எனக்கு விளையாட்டுக்கோ, நண்பர்களுக்கோ, சினிமா, டிராமாவுக்கோ நேரம் கிடையாது. வீட்டில் என்னை யாரும் இப்படித்தான் கற்கவேண்டும் என்று சொன்னதில்லை. நானே விரும்பிச் செய்ததுதான்.

தவிர, வீட்டில் உணவும் சாத்வீக உணவுகதான். ராஜசீக உணவு எதுவும் சமைக்கப்படாது. ஆக, உணவு, சூழல், கட்டுப்பாடு என்று எல்லாமே சங்கீதத்துக்குத் துணையாக அமைந்திருந்தன. ஐந்து வயதிலேயே ராக விஸ்தீரணம் எல்லாம் செய்து பாடியிருக்கிறேனாம். அதைக் கேட்ட அப்பாவின் நண்பர், "இவளுக்கு கிரமமா சங்கீதம் சொல்லிக் கொடு. நன்னா வருவாள்" என்று பாராட்டிச் சொன்னாராம். அப்பாவின் குரு கிருஷ்ணய்யர் எங்கள் வீட்டுக்கு வந்து பாடும்போது நானும் கூடவே அதே ராகத்தில் பாடுவேனாம். ஒரு ராகத்தில் பாடிக் கொண்டிருப்பவர், அதை மாற்றி வேறு ராகத்தில் பாடினால், நானும் இயல்பாக அந்தப் புதிய ராகத்தில் பாடுவேனாம். அதைப் பார்த்து ஆச்சரியப்படுவாராம். இதெல்லாம் பின்னால் அம்மா சொல்லித் தெரிந்துகொண்டதுதான்.



கே: முதல் மேடைக் கச்சேரியை நினைவுகூர இயலுமா?
ப: முதல் மேடைக் கச்சேரி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸில், 18 வயதில் நடந்தது. மேடையேறுவதற்கு முன்னால் அப்பா, "ஒரு சங்கீத வித்வான் இரண்டு மணி நேரம் மேடையில் பாடுகிறார் என்றால், 20 மணி நேரம் பாடுவதற்கான சரக்கு அவரிடம் இருக்க வேண்டும்; அவ்வளவு தயார் செய்துகொண்டு கச்சேரியில் பாடவேண்டும்" என்றார். மேடை என்பது ஒரு சான்னித்யமான இடம். அதற்குத் தகுந்ததை நாம் கொடுக்க வேண்டும்.

முதல் கச்சேரி ஒரு மறக்க முடியாத கச்சேரி. கச்சேரிக்கு இரண்டு நாட்கள் முன்பு எனக்குக் குரல் கட்டியிருந்தது. ஆனால், கச்சேரியில் பாட உட்கார்ந்ததும் மிகச் சிறப்பாகக் குரல் வந்துவிட்டது. இரண்டு நாட்கள் முன்பு தொண்டை கட்டியிருந்தது எனக்கே மறந்துபோய் விட்டது. கச்சேரி சிறப்பாக அமைந்தது. காரணம், தெய்வ அனுக்கிரகமே அன்றி வேறில்லை. அந்தக் கச்சேரிக்கு செம்மங்குடி சீனிவாசய்யர் வந்திருந்தார். கச்சேரி முடிந்ததும் நான் சென்று அவரை நமஸ்கரித்தேன். அவர் என்னிடம், "உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா" என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார். தெய்வ அனுக்கிரகமும், குரு அனுக்கிரகமும் கிடைத்த அந்த முதல் கச்சேரியை என்னால் மறக்கவே முடியாது.

இசையும் இசைக்கலைஞனும்
இசையும் பாடுகிறவனும் வேறு வேறு கிடையாது. உங்கள் உள்மனதில் எப்படி இருக்கிறீர்களோ அப்படித்தான் சங்கீதமும் இருக்கும். உங்கள் மனம் வக்கிரமாக இருந்தால், உங்கள் சங்கீதமும் வக்கிரமாக இருக்கும். ஒரு ஒழுங்கு இருக்காது. உள்ளுக்குள் கட்டுப்பாடாக இருந்தால், உங்கள் சங்கீதம் அழகாக, கட்டுக்கோப்பாக ஆக, கற்பனையோடு வரும். இசைக்கு மனதின் சமநிலை முக்கியம். ஏனென்றால், இசை மிகவும் சூட்சுமமான ஒரு கலை. அதனால்தான் அதனை finest of the fine Arts என்று சொல்கிறார்கள். நடிப்பில் நீங்கள் மனதில் வாங்கிக்கொண்டதை எக்ஸ்பிரஸ் பண்ணும்போது அது very external. ஆனால், இசையில் நீங்கள் எக்ஸ்பிரஸ் பண்ணுவதும்கூட மிக சூட்சுமமாகத்தான் இருக்கும். இருக்கவேண்டும். ஏனென்றால் சங்கீதத்தின் அடிப்படை இயல்பே அதுதான்.
அனுராதா கிருஷ்ணமூர்த்தி


கே: உங்கள் குருநாதர்களிடம் கற்றதும் பெற்றதும் என்ன?
ப: அப்பாதான் எனக்குச் சங்கீதப் பயிற்சி ஆரம்பித்து வைத்தார். அவரைப் பார்த்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றாலும், நான் முழுக்க முழுக்கச் சங்கீதம் கற்றுக் கொண்டது அம்மாவிடம்தான். அம்மா என்னிடம் ஸ்ட்ரிக்டாக இருந்ததன் பலனை இன்றைக்கு நான் அனுபவிக்கிறேன். எப்போதும் நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். செம்மங்குடி மாமா அவர்களிடமும் நான் நிறையக் கற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு அப்போது சுரம் பாடுவதற்குக் கொஞ்சம் கஷ்டம் இருந்தது. வாயில் சுரம் திரளாது. 'ஸ்ரீமாத்ருபூதம்' போன்ற கீர்த்தனைகளை நான் அவரிடம் பாடம் பண்ணிக் கொண்டிருக்கும்போது என் பிரச்சனையைச் சொன்னேன். அவர் உடனே, "நீ எதில் இங்கு வந்தாய்?" என்று கேட்டார். "நான் பஸ் பிடித்து வந்தேன்" என்றேன். "நீ வீட்டுக்குப் போகும்போது பஸ்ஸில் போகாதே. உனக்கு எந்த ராகம் நன்னா வரும்?" என்றார். "மாயாமாளவ கௌளை" என்றேன். "அந்த ராகத்தோட சுரங்களை, நீ நடக்கறபோது ஒரு பேஸ் வச்சுண்டு, அந்த பேஸில ஆரோகணம், அவரோகணம்னு பாடிண்டே போ. சரியாயிடும்" என்றார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன். ஒரே வாரத்தில் எனக்கு அந்தப் பிரச்சனை சரியாகிவிட்டது. அதுமுதல் அவரிடம் கற்றுக்கொள்ளப் போகும்போது, நடந்து போவேன்; நடந்து வருவேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ராகத்தை எடுத்துக்கொண்டு அவர் சொன்னபடி செய்வேன்.

பகவான் பாபா முன்னிலையில் அனுராதா



கே: மிகவும் சுவாரசியம்! கற்கும் காலத்தில் சவாலானது என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய குரு சங்கீத கலாநிதி திரு. டி. விஸ்வநாதன். ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஸ்காலர்ஷிப் எனக்குக் கிடைத்தது. அந்த ஆறுமாத காலம் நான் டி.வி. பார்த்ததில்லை. பேப்பர் பார்த்ததில்லை. ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. யாரிடமும் ஃபோன் பேசியதில்லை. உறவினர், விழா அது இது என்று எதுவும் கிடையாது. காலைமுதல் மாலைவரை முழுக்க முழுக்கச் சங்கீதம் மட்டுந்தான். காலையில் விஸ்வா சார் எடுப்பார். மாலையில் பிருந்தாம்மா எடுப்பார். தனம்மாள் பாணியில் அது நடந்தது. அந்த ஆறு மாத காலத்தில் 70 பீஸஸ் செய்தோம். 70 என்பது சாதாரணமல்ல. அதுவும் தனம்மாளின் வழி, பெரிய வழி. ரொம்பக் கஷ்டமும்கூட. அது மறக்க முடியாத அனுபவம்.

அடுத்து குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுடன் தேவாரம் ப்ராஜெக்ட் செய்தேன். ஒரு பாட்டு பாடும்போது அந்த ராகத்திற்கு என்று ஒரு உணர்வு இருக்கிறது. பாடலில் அந்த உணர்வு கிடைப்பதில்லை. அந்த ராகத்தின் ஃபீல் என்ன என்பதை நாம் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். பெரியவர்கள் எல்லாம் ஏன் பெரியவர்களாக இருக்கிறார்கள் என்றால், அந்த எமோஷனும் இதுவும் மேட்ச் ஆனதால்தான். கீர்த்தனைக்காக அந்த ராகமா, அல்லது அந்த ராகத்திற்காக அந்தக் கீர்த்தனையா என்று தெரியாது நமக்கு. அப்படி ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கும். இது எப்படி என்பதை அந்த தேவார ப்ராஜெக்டின்போது குன்னக்குடி சார் விளக்கிச் சொல்லுவார். அது ஒரு நல்ல அனுபவம்.

என் அம்மா முசிறி சுப்பிரமணிய ஐயரின் சிஷ்யை என்பதால், நீலதாக்ஷி காமாக்ஷி என்ற ஹிந்தோள ராகக் கீர்த்தனையைச் சொல்லிக் கொடுக்கும்போது, முசிறி இந்த இடத்தில் இப்படிச் சொல்லுவார், அந்த இடத்தில் அப்படிப் பண்ணுவார் என்று அதையெல்லாமும் பாடிக் காண்பித்துச் சொல்லிக் கொடுப்பாள். அந்த மாதிரியான சில பாக்கியங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.

குருநாதர்கள் யாருமே 'எப்படி கைதட்டல் வாங்கணும், எப்படி ரிவ்யூவில் பேர் வாங்கணும், எப்படி ரசிகர் கூட்டாம் சேர்க்கணும்' என்றெல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை. சங்கீதத்தை ஒரு மனதாக எப்படி நேசிக்க வேண்டும் என்றுதான் சொல்லிக் கொடுத்தார்கள்.

அதுபோல நாடகத்தில் என் குரு கே.பி. சார். அவர் மாதிரி ஒரு டீச்சர் ஒரு ஸ்கூலுக்கு இருந்தால் போதும் 100% சக்சஸ் அமைந்துவிடும்.

பண்டிட் ரவிஷங்கருடன் அனுராதா



கே: வெளிநாட்டுக் கச்சேரி அனுபவங்கள் குறித்து...
ப: 15 ஆகஸ்டு 1999, சுதந்திரதின விழாவில் பிரஸல்ஸில் பாட என்னை இந்திய அரசாங்கம் அழைத்தது. பின்னர் எடின்பரோவில் இந்தியத் திருவிழாவிலும் பாடினேன். பிரஸல்ஸில் என் கச்சேரி முதல் பகுதி 45 நிமிடம், இரண்டாம் பகுதி 30 நிமிடம் என்று திட்டமிட்டிருந்தார்கள். அரங்கம் நிரம்பி இருந்தது. ரேடியோவில் பாடுவதால் நேர உணர்வுடன் பாடுவேன். ஆனால், அன்று என்னையும் அறியாமல் 45 நிமிடங்களைத் தாண்டி, ஒண்ணே கால் மணி நேரம் பாடிவிட்டேன். அவர்களுக்கும் திடீரென்று நேரம் பார்த்த பின்னர்தான் அவ்வளவு ஆகியிருப்பது புரிந்தது. அடுத்த 15 நிமிடத்தில் கச்சேரியை முடித்துவிடலாம் என்று நான் நினைத்தேன். ஆனால், அவர்கள் முடிக்க விடவில்லை. வெஸ்டர்னர்ஸ் எல்லாம் எழுந்து 'இன்னும் கொஞ்ச நேரம் பாடுங்கள்' என்றனர்!

எம்.எஸ். என்னும் காதலி
1993ல் நான் ஒரு காதலில் விழுந்தேன். அது யார்மீது என்றால் எம்.எஸ். சுப்புலட்சுமி என்ற சங்கீத ஜாம்பவான் மீது. அவரிடம் என் மனதைப் பறி கொடுத்தவள். இன்று வரைக்கும் என் மனது அவரிடம்தான் இருக்கிறது. அவரை என் ஹீரோயின் என்று சொல்வதா, குரு என்று சொல்வதா என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அவரிடமும் நிறையப் பாடல்களை நான் பாடம் செய்திருக்கிறேன்.

செம்மங்குடி மாமாவுக்கு எண்பதாம் வயது நிறைவு விழாவின் போது எம்.எஸ். அம்மா கச்சேரி. நான் போயிருந்தேன். கிரீன் ரூமில் போய் அம்மாவைப் பார்த்தேன். 'வா என் கூட' என்றார் அம்மா. தம்புரா மீட்டச் சொன்னார். மேடை ஏறி அமர்ந்ததும், பின்னால் தம்புராவோடு அமர்ந்த என்னைத் திரும்பிப் பார்த்து "கூடப் பாடறியா?" என்றார். அன்று என்ன சிறப்பு என்றால் முக்கால்வாசி எனக்குத் தெரிந்த பாடல்களாகவே பாடினார். தெரியாத பாடலை நான் எப்படிப் பாட முடியும்? அதற்கும் வழி கிடைத்தது. எம்.எஸ். அம்மாவுக்கு ஒரு வழி உண்டு. ஒவ்வொரு சங்கதியையும் இரண்டு தடவை பாடுவார். ஆக, முதல்முறை கேட்டுவிட்டு இரண்டாவது முறை சேர்ந்து பாடுவேன். அதைப் பாடலின் போது கவனித்துவிட்ட அம்மா, நான் அப்படி இரண்டாவது தடவை பாடும்போது பின்னாடி என்னைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார். எம்.எஸ். அம்மாவைப் பற்றி இன்றைக்குப் பூராவும் பேசிக் கொண்டிருக்கலாம்.
அனுராதா கிருஷ்ணமூர்த்தி


கே: இசை விமர்சனம் குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: என்னைப் பொறுத்தவரைக்கும் 'விமர்சனம்' என்பதைச் செய்ய ஒரு பாடகரின் குருவுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. இன்றைக்குப் பத்திரிகைகளில் நிறைய விமர்சனங்கள் வருகின்றன. அந்த விமர்சனத்தில் குத்துவது மாதிரியும் எழுதுவார்கள், ஓகோவென்றும் எழுதுவார்கள். அதில் எவ்வளவு உண்மை என்பது பாடியவர்களுக்கு மட்டும்தான் தெரியும். எழுதப்பட்டதில் உண்மை இருந்தால் சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்ள வேண்டும். உண்மையில்லை என்றால் அந்தப் பேப்பரைத் தூக்கிப் போட்டுவிடலாம். நாம் கச்சேரியில் எவ்வளவு சிரத்தையாக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

பாலக்காடு மணி ஐயர் சொன்னது இது. You will never be an overnight success because of one concert. You will never be an overnight failure because of one concert. இது ஒரு டென்னிஸ் மேட்ச் கிடையாது. நாம சரியாகப் பாடவில்லை என்றால் அடுத்த வருடம் கூப்பிடமாட்டார்கள் என்று சிலர் சொல்லலாம். வேண்டாம். கூப்பிட வேண்டாம். ஒருவர் கூப்பிடுவதாலோ, அல்லது கூப்பிடாததாலோ ஒருவரது பயணம் நின்றுபோய் விடுவதில்லை. அவர்கள் கூப்பிடாததற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நாம் சரியாகப் பாடவில்லை என்பது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. அவர்களுக்குப் பல நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். இசையில் வணிகம் நுழைந்தால் அது வேறு மாதிரிதான். வியாபாரத்துக்காகப் பாடுகிறாரா இசைக்காகப் பாடுகிறாரா என்பதைப் பாடுபவர்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.

'அப்படின்னா நீ வீட்டிலேயே பாடிக்கலாமே! எதுக்கு மேடைக்கு வர?' என்ற கேள்வி வரும். பாடலாம். ஆனால், நானாகப் போய் வாய்ப்புக் கேட்கவில்லையே. அவர்கள் கூப்பிடுகின்றனர். அதனால் நாம் போய்ப் பாடுகிறோம். அவர்கள் எவ்வளவு ஆசையாகக் கூப்பிடுகிறார்களோ, அவ்வளவு பணிவோடு நாம் போய்ப் பாடுகிறோம். பாடும்போது, 'இன்னைக்கு நான் சகிக்க முடியாம பாடணும்' என்று நினைத்துக் கொண்டு யாரும் பாட உட்காருவதில்லை. 'சூப்பராக, ஓகோவென்று பாட வேண்டும்' என்று நினைத்துக் கொண்டுதான் உட்கார்கிறோம்.

ஆனால், அங்குதான் மேடையின் மேஜிக் நடக்கிறது. அது என்ன பண்ணும் என்று சொல்லமுடியாது. ஓகோவென்று ஒரு கச்சேரி இன்றைக்கு நடந்துவிட்டதா, அது உன்னால் மட்டுமே அல்ல. நிச்சயமாக ரசிகர்களாலும் அல்ல. அது சங்கீதம், பாடுபவர், கேட்பவர் என்று மூவருக்கும் இடையே ஒரேவித மனநிலையின் ஒருமைப்பாடு, ஒரேவித அலைவரிசை வாய்த்ததால் நிகழ்ந்திருக்கிறது. இது மூன்றும் எப்போது ஒன்றாகச் சேரும் என்றால், சங்கீதத்திடம், பாடுபவர், 'இன்னைக்கு ஒரு பிரட்டு பிரட்டிவிடலாம்' என்றில்லாமல், 'என்னன்னு தெரியாதும்மா.. நீதான் பாத்துக்கணும்' என்று டோட்டல் சரண்டர் உணர்வுடன் இருக்கும்போதும்; கேட்பவர்களும் 'அப்படி என்னதான் கலக்கிடறா, பார்க்கறேன் இன்னைக்கு' என்று வராமல், 'இன்னிக்கு நாம இதில் எனக்கு என்ன கிடைக்கப் போறது' என்ற உணர்வுடன் வரும்போதும் தான் நடக்கிறது.



பாடகர் முக்கியமில்லை. அவர்மூலம் வெளியாகும் சங்கீதம்தான் முக்கியம். அப்படி ஒரு உன்னத சங்கீதத்தைக் கேட்கவேண்டும் என்ற ஆசையில் ஆடியன்ஸ் வரும்போது, அந்த மேஜிக் நடக்கிறது. Because music is sound. Sound is vibration. பாடுபவருக்கும் சரி, அதைக் கேட்க வந்தவருக்கும் சரி, அவையடக்கம் வேண்டும். அதாவது ஒரு குழந்தைபோன்ற மனநிலை வேண்டும். கள்ளம், கபடம் இல்லாத குழந்தை மனப்பான்மையுடன் வந்து பாடும்போதும், அப்படியே கள்ளம், கபடம் இல்லாமல் கேட்கும்போதும் சங்கீதம் பாடுபவரிடமிருந்து அழகாகவும், கேட்பவருக்கும் அழகாகவும், இனிமையாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது சரியாக அமையவில்லை என்றால், ஒன்று அவர்களுக்குக் காதில் சரியாகப் போய் விழாது, அல்லது இவர்களுக்குச் சரியாகப் பாட வராது. Bottom line, surrender தான்.

இதெல்லாம் சரியாக அமைந்துவிட்டால் விமர்சனத்தைப் பற்றி ஒருவர் கவலைப்பட வேண்டியதில்லை. என்னதான் ஒருவர் விமர்சனம் எழுதினாலும், கேட்க வந்தவருக்கு ஜியோமெட்ரிகல், சயன்டிஃபிக் ஆக அந்தச் சங்கீதம் பிடித்திருந்தால், அவர் அந்தக் கோணத்தில்தான் சங்கீதத்தைக் கேட்பார்கள். அவர்களுக்கு கவிதை போரடிக்கும். விமர்சனமும் அதற்கேற்பத்தான் இருக்கும். சுருதியோடு இருக்கிறதா, தாளத்தோடு இருக்கிறதா என்பதைத்தான் நாம் அளவுகோலாக வைக்கலாம்.

ஆக, கச்சேரி விமர்சனம் பாரபட்சம் இல்லாமல் இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளலாம். This is not your last concert. This is not the end of the world. தவறு இருந்தால் அடுத்த கச்சேரியில் சரி செய்துவிட்டுப் போகிறோம். இன்னும் விவரமாகப் பாடுவோம். அவ்வளவுதான். நாமும் மனிதர்கள்தானே! அது மட்டுமல்ல, வீட்டில் இறுக்கமான மனோநிலையில் இருந்துவிட்டு பாடப்போனால் அது இசையில் பிரதிபலிக்கக் கூடும். அது இசையில் வரவே கூடாது என்றால், அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு, சாதகம் செய்திருக்க வேண்டும். அப்போது மட்டுமே அது சாத்தியம். நாம் மனிதர்கள். ஏதாவது ஒரு பிசகல் வரலாம். பெரிய குற்றமில்லை. "என்ன ஒரு ஆடியன்ஸ் இவங்க. இந்த ஆடியன்ஸுக்கு நான் என்ன பாடறது. என் பாட்டு லெவலுக்கு இல்லவே இல்லை" என்றெல்லாம் ஒரு பாடகர் நினைத்துக்கொண்டு பாடினால், அதுதான் க்ரைம். பாடிக்கொண்டே இருக்கும்போது ஒரு சின்னத் தவறு வந்ததோ, ஒரு சாகித்யம் மறந்ததோ, ஃபோகஸ் மிஸ் ஆனதோ, அந்த ராகத்தில் இருந்து சற்றே மாறிப் போய்விடுவதோ, அவையெல்லாம் க்ரைம் அல்ல. ஏனென்றால் யாரும் வேண்டுமென்று செய்வதில்லை.

விமர்சனத்தைப் பொறுத்தவரை, நமக்கு நாம் உண்மையாக இருந்தால், மற்றதெல்லாம் தானாக நடக்கும்.
பகவானின் சன்னிதியில்
அக்டோபர் 22, 2004ல் நான் செய்த கச்சேரி என் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒன்று. காரணம், அது, புட்டபர்த்தியில், பிரசாந்தி நிலையத்தில், பகவான் சத்ய சாயிபாபாவின் முன்னிலையில் நிகழ்ந்தது. அந்த வருஷ நவராத்திரி விழாவில், சரஸ்வதி பூஜை அன்று நான் அங்கு பாடினேன். பல விதங்களில் அந்தக் கச்சேரி எனக்கு மறக்க முடியாது. 2002ல்தான் அப்பா காலமாகியிருந்தார். மிகவும் மன அழுத்தத்தில் நான் இருந்தேன். அதனால் என் உடல்நிலை பாதித்தது. குரல் பாதிப்பு ஏற்பட்டது. ஆச்சரியமாகத்தான் பாபா முன்னால் பாடும் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. At the lowest point of my life, எல்லாரும் கைவிட்டு விட்ட தருணம். கைவிட்டு விட்டார்கள் என்பதைவிட யாருக்கும் எனக்கு எப்படி உதவுவது என்று தெரியவில்லை. ஆனால், பாபாவின் கருணை என்னிடம் வேலை செய்தது.

75,000 முதல் ஒரு லட்சம் பேர்வரை உள்ள அரங்கில், அதுவும் சுவாமிமுன் பாடும் வாய்ப்பு! எனக்கு என்மேல் நம்பிக்கை இருந்ததோ இல்லையோ, பகவானுக்கு என்மேல் நம்பிக்கை இருந்தது. கச்சேரி முடிந்து அவர் சொன்ன முதல் வார்த்தை, "எத்தனை நாள் வெயிட் பண்ணிண்டிருந்தேன்!" என்பதுதான். எனக்குப் பேச்சே வரவில்லை. கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. அப்போதே எனக்கு ஜன்ம சாபல்யம் ஆகிவிட்டது. இது சாதாரண வார்த்தை இல்லை.. அதை என் காதில் வாங்கிக்கொண்டேன். மேலும் சுவாமி சொன்னார், "எனக்கு 'எந்தரோ மகானுபாவுலு' ரொம்பப் பிடிக்கும். அதை முதல்லேயே பாடிட்டேளே. எனக்கு ரொம்ப சந்தோஷம்" என்றார். பகவானே அப்படிச் சொன்ன பிறகு எனக்கு வேறென்ன வேண்டும்!

நான் நமஸ்காரம் செய்ததும் என் தலையைத் தொட்டு ஆசிர்வாதம் செய்தார். எனக்கு என் தெய்வத்தை நேர்முகமாகப் பார்க்கவும் கிடைத்துவிட்டது. சம்பாஷணையும் கிடைத்துவிட்டது. ஸ்பரிசமும் கிடைத்து விட்டது. என் ஜன்மம் சாபல்யமாகிவிட்டது. இனிமேல் கச்சேரி பண்ணாவிட்டாலும் பரவாயில்லை என்று தோன்றியது.
அனுராதா கிருஷ்ணமூர்த்தி


கே: உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞர்கள் யார் யார்?
ப: என் அப்பா கே.வி.நாராயணசாமி, அம்மா பத்மா நாராயணசாமி, இவர்களுக்கு இணையாக எம்.எஸ். அம்மா. அரியக்குடி ராமாநுஜ ஐயங்கார். பருவங்கள் மாற மாறத்தான் இவரது வேல்யூ இன்னமும் பெரிதாகத் தெரிகிறது. அரியக்குடியின் die-hard fan நான். எம்.டி. ராமநாதனை ரொம்பப் பிடிக்கும். நடனம் ஆடுவாரே பாலசரஸ்வதி அவரது குரலை நீங்கள் கேட்டால் மயங்கிவிடுவீர்கள். எம்.எஸ்.ஸின் சங்கீதத்தில் என்னென்னவோ இருக்கிறது. அதை இன்னமும் யாரும் டிஸ்கவர் பண்ணி முடிக்கவில்லை. அவரது விசிறிகள் மற்றும் நான் உள்பட. அது ஒரு லைஃப் டைம் ஸ்டடி. வோலெட்டி வெங்கடேஸ்வரலு ரொம்பப் பிடிக்கும். டி.என். தியாகராஜன், ஜி.என். பாலசுப்பிரமணியன், வட இந்திய இசையில் உஸ்தாத் அமீர்கான், ராஜா பிரதர்ஸ், டி.வி. கலூட்கர், பண்டிட் ஜஸ்ராஜ், உஸ்தாத் ராஷித்கான், ஆஷா போன்ஸ்லே, எஸ்.பி.பி., பி. சுசீலா. இங்கிலீஷ் பாடகர் லானா டெல் ரே, இப்போது பாடுபவர்களில் பண்டுல ரமா, பாம்பே ஜெயஸ்ரீ, மல்லாடி பிரதர்ஸ் மற்றும் மல்லாடி பிரதர்ஸின் அப்பா சூரியபாபு, ஹைதராபாத் பிரதர்ஸ், பிருந்தா, விஸ்வா சார், செம்மங்குடி மாமா என்று நிறைய பேரைச் சொல்லலாம்.



கே: அமெரிக்காவில் வசிக்கும் வளரும் இசைக் கலைஞர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?
ப: சங்கீதத்தை ஆராதனை செய்பவர்களாகப் பார்த்து அவர்களிடம் கற்கலாம். முதலில் சங்கீதத்தை நேசிக்க வேண்டும். மேடையேறிவிட்டால், அந்தப் பெயர், புகழில் மயங்கிவிடுவோம். கற்பதை நிறுத்திவிடுவோம். இதை ஒரு குற்றம் என்று சொல்ல முடியாது. ஆனால், சங்கீதத்தைக் காதலிப்பவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும். குருவிடம் முழுமையாக சரண்டர் ஆகிவிட வேண்டும். "இரண்டு வருஷத்தில் மேடையேற வேண்டும்; அரங்கேற்றம் செய்ய வேண்டும்" என்கிற எண்ணத்தை முற்றிலுமாக விட்டுவிட வேண்டும்.

குரு விஸ்வா சார், "எங்க வீட்டு சங்கீதம்னா பெரிய கூட்டம் வராதும்மா. ஆனா, எங்ககிட்ட சங்கீதத்தைக் கத்துக்கிட்டவங்க யாருமே திண்டாடினது கிடையாது" என்பார். குழந்தை கற்றுக் கொள்வதைப் பார்க்கும்போதே, இங்கு ஏதோ சீரியஸாக நடக்கிறது, நான் இங்கே வியாபார நோக்கத்தைக் கொண்டு வரக்கூடாது என்ற எண்ணம் பெற்றோர்களுக்கு வேண்டும். நாளைக்கே மேடையில் உட்காரணும் என்பது சங்கீதத்தின் இலக்கல்ல. It should not be the goal for learning music. Learn it, because you love it. மேடை, அது தன்னால் வரட்டும். அதற்காகக் காத்திருக்கலாம்.

கணிதம் கற்கிறோம், அறிவியல் கற்கிறோம். மற்றப் பாடங்களைவிட சங்கீதத்தைப் புரிந்துகொள்வது கடினம். சங்கீதம் கற்கும்போது நீங்கள் மூன்று நான்கு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டிவரும். It trains you to multi-task. சங்கீதம் கற்பவருக்கு மற்றவையும் தானாகப் புரியத் தொடங்கும். ஏனென்றால், நீங்கள் Unmanifest soundஐ manifest செய்கிறீர்கள் அல்லவா, That is not a joke. அது உங்கள் காதுக்கு இனிமையாக இருப்பதால் உங்களுக்கு அதன் சிரமம் தெரியவில்லை. 60 மதிப்பெண் வாங்கும் குழந்தை, திடீரென்று 80 மார்க் வாங்க ஆரம்பிக்கும்.

இன்னும் ஒரு விஷயம், இதைப் பலர் ஏற்க மாட்டார்கள். ஆனால், மனதில் இருப்பதைச் சொல்கிறேன். சங்கீதம் கற்கும் காலத்தில், குறைந்தது ஐந்து வருடத்திற்காவது, எந்தவிதப் போட்டியிலும் ப்ங்கேற்கக் கூடாது. கற்கிற காலத்தில் யாருக்காவது பாடிக் காட்ட வேண்டுமென்று தோன்றினால், வார இறுதிப் பார்ட்டிக்கு நான்கு நண்பர்களை அழைத்து, அந்தக் குழந்தைக்கு என்ன பாட முடியுமோ அதைப் பாடச் சொல்லுங்கள்.

ஒரு யுனிவர்சியிடில் சேர்ந்து படிப்பதற்கு முன்னால் பன்னிரண்டாம் வகுப்புவரை படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதற்கு 12 வருடம் காத்திருக்கிறீர்கள் அல்லவா? சங்கீதத்திற்காக ஐந்து வருடமாவது காத்திருக்க முடியாதா? அப்படியே கச்சேரி செய்ய வேண்டி வந்தால், கற்றுக்கொள்ள ஆரம்பித்ததிலிருந்து குறைந்தது 10 வருஷம் காத்திருக்க வேண்டும்.

கே: நீங்கள் இசை கற்பிக்கிறீர்களா?
ப: ஆமாம். சமீப காலமாகச் சொல்லிக் கொடுத்து வருகிறேன். ஸ்கைப் மூலம் சொல்லிக் கொடுக்கிறேன். என் உறவினர் குழந்தைகள் மூவர் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லித் தருகிறேன். ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்குச் சொல்லித் தருகிறேன்.



கே: தொலைக்காட்சி அனுபவங்கள் குறித்துச் சில வார்த்தைகள்...
ப: எங்கள் வீட்டுக்கு எதிரில் கே.பி. சார் இருந்தார். அவருடைய உறவினர் இல்லத்தில் அப்பா கச்சேரி செய்திருக்கிறார். இன்னாருடைய மகள் என்றுதான் அவரிடம் நான் அறிமுகம் செய்துகொண்டேன். திரைப்பட, தொலைக்காட்சித் துறைகளுடன் என் குடும்பத்திற்கு அதுவரை எந்தத் தொடர்பும் இருந்ததில்லை.

ஒரு நாள் அவர் அலுவலகம் அழைத்தது. "பாடணும்" என்றதும், "ஐயோ நான் சினிமாவில் எல்லாம் பாடியது இல்லை" என்றேன். "இல்லை.. இது க்ளாஸிகல் மியூசிக் சப்ஜெக்ட். நீங்க பாடறது மட்டும் இல்ல. நடிக்கணும்" என்றனர். "எனக்கு அதெல்லாம் சரிவராது" என்றேன். "நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள்" என்றதும், "சரி, ரெண்டு நாள் டைம் கொடுங்கள்" என்றேன். பின்னர் கே.பி. சாரைச் சந்தித்தேன். "சார், நடிப்பு பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் கூப்பிட்டிருக்கிறது at your risk" என்று சொன்னேன். இளங்கன்று பயமறியாது என்ற மனநிலையில் நான் சென்றேன்.

போன பிறகுதான் தெரிந்தது, ஓர் இயக்குநர் மகானிடம் நான் வந்து சேர்ந்திருக்கிறேன் என்பது. அவர் இயக்குநர் சிகரம் இல்லை; இயக்குநர் மகான். அவ்வளவு அழகாக ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுப்பார். இதில் அழகு என்னவென்றால், அவர் எனக்கு அதிகம் சொல்லிக் கொடுத்ததே இல்லை. மற்றவர்களுக்கு அழகாச் சொல்லிக் கொடுப்பார். அதைப் பார்த்து எனக்கும் பாடமாகி விட்டது. அந்த அளவுக்கு எஃபெக்ட் போடுவார். அதில் கடுகளவு நாம் செய்தால் போதும், அவ்வளவு சந்தோஷப்படுவார். பேப்பரில் நான்கு வரிகள்தான் இருக்கும். ஆனால் அவர் அதை இம்ப்ரொவைஸ் செய்துகொண்டே போவார். அவர் சொன்னதை உள்வாங்கி நன்றாக நடித்தால், ரொம்ப எக்சைட் ஆயிடுவார். அந்த மாதிரி ஒரு லெஜண்ட்.

அது எங்கப்பா காலமான நேரம். நான் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தேன். என்னால் உட்கார்ந்து பாடவே முடியாது. அப்படியே தொண்டையைப் பிடிக்கும். நான் டாக்டரிடம் போய் எண்டோஸ்கோபியில் இருந்து எல்லாம் பார்த்தேன். எல்லாம் நார்மல். ஆனால், என்னால் பாட முடியாது. அப்போதுதான் இந்த 'சஹானா' ஆஃபர் வந்தது. சரி, மனசு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகட்டும் என்று நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால், அவருக்கு நான் டிப்ரஷனில் இருந்தது தெரியாது. எனக்கும் அவர் அந்த மாதிரி டயலாக் எழுதப் போகிறார் என்று தெரியாது. சஹானா சீரியலில் தனபாலன் என்று ஒரு கேரக்டர். அந்தக் கேரக்டருக்காக அவர் எழுதின டயலாக்ஸ் எல்லாமே they became therapy for me. அது என்னை டிப்ரஷனில் இருந்து வெளியே கொண்டுவந்தது. So, I will be ever grateful to him for that. அவரைப் பற்றி நாள் பூராவும் பேசிக்கொண்டே இருக்கலாம்.

விருதுகளும் அங்கீகாரங்களும்
* இசை விருதுகள்: மியூசிக் அகாதமி விருது, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் விருது, கிருஷ்ண கான சபா விருது, நாரத கான சபா விருது, டி.கே. பட்டம்மாள் விருது, பாரத் கலாசார் வழங்கிய 'யுவகலா பாரதி', பாபநாசம் சிவன் நூற்றாண்டு நினைவு விருது உட்படப் பல.

* சின்னத்திரை தொடர் விருதுகள்: மைலாப்பூர் அகாடமியின் சிறந்த குணச்சித்திர நடிகை விருது, திரைப்பட ரசிகர்கள் சங்கத்தின் சிறந்த நடிகை விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருது, சிறந்த நடிகைக்கான சின்னத்திரை விருது மற்றும் பல.

* திரைப்படங்கள்: அமிர்தம் (கிரீஷ் கர்னாட் உடன். இயக்கம்: வேதம் புதிது கண்ணன்); பொய் (இயக்கம்: கே. பாலசந்தர்), இரண்டு முகம், சரவணன் என்கிற சூர்யா மற்றும் பல.

* தொடர் நாடகங்கள்: சஹானா, நான் அவள் இல்லை, விளக்கு வெச்ச நேரத்துல, அத்திப் பூக்கள், அரசி, மூன்று முகம், தியாகம், திருப்பாவை மற்றும் பல.

* பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்: ராகம் சங்கீதம் (ராஜ் டி.வி.), ராகம், தாளம், பல்லவி (கேப்டன் டி.வி), உன் வாசம் என் நேசம் (ஜெயா டி.வி.) மற்றும் பல.


கே: தற்போது என்ன சீரியல், திரைப்படம் செய்கிறீர்கள்?
ப: இப்போது அதிகம் செய்வதில்லை. ஒரே ஒரு சீரியல்தான் செய்து கொண்டிருக்கிறேன். நான் மாஸ்டர்ஸ் இன் மியூசிக் செய்து கொண்டிருக்கிறேன். பிறகு Ph.D. செய்யும் திட்டம் இருக்கிறது. என் அப்பாவின் சங்கீதம் பற்றி ஆராய்ச்சி செய்ய இருக்கிறேன்.

அவரது இசையைப் போலவே தடையில்லாமல் பேசுகிறார் அனுராதா கிருஷணமூர்த்தி. உரையாடலுக்கு நன்றியும் அவரது முயற்சிகளுக்கு வாழ்த்தும் கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline