Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி | முன்னோடி
Tamil Unicode / English Search
முன்னோடி
பட்டணம் சுப்பிரமணிய ஐயர்
- பா.சு. ரமணன்|ஜனவரி 2020|
Share:
தஞ்சை சரபோஜி மன்னரின் அரசவையில் அரண்மனை வித்வானாக இருந்தவர் பரதம் பஞ்சநத சாஸ்திரிகள். அவருக்குப்பின் அவரது மகனான பரதம் வைத்தியநாத ஐயர் அரண்மனை வித்வானாக விளங்கினார். அவருக்கு மைந்தனாக, 1845ம் ஆண்டில் பிறந்தவர் சுப்பிரமணிய ஐயர். இளவயதிலேயே தந்தையை இழந்த இவர், தனது அத்தை வீட்டில் வளர்ந்தார். உறவினரான பரதம் கணபதி சாஸ்திரி, சுப்பிரமணிய ஐயருக்கு அடிப்படை இசைப்பயிற்சி சொல்லித் தந்தார். அவரைத் தொடர்ந்து கொத்தவாசல் வேங்கடராமையரிடம் சிலகாலம் இசை பயின்றார். அதன்பின் தியாகராஜரின் நேர்சீடர்களில் ஒருவரும், மகநோன்புச்சாவடி எனப்படும் மானம்புச்சாவடியில் வசித்து வந்தவருமான வேங்கடசுப்பையரை குருவாக அடைந்தார். அதுவே சுப்பிரமணிய ஐயரது வாழ்வின் திருப்புமுனை. குருவிடமிருந்து இசை நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். ஐயருக்கு அதீத நினைவாற்றல். ஒருமுறை கேட்டாலே மறக்காமல் நினைவில் நிறுத்திக் கொள்வார். அதையறிந்த குரு மகிழ்ந்து, தான் கற்ற அனைத்தையும் சீடருக்குப் போதித்தார். தினந்தோறும் விடியற்காலையில் எழுவது, குளத்துக்குச் சென்று கழுத்தளவு நீரில் நின்று பலமணி நேரம் சாதகம் செய்வது சுப்பிரமணிய ஐயரின் வழக்கம்.

ஒரு சமயம் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் கோயம்புத்தூர் ராகவ ஐயரின் கச்சேரியைக் கேட்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. அதுமுதல் 'பாடினால் அவரைப் போல் பாட வேண்டும்; இல்லாவிட்டால் பிராணனையே விட்டுவிட வேண்டும்' என்று மனதுள் உறுதிபூண்டார். பயிற்சியைத் தீவிரமாக்கினார். விடியற்காலையில் எழுவது, தியாகராஜரின் கிருதிகளில் குறைந்தது முப்பதையாவது பாடுவது, அதன் பின்னரே உணவு என்பதை வழக்கமாகக் கொண்டார். சில நாட்களில் பல்லவி, ஸ்வரம், சில நாட்களில் தானம், வர்ணங்கள் என்ற முறையைப் பின்பற்றினார். மட்டுமல்லாமல், இரவு சந்திரோதயம் ஆனபின்பு வெகுநேரம் விழித்திருந்து பாடுவதையும் வழக்கமாகக் கொண்டார். சில சமயம் சரியானபடி பிருகாக்கள் வராதபோது தன் தலையை கல்லிலும், தூணிலும் முட்டிக்கொள்வார். உண்ணாமல் பட்டினியாக இருப்பார். இவரது கடும் முயற்சியும், அயராத பயிற்சியும், அசுர சாதகமும் நாளடைவில் இவரைத் தேர்ந்த வித்வானாக்கின. ராகவ ஐயர் எப்படிப் பாடினாரோ அதே மாதிரிப் பாடும் வல்லமையையும், அதைவிடச் சிறப்பாகப் பாடும் ஆற்றலையும் அடைந்தார்.

கோயில் கச்சேரி, திருமணங்கள், வெளியூர் உற்சவங்கள் என்று நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வரத் துவங்கின. அர்ப்பணிப்புடன் பாடுவது, அங்க சேஷ்டைகள் இல்லாமல் இசையிலேயே பார்வையாளர்களின் கவனத்தை லயிக்க வைப்பது போன்ற இவரது தனித்துவத்தால் இவரது புகழ் பரவத் துவங்கியது. ஒரு சமயம் சென்னையில் கச்சேரி செய்யும் வாய்ப்பு இவருக்கு வந்தது. கேட்டோரால் மறக்கமுடியாத கச்சேரியாக அது அமைந்தது. இசைக் கலைஞர்களிடமிருந்தும், பிரபலங்களிடமிருந்தும் அவருக்கு வாழ்த்தும் வரவேற்பும் வரத் துவங்கின. தஞ்சை திருவையாற்றில் இருந்துகொண்டு பல இடங்களுக்கும் சென்று கச்சேரி செய்துவந்தார் சுப்பிரமணிய ஐயர். சென்னை ரசிகர்களும், பிரபலங்களும் அவரைச் சென்னைக்கு வந்து வசிக்குமாறு அழைத்தனர். தனது இருப்பிடத்தைத் திருவையாற்றிலிருந்து சென்னைக்கு மாற்றிக்கொண்டார். கிருஷ்ணப்ப நாயக்கன் அக்ரஹாரம், பெத்துநாயக்கன் பேட்டை அவரது முகவரியானது. சுமார் பத்தாண்டுக் காலம் அவர் சென்னையில் வசித்தார். அதுநாள்வரை திருவையாறு சுப்பிரமணிய ஐயராக இருந்த அவர், சென்னைப் பட்டணத்துக்குக் குடியேறியபின் 'பட்டணம்' சுப்பிரமணிய ஐயர் என்று அழைக்கப்படலானார். நாளடைவில் மீண்டும் அவர் திருவையாறுக்கே சென்றாலும் 'பட்டணம் சுப்பிரமணிய ஐயர்' என்ற பெயரே நிலைத்தது.

ஒரு சமயம் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் மைசூர் சென்றிருந்தார். திவானின் மாளிகையில் அவரது கச்சேரிக்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அந்த சமஸ்தானத்தின் ஆஸ்தான இசைக்கலைஞராக இருந்தவர் வீணை சாம்பையா. இசையில் தனக்கு இணையானவர் யாருமில்லை என்ற எண்ணம் கொண்டவர். சரியாகப் பாடாவிடில் அவர்கள் எப்பேர்ப்பட்ட வித்வானாக இருந்தாலும் அவமானப்படுத்தி விடுவார். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் கச்சேரிக்கு அவர் வருவதால் ஏதேனும் சர்ச்சை வருமோ என்று அஞ்சிய திவான், அவரை உள்ளே விடவேண்டாம் என்று காவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

கச்சேரியும் துவங்கி நடந்தது. அந்த வழியாகப் பல்லக்கில் போய்க்கொண்டிருந்த சாம்பையா, இனிமையான குரலைக் கேட்டு அதிசயித்தார். திவான் வீட்டில் யார் இவ்வாவு அற்புதமாகப் பாடுவது என வியந்து பல்லக்கை நிறுத்தி, காவலர்களின் தடுப்பை மீறி உள்ளே நுழைந்தார். பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் கச்சேரியில் தன்னை மறந்தார். உள்ளம் உருகினார். கச்சேரி முடிந்ததும் ஐயரை அழைத்து, தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். சமஸ்தான மன்னரிடம் சென்று பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் திறமையை எடுத்துரைத்தார். சமஸ்தானத்தில் ஐயரின் கச்சேரி நடக்க ஏற்பாடு செய்தார். இவ்வாறாகஐயரின் திறமையைப் பலரும் அறியக் காரணமானார் வீணை சாம்பையா.

மற்றொரு சமயம் மைசூர் சமஸ்தானத்தில் மஹாவைத்தியநாத சிவன், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் என இருவரது கச்சேரிகளுக்கும் ஏற்பாடாகியிருந்தது. முதலில் சிவன் வாசித்தார். அவரது தேவகானத்தில் அனைவரும் மயங்கி அமர்ந்திருந்தனர். அடுத்துக் கச்சேரி செய்யவந்தார் பட்டணம் சுப்பிரமணிய ஐயர். "சிவன்தான் அருமையாகப் பாடிவிட்டாரே, அவரை விஞ்சுமளவு இவர் எப்படிப் பாடப் போகிறாரோ?" என்று எல்லாரும் ஐயத்துடன் அமர்ந்திருந்தனர்.

ஐயர் தொடங்கினார். அவர் பாடப்பாட அதுவரை மெய்ம்மறந்து இருந்தவர்கள் இவர் பாடலைக் கேட்டு மனம் கிறங்கி, சொக்கிப் போயினர். நேரம் நீண்டு கொண்டிருந்தது. கச்சேரியோ தொடர்ந்து கொண்டிருந்தது.
சுப்பிரமணிய ஐயர், கச்சேரியின் நடுவே அவ்வப்போது பொடி போடுவது வழக்கம். அன்றும் வழக்கம் போலவே இடையில் முடிந்து வைத்திருந்த பொடி டப்பியைத் தேடினார். அதைக் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் மனம் சோருவதைக் கவனித்த மைசூர் சமஸ்தான மன்னர், தனது, தங்கப் பொடி டப்பியை பட்டணம் சுப்பிரமணிய ஐயருக்குச் சன்மானமாக அளித்து கச்சேரியைத் தொடரச் சொன்னார். மேலும் உற்சாசமாகக் கச்சேரி செய்தார் ஐயர். அவர் கச்சேரியை நிறைவுசெய்த பின்னர் தான் கேட்போரால் இயல்புலகிற்குத் திரும்ப முடிந்தது.

மைசூர் மட்டுமல்லாமல் திருவாங்கூர், விஜயநகரம், ராமநாதபுரம் எனப் பல சமஸ்தானங்களால் ஐயர் கௌரவிக்கப்பட்டார். ராமநாதபுர மன்னர் பாஸ்கரசேதுபதி, திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள், விஜயநகர மன்னர் ஆனந்த கஜபதி எனப் பலர் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் இசைக்குத் தீவிர ரசிகர்கள். தங்கத் தோடா, பொற்காசுகள், சால்வை, பணமுடிப்பு எனப் பல பரிசுகளை அவரது இசை மேதைமைக்காக அளித்துக் கௌரவித்தனர். மைசூர், திருவாங்கூர், விஜயநகரம், ராமநாதபுர சமஸ்தானங்களின் ஆஸ்தான வித்வானாகவும் பட்டணம் ஐயர் இருந்தார்.

பேகடா பாடுவதில் மிகத் தேர்ந்தவர் ஐயர். ஒரு சமயம் மைசூர் சமஸ்தானத்தில் தொடர்ந்து மூன்று நாட்கள் பேகடாவில் கச்சேரிகள் செய்தார். முதல்நாள் பேகடா ராக ஆலாபனை; இரண்டாம் நாள் 'தானம்'; மூன்றாம் நாள் பல்லவியும் ஸ்வரமும் பாடிக் கச்சேரியை நிறைவு செய்தார். அதுமுதல் 'பேகடா' சுப்பிரமணிய ஐயர் என்றும் அழைக்கப்படலானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் நன்கு அறிந்தவர் பட்டணம் சுப்பிரமணிய ஐயர். கச்சேரிதோறும் ஸ்ரீ தியாகராஜரின் கிருதிகளைப் பாடிப் பிரபலப்படுத்தியவர்களுள் முக்கியமானவர் இவர். ஸ்ரீ தியாகையரைப் போலவே இவரும் பற்பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். 'வெங்கடேசா' என்பது இவரது முத்திரையாகும். பஞ்சநதீஸ பாஹிமாம், மரிவேர திக் எவரோ, எவரி போதனாவினி, வரமுலொசகி, நிஜதாஸ வரதா போன்ற இவரது கீர்த்தனைகள் மிகப் பிரபலம். இன்றளவும் கர்நாடக இசைமேடைகளில் இவை பாடப்பட்டு வருகின்றன. இவரது புகழ்பெற்ற "திரனா தீம் தீம்த திரனா" என்ற செஞ்சுருட்டி ராகத் தில்லானாவைக் கேட்டு மயங்கிய மைசூர் சமஸ்தான மன்னர், ஐயரின் இரண்டு கைகளுக்கும் இரண்டு தங்கத் தோடாக்களை அணிவித்துச் சிறப்பித்தார். இந்தத் தில்லானாவைக் கேட்டு மனம் மயங்கிய திருக்கோடிக்காவல் பிடில் கிருஷ்ணையர் தனது கச்சேரிகளில் இதனை வாசித்து நிறைவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

அக்காலத்தில் கர்நாடக சங்கீதம் கிளைத்துப் பரவ மிகமுக்கியக் காரணமாக அமைந்தவர்களில் பட்டணம் சுப்பிரமணிய ஐயர் முக்கியமானவர். பூச்சி ஸ்ரீனிவாச ஐயங்கார், பொப்பிலி விஸ்வநாத சாஸ்திரி, பாலக்காடு பரமேச்வர ஐயர், நாராயணசாமி ஐயர், மைசூர் வாசுதேவாச்சார், குருசாமி ஐயர், டைகர் வரதாச்சாரியார், காகிநாடா கிருஷ்ணசாமி ஐயர், பிடில் கிருஷ்ணசாமி ஐயர், வீணை தனம்மாள் போன்ற பலர் இவரது சீடர்கள். திருக்கோடிகாவல் கிருஷ்ணையர் (பிடில்), துகாராம் (மிருதங்கம்), பிடில் சேஷையர் உள்ளிட்ட பிரபல வித்வான்கள் இவருக்குப் பக்கவாத்தியம் வாசித்துள்ளனர்.

வர்ணம், கீர்த்தனை, தில்லானா, பல்லவி, ஜாவளி என நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்திருக்கிறார் பட்டணம் சுப்பிரமணிய ஐயர். இவர் ஜூலை 31, 1902ல், திருவையாற்றில் இறையடி சேர்ந்தார். இவர் மறைந்தாலும் இவர் படைத்த கீர்த்தனைகள் மறையவில்லை. அவை இன்றளவும் மேடைகளில் ஒலித்து வருகின்றன. வானொலியில் அவர் கீர்த்தனைகள் ஒலிக்காத நாளில்லை என்னுமளவுக்குத் தினந்தோறும் ஒலிபரப்பாகி அவரது பெருமையை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.

பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline