Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம் | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
தரிசனம்
- ரா. கணபதி|ஜனவரி 2021|
Share:
"கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை. தலைக்குமேலே வேலை கிடக்கு. இந்தப் பிள்ளையானா என்னமோ பி.ஏ. பரிட்சை தட்டுக் கெட்டுப் போறாப்பலே பாட புஸ்தகத்தை வெச்சுண்டு ஒக்காந்திருக்கே!" என்று அலுத்துக்கொண்டாள் கௌரி.

"இதுதான் இந்த வீட்லே உத்யோகம். எப்பப் பார்த்தாலும் உனக்கு எதுக்காவது பரபரத்துக் கொண்டே இருக்கணும். இப்ப அவன் பாடம் படிக்கிறதுனாலே என்ன கெட்டுப்போச்சு? இன்னிக்கு அவனுக்கு வீக்லி டெஸ்ட். அதை விட்டுட்டு அவன் என்ன செய்யணும்ங்கிறே?" என்று கடிந்துகொண்டான் கிருஷ்ணன்.

"சரி. அப்பாவும் பிள்ளையும் எக்கேடு கெட்டுப் போங்கோ! கோவில்லே அத்தனாம் பெரிய அபிஷேகத்தை வெச்சுண்டு இவன் வீக்லி டெஸ்டுக்குப் போவான்னு நான் கண்டேனா? ஸட்டுப் புட்டுன்னு குளிச்சுட்டு அபிஷேகக் காரியத்துக்கு ஏதாவது ஒத்தாசை செய்யப்படாதான்னு தோணித்து. சொன்னேன்" என்றாள் கௌரி

"அபிஷேகத்துக்கும் அர்ச்சனைக்கும் சகலமும் கோயில்லேயே ஸித்தமா வெச்சுண்டிருப்பா. பால், தயிர், சந்தனம், பூ, நைவேத்தியம் எல்லாம் தேவஸ்தானத்திலேயே ரெடி பண்ணிடறா, நாம நேரத்துக்குப் போய் நின்னாப் போறும். நீ இறக்கைக் கட்டிண்டு பறக்கவே வேண்டாம்" என்றான் கிருஷ்ணன்.

இந்த வாதப் பிரதிவாதம் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் குழந்தை சாயி படித்துக் கொண்டிருந்தான்.

"விவேகானந்தர் குழந்தையாக இருந்தபோது ஒருமுறை தமது பள்ளிக்கூட விளையாட்டு விழாவில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார். வெகுநன்றாக ஓடக்கூடிய அவர்தான் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். அதற்கேற்றாற்போல் அவரும் பந்தயத்தில் கலந்துகொண்ட மற்ற மாணவர்களுக்கு மிகவும் முன்பு சென்றுவிட்டார். ஆனால் மைதானத்தை ஒரு சுற்று சுற்றிக்கொண்டு பந்தயம் தொடங்கிய இடத்துக்கு அவர் திரும்பி வரும் சமயத்தில் திடீரென அவரது வேகம் குறைந்தது. அவருக்குப் பின் இரண்டாவதாக வந்து கொண்டிருந்த மாணவன் அவரை நெருங்கிவிட்டான். அப்போதும் அவரது வேகம் அதிகரிக்கவில்லை; மாறாகக் குறையவே செய்தது. அம்மாணவன் அவரை முந்திக்கொண்டு விட்டான். பந்தயக் குறிக்கோளை நெருங்கியும் விட்டான். ஆனால் பின்தங்கிய விவேகானந்தர் முன்னுக்கு வரவே இல்லை. கடைசியில் அந்த இன்னொரு மாணவனே ஓட்டப் பந்தயத்தில் வெற்றி அடைந்து பரிசும் பெற்றான்.

ஓட்டத்தில் புலியான விவேகானந்தர் ஏன் அப்படி பரிசைத் தவறவிட்டார் என்று அவரை அவரது நண்பர்கள் கேட்டனர். அதற்கு விவேகானந்தர், 'பரிசை எங்கே தவறவிட்டேன்? நானே பெறுவதைவிட அந்தப் பையன் பரிசைப் பெறுவதில் அதிக மகிழ்ச்சி காண்கிறேன். அவனுக்காகவே நான் விட்டுக்கொடுத்து, ஓட்டத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். நான் பரிசு பெற்றிருந்தால் எனக்கு மட்டும் மகிழ்ச்சி கிடைத்திருக்கும். இப்போது அவன் பெற்றதாலோ அவனுக்கும் மகிழ்ச்சி; அவனைவிட அதிகமாக எனக்கும் மகிழ்ச்சி'" என்றார்.

குழந்தை ஸாயி ராகம் போட்டு உணர்ச்சியோடு படித்த பாடம் தந்தை கிருஷ்ணனின் காதில் பாய்ந்தது.

விவேகானந்தரைப் பற்றி இதுவரையில் கிருஷ்ணன் கேள்விப்பட்டிராத சம்பவம் அது. பாடப்புத்தக ஆசிரியர் ஒருவேளை தமது கற்பனையைத்தான் விவேகானந்தர் மீது சார்ந்திருக்கச் செய்தாரோ என்னவோ? எப்படியாயினும் தியாகநிதியான விவேகானந்தருக்கு அளவெடுத்துத் தைத்தாற்போல் மிகவும் பொருந்தியது அந்தக் கதை.

இதைப்பற்றி வியந்த கிருஷ்ணனுக்கு இன்னொரு ஓட்டப்பந்தயக் கதையும் நினைவுக்கு வந்தது. அது மிகப்பழைய கதை. உலகைச் சுற்றி ஓட்டப்பந்தயம் நடத்தி அதில் வெற்றி பெறுவோர்க்கு மாதுளங்கனி தருவதாகப் பரமேசுவரன் சொன்ன கதை அது. விக்னேஸ்வரன் தாய், தந்தையரையே பிரபஞ்சமாகக் கருதிப் பிரதட்சிணம் செய்து கனியைப் பெற்றான். ஏறு மயிலேறி அண்டத்தை வலம்வந்த கந்தன் தோல்வியுற்று, தோல்வியினால் கோபமுற்று ஆண்டியாகிப் பழனி மலையை அடைந்தான்.

'விவேகானந்தர் விலகி நின்று வெற்றியைப் பிறருக்குத் தந்து மகிழ, வேலனோ விநாயகன் வெற்றி பெற்றதில் கோபமுறுவானேன்?' - கிருஷ்ணனுக்குப் புரியவில்லை.

இன்று அந்த வேலனுக்குத்தான் அவன் விமரிசையாக அபிஷேகம் செய்யப் போகிறான். தனது பொருளாதார நிலையை நினைக்காமல் ஒரு பெரும் தொகையைக் கட்டணம் செலுத்திச் சுவாமிக்கு அபிஷேகம் செய்கிறான். அந்த அபிஷேகத்துக்குப் பிறகு சுவாமிக்கு விசுவரூப அலங்காரம். அது அந்தக் கோயிலின் தனிச்சிறப்பு. பொழுது விடிந்ததும் 'விச்வன்' என்ற விழிப்பு மூர்த்தியாக இறைவனைக் கண்டு 'விச்வரூப தரிசனம்' என்று எல்லாக் கோயில்களிலும் செய்வது போன்றதல்ல இந்தக் கோயிலின் அபிஷேக விசுவரூபம். பெரிய ஆக்ருதியாக மூர்த்தியைக் காட்டும் விசுவரூபம் இது.

விசுவரூப அலங்காரம் பெறும் சுப்பிரமணிய மூர்த்தி சிறியதுதான். ஆனால் அதன் பாதத்தின் அடியிலுள்ள யந்திரத்தை மறைத்துத் தழையத் தழைய ஆடை உடுத்தியும். சிரசில் மிகப்பெரிய மகுடம் சூட்டியும் அந்தச் சிறிய மூர்த்தியையே விசுவரூபம் எடுத்ததுபோல் பெரிதாக அலங்கரித்து விடுவார்கள். இரண்டே கைகள் கொண்ட மூர்த்திக்குப் பெரிதாகப் பத்து வெள்ளிக் கைகளையும் சார்த்தி விடுவார்கள். அதுவும் எவ்வாறோ அந்தச் சிறிய மூர்த்திக்கு அற்புதமாகப் பொருந்தும். 'ஸிம்மெற்றியும்' 'ப்ரபோர்ஷனும்' நுணுக்கமாகப் பார்ப்பவர்களுக்கும் கூடச் சிறிய பிம்பத்தைப் பெரிதுபடுத்தியதுபோல் தோன்றாமல். இயல்பாகவே அந்த விக்கிரகம் அவ்வளவு பெரிதாகத் தோன்றும். அப்படி ஓர் அற்புதம் அந்த ஊர் விசுவரூப சேவை.

ஐயனுக்கு அந்தச் சேவை செய்து வைப்பதில் கிருஷ்ணனுக்கு ரொம்பவும் பெருமை. ஆனால் இப்போது குழந்தை ஸாயி விவேகானந்தர் பாடம் படித்தவுடன். முருகனின் ஓட்டப்பந்தயத் தோல்வி கிருஷ்ணனின் சிந்தனையில் இடறிற்று.

வைராக்கியத்தினால் துறவியாகப் போவதுதான் விசேஷம். பழம் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் அல்லவா ஸ்வாமி பழனியாண்டித் துறவியானான்? இச்சம்பவத்தையும் விவேகானந்தர் விலகி நின்று இன்னொருவனுக்கு வெற்றி வாங்கித் தந்ததையும் கிருஷ்ணனின் அறிவு எடைபோட்டுப் பார்த்தது.

கத்தரிக்காயை நிறுத்துப் பார்க்கும் தராசில் யானையை எடை போட்டால் தராசுதான் முறியும். இது கிருஷ்ணனுக்குத் தெரிந்திருந்தாலும் கிருஷ்ணனின் அறிவுத் தராசு யானையை எடை போடத்தான் செய்தது.

கௌரியின் குரல் அந்த எண்ண ஓட்டத்துக்குக் கரை கட்டியது.

"சொன்னால் நான் பொல்லாதவள், அவசரக்காரி, பரபரப்புக்காரின்னு பேர் வைப்பேள். இருந்தாலும் சொல்லாம இருக்க முடியறதா? கோவில்லையே எல்லாம் அரேஞ்ச் பண்றான்னுதான் பங்கஜத்து ஆத்துலே எல்லாரும் கையை வீசிண்டு போனா. அப்புறம் அங்கே போனா குருக்கள், 'அபிஷேக சாமான்தான் எங்க பொறுப்பு. நைவேத்தியம் - தினைப் பொங்கல், சுண்டல் இதெல்லாம் நீங்க பண்ணிக்கொண்டு வரல்லியா?'ன்னாராம். நீங்க போகாட்டாலும், இந்த ஸாயியையாவது குருக்கள் வீட்டுக்கு அனுப்பி விவரமாத் தெரிஞ்சுண்டு வரப்படாதா?" என்றாள் கௌரி.

"எல்லாம் சாங்கோபாங்கமாக முன்னாடியே கேட்டுண்டாச்சு. அபிஷேகம், அர்ச்சனை, நைவேத்தியம் - எல்லாத்துக்கும் ஸப்ஜாடா கோயில்லேயே ஏற்பாடு பண்ணிடறா. நாம பத்து மணிக்கு அங்கே போய் நின்னாப் போறும். அப்படியே போற வழியிலே ஸாயியை ஸ்கூல்லே விட்டுடலாம்." என்றான் கிருஷ்ணன்.

"ஏன்னா! இந்த ஒரு வீக்லி டெஸ்டுக்கு அவன் போகாட்டாத்தான் என்ன? ஆண்டவனுக்கு இப்பேர்ப்பட்ட அபிஷேகம் பார்க்கக் கொடுத்து வைக்க வேண்டாமா?" என்று கௌரி சொன்னாள்.

"அவன் பரிட்சைக்குப் போகாம இருக்கிறதிலே எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்லை. உன் பிள்ளைதான் பிடிவாதம் பிடிக்கிறான். ஏண்டா பயலே. இது வெறும் கிளாஸ் டெஸ்ட்தானே? நான் வாத்தியார்கிட்டே சொல்றேன். நீ கோயிலுக்கு வாயேன்" என்றான் கிருஷ்ணன்.

"மாட்டேம்பா" என்று சிணுங்கினான் ஸாயி.

"இந்த டெஸ்ட் எழுதாட்டா எனக்கு பிரைஸ் கிடைக்காமப் போயிடும்பா" என்றான்.

"ஏண்டா, முழுப் பரிட்சைக்குத்தானே பிரைஸ் கொடுப்பா? கிளாஸ் டெஸ்டுக்கா பிரைஸ் தருவா? புளுகாம சுவாமி தரிசனத்துக்கு வா. முழுப்பரிட்சையிலே முதல்லே வரத்துக்கு ஆண்டவன் அநுக்கிரகம் பண்ணுவான்" என்றாள் கௌரி.

"நான் ஒண்ணும் புளுகல்லே அம்மா!" என்ற குழந்தையின் முகம் ஜிவ்வென்று சிவந்தது. "நீ வேணுமானா ஸ்கூல்லே விசாரிச்சுப் பாரு. வருஷம் முழுக்கப் படிக்காம விளையாடிண்டு இருந்துட்டு. முழுப் பரிட்சையின்போது மட்டும் கடம் அடிச்சு எல்லாரும் பாஸ் பண்ணிடறாங்கறத்துக்காக. எல்லா வீக்லி டெஸ்டுமாச் சேர்த்துப் பிரைஸ் வெச்சிருக்கா. இதுதான் இந்த வருஷம் கடைசி டெஸ்ட். இதுவரை நடந்த முப்பது டெஸ்டிலே, நான் பதினைஞ்சுலே ஃப்ர்ஸ்ட். பாக்கிப் பதினைஞ்சுலே முரளி ஃப்ர்ஸ்ட். இதுலே நான் ஃப்ர்ஸ்ட் வந்தாத்தான் பிரைஸ் எனக்கு வரும். இல்லாட்டா முரளி அடிச்சுண்டு போயிடுவான்" என்றான்.

அதன் பிறகு கௌரியோ, கிருஷ்ணனோ ஸாயியை வற்புறுத்தவில்லை.

அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அந்தச் சிறிது காலத்துக்கு அங்கு திரண்டிருந்த பக்தர்களின் மனத்திலிருந்த அழுக்குகளையெல்லாம் அழித்துவிட்டுப் பரம சுத்தமாகக் குளிப்பாட்டிவிட்டாற் போலிருந்தது. 'முருகா முருகா' என்ற கோஷம் சந்நிதியெங்கும் தாபத்துடன் குமுறிக் கொண்டிருந்தது.

விசுவரூபம் அலங்காரம் செய்வதற்காகத் திரை போட்டிருந்தார்கள். அலங்காரத்துக்கு நீண்டநேரம் ஆனபடியால், சுவாமிக்கு வெகு அருகில் புழுக்கத்தில் நின்று கொண்டிருந்த கிருஷ்ணன் சிறிது காற்றாட இருந்துவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.

கர்ப்பகிருஹத்திலிருந்து வெளியே வந்ததும். வியர்த்திருந்த உடலில் காற்றுப் பட்டுச் சில்லென்று பரமசுகமாக இருந்தது. இருந்தாலும் அவனுடைய மனப்புழுக்கம் மட்டும் நீங்கவில்லை. 'அண்ணனுக்குக் கனி கிடைத்ததில் முருகன் ஏன் அவ்வளவு ஆத்திரமடைந்து ஆண்டியாக வேண்டும்? ஆசை மங்கித்தான் துறவு பிறக்க வேண்டுமேயன்றி. ஆசாபங்கத்தின் மீது பிறக்கும் துறவு துறவாகுமா?'

"ஆண்டவனுக்கு அபிஷேகம் பண்றது நீங்கதானுங்களா?" என்று அவனைக் கேட்டார் பக்தர் ஒருவர்.

"ஆமாம்!" என்றான் கிருஷ்ணன்.

"பாக்கியசாலி! எம்பெருமானையே குளிரப் பண்ணுறீங்களே!" என்றார் பக்தர்.

கிருஷ்ணனின் 'மூட்' வேறு விதமாக இருந்ததல்லவா? இதுவும் ஒரு விதத்திலே அஞ்ஞானம்தான். "நான் செய்யற அல்ப அபிஷேகத்தினாலேயும் அலங்காரத்திலேயும் தானா ஆண்டவன் மனசு குளிரணும்? அவனுக்கு இது என்ன பொருட்டு?" என்று வாய் வேதாந்தம் பேசினான்.

"அதென்னங்க, அப்படிச் சொல்லிட்டீங்க? இப்படி அபிஷேகமும் அலங்காரமும் பண்ணாத்தானுங்களே நம்ப மனம் குளிர்ந்து போறது? அதுதான் அவனுக்கும் குளிர்ச்சி. அலங்காரம் பண்ணிக்கிறதிலே அவனுக்குச் சந்தோஷம் இல்லைதானுங்க. ஆனா அந்த அலங்காரத்தைப் பார்த்து நாம படற சந்தோஷத்துலே அவனே இருக்கான்" என்றார் பக்தர்.

தொடர்ந்து கூறினார் : "ஆண்டவன் விசுவரூபம் எடுத்ததுகூடத் தன் பெருமையைக் காட்டிக்கிறதுக்காக இல்லீங்க. அந்தப் பெருமையைப் பார்த்தவங்களுக்கு அறிவு தெளிஞ்சுதுங்க. அந்தத் தெளிவுதான் அவனுடைய உண்மையான விசுவரூபம். அவன் கருணையைப் பாருங்க, முதல்லே அவனைப் புரிஞ்சுக்காம சண்டைக்கு வந்த தேவர்களுக்கு விசுவரூபம் காட்டினான். அப்புறம் தன் விரோதியான சூரனுக்கும் விசுவரூபம் காட்டினான். கிருஷ்ணன் கதையைப் பார்த்தாலும். பக்தன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டறதுக்கு முன்னாடியே, விரோதி துரியோதனனுக்குத்தான் முதல்லே விசுவரூப தரிசனம் கெடச்சுது!"
கிருஷ்ணனுக்கு உள்ளம் குறுகுறுத்தது. முருகனின் துறவில் சந்தேகிக்கிற தனக்கு அவனது விசுவரூப தரிசனம்!

ஆலாட்சமணி 'டாண் டாண்' என்று ஒலித்தது. சிறிய மணிகள் பல 'கிணிகிணி' என்று நாதம் எழுப்பின.

திரை விலகியது.

அலங்காரம் பெற்ற சுவாமிக்கு இதோ, விசுவரூப தீபாராதனை நடக்கிறது.

"கிருஷ்ணன் ஸார்! சமயம் பார்த்து எங்கே போனேள்? முன்னாடி வாங்கோ. வாங்கோ" என்று கர்ப்பக்கிருஹத்திலிருந்து பெருங்குரலெடுத்துக் கூவினார் குருக்கள்.

கிருஷ்ணன் முண்டியடித்துக் கொண்டு முன்னேறப் பார்த்தான். அதற்குள் கருவறைக்குள் வேறு கூட்டம் புகுந்துவிட்டது. தான் அங்கு போவதற்கில்லை என்பதால் துவாரபாலகரை ஒட்டி, கருவறை வாசலருகே படியின்மீது நின்றுவிட்டான் கிருஷ்ணன்.

அது ஸேவார்த்திகளுக்கெல்லாம் தரிசனத்தைத் தடுக்கும் இடைஞ்சலான இடம்.

"சாமி, சாமி மறைக்குது, சித்தே விலகிக்கோங்கோ சாமி!" என்று பல குரல்கள் பரபரத்தன.

கிருஷ்ணனின் வாழ்வில் அது ஒரு மகத்தான விநாடி. அவனது அத்தனை ஆண்டு வாழ்வையும்விடப் பெரிது அந்த ஒரு விநாடி. தன் சக்திக்கும் மீறித் திரவியம் செலவிட்டு அவன் ஆண்டவனுக்கு விசுவரூபாலங்காரம் செய்திருக்கிறான். அந்த தரிசனத்துக்கான பெரிய ஹாரத்தியை அவன் காணச் செல்கையில் அவனை விலகியிருக்கும்படி குரல்கள் எழும்புகின்றன! 'சற்று விலகியிரும் பிள்ளாய்' என்ற பாடல் கிருஷ்ணன் நினைவில் வந்தது. விவேகானந்தர் விலகியதும் உணர்ச்சி வெள்ளமாக மனதில் நிரம்பியது. அவ்வளவுதான்! அதே விநாடி ஒதுங்குவதன் பெருமையை அவன் உணர்ந்துவிட்டான். ஸ்வாமிக்கும் பக்தர்களுக்கும் இடையே இருந்து விலகி, தான் இருந்த இடத்திலிருந்து அப்படியே ஒரு திரும்பு திரும்பி, துவாரபாலகர் மீது சாய்ந்துகொண்டான்.

எல்லோரும் ஆண்டவனின் விசுவரூபத்தை - விசுவரூபம் பெறும் கர்ப்பூர தீபாராதனையை கண்டனர். விசுவரூபத்துக்கு ஏற்பாடு செய்தவனோ, ஆண்டவனைக் காணவில்லை. ஆண்டவனைக் காணும் அடியார்களைக் காண்கிறான். கர்ப்பக்கிருஹ வாசற்படியில் கால் நுனியை மட்டும் ஊன்றிக்கொண்டு துவார பாலகர்மீது தன் உடலைச் சாய்த்து, அவன் மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யச் சௌகரியம் செய்து விட்டான்! தன் தரிசனத்தைத் தியாகம் செய்துவிட்டான்!

அப்படியானால் அவன் விசுவரூப தரிசனம் பார்க்கத்தான் இல்லையா?

அதெப்படி அவ்வாறு சொல்ல முடியும்?

அவனது உள்ளத்தில் இப்போது நிரம்பியிருக்கிறதே, பேரானந்தம் - விசுவரூபம் காணாவிடில் அந்த ஆனந்தம் எப்படி உண்டாக முடியும்?

ஆம், அவன் விசுவரூபம் கண்டுவிட்டான். ஆண்டவனின் விசுவரூபத்தைக் காண்கிறவர்களைக் காண்கையில் அவனும் அந்த அற்புத தரிசனம் பெற்றுவிட்டான்! அவர்கள்தானே இறைவனின் விசுவரூபம்? அவர்கள் எத்தனை பேருடைய முகத்திலும் அப்போது மலர்ந்திருந்த மகிழ்ச்சியே தீபாராதனையாக இருந்தது!

தீபமா? தீபம் சுட அல்லவா செய்யும்? இங்கோ குளிர்ச்சியாக இருக்கிறதே! மற்றவர் மனம் குளிர்வதிலேயே கிருஷ்ணனின் மனம் குளிர்ந்தது. அதே சமயத்தில், 'நம்ப மனம் குளிர்ந்து போறதுலேதான் அவனுக்கும் மனம் குளிருது' என்று பக்தர் சொன்னது நினைவில் ரீங்காரமிட்டது.

'ஆஹா! அப்படியானால் முருகனும் இப்போது என்னைப் போலவே இந்தப் பக்தர்களிடம் விசுவரூப தரிசனம் கண்டுகொண்டிருப்பானா? அவன் விசுவரூப தரிசனம் தருவதாக இவர்கள் காண, அவனோ இவர்களிடமே விசுவரூப தரிசனம் கண்டுகொண்டிருப்பானோ?'

அந்த ஒரு வினாடியில் புரியாத புதிர்களெல்லாம் மடலவிழ்ந்து விழுந்தன.

ஆம், முருகன் விசுவரூப தரிசனம் அளித்தவன் மட்டுமல்ல. விசுவரூப தரிசனம் செய்தவனும் ஆவான். கனிக்காக உலகை வலம் வந்தானே, அப்போது அந்த விசுவரூப தரிசனத்தைத்தான் அவன் செய்தான்.

ஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவனை ரசிக்க அடியார் என்று இருக்கிறார்கள். கலைஞன் என்று ஒருவன் இருந்தால் ரசிகன் என்று ஒருவன் இருக்கிறான். இருவரும் சேர்ந்தால்தான் முழுமை, இறைவன் இரண்டுமாக முடியும்.

விசுவரூபமாகவே இருந்த வேலன், உலகைப் பிரதக்ஷிணம் செய்து விசுவரூபத்தைக் காணும் ரசிகனும் ஆனான்! அந்தத் தரிசனம் ஆனபின் கயிலை வந்து தாய், தந்தையைக் கண்டான்

விசுவத்துக்குள் அவர்களைக் கண்டு வலம்வந்த வேலன், விசுவத்தை அவர்களுக்குள் கண்ட வேழமுகனைப் பார்த்தான். அவர்களது அன்பு முழுவதும் அவனிடமே பூரணமாகச் செல்லவேண்டும் என்பதால் அதற்குத் தான் ஒரு போட்டியாக இராமல் விலகினான். மற்றவர்கள் தெய்வத்துக்காக உலகைத் தியாகம் செய்து துறவியாவார்கள். தெய்வ முருகனோ மகாதேவனையும், தேவியையுமே தியாகம் செய்துவிட்டு உலகுக்கு வந்து துறவியாகிவிட்டான்.!

கனியை ருசிக்கும் ரசிகனாக ஆனார் கணநாதன். கனியாகவே ஆகி. 'பழம் நீ' எனப் பரமனால் பாராட்டப்பட்டான் முருகன்.

இதோ, இங்கே பக்தர்கள் விசுவரூப தரிசனம் செய்கிறார்கள். உள்ளே கர்ப்பக்கிருஹத்தில் விசுவரூப அலங்காரம் பெற்ற இறைவன் அந்தப் பக்தர்களைப் பார்க்கிறான். இறைவனைப் போலவே பக்தர்களைப் பார்க்கும் கிருஷ்ணன், விசுவரூப ரசிகர்களை ரசிப்பதில் தானே விசுவரூபமானது போல் ஆனந்தமயமாகிவிட்டான்.

"அடடா, கண்ட கண்ட பேய்க்கூட்டத்துக்காக நீங்க போய் ஒதுங்கிட்டேளே! இந்தாங்கோ, விபூதி!" என்று கூறியபடி குருக்கள் கிருஷ்ணனை நெருங்கினார்.

விபூதியை வாங்கிக்கொள்ள அவன் கை நீட்டியபோது. கீழே இருந்து இரு குட்டிக் கைகள் மேல்நோக்கி வந்தன.

"யாரடாது வாண்டு. குறுக்கே கை நீட்டறது!" என்றார் குருக்கள்.

அந்த வாண்டு யார் என்று பார்த்தவுடன் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாயிற்று.

"ஏண்டா ஸாயி, அதுக்குள்ளேயா டெஸ்ட் எழுதிட்டு இங்கே வந்துட்டே?" என்றான்

"இல்லை. மொதல்லேருந்தே இங்கேதான் இருக்கேன். நீங்க என்னை ஸ்கூல்லே விட்டுட்டுக் கிளம்பின உடனேயே நானும் ஒங்க பின்னாலே வந்துட்டேன்" என்றான் ஸாயி. விபூதியை நெற்றியில் பூசிக்கொண்டே.

"ஏண்டா பரிட்சையை விட்டே? இப்போ முரளிக்குன்னா பிரைஸ் கெடைக்கும்? ஏன் இப்படிப் பண்ணினே?" என்றாள் கர்ப்பக் கிருஹத்திலிருந்து வெளியே வந்து சேர்ந்த கௌரி.

"ஏன் இப்படிப் பண்ணினே?" என்ற அதே கேள்வியைக் கிருஷ்ணனும் கேட்டான்.

காற்றிலே கோலம் கலைவதுபோல் இதற்குள் விசுவரூபம் கலைந்துவிட்டது! மனித சுபாவம்!

பேசாமலே இருந்த பிள்ளையிடம் மீண்டும் அதட்டிக் கேட்டான்; "ஏண்டா. இப்படிப் பண்ணினே?"

"விவேகானந்தர் பாடம் படிச்சதாலேதான்" என்று தட்டுத் தடுமாறிக் கூறிய ஸாயி, தன் வயதுக்கு மீறிய உணர்வை வெளியிட்டதால் வெட்கத்துடன் வெளியே பராக்குப் பார்க்கலானான்.

அவனுடைய ஈர நெற்றியில் இட்டுக்கொண்டிருந்த விபூதி இப்போதுதான் காற்றில் பளிச்சென்று காய்ந்து ஒளிவிட்டது. கிருஷ்ணனின் மனதில் மங்கலாக இருந்த ஏதோ ஒன்றும் மங்கலமாக ஒளி வீசிற்று.

தரிசனம் பூர்த்தியாயிற்று!

ரா. கணபதி
Share: 




© Copyright 2020 Tamilonline