Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
அடர் வன இரவுகளில்...
- கொ.மா. கோதண்டம்|டிசம்பர் 2020|
Share:
சேத்தூர் பகுதியின் மேற்குமலைத் தொடரின் உச்சி 4500 அடி உயரம். அங்கே ஏலத்தோட்டங்கள் உள்ளன. உலகிலேயே மணம் மிகுந்த ஏலக்காய் காய்க்கும் பகுதி தென்மாவட்டங்களின் மலைப்பகுதிகள் தான்.

தோட்டங்களுக்குப் போக ஏழு மைல் மலை ஏறவேண்டும். மெட்டல் ரோடோ, தார்ச்சாலையோ எல்லாம் இல்லை. கரடுமுரடான கற்களும், வேர்களுமான ஒற்றையடிப் பாதைதான். பக்கங்களில் கிண்ட முள்கொடிகள் உடலைப் பதம் பார்க்கும்.

யானை, புலி, கரடி, மலைப்பாம்பு வகைகள் நடமாடும். மின்சார விளக்குகள் என்பதெல்லாம் கிடையாது.

தோட்டத்திற்கு மேலே உச்சிச் சிகரம் ஏலச்சிகரம். அருகே சமதளமான பாறை, அங்கிருந்து பார்த்தால் சுற்றிலும் சுமார் முப்பது மைல் அளவிற்கு பச்சைப்பசேல் மலைச்சிகரங்கள். மரங்களின் மேல்பகுதி ஏதோ பச்சை வண்ண மைதானம் போல, புல்வெளி போலத் தெரியும். "உருண்டு விளையாடலாமே" எனத் தோன்றும். அதற்குக் கீழே எத்தனை விலங்குகள் நடமாடிக் கொண்டிருக்கிறதோ... யார் கண்டது?

மரக்கிளைகளின் இலைகள் பச்சை சார்ந்த பல வண்ணங்களில் காற்றுக்கு மெல்ல சலசலத்து ஆடிக்கொண்டிருக்கும். "என்னைப் பார்! என் அழகைப் பார்!" என்று சொல்வது போல பச்சைக் கம்பளத்தில் வெள்ளை பார்டர் போட்டாற்போல தூரத்தில் வெள்ளைக் கோடுகளாய் அருவிகள்! இதையும்விட அழகாக உலகத்தில் வேறு ஏதேனும், எங்கேனும் இருக்க முடியுமா? காணக் காண வியப்பு! அந்த இடத்தில் ஓர் இரவில் தங்க வேண்டும் என்பது என் ஆசை. தோட்ட ஏஜென்டிடம் கூறினேன்.

"ஆபத்தான இடங்க, யானை புலி கரடி வரலாம். வேண்டாங்க" என்றார் அவர்.

"ஐயா! நாம் யார். இயற்கைத் தாயின் குழந்தைகள். அன்னையை ஆராதிக்கப் போகிறோம், மரம் வெட்டவோ, வேட்டையாடவோ, போனவர்களுக்குத்தான் அந்த ஆபத்தெல்லாம். மேலே சின்ன ப்ளாஸ்டிக் தாள். முன்புறம் சில கட்டைகள் போட்டு தீயெறிய விட்டு, துணைக்கு ஒரு ஆள் அது போதும்."

"சரி ஐயா! நீங்க சொன்னா கேட்கமாட்டீங்க. நானே வர்றேன். நான் தோட்டத்து ஜாகைக்குப் போயி, பிளாஸ்டிக் பேப்பர், மண்ணெண்ணெய், விளக்கு, வறுத்த நிலக்கடலை எடுத்துக்கிட்டு வாறேன். அதுவரக்கி நீங்க இங்க ஒத்தையில் இருக்க முடியாது, நீங்களும் வாங்க போயிட்டு வந்திடலாம்."

"இல்லை ஐயா. நீங்க போயிட்டு வாங்க. நான் இருப்பேன்."

நான் பாறையில் சுள்ளிகளைக் குவித்து தீ வைத்தேன். தீயின் வெளிச்சத்திற்கு விலங்குகள் விலகிப் போய்விடும். நான் தியானம் செய்யத் துவங்கினேன். அழகும் அமைதியும் அங்கே தியானம் செய்துகொண்டிருந்தது. அதனால்தான் முன்கால முனிவர்கள் இந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்தார்கள்.

ஒருமணி நேரம் கழித்து ஏஜண்ட் வந்தார். நான்கு கம்புகளை நட்டுக் கூரையமைத்தார். அங்கெல்லாம் ஐந்து மணிக்கே மெல்ல இருள் கவியும். ஆறுமணி இருட்டுதான். ஏஜண்ட் தன்னோடு ஒரு தோட்டப் பணியாளரையும் அழைத்து வந்திருந்தார். கண்ணதாசன் திரைப்பாடல்கள் கேஸட்டும் கொண்டு வந்திருந்தார். இப்போது வேண்டாம் என்று கூறினேன்.

இருள் கவியத் துவங்கியது. தீயின் வெளிச்சம் தவிர எங்கும் எதுவும் தெரியவில்லை! விலங்குகளின் கம்பீர ஒலிகளும், பறவைகளின் மெல்லொலிகளும் கேட்டன. வானத்து மேக மூட்டம். அங்கும் எதுவும் தெரியவில்லை.

"இனிக்கும் இன்ப இரவே நீ வா வா

இன்னலைத் தீர்க்க வா..."

திரைப்பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. அவர் எழுதியது காதலர்களுக்கு மட்டுமே.

உண்மையில் இந்த அடர் வனத்தில் இரவு நேரம்... இன்பத்தின் இருப்பிடமே, இந்தக் கண்களுக்குத்தானே ஒன்றும் தெரியவில்லை. நம் மனக்கண்களுக்கு... அந்த இடம், சுற்றுச் சூழல், அந்த நேரம் மனப்பார்வையில் எல்லாமே தெரிகிறது தானே. அதுபற்றி எண்ண எண்ண இன்பம் இன்பமே!

யானை கிளைகளை ஒடிக்கும் ஒலி, புலிகளின் உறுமல். குளிருக்கு இதமாக தீயைச் சுற்றி அமர்ந்து கொண்டோம்.

"அகலாது அணுகாது தீக் காய்வார்போல..." ஐயனின் குறள் உவமை, என்ன ஆனந்தமே!

விலகினால் குளிரும், கிட்டே போனால் வெக்கையும் அடிக்கும். எவ்வளவு அனுபவித்து எழுதியிருப்பார்!

திடீரென்று ஒரு மணம் கமகமவென மூக்கைத் துளைத்தது. வறுத்த உளுந்தை மாவாக்கி வெல்லமிட்டுப் பிசைந்து ஏலம் சேர்த்துத் தின்பது உளுந்தங்களி. அந்த வாசனை!

"உளுந்தங்களி கொண்டுவந்தீங்களா?"

"இல்லை ஐயா" ஏஜண்ட் கூறினார்.

"ஐயா பக்கத்துல, அதோ அந்த மரத்துக்கு அடியில் பூலாங்கிழங்குச் செடி இருக்குங்க. நல்லபாம்பு அதுல அடஞ்சி அசைபோடும். அப்ப இந்த வாசனை வரும்." பணியாள் கூறினார்.

"அதென்ன குறிப்பிட்ட அந்தச் செடியில் மட்டுமே நல்லபாம்பு அசைபோடுமா? அப்ப பாம்பு தினமும் இங்கேயே எதுக்கு வரும்?."

"ஐயா நம்ம வீட்டுக்கு நாம் தினமும் போறாப்புல பாம்புகளுக்கு பூலாஞ்செடி பிடிச்ச இடமா இருக்கலாம், அதனால் அங்க வரலாம்."

"அப்படியா? ஏஜண்ட் ஐயா நீங்க சொல்லுங்க..."

"இல்லீங்க. இந்த பூலாஞ்செடி இரவுல சின்னச் சின்னதா பூக்கும். அந்தப் பூக்களிலிருந்துதான் இந்த வாசம் வருதுன்னு நினைச்சேன்"

அதிகாலை நான்கு மணியிருக்கும். இசைக்கச்சேரி துவங்கிவிட்டது. நூற்றுக்கணக்கான பறவைகள் பலவித ஒலிகளுடன் பூபாளம் பாடி வனத்தை எழுப்பியது. எப்படி ஒரு "கீ போர்ட்" வாசித்தாலும் இப்படி ஒரு இயற்கை இசையைத் தரமுடியுமா? அட்டைப்புழுக்கள் பாறையில், நம் கைவிரல்களில் ஜாண் போட்டு அளப்பதைப்போல, தலைவைத்த இடத்தில் வாய் வைத்து ஏறிக்கொண்டிருந்தன. விடிந்ததும் கால்களில் சீயக்காய்த்தூள் கரைத்து பூசிக்கொண்டு இறங்கினோம்.

தேவதானம் வழியாகச் சென்று அடிவாரம் அடைந்து உச்சிமலை ஏலத்தோட்டம் சென்று தங்கியிருந்தேன். விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டு பணியாளர்கள் அன்றுதான் திரும்பியிருந்தார்கள்.

கூலி ஜாகைகளில் தங்கிவிட்டு, அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து கஞ்சி குடித்துவிட்டு, ஆறு மணிக்கு தோட்டப்பணிகளுக்குப் போவார்கள். ஏலக்கன்றுகள் பதிய, களையெடுக்க, பழம் பறிக்க - இப்படியான வேலைகள். தண்ணீர் பாய்ச்சுவது இல்லை. மழை நீர்தான் ஏலத்தோட்டங்களுக்கு ஆதாரம்.

ஏலச்செடிகள் நமது மஞ்சள் செடிகள் போல இரண்டு மடங்கு உயரமாக வளரும். இலைகள் ஒரு பாக அளவு நீண்டிருக்கும். செடியின் அடிப்பகுதியிலிருந்து ஏலவல்லிகள் என்ற காம்புகள் நீண்டு வளரும். அதில் நமது சிறுமிகள் சடையில் வரிசையாகப் பூக்கள் தொடுத்து வைத்தது போலப் பூக்கள் பூத்திருக்கும். அவை காய்களாகி வல்லியின் இரு பக்கம் காய்த்திருக்கும். முற்றிய காய்களைப் பறித்துப் பாடம் செய்து வைப்பார்கள். வெயிலில் காய வைத்தால் காய்கள் வெள்ளையாகி விடும். ஒரு பெரிய அறையில் பெரிய அடுப்பு வைத்து அகன்ற நீண்ட தகரக்குழாய் வழி சூடாக்குவார்கள், மேலே கம்பி வலையில் இந்தச் சூட்டில் ஏலக்காய்களைக் காய வைப்பார்கள். நிறம் மாறாமல் இருக்கும்.

ஏன் இவ்வளவு இதுபற்றிச் சொல்கிறேன் என்றால், தமிழில் பிரபல நாவலாசிரியர் ஒருவர் தனது முக்கிய நாவலில், காட்டை வர்ணனை செய்யும் பொழுது "பொருந்திய ஏலக்காய் மரங்கள் இலைக்கு ஒரு காயாகத் தன் மேனி முழுவதும் கோர்த்து வைத்துக்கொண்டு மது அருந்திய கர்ப்பிணிப் பெண்ணைப்போல ஆடிக்கொண்டிருந்தாள்..."

முதலில் ஏலம் ஒரு செடி. இலைகள் நீண்டு மேல்நோக்கி இருக்கும். காய்கள் செடியின் அடிப்பகுதியில் இருக்கும். செடி அசைவதற்கு உதாரணம் மது அருந்திய கர்ப்பவதிகள்தானா?

இப்படி பல நாவலாசிரியர்கள் தெரியாமல் மாற்றிச் சொன்ன செய்திகள் ஒரு நூலாக்கும் அளவு என்னிடம் உள்ளன.

நிற்க. மாலை 3 மணிக்கு வேலை முடிந்து பணியாளர்கள் இறங்குவார்கள். சோளம் இடித்து கஞ்சி வடித்து குளித்துச் சாப்பிட 5 மணியாகும். அனைவரும் வந்து தோட்ட ஏஜண்ட் ஜாகைக்கு முன் அமர்ந்து தோட்டப்பணிகள் மற்றும் நாட்டு நடப்புகள் பற்றி பேசிக்கொண்டிருப்பார்கள். ஆறு மணிக்கு இருட்டிவிடும்.

அன்று அவர்கள் மத்தியில் நாற்காலியில் நான் அமர, சுற்றிலும் தரையில் அவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பானையில் மூடியில் ப்ளாஸ்டிக் தாளை இறுகக் கட்டி, மெல்லிய மூங்கில் குச்சியால் மேளம் அடித்தும், மூங்கில் குழாயில் இலையை வைத்து ஊதியும் பாடி மகிழ்வார்கள்.

அன்று அவர்கள் இறங்கிச் செல்லும்போதும், மேலே ஏறி வரும்போதும் நடந்த அனுபவங்களைப் பேசினார்கள்.

இருவர் சொன்னது.

"நாங்க வந்துகிட்டிருந்தோம். பாதை ரெண்டாப் பிரியிற இடத்துல ரெண்டு பக்கமிருந்தும் ஒவ்வொரு யானையா எதிரில் வந்துகிட்டிருந்தது. கீழே கிடந்த செத்தைகளைக் கூட்டி தீ வச்சோம். ரெண்டு யானைகளும் திரும்பிப் போயிடுச்சி. கொஞ்ச நேரம் மரத்தடியில் உட்கார்ந்துட்டு வந்தோம்."

அடுத்த இருவர் கூறினார்கள்.

"நாங்க இறங்கிப் போகையில் காலாத்த ஒரு கல்லுள் உட்கார்ந்திருந்தோம். இவன் படுத்திருந்தான். நான் உட்கார்ந்து பேசிக்கிட்டிருந்தேன். திடீருன்னு 'தப்தப்'ன்னு சத்தம். பாத்தா பாதையில் காட்டெருமை ஒண்ணு ஓடி வந்துகிட்டிருந்தது. யானை வந்தாலாவது தப்பிக்கலாம். சனியன் எருமை, ஆளை முட்டியே கொன்னு போடும். நான் படக்குன்னு எந்திரிச்சி பக்கத்துக்க இருந்த கிடங்குல குதிச்சிட்டேன். இவன் படுத்தமானக்கே உருண்டு விழுந்தான். செரா வயித்துல கீச்சி ஆற ஒருவாரமாச்சி. எருமை போனதும் எம்மேல தோள்ள ஏறி இவன் மேலே போயிட்டான். ஒரு கம்பை எடுத்துத்தர அதப்புடிச்சி நான் மேல வந்தேன்!"

இன்னொரு ஆள் கூறினார்.

"நான் இறங்குறப்போ ஒரு இடத்தில் பாதமாறி இறங்கிட்டேன். வனத்துல இப்படி அடிக்கடி நடக்கும். ஒற்றையடிப் பாதை ஒன்று போல தானே இருக்கும். நான் ஒரு கல்லுல உட்காந்திட்டேன். ஏதோ சத்தம். திரும்பிப் பார்த்தா தூரத்து மரத்துல ஒரு கரடி, தன் முதுகுமேல ரெண்டு குட்டிகளை ஏத்திட்டு வந்து, குட்டிகளுக்கு மரமேற சொல்லிக் கொடுக்கு. குட்டிக மரத்துல ஏறுரதும் விழுறதுமாகப் பாக்க அதிசயமா இருந்துச்சு. இதுக்கு மேல இங்க இருக்கக் கூடாதுன்னு நெனச்சிக் கௌம்பி எப்படியோ சுத்தி அடிவாரம் போயிட்டேன்."

"சரி ஐயா. நீங்க வனங்களுக்குள்ளே பல எடங்களுக்கு போயிருக்கீங்களே! உங்க அனுபவம் சொல்லுங்களேன்!"

பலரும் கேட்டார்கள்.
"சரி வனத்துல நீங்க இயற்கையா பால் ஐஸ்கிரீம் சாப்பிட்டிருக்கீங்களா?"

"என்னய்யாது இங்க எங்க ஐஸ்கிரீம் கிடைக்கும்"

"நான் ஒரு சமயம் சிவகிரிக்கு அடுத்துள்ள மலைக்கு அடுத்துள்ள கேரள வனத்துல காட்டுவாசியோடு போய்க்கிட்டிருந்தேன். ரொம்பதூரம் நடந்து திக் ஃபாரஸ்ட்ல போய்க்கொண்டிருந்தோம். பனிக்காத்து உடம்பை ஆட்டுது. வெயிலே தெரியல்லே. ஒரு இடத்துல நீண்ட பரந்த இடம். சமதளமான பாறை. அந்தப் பாறையில் ஒரு சாண், ரெண்டு சாண் அளவுக்கு கிடங்குகள். ஒரு நாலஞ்சி கிடங்குகள்ள பாலாடைக் கட்டிகள் சில்லுனு நெறஞ்சிருந்தது. அவன் மரத்துல சிராய் ரெண்டு கத்தி போலப் பிச்சிட்டு வந்தான். அதை அறுத்து எடுத்தா கட்டியான பாலாடை. அவன், 'இதுதான் சாமி ஐஸ்கிரீம்' என்று கட்டி கட்டியாக அறுத்தெடுத்துச் சாப்பிட்டான்.

சாமி நீங்களும் எடுத்து சாப்புடுங்கன்னான். என்னிடமும் கத்தி போல மரச்சிரா தந்தான். நான் உட்கார்ந்து கிடங்கிலிருந்த பாலாடையை அறுத்தெடுத்துச் சாப்பிட்டேன். ருசியோ சுசி. அவ்வளவு ருசி! 'என்னப்பா இது இங்க எப்படி வந்தது சொல்லுன்னேன்'

'சாமி காட்டு எருமைகளுக்கு குளிர்காலத்துல பாலு நிறைய ஊறும். கன்னுக சாப்பிட்டது போகவும் மிச்சம் இருக்கும். அதுக்கு காட்டெருமை இப்படி பாறை குழிகள்ள வந்து நின்னு தானா பாலப் பொழியும். அந்த மாதிரியான காட்டெருமைப் பால்தான் சாமி இந்த ஐஸ்கிரீம்' என்றான் அவன்."

"சரி போதும். யாராவது பாடுங்களேன்" கேட்டுக்கொண்டேன்.

ஒருவர் மேளம் அடிக்க, ஓராள் குழல் ஊத, இரண்டு பேர் ஆடினார்கள். அனைவரும் கைகள் தட்டி ரசித்துக் கொண்டிருந்தோம். இருட்டு நேரம். தூரத்தில் யானைகளின் பிளிறல் கேட்டது. ஒரு பெண் பாட ஆரம்பித்தார்.

"கரடியடர்ந்த வனம்
காட்டானை தூங்கும் வனம்
சிறுத்தை அடர்ந்த வனம்
சிறுபுலிகள் தூங்கும் வனம்"


நான் கைதட்டிப் பாராட்டினேன்.

"சரி ஐயா நீங்க ஏதாச்சும் சொல்லுங்களேன்" எனக் கேட்டனர்.

"ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னால் நம்ம தமிழ்நாட்டுல ரெம்ப படிச்ச புலவர்கள் சங்கம் வச்சி தமிழ் வளர்த்தாங்க. அதுல பல புலவர்கள் மலை வனங்கள்ள சுத்திப்பாத்து ரொம்ப அனுபவப்பட்டு அதையெல்லாம் எழுதியிருக்காங்க. குறிஞ்சிக் கபிலர் வனங்களைப் பற்றி ரொம்ப அழகா பாடியிருக்காரு.

அகநானூறு அப்படிங்குற இலக்கியத்துல மோசிகீரனார் என்கிற புலவர் அருமையா ஒரு காட்சியைப் பாடுறாரு: "மேகக் கூட்டங்கள் ஒன்னு சேருது, இடி பலமா இடிக்கி, ஒருநா இரவுல காட்டுவாசி வேடர்கள் வனத்துல தினைப்பயிரை வளர்த்து கதிர் விட்டதும் காவல் இருக்காங்க. தினையை மேய யானைக் கூட்டம் வருது. பரண் கட்டி மேலே காவல் இருக்கும் வேடர்கள் கைவில்லில் கல்லுருண்டைகள் வைத்து யானைகளைப் பார்த்து கவண்கல் வீசுகிறார்கள். அந்தச் சத்தம் கேட்டு பயந்து புலி உறுமியது. அதைக் கேட்ட யானைகள் பிளிறியவாறே ஓடின. அப்ப தோகை விரிச்சு ஆடிக்கிட்டிருந்த மயில் அந்த சத்தத்தை இடியென நினைந்ததாம்" - அகநானூறு 3990.

"அட! ஐயா சொன்னது அப்பிடியே வனத்தைப் படம் புடிச்சி காட்டறது போல இருக்கே. நல்லா இருக்கு ஐயா"

அப்போது சுற்றிப் பார்த்து வந்த காவலாளி கூறினார்.

"ஐயா காட்டுக்குள்ளே ஒரு இடத்தில் நாகப்பாம்பு ரத்தினம் கக்கி இரையெடுக்குது. ஐயா... இப்பதான் பார்த்திட்டு வந்தேன்."

நாங்கள் பேட்டரி லைட்டுகளுடன் வனத்துள் சென்றோம். ஒரு இடத்தில் பளபளவென்று ஒளி படர்ந்து வந்தது.

"அதை எடுக்கலாமா?"

"சாமி பாம்பு கடிச்சிடும் சாமி"

"சரி நானே எடுக்கேன். பாம்பு ஒண்ணும் ரத்தினம் கக்காது. இது என்னன்னு பார்க்கணும்"

"சாமி நானே எடுக்கேன்" அவன் புதரில் சென்று அஞ்சியவாறே எடுத்தான். அது இரண்டடி நீள மரக்கட்டை. டியூப் லைட் போல வெளிச்சம். நான் கையில் வாங்கிக்கொண்டேன்.

"ஐயா! இது ஜோதி மரக்கட்டை." எல்லோரும் வியந்து பார்த்தார்கள்.

எண்ணூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சேக்கிழார் பெரிய புராணத்தில் : வனவேடர்கள் வீடுகளுக்கு வேலியாக யானைத் தந்தங்களை வரிசையாகச் சுற்றிலும் நட்டு வைத்திருந்தார்களாம். உலக்கைக்கு பதிலாக யானைத் தந்தங்களால் பாறைக் குழிகளில் தானியங்களை இடித்தார்களாம். ஜோதி மரத்தைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்.

"செந்தழல் ஒளியில் தோன்றும் தீப மா மரங்களாலும் மலையினில் இரவொன்றில்லை..."

அதன் பிறகு தமிழ் இலக்கியத்தில் யாருமே ஜோதி மரம்பற்றிக் கூறவில்லை. யாரும் பார்த்ததாகவும் தெரியவில்லை. அதைப் பார்த்து பரவசமடைந்ததும் அதைப்பற்றி எழுதியதும் பாக்கியமாகவே நினைக்கிறேன்.

சதுரகிரி மலையில் ஒருநாள் இரவில்...

உச்சி மலையில் மகாலிங்கம் கோயில் உள்ளது. வத்திராயிருப்பு ஊரிலிருந்து ஆறு மைல் தூரத்தில் தானிப்பாறை அடிவாரம். அங்கே அற்புத மூலிகைகளும் இருக்கின்றன. கிழித்தால் மீண்டும் ஒட்டிக்கொள்ளும் அதிசய மூலிகை அத்தாலொட்டி அங்கே இருக்கிறது. வெட்டப்பட்ட சதையை இலையை அரைத்துப் போட்டால் தையல் போட்டதுபோல சேர்ந்துகொள்ளும். அதுபோல அதிசய மூலிகைகள் அங்கே உள்ளன.

குறுகிய பாதை வழியாக மலைமேல் ஏறவேண்டும். கோவில்கள், அதைச் சார்ந்த பல மடங்கள் இருக்கின்றன. ஒரு பகுதியில் ஆதிவாசிகளின் குடிசைகள். போகிறவர்கள் மடங்களில் தங்கலாம். உணவும் தருவார்கள். நானோ ஆதிவாசி குடிசையில் தங்கினேன். ஒரே இருட்டு. பிய்ந்த குடிசை. ஓட்டைகள் வழி ஏதேனும் விலங்கு வந்துவிடுமோ? பயத்தால் தூக்கம் பிடிக்கவில்லை. சணல் சாக்கை விரித்து அதே சாக்கில் போர்த்திப் படுத்திருந்தேன். நான் கொண்டு சென்ற உணவு தீர்ந்ததும் காலையில் பளியர் தந்த அவித்த கிழங்கு, எந்தச் சுவையும் இல்லை. வாய்க்குள் போகவே இல்லை. வெல்லம் கடித்துச் சாப்பிட்டேன். அதே கிழங்கை அவர்கள் வாழ்நாளெல்லாம் சாப்பிடுகிறார்கள். நினைத்தால் வருத்தமாகவே இருக்கிறது.

18 சித்தர்கள் வாழ்ந்த குகைகளைச் சுற்றிப் பார்த்தோம். பேசிக் கொண்டிருந்தோம், இரவாகி விட்டது. தாரை அப்பியது போன்ற கடும் இருட்டு. காட்டுவாசி ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றான். தூரத்துச் சரிவில் புல் திரட்டி, அதிலிருந்து பளபள வென்ற நிலவொளி போல வெளிச்சம்.

"சாமி இதுதான் ஜோதிப்புல்லு. கதிர்ல இருந்து ராவுல வெளிச்சம் வரும். பாருங்க எப்படி இருக்கு."

"அப்பா உனக்கு ஆயிரம் நன்றிகள்ப்பா. இயற்கையின் அற்புதத்தை வனத்தாயின் கருணை அதிசயத்தை, காட்டிய உனக்கு வணக்கங்கள்."

ஒரு படைப்பாளி என்ற முறையில் யாருக்கும் கிடைக்காத அனுபவம், பேரானந்த அனுபவம்! தீயே இல்லாது ஒளி தரும் ஜோதி மரம், ஜோதிப்புல். நான் தவம் செய்திருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு இந்த ஆச்சர்யமான அனுபவங்கள் கிடைத்தன. இரவு நேர வன அனுபவங்கள் கிடைத்தற்கரிய பேறு!

(நன்றி: 'இரவு' கட்டுரைத் தொகுப்பு; தொகுப்பாசிரியர்: மதுமிதா)

கொ.மா. கோதண்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline