Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | பொது | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
சிறுகதை
கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி
அன்னையர் தின ஆச்சரியம்
நோன்பு!
- அப்துல்லா ஜெகபர்தீன்|மே 2020|
Share:
எத்தனையாவது தடவையாக கோவில் சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தோம் என்று சீனிவாச குருக்களுக்கு நினைவில்லை, மீண்டும் ஒருமுறை பதட்டத்துடன் பார்த்தார், மணி மாலை ஆறை நெருங்கிக்கொண்டிருந்தது, கோடைக்காலம் என்றாலும், மேகங்கள் கறுத்து, குளிர்ந்த‌ காற்றுடன், எப்பொழுது வேண்டுமானாலும் மழை பொழியலாம் என்பதுபோலக் காணப்பட்டது

அவரின் பழைய நோக்கியா செல்ஃபோன், சுரத்தில்லாமல் சிணுங்கியது. எடுத்தார், மறுமுனையில்...

"அத்திம்பேர், எங்கே இருக்கீங்க? எப்போ வருவீங்க? நேரமாறது சீக்கிரம் வாங்க" எதிர்முனை படபடத்தது

"கோவில்லதான் இருக்கேன், சீக்கிரம் கிளம்பிடுவேன்" என்று அவருக்கே கேட்காத குரலில் மெல்லப் பேசிவிட்டு ஃபோனை அனைத்தார்

சற்று பயம் கலந்த நடுக்கத்துடன் கோவில் வாசலைப் பார்த்தார். அந்த ஸ்கார்ப்பியோ காரும், கரடுமுரடான ஆட்களும் இன்னும் நின்றுகொண்டு, ஃபோனில் எதையோ பார்த்துச் சிரித்துகொண்டு இருந்தார்கள். மனதில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துகொண்டு அவர்களை நெருங்கினார்

"தம்பி, நேரமாகிறது கோவிலைப் பூட்டணும், மழைவேறு வரும்போல இருக்குது, தலைவர்..."

"அய்யரே, எத்தினிதடவ சொல்றது, தலைவர் வந்திட்டு இருக்கார், இன்னும் பத்து நிமிஷத்துல வந்திருவார், நீ போய் பூஜைக்கான ஏற்பாட்டைப் பார்"

"இல்ல தம்பி, என் பொண்டாடிக்கு தலைப்பிரசவம், 18 வருஷம் கழிச்சு, இப்பதான் பகவான் எங்களுக்கு கண்ணத் தொறந்திருக்கான், அவளை இப்போ ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணிருக்கோம், டாக்டர் கொஞ்சம் காம்ப்லிகேட்டடுன்னு சொல்லிருக்கார், நான் போகணும் அதான்..."

"யோவ், சும்மா தொணதொணன்னு எத்தினிதபா இதையே சொல்லிகிட்டு இருப்பே. இந்த பாரு, இந்த கோவில் தலைவருக்கு ரொம்ப ராசியான கோவில். ஒவ்வோரு எலெக்‌சனுக்கும் இங்கவந்து சாமி கும்பிட்டுத்தான் பிரசாரத்தைத் தொடங்குவார். அதுவும் இந்தமுறை தலைவர் ஜெயிச்சா உள்துறை மந்திரின்னு பேசிக்கிறாங்க அதனால இந்தப் பூஜை ரொம்ப விசேஷமா இருக்கணும்னு தலைவர் சொல்லியிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவார், நீர் போய் ஆகவேண்டியத பாரும். உம் பொண்டாட்டிக்கு ஒண்ணும் ஆகாது. எல்லாம் உன் ஆத்தா பாத்துக்குவா…"

இவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மீண்டும் கடவுளையே வேண்டினார் சீனிவாச குருக்கள். 10 நிமிடம் கடந்தது, திடீரென்று, கோவில்வாசல் பரபரப்பானது. ‘தலைவர்’ வந்திறங்கினார். சீனிவாச குருக்கள் பதட்டத்துடன், பூஜையை ஆரம்பித்தார். தலைவர் மிகுந்த பய‌பக்தியுடன் சாமி கும்பிட்டார். அவரது அல்லக்கைகள் பயபக்தியுடன் கும்பிடுவதுபோல் நடித்தனர். தலைவர் தாராளமாக அர்ச்சனைத் தட்டில் பணம் போட்டார். சிறிதுநேரத்தில் அனைவரும் புறப்படத் தயாராகினர். சீனிவாசர் அவசரமாகத் தலைவரிடம் ஓடிவந்தார்…

தலைவரே, என் மனைவிக்கு தலைப் பிரசவம், ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருக்கோம், மழை வரும்போல் இருக்கு, போற வழியில், என்னை

கொஞ்சம் லக்ஷ்மி நர்சிங் ஹோமில் ட்ராப் பண்ணிடுவீங்களா? உங்களுக்கு புண்ணியமாபோகும்."

தலைவர், ஏதோ சொல்ல வாயெடுக்க...

"சாமீ, தலைவருக்கு மீட்டிங்குக்கு நேரமாகுது, நீ ஆட்டோ, கீட்டோ புடிச்சு போயிடு, தலைவரே நீங்க வண்டியில ஏறுங்க‌."

தலைவர், அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டு வண்டியில் ஏறி, கிளம்பிச்சென்றார்.
குருக்கள் விதியை நொந்துக்கொண்டு, அவசரமாகக் கோவிலைப் பூட்டிக்கொண்டு, தன் பழைய சைக்கிளை எடுக்க, மழை ஆரம்பித்து, வேகமெடுத்தது. சீனிவாசரால் சைக்கிளை, மழையில் ஓட்டமுடியவில்லை. இனி சைக்கிளில் போகமுடியாது என்று தெரிந்தபிறகு, சைக்கிளை மறுபடியும் கோவில் உள்ளே வைத்து பூட்டிவிட்டு, வேகமாக நடக்கலானார். கோவிலுக்கும், மெயின் ரோட்டுக்கும் அரை கிலோமீட்டர் இருக்கும். வேகமாக நடந்து, இல்லை ஓடி, மெயின்ரோடு வந்தார்.

மழை பெய்துகொண்டிருந்தது. அலுவலகம் விட்ட மாலை டிராஃபிக்கில் சாலை நிரம்பி வழிந்தது. மக்கள் கிடைத்த ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் ஏறினர். சீனிவாசர் கை காட்டிய எந்த ஆட்டோவும் காலியாகவும் இல்லை, நிற்கவும் இல்லை. லிஃப்ட் கேட்டும் எந்தப் பயனுமில்லை.

அவரின் நோக்கியோ மீண்டும் சினுங்கியது, எடுத்தார்

"அத்திம்பேர் எங்க இருக்கேள், டாக்டர் சிசேரியன் பண்ணனும்னு சொல்றார்..."

"பகவானே…" என்று வாய்விட்டு அலறினார், "வந்திண்டு இருக்கேன், மழையினால பஸ், ஆட்டோ ஒன்னும் கிடைக்கல" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவர் அருகில் ஒரு பைக் வந்து நின்றது.

"என்ன சாமீ, நடுரோட்ல நின்னு ஃபோன் பேசிக்கிட்டு இருக்கீங்க? எங்க போகணும்? "

"ஸாரி தம்பி, லக்ஷ்மி நர்சிங் ஹோம் போகனும், என் மனைவிக்கு டெலிவரி..."

"சரி, ஏறுங்க, மழை வேகமெடுக்கிற மாதிரி இருக்கு."

அவசரமாக அந்த இளைஞனின் பைக்கில் ஏறி அமர்ந்தார். மனசு முழுதும் கடவுளை வேண்டியபடியே இருந்தது. வேறு எதிலும் அவர் மனதுபோகவில்லை.

அந்த அடை மழையிலும், அந்த இளைஞன் லாகவமாக பைக்கை ஓட்டியதால், 10 நிமிடத்தில் ஹாஸ்பிடல் வந்தடைந்தார்கள். ஹாஸ்பிடல் வந்தவுடன் அவசரமாக பைக்கிலிருந்து குதித்து, ஓடினார்.

ஹாஸ்பிட்டல் வராந்தாவில் சிறு கும்பல் பதற்றத்துடன் நின்றிருந்தது. அதில் ஒருவர், சீனிவாசரை பார்த்தவுடன்... "அத்திம்பேர், அக்காவுக்கு ரொம்ப சீரியஸாக இருக்காம், சிசேரியன் செய்துதான் ஆகணும்கிறார் டாக்டர், அக்காவோட பிளட் குரூப் ரொம்ப ரேரான குரூப்பாம், இவங்க பிளட்பேங்கில் ஸ்டாக் இல்லையாம். வேற இடத்துல முயற்சி செய்றா, நானும் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். கவலைப்படாதீங்க. நர்ஸ் ஒரு ஃபார்ம் கொடுப்பாங்க, அதுல மட்டும் கையெழுத்துப் போட்டிடுங்க, ஆபரேஷனுக்காக‌." என்றார்.

"பகவானே, என்ன ஏன் இப்படி சோதிக்கறே..." என்றவாரே சேரில் தளர்ந்தார்.

"சார்..?" என்றொரு குரல் வாசலில் கேட்டது, சீனிவாசர் நிமிர்ந்து பார்த்தார்

அந்த பைக் இளைஞன் நின்றிருந்தான்.

"ஓ...சாரி... தம்பி, என் பதற்றத்துல உனக்கு ஒரு நன்றிகூட சொல்லத் தோணல..."

"பரவாயில்லை...அவசரத்துல உங்க ஃபோனை தவற விட்டுட்டீங்க, அதை கொடுத்துட்டு போகலாமுன்னு வந்தேன். நீங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன். எனக்கும் அதே குரூப் ரத்தம்தான். நீங்க விரும்பினால் நான் ரத்தம் கொடுக்கத் தயாரா இருக்கேன்..."

"தம்பி...நான் கும்பிடுற கடவுள் என்னைக் கைவிடல/ அவர்தான் உன்னை அனுப்பியிருக்கார்" என்று பைக் இளைஞன் கையைப் பிடித்துக்கொண்டு தழுதழுத்தார்.

அவசரகதியில் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.

"சாமீ, உங்களுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கு, அம்மாவும், குழந்தையும் நல்லா இருக்கிறாங்க" என்ற டாக்டரின் குரலைக் கேட்டபிறகே நிம்மதி அடைந்தார்.

"அந்த தம்பி, எப்படி இருக்கிறார் டாக்டர் ?"

"நல்லா இருக்கார், கொஞ்சம் மயக்கமா இருக்கார், அவர் காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடவில்லைபோல் தெரிகிறது"

சீனிவாசர் அவசரமாக அந்த‌ இளைஞன் இருந்த ரூமுக்குச் சென்றார். அவன் பெட்டில் களைப்போடு படுத்திருந்தான், அவன் பக்கத்தில் ஒரு வாய்கூடக் குடிக்காத ஆரஞ்சு ஜூஸ் இருந்தது.

"தம்பி, நீ யாரோ, எவரோ, உன் பெயரைக்கூட நான் இதுவரைக்கும் கேட்கலை. ஆனால், நீ என் வம்சம் தழைக்க மிகப்பெரிய உதவி செஞ்சிருக்கே, இதை நான் ஒரு நாளும் மறக்கமாட்டேன். நீ காலையிலிருந்து எதுவும் சாப்பிடவிலைன்னு டாக்டர் சொன்னார், இந்தா... இந்த ஜூஸையாவது குடி..." என்று சீனிவாசர் பேசிக்கொண்டிருக்கும் போதே…"

"அல்லாஹூ...அக்பர்..." என்று அந்த இளைஞனின் செல்ஃபோன் ரிங்டோன் அழைத்தது. அதை சைலன்ட் செய்த இளைஞன்

"ஐயா, என் பெயர் அப்துல் ரஹ்மான். நான் ரமலான் மாத நோன்பு பிடித்திருக்கேன், அதனால்தான் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை. நோன்பு திறக்கும் நேரத்திற்காக‌ செல்போனில் அலாரம் வைத்திருந்தேன், நோன்பு திறக்கும் நேரம் இதுதான். அந்த ஜூஸைக் கொடுங்கையா, குடிக்கிறேன்" என்றான்.

அவனை வாஞ்சையோடு பார்த்த சீனிவாசர், பாசமுடன் ஜூஸைக் கொடுத்து அப்துல் ரஹ்மானின் நோன்பை முடித்து வைத்தார்.

அப்துல்லா ஜெக‌பர்தீன்,
பிளசன்டன்
More

கொரோனா காலத்தில் வந்த குப்புசாமி
அன்னையர் தின ஆச்சரியம்
Share: 




© Copyright 2020 Tamilonline