Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
வ.உ. சிதம்பரம் பிள்ளை
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2019|
Share:
சிறைக் கொடுமைகள்
ஆறு ஆண்டுதானே, விரைவில் கழிந்துவிடும் என்று சிலர் நினைத்தனர். 'பிரிட்டிஷார் கருணை காட்டி முன்னதாக விடுவிப்பர்' என்று சிலர் நம்பினர். ஆனால், நம்புவது நடந்துவிடுமா என்ன? கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டார் சிதம்பரம் பிள்ளை. இப்போது போல முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என வசதிகளோ, சலுகைகளோ அப்போது இல்லை. பிற அரசியல் கைதிகளும் அங்கே அதிகமில்லை என்பதால் தனிமைச் சிறையில் வாடினார் பிள்ளை. பிரிட்டிஷ் அதிகாரிகள் அவரை மிகக் கேவலமாக நடத்தினர், கொடுமைப்படுத்தினர். ஒரு கைதி, சிதம்பரம் பிள்ளையைக் கைகூப்பி வணங்கியதைக் கண்ட பிரிட்டிஷ் சிறைக் காவலர் அக் கைதியைச் செருப்பால் அடிப்பேன் என்றும் ஏசினார். மற்றொரு சமயம் சிதம்பரம் பிள்ளை ஒரு அதிகாரியைப் பார்த்துச் சிரித்ததற்காகக் கண்டிக்கப்பட்டார். இவற்றை அறிந்த கைதிகள் ஆத்திரப்பட்டனர். இது தொடர்ந்தால் சரியாக இருக்காது என எண்ணி அவர்கள் சேர்ந்து சிறைக்குள் மிகப்பெரிய கலவரத்தை நடத்தினர். கலவரத்தை அடக்கப் போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதற்கும் வ.உ.சி.யின் தூண்டுதலே காரணம் என நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர். விசாரணை நடந்து சிதம்பரம் பிள்ளையின் சார்பாக அறிஞர் சி.கே. சுப்பிரமணிய முதலியார் வாதாடினார். இறுதியில் சிதம்பரம் பிள்ளைக்கும் கலவரத்துக்கும் தொடர்பில்லை என நிரூபணமானது. ஆனாலும் பிள்ளை கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கும் கொடுமைகள் தொடர்ந்தன.

பாலும் தேனும் பருப்புமாக உண்டவருக்குச் சிறையில் உப்பில்லாத கேழ்வரகுக் கூழே வழங்கப்பட்டது. எல்லா வேளைகளிலும் கேழ்வரகு மட்டுமே உண்டு வந்ததால் உடல்நலன் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஆறே மாதத்தில் அவரது உடல் எடை மூன்றிலொரு பங்கு குறைந்துவிட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர் இனியும் கேழ்வரகு கொடுத்தால் அது உயிருக்கே ஆபத்தாகும் என்று எச்சரிக்கவே அரசாங்கம் அரிசி உணவை வழங்க ஆரம்பித்தது. ஆனாலும் கொடுமைகள் தொடர்ந்தன. அவரது கால்களில் விலங்கு பூட்டப்பட்டது. கழுத்திலும் தண்டனை மற்றும் விடுதலை நாள் குறித்த பலகை ஒன்றைக் கட்டியிருந்தனர். குளிர் தாங்காத சட்டை ஒன்று, மொட்டை அடித்துத் தலைக் குல்லாய் ஒன்று - இந்தக் கோலத்தில் அவர் சிறையில் இருந்தார்.

தினமும் கடுமையான வேலை; கல் உடைக்கச் செய்தனர், மாட்டுக்குப் பதிலாக அவரைக் கொண்டு செக்கிழுக்கச் செய்தனர். மாட்டைப் போலவே அடித்தனர். இது குறித்து அவர் தனது சுயசரிதையில்,

திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான். உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெல்லாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன்


என்று குறிப்பிடுகிறார்

இந்தக் கொடுமைகளைத் தாங்கிக்கொள்ள இயலாத பிள்ளை, தமக்கு விதித்த தண்டனைக்கு ஏற்பத் தம்மை அந்தமான் தீவுக்கே அனுப்பி விடுமாறு வைசிராயிடம் விண்ணப்பித்தார் என்றால் எவ்வளவு துன்புறுத்தப்பட்டிருப்பார் என்பதை ஊகிக்கலாம். பிள்ளையின் மனைவியும், தமிழ்நாட்டுச் சிறையில் வைத்துத் தம் கணவரைத் கொடுமைப்படுத்துவதை விட அவரை அந்தமான் அனுப்புவதே நலம் என்று இங்கிலாந்து மன்னருக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

வீழ்ந்தது கப்பல் கம்பெனி
சிறையில் பிள்ளை வாடிக்கொண்டிருக்க, அவர் ஆரம்பித்த சுதேசி கப்பல் கம்பெனியோ மெல்ல மெல்லப் பின்னடைவைச் சந்தித்தது. பங்குதாரர்கள் எங்கே தங்களையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் அடைக்குமோ என்று பயந்தனர். தொடர்ந்து நடத்த இயலாமல் நிதிப் பற்றாக்குறை வேறு. அதனால் கப்பல் தொழிலில் ஆர்வம் இழந்தனர். இது குறித்து பாரதியார் 'இந்தியா' இதழில், “சிதம்பரம் பிள்ளை யார் பொருட்டு இரவு பகலாக உழைத்தாரோ அவர்கள்கூட பயத்தினாலே அல்லது சோம்பலினாலோ மூச்சுக்காட்டாமல் பின்வாங்கி நிற்கிறார்கள். சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்குச் சிதம்பரம் பிள்ளையே பிதாவென்று கூறுதல் தகும். ஆனால் அவர்கள் சிதம்பரம் பிள்ளைக்குத் தக்கவாறு நன்றிக்கடனைச் செலுத்தாவிட்டால் இவர்களது முயற்சிகளின் மீது தர்மதேவதைக்குச் சினம் பிறக்கும். மேற்படி கம்பெனி பங்காளிகளில் ஒவ்வொருவரும் தலைக்கு நாலணா வீதம் போட்டால் எவ்வளவு பெரிய நிதி சேர்க்கலாம்” என்று எழுதியிருந்தார்.

எழுதி என்ன பயன்? எது நடக்கக் கூடாதோ அது நடந்தது. ஆம், சுதேசிக் கப்பல் கம்பெனி கலைக்கப்பட்டது. அது மட்டுமா, அரும்பாடுபட்டு வாங்கி, எந்தக் கப்பலை தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே சிதம்பரம் பிள்ளை ஓட்டினாரோ, அந்தக் கப்பல் விற்கப்பட்டது. அதுவும் யாருக்கு? சுதேசிக் கப்பல் குழுவை அழிக்கவும் சிதம்பரம் பிள்ளையைச் சிறையில் தள்ளவும் காரணமாக இருந்த பிரிட்டிஷ் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கே!

செய்தியறிந்து மிகவும் மனம் வருந்தினார் சிதம்பரம் பிள்ளை. கம்பெனியைக் கலைத்துவிட்டதைக் கூட அவரால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், அதே பிரிட்டிஷ் கம்பெனிக்கே கப்பலை விற்றதை அவரால் ஏற்கமுடியவில்லை. சோதனைக் காலம் வரும்போது, நமது நாட்டு மக்கள் எப்படிக் கோழைகளாகி விடுகிறார்கள் என்பதை எண்ணி மனம் குமைந்தார்.

ஆனால், அதோடு விட்டார்களா பங்குதாரர்கள்! கம்பெனியின் முறிவுக்குச் சிதம்பரம் பிள்ளையின் அரசியல் நடவடிக்கைகளே காரணம் என்று குற்றம்சாட்டி, தங்களுக்கு அவர் இழப்பீடு தர வேண்டுமென்று அறிக்கை அனுப்பினர். சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முயன்றனர். உள்ளம் கொதித்த பிள்ளை, சுதேசிக் கம்பெனியின் சட்ட ஆலோசகரான திரு சி. விஜயராகவாச்சாரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், “என்னால் துவக்கப்பட்ட சுதேசிக் கப்பல் கம்பெனிக்குப் பொருள் உதவிய எல்லோருக்கும் எனது வணக்கத்தைத் தெரிவியுங்கள். கம்பெனி முறிந்ததனால் ஏற்பட்ட நஷ்டத்தைப் பங்குதாரர்கள் ஏற்பதே நியாயம். அவர்கள் மறுத்தால், அக்கடன்களை நானே கொடுத்துவிடுகிறேன். ஆனால், தயவுசெய்து நான் சிறை மீளும்வரை அவர்களைப் பொறுத்திருக்கச் சொல்லுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சிறையில் சிதம்பரம் பிள்ளை அனுபவித்த கொடுமைகளைக் காணச் சகியாமல்,

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கியிரு
கண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ?
மாதரையும் மக்களையும் வன்கண்மை யாற்பிரிந்து
காத லிளைஞர் கருத்தழிதல் காணாயோ?
எந்தாய்! நீ தந்த இயற்பொருளெ லாமிழந்து
நொந்தார்க்கு நீயன்றி நோவழிப்பார் யாருளரோ


என்றெல்லாம் மனம் வருந்திப் பாடிக் கலங்கினார், சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரான பாரதி.சிறையில் சில புத்தகங்கள்
சங்க இலக்கியங்கள். ஆங்கில இலக்கியங்கள், புராண இதிகாசங்கள், நீதி, வேதாந்த நூல்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார் பிள்ளை. கடுங்காவலில் அவமானங்களுக்கிடையே இருந்த போதிலும் மன உறுதியை இழக்கவில்லை. இலக்கிய ஆர்வத்தையோ, வாசிப்பையோ விட்டுவிடவில்லை. பரலி சு. நெல்லையப்பர் போன்ற நண்பர்களின் உதவியால், நேரம் கிடைத்தபோது புத்தகம் வாசிப்பதிலும், எழுதுவதிலும் செலவிட்டார். ஜேம்ஸ் ஆலன் எழுதிய 'As a man thinketh' என்ற ஆங்கில நூலை 'மனம்போல் வாழ்வு' என்ற பெயரில் மொழிபெயர்த்தது சிறையில் இருந்தபோதுதான். 'மெய்யறிவு', 'மெய்யறம்', 'அகமே புறம்', 'வலிமைக்கு மார்க்கம்' போன்ற நூல்களும் சிறையில்தான் உருவாயின. பெரிதும் வரவேற்கப்பட்ட இந்த நூல்கள் பின்னர் பலமுறை அச்சிடப்பட்டு பல்வேறு பதிப்புகள் கண்டன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததுடன், முதல் மனைவி வள்ளியம்மையை நினைவுகூர்ந்து 'வள்ளியம்மை சரித்திரம்' என்ற நூலையும், 'சாந்திக்கு மார்க்கம்' என்ற நூலையும் சிறைவாசத்தில் எழுதினார் பிள்ளை.

சிதம்பரம் பிள்ளை, மகாராணியின் நன்னாளை முன்னிட்டு 1912ம் வருடம், டிசம்பர் மாதம் 24ம் நாள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சிறை வாயிலிலில் அவரை வரவேற்ற ஒரே நபர் சுப்பிரமணிய சிவா மட்டுமே. பெருவியாதியின் காரணமாக அவர் முன்னரே விடுதலை செய்யப்பட்டிருந்தார். பிள்ளையைக் கட்டித் தழுவி வரவேற்றார் ஐயர். நெருங்கிய நண்பரான பாரதி, பிரிட்டிஷார் ஆட்சிப் பகுதியில் கால் வைக்க இயலாததால் பாண்டிச்சேரியிலேயே இருந்தார். வேறு யாரும் பிள்ளையை வரவேற்க வரவில்லை. இதற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மீதிருந்த அச்சமும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். அல்லது பிறவி மறதியே காரணம் என்றும் சொல்லலாம். விடுதலைக்குப் பின் சென்னைக்குச் சென்றார் சிதம்பரம் பிள்ளை.

சென்னையில் சிதம்பரம் பிள்ளை
சென்னைக்குச் சிதம்பரம் பிள்ளை சென்றாலும் அங்கு மண்டயம் சீனிவாசாச்சாரியார், சர்க்கரைச் செட்டியார், சிங்காரவேலு செட்டியார் போன்ற ஓரிருவரைத் தவிரத் தெரிந்தவர்கள் யாருமில்லை. பாரதியும் அங்கே இல்லை. பிரிட்டிஷ் அரசின் தடையால் வழக்குரைஞராக இருந்தும் பணியாற்ற முடியாத நிலை. பிள்ளை வருமானமின்றிக் கடும் வறுமையில் உழன்றார். மண்டயம் சீனிவாசாச்சாரியார் தன்னால் இயன்ற உதவியைப் பிள்ளைக்குச் செய்து வந்தார். பிள்ளையும் தனது தொழிற்சங்க அனுபவத்தைக் கொண்டு 'சென்னை தொழிலாளர் சங்கம்' போன்ற அமைப்புகளின் உருவாக்கத்தில் உதவினார். தமது கூட்டுறவு இயக்க அனுபவத்தைக் கொண்டு சென்னையில் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைத்தார். பெரம்பூரில் அஞ்சல்துறை ஊழியர் சங்கத்தைத் தோற்றுவித்தார். ஆனாலும் வருமானத்துக்கு ஏதாவது செய்ய வேண்டி இருந்தது. மளிகைக்கடை வைத்தார், வெற்றி பெறவில்லை. மண்ணெண்ணெய்க் கடை வைத்தார். அரிசி, நெய் வியாபாரம் செய்தார். அவற்றிலும் இழப்புத்தான். எடுத்த முயற்சி எதுவுமே வெற்றி தரவில்லை. கடும் வறுமை சூழ்ந்தது. அவரது கஷ்டத்தை அறிந்த திலகர், சுயராஜ்ஜிய நிதியிலிருந்து பிள்ளைக்கு மாதந்தோறும் ஐம்பது ரூபாய் அனுப்பி ஆதரித்தார்.

தனது வறுமை நிலை பற்றிப் பிள்ளை,
வந்தகவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரமன் தாழ்ந்தின்று - சந்தமில்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து
என்று வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.


இலக்கியப்பணி
சென்னையில் வசித்த காலகட்டத்தில் திரு.வி.க., திருமணம் செல்வ கேசவராய முதலியார் ஆகியோரது நட்பைப் பெற்றார் பிள்ளை. புத்தகங்கள் எழுதுவதிலும் மொழிபெயர்ப்பதிலும் வெளியிடுவதிலும் ஆர்வம் கொண்டார். அகமே புறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், தனிப்பாடல் திரட்டு போன்றவற்றை வெளியிட்டார். விவேகபாநு, ஞானபாநு, சுதேசமித்திரன், தமிழ்ப்பொழில் போன்ற இதழ்களில் இவரது இலக்கியம், சமூகம், உளவியல் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின. தமிழ்ப்பொழிலில் எழுதி வந்த திருக்குறள் ஆராய்ச்சியை 'திருக்குறள் - மணக்குடவர் உரை - அறத்துப்பால்' என்ற தலைப்பில் நூலாகக் கொண்டு வந்தார். பதினெண் கீழக்கணக்கு நூல்களில் ஒன்றான 'இன்னிலை'யைப் பதிப்பித்து வெளியிட்டார். 'எனது அரசியல் பெருஞ்சொல்' என்ற தலைப்பில் தனது அரசியல் மாநாட்டுச் சொற்பொழிவுகளைத் தொகுத்து வெளியிட்டார். தொல்காப்பிய இளம்பூரணர் உரையின் பொருளதிகாரத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்.

திலகருடன் ஒரு சந்திப்பு
இந்நிலையில், திலகரின் அழைப்பின் பேரில், 1915ல் பூனாவுக்குச் சென்று அவரைச் சந்தித்தார் பிள்ளை. திலகருடன் சில நாட்கள் தங்கினார். ஜெர்மனி உதவியுடன் இந்தியாவில் புரட்சி நடத்துவது பற்றியெல்லாம் விவாதித்தார் என்றாலும் எதுவுமே நடைமுறைக்கு ஒத்துவராததாக இருந்ததால் தன் இருப்பிடம் திரும்பி வழக்கம்போல் தனது பணிகளைத் தொடர்ந்தார்.

சபர்மதி ஆச்ரமத்தில்...
1917-18 வாக்கில் சபர்மதி ஆசிரமம் சென்று மகாத்மாவைச் சந்தித்தார். தென்னாப்பிரிக்கத் தமிழர் தில்லையாடி வேதியப்பிள்ளை இவருக்குக் கொடுத்தனுப்பிய ரூ. 5000த்தை மகாத்மாவிடம் கேட்டுப் பெற்றார். தனக்குப் பிறந்த பெண்ணுக்கு வேதியப்பிள்ளையின் நினைவாக வேதவல்லி என்று பெயரிட்டார்.

அரசியல் பணிகள்
1918ல் தமிழகம் வந்தார் பாலகங்காதர திலகர். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் திலகரின் பேச்சைச் சிதம்பரம் பிள்ளை தமிழில் மொழிபெயர்த்தார். 1919ல் 'ரௌலட் சட்ட' எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொள்ள காந்தி சென்னை வந்தார். அண்ணலின் தலைமையில் பிள்ளை எழுச்சிமிகு சொற்பொழிவாற்றி அனைவரையும் கவர்ந்தார். பிறகு 'கோயமுத்தூர் தொழிலாளர் பாங்கு ஸ்டோர்ஸ்' மேலாளர் பணி நிமித்தம் சென்னையிலிருந்து கோயமுத்தூருக்குச் சென்றார். 1922வரை அங்கு வசித்தார். அக்காலகட்டத்தில் மெல்ல மெல்ல அரசியலிருந்து ஒதுங்கத் துவங்கினார். காரணம், காந்தியின் அஹிம்சை, ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் அவருக்கு ஆர்வமில்லாமல் இருந்தது. காந்திஜியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளால் நாடு விடுதலை ஆவதற்கு வெகுகாலம் ஆகும் என்று சிதம்பரம் பிள்ளை நம்பினார்.

1921ல் மலபார் மாப்பிள்ளை முஸ்லீம்களின் எழுச்சியை ஆதரித்து இவர் உரையாற்றினார். அதனால் பிரிட்டிஷ் அரசு இவர்மீது வழக்குத் தொடுத்தது. பிள்ளை சொந்த ஜாமீன் அளிக்க வேண்டியிருந்தது. பின் மீண்டும் சென்னைக்குத் திரும்பினார். வழக்கம்போல் மீண்டும் வறுமை. பெரம்பூரில் மளிகைக்கடை நடத்தினார். அதுவும் பெரிய வெற்றியைத் தரவில்லை. குடும்பப் பொருளாதாரம் சீர்குலைந்தது. அதனால் மீண்டும் வழக்குரைஞராகப் பணி செய்ய அனுமதிக்கும்படி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவரும், சிதம்பரம் பிள்ளைமீது நன்மதிப்புக் கொண்டிருந்தவருமான வாலஸ் அவர்களுக்கு விண்ணப்பித்தார்.

மீண்டும் வழக்குரைஞர்
வாலஸ் அவர்களும் சிதம்பரம் பிள்ளை வழக்குரைஞராகப் பணி தொடங்கலாம் என்று தடையில்லாச் சான்றளித்து அனுமதி கொடுத்தார். அவர் நினைவாக தனக்குப் பிறந்த மற்றொரு ஆண் மகவுக்கு வாலேஸ்வரன் என்று பெயரிட்டார் சிதம்பரம் பிள்ளை. 1924ல் கோவில்பட்டிக்குச் சென்று வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். ஆனால், நேர்மையையே தனது நெறியாகக் கொண்டிருந்த அவரைச் சக வழக்குரைஞர்கள் எதிர்த்தனர். மனம் உடைந்தார் பிள்ளை. அவர்களோடு மோதுவது பயனற்றது என்பதை உணர்ந்து 1932ல் தூத்துக்குடிக்குச் சென்று வழக்குரைஞர் தொழிலைத் தொடங்கினார். ஆனாலும் அது முன்போல் வருமானம் தரவில்லை. அரசியல் மாநாடுகளில் கலந்து கொள்வது, கூட்டங்களில் சிறப்புரையாற்றுவது, ஓய்வு நேரத்தில் இலக்கிய நூல்களை வாசிப்பது என்றே அவரது பொழுது கழிந்தது.

இறுதிக்காலம்
சிறைக் கொடுமைகளால் ஏற்கனவே உடல் நலம் குன்றியிருந்த பிள்ளைக்கு 1935லிருந்து மேலும் உடல்நலம் சீர்கேடடையத் துவங்கியது. அப்போதும் அயராமல் உழைத்து, உரை எழுதி, மெய்ப்புப் பார்த்து சிவஞானபோதம் - விளக்கவுரை நூலை வெளியிட்டார். நாளடைவில் படுத்த படுக்கையாகும் நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்த பாபு ராஜேந்திர பிரசாத் தூத்துக்குடிக்கு வந்து பிள்ளையின் உடல்நலன் விசாரித்தார். “உங்கள் தேச சேவையே என்னைப் போன்றவர்களுக்கு ஓர் உந்து சக்தியாக இருந்தது” என்று மனம் திறந்து பாராட்டிவிட்டுச் சென்றார்.

1936ல் பிள்ளையின் உடல்நிலை மேலும் மோசமாகியது. தனது முடிவு தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்தில்தான் ஏற்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். அதனையேற்று தூத்துக்குடி காங்கிரஸ் அலுவலகத்திலேயே அவருடைய குடும்பத்தார் அவரைச் சில மாதங்கள் தங்க வைத்தனர். நிலைமை மேலும் மோசமாகவே தூத்துக்குடியில் உள்ள அவருடைய இல்லத்திற்கு அழைத்து வந்து பராமரித்தனர்.

நவம்பர் 18, 1936. தம்மைச் சுற்றி இருந்த குழந்தைகளிடம் பாரதியாரின் பாடல்களை ஒவ்வொன்றாகப் பாடச் சொல்லிக் கேட்டபடியே இன்னுயிரை நீத்தார் பிள்ளை. அப்போது அவருக்கு வயது 64.

வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களை வறுமையும், மக்களின் புறக்கணிப்புமே கொன்றன என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மாபெரும் அரசியல்வாதியை, போராட்டக்காரரை, பொதுவுடைமைவாதியை, உழைப்பாளிகளுக்கு உறுதுணையாக இருந்தவரை, சைவ சித்தாந்த அறிஞரை, தமிழ் இலக்கியவாதியை, முன்னோடி அறிஞரை என்றும் நினைவில் நிறுத்துதலே மானுட அறமாகும்.
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline