Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மரபணு மாற்றத்தின் மர்மம்! (பாகம் - 19)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2019|
Share:
முன்கதை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளரான என்ரிக்கே காஸ்ட்ரோ தன் செயற்கை மரபணு (Synthetic DNA) தொழில்நுட்ப நிறுவனம் பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்தாள். என்ரிக்கே, க்ரிஸ்பர் முறையால் எவ்வாறு மரபணு எழுத்துத் தொடர்களில் ஓரெழுத்தைக்கூட மாற்றி நோய்களை நிவர்த்திக்கவும், உணவு உற்பத்தியைப் பெருக்கவும் முடியும் என்று விளக்கினார். பிறகு க்ரிஸ்பர் முறையின் பலவீனங்களைப் பற்றி விளக்கி அவற்றைத் தன் ஆராய்ச்சியால் நிவர்த்தித்துள்ளதாகவும், ஆனால் திடீரென நுட்பம் தவறாக செயல்படுவதாகவும் தெரிவித்தார். சூர்யா முதலில் சக நிறுவனரான விக்ரம் மேத்தாவைச் சந்தித்தார். சூர்யா அவரது அளவுக்கதிக செலவுப் பழக்கத்தைச் சுட்டிக் காட்டவே விக்ரம் கொந்தளித்து குழுவை வெளியேற்றினார்! சூர்யா அடுத்து நிதித்துறைத் தலைவர் ஷான் மலோனியைச் சந்தித்து அவரது நண்பரைப்பற்றி யூகித்துத் தன் திறனில் நம்பிக்கையூட்டினார். அடுத்து நடந்தது என்ன? வாருங்கள் பார்ப்போம்!

*****


தன் எம்.பி.ஏ. வகுப்பு நண்பரான ஸ்டீவனைப் பற்றி சூர்யா விவரமாகக் கேட்கவே தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாகக் கொந்தளித்த ஷான் மலோனி, சூர்யாவின் யூக விளக்கங்களைக் கேட்டு சிலிர்ப்படைந்து, அவர்மேல் வளர்ந்த மதிப்புடனும் நம்பிக்கையுடனும், பிரச்சனை தீர்க்க என்ன உதவி வேண்டும் என்று பணிவாகக் கேட்டார்.

சூர்யா பவ்யமாகக் குனிந்து ஷானின் பாராட்டை ஏற்றுக்கொண்டு விசாரணையைத் துவங்கினார். "மிக்க நன்றி ஷான். முதலாவதாக நீங்கள் என்ரிக்கே குழுவில் எப்படிச் சேர்ந்தீர்கள் என்று கூறுங்கள். அதிலிருந்து மேலே பார்ப்போம்."

ஷான் பதிலளித்தார். "ஓகே, என்ரிக்கே எனக்கு ஹார்வர்டு எம்.பி.ஏ. முன்னாள் மாணவர் மின்னஞ்சல்குழு மூலமாகத்தான் அறிமுகமானார்..."

ஷாலினி இடைமறித்தாள். "என்ன? என்ரிக்கே ஹார்வர்டு எம்.பி.ஏ.வா? அது எனக்குத் தெரியாதே! ரியலி என்ரிக்கே? பிரமாதம்!" என்ரிக்கே பலமாகத் தலையசைத்து மறுத்தார். "சே சே, ஷாலினி, நோ வே! எனக்கும் எம்.பி.ஏ.வுக்கும் வெகுதூரம்! அதுவும் ஹார்வர்டு? நோ சான்ஸ்! என்ன நடந்ததுன்னு சரியா விளக்கிடுங்க ஷான்!" ஷான் முறுவலுடன் தொடர்ந்தார். "ரைட், சொல்றேன்! ஷாலினி, நீங்க நினைக்கறா மாதிரியில்லை. என்னோட ஹார்வர்டு சக மாணவ நண்பர் ஒருத்தர், ஒ! அதான் சூர்யா கண்டுபிடிச்சாரே ஸ்டீவ், அவரேதான், என்ரிக்கே நிறுவனத்துல மூலதனமிட்டார். அப்போ நிறுவனத்துக்கு நிதித் துறைத் தலைவர் ஒருவர் வேணும்னு என்ரிக்கே கோரிக்கை வைக்கவே, என்னை என்ரிக்கேவுக்கு அறிமுகப்படுத்தினார். அவ்வளவுதான்."

என்ரிக்கே தலையசைத்து ஆமோதித்தார். "நான் ஷானுடன் பேசினேன். எனக்கு அவர் திறன்மேல மிக்க நம்பிக்கை பிறந்துச்சு. அதனாலதான் அவரை உடனே பிடிச்சு இந்தப் பதவியில அமர்த்திக்கிட்டேன்!" ஷான் பவ்யமாகத் தலை குனிந்து அவரது பாராட்டை ஏற்றுக் கொண்டார்.

சூர்யா விசாரித்தார். "இப்போ ஸ்டீவ்கிட்ட ஏன் தற்போதைய பிரச்சனையைப் பத்திப் பேசிக்கிட்டிருந்தீங்க?"

ஷான் பலத்த பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு விளக்கலானார். "அதை ஏன் கேக்கறீங்க போங்க! இந்த ஸ்டீவ் மூலதனம் இட்டதோட நிக்காம, ஒவ்வொரு வாரமும் கூப்பிட்டு எப்படிப் போகுது நிறுவனம்னு ஒரே குடாய்ச்சல்."

சூர்யா குழப்பத்துடன் கேட்டார். "மூலதனமிடறவங்க சாதாரணமா இப்படி ரொம்ப நுணுக்கமா அடிக்கடி விசாரிக்கறதில்லயே. எப்பவாவது நிறுவனமே செய்தியறிக்கை மின்னஞ்சல் அனுப்புவாங்க, அவ்வளவுதானே? ஸ்டீவ் ஏன் இப்படி நெருக்கறார்?"

கிரண் இடைமறித்தான். "எங்கம்மா நட்சத்திரேசன் நட்சத்திரேசன்னு திட்டுவா என்னை. அமர்சித்ரகதா புக்ல அரிச்சந்திரன் கதை படிச்சிருக்கேன் அதுலகூட வரும். அந்த மாதிரி நச்சரிப்பு இல்லை ஷாலு?" ஷாலினி அவனைப் பட்டெனத் தலையில தட்டி, "சே! சும்மா கிட கிரண்! எதாவது சம்பந்தா சம்பந்தமில்லாம பினாத்தாதே!" என்று திட்டி அடக்கினாள்!
ஷான் பலத்த பெருமூச்சு விட்டார். "ஸ்டீவ் பெரும் மூலதனமிட்டது மட்டுமல்லாம, தனது நண்பர்கள் பலரையும் நிறைய மூலதனம் இடுமாறு வற்புறுத்தி நிதி திரட்டியிருக்கார். அதனால, தன் நண்பர்கள் மூலதனம் பாதுகாப்பா இருக்கா, நல்ல பலன் கிடைக்குமான்னு அவருக்கு ஒரே கவலை. அதுதான் இப்படி நச்சரிப்பு. சரி போகட்டும், பரவாயில்லை. அவரை நான் சமாளிச்சுக்கறேன். இப்போ இந்தப் பிரச்சனையை தீர்க்கற வழி பாருங்க ப்ளீஸ்! உங்களைச் சந்திக்கற வரைக்கும் எனக்கும் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமா கரைஞ்சு குறைஞ்சுகிட்டுத்தான் வந்தது. ஆனா உங்க துப்பறியும் திறன் கொஞ்சம் நம்பிக்கையைத் துளிர் விட வச்சிருக்கு!"

சூர்யா தலை வணங்கிப் பாராட்டை ஏற்றுக்கொண்டு, பதிலளித்தார். "என்னால ஆன வரைக்கும் உங்க நம்பிக்கைக்கு பலனளிக்க முயற்சிக்கறேன். சொல்லுங்க இந்த ஸ்டீவ் மாதிரி எத்தனை நண்பர்களைத் தூண்டி நம்பவச்சு இந்த நிறுவனத்தில மூலதனம் இட வச்சிருக்கீங்க?"

என்ரிக்கே குறுக்கிட்டுப் பதிலளித்தார். "ஒ! அதை ஏன் கேட்கறீங்க, ஷான் நிதி திரட்டறதுல ஒரு மந்திரவாதின்னுதான் சொல்லணும். அவரோட நண்பர் நெட்வொர்க்கில ரொம்ப பலமா பரிந்துரைச்சு பல மில்லியன் டாலர்களை அவர் ஒருத்தரே திரட்டியிருக்கார்னா பாத்துக்கங்களேன்!"

ஷானின் முகத்தில் பெருமிதமும் ஆனாலும் உள்ளூற நிலவிய கவலையும் ஒரே சமயத்தில் தெரிந்தன. சூர்யா யோசனையுடன் ஒரு நிமிடம் மௌனமாக இருந்து விட்டு, திடீரென கிரணைச் சுட்டிக் காட்டி "ஷான், இந்தக் கிரணும் நிதித்துறை நிபுணன்தான். ஆனா வால் ஸ்ட்ரீட்ல வேலை செஞ்சதேயில்லை. இங்கதான் ஏதோ டெக்னிகல் ட்ரேடிங்குன்னு கம்ப்யூட்டரை வச்சு பங்கு சந்தையில வாங்கல் விற்றல் செய்யற ஒரு சிறு நிறுவனத்தில வேலை செய்யறான். ஆனா எனக்கும் உதவியா இருக்கான். கிரண், இப்ப இருக்கற பிரச்சனை தீரலைன்னா மூலதனமிட்டவர்களுக்கு என்ன கிடைக்கும்?"

கிரண் கழிவறையில் ஃப்ளஷ் செய்வதுபோல் சைகை செய்து ரொய்ங்ங்க் என்னும் ஒலியையும் எழுப்பி கையாலும் ஒரு விரலைக் கீழ்காட்டி சுற்றிச் சுற்றி கீழே இறங்கி வெளியேறுவது போல் சைகை செய்து காட்டி, "அப்படியே போக வேண்டியதுதான், அவ்வளவுதான்" என்று கூறினான்.

ஷானின் முகத்தில் கவலை அதிகரித்தது. சூர்யா விர்ரென ஷான் பக்கம் திரும்பி அவரைச் சுட்டிக்காட்டி, "இது உங்களுக்கு அதீதக் கவலை கொடுத்திருக்கணுமே? அவ்வளவு நண்பர்களிடமிருந்து மில்லியன் கணக்குல வாங்கியிருக்கீங்க?!"

ஷான் கவலையுடன் தலையாட்டி ஆமோதித்தார். "யெஸ், யெஸ் சூர்யா, கவலைதான். இல்லாம எப்படி இருக்க முடியும்? இப்ப ஸ்டீவ் ஒருத்தர்தான் நச்சரிக்கறார். விஷயம் வெளியில பரவிச்சுன்னா என் தொலைபேசி விடாம மணியடிக்கும். அதுனாலதான் உங்களைத்தான் நம்பியிருக்கறதா சொன்னேன்! அதுனால என்ன இப்போ?"

சூர்யா பதிலளிக்காமல் மேற்கொண்டு வினவினார். "நிறுவனத்தின் வரவு செலவு என்ன? வங்கியில எவ்வளவு ரொக்கமிருக்கு?"

ஷான் சோகமாக முறுவலித்தார். "வரவு ஏது?! எல்லாம் செலவுதான்.

மாசத்துக்கு ஒரு மில்லியன் டாலர் செலவு செஞ்சுகிட்டிருக்கோம். திரட்டின பணமெல்லாம் கரஞ்சு போயிட்டிருக்கு. சீக்கிரம் பிரச்சனை தீர்ந்து எங்க நுட்பத்தை நிரூபிச்சு பெரிய அளவு நிதி திரட்டலன்னா, அவ்வளவுதான்!" என்று கூறிவிட்டு கதவை இழுத்து மூடிப் பூட்டுவதுபோல் சைகை செய்தார்.

என்ரிக்கேயும் கவலையுடன் தலையசைத்து ஆமோதித்தார்.

சூர்யா திடீரென ஒரு அதிர்வேட்டு வீசினார். "ஆனா ஷான், பிரச்சனையை வேணும்னே உருவாக்கின யாருக்காவது நுட்பம் வேலை செய்யுதுங்கற உண்மையைச் சொல்லி, ஆனா நிறுவனத்தை குறைஞ்ச விலைக்கு வித்து அப்புறம் கிடைக்கற லாபத்துல பங்கு வாங்கிக்கலாம் இல்லயா? உங்க நிதித் துறையில இந்த மாதிரி விஷயம் நிறைய நடக்குதுன்னு கேள்விப் பட்டிருக்கேனே!"

ஷான் கொந்தளித்து முகமெல்லாம் சிவந்து கையை பலமாக ஆட்டிச் சூர்யாவைச் சுட்டிக் காட்டி, "ஹேய், ஹேய், ஹேய்! என்ன சொல்றீங்க? வார்த்தையை அளந்து பேசுங்க. என்ன என்ரிக்கே இது? பிரச்சனையைத் தீர்ப்பார்னு நம்பினா, என்மேலயே கன்னா பின்னானு சேற்றை வாரி இறைக்கறாரு? இந்த மரபணு நுட்பம் எவ்வளவு நுண்ணியமானது? நிதித் துறைக்காரனான நான் எப்படிப் பிரச்சனையை வேணும்னே உருவாக்க முடியும்? வடிகட்டின மடத்தனமா இருக்கு!" என்றவர் சூர்யாமீது மீண்டும் சீறினார். "கெட் அவுட்! உங்க முகத்தை இன்னும் ஒரு நொடிகூடப் பாக்கமாட்டேன்" என்று கூறிவிட்டு அறையின் மூலைக்குச் சென்று, தலைமேல் கை வைத்துக்கொண்டு ஜன்னல் வழியாக வெளி நோக்கலானார்.

ஷாலினி பொறுக்க இயலாமல் பொங்கினாள். "என்ன, மடத்தனமா? சூர்யா சொல்றது என்னிக்குமே மடத்தனமாகாது! உங்களமாதிரி எத்தன பேரு பாத்திருக்கோம் தெரியுமா? மைண்ட் யுவர் மேனர்ஸ்! வாங்க போகலாம் இந்த ஆளுகிட்ட இனி பேச ஒண்ணுமில்ல!" என்று கிரணை இழுத்துக்கொண்டு வெளியேறினாள். சூர்யா ஆழ்ந்த யோசனையொடு பின்தொடர்ந்தார்.

என்ரிக்கே மன்னிப்புக் கோரினார். "சாரி ஷான். சூர்யாவுக்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன். நிச்சயமா அப்படியிருக்க முடியாதுன்னு எனக்குத் தெரியாதா என்ன? சரி சூர்யா அடுத்த குழு உறுப்பினரைப் பாத்துப் பேசலாம் வாங்க" என்று கூறிவிட்டுத் தானும் வெளியேறினார்.

சூரியா சகாப்தத்தின் தடாலடித் துப்புத் துலக்கலை வரும் நாட்களில் பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline