Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | வாசகர்கடிதம் | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
மாயாவி
- அரவிந்த்|ஜூன் 2019|
Share:
வெகுஜன எழுத்தென்பது ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. கல்கி, அகிலன், நா.பார்த்தசாரதி, ர.சு. நல்லபெருமாள், சுஜாதா, சுகி. சுப்ரமணியம், பி.வி.ஆர். என்று நீளும் அந்த வரிசையில் குறிப்பிடத்தக்க ஒருவர் 'மாயாவி'. இயற்பெயர் எஸ்.கே. ராமன். அக்டோபர் 2, 1912 அன்று திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள சாம்பூர் வடகரையில் பிறந்தார். தென்காசி போர்டு உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை பயின்றார். தமிழாசிரியர் நாறும்பூநாத தேசிகர் மூலம் தமிழிலக்கியம் அறிமுகமானது. அவர் கலைமகளைப் படிக்கும்படித் தூண்டவே நூலகம் சென்று தொடர்ந்து அந்த இதழை வாசித்து, இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார். இந்த வாசிப்பு பல கதவுகளைத் திறந்து விட்டது. அதுவே பிற்காலத்தில் பல நாவல்களைக் கலைமகளில் எழுதவும், போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுபெறவும் காரணமானது.

குடும்பச்சூழலால் பணி செய்யும் நிர்ப்பந்தம் விரைவிலேயே ஏற்பட்டது. சொந்தமாக புகைப்பட ஸ்டுடியோ ஒன்றைச் சில ஆண்டுகள் நடத்தினார். அது போதிய லாபம் தரவில்லை. அதனால் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து, தட்டெழுத்து பயின்று தேர்ந்தார். சென்னையில் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் உதவியாளராகச் சிலகாலம் பணி புரிந்தார். தொடர்ந்து, மை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரதிநிதியாகச் சில ஆண்டுகள் பணி செய்தார். பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான பணிகளை மேற்கொண்டதால் கிடைத்த அனுபவங்கள் இவரை எழுதத் தூண்டின. இளைஞராக இருந்த போது சிறுவயதுக் குழந்தைகளைக் கூட்டி அவர்களுக்குக் கதை சொல்வது இவரது வழக்கம். பெரும்பாலும் மந்திர, மாயாஜாலக் கதைகளையே சொல்வார். அக்கதைகளில் ஒன்றின் கதாபாத்திரமான 'மாயாவி' என்பதையே தனது புனைபெயராகச் சூட்டிக் கொண்டு கதை எழுதத் தொடங்கினார். முதல் சிறுகதை 'ஜாதி வழக்கம்' கலைமகளில் 1937ல் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கி போன்ற இதழ்களிலும் இவரது சிறுகதைகள் பதிப்புக் கண்டன.

தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயின்றவர்களுக்கு பம்பாயில் நல்ல வேலை வாய்ப்புகள் இருப்பதை அறிந்தவர், 1942ல் பம்பாய் புறப்பட்டுச் சென்றார். இங்கிலாந்தைத் தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் ஒன்றில் சில காலம் தட்டெழுத்தாளராகப் பணி புரிந்தார். பின் அமெரிக்க வர்த்தக நிறுவனம் ஒன்றில் சுருக்கெழுத்தாளராகப் பணி தொடர்ந்தார். அங்கு சென்றபோதும் ஓய்வு நேரத்தில் கதை, கட்டுரைகள் எழுதி வந்தார். இவரது கதைகளுக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. 'மாயாவி' என்ற பெயரின் ஈர்ப்பும் அதற்கு ஒரு காரணமானது. பிரபல இதழ்களில் கட்டுரைகளும், தொடர்கதைகளும் தொடர்ந்து வெளியாகின. பல நாவல்களுக்குப் பரிசுகளும், பாராட்டுக்களும் கிடைத்தன. மாயாவி நாடறிந்த எழுத்தாளரானார். தொடர்ந்து மத்திய அரசின் திரைப்படப் பிரிவில், ஆவணப் படங்கள், கருத்து விளக்கப் படங்கள், பிரச்சாரப் படங்கள் போன்றவற்றிற்குத் தமிழில் விளக்கவுரை எழுதிப் பேசுபவராக எட்டாண்டுக் காலம் பணியாற்றினார். பின்னர், அகில இந்திய வானொலியில் வாய்ப்பு வந்தது. டில்லியில் இயங்கிவந்த தென்கிழக்காசியத் தமிழ் ஒலிபரப்புப் பிரிவில் எழுத்தாளராகப் பணியாற்றினார். 1961 முதல் அங்கிருந்து சென்னை வானொலி நிலையத்துக்கு மாற்றப்பட்டு நிலைய எழுத்தாளராகப் பணிபுரிந்தார். வானொலிக்காகப் பல நாடகங்களை எழுதியிருக்கிறார்.
பல நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியிருக்கும் மாயாவிக்குத் தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. பலர் பேசத் தயங்கிய மனிதர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை அவர் பேசியதும் ஒரு காரணம். வளவளவென்று கதையை வளர்த்தாமல், ஆரம்பம், நடு, முடிவு என்ற தெளிவான வடிவ உத்தியைப் பயன்படுத்தி எழுதியிருக்கிறார். தேவையற்ற வர்ணனைகளுக்கு இவரது கதைகளில் இடமில்லை. தெளிந்த நடை, நேரடியான சித்திரிப்பிலேயே இவரது பெரும்பாலான சிறுகதைகள் அமைந்துள்ளன. இலங்கை, பர்மா ஆகிய நாடுகளிலிருந்து வெளியான பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் இடம்பெற்றன.

ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், பல மேடை நாடகங்களை இவர் எழுதியுள்ளார். பதினைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'வாடாமலர்' நாவல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு வென்றது. 'கதி', 'மக்கள் செல்வம்', 'சலனம்', 'அன்பின் உருவம்', 'ஒன்றே வாழ்வு' போன்றவை குறிப்பிடத்தகுந்த நாவல்களாகும். 'சாமுண்டியின் சாபம்' என்ற இவரது சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானது. பலதொகுப்பு நூல்களில் இவரது தேர்ந்தெடுத்த சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவரது நாவல்களில் சில திரைப்படமாகியுள்ளன. பல நாடகங்கள் மேடையேறி உள்ளன. இவரது படைப்புகள் பலவும் பல பதிப்புகள் கண்ட பெருமையுடையன. மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். ஆங்கில, அமெரிக்க நாவலாசிரியர்கள் சிலரது நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். அவற்றுள் பத்து நாவல்களும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் புத்தக வடிவம் பெற்றன. 'ஸ்டேஜ் மாயா' என்ற பெயரில் தாமே அமெச்சூர் நாடகக்குழு ஒன்றை உருவாக்கி, தயாரிப்பாளர், இயக்குநராகவும் இருந்து, பல நாடகங்களை நடத்திய அனுபவம் இவருக்கு உண்டு. நல்லகதையம்சமும், கருத்துச் செறிவும் கொண்ட படைப்புகளை எழுதியவர் என்ற பெருமை மாயாவிக்கு எப்போதும் உண்டு.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline