Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ம.இலெ. தங்கப்பா
- அரவிந்த்|மே 2019|
Share:
காக்கா மூக்குச் சாமியார்
கழுதை மேலே ஏறினார்
மூக்காத்தா தோப்பிலே
மூலிகைக்குப் போகிறார்

வைக்கோல் புரி கடிவாளம்
வாகைக் குச்சி சாட்டைக்கோல்
உட்காரக் கோணிப்பை
ஓட்டைச் சட்டி தமுக்கு

குட்டி நாய்கள் வாய்ப்பாட்டு
கோழி, வாத்து நாட்டியம்
சிட்டுக்குருவி பிப்பீப்பி
தென்னை ஓலை சாமரம்

*****


குருவி மூக்குக் காரன்
குண்டுத் தொப்பைக் காரன்
நண்டு பிடிக்கப் போனான்
வண்டு காலில் கடிக்க
நொண்டி நடக்கலானான்

என்பன போன்ற அழகான, குழந்தைகளைக் குதூகலப்படுத்தும் பாடல்களை எழுதியவர் மதனபாண்டியன் லெனின் தங்கப்பா என்னும் ம.இலெ. தங்கப்பா. குழந்தை இலக்கியப் படைப்புகளுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றிருக்கும் தங்கப்பா, தென்காசியை அடுத்த குறும்பலாப்பேரியில் மார்ச் 8, 1934 அன்று மதனபாண்டியன் - இரத்தினமணி இணையரின் மகனாகப் பிறந்தார். பாரம்பரிய விவசாயக் குடும்பம். தந்தை தமிழாசிரியர். அத்தோடு விவசாயத்தையும் விடாது செய்தார். தாயாரும் தமிழறிவு மிக்கவர். அந்தச் சூழலில் வளர்ந்ததால் இளவயதுமுதலே தமிழார்வ மிக்கவராக வளர்ந்தார் தங்கப்பா. தந்தையிடமிருந்து கம்பராமாயணம், வில்லிபாரதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். நல்ல நினைவாற்றலும் இருந்ததால் தனிப்பாடல் திரட்டு உள்ளிட்டவற்றை விரைவில் கற்றறிந்தார். விருதுநகர், குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், கோபாலசமுத்திரம் போன்ற ஊர்களில் பள்ளிப்பருவம் கழிந்தது. பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இளங்கலை பொருளியல் படிப்பை நிறைவுசெய்தார். கல்லூரியில் படிக்கும்போதே, மதக்கல்வித் தேர்வு ஒன்றில் கிறித்தவ மக்கள் கிறித்துவையே புரிந்து கொள்ளாமையையும், அவர்கள் வாழ்க்கையின் பொய்மை, போலித்தனங்களையும் கடுமையாகச் சாடி எழுதினார். தேர்வு மதிப்பீட்டாளராக இருந்த வெள்ளைக்காரப் பாதிரியார் இவருக்கு முதல் மதிப்பெண் அளித்தார். அது உள்ளதை, உண்மையை, உள்ளவாறு துணிந்துகூறும் மனப்பாங்கை வளர்த்தது.

Click Here Enlargeகல்லூரிக்காலம் வாழ்வின் முக்கிய காலகட்டமாக இருந்தது. நிறையத் தமிழ், ஆங்கில நூல்கள் அறிமுகமாகின. ஓய்வுநேரம் முழுவதும் வாசிப்பில் கழிந்தது. தமிழ் இலக்கியங்களின் ஓசைநயம் இவரை மிகவும் கவர்ந்தது. ஆங்கில நூல்கள் இவருக்குப் புதியதொரு திறப்பை அளித்தன. தாகூர், பாரதிதாசனின் படைப்புகள் இவரை ஈர்த்தன. ஆர்வத்தால் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றார். மொழிபெயர்ப்பில் ஆர்வம் ஏற்பட, சிறு சிறு கவிதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கும் மொழிபெயர்த்து அனுபவம் பெற்றார். 'The forsaken Merman' இவரது முதல் மொழிபெயர்ப்புக் கவிதை. கல்லூரிப் பாடமாக இருந்த அக்கவிதை நூல் மிகவும் கவரவே அதனை மொழிபெயர்த்தார். 'வானம்பாடி' இதழில் இவரது முதல் மொழிபெயர்ப்புக் கவிதை வெளியானது. பாவேந்தரின் 'குயில்' இதழில் ம. இலெனின் என்ற பெயரில் இவரது கவிதைகள் வெளியாகின. தொடர்ந்து இனமுழக்கம், தமிழகம், தென்றல், பூஞ்சோலை, அரும்பு, கவியுகம், தெளிதமிழ், கண்ணியம், தமிழ்ச்சிட்டு போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகி, பரவலான வாசக கவனம் பெற்றன.

கல்வியை முடித்ததும், தமிழகத்தின் சில பள்ளிகளில் வரலாறு, ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார் பின்னர் புதுச்சேரியில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. தான் காதலித்த விசாலாட்சியை மணம் செய்துகொண்டார். தனித்தமிழின் மீது கொண்ட ஆர்வத்தால் தன் மகவுகளுக்குச் செங்கதிர், விண்மீன், பாண்டியன், இளம்பிறை, மின்னல் என்று பெயர் சூட்டினார். புதுச்சேரிப் பள்ளிகளில் சுமார் பத்தாண்டுகள் ஆசிரியப் பணிபுரிந்த நிலையில், புதுவை அரசுக் கல்லூரியில் விரிவிரையாளராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. 1968 முதல் 1994 வரை புதுச்சேரி அரசின் சார்புக் கல்லூரிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பேராசிரியராகப் பணியாற்றினார். பெரும்பாலான ஓய்வு நேரத்தை மாணவர்களுடன் செலவிட்டார். எஞ்சிய நேரத்திலேயே படைப்பாக்க, மொழிபெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். தமிழ், தமிழின மறுமலர்ச்சி போன்றவற்றில் ஈடுபாடு கொண்டிருந்த தங்கப்பா, பாவலரேறு பெருஞ்சித்திரனார் மீது அன்பும் மதிப்பும் கொண்டவர். பெருஞ்சித்திரனார் ஆசிரியராகப் பணியாற்றிய 'தென்மொழி' இதழில் இவர் உறுப்பாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். சாதி, மத வேறுபாடு, மூட நம்பிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தவர். அவற்றைத் தனது படைப்புகளிலும் முன் வைத்தார்.

தமிழின் செவ்வியல் படைப்புகளை அதன் தரம் குறையாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் என்கிற சிறப்பு இவருக்குண்டு. இவரது படைப்புகள் Caravan, Cycloflame, Modern Rationalist, Youth Age, New Times, Observer போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. ஏ.கே. ராமானுஜத்தைத் தொடர்ந்து இவரது ஆங்கில மொழியாக்கங்களும் புகழ் பெற்றவையாகும். இவரது 'Red lilies frightened birds' என்னும் முத்தொள்ளாயிர மொழிபெயர்ப்பு நூல் குறிப்பிடத்தக்கது. 'Love Stands Alone' (பெங்குவின் வெளியீடு) என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதற்கு 2012ம் ஆண்டின் மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 'Hues And Harmonies From An Ancient Land' என்ற தலைப்பில் சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் இரண்டு பாகங்களாக மொழிபெயர்த்துள்ளார். வள்ளலார் மீது தங்கப்பாவுக்கு மிகுந்த ஈடுபாடு. அவரது பாடல்களை விரும்பிச் சுவைத்தவர். 'Songs Of Grace' என்ற தலைப்பில் திருவருட்பாவை ஆங்கிலத்தில் பெயர்த்தார். பாரதிதாசன் பாடல்களை 'Selected Poems of Bharathidasan' என்ற தலைப்பிலும், இருண்ட வீடு கவிதையை 'House of Darkness' என்ற தலைப்பிலும் மொழி பெயர்த்தார். 'This Question of Medium' என்பது இவரது ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுப்பாகும். 'Meadow Flowers' இவரது ஆங்கிலக் கவிதைகளின் தொகுப்பு. தாகூர் பாடல்கள், பாம்பாட்டிச் சித்தர், பட்டினத்தார், தாயுமானவர், சிவவாக்கியர், நாலடியார், விவேகசிந்தாமணி போன்றவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களை 'Tamil Thoughts' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்குப் பல படைப்புகளைத் தந்துள்ளார். 'மண்ணின் கனிகள்' என்ற நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொணர்ந்த நூலாகும். ரஷ்யக் கவிஞரான இரசுல் கம்சுதாவ் பாடல்களை, 'மலைநாட்டு மலர்கள்' என்ற தலைப்பில் தந்துள்ளார். 'கனவுகள்' என்பது ஆங்கிலப் பாடல்களின் தமிழாக்கம். வாணிதாசன், தமிழ் ஒளி பாடல்கள், பாவண்ணனின் சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். 'தமிழ் நானூறு' என்ற தலைப்பில் அகநானூறு, புறநானூறு போன்ற சங்கப் பாடல்களின் வடிவில் பல செய்யுள்களை இயற்றியிருக்கிறார். 'எங்கள் வீட்டுச் சேய்கள்', 'இயற்கை விருந்து', 'மழலைப்பூக்கள்', 'சோளக்கொல்லை பொம்மை', 'வேப்பங்கனிகள்', 'கள்ளும் மொந்தையும்', 'மயக்குறு மக்கள்', 'பின்னிருந்து ஒரு குரல்', 'பனிப்பாறை நுனிகள்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த கவிதை நூல்களாகும். 'எது வாழ்க்கை?', 'கொடுத்தலே வாழ்க்கை', 'திருக்குறளும் வாழ்வியலும்', 'வாழ்க்கை அறிவியல்', 'பாட்டு வாழ்க்கை', 'நுண்மையை நோக்கி', 'பாரதிதாசன்-ஓர் உலகப்பாவலர்', 'மொழிமானம்' போன்றவை இவரது முக்கியமான கட்டுரைத் தொகுதிகள். 'இயற்கையாற்றுப்படை', 'புயற்பாட்டு', 'பின்னாலிருந்து ஒரு குரல்' போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த படைப்புகளாகும். 'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்ற தலைப்பில் இவரது பாடல்களைத் தொகுத்து தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 'பாடுகிறேன்', 'தேடுகிறேன்', 'அடிச்சுவடுகள்', 'கள்ளும் மொந்தையும்', 'இயற்கையாற்றுப்படை', 'அகமும் புறமும்', 'பாட்டெனும் வாள் எடுப்பாய்', 'வாழ்க்கைமேற் காதல்', 'மரபுப்பாடல் செத்துவிட்டதா?', 'இடித்துரைப் பாடல்கள் (வசையமுது)', 'நையாண்டிமாலை (பாட்டும் உரையும்', 'வாழ்வியல் அறிவீர்' போன்றவை முக்கியமான நூல் தொகுதிகள். பாரதியின் குயில்பாட்டால் கவரப்பட்டு அதற்கு எதிர்நிலையாக இவர் எழுதிய 'ஆந்தைப் பாட்டு' மிகுந்த சொற்சுவையும் பொருட்சுவையும் கொண்டது. "தாம் உணர்ந்ததை கற்போர் உணரும் வகையில் சொற்களுக்கு உயிரூட்டுபவர்களே கவிஞர்களாகின்றனர். அவ்வாறு சிறந்த சொல்லால் எளிமையாகவும், பொருளால் அருமையாகவும் புனையப்பட்ட ஆந்தைப் பாட்டு அழகியல் நிறைந்த நூலாக இருப்பதனைத் தெள்ளிதின் உணர்ந்துகொள்ள முடிகிறது" என்று ஆந்தைப் பாட்டு நூலை மதிப்பிடுகிறார், முனைவர் ம.ஏ. கிருட்டிணகுமார்.

பாரதியார் பாடல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார். அதற்காகக் கல்கத்தா தமிழ்ச்சங்கத்தின் பரிசு பெற்றார். அரவிந்தரிடம் ஈடுபாடு கொண்டவர். அரவிந்தர் பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக அரவிந்தர் ஆசிரமத்தின் சிறப்புப் பரிசைப் பெற்றிருக்கிறார். நவீன கவிதைகள் சிலவற்றையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். குழந்தைகளுக்காக இவர் எழுதிய பாடல்கள் முக்கியமானவை. "தங்கப் பாப்பாவுக்கு தங்கப் பாடல்கள்" பலராலும் பாராட்டப்பட்ட ஒன்று. இது குறுந்தகடாகவும் வெளியானது. குழந்தை நூலான 'சோளக்கொல்லை பொம்மை'க்கு 2011ம் ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. அரிதாகச் சில சிறுகதைகளும் எழுதியிருக்கிறார் தங்கப்பா.

தமிழக அரசின் பாவேந்தர் விருது, பகுத்தறிவாளர் கழகத்தின் மொழிபெயர்ப்பு விருது, பெரியார் விருது, குழந்தை இலக்கியத்துக்கான பால புரஸ்கார் - சாகித்ய அகாதமி விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, சிற்பி இலக்கிய விருது உட்பட பல்வேறு சிறப்புகளும் பெற்றிருக்கும் தங்கப்பா, ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புக்காக ஒருமுறை, குழந்தை இலக்கியப் படைப்பிற்காக ஒருமுறை என இரண்டு சாகித்ய அகாதமி விருதுகள் பெற்ற சிறப்புக்குரியவர். டில்லி சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பாளருள் ஒருவராகப் பணிபுரிந்தவர். புதுச்சேரி தமிழ்வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும், புதுச்சேரி இயற்கைக் கழகத்தின் தலைவராகவும், புதுவை அரசின் மொழிபெயர்ப்புக் குழுவின் உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். தனித்தமிழ் இதழான 'தெளிதமிழ்' இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தவர்.

தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அடக்கமாக, அமைதியாக வாழ்ந்த ம.இலெ. தங்கப்பா, மே 31, 2018 அன்று காலமானார். இவரது உடல் அவரது விருப்பத்தின்படி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொடையாக அளிக்கப்பட்டது.

மிகச்சிறந்த படைப்பாளி, மிகச்சிறந்த மொழியறிவு கொண்டவர். ஆனால் ஒருபோதும் தன் அறிவைப் பிறர்மீது சுமத்தியதில்லை. "ஆணவத்தை உடைத்துப் பண்படுத்தி, அதில் அன்பென்னும் விதையை ஊன்றி செடியாக மலர்ந்து நின்ற தலைசிறந்த பண்பாளர் தங்கப்பா" என்னும் அவரது மாணவரான எழுத்தாளர் பாவண்ணனின் வரிகள் முற்றிலும் உண்மை.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline