Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | மேலோர் வாழ்வில்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | முன்னோடி | கவிதைப் பந்தல் | ஹரிமொழி | சாதனையாளர் | சிறுகதை | சமயம் | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
திருமணஞ்சேரி கல்யாணபுரீஸ்வரர்
- சீதா துரைராஜ்|மே 2019|
Share:
திருமணஞ்சேரி தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. காவிரி நதிக்கு அருகில் உள்ள தலம். மாயவரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும், குற்றாலம் ரயில் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

தலச்சிறப்பு
இத்தலம் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. காவிரியாற்றின் வடகரையில் அமைந்த, பாடல்பெற்ற சிவஸ்தலங்களில் இத்தலம் 25வது தலமாகும். இறைவனின் பெயர், உத்வாகநாதர், கல்யாணபுரீஸ்வரர். அன்னையின் பெயர், கோகிலாம்பாள். தலவிருட்சம் கருஊமத்தை மரம், வன்னி மரம், கொன்றை மரம். தீர்த்தம், சப்தசாகரம், மங்கள தீர்த்தம், கௌதம தீர்த்தம். சப்தசாகர தீர்த்தத்தில் இருந்து சிவபெருமானுக்குத் திருமணமாலை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலில், சிவபெருமானும் அன்னை பார்வதியும் திருமணக்கோலத்தில் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டிருக்க, அன்னை வெட்கம் மேலிடத் தரிசனம் தருவது பேரழகு.

திருமணஞ்சேரி ஆலயம் விவாகம் நடந்தேறப் பிரார்த்திக்கும் தலம் என்பது உலகறிந்த விஷயம். ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இக்கோவில் சோழ அரசர்களால் கட்டப்பட்டது. கல்யாணத்திற்காகப் பிரார்த்தனை செய்யும்போது அர்ச்சனையில் விவாகத்திற்கு முன்பும், விவாகம் நடந்தேறிய பின்னும் தேங்காய், மஞ்சள், குங்குமம், வெற்றிலை-பாக்கு, பழம், சர்க்கரை, கல்கண்டு இவற்றுடன் பிரார்த்தனை செலுத்த வேண்டும். அர்ச்சகர் பூஜை சாமான்களைச் சேகரித்து அர்ச்சனை செய்து திரும்பப் பிரசாதம் கொடுத்ததும், தம்பதிகள் மாலை மாற்றிக்கொள்வர். விவாகத்திற்கு காத்திருப்பவர்களுக்கும் மேலே செய்யவேண்டியது என்ன என்பதை அர்ச்சகர் கூறுவார். எலுமிச்சம்பழம் ஆரோக்கியத்தையும், பூமாலை சந்தோஷத்தையும், விபூதி ஆசிகளையும், குங்குமம் மகாலட்சுமியின் ஆசியையும், மஞ்சள் மங்கலத்தையும் அளிப்பதாக ஐதீகம். கல்யாணம் முடிந்ததும் பூமாலைகளைக் கல்யாணசுந்தரர் சன்னதியில் வைத்து விடவேண்டும். இத்துடன் கல்யாணப் பிரார்த்தனை முடிகிறது.

இக்கோவிலில் நவக்கிரக சன்னிதி இல்லை. ராகு, கேது தோஷம் நீங்க பக்தர்கள் இவ்விடம் பிரார்த்திக்கின்றனர். ராகு பகவான் காதில் குண்டலம், மேனியில் ஆபரணங்களுடன் விளங்குகிறார். அமாவாசை தினத்தன்று ராகுவுக்குப் பால் அபிஷேகம் செய்து பால் பாயசம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. அதை உட்கொண்டால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பிறந்ததும் கால் கொலுசு, மணி ஆகியவை காணிக்கையாகவும், உண்டியலில் பணமாகவும் செலுத்தப்படுகிறது.

சிவபெருமான் தியானத்தில் இருக்கும்போது மன்மதன் தொந்தரவு கொடுத்ததால் கோபம் கொண்ட சிவன் தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கினார். மன்மதன் தவறை உணர்ந்து சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டான். இந்தச் சம்பவம் திருக்குறுக்கை என்னும் தலத்தில் நடந்தது. பின்னர் இத்தலத்து இறைவனருளால் மன்மதன் சாபம் நீங்கப் பெற்றான்.

கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றடுக்குக் கோபுரங்கள், இரண்டு பிரகாரங்கள் உள்ளன. முதல் பிரகாரத்தில் அன்னை தெற்கு நோக்கியும், இறைவன் ஈசான்யத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
அர்த்த மண்டபத்தில் அகஸ்தியர், நடராஜர் உள்ளனர். பிள்ளையார், சிவபெருமானின் யாகம் முடிவடையும் கோலத்துடன் உள்ளார். பைரவர், மூலவரை நோக்கி உள்ளார். வேள்வி நடக்கும்போது தட்சன் பறவைகளை அனுப்பித் தொந்தரவு கொடுத்தபோது, துவாரபாலகர்கள், அவர்களை மோதிரமாக மாற்றிக் காதில் அணிந்துகொண்டது வேறெந்தக் கோவிலிலும் பார்க்க முடியாதது. துவாரபாலகர்கள், நான்கு கைகளுடன் அர்த்தமண்டப நுழைவாயிலில் உள்ளனர். முதல் பிரகாரத்தில் தென்முக வலஞ்சுழி விநாயகர், சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானையுடனும், கோதண்டராமர், விஷ்ணு துர்க்கை, சங்கேஸ்வரர் உள்ளனர். சிறந்த சிற்பக் கலை அம்சங்கள் நிறைந்துள்ளன. செம்பியன் மகாதேவி, பராந்தக சோழன், ராஜராஜ சோழன் ஆகியோரைப் பற்றிய விவரங்கள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.

அன்னை உமாதேவி, சிவபெருமானிடம் மீண்டும் இருவரும் மணம் புரிந்து கொள்ள ஆசைப்படுவதாகத் தெரிவிக்க, சிவபிரானும் ஒப்புக் கொண்டார். ஏனோ தீர்மானம் நிறைவேறத் தாமதப்படுத்தினார். இதனைக் கண்ட அன்னை தானும் சிவனிடம் வித்தியாசமாக நடந்துகொள்ள ஆரம்பித்தார். கோபமடைந்த சிவன் அன்னையை பூமியில் பசுமாடாகப் பிறக்கச் சாபமளித்தார். அன்னை பசுவாக மாறி, பல இடங்களில் சாப நிவாரணம் தேடி அலைந்தார்.

சிவபெருமான் அன்னை உமாவின் பசுவுருவத்தில் பால் சுரப்பதைக் கண்டு, அதன் காலடியைத் தன் மார்பில் ஏற்றுக்கொண்டார். சிவன் அன்னையின் விருப்பப்படி திருமணத்திற்குச் சம்மதித்தார். பரதமுனிவர், யாகத் தீயிலிருந்து தனது தெய்வீக உருவில் அன்னையைத் திரும்பவரச் செய்ய, திருமணம் நடந்தேறியது எனத் தலபுராணம் கூறுகிறது.

பக்தர்கள் மன அமைதி வேண்டியும், துயர்நீக்கம் வேண்டியும், வேலைவாய்ப்பு, உயர்பதவி அடையவும், வியாபார அபிவிருத்திக்கும் இங்கே பிரார்த்திக்கின்றனர். சித்திரை மாதம் (ஏப்ரல்/மே) பூச நட்சத்திரத்தில் கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. பிரதோஷம், திருவாதிரை, திருக்கார்த்திகை, தீபாவளி, பொங்கல், ஆடிப்பூரம், நவராத்திரி யாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline